Mar 21, 2011

கருவறையை சொற்கள் கொண்டு நிரப்பினர்



1
அந்தத் தெருவைக் கடக்கையில்
முத்தத்தின் ஈரம் காயத் துவங்கியிருந்தது
அக்கம்
நாசிக்கருகே கன்னம் இருப்பதை ஆசீர்வாதமாக கருதினேன்
பிரார்த்தனையின் ஈரத்திலிருந்து
அவளது எச்சில் மணத்தை நாசிக்குள் செலுத்தி
பாதுகாத்துக் கொண்டேன்.

பசி கொண்டெறியும் வயிற்றுக்கு
கனவுகள் இல்லாத நாளில்
சுவாசக் காற்றிலிருந்து பிரிதெடுக்கப்பட
அவளது வாசம் மீட்டுத்தர
காத்திருக்கிறேன்

வெற்றிடம் விழிப்பந்துகளை ஓங்கி உதைக்கிறது.

2
மாதிரிகளைச் செய்வதில் கைதேர்ந்தவள் மகள்
உடலற்ற பொருள்களுக்கு
உயிரும்
ஸ்பரிசமும்
எண்ணிக்கையிலடங்கா முத்தங்களையும்
வாரி வழங்கும்
அவளது விரல்கள்
என்
பித்தேறிய வரிகளை எச்சில் தொட்டு அழிக்கிறது
காலம்
கருவறைகளுக்கு
தூர வித்தியாசங்களை
பிரிவின் வன்மத்தைக் கற்றுக்கொடுத்துவிடுகிறது

காலம் குறிகளால் ஆனது
மைதுனம் செய்யத் தவறுவதில்லை
உறவுகள் அடிமைகளையே வணங்குகிறது
கூன்
வளைவுகளை மட்டுமே அனுமதிக்கும்

கண்களுக்கு
புவி ஈர்ப்பைக் காவலாய் வைத்துச் செல்லும்
விழிகள்
மண்ணில் நிலைக்கொண்டிருத்தல்
குறிகளுக்கு
சாதகமாய் இருக்கிறது
சாதகமானவைகளைத்தான் குறி அணைத்துக்கொள்கிறது

3
கேள்விக் குறி
முற்றுப்புள்ளியாய் குறுகும்போது
அக்கணத்தை திமிரியழுத்தியபடி
குறிகள் திரித்து விடுகின்றன
மகளின் சொற்களை


அந்தகக்கண்ணீர்
அமிலத் தன்மைக் கொண்டது
மழலைகள்
ஒருபோதும் அறிந்திருக்க வாய்ப்பில்லை

4
கருவறையைச்  சொற்கள் கொண்டு நிரப்பினர்
நீரூற்றி கழுவமுடியா கழிப்பிடம்
வாழ்தல் பற்றிய அச்சத்தை ஏற்படுத்தினர்
அச்சம் எண்ணற்ற குறிகளைக் கொண்டது

பொம்மைகளின் முன்
தோற்று
தளர்ந்து
தலைகவிழ்ந்து நின்றது முலைகள்
இதைச் சித்திரமாய் தீட்ட என் விரல்களை
இறைவனுக்குப் பிச்சையிடுகிறேன்
அது
எதிர்காலம் எனும் பிசாசை வரைந்து வைக்கிறது

ஓவியம் எல்லாவற்றையும் பிரதிபலிக்கிறது
கண்ணாடிகள் நொறுங்கக் காத்திருக்கிறேன்.

Mar 19, 2011

மார்க்சிய முத்திரையும், இணைய அவதூறுகளும், பெண்ணியச் சிந்தனையும்:




         ”மனிதர் என்ன கூறுகிறார்கள், என்ன கற்பனை செய்கிறார்கள். என்ன உணர்கிறார்கள் என்பவற்றிலிருந்தோ அல்லது அவர்களைப் பற்றி என்ன கூறப்படுகிறது, என்ன சிந்திக்கப்படுகிறது, என்ன கற்பனை செய்யப்படுகிறது என்பவற்றிலிருந்தோ மானிடரின் நிஜத்தை அறியமுடியாது.  மாறாக எதார்த்தமான செயலூக்கமான மாந்தர் தம்மிடமிருந்தே தொடங்கவேண்டும். அவர்தம் எதார்த்த வாழ்க்கை - இயக்கத்தை அடியொற்றித் தொடங்க வேண்டும்” - கார்ல் மார்க்ஸ்

சமீப காலங்களில் எழுத்துலகில் மார்க்சியம், பெண்ணியம், பெரியாரியம், அம்பேத்கரியம், பின் நவீனத்துவம் குறித்தான கருத்துக்கள், தலித் போராட்ட கருத்துக்கள் போன்றவை அதிக அளவில் எழுதப்பட்டு வருகிறது. இது ஒடுக்குமுறைகளுக்கெதிரான  ஒரு வலுவான ஆயுதமாக செயல்படும் சாத்தியங்கள் கொண்டதாக காணப்பெறுகிறது. வெகுஜன ஊடகங்கள் எடுத்துரைக்கும் சமூக சிந்தனையிலிருந்து வேறுபட்டு மார்க்சிய அரசியல், மாற்று சமூகவியல் நிலைப்பாட்டை எடுத்துரைக்கின்றன.

காலம் காலமாக நிலவிவந்த அதிகாரத்தை எதிர்த்து செயல்படுவதற்கான வழிகாட்டுதலையும், சமதர்ம சமுதாயம் எந்த கட்டுமானத்தின் மேல் அமைக்கப்படவேண்டும் என்று மக்கள் நலனில் அக்கறைக் கொண்ட சமூக சிந்தனையாளர்கள், தத்துவ ஆசிரியர்கள் தங்களது பெரும் உழைப்பைக் கொண்டு, களப் பணிகளையும் செய்து, பல சமயங்களில் அதிகார ஒடுக்குமுறைகளுக்கு  பலியாகி, மக்கள் மத்தியில் ஒரு ஆரோக்கியமான சிந்தனை முறைகளை, விமர்சன முறைகளை வளர்த்தெடுத்தார்கள்.

மற்றொருபுறம் தமிழ் எழுத்துலகில்  விமர்சனப் போக்கானது மலிந்து, தனி நபர் தூற்றலை அதிக அளவில் வாரி இறைக்கும் தன்மையே காணப்படுகிறது. குறிப்பாக இணையத்தில் மிக அருவருப்பூட்டும் எழுத்துக்களாய் இவை அரங்கேறி வருகிறது. இணையம் எல்லோருக்குமான வெளியாய் இருக்கிறது என்ற ஒரே காரணத்தால் எவர் மீது வேண்டுமானாலும் எத்தகைய அவதூறுகளை வேண்டுமானாலும் முன் வைக்கலாம் எனும் கீழ்த்தரமான மனநிலை நிலவுகிறது.

ஒருவருடைய எழுத்து முன் வைக்கும் கருத்துக்கு, எதிர்வினை என்பது மறைந்து, எழுதியவரின் தனிப்பட்ட வாழ்கை, பாலியல் தொடர்புகள் இவற்றை முன் வைத்து விமர்சனங்கள் பரிவர்த்தனை செய்யப்படுகிறது. இச்செயல்பாடு சினிமா கிசு கிசுக்கள் பேசும் மலிவான பத்திரிகைகளை விட தரம் தாழ்ந்த நிலைக்கு கொண்டு செல்கிறது.

