Mar 7, 2019

2. குடும்பத்தில் உழைக்கும் மகளிரின் நிலைமைகள்




உழைக்கும் மகளிர் வெளி வேலை செய்வதால் மட்டுமின்றி பெண்ணாய் இருப்பதாலும், ஆணைச் சார்ந்து வாழ வேண்டியிருப்பதாலும் கூடத் துன்புறுகிறாள்.

ஒரு விவசாயக் குடும்ப சிறுமி இளம் வயதிலிருந்தே தன் குடும்பத்தின் உழைப்பாளராகிறார். பெற்றோர் அவளை தங்கள் குடும்பத்தின் சொத்தாகவே காண்கின்றனர். பகல் இரவாக வேலை செய்வித்து, வெளி வேளைக்கும் அனுப்பி வருமானம் ஈட்டி, அதைத் தாங்களே எடுத்துக்கொள்ளலாம் என்று அவர்கள் கணக்குப் போடுகின்றனர். ஒரு விவசாயப் பெண்ணை ஒரு தந்தை எப்படி தன் உடைமையாகப் பார்க்கிறார் என்பதை ஓர் உதாரணம் கொண்டு பார்ப்போம். கடன் வாங்கியிருக்கும் தந்தை தனது கடன்களை முழுக்க அடைக்கும் வரை அவனுடைய மகள் திருமணம் செய்து கொள்ள  கிராம சமூகம் தடை விதிக்கிறது. இதுபோன்ற சூழலில், அப்பெண் கடனுக்குப் பிணையாகக் கருதக்கூடிய ஒரு சொத்தாகவே பார்க்கப்படுகிறாள் என்பது தெளிவு. பெரும்பாலும் ஒரு பெண், யார் என்றே தெரியாத ஒரு நபருக்கே திருமணம் செய்து கொடுக்கப்படுகிறாள். அவளுக்கு எத்தகைய துன்பம் காத்திருக்கிறது என்பதை திருமணத்திற்கு முந்தைய நாள் நடக்கும் கேளிக்கை விருந்தும், புலம்பல் சடங்குகளும் நமக்கு உணர்த்துகின்றன. உடல் ஆரோக்கியம், எப்படி வேலை செய்கிறாள், எவ்வளவு பலமானவள், சுறுசுறுப்பானவள், கடினமானவள் என்பதையெல்லாம் பொறுத்தே ஒரு பெண் மணப்பெண்ணாகும் தகுதி பெறுகிறாள். திருமணத்திற்குப் பின் ஒரு பெண் தன் பிறந்த வீட்டை விட்டு கணவன் வீட்டிற்குச் செல்கிறாள். அங்கும் அவள் முன்பைப் போலவே ஓய்வின்றி உழைக்கிறாள், சார்ந்து வாழும் நிலையிலேயே இருக்கிறாள். ஆணும் பெண்ணும் அன்பால் இணைந்து மகிழ்ச்சியாக வாழ்வது நடந்தாலும், ‘கணவனின் போதனைகளிலிருந்துமனைவியைக் காக்க யாருமில்லை. அடி உதை வாங்காத விவசாயப் பெண்களே இல்லை. அடி வாங்கி வாங்கி, அது வழக்கமான ஒன்றாகிவிடுகிறது. தாங்கவொண்ணாத கொடுமையாக இருந்தாலொழிய அவள் அதை எதிர்ப்பதில்லை. ஆனால் அப்போதும் ஒரு பெண் தன் கணவனை விட்டு பிரிந்து செல்ல உரிமையில்லை. அவளுக்கெனத் தனியான கடவுச்சீட்டை வைத்துக்கொள்ளக் கூட கணவன் அனுமதிப்பதில்லை. அவள் எங்கு சென்றாலும், பிடித்து வரச்செய்து தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அதிகாரம் கொண்டவனாக கணவன் இருக்கிறான்.

