Jun 20, 2014

பெண் வெறுப்பு என்றொரு நீண்ட படலம் - அம்பை



தமிழில் தற்போது எழுதிவரும் ஆண் எழுத்தாளர்களுக்கு இணையாகப் பொருட்படுத்தக்கூடிய அளவில் பெண் எழுத்தாளர்கள் அதிகம் இல்லை என்று சமீபத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் தனது இணையதளத்தில் எழுதியிருந்தார். அத்துடன், “பெண்களில் பலர் சொல்லும்படி எதுவுமே எழுதாமல் பல வகை உத்திகள் மூலம் ஊடக பிம்பங்களாக ஆனவர்கள். இன்று ஆண்கள் எழுதித்தான் நிற்க வேண்டியிருக்கிறது. பெண்களுக்குப் பெண்களாகத் தங்களை முன்வைத்தாலே இடம் கிடைத்துவிடுகிறது” என்றும் கூறியது தமிழ் இலக்கிய உலகில் பெரும் சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் பெண் எழுத்தாளர்கள் சந்திக்கும் விமர்சனங்களை வரலாற்றுப்பூர்வமாக எழுத்தாளர் அம்பை இக்கட்டுரையில் வெளிப்படுத்துகிறார்.
வெகு ஆண்டுகளுக்கு முன்பு ஓர் எழுத்தாளர் (ஆண் எழுத்தாளர்தான்!) ஒரு மூத்த ஆண் எழுத்தாளருக்கு எழுதிய கடிதத்தில் என் கதைகளைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். ‘அம்பையின் கதைகளைப் படிக்கும்போது அவர் உடல் ரீதியாகத் திருப்தியுறாதவர் என்று தெளி வாகத் தெரிகிறது’ என்ற தொனியில் அமைந் திருந்தது அவர் விமர்சனம். கருணை உள்ளம் கொண்ட அந்த மூத்த எழுத்தாளர், அந்தக் கடிதத்தை எனக்கு அனுப்பியிருந்தார் தன் கருத்தொன்றையும் கூறாமல். உடனே அந்தக் கடிதம் எழுதியவர் எழுதியிருந்த கதைத் தொகுப்பு ஒன்றைப் படித்தேன். தாங்க முடியவில்லை. ‘திருப்தியுற்றவர்கள் கதைகளின் தரம் இதுதான் என்றால், நல்லவேளை நான் திருப்தியுறவில்லை’ என்று தோன்றியது.

பெண் எழுத்து குறித்தும், பொதுவாகப் பெண்களைக் குறித்தும் இருக்கும் இந்த நோலாமை தமிழ் இலக்கிய விமர்சன மரபிலும், தமிழ் இலக்கிய உலகிலும் ஒரு தொடர் கண்ணியாக இருந்துவருகிறது. கல்வியை, உரிமைகளை, வெளிப்பாட்டுக் கான நியாயமான இடத்தைக் கோரும் பெண்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் குறையுள்ளவர்கள், அந்தக் குறை பாடுதான் அவர்களை எல்லா வகையிலும் செயல்படத் தூண்டுகிறது என்ற எண்ணம் பல காலமாக இருந்துவருவதுதான்.

இந்தக் குறைகள்தான் என்ன? அழகின்மை, தோற்றப் பொலிவின்மை, ஓர் ஆணின் துணையின்மை, பெண்களுக்கு இருக்கக்கூடாத அதீத காம இச்சைகள் இவைதான் பெண்களை இயக்கும் அடிப்படையான குறைகள்/காரணங்கள் என்ற கருத்து தொடர்ந்து நிலவிவருகிறது. அத்தனையும் பெண் உடல் மேல் கட்டப்பட்டவை. இவை மட்டும் இல்லாதிருந்தால் பெண்ணின் செயல்பாடும் வெளிப்பாடும் வேறு மாதிரி இருந்திருக்கும் என்ற நோக்கு. பெண் மட்டும் ஆண்கள் உவகையுறும் “பெண் தன்மை” கொண்ட வளாக இருந்திருந்தால் சரித்திரத்திலும் இலக்கியத்திலும் அவள் பங்கு வேறு வகைப்பட்டிருக்கும் என்ற கணிப்பு.

பாரதி எழுதிய விமர்சனம்

இந்த இலக்கிய நோக்கர்களைப் பொறுத்தவரை பெண்ணின் எழுத்தும் செயல்பாடும் ஒரு மனநோயின் கூறுகள். இத்தகைய சிந்தனை சமீபத்தில் ஏற்பட்டதல்ல. சக்ரவர்த்தினி பத்திரிகையில் பாரதியார் 1906-ல் பெண்கள் அரசியல் உரிமை கோருவதைப் பற்றி எழுதும்போது, இத்தகைய உரிமைகளைக் கோரும் பெண்கள் அழகற்றவர்கள், திருமணமாகாதவர்கள் என்று குறிப்பிடுகிறார். ஒரு முறை தி. ஜானகிராமனின் கதை ஒன்றைக் குறித்து குகப்ரியை விமர்சித்தபோது, “குகப்ரியை மாமி மடியாக எழுதுபவர்” என்று தி. ஜானகிராமன் பதிலளித்தார் என்று குகப்ரியை என்னிடம் குறிப்பிட்டதுண்டு. ஒரு பத்து ஆண்டுகள் தொடர்ந்து ஆபாசமான முறைகளில் எழுத்திலும் செயலிலும் என்னைக் கேவலப்படுத்திய பெரும் கவிஞர் கூறியதெல்லாம், இவள் சுதந்திரமானவள் அதனால் நடத்தை கெட்டவள் (நடத்தை கெட்டவள் எனக் குறிப்பிடும் பெண்கள் இத்தகையவர்கள் கணிப்பில் எப்படிப்பட்டவர்கள் என்ற விளக்கங்களை ஆராய்ச்சி செய்யப் பல பக்கங்களும் அசாத்தியப் பொறுமையும் வேண்டும்) என்பதுதான். சமீபகாலத்தில், திருமணம் செய்துகொள்ளாத அல்லது தனிப் பெண்ணாக வாழும் பெண் எழுத்தாளர்களை “உய்விக்க” வரும் சில ஆண் எழுத்தாளர்கள் வைக்கும் முதல் கட்டுப்பாடு இலக்கியக் கூட்டங்களுக்குப் போகக் கூடாது, கவிதைகள் எழுதக் கூடாது என்பதுதான். ஓர் ஆணின் மேலான துணை கிடைத்த பின் ஒரு பெண்ணுக்கு இவை எல்லாம் தேவையா என்ன? இப்படி உய்விக்கப்பட ஆதரவு தராத பெண்களுக்கு ஊடகங்களிலோ வேறு எங்காவதோ வேலை கிடைத்துவிட்டால் தொலைபேசியில் இரவு கூப்பிட்டு “யாருடன் உறவு கொண்டதால் (அவர்கள் இதற்கு உபயோகிக்கும் விரசமான மொழி வேறு) இந்த வேலை கிடைத்தது?” என்று கேட்கும் ஆண் எழுத் தாளர்களையும், தொடர்ந்து இரவில் தொலைபேசியில் கூப்பிட்டு, விரசமாகப் பல ஆண் எழுத்தாளர்கள் பேசுவதால் இரவு வேளைகளில் தொலைபேசித் தொடர்பையே துண்டித்துவிடும், அஞ்சலட்டைகளில் அருவருக்கத்தக்க படங்களை சிலர் வரைந்து அனுப்பித் தொடர்ந்து செய்யும் இம்சைகளால் வீட்டையே மாற்றிய பெண் எழுத்தாளர்களையும் எனக்குத் தெரியும். இவற்றை எல்லாம் பார்க்கும்போதும், இது குறித்து எங்களுக்குள் நாங்கள் பேசிக் கொள்ளும்போதும், சமீபத்தில் பெண் எழுத்து மற்றும் செயல்பாடுகள் குறித்த விமர்சனங்களை நோக்கும்போதும், பெண் வெறுப்பு என்பது எவ்வளவு தீவிரமான, இன்னும் பெயரிடப்படாத மனநோய் என்பது தெரிகிறது.