இணையத்தில் பொழுது போக்குக்காக வலம் வருவோருக்கு, சுவாராசியமான பாலியல் தகவல்களை நிரப்பும் "பாலியல் தளங்களுக்கும்", மாற்று அரசியலை முன் வைத்து இணைய இதழ் நடத்தும் சில தளங்களுக்கும் பெரிய வித்தியாசங்களை காண முடியவில்லை. மாற்று அரசியல் பேசுவோரில் சிலர், தங்களது நிலைப்பாட்டை சுயநல காரணிகளுக்குள் சுருக்கி, தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சிகளை தீர்த்துக்கொள்ள பயன்படுத்துவதும் காணப்படுகிறது. இச்செயல்பாட்டால் வாசகர்கள் குழம்பி, அரசியல் மாற்றத்தில், மார்க்சிய புரிதலில், பெண்ணிய அங்கீகரிப்பில்  அவர்கள் நம்பிக்கை இழக்கும்  சூழலை அவ்வெழுத்துக்கள் ஏற்படுத்தித் தருவதோடு சமூக ஒழுக்கம் குறித்த பாசிசச் சிந்தனைகளையே வரையறுக்கிறது.

அதிகாரத்திற்கு எதிரான குரல், மத எதிர்ப்பு, பெண்ணிய சிந்தனை, மார்க்சிய சிந்தனை, இன்ன பிற, மக்கள் நலன் பேசும் சித்தாந்தங்கள், தத்துவங்கள், இவற்றை தார்மீகமாக ஏற்றுக் கொண்ட குழுக்களுக்குள்ளேயே அடித்துக்கொள்ளும் நிலையானது, சமூக சுரண்டல்களை செய்து கொண்டிருப்போருக்கு மகிழ்வை ஏற்படுத்தித்தரும் என்பதை சம்பந்தப்பட்ட எழுத்தாளர்கள் கவனத்தில் கொள்கிறார்களா என்பது தெரியவில்லை.

மத அரசியல், ஜனரஞ்சக இலக்கியம், ஆணாதிக்க கதைகள் இவற்றை எழுதிக்கொண்டு மக்களை ஏய்த்துப் பிழைக்க எழுத்தை ஒரு துறையாக எடுத்து செயல்படுபவருக்கு மத்தியில், ஏற்றத்தாழ்வுகள் ஒழிய வேண்டும், சமதர்மம் நிலவ வேண்டும், மார்க்சிய, கம்யுனிச, சோஷலிச சிந்தனைகள் வலுப் பெறவேண்டும், அதன் மூலம் மக்கள் சுய மரியாதையும், விடுதலையும் அடையவேண்டும் என்று கருதி எழுதுவோரின் அறம் வேறுபடுவதை மறுப்பதற்கில்லை.

அவ்விடுதலையை நோக்கிய எழுத்துப் பரப்பில் மாற்றுக் குழுக்களுக்கிருக்கும் பெரும் சவாலானது வெகுஜன பொழுதுபோக்கு எழுத்துக்களிலிருந்தும், அது விதைக்கும் சமூக நிலைப்பாட்டிலிருந்தும் மக்களை விடுவிப்பதும், அந்த ஜனரஞ்சக எழுத்துக்களை விமர்சிப்பதுமே (ஆரோக்கியமான முறையில்) ஆகும். அதை விடுத்து மிகுந்த விரைப்புத் தன்மையுடன், சமூக சீர்திருத்த எண்ணம் கொண்டவர்களுக்குள்ளேயே அடித்துக்கொள்வதும், காழ்ப்பு அவதூறுகளை  அடுக்கிக்கொண்டே போவதும் எத்தகைய மார்க்சிய அறம்  என்பது கேள்வியாய் எழுகிறது. விவாதங்கள் வரவேற்கப்படவேண்டியவை. அவைகளை மறுப்பது கருத்து வன்முறை என்ற குரலை நாம் கிசுகிசுக்களுக்கும், வதந்திகளுக்கும் ஒலிக்கமுடியாது. கிசுகிசுக்கள் விவாதங்கள் அல்ல. அவை தன்னளவில் மற்றவரின் சுதந்திர வெளியை எள்ளலோடும், காழ்ப்போடும் ஒரு சர்வாதிகார ஒழுங்குமுறைக்குக் கொண்டு செல்பவை.

இவை போன்ற விவாதங்களில் மார்க்சியத்தை  முழு புரிதலுடன்( மார்க்சியம் சுதந்திரம் பேசும் தத்துவம் என்ற அளவில் புரிந்து கொண்டவர்களானாலும்) ஏற்றுக்கொண்டவர்களும் மலிவான காழ்ப்புணர்ச்சிகளைப் பொது தளத்தில் வைப்பது மிகுந்த வருத்தத்தை தருகிறது. மத அடிப்படைவாதிகள், அரசியல்வாதிகள் கூட மார்க்சிய நிலைப்பாட்டுடன் செயல்படும் நபர்களை கொச்சையான வார்த்தைகள் மூலம் வசைபாட தயங்குவதைப் பார்க்கமுடிகிறது. ஆனால் தங்களை மார்க்சியவாதி, பெண்ணியவாதி என்று சொல்லிக்கொள்ளும் சில  எழுத்தாளர்கள் மார்க்சியத்தையும், பெண்ணியத்தையும் தங்களால் முடிந்த வரைக்கும் அவதூறுகளால் வாசகனை மனம் வெறுக்கும் அளவுக்கு கொண்டுவருவதைக் காணமுடிகிறது.

பாசிசத்தை எதிர்போராக, போராளியாக, ஊழலற்ற, சுரண்டலற்ற சமுதாயத்தை நிறுவுவதும்,  பெண் என்ற உடலளவிலான பாலியல் அடையாளத்தை , ஆணாதிக்கம் அவள் மீது ஏற்றி வைத்த ஒழுக்கவிதிகளை, அடக்குமுறைகளை நிராகரித்து பெண் என்பவளுக்கு எல்லாவகையிலும் சுயமரியாதையை, உரிமையை  மீட்டுத்தருவதும் மார்க்சியம், பெரியாரியம் மற்றும் பெண்ணியத்தின் முதன்மை தேவை.  ஆனால் இச்சிந்தனைகளை முன் வைத்து  எழுதுவோரிடத்தும்  ஏதோ ஒரு வகையில் பாசிசமும், ஆணாதிக்க கலாசாரப் பிற்போக்கு பார்வையும் தொடர்ந்து கொண்டிருப்பதை அவர்களுடைய உணர்ச்சிமிகு எழுத்துக்களை படிக்கும் பொழுதும், சில எதிர்வினை போராட்டங்களிலும் காண நேருகிறது.

நட்பு முரண்பாடு, பகை முரண்பாடு என்ற அடிப்படை தத்துவார்த்த உரையாடல் வகையை இவ்விடத்தில் பொருத்திப்பார்த்தல்  அவசியமாகிறது. எதிர் நம்பிக்கை கொண்டவர் என்பதால் நாம் அவர்களை எள்ளலாய், அவமதிக்கும் வார்த்தைகளை உதிர்த்துவிடக் கூடாது என்பது, அடிப்படை மார்க்சிய பரிந்துரையாக நமக்கு முந்தைய தத்துவவியலாளர்கள் வகுத்துக் கொடுத்திருக்கும் அறவழி. மார்க்சிய நம்பிக்கையாளராய் குறைந்தபட்சம் ஒருவர் காக்கவேண்டியது ஆணாதிக்க பாலியல் அவதூறு வார்த்தைகளை உதிர்க்காமல் இருப்பது, அவரின் அந்தரங்க வாழ்க்கையில் நிலவும் பாலியல் தொடர்புகள் குறித்து பேசாமல் நாகரீகம் காப்பது. சமூக பணியாளராக ஒருவருடைய அரசியல் செயல்பாடுகளில் ஏதாவது தவாறன போக்கு அல்லது நிகழ்வுகள் இருக்குமாயின் அது பற்றிய அரசியல் பார்வையுடன் கூடிய, ஒருவேளை தவறு செய்திருப்பார்களாயின் அவர்களை மீட்கும் வகையிலான விமர்சனம் வரவேற்கத்தக்கது. அப்போதும் அவருடைய தனிப்பட்ட பாலியல் தேர்வுகளைக் கொச்சைப் படுத்தும் வார்த்தைகளானது, இக்குழுவினர் எதிர்க்கும் பாசிச கருத்துக்களுக்கு இணையான ஒன்றாகத்தான் கருத இயலும்.  

