தொழில்நுட்பம் உச்சத்தில் வளர்ந்திருக்கும் இந்த காலத்தில் இணைய இணைப்பு என்பது பயணங்களின் போதுகூட நமக்கு கிடைக்கிறது. 2G அலைக்கற்றை ஊழலில் தொடர்பிருப்பதாக சொல்லப்படும் ப. சிதம்பரம் அவர்களுக்கு இது கூடவா தெரியாமல் இருக்கும். பாளையங்கோட்டையில் பேச செல்வதற்கு முன் கூட கூகிளில் அவர் தேடியிருந்தால், போராட்ட வரலாற்றை அவர் படித்திருக்கலாம். இத்தருணத்தில் படைப்பாளர் இயக்கத்தினரிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன், சிதம்பரம், தினமலர், காங்கிரஸ், RSS ஆகியோர் மாற்று அறிவை அதாவது சமூகத்திற்கு நன்மை விளைவிக்கக்கூடிய பரிந்துரைகளைக் கொண்ட மாற்றுச் சிந்தனையாளர்கள் எழுதிய புத்தகங்களைத் தேடி கற்பதில்லை என்பது தெரிகிறது. குறைந்தபட்சம் அணு சக்திக் கதிர்களால் ஏற்பட்டிருக்கும் ஆபத்து குறித்த உலக அறிஞர்களின் ஆய்வுகள், கூடங்குளம் அணு உலைக்கெதிரான மக்கள் இயக்கத்தின் அறிவியல்பூர்வ தகவல்களைக் கொண்ட வெளியீடுகள், மத்திய அரசின் வல்லுனர் குழுவினரின் அறியாமையை வெட்ட வெளிச்சமாக, ஆதாரபூர்வமாக பேசும் வெளியீடுகள், மற்றும் பல்வேறு சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் வெளியிட்டுள்ள புத்தகங்களை நம் கைக்காசுகளைப் போட்டாவது வாங்கி அணுப்புவோம்.
சிதம்பரம் மற்றொரு அரைத்த மாவை மீண்டும் அரைத்தார் – அது தான் அப்துல் கலாமின் பரிந்துரைகள். ”அப்துல் கலாமே சொல்லிவிட்டார்” – அப்துல் கலாமே பேசிவிட்டார்....அப்துல் கலாமே சாப்பிட்டு விட்டார் என்று பேச்சுக்கு பேச்சு அவரை இழுத்தார்....மிக்க மகிழ்ச்சி.
மாண்பு மிகு மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களுக்கு,
அப்துல் கலாம் யார்...எங்கிருந்து வந்தார் என்பது தாங்களுக்குத் தெரியாததல்லவா. குடியரசுத் தலைவராக கேப்டன் லட்சுமி பாயை இடது சாரிகள் முன்வைத்தபோது பாரதிய ஜனதாவால் நிறுத்தப்பட்டவர் அப்துல் கலாம். ஆனால் வாஜ்பேயி அவர்களை விட மிக மோசமான இந்துத்துவ குணங்கொண்டவராக இருக்கிறார் கலாம். அய்யா நீங்கள் கூறும் திருவாளர் அப்துல் கலாம்தான் பாராளுமன்றத்தில் காந்தியைச் சுட்டுக்கொன்ற கோட்சேவின் அதிகாரப்பூர்வ குருவான சாவர்க்கரின் படத்தை திறந்து வைத்தவர். பகவத் கீதை என்ற நூலை சத்தியம் என்று நம்பும் பரிதாப ஆத்மா...