இலக்கிய உலகில் பெண்ணுக்கு அளிக்கப்படும் இடம் எந்த வகையிலும் ஆணின் இடத்தைக் குலைக்கக் கூடாது, அது இரண்டாம் நிலையிலேயே இருக்க வேண்டும் என்ற எண்ணமும் தொடர்ந்து இருக்கும் ஒன்றுதான். ராஜம் கிருஷ்ணனின் மலர்கள் நாவலுக்கும், ஜெகச்சிற்பியனின் திருச்சிற்றம்பலம் நாவலுக்கும் முதல் பரிசு ஆனந்த விகடனில் பகிர்ந்து அளிக்கப் பட்டபோது, அவை தொடர்களாக ஆனந்த விகடனில் வெளிவரத் தொடங்கின. தாயற்று, தான் வளரும் உறவுக்காரர்களின் குடும்பத்தில் சிறுமைபடுத்தப்படுவதால் தாழ்வு மனப்பான்மையால் வாடும் ஒரு பெண்ணைப் பற்றிய கதையாகப் பல பக்கங்கள் கொண்ட நாவல் மலர்கள். திருச்சிற்றம்பலம் நாவலைவிட மிகப் பெரியது. மலர்கள் நாவலில் பாதிகூட முடிந்திராதபோது ராஜம் கிருஷ்ணனுக்குக் கடிதம் போயிற்று, ஜெகச்சிற்பியனின் நாவல் தொடர் இன்னும் ஓர் அத்தியாயத்துடன் முடிவதால் மலர்கள் நாவலையும் அடுத்த ஓர் அத்தியாயத்துடன் முடிக்கும்படி. ஒரே பரிசு பெற்ற ஓர் ஆண் எழுத்தாளரின் நாவல் முடியும்போது பெண் எழுத்தாளரின் நாவல் தொடர்ந்து வருவது அவரை அவமானப் படுத்துவதாகும் என்ற நோக்கில் எழுதப் பட்ட கடிதம். சென்னைக்கு வெளியே இருந்த ராஜம் கிருஷ்ணன் விரைந்து வந்து நாவலைத் தேர்ந்தெடுத்தவர்களில் ஒருவரான, கலைமகள் ஆசிரியர் கி.வா. ஜகந்நாதனை அணுகி, தனக்கு நியாயம் கிடைக்கும்படிச் செய்யக் கோரினார். கி.வா.ஜ. எடுத்துக் கூறிய பின்தான் மலர்கள் தொடர்ந்து தொடராக வந்தது.

பெண்களின் பொறுப்பு?

நாற்பதுகளில் குமுதினி திவான் மகள் நாவலை எழுதியபோது அதை வெளியிடப் பத்திரிகைகள் முன்வரவில்லை. காரணம் அதில் கலப்புத் திருமணம் இருந்தது. பிறகு அது தொடராக மணிக்கொடியில் வெளிவந்தது. ஒரு பிரபல பதிப்பாளர் ஒரு முறை ஜவஹர் லால் நேரு பல்கலைக்கழகத்தில் நான் படித்துக்கொண்டிருந்தபோது, என் பேராசிரியரைச் சந்திக்க வந்தார். அப்போது நானும் அங்கே இருந்ததால் என்னைப் பேராசிரியர் அறிமுகப்படுத்தியபோது, சம்பிரதாயத்துக்கு என்னையும் எழுதும்படிக் கூறி, என் எழுத்துக்களை வெளியிட ஆர்வமிருப்பதாகக் கூறினார். கூறிய உடனேயே நம் பண்பாட்டைக் குலைக்காமல் எழுதும் எதையும் தான் வெளியிடத் தயார் என்று சேர்த்துக்கொண்டார். என் எழுத்து பண்பாட்டைக் குலைப்பது என்ற முடிவுக்கு அவர் முதலிலேயே வந்திருந்தார் என்பது தவிர, பண்பாட்டை நிலைநிறுத்துவது பெண்களின் பொறுப்பு என்ற கருத்தும், பண் பாட்டுக்கான விளக்கம் ஒன்றும் அவரிடம் இருந்தது எனக்குத் தெளிவாகத் தெரிந்தது. அவர் வெளியிடக்கூடிய புத்தகங்களை நான் எழுதவில்லை என்பது வேறு விஷயம்.

எழுத்துக்கான மரியாதை

எழுத்தை அதன் இலக்கியத் தன்மை கொண்டு அளந்த நல்ல கணங்களும் தமிழ் இலக்கிய வரலாற்றில் இருந்திருக்கின்றன. கௌரி அம்மாள் எழுதிய கடிவாளம் நாவலுக்கு வ.ரா. முன்னுரை எழுதினார். மங்கை என்ற பத்திரிகையைத் தொடர்ந்து நடத்த குகப்ரியைக்கு ஊக்கம் அளிக்கப்பட்டது. குமுதினி, சாவித்திரி அம்மாள், சரஸ்வதி அம்மாள், ராஜம் கிருஷ்ணன், குகப்ரியை, அநுத்தமா, ஆர். சூடாமணி போன்ற எழுத்தாளர்களின் நாவல்களையும் கதைகளையும் மட்டுமல்ல, அவர்கள் ஆங்கிலத்திலிருந்து செய்த பல மொழிபெயர்ப்புகளையும் வெளியிட கலைமகள் போன்ற பத்திரிகைகள் முன் வந்தன. குமுதினி போன்ற எழுத்தாளர் களுக்கு ஆங்கில இலக்கியத்துடன் நல்ல பரிச்சயம் இருந்ததுடன் மொழிபெயர்ப்பின் அவசியத்தையும் நன்கு உணர்ந்தவர்களாக அவர்கள் இருந்தார்கள். ஆங்கில இலக்கியத் தின் பல நல்ல எழுத்துக்களை எனக்கு அறிமுகப்படுத்தியவர் சூடாமணி. எந்த வித சமரசமும் செய்துகொள்ளாமல் எழுதியவர். அப்படி எழுத என்னைத் தூண்டியவர். பல ஆண் எழுத்தாளர்கள் தீபாவளிக் கதைகளை தீபாவளி மலர்களுக்கும், அரைப் பக்க ஒரு பக்கக் கதைகள், மோதிரக் கதைகள் என்று மற்ற பத்திரிகைகளுக்கும் எழுதிக் குவித்துக் கொண்டிருந்தபோது தனக்குப் பிடித்ததை மட்டும் எழுதியதுடன், என் கவனத்தைச் சிறப்பான இலக்கியத்தின்பால் திருப்பியவர்.
இலக்கிய விமர்சனம் என்பது ஒருவரின் ஜனநாயக உரிமை என்பதில் யாருக்கும் மறுப்பேதும் இல்லை. பெண்-ஆண் என்ற இரு பாலாரின் எழுத்துக்களும் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து ஏதும் இல்லை. ஆனால் அவை பெண்ணின் தோற்றத்தையும், “அளவுக்கு மீறிய” என்று சிலர் கணிக்கும் இச்சைகளையும், அவள் உடல் மற்றும் வாழ்வு குறித்த கற்பிதங்களையும் ஆதாரமாகக் கொண்ட இலக்கிய அபத்தங்களாக இருக்கக் கூடாது. குன்றுபதேசம் செய்வது தமிழ் இலக்கிய மற்றும் பதிப்பு உலகில் காலம்காலமாக இருக்கும் வியாதி. அதற்கு இலக்காகப் பெண்கள் இருந்துகொண்டே இருக்கிறார்கள். யார் வேண்டுமானாலும் பேனாவை எடுத்து எழுதியோ, மேடையில் பேசியோ, வலைதளத்தில் எழுதியோ பெண்கள் உய்வுறப் படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறார்கள். எத்தனை கருணை உள்ளம் இவர்களுக்கு!

பெண்கள் என்றால் உருகும் குணம். இத்தகையவர்களுக்குச் சொல்லக்கூடியது ஒன்றே ஒன்றுதான். பெண்கள் தங்கள் வெளிப்பாட்டுக்கான வழிகளையும், தரங்களையும் நிர்ணயிக்க வல்லவர்கள். ஆசான்களைத் தேர்ந்தெடுக்கவும் ஒதுக்கவும் தெரிந்தவர்கள். பெண்களுக்காக இத்தனை சொல்பவர்கள், அவரவர் சொந்த வெளிப்பாடு உய்யும் வழியைப் பார்த்துக்கொண்டால் இலக்கியச் சரித்திரத்தில் இருக்கும் மௌனங்களையும், ஒதுக்கல்களையும் களைய முடியும். அப்படிக் களைய வேண்டியதுதான் இப்போதைய தேவையும்கூட.

இந்த இலக்கிய நோக்கர்களைப் பொறுத்தவரை பெண்ணின் எழுத்தும் செயல்பாடும் ஒரு மனநோயின் கூறுகள். இத்தகைய சிந்தனை சமீபத்தில் ஏற்பட்டதல்ல.

நன்றி: http://tamil.thehindu.com/general/literature/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/article6136159.ece


மாதர் தம்மை இழிவுசெய்யும் மடமையை (தொடர்ந்து) கொளுத்துவோம்! - ராஜன் குறை கிருஷ்ணன்


சமூக முரண்பாடுகள் உண்மையில் நீறுபூத்த நெருப்பாக கனன்றுகொண்டு இருக்கின்றன. கடந்த சில நூற்றாண்டுகளில் உருவான சுதந்திரவாத, மக்களாட்சி இலட்சியங்கள் ஒவ்வொரு நிலையிலும் ஆதிக்க சக்திகளுக்கு உவப்பாக இல்லை. பெண்ணியம் என்பது கடைசியாக வீசிய மிகப்பெரிய பேரலை. பிரஞ்சுப் புரட்சிக்கு தூண்டுகோலாயிருந்த ரூஸோவின் “சமூக ஒப்பந்தம் (Social Contract) தலைப்பினை எடுத்து மேற்கத்திய அரசியல் தத்துவம் உண்மையில் “பாலியல் ஒப்பந்தம்” (The Sexual Contract) என்று வாசித்த கரோல் பாட்மெனின் நூல் மிகப்பெரிய அறிவார்த்த புரட்சி என்றால் மிகையாகாது. ஆனால் 1988-இல் கரோல் பாட்மென் மேற்கத்திய அரசியல் தத்துவ வரலாற்றை நிர்நிர்மாணம் (de-construct) செய்யும் இந்த நூலை எழுதுவதற்கு முன்பே நூறாண்டுகளாக அரசியலுக்கு வெளியிலும் சமூக கலாசார தளங்களில் பெண்களின் சமபங்கு குறித்து பெரியதொரு விழிப்புணர்வு உலகெங்கும் பரவியிருந்தது எனலாம். ஈரோட்டுப் பெரியாரும் எட்டையபுரம் சுப்பிரமணிய பாரதியும் அதன் மிகச்சிறந்த எடுத்துக்காட்டுகள்.