பாலியலைப் பொறுத்தவரையில் இந்திய மனம் சிறிதும் மேடேறவில்லை என்பது இங்கு வரையறுக்கத்தக்கது. இங்குதான் பாலியல் விவாதங்களை அதற்கேயுரிய முறையில் தொடங்க வேண்டிய அவசியமும், கட்டாயமும் இருக்கிறது. ஆனால் பாலியல் விவாதாங்களை, அது பற்றிய உளவியல் குறிப்புக்களை ஆராயாமல் பாலியலை வெறும் கிசுகிசுவாக்குவதன் மூலம் எதையும் சாதிக்கமுடியாது.

ஒருவர் தான் விரும்பி செயல்படும் அரசியல் நிலைப்பாடு சார்ந்த எழுத்துக்களை, முன்னர் ஈடுபட்டிருந்த அமைப்புகளின் குறைபாடுகளை விமர்சித்து எழுதும் உரிமை எல்லோருக்கும் உள்ளது. அதற்கு மாற்று கருத்து இருப்பின், அதை கருத்தாக்க எதிர்வினையாக முன்வைப்பதே அறிவுசார் பதிவாகும். அதுவல்லாத தனி நபர் தூற்றல்கள் வெறும் சுவாரசியத்திற்காக,  அங்கிகார அவஸ்தையை  முன்வைத்து  எழுதுவதாகவே எடுத்துக்கொள்ளவியலும். 

பாலியல் விமர்சனங்களானது பெரும்பாலும், எழுதுவோரின் தன்முனைப்பு சுய விளம்பரமாக காலப்போக்கில் மாறுவதைக் காண முடிகிறது. ஒருவரின் பாலியல் தொடர்புகளை விமர்சிப்பதின் மூலம் சம்பந்தப்பட்டவரின் அரசியல் பார்வைகளை, களப்பணியை, அவர்களது நோக்கத்தை முற்றிலுமாக பாலியல் என்ற கட்டுமானத்தில் வைத்து அவர்களது பணிகளை கொச்சைப்படுத்துவதே நோக்கம் எனத் தெரிகிறது. அதே சமயம்   பாலியல் சார்ந்த குற்றச்சாட்டுகளை ஒருவர் மீது வைப்பதன் மூலம் குற்றச்சாட்டை வைப்பவர் தன்னை ஒரு புனிதராக பறைசாற்றிக்கொள்ளும் உளவியல் காரணிகளையும் சிந்திக்கவேண்டியுள்ளது.  பெண்ணியப் போர்வைக்குள் இருந்துக் கொண்டு ஒரு சக பெண்ணியவாதியின் (அல்லது பெண்) மேல் அத்தகைய ஆணாதிக்க பாலியல் ஒழுக்க விதிகளுக்குட்பட்ட அவதூறுகளை வைப்பதும், குழுக்களோடு சேர்ந்து அவதூறுகளை பறைசாற்றும் வேலைகளை செய்வதும் எவ்வகையில் மக்களுக்கு பகுத்தறிவை வளர்ப்பதிலும், பெண்ணியத்திற்கான வழிகாட்டியாய் அமைவதிலும் துணை செய்யும்  என்பது தெரியவில்லை.

இவ்வெழுத்தாளர்கள், இக்குழுக்கள் தார்மீகமாக மதிக்கும் கார்ல் மார்க்ஸ் பற்றி வரும் பாலியல் விமர்சனங்களை எவ்வாறு பொறுத்துக்கொள்ள முடியாமல் கோபப்படுகிறார்களோ அதே கோபம் எந்த அமைப்பும் சாராத ஒரு குடிமகன், (போலி மார்க்சியவாதியாக கூட இருக்கட்டும்), மற்றும், எதிர்க்கட்சி ஆட்கள் இப்படி யார் மீது வைக்கப்படும் போதும் எதிர்வினைகள் ஆற்றுவதுதானே  மார்க்சிய அறமாக இருக்க முடியும். அப்படி இல்லை என்றால் மார்க்சியம் தன்னளவில்  அனுமதிக்காத தலைவன் - தொண்டன் குரு மரபை  (hierarchy) ஆதரிப்பதாகத்தானே கருத முடியும். இது போன்ற சார்புப் பார்வைகள் தான் மார்க்சியம் கற்றதாகச் சொல்லி பாலியல் கிசுகிசுக்களை எழுதும் நபர்களின் எழுத்து  அறமா?

[ச்]சே கெஃபாரா வை புரட்சியாளராக கருதும் நம் தோழர்கள் அவருடைய தொடக்காலத்தில் அவர் ஒரு இளைஞராக அன்றைய சூழலில் கட்டமைக்கப்பட்ட, பொது புத்தி சார்ந்த பாலியல் பார்வைகளுடன் இருந்த காலத்தில், பெண்கள் விஷயத்தில் அவர் எப்படி இருந்தார் என்பதை படித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஃபிடலுடன் இணையும் வரை அவர் பாலியல் நோக்கோடு பல பெண்களிடம் பழகியதும், சில  பெண்களை பார்த்ததும் அவர்களை 'வோர்' (whore - a prostitute or promiscuous woman: often a term of abuse) என்று அழைத்து வந்ததையும், அவரது வாழ்கை வரலாறான 'Che - A revolutionary Life, John Lee Anderson  எழுதிய புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஃபிடல் காஸ்ட்ரோவுடன் இணைந்தவுடன் சேவின் பார்வை, பாதை மாறுகிறது. அவர் தன்னை  ஓர் இடது சாரியாக அறிவிக்கிறார். அதற்கான பணிகளைச் செய்கிறார். தான் நம்பிய கொள்கைக்காக கொலை செய்யப்படுகிறார். சே வின்  கடந்தகால வாழ்க்கையை வைத்து சேவின் அர்ப்பணிப்பை நாம் புறக்கணித்துவிட முடியுமா. தொட்டதெற்கெல்லாம் ஆணாதிக்கம் என்று முத்திரை குத்தும் [ஆணாதிக்கக் கருத்தியலைச் சுமந்து நிற்கும்]  முற்போக்கு தோழிகள் சேவைப் பற்றியும் தங்களது பெண்ணிய விமர்சனங்களை வைப்பார்களா. அவரது பாலியல் செயல்பாடுகள், மார்க்ஸ் அவர்களின் ஹெலன் டெமூத் உடனான தொடர்புகளைப் பற்றி பேசுவதை அனுமதிக்க முடியாது என்று சொல்வீர்களானால், அதே நிலைப் பாட்டை எல்லோரிடத்திலும் கைகொள்ள முடியாமல், சார்பு நோக்கோடு  தேர்ந்தெடுத்த எதிர்ப்புவாதத்தை மட்டும் முன்வைப்பதை, பொது நலன் கருதிய,  மார்க்சிய நல்லெண்ணம் கொண்ட, நேர்மையான பெண்ணிய புரட்சி, கருத்துப் புரட்சி என்று எப்படி எடுத்துக்கொள்வது? மேற்கூறிய சேவின் வாழ்க்கை குறிப்பை எழுதிவிட்ட ஒரே காரணத்திற்காக நாம் கொதித்தெழ வேண்டுமானால் அக்குறிப்புகளை எழுத அனுமதி கொடுத்த சே அவர்களின் துனைவியார்  ஹில்டா மீது தான்  கோபப்படவேண்டும். 

