ஒருமுறை என்னிடம் ஓர் இயக்குனர் கேட்டார்
“எல்லாமே வர்க்கம்னு சொல்றீங்களே ஒரு வீட்ல - அதையும் தாழ்த்தப்பட்ட சாதின்னே
வச்சுப்போம் - அண்ணன் ஐ.டி. கம்பெனில வேலை செய்றார், தம்பி
மூட்டைத் தூக்கும் வேலை செய்றார். இவங்க எந்த வர்க்கம்னு எப்படி சொல்ல முடியும்?
என்ன வர்க்க உணர்வு இருக்கும்? அதுவுமில்லாம
சாதி அடிப்படையில படிச்சவனுக்கும் இங்க ஒரே நிலைமைதான… அப்ப சாதிதான எல்லாம்”
பதில்: “இரண்டு பேருமே உழைக்கும் வர்க்கம் தான்.
இருவரிடமும் தம் பிழைப்பிற்குத் தேவையான உற்பத்திச் சாதனங்கள்
இல்லை. தம் பிழைப்பிற்காக இருவருமே முதலாளியைத்தான் சார்ந்திருக்கிறார்கள்.
இங்கே மூட்டைத் தூக்குபவரை மட்டுமே
”கூலி” என்பார்கள், ஆனால் சம்பளம் வாங்கிப் பிழைக்கும் அனைவருமே “கூலிகள்” தான். இருவரில் ஒருவர் மூளை உழைப்பாளி,
இன்னொருவர் உடல் உழைப்பாளி!
இருவருக்கும் வர்க்க உணர்வு தானாக வந்துவிடாது. அவர்களுக்குக்
கிடைக்கும் அரசியல் வெளிச்சம் பொறுத்துதான் அது அமையும். ஆனால் உடல் உழைப்பாளிக்கு
தன் மீதான உழைப்புச் சுரண்டல் எளிதாக விளங்கிவிடும். மூளை உழைப்பாளிக்குத் தாமதம்
ஆகலாம் அல்லது மாறியும் அமையலாம். வர்க்க ரீதியாக ஒருவர் உடல் உழைப்பாளி - ஏழை, இன்னொருவர் நடுத்தர வர்க்கமாக அமையலாம். ஆனால் இருவருக்குள்ளும் உழைக்கும்
வர்க்க உணர்வைத் தட்டி எழுப்புவதுதான் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு
முன்நிபந்தனை. அதற்குத்தான் கம்யூனிஸ்ட் கட்சி! வர்க்க
ஒற்றுமை நேராமல் தடுக்கவே இங்கே இத்தனை பிரிவினைவாதப் போக்குகள் நிலவுகின்றன. கம்யூனிஸ்ட்
கட்சிகளை உடைக்கும் முயற்சிகளும்!
”படித்தும் சாதி மாறவில்லை! எங்களை
சமமாகக் கருதவில்லை” உண்மைதான்! ஏனென்றால் சாதி
என்பது பண்பாட்டளவில் ஆதிக்கம் செலுத்துகிறது. வர்க்கப் படிநிலை அமைப்பிற்குத்
தேவையான படிநிலைக்கு அது பார்ப்பனியம் என்னும் மதக்கொள்கை கொண்டு ஒரு சட்ட
வடிவத்தையும், அங்கீகாரத்தையும் கொடுத்திருக்கிறது. அத்தகைய
சமூகத்தில் உண்டாகும் கூட்டுச் சமூக உணர்வை புதியதோர்
சமூக அமைப்புக் கொண்டு மெல்ல மெல்லதான் மாற்ற
இயலும். புதிய பண்பாட்டை அப்போதுதான் நிறுவ இயலும். அந்த
பண்பாட்டமைப்பில் கல்வியும் தொடர் பிரச்சாரங்களும், சமத்துவமான
உழைப்புசார் உறவுகளும் நிலவும். அப்போதுதான் முழுமையான மாற்றம் ஏற்படும். எதுவும் தனித்ததில்லை என்பதை இதிலிருந்தே நீங்கள் விளங்கிக் கொள்ளலாம்.