அய்யா வாஜ்பேயி யார் 1942ல் பட்டேஸ்வர் கிராமத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளார்களுக்கு எதிராக மக்கள் திரள, போலிஸ் அடக்க, மக்கள் கொந்தளிக்க பிரிட்டிஷ் அரசு அவர்களை, அந்தப் பழங்குடி மக்களை துவம்சம் செய்து மக்கள் தலைவர்களைக் காட்டிக் கொடுக்கச் சொன்னது. மக்கள் மறுத்தனர். ஆனால் மக்கள் தலைவர்கள் காட்டிக் கொடுக்கப்பட்டனர். அய்யா காட்டிக்கொடுத்த அந்த உன்னத ஆத்மாக்கள் நம்பர் 1. பிரேம் பிகாரி வாஜ்பாயி. நம்பர் 2 அடல் பிகாரி வாஜ்பாயி...அய்யா எப்படி இருக்கிறது பாருங்கள் வரலாறு. மிக்க மகிழ்ச்சி இந்த அப்துல் கலாமும், வாஜ் பேயிம் அவர்கள் சார்ந்த அமைப்புகளும் சொல்வதனால் எல்லாவற்றையும் செய்ய வேண்டுமென்றால் நீங்கள் இந்தியாவை மனநோயாளர்களின் நாடு என்றழைப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறீர்கள் என்றே அர்த்தம். அய்யா இந்தியாவை அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று கேட்டு ஆட்சி நடத்துவதற்கு பதில் அவர்களை சர்வாதிகாரிகளாய் மாற்றி மக்கள் குடியரசை ஒழியுங்கள் நிம்மதியாய் போகும். நீங்கள் இந்த அணு உலைக் கருத்தாக்கத்துக்கு உங்களால் முடிந்த அளவுக்கு ஆதரவு தெரிவித்து அதைத் அன்னை சோனியா காந்தியின் கையில் கத்தரிக்கோல் பிடித்து ரிப்பன் வெட்ட நினைக்கிறீர்கள். நாங்கள் முடிந்த அளவுக்கு போராடுகிறோம். அய்யா உள்துறை அமைச்சரான உங்களுக்கு அப்துல் கலாமும், அணு உலையும் எவ்வளவு முக்கியமோ அவ்வளவுக்கும் மேல் உதயகுமாரன், புஷ்பராயன், ஜேசுராஜன், அம்மக்களின் வாழ்வாதாரம், இயற்கை மாசுபடாதிருத்தல் ஆகியவை எங்களுக்கு முக்கியம்.
அணுகுண்டுகள் பற்றி அதன் பேரழிவு பற்றி கவிஞரொருவர் ஒரு மிக அற்புதமான கவிதையொன்றை இயற்றியிருக்கிறார். அதைத் தங்களின் பார்வைக்கும் வைக்கிறேன். ’சில இரவுகளில்’ -
சில இரவுகளில்
எனது தூக்கம் திடீரென்று கலைக்கப்படுகிறது
எனது கண்கள் திறக்கின்றன
அணு ஆயுதங்களைக் கண்டுபிடித்த
அந்த விஞ்ஞானிகளைப் பற்றி நினைக்கிறேன்
ஹிரோஷிமா - நாகசாகியில் நிகழ்ந்த
பயங்கர இனப்படுகொலை பற்றிய செய்தியைக் கேட்டபோது
இரவில் அவர்கள் எப்படித் தூங்கியிருப்பார்கள்?
தாங்கள் செய்வது சரியல்ல என்ற உணர்வு
அவர்களுக்கு ஒரு வினாடியாவது ஏற்பட்டதா?
ஏற்பட்டிருந்தால் காலம் அவர்களை
குற்றவாளிக் கூண்டில் ஏற்றாது
இல்லையென்றால் வரலாறு அவர்களை
ஒரு போதும் மன்னிக்காது.