சேமட்டும் தவறுகள் செய்யவில்லையா என்பது என் வாதமல்ல, யார் தவறுகள் செய்தபோதும் (தவறு என்பது என்ன என்பதற்கு இன்னும் சரியான புரிதல் நம் சமூகத்தில் ஏற்படவில்லை, பாலியல் விஷயம் மட்டுமே பெரிய குற்றமாக கருதப்படுகிறது, அதுவும் இருவரின் சம்மதத்தின் பேரில் அவ்வுறவு அமைந்திருந்தாலும் கூட) அவற்றை பொறுப்புணர்வோடு, தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சிகள் இன்றி விமர்சனங்களை வைப்பது, நம் தலைவர்கள் நிலைப்பாட்டில் எவ்வளவு முக்கியமோ, அதே நிலைப்பாடு, அதே நாகரீகம், எவர் பற்றிய விமர்சனத்திலும் கடைபிடிக்க முடியாமல் நம்மை வழி நடத்துவது எது என்ற கேள்விக்கான அடித்தளமே அக்குறிப்பு.

தலைவனும், சாமானியனும் (பொது மக்கள், இயக்கத்தில் இணையாதவர்கள் இடதுசாரி நம்பிக்கைக் கொண்டவர்கள், மக்கள் பணி பொது தளத்தில் ஆற்றாதவர்கள்......)  ஒன்றா என்றால், மார்க்சியம் அப்படிதானே கருதச் சொல்கிறது.

பாலியலை விட்டு சமத்துவ சங்கம் சார்ந்த உதாரணம் ஒன்றை வைக்கிறேன். அடிமைகளுக்குப் பதவி அளிப்பதைச் சித்தார்த்தர் வெளிப்படையாகவே தடை செய்தார்என்று பதிவு செய்திருக்கிறார்  யேன் மிர்தால். மேலும், புத்தர் கடனாளிகளுக்கு பதவிகள் தருவதை தடை செய்ததாகவும், மன்னர்களின் சலுகைகளைச் சார்ந்திருந்ததால் படை வீரர்களை அமைப்பில் சேர்க்கவில்லை என்றும் பதிவு செய்கிறார். இதை ராகுல்ஜி, சட்டோபாத்யாய போன்ற வரலாற்றாய்வாளர்கள் பதிவு செய்துள்ளார்கள். இதை வைத்து புத்தர் சாதி பார்த்தார், வர்க்கம் பார்த்தார், பொருளாதார ஆதாயம் பார்த்தார், தந்திரக்காரர், சுயநலவாதி என்று சொல்வதா அல்லது அப்போதைய அரசியல் சூழல், பற்றி எரியும் பிரச்சனை, புதிய அமைப்பை தொந்தரவில்லாமல் வளர்த்தெடுக்கவேண்டிய நெருக்கடி நிலையின், துயரமான ஒரு பகுதி என்ற அளவில் மனதில் வைத்துக் கொண்டு அவர் கூறிய மற்ற வழிகாட்டுதல்களை மதிப்பதா.

இல்லை இவற்றை விட்டுவிட்டு புத்தரின் மேல் நன்மதிப்பிருந்ததும் இக்குறிப்புகளை நேர்மையாக பதிவு செய்த மிர்தாலையும், ராகுல்ஜியையும் துரோகிகள் என்று முத்திரைக் குத்தி,  பௌத்த துரோகிகள் என்று தமிழில் இருக்கும் வசைச் சொற்களைக் கொண்டு நிரப்பி கட்டுரை என்ற பெயரில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவதா? புத்தர் மீதும் பாலியல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருக்கிறது.

இதற்கெல்லாம் கிசுகிசுவை உற்பத்தி பண்ணும் அடிப்படை வாதிகளுக்கு ஆதாரமாக இருப்பது அவர்களது  “இறப்பைத் தொழும் மனம்” , இறந்து போனவர்களைத் துதிக்கும் நோஸ்டால்ஜியாமட்டுமே எங்களுக்கு உவப்பானது, எங்களுக்குப் பிடிக்காத ஒருவர் உயிரோடு இருக்கும் பட்சத்தில் தூற்றிக் கொண்டே இருப்போம். இறந்தால்தான் புகழ் பாடுவோம் என்கிற துதிச்சிந்தனை. இது செத்தா நல்லவன் என்று கருதும் வெறும் இரக்கமுடைய, இறந்தோரின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறும் பசப்பான மனநிலையை மட்டுமே குறிக்கிறது. இறந்த அன்று ஆறுதல் கூறினாலாவது பாதிக்கப்படவருக்கு சற்று ஆறுதலாய் இருக்கும், ஆண்டாண்டு காலமாய் இதையே செய்து வரும் மனநிலை சற்று கவனிக்கத்தக்கது.

அரசியல் களத்தில் இயங்குபவராய் இருக்கும் ஒருவர் மீது, அரசியல் செயல்பாடுகள், அவரது சுரண்டல்கள் குறித்து விமர்சனங்கள் மக்கள் நலன் கருதி அவசியமானது என்பதில் ஐயமில்லை. ஆனால் ஒருவர் மக்கள் பணி ஆற்றவந்துவிட்டார் என்பதற்காக அவருக்கு அந்தரங்க வாழ்க்கையோ, காதலோ இருக்ககூடாது என்கிற கண்ணோட்டத்துடன் விமர்சனங்களை வைப்பது, பொது புத்தியில் இயங்கும் மக்கள் மார்க்சியர்களுக்கு காமமே இருக்கக்கூடாது, அவர்களுக்கு சராசரி மனிதர்களைப்போல் எந்த சுகமும் இருக்கக்கூடாது, அவர்கள் அதை அனுபவிக்கக் கூடாது, மார்க்சியர்களுக்கு, பொதுப்பணியில் இருப்பவர்களுக்கு வியர்க்கக்கூடாது, அவர்கள் மலம் கழிக்கக்கூடாது என்று கருதுவதுபோல் அல்லவா இருக்கிறது.  அவ்வாறு இருப்பது உலகம் முழுமைக்குமே கடவுள்கள் (என்ற கற்பனை சித்திரம்) மட்டும்தான்.
[ துரதிருஷ்ட வசமாக தோழர்  வரதராஜனை நினைத்துக்கொள்கிறேன்].  வாழ்நாள் முழுதும் காமத்தை தன் உடலின் மூலம் வெற்றியடைய முயற்சி செய்து தான் தோல்வியுற்றதாக அறிவித்த காந்தியையும் சேர்த்து.

கடந்த கால வாழ்க்கையில், உறவுகளில் ஒருவருக்கு மன, மண முறிவு ஏற்பட்டிருந்தால் பிணக்குண்ட நபரால் செய்ய முடிவதெல்லாம், பிரிந்தவர் மீது பாலியல் குற்றச் சாட்டுகளை பரப்பவது. அவரை ஆதிக்கவாதி, சாதியவெறியர், காமாந்தகன் என்று சாடுவது. எதிர்பாளர்கள், அவரை போட்டியாளராக கருதுபவர்கள் உடனே அந்த பறை சாற்றுபவரின் பக்கம் கூட்டு சேர்ந்து கொண்டு முடிந்தவரையில் கீழ்த்தரமான விமர்சனங்களை எழுதி தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியை தீர்த்துக்கொள்வது. இது தான் இங்கு கருத்து சுதந்திரம் என்ற பெயரில் நடந்து கொண்டிருக்கிறது. 

