மீண்டும் மீண்டும் சொல்கிறேன் “வலுத்ததே வாழும்” என்கிற பொருளாதார அமைப்புக்கேற்ற அரசியலும் ஆட்சியும் என்றைக்கும் தொழிலாளர் வர்க்க நலனைப் பேணாது!
12 மணி நேர வேலை (விருப்பத்தின்
பெயரில் மட்டுமே!) – பெண்களுக்கு எதிரானது!
12 மணி நேர வேலை என்கிற சட்டத்
திருத்தத்தில் இன்னொரு மிகப் பெரிய ஆபத்து உள்ளது! பெண்கள் வேலையை இழக்க நேரும்! –
தெம்பிருந்தா கூடுதலா வேலை செஞ்சு பொழைச்சுக்கோ, சம்பாதிச்சுக்கோ என்கிற ‘option’ ஐத்
தரும் மசோதா… பெண்கள் நிலை குறித்து சிந்திக்காமல் முன் வைக்கப்படுகிறது.
ஏற்கனவே பெண்களால் தான் ஆண்கள்
வேலை இழக்கிறார்கள் என்கிற பாலின வெறுப்பு ஒரு பக்கம். இன்னொரு பக்கம் பெண்கள் வேலைக்கு
வருவதற்கோ பல பண்பாட்டு போர்களை நிகழ்த்த வேண்டி உள்ளது. தேவைப்பட்டால் வேலையை விட்டு
குடும்பத்தை கவனிப்பேன் என்கிற உறுதி மொழியோடு தான் வேலைக்கு செல்ல வேண்டியுள்ளது.
வேலைக்கு செல்ல வேண்டுமானால்
பெண்கள் வீட்டு வேலை, வெளி வேலை என்று இரட்டை
உழைப்பு செலுத்த வேண்டும். சற்றே மேல் தட்டு வர்க்கமானது வீட்டுப் பணியாளர் வைத்து
சமாளிக்கிறது. ஆனால் ஏதோ ஒரு வகையில் வீட்டுப் பராமரிப்பு, குழந்தை பராமரிப்பு, முதியோர்
பராமரிப்பு என்பது பெண்களின் கடமையாகத்தானே இருக்கிறது! இத்தகைய ‘பொறுப்புகளை’ உடைய
பெண் உழைப்பாளர்களால் 12 மணி நேர வேலையை எடுத்துக்கொள்ள இயலுமா? கட்டாயப்படுத்தவில்லையே
எனலாம்!
ஆனால் முதலாளித்துவம் யாரை
prefer செய்யும், 12 மணி நேர உழைப்பளரைத்தானே! உடனே இதை உடல் பலவீனமாக சித்தரிக்கத்
தொடங்கி விடுவார்கள். ஆனால் பெண்களுக்குரிய வீட்டுப் பராமரிப்பு நெருக்கடியில் பெண்களால்
இத்தகைய ‘தெம்பிருந்தா பொழைச்சுக்கோ’ தேர்வை எடுத்துக்கொள்ள இயலுமா என்று சிந்திக்க
மாட்டார்கள்.
போட்டி பொருளாதார அமைப்பில் யாரால்
12 மணி நேர வேலையில் ஈடுபட முடியுமோ அவர்கள் ‘உயரவும்’ மற்றவர்கள் வேலை இழக்கும் சூழலும்
உருவாகலாம்! ஆணாதிக்க சமூகத்தின் பாலின விதிகளால்,
குடும்ப பொறுப்புகளில் சிக்குண்டு கிடக்கும் பெண்கள் இந்த போட்டிக்கு ஈடுகொடுக்க இயலாமல்’
பாதிக்கப்படுவார்கள் என்பதை திமுக அரசும், சமூக நீதி காவலர்களும் சிந்திக்கவில்லையா?
ஏற்கனவே பெண்களை வேலைக்கு எடுக்கும்
போது “நீ கர்ப்பமா இருக்கியா, கல்யாணம் உடனே பண்ணிக்கப் போறியா” என்றெல்லாம் கேட்டு
பெண்ணுக்கு பதில் ஆணை எடுத்தால் ‘செலவு’ (maternity leave, periods leave etc) மிச்சம்
என்று இயங்கும் நிறுவனங்களே அதிகம். உழைக்கும் பெண்களின் விகிதாச்சாரம் என்ன? பாலின
பாகுபாடு அதிகம் உள்ள சமூகத்தில் இதுபோன்ற ‘திட்டங்களைக்’ கொண்டு வருகையில் மகளிர்
கண்ணோட்டம் வேண்டாமா? குறிப்பாக அடித்தட்டு
உழைக்கும் மகளிரியல் கண்ணோட்டம் வேண்டாமா?
நெகிழ்வுத் தன்மையை ஏற்காத தொழிலாளர்கள்
(எந்த பாலினமானாலும்) பாதிக்கப்பட மாட்டார்கள் என்பதற்கு உத்தரவாதம் என்ன?
முதலாளித்துவம் நடைமுறைப்படுத்த
விரும்பும் தொழிலாளர் சட்டங்களுக்காக மத்திய அரசு தொழிலாளர் சட்டங்களை திருத்தம் செய்கின்றது.
தொழிற்சங்கங்களே இல்லாமல் ஆக்குவதற்கான முயற்சிகள், ஓய்வூதியம் உள்ளிட்ட தொழிலாளர்
பாதுகாப்புக்கு ஆகும் முதலீட்டை தவிர்க்க ஒப்பந்த ஊதிய அடிப்படையில் வேலை என விதிகளை
மாற்றும் முயற்சிகள் தொடங்கிவிட்ட வர்க்கப் போரின் ஓர் அங்கம்தான் இந்த மசோதாவும்.
பணி நேரம், ஓய்வு நேரம், உற்பத்தி
சுழற்சி எல்லாவற்றையும் உழைத்துப் பொருள் ஈட்டித்தரும் உழைப்பளர்கள் தான் தீர்மானிக்க
வேண்டும்! தொழிலாளர் உழைப்பில் வாழும் முதலாளிகளுக்கோ, அவர்களின் தேவைக்காக உருவான
அரசுக்கோ தொழிலாளர்களின் பணி நேரம் குறித்து தீர்மானிக்கும் உரிமை கிடையாது!
No comments:
Post a Comment