பெண் என்ற சமூக அடையாளத்தின் பிரச்சினை என்னவென்றால் அந்த அடையாளத்தை எந்த பெண் கையிலெடுப்பதும் அந்த பெண்ணுடன் வசிக்கும் ஆணுக்கு தொல்லையாக மாறுவதுதான். மிக ஒடுக்கப்பட்ட சமூக குழுவிலும் பெண் ஆணால் ஒடுக்கப்பட்டவளாக அல்லது அவனுக்கு வசதியான விதத்தில் கட்டமைக்கப்படவளாக இருக்கிறாள். குறியியக்கம், மொழி ஆகிய வலைப்பின்னல்கள் மூலம் மனிதன் கட்டமைத்த ஒடுக்குமுறைகளில் மிக நுட்பமானதும், சிக்கல் மிக்கதுமான ஒடுக்குமுறை பெண் உடல்களை பெண் தன்னிலைகளாக உருவாக்கும் செயல்தான். கடந்த முப்பதாண்டுகளாக உலகின் சிறந்த பல்கலைகழகங்களில் படிக்கும் யாரும் இந்த நுண் ஒடுக்குமுறை குறித்த ஆழமான புரிதல்களை சந்திக்காமல் இருக்க முடியாது. ஆனால் சில ஆண் உடல் கோழைகள் அங்கும் அரற்றிக்கொண்டும், பிதற்றிக்கொண்டும் இருக்கத்தான் செய்கின்றன (ஹார்வர்டு பல்கலை முன்னாள் தலைவர் உட்பட).

அதன்பிறகு இன்று ஏதோ பெண்ணிய அலை ஓய்ந்துவிட்டது என்ற ஒரு ஊடக மாய்மாலத்தை வலதுசாரி சக்திகள் செய்கின்றன. அது மிகப்பெரிய அபத்தம். அலை அலையாக பெண்ணிய சிந்தனை இன்று உலகின் ஒவ்வொரு சமூகப்பகுதியிலும் பரவிக்கொண்டிருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் ஏராளமான பெண்கள் எழுத முற்படுவதும்.

இங்கேதான் ஒரு பிரச்சினை வருகிறது. பெண்கள் எழுதினால் அதற்கு அதிக கவனம் கிடைக்கிறது. அது தரமாக இல்லாவிட்டாலும் முன்னிலைப் படுத்துப்படுகிறது என்று ஒரு பிரச்சினையை சில ஆண் உடல் கோழைகள் முன்வைக்கிறார்கள். மேலாக கேட்டவுடன் பெரிய நியாயம் போல இது தொனிப்பதால் பிற ஆண் உடல்களில் தங்கியுள்ள ஆணாதிக்க ஊற்றுகள் பீரிடுகின்றன. எவ்வளவு பெரிய அபத்தம் இது என்பதை சிறிது யோசித்தாலும் கூட யார் வேண்டுமானாலும் விளங்கிக்கொள்ள முடியும். தோழர்களே! ஒரே ஒரு நிமிடம் யோசியுங்கள். இந்த ஆண் எழுத்தாளர்கள் தங்கள் சக ஆண் எழுத்தாளர்கள் மீது இதே குற்றச்சாட்டை வைத்ததில்லையா? தகுதியில்லாவர்கள் கவனம் பெற்றுவிட்டார்கள், தகுதியுள்ளவர்கள் கவனிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு காலம் காலமாக கலை, இலக்கிய, சிந்தனை வெளிகளில் நிலவுவதுதானே? இதில் ஆணெண்ண, பெண்ணெண்ண? பெண்களுக்கிடையிலும் தகுதியும், கிடைக்கும் கவனமும் சரியான விகிதத்தில் இல்லை என்று எத்தனையோ பிரச்சினைகள் உண்டு. சமூக இயக்கம் எப்பவுமே பழுதுகளுக்கு உட்பட்டதுதான்.  

ஆனால் பெண்கள் அவர்களாயிருப்பதாலேயே கவனம் பெற்றுவிடுகிறாரகள் என்ற ஜெயமோகனின் கூற்று ஊரே நன்கறிந்த அவருடைய அழுக்கு பாசிச மனதின் கூற்று. அவர் அடிப்படையில் அருவருக்கத்தக்க ஆணாதிக்கவாதி என்பதை அவர் புனைவெழுத்தும் சரி, புனையாத எழுத்தும் சரி ஒயாமல் நிருபித்து வந்துள்ளன, எனவே அவர் இன்றைக்கு பொதுக்களத்தில் கவனம் பெற இதை மீண்டும் எழுதியதில் எனக்கு எந்த வியப்பும் இல்லை. ஆனால் வியப்பெல்லாம் பிற ஆணுடல்களிடையே மெல்ல, மெல்ல அதற்கு பெருகி வரும் ஆதரவுதான்; என்ன நடக்கிறது இங்கே என்ற வியப்பை எனக்கு ஏற்படுத்துகிறது.

தோழர்களே! தயவுசெய்து ஒரு விஷயத்தை கவனியுங்கள். ஒரு வேளை இதில் ஒரு நியாயமான பிரச்சினை இருக்கலாம் என எடுத்துக் கொள்வோம். ஆணாதிக்க சமூகத்திற்கு எப்படியும் பெண்களை காட்சிப்பொருளாக்க வேண்டும். குறிப்பாக ஊடகங்கள் பெண் பிம்பங்களை குறித்து ஏதாவது ஒரு காரணத்திற்காக பேசியே தீரவேண்டும். இதனால் கலை, இலக்கிய தளத்திலும் பெண்கள் சிறிது சாதித்தவுடனேயே அவர்கள் மேல் புகழ் வெளிச்சம் பாய்வதால் அவர்கள் மேலும் சிறப்பாக படைப்பாக்க செயல்பாட்டில் ஈடுபடாமல் தடைபட்டு போய்விடுகிறது என்ற ஒரு நிலை இருப்பதாகக் கொள்வோம். (இவ்வித நிலையை உருவாக்குவதும் ஆண் ஆதிக்க சமூகமும், ஊடகமும்தான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.) இப்போது அக்கறையுள்ள ஒரு குரல் எப்படி ஒலிக்க வேண்டும்?

“பெண்களுக்கு சுலபத்தில் அங்கீகாரம் கிடைக்கும் நிலை அவர்களது படைப்பாற்றல் விகசிப்பதற்கு தடையாக மாறிவிடக்கூடாது. அவர்கள் தங்கள் மேல் விழும் புகழ் வெளிச்சத்தை கவனமாக புறந்தள்ளி அவர்களது படைப்பாற்றலை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தவேண்டும்.” இப்படி ஒருவர் சொன்னால் அது அக்கறை.
“பெண்கள் அவர்களாயிருப்பதாலேயே அவர்களுக்கு அங்கீகாரம் கிடைத்துவிடுகிறது. ஆண்களுக்கு கிடைப்பதில்லை” என்பது காழ்ப்பு. ஆணாதிக்கம்.

அப்படி பெண்களை அங்கீகரிப்பது யார் ஐயா? ஆண்கள்தானே? பெண்களா எல்லா ஊடகங்களையும் நடத்துகிறார்கள்? பெண்களா பட்டியல்கள் போட்டு யார் மனம் கவர்ந்த இளம் இலக்கியவாதி, முற்றிய இலக்கியவாதி என்று கூறுகிறார்கள்? இதுவரை எந்த பிரபல பத்திரிகையாவது பாமாவிடம் உங்களுக்குப் பிடித்த தமிழ் எழுத்தாளர்கள் யார் என்று கேட்டு பட்டியல் வெளியிட்டிருக்கிறதா? சு.தமிழ்செல்வியிடம் கேட்டிருக்கிறார்களா? அப்படியே கேட்டு வெளியிட்டாலும் அதை யாரும் பொருட்படுத்தப் போகிறார்களா? “Can the subaltern speak?” என்ற பெண்ணிய மேதை காயத்ரி ஸ்பிவாக்கின் கேள்வியின் பொருளே அதுதானே?