ஒரு எதிராளியை வீழ்த்த ஆணாதிக்கம் பயன்படுத்தும் பாலியல் குற்றச்சாட்டு எனும் கேடு கேட்ட அரசியலுக்கு பெண்கள் துணைபோவதை பெண்ணியம் என்று முன் வைக்கும் அரைகுறை பெண்ணிய புரிதல் கொண்ட 'முற்போக்கு' வாதிகள் தாங்கள் மீண்டும் ஆணாதிக்கத்திற்கே துணை போகிறார்கள் என்று அறியாமல் இருப்பது வேடிக்கையாக உள்ளது.   பாலியல் அவதூறை ஏவுவதே ஆணாதிக்க போக்குதான், அது எப்படி பெண்ணிய சிந்தனைக்குள் பொருந்தும்.  ஒரு பெண்ணை ஒட்டுமொத்தமாக புறந்தள்ள அவளை விபச்சாரி என்று சொன்னால் போதும் ஆண்களின் உலகம் தயாராகிவிடும். சம்பந்தப்பட்ட பெண் எந்தப் பணி செய்திருந்தாலும் அவள் விபச்சாரியே. இந்த ஆணாதிக்க நோக்கை, அதே சொற்களில் சக பெண்கள் மேலேயே ஒரு பெண் வைப்பது எப்படி பெண்ணியமாகும். விவாதிப்பதற்கு இதில் பாலியல் கருத்துக்கள், சொல்லாடல்கள் என  நிறைய இருக்கிறது.

அவதூறு இல்லை உண்மை என்ற வறட்டுத்தனமான வாதத்தை ஏற்றுகொள்வதற்கில்லை, குற்றம் சுமத்தியவரின் பின்னணி, அவர் நோக்கம், குற்றம் சாட்டப்பட்ட நபரோடு  அவரது முந்தைய தொடர்பு, பிந்தைய பிணக்கு, தற்போதைய அரசியல் செயல்பாடு, முந்தைய அரசியல் நிலைப்பாடு, பொது தளத்தில் தொடர்ந்து சம்பந்தப் பட்டவர்கள் ஆற்றிய சமுதாயப் பணி இப்படி பல பிரிவுகளிலிருந்து அக்குற்றச்சாட்டை ஆராய வேண்டும். பெண் என்ற ஒரு காரணத்தாலேயே அவர் ஒரு ஆண் மீது முன்வைக்கும் விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள் ஏற்றுக்கொள்ளப் படுவதற்கான ஒரு சிறப்புக் காரணியாகிவிட முடியாது. (ஆணுக்கு அடங்கிப்போகவேண்டும் என்று கூறும் பெண்களை நாம் எவ்வாறு பெண்ணியவாதியாகக் கருதமுடியும், இதை வைத்துத்தானே ஆண்களும் பெரும்பாலும் பேசுகிறார்கள்.). அப்படிப்பட்ட பெண்ணிய போராளிகள், அதிகார வர்க்கத்தில் இருப்போர் மீது பாலியல் குற்றச் சாட்டை இதே துணிச்சலுடன் வைத்தோ, அப்படி வெளிவந்த பாலியல் குற்றச்சாட்டுகளுக்காக குரல் கொடுத்தோ, போராடியோ நான் பார்த்ததில்லை.  இணையம் என்ற ஒன்று இருப்பதாலேயே டிஜிட்டல் குரைப்புகளைசெய்யும் அதிகாரத்தை கையில் எடுத்துகொண்டு செயல்படுவதை மட்டுமே காண முடிகிறது.

ஒரு பாலியல் குற்றச்சாட்டை அடுத்தவரின் நலன் கருதி, என்ற போர்வையில் முன் வைத்து விட்டு, ஆதாரம் இருக்கிறதா என்ற அடிப்படைக் கேள்வியைக் கூட ஆணாதிக்க கேள்வி என்று கூறுவது பெண்ணை ஒரு அறியாமைப் பண்டமாய் புரிந்துகொள்ளவே உதவுகிறது.  ஒரு பெண் எப்படி அதை வெளியில் விவரிப்பாள் என்பது பெண்களை, இன்னும் மானம், ரோஷம், கற்பு என்ற கருத்தியல்களுக்குப் பயந்து, அவளை அஞ்சுபவளாக்குவதோடு, தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை பொது வெளியில் சொல்லத்தயங்கும் நிலையையே இது வளர்க்கும். இது ஒன்றே ஆணாதிக்கத்தின் மிகப்பெரிய ஆயுதம். பெண் தான் உடலளவில் பாதிக்கப்பட்டதை வெளியே சொல்லமாட்டாள், அவள் கற்பு போய்விடும் என்ற ஆணாதிக்க கருத்தை சக பெண்களையே சொல்ல வைத்ததுதான் ஆணாதிக்கத்தின் மாபெரும் சாதனை. இதற்கு முற்போக்கு என்ற பெயரில் பெண்கள் இன்னமும் உடன்படுவதென்பது, ஆணாதிக்கத்தின் மாபெரும் வெற்றியையே இன்றும் பறைசாற்றுகிறது.

பெண்களும் அதிகாரத்தில் பங்குகொண்டு, பெண்ணிய சங்கங்கள், மனித உரிமைக் கழகங்கள் என்று களத்தில் இறங்கி நியாயம் வாங்கித்தரும் இக்காலக்கட்டத்தில், இது போன்ற நாடகங்கள் விலை போகாது என்ற உண்மை நம் தோழர்களுக்கே தெரியும்.  பாதிக்கப்பட்ட நபர் அத்தகைய அத்துமீறல்கள் உண்மையென்று இருக்கும் பட்சத்தில் இறங்கிப் போராடுவதற்கான  சாத்தியமான சூழல்கள் இப்பொழுது நிலவுகிறது. அது நடக்காத போது,  அது வெறும் குற்றச் சாட்டுதான்.

எடுத்துக்காட்டாக அருந்ததிராயின் சில செயல்பாடுகளை விமர்சிக்கும் ஒருவர், எவ்வகையான விமர்சனங்களை அவர் மீது வைக்கிறார், எந்த செயல்பாடு குறித்து கருத்து சொல்லியிருக்கிறார் என்ற விவாதமின்றி, அவரைப் பற்றி எதுவுமே விமர்சிக்ககூடாது என்பது வெறும் ரசிக மனோபாவமாகத்தான் கருத முடியும். அருந்ததிராய் மார்க்சிய பார்வை கொண்டிருக்கிறார், பழங்குடியினருக்கு ஆதரவாக செயல் படுகிறார் என்ற அளவில் அவரை மதிப்பதும், அவரின் எழுத்துக்களுக்கு, பழங்குடியினருக்கான போராட்டங்களுக்கு ஆதரவு தருவதும் குறித்து எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.  அவரது எழுத்துக்கள் மூலம் சுரணையற்ற மேட்டுக்குடி மக்களும் அப்பிரச்சனைகளை கவனிக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை.

