Mar 30, 2019

பெண் உடலுக்குப் பூட்டு?


பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக குமுதம் ரிப்போர்ட்டரில் வந்த கட்டுரை
பொள்ளாச்சி சம்பவம் என்று சொல்லப்படும் பாலியல் வன்கொடுமை சம்பவமானது தமிழ்நாட்டையே இன்று உலுக்கி உள்ளது. (தமிழ்நாட்டில் நடக்கும் எதுவும் இந்தியளவில் கொந்தளிப்பை ஏற்படுத்துவதில்லை!) எங்கு பார்த்தாலும் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை பற்றிய செய்திகள், காணொளிகள். மறுபுரம் குற்றவாளிகளை எப்படி தண்டிக்க வேண்டும் என்பது பற்றிய விவாதங்கள். நம் நாட்டில் இதற்கெல்லாம் அப்பாற்பட்ட மிகப்பெரிய பிரச்சினை பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பது. அதிலும் குறிப்பாக குற்றச் செயல்களின் பின்னால் ஆளும் அதிகார பலம் இருக்குமெனில் தீவிரப் போராட்டங்களை நடத்த வேண்டியுள்ளது. தமிழ் நாடெங்கும் மாணவர்கள், பெண்கள் அமைப்பினர் என்று போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
ஒவ்வொரு முறையும் குற்றங்கள் நடக்கையில் செய்திகளாக, புலம்பல்களாக கடந்து செல்வதும், ‘மிகவும் கொடூரமானகுற்றங்கள் நடக்கையில் குறிப்பிட்டகாலம் கொந்தளிப்பதுமாக கடக்கிறது காலம்.
நல்லவர், கெட்டவர், நீதி, நியாயம் போன்ற நம்பிக்கைஉடைய பொது சமூகத்தினர் குற்றவாளிகளை கொடூரர்கள், காம வெறியர்கள் என்றெல்லாம் வரையறுத்து அவர்களை வெட்டிக் கொல்ல வேண்டும், கடுமையாக தண்டிக்க வேண்டும்என்னும் கோஷங்களை எழுப்புவர்.
நிலவும் சமூக அமைப்பினைப் பற்றிய சமூக-அரசியல் விழிப்புணர்வுடைய மற்ற பிரிவினர் நீதிக்காக போராடுவதோடு இத்தகைய குற்றங்களுக்கு காரணமாக இருக்கும் பண்பாடு மற்றும் ஆணி வேர் குறித்துப் பேசுவார்கள்.
நோய்க்கு சிகிச்சை அளிக்கும் அதேவேளை நோய் அறிந்து நோய்க்கான மூலக்காரணம் அறிந்து அதை தணிக்கும் வழியை அறிந்து சரியாக செயல்பட வேண்டும்.
அதுதான் பெண்ணியக் கல்வி, சமத்துவக் கல்வி எனப்படுகிறது. பெண்ணியம் பற்றி இங்கே தவறான புரிதல் நிலவுகிறது. பெண்கள் தங்கள் விருப்பம் போல் பாலியல்உறவு கொள்வதற்காக பேசும் பேச்சு என்றே இந்த ஆணாதிக்க சமூகம் கற்பித்து வைத்திருக்கிறது. பெண்ணியம் என்பது ஆண் வெறுப்பல்ல. பெண்ணியம் என்பது பெண் ஆதிக்கமும் அல்ல. பெண்ணியம் என்பது உயிரியல் வேறுபாட்டை வைத்து மனிதர்கள் தங்கள் சுயநலன்களுக்காக உருவாக்கிய பெண் ஒடுக்குமுறை சட்டதிட்டங்களை, நடத்தை விதிகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது. பாலின அடிப்படையில் (Gender based & not biological sex based) நிலவும் ஏற்றத்தாழ்வுகளை களைந்து சமத்துவத்தை நிலை நாட்ட பெண்களை அணி திரட்டுவது.
இந்த பெண் விடுதலைப் பிரச்சாரத்தினூடாக சமூகத்தில் நிலவும் பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் (சாதி, மத, திறன், பாலினம், பொருளாதாரம் இன்ன பிற) குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி யாரும் யார்க்கும் அடிமையில்லாது வாழக்கூடிய சமத்துவ சமுதாயத்தை நிலைநாட்டிடும் சமூக மாற்றத்திற்கான போராட்டத்தில் அனைவரையும் ஒருங்கிணைப்பது என்பதே பெண்ணியம்
பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை இந்த அடிப்படையில் இருந்துதான் பெண்ணியவாதிகள் மற்றும் இடதுசாரிகள் காண்கின்றனர். அதுபற்றிய ஒரு சிறிய உரையாடலை நாம் இங்கே மேற்கொள்வோம்
பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு காரணம் என்ன?
ஆண்மை பெண்மை என்னும் கருத்துகளே இதற்கு காரணம். ஆண்மை என்பது பலம், வீரம், அடக்கி ஆளுதல், பாலுறவு (sex) வீரியம், தலைமை வகித்தல், பொருள் ஈட்டுதல், தோற்றுப் போகாமல் இருத்தல் என்றெல்லாம் நம்பப்படுகிறது.
பெண்மை என்றால் மென்மை, அச்சம், மடம், நாணம், அடங்கிப் போதல், தாய்மை, விட்டுக்கொடுத்தல், பாலுறவு அடக்கம், கற்போடு இருத்தல் என்றெல்லாம் நம்பப்படுகிறது.
ஆணுக்கும் பெண்ணுக்கும் வகுக்கப்பட்டிருக்கும் இந்த தனித்தனி விதிமுறைளுக்கும் உயிரியல் உடலமைப்பிற்கும் எந்த தொடர்பும் கிடையாது. ஆகவே தான் அவற்றை கருத்தியல்கள் (ideology) என்கிறோம்.
இந்த கருத்தியல்களால் பெண் என்பவள் எப்போதும் ஆணுக்கு கீழே இருக்க வேண்டியவள் என்கிற நிலை. இது இயல்பாகவே ஆணுக்கு எல்லையற்ற அதிகாரத்தை வழங்கிவிடுகிறது. பெண்களும் அதுதான் இயற்கை, இயல்பு, பெண்மை என்று நம்பி அறியாமையில் வாழ்கின்றனர்.
பெண் என்பவள் என்றைக்கும் ஆணுக்கும், ஆண் தலைமையிலான குடும்பத்திற்கும் உழைக்கும் கருவியாகவும், குழந்தை பெறும் இயந்திரமாகவும், பாலியல் இச்சைகளை நிறைவு செய்ய வேண்டிய பண்டமாகவும் மட்டுமே கருதப்படுகிறாள். இதனை நிராகரிக்கும் பெண்கள் கலாச்சாரத்தை கெடுப்பவர்கள். நடத்தை கெட்டவர்கள் என்னும் நிலை. இதனால் பெண்கள் தங்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதைத் தாண்டி சிந்திக்க அஞ்சுகிறார்கள். ஆகவே அடங்கிப் போகவும், சிறந்த கற்புக்கரசி, பத்தினி, தாய், மனைவி, காதலி என்ற பட்டங்களை வாங்கவும் மட்டுமே பழக்கப்பட்டிருக்கிறார்கள்.
இப்படி ஆண்மை உருவேற்றி வளர்க்கப்படும் ஆண் பெண்ணை தன் சொத்தாக மட்டுமே காண்கிறான். அதிலும் குறிப்பாக காதலில் வெல்வதும், காமத்தில் வெல்வதுமே ஆண்மை என்று ஆழ்மனதில் பதிந்துவிடுகிறது. இந்த ஆண்மை அதிகாரத்தை மையப்படுத்தியே பெண் உடல் குடும்பத்திற்குள்ளாக குத்து விளக்காகவும்’, வணிகச் சந்தையில் நுகர்வுப் பொருளாகவும் மாற்றப்படுகிறது. எதுவாக இருந்தாலும் அவள் ஆணின் சொத்து.
இந்தப் பின்னணியில் பெண்கள் தங்கள் உடல் பற்றிய உண்மையை புரிந்துகொள்வது அவசியம். பெண் உடல் என்பது கட்டுப்படுத்தப்பட வேண்டியது அல்ல. உடலில் ஆபாசமும் இல்லை, அவமானமும் இல்லை. அவை வெறும் கருத்து மட்டுமே. ஆதி மனிதர்களும், பழங்குடிகளும் நிர்வாணமாக திரிகையில் நிர்வாணம் என்பது எப்படி ஆபாசமாகியது? கற்பை, பெண்ணை போற்றும் சமூகத்தில் பெண்களுக்கெதிரான குற்றத்திற்கு பெண்களையே காரணமாக காட்டுவது வேடிக்கையல்லவா?
ஒரு பெண்ணின் சம்மதமின்றி அவள் உடலை பாலியல் ரீதியாக அத்துமீறுவதுதான் ஆபாசம். அது ஆண்கள் செய்யும் குற்றமாக இருக்கையில் அவர்கள் தான் கண்டிக்கவும், தண்டிக்கவும்பட வேண்டியவர்கள்.

