பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக குமுதம் ரிப்போர்ட்டரில் வந்த கட்டுரை
பொள்ளாச்சி சம்பவம் என்று சொல்லப்படும் பாலியல் வன்கொடுமை
சம்பவமானது தமிழ்நாட்டையே இன்று உலுக்கி உள்ளது. (தமிழ்நாட்டில் நடக்கும் எதுவும்
இந்தியளவில் கொந்தளிப்பை ஏற்படுத்துவதில்லை!) எங்கு பார்த்தாலும் நிகழ்ந்த பாலியல்
வன்கொடுமை பற்றிய செய்திகள், காணொளிகள். மறுபுரம் குற்றவாளிகளை எப்படி தண்டிக்க
வேண்டும் என்பது பற்றிய விவாதங்கள். நம் நாட்டில் இதற்கெல்லாம் அப்பாற்பட்ட
மிகப்பெரிய பிரச்சினை பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பது. அதிலும் குறிப்பாக
குற்றச் செயல்களின் பின்னால் ஆளும் அதிகார பலம் இருக்குமெனில் தீவிரப்
போராட்டங்களை நடத்த வேண்டியுள்ளது. தமிழ் நாடெங்கும் மாணவர்கள், பெண்கள் அமைப்பினர் என்று போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
ஒவ்வொரு முறையும் குற்றங்கள் நடக்கையில் செய்திகளாக, புலம்பல்களாக கடந்து செல்வதும், ‘மிகவும் கொடூரமான’ குற்றங்கள் நடக்கையில் ‘குறிப்பிட்ட’ காலம் கொந்தளிப்பதுமாக கடக்கிறது காலம்.
ஒவ்வொரு முறையும் குற்றங்கள் நடக்கையில் செய்திகளாக, புலம்பல்களாக கடந்து செல்வதும், ‘மிகவும் கொடூரமான’ குற்றங்கள் நடக்கையில் ‘குறிப்பிட்ட’ காலம் கொந்தளிப்பதுமாக கடக்கிறது காலம்.
நல்லவர், கெட்டவர், நீதி, நியாயம் போன்ற ‘நம்பிக்கை’ உடைய
பொது சமூகத்தினர் குற்றவாளிகளை கொடூரர்கள், காம வெறியர்கள்
என்றெல்லாம் வரையறுத்து “அவர்களை வெட்டிக் கொல்ல வேண்டும்,
கடுமையாக தண்டிக்க வேண்டும்” என்னும் கோஷங்களை
எழுப்புவர்.
நிலவும் சமூக அமைப்பினைப் பற்றிய சமூக-அரசியல் விழிப்புணர்வுடைய
மற்ற பிரிவினர் நீதிக்காக போராடுவதோடு இத்தகைய குற்றங்களுக்கு காரணமாக இருக்கும்
பண்பாடு மற்றும் ஆணி வேர் குறித்துப் பேசுவார்கள்.
நோய்க்கு சிகிச்சை அளிக்கும் அதேவேளை நோய் அறிந்து நோய்க்கான
மூலக்காரணம் அறிந்து அதை தணிக்கும் வழியை அறிந்து சரியாக செயல்பட வேண்டும்.
அதுதான் பெண்ணியக் கல்வி, சமத்துவக் கல்வி எனப்படுகிறது. பெண்ணியம் பற்றி
இங்கே தவறான புரிதல் நிலவுகிறது. பெண்கள் தங்கள் விருப்பம் போல் ’பாலியல்’ உறவு கொள்வதற்காக பேசும் பேச்சு என்றே இந்த
ஆணாதிக்க சமூகம் கற்பித்து வைத்திருக்கிறது. பெண்ணியம் என்பது ஆண் வெறுப்பல்ல.
பெண்ணியம் என்பது பெண் ஆதிக்கமும் அல்ல. பெண்ணியம் என்பது உயிரியல் வேறுபாட்டை
வைத்து மனிதர்கள் தங்கள் சுயநலன்களுக்காக உருவாக்கிய பெண் ஒடுக்குமுறை
சட்டதிட்டங்களை, நடத்தை விதிகளை பற்றிய விழிப்புணர்வை
ஏற்படுத்துவது. பாலின அடிப்படையில் (Gender based & not biological sex
based) நிலவும் ஏற்றத்தாழ்வுகளை களைந்து சமத்துவத்தை நிலை நாட்ட
பெண்களை அணி திரட்டுவது.