பொருளாயத அடிப்படையில் போட்டிப்
பொருளாதார அமைப்பு உழைப்பாளர்களுக்குள் போட்டியைத் தக்கவைக்க பல்வேறு
அடையாளங்களைப் பயன்படுத்திக் கொள்கிறது. இரண்டு சாதிகளுக்குள் இந்த போட்டி
நிலவுவது போல், வெறுப்பு நிலவுவது போல் ஆண் பெண்
உழைப்பாளர்களிடமும் அதே மனநிலை நிலவுகிறது. பெண்களால் தான் தங்கள் வேலை வாய்ப்பு
போகிறது என்று கருதும் ஆண்கள் பெண்கள் வேலைக்குப் போவதை விரும்புவதில்லை. அதேபோல்
சாதிரீதியாக இடஒதுக்கீடுதான் தாழ்த்தப்படடவர்களுக்கு வாய்ப்பு வழங்குகிறது என்னும்
தவறான புரிதலை பொருளாதார நிலைமையில் ஏற்படுத்தி வைத்திருக்கிறது. இந்த இரண்டும்
அதாவது – சாதியப் படிநிலை மற்றும் வர்க்க முரண்பாடு
இரண்டும் தான் அந்த தீண்டாமையைக் காக்கிறது. இந்து
முஸ்லிம் வெறுப்பும் அதுபோலவே, வெள்ளை இன கறுப்பின வெறுப்பு
அது போலவே, மொழிரீதியான பகைமையும் அது போன்றதே.
அதனால்தான் மீண்டும் மீண்டும் சொல்கிறோம்
சாதியை – எந்த ஒரு முரண்பாட்டையும் - தனியாக ஒழிக்கவே இயலாது. அதனைத் தாங்கிப் பிடிக்கும் அடிக்கட்டுமானமான தனியுடைமை அடிப்படையிலான உற்பத்தி
முறையை மாற்றி சொத்துறவுகளை ஒழித்து சமத்துவமான உழைப்புப் பிரிவினையை நிறுவ
வேண்டும். உழைப்புச் சுரண்டலை ஒழிக்க வேண்டும்.
அதற்கு வர்க்கப்
போராட்டமே தேவை. வர்க்கமாக
ஒருங்கிணைக்க சாதியை முதலில் ஒழியுங்கள் என்றால் அதை ஒழிக்கவே வர்க்கமாக
ஒன்றிணையச் சொல்கிறோம். நமக்குள் இருக்கும் முரண்பாடுகளை கூர்தீட்டும் ஆயுதம்
“மூலதனம்”! அது தீட்டும் அடையாளங்களைக் கைவிட நாம் தானே முயற்சி செய்ய வேண்டும்? அதைவிடுத்து அரசியல் ரீதியாக, உழைப்பு
ரீதியாக, வர்க்க ரீதியாக மேலெழுந்திருக்கும் சிலர் அந்த
அடையாளங்களை உயர்த்திப் பிடித்து, இது சாத்தியமில்லை.. அது
சாத்தியமில்லை என்று பிரச்சாரம் செய்வதன் நோக்கம் என்ன? ஒரு
சிலருக்கு அது அறியாமை! ஆனால் அவர்களை வழிநடத்தும் தலைமைகள் அதைத் தெரிந்தே
செய்கின்றனர்!
சமூக மட்டத்தில், சாதி மற்றும் இதர அடையாளங்கள் வர்க்க ஒற்றுமைக்கு எதிராக
இருப்பது எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு ஒடுக்கப்பட்டோருக்காக இயங்குவதாக
சொல்லிக் கொள்ளும் சில - கட்சிகள் / கலைஞர்கள் /
அமைப்புகள் / எழுத்தாளர்கள் அவர்களின் ஜால்ராக் கூட்டங்கள் – என அனைவருக்கும்
முக்கியப் பங்குண்டு. இதுவும் ஒரு குறிப்பிட்ட வர்க்க நலனிருந்து நிகழும் புற
யதார்த்தம். அதையும் முறியடிக்கும் வழிமுறையை மார்க்சியம் வழங்குகிறது.
No comments:
Post a Comment