உடல் என்பது உடல் மட்டுமே. அது இயற்கையின் பரிணாமத்தில் பல்வேறு அடையாளங்களுடன் பிறக்கிறது. பெண் உடல் என்பதாலேயே அது அழகியல் தன்மைக்குள் அடக்கப்படுகிறது, அதை ஒரு பண்டமாக ரசிப்பதற்கு ஒரு சந்தை செயல்படுகிறது. அந்த பாலியல் சுரண்டலில் இருந்து நான் ஆண், பெண் இருவரையும் காக்க வேண்டியுள்ளது. அதையும் மீறி பெண் உடல் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானால் நிர்வாணம், அசிங்கம், கற்பு, மானம், அவமானம் ஆகிய விஷயங்களுக்காக அச்சப்பட ஏதுமில்லை.


பெண்ணின் அந்த நிலைக்கு ஒட்டுமொத்த சமூகமும் அவமானப்பட வேண்டுமேயன்றி பாதிக்கப்பட்ட பெண்ணோ அவளது குடும்பமோ அல்ல.


பெண்ணின் நிலை இப்படியிருக்க, சமூகத்தில் அடுத்ததாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது காதல், காமம் ஆகிய இயல்பூக்க உணர்வுகளுக்கான விதிமுறைகள். இதுவும் மேற்சொன்னப்படி ஒருபுறம் புனிதமானதாகவும், மறுபுறம் அதுவே சந்தைப் பொருளாகவும் இருக்கிறது.
ஒருபக்கம் ஆணின் அதிகார வேட்கையை தூண்டும் சமூக நிலைமைகள், மறுபுறம் ஆணின் காம வேட்கையை தூண்டும் பாலியல் சந்தை. இந்த இரண்டாலும் ஆண் ஒரு வெறி பிடித்த மிருகம் போல் மாற்றப்படுகிறான். இதில் சமன்நிலையை காத்துக்கொள்ளக் கூடியவர்கள் நல்லவர்களாகஇருக்கின்றனர் அந்த வெறிநாய் கடிக்கு பலியாகிறவர்கள் காம வெறியர்களாக, சுரண்டல்வாதிகளாக, ‘கெட்டவர்களாகமாறிவிடுகின்றனர்.
பெண்கள் தங்களை எப்படி காத்துக்கொள்ள முடியும்?
பெண்கள் மட்டுமின்றி அனைவரும் பாலின பாகுபாடு பற்றிய அறிவைப் பெறுவதால் மட்டுமே பெண்களுக்கு எதிரான வன்முறையைக் களைய முடியும். மேலும், பெண் என்பவள் குடும்பம், தாய்மை, பெண்மை ஆகிய வட்டங்களுக்கு அப்பாற்பட்டு சமூக-அரசியல் தளத்திற்கு வர வேண்டும்.
மதநூல்கள், பாடபுத்தகங்கள் தாண்டி அனைவரும் பெண் விடுதலை பற்றி பேசும் நூல்களை வாசிக்க வேண்டும். அடங்கிப் போவதற்காக தான் பிறப்பெடுக்கவில்லை என்பதை உணர்ந்து மன வலிமை பெற்றிட இந்த அறிவு உதவும்.
இதனோடு உடல் ரீதியாக பலம் பெற பெண்கள் தற்காப்பு கலைகளைப் பயில்லாம்.
பெண்களின் நிலைமையை மாற்றுவதற்குப் பதில் குடும்பம் என்னும் அமைப்பின் மூலமும், சட்டதிட்டங்களின் மூலமாகவும் பெண்களை கட்டுப்படுத்துவதால் எந்த பயனும் இல்லை. அது மேலும், மேலும் ஆண்களுக்கே அதிகாரம் வழங்கும். திருடர்கள் வருவார்கள் என்று வீட்டை பூட்டி வைப்பதால் ஏதேனும் பயன் இருக்கிறதா, அதை உடைக்க அவர்கள் ஆயிரம் வழிகளை கண்டுபிடிக்கிறார்கள். ஒருவன் திருடும் நிலைக்கு உள்ளாகாமல் இன்பமயமான வாழ்வை சமூக அளவில் உறுதி செய்வதுதான் அதற்கு தீர்வு. அதுபோல் பெண் உடல் மீது நிகழ்த்தப்படும் வன்முறைக்கு பெண் உடலுக்குப் பூட்டு போடுவதால் ஒரு பயனும் இல்லை. ஆன் பெண் இருபாலருக்கும் இடையில் பரஸ்பர அன்பையும், மரியாதையையும் வளப்படுத்தக்கூடிய நிலைமைகளை உருவாக்க வேண்டும். அது புதியதொரு சமூக உருவாக்கத்தோடு தொடர்புடையது. அது நீண்டகாலம் பிடிக்கும். அது அரசியல் போராட்டம்.
அதுவரை இருக்கும் அரசானது பெண்களை பாதுகாக்கும் விதமாக சில நடவடிக்கைகளை எடுக்க முடியும். பாலின கூருணவுக் கல்வியை (Gender Sensitizing education) வழங்குதல். பாலின சமத்துவ சமுதாயம் உருவாக்கும் திட்டம் வகுத்திட பெண்ணிய சிந்தனையாளர்கள் தலைமையில் அதற்கென்று ஓர் ஆணையம் அமைக்க வேண்டும். முதல் நிலைக் கல்வி தொடங்கி பாலினக் கல்வி என்பது ஒரு பாடதிட்டமாகவே இருக்க வேண்டும். ஆணாதிக்கப் பெண்மையை போற்றிக் கொண்டிருப்பதை விடுத்து ஆண் பெண் சமத்துவம் போற்றும் கலாச்சார நிகழ்வுகள், பிரச்சாரங்கள், கலை இலக்கிய செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். ஊடகங்கள் மற்றும் திரைப்படங்களில் பெண் ஒரு போகப் பொருளாக சித்தரிக்கப்படுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, அத்தகைய பாலியல் சுரண்டலை தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். சுருக்கமாக பாலியல் கல்வி மற்றும் பாலினக் கல்வி வளர்ச்சியில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.
பொதுமக்களாகிய சமூகம் பெண் சுதந்திரம் என்பதை வெறும் பாலுறவு இச்சைக்கான சுதந்திரம் என்று என்னுவதை கைவிட வேண்டும். பெண் சுதந்திரம் என்பது மனித உரிமை மற்றும் சுயமரியாதை சார்ந்தது என்பதை புரிந்துகொண்டு குடும்பம், மானம், அவமானம், பெண் பிள்ளை வளர்ப்பு ஆகிய போலியான ஆணாதிக்க ஒழுக்கப் பேச்சுகளுக்கு அஞ்சுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். ஆணின் பெண்ணாக பெண்ணை வளர்ப்பதை விடுத்து பெண்ணை ஒரு தனிப்பிறவியாக சுதந்திரமான ஓர் உயிராக மதிக்க வேண்டும். அப்படி வளர்க்கப்படுவது பெண்களுக்கு மட்டுமல்லாது ஆண்களுக்கும் நிம்மதியான வாழ்வை தரும் என்று ஆண்களும் உணர்ந்து பெண் அதிகாரகாரமளித்தல் என்னும் பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.


Mar 17, 2019

என்னுடைய நிர்வாணப் போராட்டம் குறித்து!




அன்புள்ள வளர்மதி,

பொள்ளாச்சி பாலியல் வன்முறை கொடுமையை ஒட்டி நான் பகிர்ந்திருந்த எனது அரை நிர்வாணப் படத்தின் அழகியல் தன்மை குறித்து நீங்கள் கேள்வி எழுப்பியிருந்தீர்கள். உண்மையில் எனக்கு அது பெருமகிழ்ச்சியை அளித்த்து. இதன் மூலம் எனது அரசியல் பார்வையை மீண்டும் ஒருமுறை பரப்ப உதவி செய்துள்ளீர்கள்.