இந்த பெண் விடுதலைப் பிரச்சாரத்தினூடாக சமூகத்தில் நிலவும் பல்வேறு
ஏற்றத்தாழ்வுகள் (சாதி, மத, திறன், பாலினம், பொருளாதாரம் இன்ன பிற) குறித்த
விழிப்புணர்வையும் ஏற்படுத்தி யாரும் யார்க்கும் அடிமையில்லாது வாழக்கூடிய சமத்துவ
சமுதாயத்தை நிலைநாட்டிடும் சமூக மாற்றத்திற்கான போராட்டத்தில் அனைவரையும்
ஒருங்கிணைப்பது என்பதே பெண்ணியம்
பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை இந்த அடிப்படையில்
இருந்துதான் பெண்ணியவாதிகள் மற்றும் இடதுசாரிகள் காண்கின்றனர். அதுபற்றிய ஒரு
சிறிய உரையாடலை நாம் இங்கே மேற்கொள்வோம்
பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு காரணம் என்ன?
பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு காரணம் என்ன?
ஆண்மை பெண்மை என்னும் கருத்துகளே இதற்கு காரணம். ஆண்மை என்பது பலம், வீரம், அடக்கி ஆளுதல், பாலுறவு
(sex) வீரியம், தலைமை வகித்தல்,
பொருள் ஈட்டுதல், தோற்றுப் போகாமல் இருத்தல்
என்றெல்லாம் நம்பப்படுகிறது.
பெண்மை என்றால் மென்மை, அச்சம், மடம், நாணம், அடங்கிப் போதல், தாய்மை,
விட்டுக்கொடுத்தல், பாலுறவு அடக்கம், கற்போடு இருத்தல் என்றெல்லாம் நம்பப்படுகிறது.
ஆணுக்கும் பெண்ணுக்கும் வகுக்கப்பட்டிருக்கும் இந்த தனித்தனி
விதிமுறைளுக்கும் உயிரியல் உடலமைப்பிற்கும் எந்த தொடர்பும் கிடையாது. ஆகவே தான்
அவற்றை கருத்தியல்கள் (ideology) என்கிறோம்.
இந்த கருத்தியல்களால் பெண் என்பவள் எப்போதும் ஆணுக்கு கீழே இருக்க
வேண்டியவள் என்கிற நிலை. இது இயல்பாகவே ஆணுக்கு எல்லையற்ற அதிகாரத்தை
வழங்கிவிடுகிறது. பெண்களும் அதுதான் இயற்கை, இயல்பு, பெண்மை என்று நம்பி
அறியாமையில் வாழ்கின்றனர்.
பெண் என்பவள் என்றைக்கும் ஆணுக்கும், ஆண் தலைமையிலான
குடும்பத்திற்கும் உழைக்கும் கருவியாகவும், குழந்தை பெறும்
இயந்திரமாகவும், பாலியல் இச்சைகளை நிறைவு செய்ய வேண்டிய
பண்டமாகவும் மட்டுமே கருதப்படுகிறாள். இதனை நிராகரிக்கும் பெண்கள் கலாச்சாரத்தை
கெடுப்பவர்கள். நடத்தை கெட்டவர்கள் என்னும் நிலை. இதனால் பெண்கள் தங்களுக்கு
கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதைத் தாண்டி சிந்திக்க அஞ்சுகிறார்கள். ஆகவே அடங்கிப்
போகவும், சிறந்த கற்புக்கரசி, பத்தினி,
தாய், மனைவி, காதலி என்ற
பட்டங்களை வாங்கவும் மட்டுமே பழக்கப்பட்டிருக்கிறார்கள்.
இப்படி ஆண்மை உருவேற்றி வளர்க்கப்படும் ஆண் பெண்ணை தன் சொத்தாக
மட்டுமே காண்கிறான். அதிலும் குறிப்பாக காதலில் வெல்வதும், காமத்தில் வெல்வதுமே ஆண்மை என்று ஆழ்மனதில் பதிந்துவிடுகிறது. இந்த ஆண்மை
அதிகாரத்தை மையப்படுத்தியே பெண் உடல் குடும்பத்திற்குள்ளாக ’குத்து
விளக்காகவும்’, வணிகச் சந்தையில் நுகர்வுப் பொருளாகவும்
மாற்றப்படுகிறது. எதுவாக இருந்தாலும் அவள் ஆணின் சொத்து.
இந்தப் பின்னணியில் பெண்கள் தங்கள் உடல் பற்றிய உண்மையை
புரிந்துகொள்வது அவசியம். பெண் உடல் என்பது கட்டுப்படுத்தப்பட வேண்டியது அல்ல.
உடலில் ஆபாசமும் இல்லை, அவமானமும் இல்லை. அவை வெறும் கருத்து மட்டுமே. ஆதி
மனிதர்களும், பழங்குடிகளும் நிர்வாணமாக திரிகையில் நிர்வாணம்
என்பது எப்படி ஆபாசமாகியது? கற்பை, பெண்ணை
போற்றும் சமூகத்தில் பெண்களுக்கெதிரான குற்றத்திற்கு பெண்களையே காரணமாக காட்டுவது
வேடிக்கையல்லவா?
