Sep 7, 2020

இந்த கம்யூனிஸ்டுங்க இன்னா பேசுறாங்கன்னே பிரில… மே!

 


ஆ.. ஊன்னா இந்த கம்யூனிஸ்டுங்க ‘இயக்கவியல் பொருள்முதல்வாதம்’னு பேசி மக்களை பயமுறுத்துறோமாம்! உழைக்கும் மக்களுக்குப் புரியுற மொழில பேசுறதில்லையாம்! பேசாம தான் இத்தனை புரட்சியும், இத்தனை உரிமைப் போராட்டங்களும், வெற்றியும் கிடைச்சுதா?

இதோ பாரு கொமாரு – புரியினும்னு நினைக்கிறவனுக்கு புரியுறதும்… புரிய வேணாம்னு நினைக்கிறவனுக்குப் புரியாமப் போறதும்… அரசியல்ல ரொம்ப சாதாரணமப்பா..

சரி! இயக்கவியல் பொருள்முதல்வாதம்னா இன்னா?

பொருள்ங்குறது சும்மா நிக்காது.. இயங்கிக்கிட்டே இருக்கு? இது பிரியுதா இல்லையா?

அதாவது – பொருள்னா என்ன – அது இருக்குதுன்னு சொல்லக்கூடிய தன்மைல - “உயிர்”னு வச்சுப்போம் இருக்கிற ஒண்ணு! அது சும்மா துண்டு துண்டு தூங்காம எப்பப் பார்த்தாலும் வேலை செஞ்சிக்கினே கீது!

அப்படி வேலை செய்றப்போ… அதாவது சுத்திக்கினே கீறப்போ, அசைஞ்சுக்கின்னே கீறப்போ – அதுக்குள்ள ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், சண்டை, “சேஞ்சு” எல்லாம் நடக்கும் – அதேமாதிரி வெளிலருந்து ஏதோ ஒண்ணு அதுகூட கலக்குறதும், அதனால அதுக்குள்ள லவ்வோ – ஜவ்வோ வரும்… அப்ப அந்த பொருளு தன்னோட “மாடலை” வுட்டுட்டு இன்னொரு “மாடலா” மாற வேண்டிய நிலைமை வரும்… ரூட்டு கிளியரா இருந்துச்சுன்னா சேர்ந்து இருக்கிறதும்… முட்டிக்கினா… புட்டுக்குறதுமா போயி… அதுலருந்து இன்னொரு டிசைன் உருவாகும்…

 மனுஷப்பய சமூகமும் அப்படித்தான் உருளுதுன்னு சொல்றதுதான் இயக்கவியல் பொருள்முதல்வாதம்!

 அதாவது கண்ணா! மனுஷப்பய அவனுக்குத் தேவையான “வேலைல” ஈடுபடுறான்ல… இதுல உனக்கு டவுட்டு கீதா… வேலை செஞ்சாதானப்பா வவுத்துக்கு சோறு.. தூங்க வூடு.. போட்டுக்க துணி இப்படில்லாம் தயார் பண்ண முடியும்.. (வேலைன்னா – உழைப்புன்னு சொல்லப்படுற அர்த்ததுல இல்ல.. சும்மா இல்லாம இயங்குனாதான் வாய்ல தோசை… அந்த மாதிரி)

 அப்படி எல்லாம் சேர்ந்து பொருள் தயாரிக்கிறப்ப… கூட்டாஞ் சோறுகிண்டைலன்னு வச்சுக்குவோம்- இது…. “இப்படி இருக்குது”, அது “அப்படி இருக்கிதுன்னு” பட்டி டிங்கரிங் பார்த்துட்டே இருப்பானுங்க… மனுஷப்பயலும் இயற்கைல ஒரு பொருள் தான அவனோட சிந்தனையும், இயக்குமும் கூட மத்த பொருள்மாதிரிதான் இருக்குன்னு மார்க்ஸ் எங்கல்ஸு லைட்டு அடிச்சு காட்டுனாங்க (அதுக்கு முன்னாடி ஹெகல்லாம் சொல்லிருந்தாலும் அதை சோக்கா சைன்ஸா நெத்தில அடிச்சா மாதிரி சொன்னாங்க)..

 இப்ப இந்த மனுஷப்பயலுக பட்டி டிங்கரிங் பார்க்குறதைத்தான் – ஒழுங்கமைச்சுக்கிறதைத்தான்– நாம சமூகம், பண்பாடு, அரசியல், அரசு, சட்டம் திட்டம்ன்னு சொல்றோம். ஆனா இதுக்கெல்லாம் பேஸ்மெண்ட் இன்னாது – அவனவன் வாழுறதுக்கு தேவைப்படுற “ஐடம்”களை தயாரிக்கிற அந்த வேலை… அந்த தேவை.. மனுஷனோட பொருள் தேவை தான் பஞ்சாயத்து தலைவரு/தலைவி!