முதலில் நான் 43 வயதாகும் ‘முதிர் பெண்’, அரசியல் விழிப்புணர்வு பெற்றுள்ள பெண். உடல் மட்டுமல்லாது எல்லாவற்றிலும் நான் அழகியல் எதிர்ப்பை கொண்டாடும் பெண், கலை முதல் வாழ்வு வரை. மார்க்சியம் படித்து நான் பெற்ற அக விடுதலையால் முதலில் நான் அழகுணர்ச்சியிலிருந்து தான் என்னை விடுவித்துக்கொண்டேன். புருவம் சரி செய்வத், மயிர் மழிப்பது, முகத்திற்கு ஃபேஷியல் செய்வது, எல்லாவற்றிற்கும் மேலாக உடலை வடிவாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சி செய்வது என்று எதையும் நான் செய்வது கிடையாது. இதற்கு ஒரே காரணம் நான் பெண்மை என்னும் உணர்விலிருந்து என்னை விடுவித்துக் கொண்டது மட்டுமே (ஆனால் என்னுடைய பெண்மை துறப்பு பற்றி பெண்ணிய விழிப்புணர்வு பெற்ற மற்றவருக்கு முரண்பாடு இருக்கும்!)

மேலும், உங்களுக்கு தெரிந்திருக்கும் நான் பதினெட்டு வயது நிரம்பிய ஒரு பெண்ணின் தாய்!

குழந்தை பெற்று 43 வயதாகும் ஒரு பெண்ணின் உடல் வடிவு பற்றி உங்களுக்கு நிச்சயம் தெரியும், அதிலும் உடலை வடிவாக வைத்துக்கொள்ள ஏதும் செய்யாத ஒரு வயது முதிர்ந்த பெணின் உடல் எப்படி இருக்கும் என்று உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.

நான் அந்த சைஸ் ஜீரோ என்று சொல்லக்கூடிய உடல் அமைப்பு கொண்டவள் அல்ல! என்னுடைய முலைகள் தொங்கும் முலைகள். நான் படுத்திருக்கையில் ஒன்று இடமாகவும், ஒன்று வலமாகவும் சரிந்து விழும். மிகவும் சிறிய மார்புகள் என்னுடையது. மகா ஸ்வேதா தேவியின் “இரவிக்கைக்குப் பின்னால் என்ன இருக்கிறது” கதை படித்திருக்கிறேன். அது வெறும் கொழுப்பு தான் என்று எனக்கும், இந்த உலகத்திற்கும் சொல்லிவிடுவேன்.

என்னுடைய இடுப்பும், தொடைகளும் ’பொருந்தாத’ விகிதத்தில் இருக்கும்! அடி வயிற்றில் தொங்கும் சதையும், வரி தழும்புகளும் இருக்கும்! எனக்கு வடிவான இடுப்பு கிடையாது, சொல்லப்போனால் அந்த இடுப்பு வளைவானது எனக்கு என்னுடைய புட்டத்தின் கீழ் தொடையின் தொடக்கத்தில் தான் இருக்கும். பார்ப்பதற்கு அது விநோதமாக இருக்கும் (நிலவும் அழகியல் அதிகார விதியின்படி) . என்னுடைய இந்த விநோதமான வடிவை நான் காட்சிப்படுத்த விரும்புகிறேன். பெண்களே, வடிவமாகவும், அழகாகவும் இல்லையென்றால் பரவாயில்லை! எல்லாமே இங்கு வடிவு தான் என்று கத்த விரும்புகிறேன்! இதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறேன்!

என்னுடைய அரசியல் பயணம் நிறைய கட்டங்களைக் கொண்டது! ஆண் வெறுப்பில் தொடங்கி, மிதவாத பெண்ணியவாதியாகி நான் மார்க்சியவாதி ஆனவள். என் மீதான ‘பிம்பம்’ மட்டுமின்றி ‘இசங்கள்’ பற்றிய பிம்பங்களையெல்லாம் உடைக்க எனக்கு அது உதவியது.

இந்தப் போக்கில், ஒவ்வொரு முறையில் என்னை அதிகம் துன்புறுத்தும் ஒடுக்குமுறை நிகழ்வுகளைப் பொறுத்து நான் ஒரு ‘கலகச்’ செயல்பாட்டில் ஈடுபடுவேன். ஒட்டுமொத்த சமூக விடுதலைக்காக மார்க்சியத்தை பிரச்சாரம் செய்வதோடு, நான் எழுத்தாளர் (மார்க்சிய – பெண்ணிய) என் மீது ஏற்றிவைக்கப்படும் பிம்பங்களையும் தகர்க்க விழைகிறேன். (அடங்க மறு தான்!) என்னுடைய உடலை நான் காட்சிப்படுத்துகிறேன் – மூடியதாக – நிர்வாணமாக! (ஆனால் அதை மட்டும் நா செய்துகொண்டிருப்பதில்லை என்பதை இங்கு நான் யார்க்கும் விளக்கத் தேவையில்லை). நீங்க ஒருவேளை என்னை பல ஆண்டுகளாக அவதானித்து வந்திருந்தால், இந்த 1 வருடமாகத் தான் நான் என்னுடைய புகைப்படங்களை அதிகமாக பகிர்ந்து வருகிறேன்.