அதே நேரம் அவருக்கு கிடைக்கும் அதீத ஊடக ஆதரவும், கைது பூச்சாண்டிகள் குறித்தும் சற்று கவனத்துடன் இருப்பதும் அவசியமாகிறது.   (Dr. Binayak Sen சிறையிலிருக்கிறார், வெளிப்படையாக விமர்சித்து எழுதிவரும் ராய் வெளியிலிருக்கிறார்) குறுகிய காலத்தில் ஓரிரு விஷயத்தை வைத்து ஒருவரை கண் மூடித்தனமாக ஆதரிப்பதும், விமர்சிப்பதும் பிற்காலத்தில் எமாற்றத்திருக்கு நம்மை இட்டு செல்லலாம். அது குறித்தே ஒரு அரசியல் சந்தேகப் பார்வை கொண்டு கவனிக்கவேண்டியுள்ளது, நம் அரசியல் சூழலும் அப்படித்தான் இருக்கிறது.  மார்க்சியம் எப்பொழுதும் குருட்டு விசுவாசத்தை, ரசிக மனோபாவத்தை ஆதரிப்பதில்லை. அதி தீவிரமான விசுவாசமானது கட்சிக்கும், அது சார்ந்த தத்துவார்த்தத்துக்குமான  கேடு என்றுதான் சொல்கிறது.

ஒருவேளை ஒரு பெண்ணானவள் ஆணிடம் கடனாக பணம் வாங்கி அதை திருப்பிக் கொடுக்காமல் இருந்திருந்தாலும் கூட அவர் பெண் என்ற காரணத்தால் அவரை விமர்சிக்கக் கூடாது என்பது பிறப்பின் அடிப்படையில் சலுகைகள் கோருவது போன்ற இன வெறிக்கு ஒப்பான ஒரு சிந்தனையாகத்தான் கருத தோன்றுகிறது.  அப்படி அவருடைய அந்த செயலை ஒருவர் விமர்சிக்கும் பொழுது ஆண் என்ற காரணத்தினாலேயே ஆணாதிக்கவாதியாக சாடப்படுவது முதிர்ச்சியற்ற போக்கு அல்லது சுயநல விளம்பரதார மனநிலை மட்டுமே.  அப்படி செய்வது ஆண்களின் கருத்தையே பெண்களும் பின்பற்றுவதாகத்தான் சொல்லமுடியும். ஆண்களின் இரக்கத்தை, பாவம் பெண் என்ற பரிதாபத்தை அவர்கள் இன்னும் பயன்படுத்தி பெண்களை ஆணை எதிர்நோக்கி வாழும் அபலைகளாக அடிமைப்படுத்தவே இது வழிகோலும். பெண்ணியம் கேட்பது பிட்சையல்ல, உரிமை. இன்னும் சொல்லப்போனால் நீ எவரிடம் அடைபட்டிருக்கிறாய் உனக்கு நீயே சுதந்திரம் என்கிற பார்வையை, சுய மரியாதையை, அதை அதன் தாத்பரியங்களோடு அடை என்பதே.


மார்க்சியவாதியாக இருந்து கொண்டு ஒருவர் யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம், ஆனால் மார்க்சியர்களை விமர்சிக்கக் கூடாது என்பது மார்க்சியத்தில் இல்லை. எல்லாவற்றையும் சந்தேகப்படு என்றுதானே மார்க்ஸ் சொல்லியிருக்கிறார்.  மனிதகுலம் படைத்தளித்திருக்கிற கருவுலங்கள் யாவற்றையும் பற்றிய அறிவைப்பெற்று  உனது சிந்தனையை மேப்படுத்திக்கொள்ளும் போது மட்டுமே ஒருவன் (ஒருத்தி) கம்யூனிஸ்ட் ஆக முடியும்என்று லெனின் கூறுகிறார்.இன்னும் சொல்லப்போனால் எவ்வளவு பெரிய மேதையாக இருந்தாலும் அவனது சவப்பெட்டியைத் திறந்துபார்த்தால் கொஞ்சம் ஆணாதிக்கம் துடித்துக்கொண்டுதானிருக்கும் என்று அழுத்தம் கொடுத்தே லெனின் சொல்லியிருக்கிறார். கார்ல் மார்க்சும் நான் ஒரு கம்யூனிஸ்ட் ஆக முயற்சிக்கிறேன் என்று கூறிய கூற்று அவர் மார்க்சியத்தின் அறத்தை, அதன் தத்துவார்த்த நோக்கை, தனது பலவீனங்களை புரிந்துகொண்ட ஒரு தோழனாக சுயவிமர்சகனாகத்தானே சொல்லியிருக்கக்கூடும்

ஒரு வேளை கார்ல் மார்க்ஸ் உயிரோடு இருந்திருந்தால், மார்க்சியம், மார்க்சியவாதிகள், போலி மார்க்சியவாதிகள் இப்படி எல்லோரும் மார்க்சியத்தை, மார்க்சியவாதிகளை எந்த கோணத்தில் விமர்சிக்கிறார்கள் என்று கண்டறிந்து அக்குறைபாடுகளை நீக்கி, மார்க்சியத்தை மேலும் எப்படி மெருகேற்றுவது என்று சிந்தித்திருப்பார், விரைப்பு தன்மைகளுக்கும், அவதூறு அரசியல் பேச்சுகளுக்கும் நிதானம் காத்திருந்து சீர்திருத்தங்களை யோசித்திருப்பார் என்று மார்க்சியக் கோட்பாட்டை உணர்ந்தவர்கள் சொல்லி கேட்டிருக்கிறேன். சந்தர்ப்பவாத மார்க்சியம், சந்தர்ப்பவாத பெண்ணியம் பேசும் அறிவுஜீவிகள் மார்க்சியத்தின் பெயரால் முன் வைக்கும் பாலியல் அவதூறுகள், அதை தொடரும் குழு மோதல்கள், மக்களை மேலும் மார்க்சியத்திலிருந்து, பெண்ணியத்திலிருந்து அந்நியப் படுத்தும் என்பதாய் சிந்திக்க தவறிவிடுகின்றனர்.

மனிதனை தோழனாக்கியதே அவன் சமதர்மத்தை நம்பவேண்டுமென்பதால்தான், ஆனால் தோழனை தலைவனாக்கி, பின் உன்னதமாக்கி பீடமெழுப்பி கோயில் கட்டுவதென்பது, நாளை விமர்சனங்கள் எழுப்பும் போது, பீடங்கள் தகரும். அப்பீடங்களைத் தாங்கிப்பிடித்து அதற்கு தோள் கொடுக்கவே தத்துவத்திற்கும், அது சார்ந்த கட்சிக்கும், அமைப்புக்கும், தோழர்களுக்கும் முழு நேர வேலையாயிருக்குமே தவிர மக்கள் பணி செய்ய நேரமிருக்காது.

மக்கள் நலன் பேசும் இணைய தளம் நடத்துவதாக சொல்லும் நபர்கள், எழுத்தாளர்கள், பெண்ணியவாதிகள், அவர்களுக்கு துணை போகும் இயக்கங்கள் போன்றவை  விளம்பரங்கள், திரைப்படங்கள், ஊடகங்கள் பெண்களைக் கொண்டு செய்யும் பாலியல் சுரண்டல்களை விமர்சித்து, கண்டித்து எவ்வகையான எழுத்துக்களை, போராட்டங்களை நடத்தியிருக்கின்றன. குழந்தைகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கைக்குட்டை உடைகள் அணிந்து ஆபாச சினிமா வரிகளைப் பாடவைக்கப்படுவதை எதிர்த்து என்ன விதமான எதிர்ப்பை இந்த மக்கள் சிந்தனையாளர்கள்காட்டியிருக்கிறார்கள். Face Book Tagging’ மூலம் தனக்கு வேண்டியவர்களை அல்லது எதிராளிக்கு வேண்டாதவரை திரட்டும் முயற்சியை, ஊடகங்களை எதிர்த்து திரட்டினால் பெண்களையும், குழந்தைகளையும் முதலாளித்துவ சீரழிவிலிருந்து காக்க, இன்னும் ஏராளமான போராட்டங்களைச் செய்யலாம்.

