Apr 11, 2017

ஆளும் வர்க்க சிந்தனைகளே ஆளப்படும் வர்க்கத்தின் சிந்தனை.....

குழந்தைகளுக்கு பொருளாதாரம் (மொழிபெயர்ப்பு நூல்) நூலிலிருந்து ஒரு பகுதி....

........ ஒவ்வொரு சரக்கும் இப்படித்தான் வடிவமாற்றம் பெறுகிறது. தரத்திற்கான மாற்றமில்லை அது. பயன் மதிப்பு கோணத்தில் ஏற்படும் மாறமும் அல்ல. எல்லாம் வெறும் இலாபத்திற்காக! பரிவர்த்தனை மதிப்பு கோணத்தில்! மற்ற முதலாளிகளைக் காட்டிலும் தான் அதிக சரக்கை விற்க வேண்டும் என்பதே ஒவ்வொரு முதலாளியின் இலட்சியமும். அதிக தரமான சரக்கை விற்பது அவர்கள் நோக்கமல்ல. ஏதோ ஒரு மாய்மாலம் செய்து சரக்கை விற்க வேண்டும்.  அதிகம் விறு அதிக இலாபம் பெற வேண்டும். அதிகம் விற்பனையாக வேண்டுமென்றால், நுகர்வோர் முண்டியடித்துக் கொண்டு வாங்குமளவுக்கு சரக்கு வடிவம் தீவிரமாக மாறிக் கொண்டே இருக்க வேண்டும். பொருட்களை புதிய வடிவில் காட்சிப்படுத்தினால், தேவை இருக்கிறதோ இல்லையோ மக்கள் அதை வாங்குவார்கள் என்பது முதலாளிக்கு தெரியும். பொருட்கள் மீது பித்து கொள்ள செய்ய இது மிக எளிதான வழி.

சரக்கு உற்பத்தியை மேற்கொள்பவர்கள் எஜமானர்கள். அவர்களே முதலாளிகள். பொருட்களின் வடிவமைப்பை தீர்மானிப்பவர்கள் அவர்களே. தொழிலாளர்களுக்கு அதில் எந்த பங்குமில்லை. எஜமானர்கள் என்ன முடிவு செய்கிறார்களோ அதனை உற்பத்தி செய்வதே தொழிலாளர்களின் கடமை. விசயம் இத்தோடு நின்றுவிடவில்லை.  தொழிலாளர்கள் பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களும் எஜமானர்களின் வியாபார தந்திரத்தால் உருவானவை.

எஜமானரின் புண்ணியத்தில் என்ன விதமான உணவு தயாரிக்கப்பட்டாலும், கலப்படம் செய்யப்பட்டிருந்தாலும், தொழிலாளர்கள் அதை உண்ண வேண்டும். எஜமானர்கள் பெருமளவில் உற்பத்தி செய்யும் துணிகளை உடுத்த வேண்டும். எஜமானர்கள் பதிப்பிக்கும் கேவலமான இதழ்களைத் தான் தொழிலாளர்கள் படிக்க வேண்டும். எஜமானர்கள் எடுக்கு வக்கிரமான திரைப்படங்களைத் தான் தொழிலாளர்கள் பார்க்க வேண்டும்.

தொழிலாளர்கள் என்ன உண்ண வேண்டும், என்ன படிக்க வேண்டும், என்ன உடுத்த வேண்டும், எதைப் பார்க்க வேண்டும் என்று எஜமானர்கள் தான் ஒவ்வொன்றையும் முடிவு செய்கிறார்கள்.  தொழிலாளர்கள் எதை உண்ண வேண்டும், எதை நுகர வேண்டும் என்பதை முடிவு செய்பவர்கள் எஜமானர்கள். தொழிலாளர்களுக்கு பின்னர் எப்படி மாற்றுப் பார்வை கிடைக்கும்?

தமக்கு என்ன வேண்டும் என்பதை முடிவு செய்யும் சந்தர்ப்பம் தொழிலாளர்களுக்குக் கிடையாது. எஜமானர்கள் உற்பத்தி செய்யும் சரக்குகளுக்கேற்ப தொழிலாளர்களின் தேர்வு மாறும். பொருட்களின் மாதிரிகள் மாற மாற, தொழிலாளர்களின் தேர்வுகளும் மாறிக் கொண்டே இருக்கும். ‘இது நல்லதா, கெட்டதா, பயனுடையதா, இல்லையா’ என்றெல்லாம் சுயபரிசோதனை செய்துகொள்ள வாய்ப்பே இல்லை.

தொழிலாளர்கள் தங்கள் சம்பளப் பணத்தை செலவு செய்து தங்கள் விருப்பம் போல் பொருட்களை வாங்குகிறார்கள் என்று நாம் எண்ணுகிறோம். இது ஒரு பெரிய மாயை.  சந்தையில் என்ன கிடைக்கிறதோ அதைத் தான் அவர்கள் வாங்குகிறார்கள். பொருட்களின் பளபளப்பிற்கு ஏற்ப, தொழிலாளர்களுக்கு அதை வாங்கும் ஆர்வம் ஏற்படுகிறது.