அந்த நிர்வாணப் படமும் இத்தகையதொரு கலக பரிசோதனை முயற்சிக்காக எடுக்கப்பட்டது. நான் ஒருவேளை ‘குண்டாக & அசிங்கமாக’ இருந்தாலும் இதை செய்வேன். (உங்களுக்கு என் ஆக்ரோஷம் தெரியாது). மேலும், நான் செய்யவிருக்கும் ஒரு வேலைக்கான பரிசோதனை ஷூட் அது. என்னுடைய வீட்டில் வீழும் சூரிய ஒளி கொண்டு எடுக்கப்பட்டது (சிகப்பு விளக்கு அல்ல). அது ஒளிப் பரிசோதனை ஆய்வும் கூட! என் வீட்டு திரைச் சீலை ஆரஞ்சு நிறத்திலானது. அதன் வழியாக வரும் ஒளியை படம்பிடித்து பார்த்தோம். நானும் எனது ஆண் நண்பரும் ஒரு ‘ப்ராஜெக்ட்’ முயற்சிக்கிறோம். அதற்கான பரிசோதனை அது.  அதை எடுக்கையில் நிலவும் வரம்புகள் தெரியவந்து, அதை சரி செய்து பின்னர் எடுப்போம் என்று கற்று வருகிறோம். அதனோடு என்னுடைய ‘வடிவமற்ற’ உடலையும், ஒளியையும் பரிசோதனை செய்து வருகிறோம் அன்பே! ஆனால் அவையெல்லாம் முழு நிர்வாணப் படங்கள்! முகநூல் (சமூக வலைதள) விதிகளின்படி அதனைப் பகிர முடியாது! சொல்லப்போனால் நான் காலை கக்கூஸ் போவது முதல் எல்லாவற்றையும் காட்ட விரும்புகிறேன், குறிப்பாக மலம் வெளி வராமல் முக்கும் போது முகம் எப்படி இருக்கும்! அந்த முகத்தைப் பார்த்து ஆண்களால் “நீ அழகாய் இருக்கிறாய்” என்று சொல்ல முடியுமா என்று கேள்வி எழுப்ப விரும்புகிறேன் (இது உண்மை!). ஆனால் முகநூல் அதை நீக்கி விடும். நிச்சயமாக புகைப்பட கண்காட்சி வைக்கலாம்.

இந்த பொள்ளாச்சி பாலியல் வன்முறை கொடுமை சம்பவம் நடந்ததும் அது குறித்து எல்லோரும் எழுதி வந்தனர். உண்மையில் அவற்றைப் படித்து எனக்கு சினம் தான் பொங்கியது. இந்த உலகத்தைப் பார்த்து, குறிப்பாக பெண்களைப் பார்த்து “ஏய் பெண்களே, உங்கள் உடல் பற்றியோ நிர்வாணத்தைக் கண்டோ நீங்கள் அவமானப் பட ஏதுமில்லை” என்று கூச்சலிட விரும்பினேன். நாங்கள் எடுத்து மிகக் குறைவான புகைப்படங்களில் இதை மட்டுமே பகிர முடிகிற விதிமுறைக்குள் இருந்தது. (புதிதாக எடுக்க ஆளோ, நேரமோ அன்று இல்லை). இதுவும் ஒரு ‘போலி அழகியல் எதிர்ப்பு’ புகைப்படமாக புரிந்துகொள்ளப்படும் என்று நான் அறிவேன். ஆனால் இத்தகைய சந்தர்ப்பங்களில் எனது மூர்க்கமே என்னை வழிநடத்தும். அந்த ஆனாதிக்கப் பன்றிகளைப் பார்த்து “ஃபக் ஆஃப்” என்று சொல்வது போல்! இது முழுக்க முழுக்க என்னுடைய உத்தி (அது சரியாக இருக்க வேண்டியதில்லை). பெரியார் சினம் கொண்டு கடவுள் படங்களை செருப்பால் அடிப்பது போல் தான் இது! இதனால் நான் எதிர்கொள்ள வேண்டிய சவுக்கடிகள் பற்றியும் அறிவேன். எதிர்கொள்வேன்! எதிர்கொள்கிறேன்! ஆனால் அதைவிட பெரிதாக நான் பெருவது என்னவெனில், உரையாடும் வாய்ப்பு! இது இரட்டை நன்மை!

என்னுடைய கண்ணோட்டத்தில் ஏற்படுத்த முடிகிற விழிப்புணர்வு, அதன் மீது உங்களைப் போன்ற அரசியல் புரிதலுடைய பெண்கள் வைக்கும் விமர்சனங்கள் மூலம் விழிப்புணர்வு.

எதுவாக இருந்தாலும் அது பெண் உடல் பற்றிய கட்டுடைப்பு பிரச்சாரத்திற்கே பயன்படும், அல்லவா!

அன்புடன்
கொற்றவை

பி.கு: கண்டிப்பாக இது சுயவிளக்கம் அல்ல, நியாயப்படுத்தலோ, பாவமன்னிப்பு கோருவதோ அல்ல. உங்களைப் போல் பலருக்கும் இத்தகைய கேள்விகள் இருக்கும். இதனை நான் மீண்டும் அறிவுப் பகிர்தலாகவும், பிரச்சாரமாகவும் தான் காண்கிறேன். உங்களுடைய மாற்று கருத்தை நான் வரவேற்கிறேன். உண்மையில் பெண்கள் ஒருவரோடு ஒருவர் அறிவார்ந்த வகையில் முரண்பட வேண்டும். அதன் மூலம் நடக்கும் உரையாடல் மேலும் மேலும் அறிவு பரவலாக்கமே!

Mar 8, 2019

பித்தனின் மரணம் (Death of Insane)




'ஏதோ ஒரு நிர்ப்பந்தம் இருக்க வேண்டும் : இந்த உலகம் முழு நிறைவுற்றதாக இல்லை. ஆகையாலே கலைஞன் இயங்குகின்றான். குறைவற்றதாக உலகம் இருப்பின் அதில் இசைவைத் தேட வேண்டியதில்லை. மனிதன் வெறுமனே அதில் வாழ்ந்து இருப்பான். கலைக்கான பயன்பாடும் இ‌ல்லாம‌ல் போயிருக்கும். சீர் குலைந்த உலகமே கலையை தோற்றுவிக்கிறது.' *
- ஆந்த்ரே தார்க்கோவஸ்கி.