பெண்களின் இத்தகையதொரு சார்பு நிலையை எப்படி விளக்குவது? என்னென்ன வேலைகள் செய்ய வேண்டும் என்பதை ஒரு எஜமானர் போல் கணவன் ஆணையிட, அதை நிறைவேற்றுவது மட்டுமே பெண்ணின் கடமை. எப்போது உழவேண்டும், விதைக்க வேண்டும், ஒரு வேலையை எடுப்பதா வேண்டாமா என்பதையெல்லாம் ஒரு ஆண் தான் முடிவெடுக்கிறான். ஆண் மற்றுமே சம்பாதிப்பதால் அவன் தான் வரி கட்டுகிறான். அதேபோல் தானியம் மற்றும் கால்நடைகளை விற்பதும் அவனது பொறுப்பில் உள்ளது. ஒரு வேலையின் அனைத்து நுட்பமான அம்சங்களையும் மேற்பார்வையிடுவது ஆணின் பொறுப்பு. ஒரு ஆணே குடும்பத்தையும் நிர்வகிக்கிறான், அதேபோல் நிலம் மற்றும் வரி விதிப்புகள் பற்றிய பொது விவகாரங்கள் பற்றிய விவாதங்களில் கலந்துகொள்ளும் அதிகாரம் அவனுக்கு மட்டுமே இருக்கிறது. வீட்டுப் பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு என்று முடக்கப்படும் பெண் முற்றிலுமாக சமூக விவகாரங்களிலிருந்து ஒதுக்கப்படுகிறாள். ஒரு குடும்பத்தின் அனைத்துப் பொறுப்புகளும் ஆணிடம் உள்ளதால், அவனே குடும்பத் தலைவன். அதுமட்டுமின்றி நிலம், சொத்து, குடிசை, கால்நடை என்று எல்லாமே ஆணின் உடைமையாக இருப்பதாலும் அவனே குடும்பத் தலைவன்.

பெண் என்பவள்புகுந்த வீட்டிற்கு மருமகளாகஅழைத்து வரப்படுபவள். அதனால் தான் அவளின் ஆளுமை மதிக்கப்படுவதில்லை. அவளின் வேலைத் திறனுக்காக மட்டுமே அவள் மதிக்கப்படுவதால் நிலவுடைமை வழக்கப்படி அவள் வெறும் ஓர் உடைமையாக மட்டுமே கருதப்படுகிறாள்.

குடிசைத் தொழில்துறையில், அத்தொழில் விவசாயத்திற்கு ஒரு துணை மட்டுமே என்பதால் அக்குடும்பங்களில் பெண்களின் நிலையில் சிறிய மாறுதல் உள்ளது. அவள் தன் கணவனுக்கு உதவியாக இருப்பினும், அவள் சுதந்திரமாக வாழமுடியாது. ஆனால் விவசாயம் இரண்டாம் நிலையிலும் கைவினைத் தொழில் வருமானம் முதன்மை வருமானமாக மாறி, பெண்கள் தங்கள் குடும்பத்திற்கு அப்பாற்பட்டு சுயமாக வாழ முடியுமெனில், அப்போது எல்லாம் மாறும். அப்போது குடும்பங்களில் பெண்களின் குரலுக்கு மதிப்பிருக்கும். விவாகரத்துப் பெறுவதும் எளிதாகிவிடும்.

உற்பத்தியில் பங்குபெரும் பெண்கள் சுதந்திரமாக வாழ முடிவதால், அவளால் எப்போதேனும் ஒரு துண்டு நிலம் வாங்க முடிகிறது. இவ்வாறாக அவள் ஆணுக்கு நிகராக சொத்து வாங்கும் உரிமையைப் பெறுகிறாள். பெண்ணுக்கு வேலை கொடுப்பது வெறும் சடங்காக இருக்கும் தொழிற்துறைகளில் ஆணைவிட பெண்ணின் கூலியில் பெரிய வேறுபாடில்லை என்பதால், ஒரு பெண் தன்னைத் தானே பராமரித்துக்கொள்ள முடிகிறது. ஆகவே இக்குடும்பங்களில் இனியும் ஆண் மட்டுமேசம்பாதிப்பவனாகஇருப்பதில்லை. பெண் தன்னையும் பராமரித்து, சில வேளைகளில் கணவன் வேலை இழந்துவிட்டால் அவனையும் சேர்த்து பராமரிக்க முடிகிறது. விவசாயக் குடும்பங்கள் போல் இன்றி தொழிலாளியான பெண்ணானவள் தொழிற்சாலைகளில் முழுக்க முழுக்க தனியாக கணவனின் ஆணையின்றி சுதந்திரமாக வேலை செய்ய முடிகிறது. இதெல்லாம் நடந்தாலும், ஒரு பெண்ணின் சுதந்திரமான வேலையும், சுதந்திரமான வருமானமும் கணவன் மனைவி உறவை பாதிக்கப்போவதில்லை.