அய்யா அணுகுண்டுகளுக்காக அதன் பேரழிவிற்காக இந்த உருக்கம் மிகுந்த கவிதையை எழுதியது வேறு யாருமல்ல அணு உலை வேண்டும் வேண்டும் வேண்டும் என்று அப்பாவி மக்களின் வாழ்வாதரத்தின் மீதும் உயிரிலும் அடித்து விளையாடும் நீங்கள் கூறும் அப்துல் கலாம் திறந்து வைத்த புகைப்படத்தில்...பாரளுமன்றத்தில் இன்னும் காந்தியை திறந்த கண்களால் வெறித்துக்கொண்டிருக்கும் சாவர்க்கர் அவர்களின் வழிமரபான அய்யா அடல் பிகாரி வஜ்பேயிதான். ஆனால் பாருங்கள் அவரும் தான் பிரதமராய் இருந்தபோது பொக்ரானை வெடித்துவிட்டு suo motu அறிக்கையில் 5 வது விளக்கமாக
“ இப்போது இந்தியா மறுக்கமுடியாதபடி ஒரு அணு ஆயுத அரசாக உள்ளது. இந்தத் தகுதி " நாங்கள் தேடி எங்களுக்கு வழங்கப்பட்டதல்ல; மற்றவர்கள் எமக்கு மானியமாக அளித்த அந்தஸ்தும் அல்ல. அது "எம் விஞ்ஞானிகளும் பொறியியலாளர்களும் தேசத்துக்கு வழங்கிய கொடை.” மேலும் " மனித குலத்தின் ஆறில் ஒரு பங்குக்கு, இந்தியாவுக்கு உள்ள உரிமை.” மிக்க மகிழ்ச்சி. ஆனால் தாங்கள் விரும்பாத வகையில்தான் இதை சுட்டிக்காட்டியதற்கு எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஒரு குறிப்பிட்ட எல்லை வரை ஒரு இந்திய குடிமகளாக எனது வீட்டின் மின்சாரத் தேவைகளுக்கு நீங்கள் என்னைத் துணைக்கழைப்பதில் எனக்கு எந்த உடன்பாடும் இல்லை. அப்படி ஒரு மின்சாரத்தை நான் விரும்பவில்லை. மன்னித்திவிடுங்கள். அய்யா ஒரு இடைத்தகவலாக நீங்கள் வழிமொழியும் அப்துல்கலாமும் பொக்ரான் அணுகுண்டு வெடிப்பில் ஒரு தொழில் நுட்ப வல்லுனர். அவரிடம் இப்பொழுது கேளுங்கள் அணு குண்டு நல்லதா என்று...மிக எளிதாக அவரால் சொல்ல முடியும். கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்று. நீங்களும் உங்கள் கடமையைச் செய்கிறீர்கள். ஆனால் அய்யா அது ஒரு மத்திய உள்துறை அமைச்சராக மக்கள் மேல் அபிமானம் கொண்ட ஒருவரைப் போல் இல்லை. கடமையைச் செய் இல்லையெனில் நீ துரோகி...நாசமாய்ப் போக என்று கூறுவதைப் போல் உள்ளது. அதே போல் சுப. உதயகுமாரை நீங்கள் அடிக்கடி விளிப்பது மிகவும் அறுவெறுக்கத் தக்க ஒன்றாக உள்ளது. இன்றைய நிலையில் அவர் அப்துல் கலாம் வாஜ்பேயி ஏன் உங்களை விட மிகக் கீழான வசதியில் மக்களின் சார்பாக நிற்கும் ஒரு மனிதன் அவ்வளவே. அய்யா ஒரு சிறிய ஆலோசனை தாங்கள் ஏன் பாரதிய ஜனதாவிலோ அல்லது ஆர்.எஸ்.எஸ்.ஸிலோ இணையக் கூடாது.( கூடங்குள மக்கள் கிறித்தவர்கள் என்ற அளவில் பூசிய மதச் சாயம் குறித்து நீங்கள் விரிவாக விளக்காமல் போனதற்காக) எங்களுக்கு இப்பொழுது நீங்கள் அடிக்கடி முன் மொழியும் பெயராக ஆகிவிட்ட அப்துல் கலாம் மற்றும் சோனியா காந்தி என்ற பெயர்களில் வெறுப்புக் கூடிக்கொண்டே போகிறது. அதிலும் பின்னவருக்குப் பின் இணைக்கப்பட்டிருக்கும் காந்தி என்ற பதத்திற்கு உள்ள பொருள் இன்னும் கொச்சையாக உள்ளது. அது சம்பந்தப்பட்ட நபரான மோகன் தாஸ் கரம் சந்தை ஞாபகப்படுத்துவதோடு, அது என்னை அவரை மகாத்மா என்றழைக்க கூச்சப்படவும் வைக்கிறது. ஆனால் பெயருக்கும் கவிதைக்கும் அறிக்கைக்கும் உளறலுக்கும் உள்ள வித்தியாசங்களை நானறிவேன் என்பதை மகிழ்ச்சியுடன் கூறுகிறேன். மேலும் கூடங்குள அணு உலைக்கு செலவான தொகை 13,500 கோடிகள் என்பது ஸ்பெக்ட்ராம் கொள்ளையில் அடிக்கப்பட்டதைவிட மிகக் குறைவாகவே உள்ளது. ( estimated 2G scam value is 176,645 crore (US$ 39 billion) எனவே அய்யா அவர்கள் நிதி விவகாரங்களில் இந்தியாவுக்கு ஒரு முன்மாதிரியாக இருப்பதாலும், சம்பந்தப்பட்ட வழக்கில் தாங்கள் இணைந்திருப்பதாலும்...அது குறித்து உங்கள் மனந்திறந்த விளக்கத்தை அதே பாளையங்கோட்டையில் வைத்து விளக்கினால் நான் மகிழ்வேன்.