கலை என்றால் என்ன? கலை குறித்து எண்ணற்ற விளக்கங்களை நாம் காண்கிறோம். எனினும் அதனை உற்று நோக்கினால் அத்தகைய வரையறைகளில் உள்ள வர்க்கப் பண்பு வெளிப்படும். அதிகார மையங்கள் அல்லது ஆளும் வர்க்ககலைமனங்கள் கலையைபொழுதுபோக்குதேவையாக வரையறுப்பதால்பொழுதை போக்காதபடைப்புகள்கலைஎன்றாகிறது. இது சற்று விநோதமானது, இல்லையா? அப்படியென்றால், ‘கலைஎன்றால் என்ன?

கலை என்பது எதிர்ப்பு”. அநீதியான ஒரு சமூகத்தில் கலையின் தேவையே கலையின் வரையறையை தீர்மானிக்க வேண்டும். ஏனென்றால் அது ஒரு சக்தி வாய்ந்த தொடர்பு சாதனமாகும். வரலாற்று வளர்ச்சியினூடாக மனித நடவடிக்கைகளின் அனைத்து அம்சங்களும் பரிணமித்தும், மாற்றம் பெற்றும் வந்துள்ளன. அனைவரையும் உள்ளடக்கிய சமூக அமைப்பானது மெல்ல மெல்ல சிந்தைந்து, ஒரு அநீதியான உலகாக மாறியது. அது ஏற்றத்தாழ்வு மிக்க வாழ்வை உண்டாக்கி, ஏழை பணக்காரர், அதிகாரம் உடையோர் அதிகாரம் அற்றோர், ஆள்பவர்கள் குடிமக்கள், முதலாளிகள் அடிமைகள் என்ற முரண்பட்ட பிரிவுகளை உண்டாக்கிவிட்டது. அதைத்தான் நாம் வர்க்க-சாதிய சமூகம் என்கிறோம். இந்த வர்க்க சமூகம் வளர வளர, மனித மாண்புகள், நம்பிக்கைகள், பண்பாடு ஆகியவையும் வளர்ச்சி பெற்றன, துரதிட்டவசமாக அது அந்த சுரண்டல்வாத சமூக அரசியல் அமைப்பை பாதுகாப்பதாக உருமாறி நிற்கிறது.

தொடர்பாடலுக்கான (communication) ஊடகமாக இயங்கிய கலையானது பின்னர் மக்களின் உழைப்பு மற்றும் வாழ்வாதார நிலைமைகளோடு பிணைந்த அக மற்றும் புற வெளிப்பாடாக பரிணமித்தது. போகப் போக அதன் கூட்டு-வெளிப்பாட்டு-பிரதிபலிப்பு தன்மை சிதைக்கப்பட்டு, ‘ஆளும் வர்க்கத்தால் அபகரிக்கப்பட்டுவிட்டது. அரசுருவாக்கத்தின் விளைவாக கலை அந்நியமானது. சுதந்திரமான வெளிப்பாடுதணிக்கைக்கு உள்ளானது, ஒருவித அமைப்பு சார்ந்த கட்டமைப்பும், கட்டுப்படுத்தப்பட்ட வெளிப்பாடாகவும் கலை சிக்கிக் கொண்டது. கலையானது அதிகார மையங்களின் பரப்புரை கருவியானது. காலப்போக்கில் கலைசெவ்வியல் கலை’ ‘நாட்டுப்புற கலை’, ‘மைய்ய நீரோட்ட கலை’ ‘மாற்று கலை’, ‘வணிகக் கலை’ ‘கலையாற்றல்மிக்க கலை போன்ற வகைப்பாடுகள் உண்டாயின. (கலையின் பரணாம அரசியல் என்பதே ஒரு தனிக் கட்டுரை. சுருக்கம் கருதி நான் விமர்சனத்திற்குள் செல்கிறேன்)

ஆளும் வர்க்கத்தின் சிந்தனைகளே ஒரு யுகத்தை ஆளும் சிந்தனைகளாக உள்ளன. ஆளும் வர்க்கம் என்றால் அது சமுதாயத்தின் பொருளியல் சக்தியை மட்டுமல்லாது அறிவுச் சக்தியையும் ஆளு கிறது. பொருள் உற்பத்திக்கான காரணங்களைத் தன் கட்டுக்குள் வைத்திருக்கிற வர்க்கமானது, அதன் காரணமாகவே அறிவு உற்பத்திக்கான காரணங்க ளையும் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறது. இந்தச் சாதனங்களைக் கொண்டிராதவர்களின் சிந்தனை கள் இதற்குப் பொதுவாகவே அடங்கிப் போய்விடு கின்றன.என்கிறார் கார்ல் மார்க்ஸ் [ஜெர்மன் தத்துவம்].

இதுபோன்ற சமூக வர்க்க உணர்வை பெற்றுவிடும் மக்கள் (தெரிந்தோ தெரியாமலோ) சமூகத்தின்மாற்றுகுரலாக அல்லதுகலைக் குரலாக மாறுகின்றனர், மீதமிருப்போர்சந்தையில்’ ‘கேளிக்கையாளர்களாகமாறிவிடுகின்றனர். ‘வணிகரீதியான கலைஞர்கள் ஒரு போலியான மெய்மையைகட்டமைக்கையில்’ (அது நல்ல விற்பனை சரக்கு) விழிப்புணர்வுடைய மாற்று கலைஞர்கள் யதார்த்தத்தை அதிகாரத்தின் இயக்கவியலை பிரதிபலிக்கவும், சமூகத்தில் அதன் தீமைகளை உணர்த்தவும் பாடுபடுகின்றனர். அத்தகைய உண்மையான கலைஞர்கள் வரலாற்றில் நூற்றுக் கணக்கில், ஆயிரக்கணக்கில் உள்ளனர். இன்னமும் இருப்பார்கள்!