எந்த இளம் பெண் எழுத வந்தாலும் சந்திக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே உங்கள் எழுத்தை நான் கவனித்துவருகிறேன்; பிரமாதம் என்று வழிந்து நிற்பது ஆண்களின் குற்றமா? அல்லது அந்த பெண்களின் குற்றமா? பின்னர் அந்த பெண் யாரோடு நெருக்கமாக இருக்கிறாள் என்று புறம்பேசி கதை வளர்த்து திரிவது ஆண் எழுத்தாளர்களா? பெண் எழுத்தாளர்களா? பெண்ணை எந்த நிலையிலும் பெண்ணாக மட்டுமே பார்க்கவேண்டும் என்று ஆணாதிக்க திமிர் பிடித்து அலையும் எழுத்தாளர்கள் மத்தியிலிருந்து ஒருவர் சொல்கிறார்: “பெண்கள் அவர்களாக இருப்பதாலேயே கவனம் கிடைத்துவிடுகிறது”. அந்தக் “கவனத்தை” “அவர்கள் அவர்களாக இருப்பதற்கு” நீங்கள் ஏன் சார் தருகிறீர்கள்? எந்த ஆண் எழுத்தாளராவது ஒரு பெண்ணை சந்தித்தவுடன் “உன் எழுத்து சரியில்லை; நிறைய படி; பயிற்சி செய்” என்று சொல்லியிருப்பார் என்று என்னால் நம்பக்கூட முடியவில்லை. ஏன் என்று கேட்டால் அப்போது சொல்வார்கள்: “அவர்கள் இப்போதுதான் எழுத வருகிறார்கள்” என்று. ஒரு புறம் வக்கிரத்துடன் ஆசீர்வாதம் (vulgar patronization); இன்னொருபுறம் தகுதியில்லாமல் கவனம் பெறுவதாக தார்மீக ஆவேசம் (punitive anger). ஆணாதிக்கத்தின் டபுள் ஆக்டு சூப்பர் இல்லையா?

கடைசியாக ஒன்று. இந்த “தரம்” என்ற கேடுகெட்ட வார்த்தை ஒன்று உண்டு. இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள் கையாளும் அதே தகுதி தரம்தான் இதுவும். முதலில் நாம் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். தரம் என்பதற்கு பிரபஞ்ச அளவுகோல் எதுவும் கிடையாது என்று அறிவுடையோர் சிலர் உணரத்தொடங்கி பல பத்தாண்டுகள் கடந்துவிட்டன என்று சொல்லலாம். தரம் என்பது சமூக இயக்கத்தில் முகிழ்வது. சினாய் மலைகளில் நெருப்புத்தூண்கள் உருவாக்கும் விதிகளின்படி உருவாவதல்ல. இலக்கிய விமர்சனம் என்பது தொடர்ந்து தரம் குறித்த விவாதத்தை நிகழ்த்துவது அவசியம். ஆனால் அதன் அடிப்படை விதி பெரியோரை வியந்தாலும் சிறியோரை இகழாததாகவே ஜனநாயகப் பொதுமன்றத்தில் இருக்க முடியும.

இந்த விவகாரத்தில் அடிபட்ட பெயர்களில் மிகுந்த வேதனை தரக்கூடிய ஒன்று மறைந்த ஆர்.சூடாமணி. இவரது இலக்கிய மேதமையை புரிந்துகொள்ளாத  பொறுப்பற்ற பேச்சுகள் இலக்கிய விமர்சனம் என்பதோ திறனாய்வு என்பதோ இன்னம் தமிழில் எவ்வளவு கேவலமான இடத்தில் இருக்கிறது என்பதையே சுட்டுகின்றன. வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்று சில உரத்த குரல்கள் எவ்வளவு சுலபமாக அபத்தத்தை உண்மையாக அலங்கரித்து வைத்துவிடுகின்றன என்று பார்த்தால் இந்த மொழியில் எழுதுவதற்கே அச்சமாக இருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.

ஒரு பொறுப்பான மனிதன் ஜனநாயகப் பொதுமன்றத்தில் பெண்கள் என்ற அடையாளத்தை ஒட்டுமொத்தமாக சீண்டிப்பார்பானேயானால் அதன் பொருள் அவன் சமூகத்தின் அறவுணர்வினை சீண்டிப்பார்க்கிறான் என்பதேயாகும், தகுதியில்லாத பெண் எழுத்தாளர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கிறது என்று ஒருவர் பொதுக்களத்தில் சொன்னவுடன், எத்தனை குரல்கள் வெடித்துக் கிளம்புகின்றன. எவ்வளவு கேவலமான கேலிகளும், கிண்டல்களும் உருவாகின்றன என்று பார்த்தால் நீறுபூத்த நெருப்பாக பரவி நிற்கும் ஆணாதிக்க வெறி தெரியும்.

அதற்குத்தான் அன்றே சொன்னான் மகாகவி: “மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்” என்று. தொடர்ந்து கொளுத்திக்கொண்டே இருக்க வேண்டும். சென்னை வீடுகளில் தினமும் கொசுக்கொல்லிகளை கொளுத்துவது போல. நிறுத்திவிடக் கூடாது.

நன்றி - ராஜன் குறை கிருஷ்ணன்
மூலம் - http://tinyurl.com/nex2ukp


ஆவலித்தபடி புரளும் நாக்குகள்



நண்பர்களே, எங்களது கூட்டறிக்கையானது ஒரு ஆணாதிக்கப் பதிவிற்கான எதிர்வினை, அவ்வளவே. பெண்கள் எழுதிய அனைத்தும் ஆகச்சிறந்த படைப்புகள் என்றோ, விமர்சனத்திற்கும், தரவரிசைகளுக்கும் அப்பார்பட்டவை என்றோ எங்களில் எவரும் ஒரு இடத்திலும் சொல்லவில்லை.

விமர்சனம் / கருத்துறை என்ற பெயரில் ஜெயமோகன் எழுதியிருப்பது ஒரு பதிவல்ல மாறாக அவர் உமிழ்ந்திருப்பது ஆணாதிக்க எச்சில் என்கிறேன் (என்கிறோம்). தனிப்பட்ட வன்மங்களின் காரணமாக சாருநிவேதிதா, மனுஷ்யபுத்திரன் ஆகியோர் அவ்வெச்சில் பாத்திரத்தில் தங்களது நாவையும் ஆவலித்தபடிப் புரட்டுகின்றனர்.

நகைச்சுவை என்கிற பெயரில் சில ‘ஆண்கள்’ அந்த எச்சில் பாத்திரத்திற்கு முலாம் பூசுகின்றனர்.

எவரிடமும் எங்களை நிரூபித்து நற்சான்றிதழ் பெறவேண்டிய அவசியம் எங்களுக்கில்லை. சொல்லப்போனால் இந்தத் ‘தூய’ மற்றும் ‘சிறந்த’ ‘இலக்கிய’ஆன்மாக்கள் எங்களதுப் படைப்புகளை அங்கீகரித்தாலோ அல்லது பாராட்டினாலோ சம்பந்தப்பட்ட அந்தப் படைப்பின் மீது எனக்கு சந்தேகமே ஏற்படும்.

இவர்களின் இந்த இகழ்ச்சியும், வன்மமும், கர்வம் நிறைந்த பேச்சுக்களும் எவ்வகையிலும் எங்களை முடக்கப்போவதில்லை.


சிறு குறிப்பு:

ஜெயமோகனின் தளம் வழியாக இங்கு வந்து எங்கள் கூட்டறிக்கையை படித்து கருத்து தெரிவித்திருக்கும் அவரது வாசகர்கள் மற்றும் ஆதராவளர்களுக்கும் இதுவே பதில்.

Jun 18, 2014

ஜெயமோகனின் பாலியல் நிந்தனைக்கெதிராக பெண்ணியச் செயல்பாட்டாளர்களின் கண்டனக்கூட்டறிக்கை!


வணக்கம்,

எழுத்திற்கென்றொரு தார்மீகப் பொறுப்பு இருக்கிறது. பேராசான் கார்ல் மார்க்ஸ் போன்றோர் தங்களது எழுத்தின்மூலமாக மனிதகுலத்தின் சிந்தனைப்போக்கையும் வரலாற்றையும் மாற்றியமைத்தார்கள். அத்தகைய சக்திவாய்ந்த எழுத்தானது அடிப்படைவாதிகளது இருப்பிற்கான களமாக அமைந்துவிடும்போது, அந்தச் சமூகமே சீரழிந்துபோகும் கெடுவாய்ப்பு இருக்கிறது. அந்த இழிநிலையை நோக்கி தமிழிலக்கியம் நகர்ந்து கொண்டிருக்கிறதோ என்ற அச்சங்கலந்த ஐயம், அண்மைக்காலமாகசில இலக்கியவாதிகளது பொறுப்பற்ற பேச்சினால் ஏற்பட்டிருக்கிறது. அவர்களுள், ஜெயமோகன் செய்துவரும் இலக்கிய மேட்டிமைத்தனங்கள் சொல்லுந்தரமற்றவை.