அப்துல் கலாமென்ன ஒட்டுமொத்த மானுட அறிவுக்குமான அளவுகோலா ஐயா, அவருக்கு மட்டும் தான் அறிவியல் அறிவு இருக்கிறதா? Dr. சாந்தா போன்றோர் அணு சக்திக் கதிர்களால் புற்று நோய் வராது என்று சொல்வது எத்தனைப் பெரிய துரோகம் என்பதை வரலாறு சொல்லும். இப்படி சூதும் வாதும் செய்யும் நீங்கள், போபர்ஸ் ஊழல், 2ஜி ஸ்பெக்டரம் ஊழல், காமன் வெல்த் ஊழல் ஆகிய ஊழல்களில் பங்கு வகித்த உங்கள் கட்சியாளர்கள், தலைமைகள், RSS, பா.ஜ.கவினருக்கு சுப. உதயகுமாரன் பற்றியும், கூடங்குள மக்களைப் பற்றியும் பேசுவதற்கான அறுகதை கிடையாது என்பதை குறித்துக்கொள்ளுங்கள்.
கலாமை விடவா இவர்கள் மக்களை நேசிக்கிறார்கள் என்று நீங்கள் கேட்பதிலிருந்து மக்கள் அறிவற்றவர்கள், உங்கள் அடிமைகள் என்று உறுதி செய்ய விரும்புகிறீர்கள் என்பதை அறியமுடிகிறது....ஆனால் மக்கள் எல்லாக் காலத்திலும் மடையர்களாக இருப்பதில்லை, அவர்களுக்கு அறிவு வந்துவிட்டது என்பதால் ஐயமும், பதட்டமும் கொண்டே இப்படி பேசுகிறீர்கள் என்பது எங்களுக்கும் புரிகிறது.....கலாம் எங்கே மக்களை நேசிக்கிறார். அவர் தனக்கு கிடைக்கும் புகழாரங்களை நேசிக்கிறார். அவர் ஒரு அரசியல் பகடைக் காய் அவ்வளவுதான்...அவர் சொல்வதெல்லாம் மானுடம் வாழவேண்டும் என்ற நோக்கோடு அல்ல, மக்களையெல்லாம் கொன்று விட்டு, இயந்திரங்கள் மட்டும் நிறைந்த ஒரு வல்லரசு இந்தியாவை உருவாக்க வேண்டும், ‘இந்தியா’ வாழவேண்டும் என்பதற்காக மட்டும் தான். எடுப்பார் கைப்பிள்ளையாக இருக்கும் அவர் தன்னைக் குழந்தைகள் பிரியர் என்று சொல்லிக் கொள்கிறார். அணுக்கதிர் வீச்சினால் எதிர்கால சந்ததிகள் பாதிக்கப்படும் என்ற கூறுணர்வின்றி பிதற்றிக் கொண்டிருக்கிறார். அதை எந்தக் கேள்வியும் இன்றி நீங்கள் சொல்வதாலேயே நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிறீர்கள். கருத்துச் சுதந்திரம் என்று ஒன்று உள்ளதே அது பற்றி உங்களுக்குத் தெரியாதா ஐயா....உங்கள் கட்சிக்கெதிராக எதுவும் பேசமுடியாத அடிமையாக ஒருவேளை நீங்கள் இருக்கலாம்....மக்களாகிய நாங்களும் அப்படி இருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது சிறுபிள்ளைத் தனமாக இருக்கிறது ஐயா.
