Mar 8, 2024

விஜய் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்

 வணக்கம் விஜய்,

நலமா? உங்கள் அரசியல் வருகை செய்திகளையும், உங்கள் கட்சிக் கொள்கைகளையும் படித்தேன். வாழ்த்துகள்.

சமூக நீதி, சமத்துவம், கல்வி வழங்குதல், தொழிற்சங்கம் என்று இயக்கப் பணிகள் நடைபெறுவதைக் காண முடிகிறது. குறிப்பாக பெண்களுக்கெதிரான வன்முறைகளைக் களைவதில் நீங்கள் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள் என நம்புகிறேன். புதுச்சேரியில் சிறுமிக்கு எதிராக நடந்த கொடுமையைக் கண்டு கொந்தளித்துப் போய் இருப்பீர்கள். உங்கள் பதிவுகளைக் காண முடிகிறது!

நான் சமத்துவத்தை வலியுறுத்தியும், குறிப்பாக பெண் விடுதலை, பெண்களை ஒடுக்குவதற்குக் காரணமாக இருக்கும் ஆணாதிக்க சமூக அமைப்பு குறித்து தொடர்ந்து எழுதி வருகிறேன். பொதுவாகவே ஆணாதிக்கம் என்கிற சொல்லைக் கண்டால் இங்கே ‘ஆண்’ என்னும் எண்ணம் (கர்வம்) கொண்ட ஆண்களால் அதை பொறுத்துக்கொள்ள முடிவதில்லை! ஆணாதிக்கம் என்று பேசுகையில் அது ஆண் வெறுப்போ அல்லது ஒட்டுமொத்த ஆண்களை குறை சொல்வதோ ஆகாது என்று பல நூற்றாண்டுகளாக இங்கே விளக்கிய போதும் இது குறித்த கல்வி நம் சமூகத்தில் இல்லை! மேலும் இங்கு எல்லாமே தனி மனிதர் நடத்தை சார்ந்த பிரச்சினையாக மட்டுமே பார்க்கப்படுவதால் சமூகமயமாக்கல் விளைவாக நமக்கு உண்டாகும் அறிவு, எண்ணம், புரிதல் பிரச்சினைகள், சமூகப் பிரச்சினைகளுக்கான ஆணி வேர் என்ன என்பது குறித்த பிரக்ஞையும் இல்லை! எனவே ஆம்பிளைங்களை ஏன் குத்தம் சொல்ற, செஞ்சவன் சைக்கோ என்கிற ரீதியில் முழுக்க முழுக்க அறியாமையில் மூழ்கிப் போய் மீசையை முறுக்கிக் கொண்டு வந்துவிடுகிறார்கள்.

இன்றைக்கு பெண்கள் தினம். ஆர்த்தி மட்டுமின்றி தினம் தினம் எங்கள் உடல்கள் மீது நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறை, வன்முறை, நிலவும் கருத்தியல், ஆண்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் அதிகாரம் குறித்து நான் பதிவு எழுதினேன்.

அதை படித்தே ஆக வேண்டும் என்று உங்கள் ஆதரவாளர்களை நான் கையைப் பிடித்து இழுக்கவில்லை. ஆம்பிளை என்கிற சொற்களைக் கண்டதும் சிலரது ஆண்மை முறுக்கு ஏறிவிடுகிறது, மரியாதை குறைவாகப் பேசுவது, ஆபாசமாக பேசுவதுஏளனம் செய்வது என்று வந்துவிட்டார்கள்.. நான் முதலில் அதை புறம் தள்ளவே எண்ணினேன். ஆனால் தொடர்ந்து கமெண்டுகள் வரவே உள்ளே சென்று பார்த்தபோதுதான் அவர்கள் TVK ஆதரவாளர்களாக இருப்பது தெரிந்தது.

இணையத்தில் உங்கள் இயக்க ஐடியையும், உங்கள் ஐடியையும் டேக் செய்யத் தொடங்கினேன்.. இன்னும் கூடுதலாகியது. இதற்குப் பெயர் Cyber Bullying, Mob attacking. இன்றய இணையவெளியில் இது மிகவும் ஆபத்தான போக்கு, இதிலும் ஓர் ஆணாதிக்கம் நிலவுகிறது என்பதை நீங்களும் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

சமத்துவம் என்னும் போது, பெண்களைப் போற்றுவது (அதுவும் ஆண்களின் விருப்பத்திற்கு உட்பட்டு பெண்மை வளையத்திற்குள் இருக்கும் பெண்களைப் போற்றும் நிலையே) தேவை இல்லை நண்பா, இங்கு தேவைப்படுவது மரியாதை,யும், சமத்துவமும், சுதந்திரமும்.  பெண்கள் நிலை என்ன, அவர்கள் ஏன் ஒடுக்கப்படுவதாக ”பெண்ணியவாதிகள்” எழுதுகிறார்கள், ஆணாதிக்கம் என்றால் என்ன, அதை எப்படி மாற்றுவது என்றெல்லாம் படிப்பது அதற்கு முன் நிபந்தனை. நான் படித்ததால் எழுதுகிறேன். பெண்களுக்காக மட்டுமில்லை நண்பா, கடுமையாக உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாகும் பொருளாதார அடிமைகளாக மாறிப் போன ஆண்களுக்காகவும் சேர்த்தே இயங்குகிறேன்.

என் பதிவுகளைப் படித்தால் தெரியும்.

உங்கள் அரசியல் பிரச்சாரத்திலும், அமைப்பு ஒழுங்கு விதிகளிலும் உங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள், ஆதரவாளர்கள் பெண்களிடம் எப்படிப் பேசலாம், பேசக் கூடாது என்றும், இணைய வம்பிழுத்தலில் யாரோடும் ஈடுபடக் கூடாது என்றும், சமூக மாற்றத்திற்கான பணியை மட்டும் மேற்கொள்ளதே கடமை என்றும் எடுத்துரைப்பீர்கள் என்று நம்புகிறேன்.

பாதிக்கப்பட்ட பெண்ணாக, சமூகத்தில் எழுத்தின் மூலம் மாற்றத்தை எழுத விளைபவளாக, உங்களோடு லயோலா கல்லூரியில் விஸ்காம் படித்த தோழி என்கிற உரிமையிலும் இந்த கடிதத்தை எழுதுகிறேன்!

நன்றி

அன்புடன்

கொற்றவை

பி.கு: இதை விளம்பரம் என்று மலினப்படுத்தவும் ஒரு கூட்டம் உள்ளது! ஆம் விளம்பரம் தேடுகிறேன் நண்பா! பெண் நிலை மேம்பாட்டிற்கான தேவை குறித்தும், பெண்களுக்கெதிரான சகலவிதமான வன்முறையை ஒழிப்பது குறித்தும் விளம்பரம் தேடுகிறேன்.

 அதேபோல் உங்களை மட்டும் குறிப்பிட்டு டேக் செய்யவில்லை. நீங்கள் அரசியல் களத்திற்கு வந்துவிட்டீர்கள், ஓர் அமைப்பாக உங்கள் ஆதரவாளர்கள் சிலர் இப்படி செய்வதால் முறையிடுகிறேன். எந்த அமைப்பாக இருந்தாலும் அவர்களை டேக் செய்து முறையிடுவேன். 










No comments:

Post a Comment