 அப்ப அவனுங்க இன்னா பண்றானுங்கன்னா வேலைய சுளுவா முடிக்க… எதையாச்சும் கண்டுபுடிச்சிக்கினே இருக்கானுங்க… இருக்காளுங்க… அது இன்னா பண்ணுது வேலை செய்ற “மெதட்ட” சுளூவா ஆக்கி… கம்மியா வேலை செஞ்சாலும் முன்னாடி விட அதிகமா பொருள் கொடுக்குது… அப்புறம் வேற வேற தேவைக்காக ஒரு பய இன்னொரு பயனோட வூட்டாண்ட போயி சண்டை வலிக்க வேண்டியிருந்துச்சு…

 சண்டை வலிச்சு ஜெயிச்சவன் தோத்தவனை அடிமைப் படுத்துறான்… அவனை வச்சு வேலை வாங்குறான்… தேவைக்கு அதிகமா “டூல்ஸ்”னாலையும்… அடிமைங்க “உழைப்புனாலையும்” பொருள் கிடைக்குது… அதைத்தானய்யா உபரின்னு சொல்றோம்… அப்ப சொத்துன்னு ஒரு பூதம் மண்ணுக்குள்ளருந்து பூன்னு வந்துச்சு பாருங்க… அப்ப புடிச்சுது மனுஷ சமூகத்துக்கு சனியன்…

அதுவரைக்கும் ஒண்ணா வேலை செஞ்சு ஒண்ணா பிரிச்சு துண்ண மனுஷங்கள்ள கொஞ்சம் பேரு… உழைக்காம வாழுற ருசி கண்ட பூனைங்களா மாறுனாங்க..

 நான் ஆம்பளை.. நீ பொம்பள! நான் மேல நீ கீழ! நான் உசத்தி… நீ மட்டம்னு” ஒண்ணொன்னா அவுத்துவுட்டானுங்க…

 இங்க ஆரம்பிச்சுதுய்யா டிஷ்யூம் டிஷ்யூம் – அதைத்தேன் முரண்பாடுன்னு சொல்றோம்! பொருளுக்குள்ள இருக்கிற இயக்கவியலை இங்க கொண்டு வந்து உக்காரவச்சாங்க மார்க்ஸும் – எங்கல்ஸும்!

 அந்த காலத்துலருந்து இன்னைக்கு வரைக்கும் என்ன நடந்துச்சுன்னு “லிஸ்டு” போட்டு சொல்றாகல்ல அதைத்தேன் வரலாற்றுப் பொருள்முதல்வாதம் – வரலாற்று வளர்ச்சின்னு சொல்றோம்!

இப்ப விளங்குதாங்க!

 நியாயமா இருந்த ஒரு சமூகம் – வேலை – மனுஷப்பய உறவு இதெல்லாம் அநியாயமா மாறுச்சு… எதனால? ஒரு கூட்டம் பொருள் தயாரிக்கத் தேவையான “சாமானையெல்லாம்” தன்னோட கட்டுப்பாட்டுல வச்சுக்கினு மத்தவனை உழைக்க வச்சு பிழைச்சானுங்க… உழைப்பாளிங்களுக்கு அப்பல்லாம் கூலி கிடையாது… உயிரோட இருக்க கொஞ்சூண்டு கஞ்சி ஊத்துவானுங்க… இது ஆண்டான் அடிமை சமூகம்… அப்புறம் டிஷ்யூம் டிஷ்யூம் போட்டு மனுஷன் அடுத்த சமூகமா முன்னேறுனான்… அது நிலப்பிரபுத்துவ சமூகம்… பண்ணையார் விவசாயக் கூலி சமூகனு சிம்பிளா சொல்லிக்கலாம்!

 டிஷ்யூம் டிஷ்யூம் நடக்குறதை யாரும் தடுக்க முடியாது.. ஏன்னா முரண்பாடு இருந்தா மோதல் இருக்கத்தேன் செய்யுங்குது மார்க்சியம்… (ஜெய் இயக்கவியல் பொருள்முதல்வாதம்)