மூளை உழைப்பில் ஈடுபடும் தொழிலாளர்கள் தங்கள் வீடு நிறைய பொருட்களை நிறைத்திருப்பார்கள். தரையெங்கும், சுவரெங்கும், சுவரின் இடுக்குகள், அலமாரிகளில் வண்ண வண்ண தட்டுகள், அலங்காரப் பொருட்கள், கலைப் பொருட்கள் என எங்கும் பொருட்களாய் இருக்கும்! இம்முறையில் வீடுகளை அலங்கரிப்பது ஏதோ கலை நயம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஸ்டைலான பொருட்களை வீட்டில் அடைப்பதன் மூலம், தங்கள் வீடுகளும் எஜமானர்களின் வீடுகளைப் போல் அழகாகி விட்டது என்று சமாதானம் கொள்கிறார்கள்.

எஜமானர்கள் அனுபவிக்கும் போக வாழ்வைப் போலவே தாங்களும் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தொடங்கி, அவர்களைப் போலவே ஊர் சுற்றுவது, சுற்றுலா செல்வது, ஹோட்டல்களுக்கு செல்வது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். சுற்றுலா என்னும் பெயரில் அந்த ஊர்களில் உள்ள கோயில்களுக்கு செல்வது, நகைக் கடைகளுக்கு செல்வது தான் நடக்கும்! அப்படி அவர்கள் ஊர் சுற்றும் போது, அங்கிருக்கும் தொழிற்சாலைகளில் உழைக்கும் தொழிலாளர்களின் நிலை என்ன என்பது பற்றியெல்லாம் இந்த மூளை உழைப்பாளிகள் கவலைப்பட மாட்டார்கள். அவர்கள் மட்டுமில்லை, தொழிலாளர்கள் இப்படி சுற்றுலா சென்றாலும், அங்கிருக்கும் நிலைமை குறித்து அவர்களுக்கும் கவலை இல்லை. வீதிகள், கடைகள், பூங்காக்கள், ஓட்டல்கள், திரைப்படங்கள் இதுதான் வாழ்க்கையை அனுபவிப்பதற்கான அளவுகோல்! வரையறையின்றி சுற்றி திரிந்துவிட்டு, கையில் இருக்கும் காசையெல்லாம் கோயில்களில் செலவழித்துவிட்டு, தம் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கிறது என்னும் மாயையுடன் வீடு திரும்புகிறார்கள்!

தொழிலாளர்கள் இவற்றையெல்லாம் ஏதோ விருப்பத்துடன் செய்வதாக எண்ணத் தோன்றும். தொழிலாளர் வர்க்கத்திற்கென்று சொந்த எண்ணங்கள், சிந்தனைகள், விருப்பங்கள், சொந்த கலாச்சாரம் இவையெல்லாம் இருப்பதாக நாம் நினைக்கிறோம். ஆனால், உண்மை என்னவெனில், ஒவ்வொருவரும் சுமந்து கொண்டிருக்கும் ‘சுய-சிந்தனை’ என்பதே கூட எஜமானர் வர்க்கம் தொழிலாளர் வர்க்கத்திற்கு பல பல தலைமுறைகளாக கடத்தி வந்தவையே. எஜமானர் வர்க்கத்திற்கு எது ஆடம்பரமோ, எது வாழ்க்கையின் மதிப்போ அதுவே அன்றாடங் காய்ச்சிகளான ஏழைத் தொழிலாளர்களுக்கும் வாழ்க்கையின் இலக்காகிறது!  ‘உழைப்புச் சுரண்டல்’ மற்றும் ‘முதலாளி-தொழிலாளி’ உறவு குறித்தெல்லாம் ஏதுமறியாமல், தொழிலாளர்களுக்கென்று சொந்த சிந்தனை இருக்க வேண்டும், தனித்தன்மை இருக்க வேண்டும், சொந்த பண்பாடு இருக்க வேண்டும் என்றெல்லாம் கூறுவது முட்டாள்தனமானது! உண்மையில் முதலாளித்துவ சிந்தனைகளே பின்பற்றப்படுகின்றன.

எஜமானர்களின் சிந்தனைகளை கடந்த கால அடிமைகள் அப்படியே பின்பற்றியதற்காக நாம் அவர்களை குறை சொல்ல முடியாது. கடந்த கால குத்தகை விவசாயிகளையும் நாம் குற்றம் சொல்ல முடியாது.

கடந்த கால அடிமைகள், கடந்தகால குத்தகை விவசாயிகளின் அறியாமைகளையும் கடந்த நிகழ்கால மூளை உழைப்பாளிகள் பிற்போக்குத் தனத்துடன் இருப்பதையே நாம் குறை சொல்ல முடியும். தங்கள் வாழ்வாதார நிலைமைகள் குறித்து ஏதுமறியாமல் இந்த மூளை உழைப்பாளிகள் வாழ்வது தவறு.

இதே நிலையில் தொழிலாளர் வர்க்கம் நீடிக்கும் வரையில், ஆளும் வர்க்க சிந்தனைகளால் பீடிக்கப்பட்ட வாழ்வாகவே அது இருக்கும்.



No comments:

Post a Comment