நூல் அறிமுகம்
மலமறிவோம் – மலம் உருவாக்கும் பொருளாதாரமும் அரசியலும்
– ஓய்வுபெற்ற பேராசிரியர் எஸ். ரெங்கசாமி
ஒரு நாளைக்கு ஒண்ணுக்கும், பீயும், குசுவும் வரலன்னா என்னாகும்னு யோசிச்சுப்
பாருங்க… ஆனால் கழிவகற்றல் தொடர்பான மேலாண்மைப் பணியை ’அசுத்தம்’ என்று வரையறுத்து
குறிப்பிட்ட சாதிகளின் வேலையாக்கி வைத்துள்ள சமூக-அரசியல்-பொருளாதாரப் படிநிலையை –
அதாவது மரபார்ந்த அடிப்படையிலான உழைப்புப் பிரிவினையை மாற்றியே ஆக வேண்டும்.
தோழர் Kalpana Ambedkar பதிவொன்றில்
இது குறித்த விவாதம் நடந்தபோது தோழர் Sureshkumar இந்த
ஆவணத்தை பகிர்ந்திருந்தார். மிகவும் முக்கியமான ஆவணம். படித்துப் பாருங்கள்!
“என் கிட்ட காசிருக்கு அதனால டிசைன் டிசைனா கக்கூஸ் கட்டிக்குறேன்…
தங்கம்.. வைரமெல்லாம் வச்சு அழகா கட்டிக்குறேன் (கக்கூஸ் அழகா இருந்தாலும் பேலும் போது
மூஞ்சி ’அசிங்கமாத்தான’ இருக்கும்!). ’அவாள’ வாசல் பக்கம் விடாம கொல்லைப் புறமா விட்டு
கழுவச் சொல்லிப்பேன், தொட மாட்டேன் அதனால நான் பாதுகாப்பா இருக்கேன்னு ஒருத்தர் நினைச்சா
கேடுகெட்டத்தனம் ஒருபக்கம் என்றால் எவ்வளவு முட்டாள் தனம் என்பதை இந்த ஆவணம் சுட்டிக்
காட்டுகிறது.
ஊரும் நாடும் திறந்தவெளி கக்கூஸாக இருக்கும்போது ”இசட் ப்ளஸ்” பாதுகாப்புடன்
கூடிய கக்கூஸா இருந்தாலும் பொதுச் சுகாதாரக் கேட்டினால் வரும் தொற்று நோய்களிலிருந்து
நமக்கு நிச்சயம் பாதுகாப்பு கிடையாது. (கரோனா காட்டிட்டாப்ல). (நம் பிரச்சினை அனைவரின்
பிரச்சினை, அனைவரின் பிரச்சினையும் நமது பிரச்சினையே என்னும் கம்யூனிஸ்ட்களின் வர்க்கப்
பார்வையை இதை வைத்தாவது புரிந்துகொள்ள முயற்சிக்கலாம்).
அதேபோல் கழிவகற்றும் பணிக்குத் தள்ளப்பட்ட சாதிகள், அத்தொழிலாளர்களின்
நிலை, கட்டணக் கழிப்பறைகள் மற்றும் அதன் அரசியல் / ஊழல் (எவ்வளவு இலாபம் கிடைக்கிறது)
பற்றியும் இந்த நூல் பேசுகிறது! ஆனால் இந்த படிநிலைகளை உருவாக்கி காத்து வரும் இந்துமத
வர்ண/சாதி அமைப்பை #மட்டும் பொறுப்பாக்க
முடியாது என்று #குறைவாக மதிப்பிட்டு
இது ஒரு நிர்வாகப் பிரச்சினை என்பதாக #ஆங்காங்கே சில
குறிப்புகள் தென்படுகின்றன. இது சற்று நெருடலை ஏற்படுத்துகிறது. (அதை வைத்து இந்நூலை
எதிர்மறையாக அனுகிடலாகாது. நிர்வாகத்தில் உரியவர்களை பொறுப்பாக்கிடுங்கள் என்னும் வாதம்
தான் அது).
இலாப வெறி கொண்ட பொருளாதார அமைப்பும், அரசு / அதிகார வர்க்கம் என்பதற்குரிய
வழக்கமான பொறுப்பற்ற பண்பும் மறுக்க முடியாதெனினும், குறிப்பிட்ட சாதிகள் மட்டுமே இந்த
வேலைப் பிரிவினையில் நீடிக்கின்றன என்பதற்கு இந்தியாவில் பார்ப்பனிய இந்து மத சாதிக்
கோட்பாடுகள் மிகவும் முக்கியமான காரணமாகும். மார்க்சிய ஆய்வாளர்கள் இது குறித்து நிறைய
எழுதியுள்ளார்கள்.