ஒரு பெண்ணின் சம்மதமின்றி அவள் உடலை பாலியல் ரீதியாக
அத்துமீறுவதுதான் ஆபாசம். அது ஆண்கள் செய்யும் குற்றமாக இருக்கையில் அவர்கள் தான்
கண்டிக்கவும், தண்டிக்கவும்பட வேண்டியவர்கள்.
உடல் என்பது உடல் மட்டுமே. அது இயற்கையின் பரிணாமத்தில் பல்வேறு அடையாளங்களுடன் பிறக்கிறது. பெண் உடல் என்பதாலேயே அது அழகியல் தன்மைக்குள் அடக்கப்படுகிறது, அதை ஒரு பண்டமாக ரசிப்பதற்கு ஒரு சந்தை செயல்படுகிறது. அந்த பாலியல் சுரண்டலில் இருந்து நான் ஆண், பெண் இருவரையும் காக்க வேண்டியுள்ளது. அதையும் மீறி பெண் உடல் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானால் நிர்வாணம், அசிங்கம், கற்பு, மானம், அவமானம் ஆகிய விஷயங்களுக்காக அச்சப்பட ஏதுமில்லை.
பெண்ணின் அந்த நிலைக்கு ஒட்டுமொத்த சமூகமும் அவமானப்பட வேண்டுமேயன்றி பாதிக்கப்பட்ட பெண்ணோ அவளது குடும்பமோ அல்ல.
பெண்ணின் நிலை இப்படியிருக்க, சமூகத்தில் அடுத்ததாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது காதல், காமம் ஆகிய இயல்பூக்க உணர்வுகளுக்கான விதிமுறைகள். இதுவும் மேற்சொன்னப்படி ஒருபுறம் புனிதமானதாகவும், மறுபுறம் அதுவே சந்தைப் பொருளாகவும் இருக்கிறது.
உடல் என்பது உடல் மட்டுமே. அது இயற்கையின் பரிணாமத்தில் பல்வேறு அடையாளங்களுடன் பிறக்கிறது. பெண் உடல் என்பதாலேயே அது அழகியல் தன்மைக்குள் அடக்கப்படுகிறது, அதை ஒரு பண்டமாக ரசிப்பதற்கு ஒரு சந்தை செயல்படுகிறது. அந்த பாலியல் சுரண்டலில் இருந்து நான் ஆண், பெண் இருவரையும் காக்க வேண்டியுள்ளது. அதையும் மீறி பெண் உடல் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானால் நிர்வாணம், அசிங்கம், கற்பு, மானம், அவமானம் ஆகிய விஷயங்களுக்காக அச்சப்பட ஏதுமில்லை.
பெண்ணின் அந்த நிலைக்கு ஒட்டுமொத்த சமூகமும் அவமானப்பட வேண்டுமேயன்றி பாதிக்கப்பட்ட பெண்ணோ அவளது குடும்பமோ அல்ல.
பெண்ணின் நிலை இப்படியிருக்க, சமூகத்தில் அடுத்ததாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது காதல், காமம் ஆகிய இயல்பூக்க உணர்வுகளுக்கான விதிமுறைகள். இதுவும் மேற்சொன்னப்படி ஒருபுறம் புனிதமானதாகவும், மறுபுறம் அதுவே சந்தைப் பொருளாகவும் இருக்கிறது.
ஒருபக்கம் ஆணின் அதிகார வேட்கையை தூண்டும் சமூக நிலைமைகள், மறுபுறம் ஆணின் காம வேட்கையை தூண்டும் பாலியல் சந்தை. இந்த இரண்டாலும் ஆண்
ஒரு வெறி பிடித்த மிருகம் போல் மாற்றப்படுகிறான். இதில் சமன்நிலையை
காத்துக்கொள்ளக் கூடியவர்கள் ’நல்லவர்களாக’ இருக்கின்றனர் அந்த வெறிநாய் கடிக்கு பலியாகிறவர்கள் காம வெறியர்களாக,
சுரண்டல்வாதிகளாக, ‘கெட்டவர்களாக’ மாறிவிடுகின்றனர்.
பெண்கள் தங்களை எப்படி காத்துக்கொள்ள முடியும்?
பெண்கள் மட்டுமின்றி அனைவரும் பாலின பாகுபாடு பற்றிய அறிவைப்
பெறுவதால் மட்டுமே பெண்களுக்கு எதிரான வன்முறையைக் களைய முடியும். மேலும், பெண் என்பவள் குடும்பம், தாய்மை, பெண்மை ஆகிய வட்டங்களுக்கு அப்பாற்பட்டு சமூக-அரசியல் தளத்திற்கு வர
வேண்டும்.