அதிகாரத்தரப்பை உயர்த்திப்பிடித்தல், சிறுபான்மையினரைத் தரந்தாழ்த்துதல்,
பிறமதங்கள்பால் சகிப்புத்தன்மையற்று இந்துத்துவத்தை முன்னிலைப்படுத்தல், இடதுசாரி சிந்தனையாளர்கள்பால் காழ்ப்புணர்வைக் கொட்டுதல், வரலாற்றைத் தன் நிலைப்பாடுகளுக்கியைந்தபடி திரிபுபடுத்துதல் இவற்றோடு ஆணாதிக்கத்தின் தடித்தனமும் அவரது எழுத்துக்களில் புரையோடிக்கிடக்கிறது. காலாகாலமாக ஆண்களே இந்தச் சமூகத்தை வழிநடத்திச் செல்லும் மேய்ப்பர்கள் என்ற ஆண்மையவாதத்திலிருந்தபடி தொடர்ந்து பெண்களுக்கெதிரான நச்சு வார்த்தைகளை இறைத்துவருகிறார். எழுத்துரு மாற்றம் இன்னபிற விடயங்களில் தனது “மேலான” கருத்துக்களைச் சொல்லி சர்ச்சைகளின்மூலம் “மஞ்சள் ஒளி வட்ட“த்தில் இருந்துகொண்டே இருக்கப் பிரியப்படுகிற அவரது மனச்சிக்கலைப் புரிந்துகொள்கிறோம். ஆனால், எழுதும் பெண்கள்மீது அவரால் பிரயோகிக்கப்படும் கருத்து வன்முறையை இனியும் புறந்தள்ளிக் கடந்துசெல்வதற்கில்லை.

‘பெரிதினும் பெரிதினை’த் தேடுவதாகத் தன்னைக் குறித்துச் சொல்லிக்கொள்ளும்
ஜெயமோகன், தமிழிலக்கிய வாசகர்களால் பெரிதும் மதிக்கப்பட்ட ஆர்.சூடாமணி
இறந்தபோது எழுதிய அஞ்சலிக் கட்டுரையில் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்.

“சூடாமணியின் கதைகளில் இலக்கியமதிப்பு மிகக்குறைவு என்றே நான் எண்ணுகிறேன். சூடாமணியை இன்றைய நிலையில் வாழும் இலக்கியகர்த்தாவாக அணுகமுடியாது. தமிழ்ச்சிறுகதை, நாவல் ஆகியவற்றின் பரிமாணத்தில் அவருக்குப் பங்கேதும் இல்லை”எனக் கூறியதன் மூலம், தமிழின் முன்னோடிகளுள் ஒருவரான சூடாமணியின் இலக்கியப் பங்களிப்பையே தடாலடியாக நிராகரித்திருக்கிறார்.

மேலும், அவருக்கு ‘கலைமகள் பாணி எழுத்தாளர்’என்று பெயர் சூட்டிக் குறுக்குகிறார். (பார்க்க: ஆர்.சூடாமணி, நவம்பர் 02, 2010) இங்ஙனம் எழுதுவதன்மூலமாக தமிழிலக்கியத்தின் அறிவித்துக்கொள்ளப்படாத தரநிர்ணயக் கட்டுப்பாளராக தன்னைத் தான் நியமித்துக்கொண்டிருக்கிறார். ஒரு வாசகனாக, படைப்பாளியாக அவ்விதம் சொல்வதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது என்ற ஜனநாயகத்தின் அடிப்படையில் அதைப் பொறுத்துக்கொண்டோம். 

கேரள இலக்கிய ஆளுமைகளுள் ஒருவரான மாதவிக்குட்டி என்கிற கமலா தாஸ்
மறைந்தபோது, அவரைக் குறித்து எழுதப்பட்ட அஞ்சலிக் கட்டுரையில், (பார்க்க:
அஞ்சலி: கமலா சுரையா, ஜூன் 01,2009) “இளவயதுத் தோழனின் விந்துவின் வாசனை
பற்றிய வர்ணனைகள் அவரைப் புகழ்பெறச் செய்தன”என்று சற்றும் கூச்சமின்றி
எழுதுகிறார். மேலும், மாதவிக்குட்டியின் மகன் மாத்ருபூமி ஆசிரியராக இருந்த காரணத்தினாலேயே அவர் மிகையாகப் புகழப்பட்டார் என்றும் எழுதுகிறார். அவர்பாலான தன்னுடைய அசூசை வெளித்தெரிந்துவிடக்கூடாதென்பதற்காக சற்றே புகழ்ந்துவிட்டு, “கமலாவின் பிரச்சனைகளின் ஊற்றுமுகம் ஒன்றுதான். அவர் அழகி அல்ல. கறுப்பான, குண்டான கிட்டத்தட்ட அவலட்சணமான பெண். தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் முனைப்பும் தணியாத விளம்பரவெறியும் கொண்டவர் கமலா.”என்கிறார். ‘மாதவிக்குட்டி தனது தோற்றம் குறித்துக் கொண்டிருந்த தாழ்வுணர்ச்சியினால், தாளாத காம இச்சை கொண்டிருந்தார் என்பதை அவரது சுயசரிதை வழி அறியமுடிகிறது’ என்றும் கீழ்மைப்படுத்துகிறார். ஆக, படைப்பு முதற்கொண்டு பெண்களின் அனைத்துச் செயற்பாடுகளும் அவர்களது தோற்றம் மற்றும் உடலையே அடிப்படையாகக் கொண்டவை என்பதை ஜெயமோகன் நிறுவமுற்படுகிறார். மேலதிகமாக, தமிழ்கூறும் நல்லுலகில் அறியப்பட்ட
படைப்பாளியாக இருக்கக்கூடிய ஜெயமோகனின், அழகு பற்றிய வரைவிலக்கண
இலட்சணமும் நமக்குத் தெரிந்துபோகிறது. இந்தப் பாரதத் திருநாட்டில் விசித்திரமான நடத்தைகளோடும் பேச்சுக்களோடும் உலவும் சில ஆண் இலக்கியவாதிகளை எவ்வுணர்ச்சி செலுத்தியது என்பதைக் குறித்து ஜெயமோகன் ஏன் எந்தக் கருத்தையும் முன்வைக்கவில்லை என்பதை, அவரது உள்ளொளிதான் அவருக்கும் நமக்கும் விளக்கிச்சொல்லவேண்டும். இத்தகைய நவீன மனுக்களின் ஆசாடபூதித்தனங்கள், பக்கச்சாய்வுகள் பொதுவெளியில் அம்பலப்படுத்தப்படவேண்டியவை.

பெண் படைப்பாளிகள்மீது இவருக்கு ஆழமான வெறுப்பு இருப்பதை அவர்
எழுத்துப்பூச்சினால் என்னதான் மறைக்கமுயன்றாலும் அவரையும் மீறிக்கொண்டு
அந்த வெறுப்புணர்வு வெளிப்பட்டுவிடுகிறது. “பெண்-1, பெண்களின் காதல்”
(அக்டோபர் 22, 2012) என்ற கட்டுரையில் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்.

“இன்று இளம்வாசகிகளில் கணிசமானவர்கள் நம்முடைய அசட்டுப்பெண்ணியர்களால்
ஆரம்பத்திலேயே பார்வை திரிக்கப்பட்டு இலக்கியத்திற்குள் நுழையவே
முடியாதவர்களாக ஆகிவிட்டிருக்கிறார்கள். உண்மையான இலக்கிய அனுபவம்
என்றால் என்னவென்றே தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.”

“இங்கே பெண்ணியம் பேசும் பெண் எழுத்தாளர்கள் பலரை நான் கவனித்து வருகிறேன். பொருட்படுத்தும் அளவுக்கு அடிப்படை வாசிப்புள்ள எவரையுமே நான் பார்த்ததில்லை. அவர்களிடம் ஒரு எளிய விவாதத்தை முன்னெடுக்கக்கூடத் தோன்றியதில்லை. அவர்களால் ஒரு சிறு சலசலப்புக்கு அப்பால் பொருட்படுத்தும் இலக்கிய ஆக்கங்கள் எதையுமே உருவாக்க முடியாமல் போனமைக்குக் காரணம் இதுவே. இவர்கள் பேசும் பெண்ணியம் என்பது இலக்கியவாசகனின் எதிர்பார்ப்பு என்ற சவாலைச் சந்திக்கமுடியாமல், தங்கள் சொத்தைப் படைப்புக்களைப் பொத்திக்கொள்ள உருவாக்கிக்கொள்ளும் ஒரு எளிய தற்காப்புமுறை மட்டுமே” . “இந்தச் சல்லிக்குரல்களை முழுக்கத் தூக்கிவீசிவிட்டு வரும் உண்மையான படைப்பூக்கமும் அதற்கான படைப்புத்திமிரும் கொண்ட
பெண்ணெழுத்தாளர்களுக்காகத் தமிழ் காத்திருக்கிறது.”