பெசவாடா வில்சன் அவர்களின் போராட்டங்கள், விளைவுகள் குறித்தும் இந்நூல்
பேசுகிறது.
தங்கள் நிலை பற்றி தலித் அமைப்புகளுக்கு கவலை இல்லை என்ற அருந்ததியர்
பிரிவு மக்களின் வருத்தங்களையும் பதிவு செய்கிறார் ஆசிரியர் எஸ் ரெங்கசாமி. இறுதியில்
ஒரு சிலரின் ஆதிக்கத்திற்கும், ஆதாயத்திற்கும் மட்டும் வழிவகுக்காமல் அனைவரும் பயன்பெரும்
வகையிலான தொழில்நுட்ப வளர்ச்சியும் மாற்றமும் வேண்டும் என்கிறார். குறிப்பாக கூலி இடைவெளி
/ பாகுபாடு பற்றிய கேள்விகள், துப்புறவுப் பணியாளர்கள் இழிவாக நடத்தப்படுவது பற்றிய
பதிவுகள் முக்கியமானவை.
சுற்றுப்புறச் சூழலுக்கு உகந்தது என்று ECO-SAN கழிப்பறை கோப்பையை அறிமுகம்
செய்கிறார். பொது இடங்களில் கட்டணக் கழிப்பறை தொழிலுக்கு எதிரான இலவச கழிப்பறையின்
தேவை, அதைப் பராமரிக்க தொண்டு நிறுவங்களின் தேவையைக் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் இங்கு நமக்கு சாதி ஒழிப்புப் பாதையில் கூட்டுச் சமூக நடவடிக்கையும்
சமத்துவமான வேலைப் பகிர்வு முறையும் தேவை என்றே நான் கருதுகிறேன். அனைத்து சாதிகளும்
இந்த வேலையில் ஈடுபடுத்தப்பட வேண்டும். குறிப்பிட்டோரின் வேலை என்றில்லாமல் சுழற்சி
முறையில் ஒவ்வொரு குடிமகனும் (கட்டாய இராணுவச் சேவை போல்) தூய்மைப் பணியில் ஈடுபடுத்தப்பட
வேண்டும். (ஆட்சியாளர்கள் உட்பட!) சாதி ஒழிப்பில் இது ஓரடி முன்னே என்று பரிந்துரைக்க
விரும்புகிறேன்.
அதிகார வர்க்கத்தை தோலுறித்துக் காட்டும் மிகவும் முக்கியமானதொரு ஆவணம்.
30 பக்கங்கள் தான் படித்துவிடுங்கள்!
ஆசிரியரின்
பதில்:
படிக்கிறார்களோ இல்லையோ, நம் மனதில் பட்டதை மற்றவர்களுடன் பகிர்ந்து
கொள்ளலாமே என்ற எண்ணத்தின் அடிப்படையில் எழுதி, நானே ஒருவகையில் மறந்து விட்ட ஆவணத்தை
(அது நூல் என்ற அளவில் திட்டமிட்டு எழுதப்பட்டதல்ல) நீங்கள் மேற்கோள்காட்டி எழுதியிருந்தது
எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது.
"இந்த படிநிலைகளை உருவாக்கி காத்து வரும் இந்துமத வர்ண/சாதி அமைப்பை
#மட்டும் பொறுப்பாக்க முடியாது என்று #குறைவாக மதிப்பிட்டு இது ஒரு நிர்வாகப் பிரச்சினை
என்பதாக #ஆங்காங்கே சில குறிப்புகள் தென்படுகின்றன. இது சற்று நெருடலை ஏற்படுத்துகிறது"
என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பது உண்மைதான். அந்த நெருடல் எனக்கும் அப்போது இருந்தது.
ஆனால் அதையும் கடந்து நான் நிர்வாகத்தை பொறுப்பாக்கியது எனக்குக் கிடைத்த அனுபவத்தால்தான்.