 பத்திரிகைஎன்ற அதிகாரத்தை இவற்றிற்காக ஒருங்கிணைப்பதை விடுத்து வம்பு அரசியல் பேசி ஆட்சேர்க்கை செய்வது கலகக் குரல் என்று நம்பும் அளவுக்கு மக்கள் அறிவிலிகளாய் இருக்க வாய்ப்பில்லை.

பெண் என்ற உயிரியல் அடையாளத்தை பெற்றிருப்பதாலும், பெண் விடுதலையைச் சில சொல்லாடல்கள் மூலமாக பேசுவதாலும் மட்டுமே ஒருவர் பெண்ணியவாதி என்று தன்னை முன்னிறுத்திக் கொண்டு நிகழ்த்தும் சுயஅரசியல் கலந்த குழப்பவாதத்திலிருந்து பெண்ணியத்தை மீட்டெடுப்பதே இன்று பெண்ணியவாதிகளுக்கிருக்கும் மிகப் பெரிய சவால். அதோடு அப்படி முன்வைக்கப்படும் எல்லா பெண் எழுத்துக்களையும், பெண் என்கிற ஒரே காரணத்திற்காக ஆதரிக்கும், (அல்லது  எதிர்க்கும்) பெண்களிடமிருந்தும், ஆண்களிடமிருந்த்தும் பெண்ணியத்தை காப்பாற்ற வேண்டியிருக்கிறது. பெண்ணியத்திற்குள்ளேயே வகைகள் இருப்பதை பெண்ணிய ஆதரவாளர்கள் மனதில் கொண்டு, பெண்ணியம் பற்றிய சரியான புரிதலோடு செயல்படுகிறார்களா என்ற கேள்வியையும் எழுப்பவேண்டும்.

ஆண்களை முற்றிலுமாக மறுப்பதும், ஒரு பால் உறவு மேற்கொள்வதும் தான் பெண்ணியம் என்று சொல்லும் பெண்ணிய சிந்தனைகளையும் நாம் பார்க்க முடியும். அது ஒரு வகை. அப்படி அவர்கள் கருதும் உரிமை அவர்களுக்கிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. அதற்காக எல்லா பெண்ணியவாதிகளும் அதைத்தான் பேசுகிறார்கள் என்று கருதிவிட முடியாது. அப்படி அவர்களின் கருத்து தவறென்னும் பட்சத்தில் அதை விவாதங்களின் மூலம் உரையாடல்களின் மூலம் எது பெண்ணியமென்ற  உண்மையான தத்துவ தளத்தை அதற்கு ஏற்படுத்திக்கொடுக்கும். பெண்ணியத்தின் சொற்களைக்கொண்டே ஆணாதிக்கம் பெண்ணியத்தை இழிவுபடுத்தி எழுதுவதை கேள்விக்கு வைக்கலாம். 

எனது வாசிப்பை முன் வைத்து இங்கு பெண்ணியம் பற்றிய பொதுப் புரிதலாய் இருப்பது ஐரோப்பிய பெண்ணியம். மார்க்சியம் எப்படி தேசங்களின் பண்பாடு, வரலாறு, பொருளாதாரமுறை, மற்றும் அதன் வகைமாதிரிகளைக் கணக்கிலெடுத்துக்கொண்டு தனது தத்துவத்தை களத்தை, அமைப்பை, போராட்டத்தைத் தகவமைத்துக் கொள்கிறதோ அதே போல் பெண்ணியத்திற்கும் அதற்கான கூறுகள் உண்டென்றே எண்ணுகிறேன். உலக அளவில் எங்கும் காணக்கிடைக்காத சாதி என்ற ஒன்று இந்தியாவில் மட்டும் ஆளும் கருத்தியலாய் மாறிய நிலையில் இருப்பதையும் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இப்படி இந்தியாவிற்கு என்று உள்ள சில தனித்த வரலாறுகளுடனயே நாம் பெண்ணியத்தை நமது பெண்ணியத்தை, இந்தியப் பெண்ணியத்தைப் பேசவேண்டும், அதற்கான அமைப்பை ஏற்படுத்துவது, அமைப்புக்கான தத்துவக் குறிப்பையோ, ஒரு முன்வரைவையோ பெண்ணியவாதிகள் கூடி இயற்ற வேண்டும். இதுவே பெண்ணியத்திற்கான சரியான போராட்ட வடிவமாய் இருக்கும். அதைவிடுத்து எதிரணியில் இருப்பவர் ஆண், தனிப்பட்ட முறையில் எனக்கு பிடிக்காதவர், எனக்கு வேண்டியவருக்கு பிடிக்காதவர் என்ற காரணங்களைக் கொண்டு பெண்ணிய நோக்கை முன் வைப்பதும், கருத்துக்கு எதிர்வினை ஆற்றினால் ஆணாதிக்கம் என்று கூறுவதும் எப்படி அறிவு நிறைந்த அணுகுமுறையாகும்.

உண்மையிலேயே நாம் பேசுவது பெண்ணியம், நாம் முன் வைப்பது மக்களுக்கு பயனளிக்க கூடிய சிந்தனைகள், மக்கள் முன்னேற்றத்திற்கான வழிகாட்டுதல்கள் என்று நம்பவது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் ஒரு செயலாகிவிடும் என்று நம் பெண்களும், தோழர்களும் சிந்திக்க வேண்டும். நம்மை ஏமாற்றிக் கொள்வதோடு மட்டுமல்லாமல் நம்மை நம்பி இருக்கும் மக்களை தேவையற்ற விஷயங்களைப் பேசி நேரத்தை வீணடிப்பது, தவறான விமர்சன முறைகளுக்கு வழி காட்டுவது, மார்க்சியம், பெண்ணியம் இவற்றை குறித்த ஒரு வெறுப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 

குறைந்த பட்சம்  எதற்காக பொது களத்தில் இயங்கத் துவங்குகிறோம், மக்கள் பணியாற்றுகிறோம், பெண் விடுதலை பேசுகிறோம், எந்த சித்தாந்தங்களை தார்மீகமாக கொண்டுள்ளோம், அது வழிமொழியும் அற நிலைப்பாட்டை சார்பற்று, விருப்பு வெறுப்பற்று, தனி மனித விரோதமற்று ஒரே விதமான விமர்சன போக்கைத்தான் கையாள்கிறோமா என்கிற சுயவிமர்சனம் நமக்கு உதவும். 

இவற்றோடு, தோழர்கள் வழிகாட்டியாக ஏற்றூக்கொண்ட கார்ல் மார்க்ஸ், சே, பெரியார், அம்பேத்கர், புத்தர், அயோத்திதாச பண்டிதர் இவர்களில் எவராவது பொது தளங்களில், (தனிப்பட்ட முறையில் கூட) எதிர் கருத்துடையோரை, பொது அகராதிப்படி கெட்டவன் என்று கருதக்கூடியவரை எங்காவது தரம் தாழ்ந்த வார்த்தைகளை, மொழிகளை வைத்து, தனிப்பட்ட பாலியல் தொடர்பு விமர்சனக் கருத்துக்களை வசை மொழிகளுடன் பேசியிருக்கிறார்களா, அவர்களுடைய காலத்தில் அப்படி சிந்தனை குறைபாடுடையோர் எவரும் இருந்திருக்கவில்லையா. பாலியல் குறித்த விவாதத்தை  காந்தி மிகுந்த கண்ணியமான முறையில் தொடங்கிவைத்தார். பாலியலை காந்தி எவ்வாறு அணுகுகிறார், அதில் அவரோடு சம்பந்தப்பட்ட பெண்கள் எவ்விதமான புரிதலோடு காமத்தைப் பார்க்கிறார்கள்,அதற்கான அவசியம் என்ன  என்று விவாதத்தை நடத்துவதை விட்டு விட்டு, மகாத்மா என்ற பெயரை சூடிக்கொண்டு, கிழவன் பேத்தியோடு படுத்துக்கிடந்தான் என்று சொல்வதற்குச் சமம்.