சொந்தக் காலில் நிற்பதன் மூலம், மனைவி கணவனின் அடிமையாக இருப்பதிலிருந்து விடுபட்டு குடும்பத்தில் ஒரு சமமான உறுப்பினர் ஆகிறாள். கணவனைச் சார்ந்து வாழும் நிலை சமத்துவத்தால் மாற்றப்படுகிறது. இளம் வயதிலேயே சம்பாதிக்கத் தொடங்கும் ஒரு பெண்ணை ஒரு பெற்றோரால் அப்படியே திருமணம் என்னும் பெயரில்தள்ளிவிடமுடியாது. தனக்கு விருப்பமானவரை அவள் தேர்ந்தெடுக்க முடியும். தொழிற்சாலை வட்டாரங்களில் நடக்கும் திருமணங்கள் வெறும் பொருளாயத நலன்களுக்கப்பால், ஒருவருக்கொருவர் பரஸ்பர உடன்படிக்கையின் அடிப்படையில் நடக்கின்றன. விவசாயக் குடும்பங்களில், மனம் பிடிக்காமல் பிரிந்து போனால் குடும்பத் தொழில் பாதிக்கப்படும் என்னும் நிலைமை இங்கில்லை; ஏனென்றால் கணவனும் மனைவியும் சுதந்திரமாக தனித்து சம்பாதிக்கிறார்கள். அவரவர் வருமானத்தில் அவர்கள் வாழ்கிறார்கள்.

விவசாயக் குடும்பங்களைக் காட்டிலும் தொழிற்சாலைப் பணியாளர்களிடையே விவாகரத்து வீதம் அதிகம். அதற்கும் மேலாக ஆண் பெண் இடையிலான சுதந்திர உறவுகளும் பொது விதியாக உள்ளது. ஆணும் பெண்ணும் இரவு நேரங்களில் ஒன்றாகப் பணி புரிகின்றனர். ஆகவே திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவை தொழிற்சாலை வசிப்பிடச் சூழல் எளிதாக்குகிறது. வேறு எப்படி இருக்கும்? தொழிற்சாலை ச் சத்திரங்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி வசிப்பிடமில்லை. அனைத்து வயதினரும், பாலினத்தவரும் ஒரே இடத்தில்தான் வசிக்கின்றனர். குழந்தைகள், வயது வந்தோர், ஆண்கள், பெண்கள், திருமணம் ஆனவர், ஆகாதவர் என அனைவரும் படுக்கையறைகளை, அடுக்கு படுக்கைகளைப் பகிர்ந்துகொள்கின்றனர். இதில் யார்முறைப்படிதிருமணம் செய்து கொண்டவர்கள் என்று எப்படி சரிபார்ப்பது? தொழிலாளர்கள் மத்தியில், திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவாக இருந்தாலும்முறைப்படியானதிருமணத்திற்கு உரிய அதே உரிமைகள் வழங்கப்படுகின்றன. “ஒரு கணவனின் மனைவிஎன்பதைக் காட்டிலும் இத்தகைய திருமணமல்லாத உறவுகள் ஒரு பெண்ணுக்கு மேலும் சுதந்திரத்தை வழங்குகின்றன. தன்னுடன் வாழும் ஆணை அவள் சார்ந்திருக்க வேண்டியதில்லை. தன்னுடன் வாழும் பெண் மீது அத்தகைய ஆண்களுக்கு எந்தஉரிமையும்கிடையாது. உதாரணமாக கடவுச்சீட்டு பெறுவதை தடை செய்ய முடியாது, தன்னுடன் வாழச் சொல்லிக் கட்டாயப்படுத்த முடியாதுஒரு வரியில் சொல்வதானால், சுதந்திரமான வருமானம் மகளிரை ஆண்களின் அதிகாரத் தளையிலிருந்து விடுவிக்கிறது.