2G அலைக் கற்றை ஊழலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள உங்கள் வீட்டுக்கெல்லாம் ‘ரெயிட்’ ஏவப்படவில்லை, ஆனால் மக்கள் இயக்கமாக செயல்பட்டு வரும் ஒரு போராட்டக் குழுவினரின் மதப் பின்னணியை வேண்டுமென்றே பெரிது படுத்தி கிறித்தவ என்.ஜி.ஓக்களிடம் சோதனை நடைபெற்றது. இவ்வளவு மோசமான ‘இந்துத்துவ’ ஒடுக்குமுறை நிலவும் ஒரு நாட்டில் அவர்கள் மதம் மாறியதால் மட்டுமே ஏதோ தப்பிப் பிழைத்தார்கள் என்று தான் சொல்வேன். இப்போராட்டத்தில் கிறித்தவர்கள் அல்லாதோரும், மத நம்பிக்கை அற்றோரும், மானுடத்தின் மீது, இயற்கை மீது அக்கறை கொண்டவர்கள் அணைவரும் இணைந்திருக்கிறார்கள் என்பதை ஏன் ஐயா மறைத்துப் பேசுகிறீர்கள். கீழ்த்தரமான மதச்சாயம் பூசுவதை தயவு செய்து நிறுத்திக்கொள்ளுங்கள். 13,500 கோடி முதலிடு போட்டாயிற்று என்று கூவுகிறீர்களே....யாரிடம் கேட்டு நீங்கள் முதலீட்டைப் போடுகிறீர்கள், மக்களிடம் அணுமதி பெற்றா ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறீர்கள்...அப்படியே மக்கள் மத்தியில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினாலும் ‘எந்த மக்களிடம்’ அதை நடத்துவீர்கள் என்று நாங்கள் சொல்லவும் வேண்டுமா ஐயா?
மாட மாளிகைகளும், கார்ப்ரேட் நிறுவனங்களும், அந்நிய முதலாளிகளின் முதலீடும், தொழில்நுட்ப வளர்ச்சியும் மட்டும் தான் எதிர்காலம் என்று நீங்கள் சொல்கிறீர்கள், அப்பகுதி மக்களின் மேம்பாட்டுக்கு என்று சொல்லும் நீங்கள் அதை ஏற்கும் அல்லது மறுக்கும் உரிமையை ஏன் அப்பகுதி மக்களிடம் விடாமல் உங்கள் ஆட்சி அதிகார வலைக்குள்ளேயே வைத்திருக்கிறீர்கள் சிதம்பரம் ஐயா அவர்களே....
முடிந்தால் அறிவியல் பூர்வமான வாதங்களை வைத்து ஏதாவது பேசுங்கள், இல்லையேல் சொல்லுங்கள் உங்களுக்கு சில புத்தகங்களை நாங்கள் அணுப்பி வைக்கிறோம்.
இறுதியாக “நீங்கள் சொல்லும் ’எதிர்காலம்’ என்ற வார்த்தைகளில் எங்களுக்கான ’கல்லறைச் செங்கல்கள்’ எத்தனை உற்பத்தியாகிறது என்பதை நாங்கள் அறிவோம்”.
இப்படிக்கு,
உங்கள் பாஷையில் சொல்வதானால்...
தேசத்துரோகி* கொற்றவை.
உதவிய நூல்கள் மற்றும் சுட்டி:
1. விடுதலைத் தழும்புகள் – சு.போ. அகத்தியலிங்கம், தமிழ் புத்தகாலயம்
2. ஓர் அணுகுண்டு இரண்டு கவிஞர்கள் – எஸ்.வி. ராஜ துரை, அடையாளம்
3. பா.ஜ.கவின் அணு ஆயுத சோதனையும், விளைவுகளும் – தமிழில். சிங்கராயர், சவுத் விஷன்
4. கூடங்குளம் அணுமின் திட்டம் (ஜனவரி, 2012) – பூவுலகின் நன்பர்கள்
* இந்திய ’தேசம்’ என்பது இம்மண்ணில் பிறந்த அணைவருக்குமான இடம் என்பதை மறுக்கும் வகையில், அரசின் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கேள்வியின்றி ஏற்றுக்கொள்ளும் வெற்றுப் பொம்மையாய் இருப்பதை விட நியாயத்திற்காக குரல் கொடுக்கும் ‘துரோகி’யாய் இருப்பது சுயமரியாதை கூடிய ஒன்று.