இயக்குனர் சனல் குமார் சசிதரன் அத்தகையதொரு கலைஞர். திரைப்படம் என்னும் கலையை இவர் தனக்கான வெளிப்பாட்டு ஊடகமாகவும், மக்களோடு உரையாடுவதற்கான சாதனமாகவும் தேர்ந்தெடுத்துக்கொண்ட மாற்று கலைஞர். சனல் குமாரின் திரை மொழி என்பது வழக்கமான திரையாக்க விதிமுறைகளுக்கு அப்பாற்பட்ட,  ஆளும் வர்க்கஇலக்கணங்களுக்குஅடங்காத புதியதொரு மொழியாகும். அது அடுத்த தலைமுறைக்கு புதியதொரு இலக்கணத்தை உருவக்கித் தருவதோடு, புதிய நம்பிக்கையையும் விதைக்கிறது.

ஒழிவுதிவசத்தே களி, எஸ். துர்கா இப்போது உன்மாடியுடே மரணம் என்று தொடர்ந்து முத்திரைகளை பதித்து வருகிறார் சனல். இம்மூன்று கதைகளும் (சம்பவங்கள்!) வெவ்வேறாக இருப்பினும், அவற்றிற்குள் ஓர் ஒற்றுமை உண்டு. அவரின் படங்கள் அனைத்தும் அதிகாரத்தைஅரசு அதிகாரத்தை, ஆளும் வர்க்க-சாதி அதிகாரத்தை, மத அடிப்படைவாதத்தை அம்பலப்படுத்தி, அசிங்கப்படுத்தி, பிரதிபலித்து இறுதியில் அதிகாரத்திற்கு சவால் விடுவதாக அமைகின்றன. சனல் குமாரின் படங்களில் நாம் இனியும் பார்வையாளர்களாக இருக்க முடிவதில்லை, சாட்சிகளாக மாறிவிடுகிறோம்.

ஒழிவுதிவசத்தே களி மற்றும் எஸ். துர்கா ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை மையப்படுத்தி ஒரு அரசியல் உணர்வை ஊட்டும் விதமாக நகர்ந்து செல்லும். அவருடைய கதையாடலில் எப்போதும் கண்ணுக்குத் தெரியாத கதாப்பாத்திரம் ஒன்று உலவிக் கொண்டிருக்கும். அது தான் நாம், நமது மனசாட்சி. திரைப்படத்தில், ஏதோ ஒரு செயலில் ஈடுபட்டிருக்கும், அன்றாட வாழ்வின் பேச்சுக்களோடு பயணிக்கும் கதாப்பாத்திரங்களோடு தொடங்கும் கதையானது போகப் போக நம்மை வாள் முனையில் கொண்டு சென்று அமர்த்திவிடும். நாடக பாணியிலான, காது தெறிக்கும் வசனங்கள் இருப்பதில்லை, நம்மை அழச்சொல்லி பிழிந்தெடுக்கும் சோக காட்சிகள், முகத்திற்கு நெருக்கமான காட்சிகள் அவ்வளவாக இருப்பதில்லை! எளிமையான கதையாடலே, ஆனால் சம்மட்டியடி.

சனலின் படங்களில் வரும் சம்பவங்களும், கதாப்பாத்திரங்களும் பெரிய கதாநாயகத் தன்மை கொண்டவையாக இருப்பதில்லை. அது அன்றாட வாழ்வின் எளிய மனிதர்களையே பிரதிபலிக்கின்றன. அதனால் தான் நாமும் அந்த திரைப்படத்தின் ஓர் அங்கமாகி விடுகிறோம். மக்களின் மனங்களில் எரியூட்ட சனல் கைக்கொண்டிருக்கும் உத்தி இதுவே. ஆகவே அவரது படங்கள் சக்திவாய்ந்த அரசியல் பகடியாகவும் செயல்படுகிறது.

இந்தத் தொகுப்பில் பித்தனின் மரணம்என்னும் படம் உச்சபட்சம். ஆம் என்னைப் பொறுத்தவரை சனல் குமாரின் படங்கள் சமூக-அரசியல் உரையாடல் தொகுப்புகளே. அவை மேலாதிக்கத்தையும், போலித்தனத்தையும் அம்பலப்படுத்தி, அசிங்கப்படுத்தி, கேள்வி கேட்கிறது. ஒழிவுதிவசத்தே களியும், எஸ். துர்காவும் எளிமையான நேரடியான கதையாடலாக இருந்தன. பித்தனின் மரணத்தில் அவர் ஓர் உச்சபட்சகலைநயமிக்ககதை சொல்லும் வடிவத்தை கைக்கொண்டுள்ளார். அது காட்சிவடிவில் அழகியல் தன்மையோடும், அரசியல் ரீதியாக எரியூட்டக் கூடியதாகவும் இருக்கிறது. பித்தனின் மரணம் ஒருகவித்துவமான போர்’!