ஆனால் பெண்களின் உழைப்பு வழக்கமானதாக இல்லாத தொழிற்துறைகளில் அவளின் கூலி மிகவும் குறைவானது என்பதால் பெண் வாழ்வதற்குப் போதுமான வருவாயின்றி, ஒன்று பெற்றோரையோ அல்லது கணவனையோ சார்ந்தே வாழ வேண்டியுள்ளது. அதற்கும் வழியில்லை எனில், விபச்சாரம் மூலம் கூடுதல் வருமானம் ஈட்டும் நிலைக்கு ஆளாகிறாள். சமீபத்தில், 1899 மே மாதம் ரிகாவில் இதனால் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் கலகம் ஏற்பட்டது. சணல் ஆலையில் பெண்கள் கூலி உயர்வு கேட்டுப் போராடியதோடு, தொழிற்சாலை நிர்வாகம் குறித்துப் புகார் அளிக்க ஆளுனர் அலுவலகத்திற்கு கூட்டாகச் சென்றனர். போகும் வழியில், அப்பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, அலெக்சாண்ட்ரோவ் பூங்காவில் சிறை வைக்கப்பட்டனர். வேலையை விட்டுக் கிளம்புகையில், ஃபீனிக்ஸ் தொழிற்சாலை ஆண்களும், மற்றும் சிலரும் பலவந்தத்தைப் பிரயோகித்து, சிறைவைக்கப்பட்ட பெண்களை விடுவித்தனர். உடனே ஆளுனர் இராணுவத்தை வரவழைத்தார். 5 முதல் 15 மே வரை ரிகா ஒரு போர்க் களமானது. இராணுவத்தினர் தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த, தொழிலாளர்கள் அவர்கள் மீது கல் வீசினர், ஜன்னல்கள் மீது கல் வீசினர், கட்டிடங்களுக்குத் தீ வைத்தனர். அதனைத் தொடர்ந்து அவர்களுடைய சீற்றம் விபச்சார விடுதிகள் மீது திரும்பியது. ஒரே இரவில் 11 விடுதிகளை அடித்து நொறுக்கினர். தொழிலாளர்கள் எதனால் விபச்சார விடுதிகளை நொறுக்கினர்? வேலை நிறுத்தப் போராட்டத்திற்கும், தொழிலாளர்களின் கலகத்திற்கும் என்ன தொடர்பு? விபச்சார விடுதிகளுக்கும் இதற்கும் என்ன தொடர்பு? தொழிற்சாலை அதிகாரிகளிடம் தங்கள் மனைவிகளின் சம்பளம் வாழ்வாதாரத்திற்குப் போதுமானதில்லை என்று முறையிட்டபோது, அப்படியெனில் விபச்சாரம் செய்து அவர்கள் பணம் சம்பாதிக்கலாம் என்று கூறி அவமதித்துள்ளனர். ஆக, மிகவும் மோசமான கூலி போதாமல் பெண்கள் பிழைக்க முடியவில்லை என்றால், விபச்சாரம் செய்து அதை சமாளிக்கலாம் என்பது வெளிப்படையாக பரிந்துரைக்கப்பட்டது. அப்படியென்றால் தன்னுடைய பிச்சைக்கார வாழ்விற்காக, பட்டினியைப் பொறுக்க முடியாது, சில வேளைகளில் பட்டினிச் சாவிலிருந்து தப்பிக்க தன்னையே விற்கும் ஒரு ஏழைப் பெண்ணை நாம் எப்படிக் குறை சொல்ல முடியும்? ஒரு விபச்சாரியாக இருப்பது ஒன்றும் கொண்டாட்டமானதல்ல என்பதை நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ஏழ்மை என்றால் என்னவென்றே தெரியாத, நன்றாக உண்டு கொழுத்து வாழும் பூர்ஷுவாக்களும் அவர்களது மனைவிகளும் தொழிற்சாலை மகளிர் மற்றும் சிறுமிகளின் இந்த இழிவான நிலை பற்றி மிகவும் வக்கிரத்துடனும், பாசாங்கு கூடிய வெறுப்புடனும்விபச்சாரிஎன்றழைப்பதை நீங்கள் கேட்க வேண்டும். மறுபுறம் பூர்ஷுவா பேராசிரியர்களோ விபச்சாரிகள் ஒன்றும அடிமைகள் அல்ல, அவர்கள் தம் விருப்பத்தின் பேரிலேயே அப்பாதையைத் தேர்ந்தெடுக்கின்றனர் என்று கூறுகின்றனர்.  தூசும், விசவாயுவும் சூழந்திருக்கும் ஒரு பணிமனையில் மூச்சுவிடக் கூட அல்லபடும் பெண் தொழிலாளர்கள் தமது விருப்பத்துடனே ஒருநாளைக்கு 16 முதல் 18 மணி நேரம் வேலை செய்வதாக நாகூசாமல் பேசுகின்றனர்.