எத்தனை வன்மம், காழ்ப்புணர்வு, ஒவ்வாமை இருந்தால் இப்படி எழுதமுடியும்!
ஒருவருக்குள் இத்தனை மன இருட்டும் வெறுப்புணர்வும் மறைந்திருப்பது
அதிர்ச்சியூட்டுவதாயிருக்கிறது. பெண்ணியம் என்ற சொல்லின் பொருள்,
‘ஆண்கள்மீதான வெறுப்பு’ என்ற தவறான புரிதலையே ஜெயமோகனும்
கொண்டிருக்கிறார். அதனால்தான் அந்தச் சொல்மீது இத்தனை செருப்படி
விழுகிறது. மேலும்,‘தமிழ் காத்திருக்கிறது’என்று மொழிவதன் மூலம் அவர்
சொல்ல எண்ணுவது ஒன்றுதான்: இங்கு எழுதிக்கொண்டிருக்கும் பெண்களுள் யாருமே
குறிப்பிடத்தக்க அளவில் எழுதவில்லை, அவர்கள் அடையாளமற்றவர்கள், ஆகவே,
தமிழிலக்கியத்தில் பங்குதாரர்களாக உரிமை கொண்டாடும் பாத்தியதை அற்றவர்கள்
என்பதையே அவர் தன் ஆணித்தரமான வாதங்கள் மூலம் மீண்டும் மீண்டும் நிறுவ
முயற்சிக்கிறார். மேலும், ஒன்றைத் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம்
அதை உண்மையென நம்பவைக்கும் உத்தியை, ‘பெண்களுக்கு ஆழமான வாசிப்பு
கிடையாது’என்று சொல்வதன் மூலம் இன்றுவரை அவர் செய்துவருகிறார். எழுதுகிற
பெண்களது வாசிப்பின் ஆழத்தை ஜெயமோகன் போன்ற இலக்கியப் பிதாமகர்களிடத்தில் அடிக்கடி சென்று நிரூபித்துச் சான்றிதழ் பெற்றுவருவதன் சாத்தியங்கள் குறித்து ஆராய்ந்து வருகிறோம்.

திருவாளர் ஜெயமோகன் சில முடிந்த முடிபுகளைக் கொண்டிருக்கிறார். அவர் இரவும் பகலும் எழுதிக்கொண்டிருக்கிற காரணத்தால், தலையைத் தூக்கி அவற்றை
மீள்பரிசீலனை செய்ய அவருக்கு நேரம் இருப்பதில்லை. ‘ஐஸ்வர்யா ராயும்
அருந்ததி ராயும்’ (டிசம்பர் 08, 2010) என்ற கட்டுரையில் பெண்வெறுப்புத்தாரை கீழ்க்கண்டவாறு பொழிகிறது.

“ஐஸ்வர்யா ராயை நான் ஒருமுறை சந்தித்திருக்கிறேன். அரைமணி நேரம்
பேசிக்கொண்டிருந்தேன். அழகான பெண். அழகான பெண்கள் வழக்கமாக இருப்பதுபோல அல்லாமல், புத்திசாலியும்கூட”என்கிறார்.

ஆக, அழகான பெண்கள் எல்லோரும் முட்டாள்கள் என்ற முடிந்த முடிவினை அவர்
கொண்டிருக்கிறார்.  இவரைத்தாம் தமிழ் வாசகப்பரப்பு இலக்கியகர்த்தா என்று கொண்டாடிக்கொண்டிருக்கிறது என்ற நிலை அவமானகரமானது. அதே கட்டுரையில், “அருந்ததி போராளி அல்ல, வெறும் ஊடகப்பிரமை மட்டுமே!”என்று சொல்கிறார். புக்கர் பரிசுபெற்ற அருந்ததிராயின் நாவல் ஆழமற்றதும் இந்திய வாசகர்களுக்கு ஏமாற்றமளித்ததும் என்கிறார். அது ஒரு படைப்பினை விமர்சனம் செய்யும் உரிமையின்பாற்பட்டது.

ஆனால், அருந்ததி ராய் என்ற பெண்மீது, அந்த ‘ஊடகப் பிரமை’மீது ஜெயமோகன்
கொண்டிருந்த காழ்ப்புணர்வானது ‘எனது இந்தியா’ (ஜூலை 02, 2012) என்ற
கட்டுரையில் மிகக் கேவலமாக வெளிப்பட்டிருக்கிறது.

“அடிப்படையான வரலாற்றுணர்வோ சமநிலையோ இல்லாத அருந்ததி போன்ற
குருவிமண்டைகள் ஊடகங்களில் இன்று பெறும் அதீத முக்கியத்துவம் மிக மிக
ஆச்சரியமானது” என்கிறார் ஜெயமோகன்.

அருந்ததிராயின் நாவல்மீது, அவர் மேலைத்தேய ஊடகங்களால் அளவுக்குமீறித்
தூக்கிப்பிடிக்கப்படுகிறார் என்ற விமர்சனத்தின்மீது எங்களிற் சிலருக்கும் உடன்பாடு உண்டு. ஆனால், ஒருவரை, அவரது தோற்றத்தினை முன்வைத்து இகழும்
அற்பத்தனத்தை எக்காரணங்கொண்டும் மன்னிக்கமுடியாது. நொண்டி என்றும்,
குரூபி என்றும், குருவிமண்டை என்றும், சல்லிக்குரல்கள் என்றும் சகமனிதரை
வசைபாடுவது அருவருப்பின் உச்சம். அதையொரு அறியப்பட்ட படைப்பாளி
செய்வதென்பதும் அதைச் சகித்துக்கொண்டு, ‘என்றாலும் அவர் நன்றாக
எழுதுகிறார்’என்று சிலர் குழைந்து பின்செல்வதும் மனச்சாட்சிக்கு விரோதமான
செயலாகும். படுகொலைகளுக்கும் மனக்கொலைகளுக்கும் அப்படியொன்றும் பெரிய
வித்தியாசங்கள் இல்லை.

ஆக, இவரது பெண்வெறுப்பு தமிழகத்தையும் தாண்டி அகில இந்தியாவெங்ஙணும்
விரிந்துபரந்துசெல்கிறது. அண்மையில், எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களால், ஆனந்த விகடனில், ‘நம்பிக்கை நட்சத்திரங்கள்’என்று சுட்டப்பட்ட
படைப்பாளிகளது பட்டியலைக் குறித்து ஜெயமோகன் கீழ்க்கண்டவாறு தன் “மேலான“
கருத்தினை வெளிப்படுத்தியிருக்கிறார்.

“பட்டியலில் உள்ள ஆண்படைப்பாளிகளில் அனைவரும் சிறப்பாக
எழுதக்கூடியவர்கள்தான். இன்னும் அதிகமாக அவர்களிடம் எதிர்பார்க்கிறேன்.
ஆனால், பெண்களில் பலர் சொல்லும்படி எதுவுமே எழுதாமல் பலவகை உத்திகள்
மூலம் ஊடகப்பிம்பங்களாக ஆனவர்கள். பலரை ஏன் எழுத்தாளர்கள் அல்லது
கவிஞர்கள் என்று சொல்கிறார் நாஞ்சில் என்றே புரியவில்லை.

இது ஒரு முக்கியமான அம்சம். இன்று ஆண்கள் எழுதித்தான் நிற்கவேண்டியிருக்கிறது. பெண்களுக்கு பெண்களாக தங்களை முன்வைத்தாலே இடம் கிடைத்துவிடுகிறது. கொஞ்சம் பெண்ணியமும் பீரிட்டால் பெரும்பாலானவர்கள் ‘எதுக்கு வம்பு, காலங்கெட்ட காலத்திலே?’என்று ஜகாவாங்கிவிடுவார்கள்.”

–‘நாஞ்சில் நாடன் பட்டியல்’(ஜூன் 09,2014)

எழுதுகிற பெண்களை இதைவிடக் கேவலப்படுத்திக் கீழிறக்க முடியாது. பெண்ணியம்
பீறிடுகிறதோ இல்லையோ, ஜெயமோகனுள் படிந்து கிடந்த பெண்வெறுப்பு மேற்கண்ட
வாசகங்களில் பீறிட்டுப் பாய்ந்திருக்கிறது. இது சகித்துக்கொள்ள இயலாத
இழிவுபடுத்தல், அவமானம், எழுந்தமானத்தில் கருத்துரைக்கிற  அறிவீனம், பெண்களது தன்மானம்மீது விழுந்திருக்கும் ஆணாதிக்கத்தின் மிலேச்சத்தனமான அடி. பெண்களால் எழுதப்பட்ட அனைத்துப் படைப்புக்களையும் ஜெயமோகன் வாசித்துவிட்டாரா? என்ற கேள்விகளெல்லாம் ஒருபுறமிருக்கட்டும். ‘உத்திகள் மூலம் ஊடகப்பிம்பங்கள் ஆனவர்கள்’என்பதன் பொருள்தான் என்ன? உத்தி என்பது உடலைக் குறிக்கிறதா? வளைந்து நெளிந்து செய்யும் சாகசங்களையும் சமரசங்களையும் குறித்ததா? இத்தகைய
இழிவுபடுத்தலுக்கு, பாலியல் நிந்தனைக்கு பதிலடி கொடுக்கும்முகமாக
ஜெயமோகன்மீது பொதுநல அவதூறு வழக்குக்கூடத் தொடுக்க இயலும்.

சர்ச்சைகள்மூலம் என்றென்றைக்குமாகத் தனது இருப்பினை ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கும் ஜெயமோகன், வழக்கம்போல கேள்வியும் பதிலுமாக அடுத்த பதிவில்-‘பெண்களின் எழுத்து’ (ஜூன் 11,2014)- வந்து சப்பைக்கட்டு விளக்கமொன்றை
அளித்திருக்கிறார்.