 இப்ப பண்ணையாருங்க அட்டகாசம் பண்ண பண்ண மக்களுக்கு கோவம் வருது… முரண்பாடு முத்துனதும்.. அடுத்த சமூகமா முதலாளித்துவ சமூகம் வருது… டிஷ்யூம் டிஷ்யூம் நடக்குறது ஒருபக்கம்னா… மனுஷன் தன்னோட தேவைக்காக – அதான் வேலைய சுளுவா முடிக்கிறதுக்காக ‘டூல்ஸ்.. மெஷினு” இதெல்லாம் வேற கண்டுபுடிச்சிக்கினே கீறான்ல… அது இன்னா பண்ணுதுன்னா – பொருள் தயாரிக்கிற “மாடலை” மாத்திக்கினே கீது! அது மாற மாற மனுஷப்பய உறவும் மாறுது… பண்பாடு மாறுது… அரசமைப்பு மாறுது எல்லாம் மாறுது… ஆனா எல்லாம் இட்லி… தோசைன்னு டிசைன்ல மாறுச்சே தவிர “மாவு என்னமோ ஒண்ணுதேன் தம்பி”ங்குற கதையா இருக்குது… இதையும் நம்ம மார்க்ஸப்பா சோக்கா சொல்றாருமே…

 அடுத்து இன்னா சொல்றாருன்னா ”இப்படியே ஒரு மனுஷன் இன்னொரு மனுஷனையும், இயற்கையையும் சுரண்டிக்கினு இருந்தா ரொம்ப நாள் தாங்காது” மறுபடியும் டிஷ்யூம் டிஷ்யூம் வரும்… ஏன்னா வேலை செஞ்சே சாவ வேண்டிய நிலைமைல இருக்கிற மனுஷனுக்கு வாழவே வழியில்லாம போகும்.. அதுக்கும் மேல மனுஷன்னா கொஞ்சம் மான ரோஷமும் இருக்கும்ல… அவங்க “உங்களை சும்மா வுட மாட்டாங்கடா பேமானிங்களா”ங்குறாரு…

 அதாவது மறுபடியும் முரண்பாடு முத்தி நீ அவங்ககிட்ட இருந்து புடுங்கின எல்லாத்தையும் மறுபடியும் அவங்க உன்கிட்டருந்து புடுங்குவாங்கடா… ஆமாம் புடுங்குவானுங்கடா! #சொத்து_வேணாம்_போடா #சுரண்டல்_வேணாம்_போடா

 இதுவரைக்கும் கிடைச்ச அனுபவத்துலருந்து சூடு பட்டதால நியாயமா எல்லாத்தையும் பொதுவுல வச்சா எல்லாரும் சோக்கா வாழலாம்னு ஒரு நிலைமைதான் வரும்னு சும்மா நச்சுன்னு சொல்லிவச்சிருக்காரு…

இன்னா இது புரியுற மாதிரி கீதா?

 நீயும் நானும் நல்லாருக்கனும்னு ரெண்டு பேரு சேர்ந்து இராப்பகலா படிச்சு, அங்க இங்கன்னு துரத்துனப்பவும் இதுக்கு முன்னாடி யார் இன்னா இன்னா சொன்னாங்க… இதுவரைக்கும் இன்னா நடந்துச்சு… இந்த மனுஷப்பய பொழைப்பு ஏன் இப்படி இருக்கு? எதைத் தின்னா பித்தம் தீரும்னு… ஓயாம ஆராய்ச்சி பண்ணி “இதுதான் பிரச்சினை… இதுக்கு இது இது காரணம்… இத இப்படி மாத்திக்கோ… நல்லாருப்பன்னு” சொல்றாங்க…

 அதை எந்த “மெதட்ல” ஆராய்ச்சி பண்ணாங்கன்னு தான்யா அந்த ரெண்டு ”டேர்ம்ஸ” திரும்ப திரும்ப சொல்றோம்! அதுவும் எதுக்கு எல்லாம் கடவுளோட “மிராக்கிள்”னு புருடா உட்டுக்குனு திரியுறானுங்களே முட்டாப் பசங்க அவனுங்களுக்கு எதிரா “டேய் இது சைன்ஸ்டா மாங்கா”ன்னு சொல்றதுக்குதேன்..

 மத்தபடி நம்ம மொழி என்னைக்கும் உழைக்கும் மக்கள் மொழிதேன்! அது அவுகளுக்கு புரிஞ்சுதேன் கம்யூனிஸ்டுங்க கூட லவ்வாகுறாங்க.. அது பொறுக்காத “வில்லனுங்க” இன்னா பண்றாங்க “மூட்டி வுடுறாங்க”…

 நீ இன்னாதான் கொளுத்திப் போட்டாலும்… சும்மா ஊதி அணைப்போம்ல! ஏன்னா நம்மகிட்ட சவுண்டா தத்துவம் கீது தம்பி!

பி.கு: இந்த மொழிப் பயன்பாடு எள்ளல் கண்ணோட்டத்தோடு பயன்படுத்தப்படவில்லை… இம்மொழி பாணி எனக்கு மிகவும் பிடித்த மொழி… பாமர மொழி என்னும் காதலுடன்….

 உழைக்கும் வர்க்க ஒற்றுமை வாழ்க! புரட்சி ஓங்குக!

 

No comments:

Post a Comment