நிலைமை இவ்வாறிருக்க, சொற்பக் கூலி பெறும் ஒரு பெண் போதிய வருமானத்திற்காக தன்னையே விற்றுக்கொள்ள வேண்டிய அவசியமின்றி கணவனால் அல்லது பெற்றோரால் பராமரிக்கப்படுகிறாள் என்றால், எவரின் துணையும் இன்றி தன் சொந்தக் காலில் வாழும் பெண்ணைப் போன்று அவள் சுதந்திரமானவளாக இருக்க முடியாது. தனித்து வாழ முடியாத காரணத்தால் அத்தகைய பெண்கள் தங்களைப் பராமரிப்பவர்களுக்கு  அடி பணிந்தே வாழ வேண்டியிருக்கும்!

இவ்வாறாக சுதந்திரமான வருமானமே உழைக்கும் மகளிரை, ஒரு பெண் என்ற முறையில் ஆணுக்கு சம்மானவளாக சுதந்திரமானவளாக்குகிறது. பெரு நிறுவனத் தொழில்துறையில் அவள் நுழைந்தால் மட்டுமே அவளுக்கு விடுதலை. ஆலைகள், தொழிற்சாலைகளில் வேலை செய்வதன் மூலம் ஒப்பீட்டளவில் ஒருசில பெண்கள் சுயமாக சம்பாதிக்கிறார்கள். நாம் முன்னரே பார்த்தது போல் 1890இல் இரண்டரை இலட்சம் பெண்கள் வேலைக்குச் செல்லும் பெண்களாக இருந்தனர். இப்போது அது அதிகரித்து விட்டது என்றாலும் 5 இலட்சத்தைத் தாண்டவில்லை. இரண்டாவதாக, பல தொழில்துறைகளில் பெண்களுக்கு மிகவும் குறைவான கூலியே கொடுக்கப்படுவதால், அவர்கள் தனித்து வாழ முடிவதில்லை. அதற்கடுத்து, ஒப்பீட்டளவில் நல்ல சம்பளம் என்றாலும் கூட காலப் போக்கில் இயந்திரங்களின் வரவாலோ அல்லது உற்பத்தி நிறுத்தப்பட்டாலோ ஆட்குறைப்பு என்னும் பெயரில் வீதிக்கு அனுப்பப்படுவது பெண்களே. பின்னர் என்ன நடக்கும்? கணவனுக்கோ உறவினருக்கோ அவள் பாரமாகிவிடுவாள். ஒன்றா, சார்ந்து வாழ வேண்டும் இல்லையேல், விபச்சாரியாக வேண்டும்.

இன்றைய நிலைமையை தலைகீழாகப் புரட்டிப் போடக் கூடிய சோஷலிசத்தை நிறுவும் வகையிலான உழைப்பாளர்களின் வெற்றியே பெண்ணையும் முழுமையாக விடுவிக்கும். சோசலிசத்தின் கீழ் - அதாவது #சோஷலிச அமைப்பில் - வயது வந்தோர் மற்றும் ஆரோக்கியமானவர்கள் அனைவரும் உழைப்பார்கள் அதில் கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் தவிர்த்து அனைத்துப் பெண்களும் அடக்கம். ஆனால் உற்பத்தியின் பலனை அனைவருமே பகிர்ந்துகொள்வார்கள்; அனைவருக்கும் வாழ்வாதாரம் உறுதியானது, அது பெண்களுக்கும் பொருந்தும். மனைவியாக, காதலியாக, மகளாக ஆண்கள் பெண்களை வைத்துப் பாதுகாப்பதாலேயே பெண்கள் மற்றவரைச் சார்ந்து வாழும் நிலையில் இருக்கிறார்கள். அது முடிவுக்கு வந்துவிட்டால் ஆண்களிடமிருந்து பெண்களுக்கு விடுதலை கிடைக்கும். இவ்வாறாக, உழைப்பாளர்களின் நலனில் பெண்களுக்கு ஒரு பெண்ணாக, ஒரு தொழிலாளராக இரட்டை ஆர்வமிருப்பதாக நாம் காண்கிறோம். “உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்!” என்னும் முழக்கம் பெண்களின் இதயத்தைத் தொடாமல் இருக்க முடியாது. ஆகவே, மேலான எதிர்காலத்திற்காக சோசலிச சமுதாயத்தைப் படைத்திடும் போராளிகளின் அணியில் பெண்கள் சேர்வது தவிர்க்கவியலாதது.

உழைக்கும் மகளிர், .கா. #க்ரூப்ஸ்கயா
தமிழில் – கொற்றவை
சிந்தன் புக்ஸ் வெளியீடு.
பக்கங்கள் – 77, விலை 70
நூல் வாங்க, தொடர்பு கொள்ளவும்: 9445123164

No comments:

Post a Comment