“இந்த ஆண் எழுத்தாளர்களில ஒருத்தர்கூடவா முக்கியமில்லை? ஒருத்தரோட
பேட்டியோ படமோ எங்கியாவது வந்திருக்கா? பலரோட முகமே இந்த ஸ்டாம்பு சைஸ் போஸ்டரிலதான வந்திருக்கு. ஏன்?”என்று தனது பாலினம் சார்ந்து
‘தர்க்க’ரீதியாகக் கேள்வியெழுப்புகிறார். ஜெயமோகன் தன்னால் வாங்கப்படும்
சஞ்சிகைகளை வாசிக்கிறாரா அன்றேல் எழுதியநேரம் போக அவற்றின்மீது படுத்து உறங்கிவிடுகிறாரா என்பதை அவர்தான் தெளிவுபடுத்தவேண்டும்.

“செய்திகளை அவங்களேகூட திறமையா உருவாக்கிக்கிறாங்க” என்கிறார்.
பெண்கள்தான் எத்தகைய சூழ்ச்சிக்காரிகளாகவும் விளம்பரமோகிகளாகவும்
இருக்கிறார்கள்! நெடுந்தொடர்களில் வரும் (அபத்தமான) வில்லிகளைக்
காட்டிலும் படுபயங்கரமானவர்களாயிருக்கிறார்
கள் இந்தப் பெண் படைப்பாளிகள்!

“சில பக்கங்களுக்கு பிழையில்லாமல் தமிழ் எழுதக்கூட தெரியாதவர்கள் பலர்.
உட்கார்ந்து பத்துப் பக்கம் தொடர்ந்து எழுதக்கூட பொறுமையற்றவர்கள்”என்கிறார். பெண் படைப்பாளிகள்மீது காழ்ப்புணர்வுகொண்டு எழுதிய குற்றச்சாட்டுக் கட்டுரையிலேயே எழுத்துப்பிழை விட்ட புத்திசாலி, பெண்படைப்பாளிகளுக்கு இலக்கண வகுப்பெடுப்பதை காலக்கொடுமையன்றி வேறென்னவெனச் சொல்வது? எழுதுகிற பக்க எண்ணிக்கையில் இல்லை இலக்கியம்; அது அதன் செறிவிலும் சாரத்திலும் அழகியலிலும் வடிவத்திலும் இருக்கிறது என்பதை காலந்தான் அவருக்குக் கற்பிக்கவேண்டும். ஆயிரம் பக்கக் குப்பைகளை எழுதி காடழித்து மழைவீழ்ச்சியைக் குறைப்பதைப் பார்க்கிலும், காலத்தால் அழியாத ஒரேயொரு கவிதையை எழுதி வரலாற்றில் நிற்பவர் மேல்.

பெண்ணியவாதிகள்மீது இவருக்கு இருக்கும் எரிச்சலை, அண்மையில் வலையேற்றிய தன்னிலை விளக்கக் கட்டுரையிலும் வெளிப்படுத்துகிறார்.

“இந்தப் பெண்களில் பலர் எழுதும் அசட்டுப் பெண்ணியப்படைப்புகளை
பெண்ணியமென்பதற்காக அங்கீகரிக்க வேண்டுமென்றால், இதேபோல மாக்ஸியம், சூழியல் என எதையாவது வைத்து எழுதப்படும் எல்லாப் பிரச்சாரக்
குப்பைகளையும் அங்கீகரிக்கவேண்டியதுதானே?”என்கிறார்.

பெண்ணெழுத்தையும் சேர்த்து ஆணே எழுதிக்கொண்டிருக்க அனுமதியாது அலையலையாக எழுதக் கிளம்பியிருக்கும் பெண்களைக் குறித்த ஆற்றாமையாகவும் பதட்டமுமாகவே ஜெயமோகனின் கோபத்தைக் கொள்ளவேண்டியிருக்கிறது.

“உண்மையிலேயே இவ்விசயத்தில் விவாதிக்க நினைப்பவர்கள் தமிழில்
கிருத்திகாவுக்குப் பின் பெண்கள் எழுதிய எந்த இலக்கியப்படைப்பில் அவர்கள்
முக்கியமான வாசக அனுபவத்தை அடைந்தனர் என்று எண்ணிப்பார்க்கட்டும்.
பெண்கள் எழுதிய எந்தப் படைப்பு சென்ற முப்பதாண்டுகாலத்தில் தமிழில்
பேசப்பட்டது என்பதைக் கணக்கிடட்டும்”என்று அறைகூவல் விடுத்திருக்கிறார்.

ஆக, கடந்த முப்பதாண்டு காலத் தமிழிலக்கியம் ஆண்களால் மட்டுமே
நிறைக்கப்பட்டிருக்கிறது என்ற அடிமுட்டாள்த்தனமான வாதத்தினைச்
செய்திருக்கிறார். 
அம்பை, சிவகாமி, பாமா போன்று தமிழில் பெண்ணியச் சிந்தனைகளுக்குத் தமது படைப்பின்வழி வித்திட்டவர்களுக்கும், விளிம்புநிலை மக்களின் வாழ்வைக் குறித்து எழுதியவர்களுக்கும் அந்த முப்பதாண்டு காலப்பகுதியில்
எழுதிக்கொண்டிருந்த, எழுதிக்கொண்டிருக்கும் இதர பெண் படைப்பாளிகளுக்கும் தமிழிலக்கியச் சரித்திரத்தில் இடமில்லை என்று சொல்கிறார்

அவர்களெல்லோரும் ஆணாதிக்கத்தின் துர்க்கந்தத்தில் கற்பூரம்போல கரைந்து
போயிருக்கிறார்கள். இவ்வாறு தொடர்ந்து சொல்லிவருவதன் மூலமாக,
இலக்கியத்தில் பெண்களுக்குப் பங்கில்லை, அவர்கள் தொடர்ந்தும்
அடையாளமற்றவர்களாகவே நீடித்திருக்கிறார்கள் என்ற வாசக மனப்பிம்பத்தைக்
கட்டியெழுப்ப  ஜெயமோகன் பெரிதும் முயன்றிருக்கிறார்.
தமிழிலக்கிய வரலாற்றின் பாதையில், கண்களில் பட்டை கட்டப்பட்ட
குதிரையின்மீதேறி ஆண் சார்புச் சாட்டையோடு விரைந்து வந்துகொண்டிருப்பது
ஜெயமோகனாகவன்றி வேறு எவராக இருக்கவியலும்?

நாஞ்சில் நாடனது சர்ச்சையைக் கிளப்பிய பட்டியலில் இடம்பெற்றிருந்த ‘வகை
மாதிரி’களில் ஒருவராகவே இந்தக் கண்டனக் கூட்டறிக்கையில் ஜெயமோகன் மையமாக வைக்கப்பட்டிருக்கிறார். ஆனால், தமிழிலக்கியச் சூழலிலும் இணையவெளியிலும் ஆணாதிக்கவாதிகளும் கலாச்சாரச் சாட்டையேந்திய காவலர்களும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள் என்பதற்குப் பல உதாரணங்களைக் காட்டமுடியும்.மாற்று அரசியற் கருத்துக்களை முன்வைக்கும் பெண்களது ஒழுக்கங் குறித்து கேள்வியெழுப்புவதன் மூலமும், அவர்களைக் குறித்து அவதூறுகளைப்
பரப்புவதன்மூலமும், பாலியல்ரீதியான வக்கிரச் சொல்லாடல்கள் மூலமும்
பெண்களைப் பின்னடிக்கச்செய்வதே அவர்களது அரசியல் விவாதமாக
இருந்துவருகிறது. தனிமனிதத் தாக்குதல்களில் பதிப்பாளர்களோ (சிலர்)
அன்றேல் இலக்கியவாதிகளோ (சிலர்) சளைத்தவர்களல்ல என்பதைக் கண்கூடாகக் கண்டுவருகிறோம். அவர்களிற் சிலர் குழுவாகச் சேர்ந்துகொண்டு
பெண்களுக்கெதிரான தங்களது எள்ளல்களை, இழிவுபடுத்தல்களை, அவதுாறுகளை ‘நிறுவனமய’ப்படுத்தி வருகிறார்கள். இக்கூட்டறிக்கையின் கனதி மற்றும் விரிவஞ்சி அவர்களது பெயர்களை விலக்கியிருக்கிறோம்.
இனிவருங்காலத்தில் அத்தகையோரின் நிலைப்பாடுகள் குறித்து தொடர் உரையாடல்களை நிகழ்த்தவுள்ளோம். ஆக மொத்தத்தில், ஜெயமோகனால் ‘கண்டுபிடிக்கப்பட்ட’ வார்த்தையொன்றில் சொல்வதானால், இணையம் ஒரு விரிந்த ‘வசைவெளி’யாக மாறிவருகிறது. துரதிர்ஷ்டவசமாக அந்த வார்த்தையைக் கண்டுபிடித்தவரே அதனைப் பிரயோகிப்பவருமாயிருக்கிறார். இலக்கியத்தில் அறம் என்றும், அழகியல் என்றும், உள்ளொளி என்றும் சொற்களை வைத்து சிலம்பாட்டம் ஆடினால் மட்டும் போதாது; சகவுயிரை மதித்தலே மனித விழுமியங்களில் முதன்மையானதாகும் என்பதை முதலில் ஜெயமோகன் உணர்ந்துகொள்ளவேண்டும்.

