Oct 19, 2010

கிரீடங்கள் அடிமைகளுக்கென செய்யப்படுவதில்லை





புன்னகையின் நரம்புகள் கொண்டு பின்னப்பட்ட நாற்காலி
மகாசாம்ராஜ்ஜியம்

இருவரை
அழுத்தத்துடன் முத்தமிடுகிறான் சூரியன்
செம்மண்ணை
நிழல் ஒன்று போல் முத்தமிடுகிறது

பாலைவனம் பற்றிய உரையாடலில் உலர்கிறது நாக்குகள்
கொலைகள் பற்றிய புரிதல் வரை
பயணிக்கிறது கால் தடங்கள்

சிறகு பற்றிய கணவு
ரகசியமாக வைக்கப்பட்டது

தேரில் ஒன்றாக பயணம் செய்தாலும்
தேரோட்டி அரசனாவதில்லை
ஒரு போதும் கிரீடங்கள்
அடிமைகளுக்கென செய்யப்படுவதுமில்லை

உதட்டின் சொந்தக்காரர்களுக்கே
குரலும் சொந்தமென்ற விதியெங்குமில்லை

நம்பிக்கை விரியுமளவுக்கு
நடத்தைகள் விரிவதில்லை
அன்பின் அதிகாரத்தின் முன்
கண்ணீர் மண்டியிட்டே கிடக்கிறது

மகா சாம்ராஜ்யத்தில்
பொம்மைகளுக்கே நாற்காலி....

Oct 11, 2010

கனவுகளற்ற சொல்


மரணத்தின் வாயிலில்
காத்திருக்கிறது
உனக்கான வார்த்தை
கூறு போட்ட நிமிடங்களில்
உறைந்த ரத்தம்
மாற்றவியலாத
மரணம்
சொல் மற்றும்
தவிர்க்கவியாலாத
பிணம்
அழுகும் நாற்றம்

சாம்பலைக் கரைக்க முயல்கையில்
கரும்புள்ளி நிழலாடும்
உடல் இல்லை
கூடிய வேளையில்
காதுகள்
சுவைத்த சுவாசமும் இல்லை

வானம் பார்த்துக் கையேந்தி
சுமக்க முடியா விழிகளேந்தி
நிற்கையில்
நீராவிமணம் கொள்கிறதென் கண்ணீர்

பல்லாயிரம் நீர்குமிழிகளாய்
முகம் சுற்றிவரும்
கரையா துக்கம்
கற்சிற்பங்களென புடைத்து நிற்கிறது
நீ
திரும்பும்
பாதையில்

சிவந்த மண் உடலெங்கும் பரவி
காணிக்கை பெற்ற உதடுகளைப் பிய்த்தெறிகிறது
அலறும் அப்பெருங்குரல் கேட்டு
வலி துடைக்க ஏதுமில்லை

தேடுகிறாய்
பச்சிளம் விரல்களை
மயானத்தில்.


(உயிர் எழுத்தில் வந்த மூன்றாவது கவிதை)





நான் சொல்வேன் உனக்கு.


மித்ர....
நீ
காண்....
மண் முட்டித் தள்ளும் அலைகளை சாட்சியாய் வைத்து
கவிதையொன்றை பரிசளித்தாய்
எனதொரு மண்டையோட்டைப் பிளந்து கொண்டு
உயிர்நிணம் வடிய
நாளங்களையிறுகப் பற்றியதுன் காதல்

கண்ணீரில் தொடங்கியது
எல்லாம்
விழிகளைத் தோண்டி எடுத்துச் செல்ல எத்தனித்தாய்
விரல்கள் பாவையை நெருங்கும் கணத்திற்குள்
இதயத்தின் ஒலி கடக்க முடியா பாலமொன்றை எழுப்பி விட்டது
ஒற்றைப் பாதை
இனி
சாத்தியமில்லை

எரிமலை வெப்பத்திற்கு மௌனத்தை நீ ஊற்றும் பொழுது
இரவல் கேட்பவளாய் உணர்கிறது மனம்
முத்தங்களால் நிறைத்தாயென் பிச்சைப் பாத்திரத்தை

உன் புன்னகையின் லிபி
அந்தகாரத்தின் மொழி
பொருள் கொள்கிறது
மறைந்து போகும் வேளையில்
பாலைவனப்  பிளவுகளில் கசிகிறது
பெருமூச்சு
பற்றியெரியும் மூங்கில்கள் கூட அச்சுறுகிறது
தனிமை காட்டில்

உன் நிழலின் வாசம் பிடித்துக்கொண்டு
உன் வார்த்தைகளையணைத்தபடி
விரல் நகங்களில் சேமித்து வைத்திருந்த
உன்
கண்ணீரின் உப்பை சுவைத்தபடி
ஜீவித்திருப்பேன்......என்
பச்சிளமே

என் சுவாசம் உன் மடியில்.


(உயிர் எழுத்தில் வந்த இரண்டாவது கவிதை)

Oct 7, 2010

நெளியும் எதிர்பார்ப்புகள்



எதிர்பார்ப்புகள்
நிறமற்ற தன் கைகளால் வருடிக்கொடுக்க
நீண்ட குறிகள் பெற்றெடுக்கிறது
கட்டளை எனும் சாத்தான்களை
மஞ்சள் நிற பாம்பின் முடிச்சுகளின் கீழ்
சேமச்சக்கரம்
தாய்க்குப் பின் தாரம்

தாங்கி நிற்கும் மார்புச்சுனை நீர்
பகலில் இசைக்கிறது உலகெங்கிற்குமாய்
கண்ணுறங்கும்
தாலாட்டுப் பாடலை

அந்திச்சூரியன் மலைகளை முத்தமிட்டு
மறையும்
அவ்விருள் பொழுதில்
பெயர்க்கிறது
பெருவெள்ளமாய்
உடலெங்கும் வெண்ணிற பூரான் மயிர்களை

இடைப்பொழுதில் மனம் தேடியலைகிறது
அறைந்து மூடப்பட்ட சன்னல்களின் கீழ்
விரியும் சூர்யக்கதிர்களினூடே
ஓர்
புன்னகை
ஓர் சொல்
ஓர் பார்வை
ஓர் முத்தம்

அப்பொன்னிற புகை
தூதனுப்பியது
ஏற்ற
நேரம் கேட்டு

விட்டுச்சென்ற நிழலில்
நெளிகிறது
அதே
பூரான்கள்.

இது தவிர இன்னும் 2 கவிதைகள் இம்மாதம் உயிரெழுத்தில்....