மேலே குறிப்பிட்டிருக்கும் தலைவர்களின் நோக்கத்தின் அடித்தளமாக தெரிவது சுயமரியாதையை மக்களிடத்தில் விதைப்பது, அதனுடன் கூடிய சுதந்திர சிந்தனை, ஏற்றத்தாழ்வற்ற மனித வாழ்வு இவைதானே. பெண்ணியத்தின் தோழனாய் பெரியாரைக் கருதுவோர், முதலில் நம்பவேண்டியது சுயமரியாதையை, அது அடுத்தவருக்கும் உண்டு என்கிற அடிப்படை மனித உரிமையை மதித்தல் ஆகியவை.  நம் எழுத்தாள தோழர்களில் சிலர் அவ்வாறு நடந்துக் கொள்வதில்லை  என்பதை அவர்கள் எழுத்தில், வாழ்க்கையில் காணமுடிகிறது.

ஒருவர் ஏமாற்றுக்காரர் என்பது எதிர் தரப்பின் அனுமான  வாதம் என்று இருக்கும் நிலையில், (hypothetical argument) அல்லது எப்படிப்பட்ட ஏமாற்று வேலைகளை செய்பவராய் இருப்பினும் சரி அவருக்கான சுயமரியாதையை மதித்து, அவர் மீது விமர்சனங்களை வைப்பதே தகுந்த நெறியாக இருக்கும்.

பொய் வழக்குப் போட்டு Dr. பினாயக் சென்னை சிறையில் அடைத்திருக்கும் ஒடுக்குமுறை அதிகாரத்தை கையிலெடுத்தவர்கள் மீது கூட கோபாவேசத்துடன் கொச்சையான வார்த்தைகளை பினாய்க் சென்னுக்காக வாதாடுபவர்கள் வைத்து நான் காணவில்லை. தண்டகாரண்யத்தில் ஒடுக்கப்படும் பழங்குடியினர் மக்களோ, ஆதரவளிக்கும் மாவோயிஸ்டுகளோ, அவர்களை வழிநடத்தும் தலைவர்களோ மக்களைக் காப்பாற்றுவதே எங்கள் பணி என்று சொல்லி அரசவையில் அமந்திருக்கும் அதிகாரமைய்ய ஒடுக்குமுறையாளர்களைப் பற்றி மக்களை ஏமாற்றிய பொறுக்கிகளேஎன்றா எழுதிக்கொண்டிருக்கிறார்கள்? (அதிகார மையத்தில் இருக்கும் ஒருவரை புரட்சி பேசி தூற்றும் அவதூறு எழுத்தாளர்கள், வசைமொழிகளை வைத்தால் என்ன வினைகள் நேரும் என்று அறிந்து பின்வாங்குகிறார்கள் என்று சொல்வதா.  பாலியல் அத்துமீறல் செய்த பாதிரியாரைப் பற்றியும், கிறித்தவ கான்வெண்ட்டில் நடக்கும் பாலியல் செயல்பாடுகள் குறித்தும் சிஸ்டர் ஜெஸ்மி எழுதிய ஆமென்எனும் புத்தகத்தில் கூட பொம்பள பொறுக்கி பாதிரியார், வேசை கன்னியாஸ்திரிஎன்று சம்பந்தபட்டவர்களை, கிறித்தவமே ஒட்டுமொத்த மானுட விடுதலை என்று மதத்தை நம்பும் சிஸ்டர் ஜெஸ்மி கூட அநாகரீகமான வசைச் சொற்களால்  எழுதவில்லை).

மார்க்சிய தத்துவவியலாளர்கள், அறிஞர்கள், விமர்சகர்கள் ஆகியோரின் எழுத்துக்கள், விமர்சனங்கள் எத்தகைய தரத்தில் இருக்கிறது. அவர்களின் மறைவுக்குப் பின் வரலாற்றில் அவர்களுக்கும், அவர்களின் மொழிக்கும், கருத்துக்களுக்கும் எத்தகைய இடத்தையும், மதிப்பையும் மக்கள் கொடுத்திருக்கிறார்கள் என்று சற்று நிதானத்துடன் வசைகளை எழுதும் தோழர்கள் சிந்திப்பது பயன் தரும்.

இன்றைய பரபரப்புக்கும், காழ்ப்புணர்ச்சிக்கும் உணர்ச்சி மிகுந்து கொட்டும் வார்த்தைகளையா எதிர்காலத்திற்காக நாம் விட்டுச் செல்லப்போகிறோம். பாலியல் அவதூறுகளும் வாய்க்கு வந்த வார்த்தைகளால் பதிவு செய்வதுதான் மக்களுக்கு நாம் ஆற்ற நினைத்த பணியா.  எதிர்கால சந்ததிக்கு நாம் எத்தகைய வழிகாட்டியாய் இருக்கப்போகிறோம் என்பதை கவனத்தில் கொண்டு எழுதுவது முக்கியம் என்று கருதுகிறேன்.

நமக்கு பிடிக்காதவர் வரலாற்றிலிருந்து நீக்கப்படவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு பாலியல் விமர்சனங்களை, அவதூறுகளை வைத்து அவரை எப்படி துடைத்தெறிவது என்ற நோக்கோடு மார்க்சியத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் பாலியல் சொற்களால் வசைகளை வைப்பது மிகுந்த வருத்தத்தைத் தருகிறது.  ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடாமல், மக்கள் பணியில் அவரது செயல்பாடுகள், அவர் எழுத்துக்கள் முன் வைக்கும் தவறான கருத்துக்கள் அல்லது தகவல்கள் இவற்றை அந்த எழுத்தை மட்டும் மேற்கோளாக காட்டி விமர்சிப்பதுதானே முறை, அம்முறையை பின்பற்றி சுயமரியாதையை காப்பதுவே முதன்மை அறம்.

இறுதியாக என் கண் முன்னே விரிவது, எவ்வகை சித்தாந்தங்களைக் கொண்டவராயினும் தனி நபர் வெறுப்பு என்று வந்துவிட்டால் தங்கள் தார்மீக அறங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு அநாகரீகமான விமர்சனங்களை எழுதும் மன நிலையைப் பார்க்கும் பொழுது மார்க்சியமும் அவர்களைக் கைவிட்டு விட்டது என்பதே. நாளை வரலாறும் அவர்களை கைவிடும்.

அவதூறுகள் வரலாற்றில் நிலைத்திருப்பதில்லை. அவதூறுகளுக்காக வரலாறு காத்திருப்பதில்லை. சுயநல காரணிகளோடு செயல்படும், அல்லது எதிர் கருத்து எழுதிவிட்டார் என்ற சகிப்புத் தன்மையற்ற காரணங்களால் வைக்கப்படும் வசைகள் கற்பனாவாத கருத்துமுதல்வாதமாகும், அது மார்க்சியத்தில் அடங்குவதில்லை.