இந்த ஆணாதிக்க சமூகத்தில் குடும்பம் என்ற பாரபட்சங்கள் நிறைந்த
அமைப்பினுள் இருந்தபடி எழுதுவதென்பது எத்தனை சிரமத்திற்குரியது என்பதை,
அறிவின்பாற்பட்டுச் சிந்திக்கும் அனைவரும் அறிவர். எனினும், அதற்காக
பெண்கள் தங்கள் எழுத்தின்மீது மென்சாய்வு காட்டுங்கள் என்று கோரவில்லை;
விமர்சனங்களில் கருணைகூர்ந்திடுங்கள் என்று கையேந்தி நிற்கவில்லை.
இத்தகைய அவதூறுகளை, இழிவுபடுத்தல்களை சகவுயிரிகளாகிய எங்கள்மீது
செய்யாதீர்கள் என்பதே எங்களது வேண்டுகோள். எத்தனையோ நூற்றாண்டுகளாக பெண்ணடிமைத்தனம் என்ற ஈயக்குண்டை எங்கள் கால்களில் இழுத்தபடி நகரமுடியாமல் நகர்ந்துகொண்டிருக்கிறோம். இந்நிலையில், படைப்பாளிகள் என்ற முகமூடியை அணிந்தபடி உங்கள் பிற்போக்குவாத எச்சிலை இங்கு வந்து கொட்டாதீர்கள் என்றே நாங்கள் சொல்கிறோம். உங்களைக் குறித்த மிகைபிம்பங்களைக் கட்டியெழுப்ப ஆயிரக்கணக்கிலான வழிகளுண்டு. அவற்றையெல்லாம் விடுத்து, உங்கள் ஆணாதிக்க ‘அறிவாயுதங்களை’ எங்கள்மீது கூர்தீட்டிப் பார்க்க முற்படாதீர்கள்.

ஜெயமோகனது மேட்டிமைத்தனத்திலிருந்து முகிழ்த்தெழும் அபவாதங்களைத்
தட்டிக்கேட்கும் பொறுப்பு, பெண்களைப்போலவே சக ஆண் எழுத்தாளர்களுக்கும்
உண்டு. எனினும், அவர்களிற் பலர் அதைக் கண்டுகொள்ளாததுபோலவே
கடந்துசெல்கிறார்கள். அல்லது, அவரது நிலைப்பாட்டினையே அவர்களும்
கொண்டிருந்து அவரது வார்த்தைகளில் உள்ளுக்குள் மகிழ்கிறார்கள். ஒவ்வொரு
படைப்பாளியும் தத்தம் மனச்சாட்சியைக் கேள்வி கேட்கவேண்டிய நேரமிது. சக
எழுத்தாளர், நண்பர், முன்னுரை எழுதித் தருகிறவர், விருதுகளுக்குப்
பரிந்துரைத்தவர், பரிந்துரைக்கவிருக்கிறவர் என்ற சமரசங்களையெல்லாம்
பின்தள்ளி மனச்சாட்சியின் குரலுக்கு செவிமடுத்து எழுபவரே மனிதர்! அவரே
உண்மையான படைப்பாளி!

தன் இருப்பின் மூலவேர் ஆட்டங்கண்டுவிடுமோ என அஞ்சி எல்லோரையும்
சந்தேகிக்கும், தன் வீரத்தை அடிக்கடி பறையறைவித்துக்கொள்ளும், பாதுகாப்பு
வளைத்தை இறுக்கமாக்கும் சர்வாதிகாரியின் சஞ்சல மனநிலையையே ஜெயமோகன் தற்போது கொண்டிருக்கிறாரோ என ஐயுறுகிறோம். நூற்றாண்டுகளாக ஆணாதிக்கம் என்ற சகதியினுள்ளிருந்து வெளிவரப் போராடிக்கொண்டிருக்கும் பெண்களுக்கு எதிரான ஜெயமோகனின் காழ்ப்புணர்வுச் சாடல்களுக்கு எதிராக, இந்த அறிக்கையினூடாக எமது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்ஙனம்
அம்பை, குட்டிரேவதி, சுகிர்தராணி, தமயந்தி, கவிதா முரளிதரன், சே.பிருந்தா, அ.வெண்ணிலா, சல்மா, பெருந்தேவி, தமிழச்சி தங்கபாண்டியன், மோனிகா, ஜீவசுந்தரி பாலன், உமா சக்தி, தர்மினி,  கவிதா சொர்ணவல்லி, வினோதினி சச்சிதானந்தம், கவின்மலர், மயு மனோ, சக்தி ஜோதி, தமிழ்நதி, லிவிங் ஸ்மைல் வித்யா, ஸ்வாதி ச.முகில், ஆர்த்தி வேந்தன், நறுமுகைதேவி, முபீன் சாதிகா, பாரதி செல்வா, ரமா இன்பா சுப்ரமணியம், ஷஹிதா, கொற்றவை, பரமேஸ்வரி, சபிதா இப்ராஹிம், ச.விஜயலட்சுமி, உமா மோகன், ஹேமாவதி, பிரசாந்தி சேகரம், நாச்சிமகள் சுகந்தி, ஜீவசுந்தரி பாலன், பத்மஜா நாராயணன், கீதா இளங்கோவன், பாலபாரதி, சி.புஷ்பராணி, பானுபாரதி, பவானி தர்மா, இளமதி, கிர்த்திகா தரன், நிலவுமொழி செந்தாமரை, சு.தமிழ்ச்செல்வி, நந்தமிழ்நங்கை, கல்பனா கருணாகரன், மீனா, ஜென்னி டாலி, ப்ரியம்வதா, இந்திராகாந்தி அலங்காரம்,தமிழ்ப்பெண் விலாசினி, கு.உமாதேவி, தேனம்மை லஷ்மணன், அப்துல் ஹக். லறீனா, கீதா நாராயணன், ஃபாயிஸா அலி, பெண்ணியம் இணையத்தளக் குழு (தில்லை, கேஷாயணி, சுகந்தி,வெரோனிக்கா, சரவணன்), லதா சரவணன், ஜீவலக்ஷ்மி, ஷில்பா சார்லஸ், அகல்யா பிரான்ஸிஸ், ராஜ் சுகா, சசிகலா பாபு, சுபாஷினி திருமலை, நிவேதா உதயன், கோதை, சாந்தி, பிறேமா, நிலா லோகநாதன், மீசா. காதம்பரி, பரிமளா பஞ்சு, தமிழரசி, சக்தி செல்வி , சந்திரா ரவீந்திரன், கிரிஜா ராகவன், சுபா தேசிகன், தமிழ் அரசி, ரேவா, ஹன்சா, சுஜாதா செல்வராஜ், அமுதா தமிழ், புதிய மாதவி


பிவிஎன் தீபா நாகராணி, மோகனா சோமசுந்தரம், சரோஜா, நாகை கவின், சுந்தரவள்ளி, ஓல்கா ஆரன், பிரியா பாபு, ஷீத்தல் சென்னை, காத்தரீன் தெரசா, தாரா, நக்ஷத்ரா, வசந்த குமாரி, வாசுகி.

அரங்கமல்லிகா, நிருபா


ஆண் எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள்:


இளவேனில், கீழ்.கா. அன்புச்செல்வன், கி. நடராசன், முரளிகிருஷ்ணன் சின்னதுரை, வசுமித்ர, இராதெ. முத்து, நிழலி, பவுத்த அய்யனார், யோ. திருவள்ளுவர், ஆழி செந்தில்நாதன், ஆர். விஜயசங்கர், அண்ணாமலை சுந்தரமூர்த்தி, சுரேஷ் காதான், ஷாஜஹான், நந்தன் ஸ்ரீதரன், வாசு முருகவேல், ரிஷி அன்பு, சு. அகரமுதல்வன், விஜய் கே.சக்கரவர்த்தி

தேவேந்திர பூபதி, அய்யப்பன், ஜீவ கரிகாலன், புதிய பரிதி, மைக்கேல் அமல்ராஜ், ஜோஸ் அன்றாயின், மனோன்மணி புது எழுத்து, பெரியசாமி நடராஜன், எம்ஜிபிடிசிஏ ஜானி, அகநாழிகை பொன். வாசுதேவன், ரத்தன் ரகு, சயந்தன் கதிர், தமிழ் ஸ்டுடியோ அருண், ராஜ சுந்தரராஜன், யமுனா ராஜேந்திரன்


ஆர். ஆர். ஸ்ரீனிவாசன், ருத்ரன், ரத்தன் சந்திரசேகர், லக்‌ஷ்மணன் சிபிஇ, விஸ்வநாதன் கணேசன், சரவண குமார் சேலம், எடிவி ஜீவதனபால், உமாநாத், கிருபா முனுசாமி.


ச. தமிழ்செல்வன், மாநிலத் தலைவர், தமுஎகச.

(எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், செயற்பாட்டாளர்கள்)

பிற்குறிப்பு:

இந்தக் கண்டனக் கூட்டறிக்கையோடு உடன்படுகிற ஆண் படைப்பாளிகள்,கலைஞர்கள் இந்தப் பதிவின்கீழ் தமது ஒப்புதலைத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.