தோழர்களே,
“சாதி குறித்து மார்க்ஸ்” என்று ரங்கநாயக்கம்மா எழுதிய
கட்டுரையினை தமிழில் மொழிப்பெயர்த்திருந்தேன். அது குறளி இரண்டாம் இதழில் வெளிவந்துள்ளது.
பக்.
62 இல் வலது பத்தியில் பின்வரும் ஆங்கில மேற்கோளுக்கு எனது கீழ் வரும் மொழிபெயர்ப்பு
இடம் பெற்றுள்ளது. இதழைப் படித்த தோழர் ஒருவர் மொழிபெயர்ப்பில் குறை உள்ளதாக கருத்து
தெரிவித்தார். அவருக்கு எனது நன்றிகள்.
உடனே கார்ல் மார்க்ஸ் எழுத்துக்களின் மொழிபெயர்ப்பைப் புரட்டிப் பார்த்து, மீண்டும் எனது மொழிபெயர்ப்பை
படித்துப் பார்த்தேன். உரையாடலின் தொடக்கத்திலேயே “material premises” என்பதை பொருளாதார
வளாகங்கள் என்று மொழிபெயர்த்திருப்பது தவறு என்பதை ஒப்புக்கொண்டேன். உண்மையில் அது
ஒரு கொச்சையான மொழிபெயர்ப்புத்தான் வருந்துகிறேன். எப்படி இவ்வளவு அஜாக்கிரதையாக இருந்துவிட்டேன்
என்ற வருந்தம் எனக்கு மேலோங்கியது.
பிறகு
appropriation எனும் சொல் குறித்த விவாதம் நடந்தது. அதனால் மீண்டும் அந்த பத்தியை மொழிபெயர்த்துப்
பார்த்தேன். அது கீழே கொடுக்கப்பட்டுள்ளது. எனக்கு ஓரளவுக்கு நிறைவளிப்பதாகவும் உள்ளது.
ஆனால்
அன்புக்குறிய அந்த தோழர் ‘இந்தியாவைப் பற்றி காரல் மார்க்ஸ்’ புத்தக மொழிபெயர்ப்பில்
உள்ள மொழிபெயர்ப்பு பொருத்தமானதாக இருப்பதாகக் கருத்து தெரிவித்தார். உடனே அதைப் பிரட்டிப் பார்த்தேன்.
எனக்கென்னவோ அது சரியான மொழிபெயர்ப்பாகப்படவில்லை. ஆகவே எனது இரு மொழிபெயர்ப்பையும், அந்த மொழிபெயர்ப்பையும் இங்கே
கொடுத்துள்ளேன்.
மற்றவர்களின்
கருத்தை அறிய ஆவலாக உள்ளேன். உங்கள் பரிந்துரைகளை, பகிர்ந்தால் எனது மற்ற மொழிபெயர்ப்புகளுக்கும்
உதவியாக இருக்கும்.
நன்றி
கொற்றவை
ஆங்கில மேற்கோள்:
“All
the English Bourgeoisie may be forced to do will neither emancipate nor
materially mend the social condition of the mass of the people, depending not
only on the development of the productive powers, but on their appropriation by
the people. But what they will not fail to do so is to lay down the material
premises for both” (p.85)
முதல் மொழிபெயர்ப்பு: (சாரம்
மாறவில்லை என்றாலும், மோசமான மொழிபெயர்ப்பு)!
“உற்பத்திச்
சக்திகளின் முன்னேற்றத்தைச் சார்ந்து மட்டுமல்ல, மக்களால் தங்களுக்கு கிடைக்கும் நிதி
ஒதுக்கீட்டிற்காக்வும் ஆங்கிலேய பூர்ஷுவாக்கள், கட்டாயப்படுத்தப்பட்டாலும், மக்களின்
சமூக நிலையைப் பொருளாதாரபூர்வமாகத் திருத்தவோ, விடுதலை அளிக்கவோ முனைய மாட்டார்கள்.
ஆனால், இரண்டுக்குமான பொருளாதார வளாகங்களை வரையறுக்க அவர்கள் தவறமாட்டார்கள்”.
விமர்சனத்திற்குப் பின்னர்:
(இது நிறைவு தருவதாக இருக்கிறது)
கட்டாயப்படுத்தப்பட்டாலும்,
அனைத்து ஆங்கில பூர்ஷுவாக்களும் மக்களின் சமூக நிலையை மாற்றவோ அல்லது அவர்களின்
பொருளாயத நிலையிலிருந்தோ (அவர்களை) விடுவிக்கவோ மாட்டார்கள், இது உற்பத்திச் சக்தியின் முன்னேற்றததை
மட்டும் சார்ந்த பிரச்சனை அல்ல மாறாக அதன் மீதான மக்களின் பயன்பாட்டைச் சார்ந்தும்
இருக்கிறது. ஆனால், அவர்கள் (பூர்ஷுவாக்கள்)
இரண்டுக்குமான பொருளாயத அடிப்படைகளை வரையறுக்க தவறமாட்டார்கள்
இந்தியாவைப்
பற்றி காரல் மார்க்ஸ், விடியல் பதிப்பகம் 2012 வெளியீட்டில் உள்ள மொழிபெயர்ப்பு (பக்.
136):
ஆங்கிலேய
முதலாளிகள் நிர்பந்தத்தால் எடுக்கும் நடவடிக்கைகள் இந்திய மக்களுக்கு விடுதலையைக் கொடுக்காது,
அல்லது இந்திய மக்களின் சமூக நிலையில் குறிப்பிடத்தக்க மாறூதலையும் ஏற்படுத்தப் போவதில்லை.
இந்திய மக்களின் விடுதலையும், முன்னேற்றமும் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியையும் அவைகளைப்
பொதுமக்கள் தங்கள் உடைமையாகப் பெறுவதையும் பொறுத்திருக்கிறது. ஆனால், இந்த இரண்டிற்கும்
தேவையான பௌதிக அஸ்திவாரத்தைப் போட ஆங்கிலேய முதலாளிகள் தவறமாட்டார்கள்.
இதன்
ஆங்கிலப் பதிப்பு http://www.marxists.org/archive/marx/works/1853/07/22.htm
உள்ளது. (17 ஆம் பத்தி)