.ஒரு எளிய துப்புரவுத் தொழிலாளிக்கு, வர்ண அமைப்பை விட, அது போட்டிருக்கும்
சிக்கலான மன முடுச்சுகளை விட, அந்தப் பணியாளரின் மேற்பார்வையாளர் சற்று நேர்மையாக,
மனிதாபிமானத்தோடு நடந்துகொண்டால் போதுமென்ற எதிர்பார்ப்புதான், நிர்வாக அமைப்பின் முக்கியத்துவத்தை
வலியுறுத்தத் தூண்டியது. வர்ண அமைப்பு சார்ந்த கருத்தாக்கங்கள், நிர்வாகம் சார்ந்த
திறனின்மையை, அதிலிருந்து அவர்கள் தப்பித்துக்கொள்ள உதவுவதாக எனக்கு ஒரு புரிதல் ஏற்பட்டது.
வர்ண அமைப்பு பற்றி நாம் அழுத்தம் கொடுக்கும் போதே, துப்பரவுப் பணியில் மலிந்துகிடக்கும்
நிர்வாக அலட்சியம், முறைகேடுகள், திறனின்மை பற்றியும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று
கருதினேன். அதை நீங்கள் புரிந்துகொண்டிருக்கிறீர்கள் என்பதற்கு அடையாளமாக "அதை
வைத்து இந்நூலை எதிர்மறையாக அனுகிடலாகாது. நிர்வாகத்தில் உரியவர்களை பொறுப்பாக்கிடுங்கள்
என்னும் வாதம் தான் அது" என்று குறித்திருந்தது அப்படியொன்றும் பெரிய சிந்தனைத்
தவறை நான் செய்துவிடவில்லை என்ற ஆறுதலைத் தந்தது.
என்னுடைய ஆவணத்தை பொதுவெளியில் பகிர்ந்தே பத்து வருடங்களுக்கு மேலாகிவிட்டது.
அதற்குப் பிறகு, அதைப்பற்றி தொடர்ந்து எழுதாவிட்டாலும், முன்னை விட துப்புரவுப் பணிகளுக்கு
அதிக நிதி ஓதிக்கீடு செய்யப்பட்டு வருவதையும். கழிவகற்றல் தொட்ர்பான பல புது கலைச்சொல்
பிதற்றொலிகள் (jargons) புழக்கத்திற்கு வந்திருந்தாலும், கழிவகற்றும் பணிகளுக்காக பயன்படுத்தப்படும்
கருவிகள், இயந்திரங்கள் சார்ந்த தொழில்நுட்பத்தைகூர்ந்து கவனிப்பவர்களுக்கு, அந்தப்
பணியில் ஊழலும், திறனின்மையும், அதிகரித்தே வந்துள்ளதாக எளிதில் புரிந்துகொள்ளமுடியும்.
All our attempts failed to touch the core issue. அந்த core issue வில் வர்ண அமைப்பும்
மட்டுமல்ல, இன்னும் பல காரணிகளும் உள்ளடங்கியிருக்கிறான.
இந்த பிரச்சனைகளில் அக்கறை கொண்டவன் என்றாலும், தங்களைப்போலவும், மற்றவர்களைப்
போலவும் தொடர்ந்து செயல்படுபவன் என்று என்னைக் பற்றி கூறிக்கொள்ள முடியாது. தொடர்ந்த
செயல்பாடுகள் சிந்தனைத் தெளிவைத் தரும் அல்லவா?. அதுமாதிரியான தெளிவை என்னைப் போன்றவர்களால்
தர முடியாது என்பது நானே உணர்ந்துள்ள உண்மை. .
ஆவணத்தை மேற்கோள் காட்டியதற்காக மகிழ்ச்சியும் நன்றியும்
*******
முகநூலில் இந்த பதிவை எழுதியதும் நண்பர்கள் ஆசிரியரை டேக் செய்தார்கள்.
அப்போது தான் அவர் பேராசிரியர் (ஓய்வு) என்பதும் Community Development பணியில் பெரும் பங்காற்றியுள்ளார்
என்பதும். எல்லாவற்றுக்கும் மேலாக சமூப்பணிக்கான தமிழ் அகராதியை முதன் முதலாக விலையில்லாமல்
தொகுத்தும் எழுதியும் இணையத்தில் வெளியிட்டவர் என்பதையும் தெரிந்து கொண்டேன். அந்த
அகராதியை தரவிறக்கம் செய்யும் APP ஐயும் அவரது முன்னாள் மாணவர் ஒருவர் பகிர்ந்தார்.
பேராசிரியர் ரெங்கசாமி குறித்து சிலாகித்துப் பேசினார். அந்த APP ஐ நான் தரவிறக்கம்
செய்தேன். வியந்து போனேன். சிறப்பான பணி. நன்றி சார்.
தொடர்புடைய சுட்டி: https://www.facebook.com/Kotravai.N/posts/10156177554370575?hc_location=ufi