மாட்டுக் கறி உண்ண தடை விதித்து, மக்களின் உணவு பண்பாட்டில் கூட தலையிடும் அரசு உள்ள ஒரு நாட்டில், கண்காணிப்பும், கட்டுப்பாடுகளும் நம் படுக்கையறையைக் கூட எட்டிப்பார்க்கும் நாள் தொலைவில் இல்லை. பித்தனின் மரணத்தில் அத்தகையதொருகற்பனையானசூழலை விவரிக்கிறார் சனல். நகைச்சுவையான பொறுப்புத்துறப்பை (disclaimer) முன்வைத்து தொடங்கும் படம் போகப் போக எதிர்பார்க்காத தளங்களில் சுழன்றி அடிக்கிறது. ’பித்தன்ஒருவனின் பிரச்சினையை ஒருவர் விவரிக்கிறார். அவர் அப்படி என்ன செய்துவிட்டார். கனவு காண்கிறார்! கனவு காண்பது ஒரு பிரச்சினையா? கண்டிப்பாக சம்பந்தப்பட்டவருக்கு அது பிரச்சினையில்லை, ஆனால் அரசுக்கும், அதிகார மையங்களுக்கும், சுரண்டல்வாதிகளுக்கும், ஆளும் வர்க்கத்திற்கும் நம்முடைய கனவுகள் பிரச்சினையே. சொல்லப்போனால் அச்சுறுத்தக்கூடியவை. கனவு இங்கு சிறந்த உருவகமாக கையாளப்பட்டுள்ளது.  சக்தி வாயந்ததொரு  பகடியை அநாயாசமாக நெய்திருக்கிறார் சனல் குமார். அவர் கனவு பற்றித்தான் பேசுகிறார், நம்புங்கள்! இறுதியில் அது வாளை விட கனவு கூர்மையானது என்று உணர்த்துகிறதென்றால் அதற்கு அவர் பொறுப்பில்லை!

எழில் கொஞ்சும் இயற்கை காட்சிகள், மெய் நிகழ்வுகள், மிகையதார்த்த வரைகலை காட்சிகள்பித்தனின்கனவுகளாக வருகின்றன. அரசு மற்றும் கலாச்சார காட்டுமிராண்டித்தனம் அதில் பகடி செய்யப்படுகிறது. எந்த ஒரு அரசியல் அமைப்பையோ, நபரையோ அவர் பகடி செய்யவில்லை, ஆனால் அந்த உருவகங்கள் செய்கின்றன! இதுதான் சனல் குமாரின் கைதேர்ந்த கலை நுணுக்கம். அதுவே அவரை ஒரு அசலான, விநோதமான, கேளிக்கை நிறைந்த அதேவேளை அறிவொளியூட்டக்கூடிய படைப்பாளியாக்குகிறது. ’நகைச்சுவையான போதனையேஅவரது பாணி, ஆனால் நல்ல மயக்க மருத்தை ஏற்றிவிட்டு ஊசி ஏற்றுகிறார். அவரின் படங்களைப் பார்த்துவிட்டு நாம் நன்கு சிரித்து மகிழ்ந்து கை கழுவிவிட்டு நகர்ந்துவிட முடியாது, விழிப்புணர்வு பெற்றவர்களாயிருப்பின் ஏதேனும் செய்தே ஆக வேண்டும் என்று தோன்றும், அதுவல்லாதோருக்கு அவர்களுடைய அமைதி மனித நேயத்திற்கு அவர்கள் செய்யும் துரோகம் என்பதை உணர்த்திச் செல்லும்.

கலையின் தேவை இதுவே. சமூக விழிப்புணர்வை தூண்டிவிடுவது! உன்மாடியுடே மரணம் தனக்கு நேர்ந்த (குறிப்பாக எஸ். துர்கா) ஒடுக்குமுறை, தணிக்கை மற்றும் வலதுசாரி மதவாத சக்திகளின் அராஜகங்களினால் உண்டான பாதிப்பின் வெளிப்பாடே என்று சனல் குமார் கூறினாலும் பித்தனின் மரணம் திரைப்படமானது ஓர் ஆழ்ந்த விமர்சனபூர்வ, தத்துவார்த்த, தனிச்சிறப்புடைய ஆவணப்புனைவு (Docu-Fiction).  அது அதிருப்தியாளர்களின் சமூக அக்கறையின் பிரதிபலிப்பு. நமக்கான குரல். சொல்லப்போனால் தனிப்பட்டது எதுவும் இங்கே அரசியல் தான். ஆகவே ஒடுக்குமுறைகளை ஏவும் அந்த பாசிஸ்டுகளை அம்பலப்படுத்துவது, கேள்வி கேட்பது, எதிர்ப்பது, அவர்களோடு மோதுவது தவிர நமக்கு இங்கு வேறு ஏதும் வழியில்லை. பித்தனின் மரணம் மூலம் கனவு பிடிப்பான்களுக்கு சவால் விட்டபடி பிறழ்மைய (eccentric) முறையில் அதனை சிறப்பாக செய்கிறார் சனல்குமார்.

தணிக்கையின் பெயரால் அரசு தடை செய்யும் அல்லது விலக்கி வைக்கும் படங்களை திரையிடவும், அதிகாரமிக்க வணிகச் சந்தைக்கு எதிராக சுயாதீன திரைக் கலைஞர்கள் உருவாக வேண்டும் என்கிற நோக்கத்தோடும் சுயாதீன திரைப்பட விழாவை ஏற்பாடு செய்து சிறப்பானதொரு பங்களிப்பை செய்துவரும் தமிழ் ஸ்டூடியோ அருண் அவர்களுக்கு நன்றியும் பாராட்டும் உரித்தாகுக. – கொற்றவை

* எனது மொழிபெயர்ப்பை விட கவிஞர் எம். ராஜா அவர்களின் மொழிபெயர்ப்பு இந்த மேற்கொளுக்கு பொருத்தமாக இருப்பதால் இங்கு அதை சேர்த்துள்ளேன். இதனை கவனப்படுத்திய தோழர் பசுபதி அவர்களுக்கு நன்றி J