மதநூல்கள், பாடபுத்தகங்கள் தாண்டி அனைவரும் பெண் விடுதலை
பற்றி பேசும் நூல்களை வாசிக்க வேண்டும். அடங்கிப் போவதற்காக தான்
பிறப்பெடுக்கவில்லை என்பதை உணர்ந்து மன வலிமை பெற்றிட இந்த அறிவு உதவும்.
இதனோடு உடல் ரீதியாக பலம் பெற பெண்கள் தற்காப்பு கலைகளைப் பயில்லாம்.
இதனோடு உடல் ரீதியாக பலம் பெற பெண்கள் தற்காப்பு கலைகளைப் பயில்லாம்.
பெண்களின் நிலைமையை மாற்றுவதற்குப் பதில் குடும்பம் என்னும்
அமைப்பின் மூலமும், சட்டதிட்டங்களின் மூலமாகவும் பெண்களை
கட்டுப்படுத்துவதால் எந்த பயனும் இல்லை. அது மேலும், மேலும்
ஆண்களுக்கே அதிகாரம் வழங்கும். திருடர்கள் வருவார்கள் என்று வீட்டை பூட்டி
வைப்பதால் ஏதேனும் பயன் இருக்கிறதா, அதை உடைக்க அவர்கள்
ஆயிரம் வழிகளை கண்டுபிடிக்கிறார்கள். ஒருவன் திருடும் நிலைக்கு உள்ளாகாமல்
இன்பமயமான வாழ்வை சமூக அளவில் உறுதி செய்வதுதான் அதற்கு தீர்வு. அதுபோல் பெண் உடல்
மீது நிகழ்த்தப்படும் வன்முறைக்கு பெண் உடலுக்குப் பூட்டு போடுவதால் ஒரு பயனும்
இல்லை. ஆன் பெண் இருபாலருக்கும் இடையில் பரஸ்பர அன்பையும், மரியாதையையும்
வளப்படுத்தக்கூடிய நிலைமைகளை உருவாக்க வேண்டும். அது புதியதொரு சமூக
உருவாக்கத்தோடு தொடர்புடையது. அது நீண்டகாலம் பிடிக்கும். அது அரசியல் போராட்டம்.
அதுவரை இருக்கும் அரசானது பெண்களை பாதுகாக்கும் விதமாக சில நடவடிக்கைகளை
எடுக்க முடியும். பாலின கூருணவுக் கல்வியை (Gender Sensitizing education) வழங்குதல். பாலின
சமத்துவ சமுதாயம் உருவாக்கும் திட்டம் வகுத்திட பெண்ணிய சிந்தனையாளர்கள் தலைமையில்
அதற்கென்று ஓர் ஆணையம் அமைக்க வேண்டும். முதல் நிலைக் கல்வி தொடங்கி பாலினக் கல்வி
என்பது ஒரு பாடதிட்டமாகவே இருக்க வேண்டும். ஆணாதிக்கப் பெண்மையை போற்றிக்
கொண்டிருப்பதை விடுத்து ஆண் பெண் சமத்துவம் போற்றும் கலாச்சார நிகழ்வுகள், பிரச்சாரங்கள், கலை இலக்கிய செயல்பாடுகளை
முன்னெடுக்க வேண்டும். ஊடகங்கள் மற்றும் திரைப்படங்களில் பெண் ஒரு போகப் பொருளாக
சித்தரிக்கப்படுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, அத்தகைய
பாலியல் சுரண்டலை தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். சுருக்கமாக
பாலியல் கல்வி மற்றும் பாலினக் கல்வி வளர்ச்சியில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.
பொதுமக்களாகிய சமூகம் பெண் சுதந்திரம் என்பதை வெறும் பாலுறவு
இச்சைக்கான சுதந்திரம் என்று என்னுவதை கைவிட வேண்டும். பெண் சுதந்திரம் என்பது
மனித உரிமை மற்றும் சுயமரியாதை சார்ந்தது என்பதை புரிந்துகொண்டு குடும்பம், மானம், அவமானம், பெண் பிள்ளை
வளர்ப்பு ஆகிய போலியான ஆணாதிக்க ஒழுக்கப் பேச்சுகளுக்கு அஞ்சுவதை நிறுத்திக் கொள்ள
வேண்டும். ஆணின் பெண்ணாக பெண்ணை வளர்ப்பதை விடுத்து பெண்ணை ஒரு தனிப்பிறவியாக
சுதந்திரமான ஓர் உயிராக மதிக்க வேண்டும். அப்படி வளர்க்கப்படுவது பெண்களுக்கு
மட்டுமல்லாது ஆண்களுக்கும் நிம்மதியான வாழ்வை தரும் என்று ஆண்களும் உணர்ந்து பெண்
அதிகாரகாரமளித்தல் என்னும் பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.