”வலுத்ததே வாழும் என்பது மனிதர்களுக்குப்
பொருந்தாது” – கொற்றவை
ஒன்றை ஒன்று அடித்து வாழ்வது
இயற்கையே என்று விலங்குகளை உதாரணமாகக் காட்டி மனிதர்கள் மற்ற மனிதர்களை ஏய்த்தும்,
சுரண்டியும் பிழைத்து வாழ்வதை பலர் நியாயபடுத்துகிறார்கள். இது மிகவும் தவறான ஒப்பீடு! தவறான நியாயவாதம்!
இயற்கையில் ஒவ்வொன்றும் மாறுபட்டது!
மனிதர்கள் விலங்கினின்று மாறுபட்டவர்கள். விலங்கு போல் நடந்துகொள்ளாதே என்றும், விலங்கே
அப்படித்தானே அடித்து வாழ்கிறது என்றும் தேவைக்கேற்ப மனிதர்கள் நியாயங்களை கற்பித்துக்கொள்கிறார்கள்.
ஆம்! விலங்கு அடித்து உண்டு
வாழ்கிறது ஏனென்றால் அதற்கு உழைக்கத் தெரியாது! சிந்திக்கத் தெரியாது! உழைப்பும், இயற்கையை தன் வயப்படுத்திக்கொள்ள பொருள்
தேவையின் அடிப்படையிலான மனித சமூக சிந்தனை இயக்கமும், அதன் விளைவாக அவர்கள் உண்டாக்கும்
உழைப்புக் கருவி உள்ளிட்ட பொருட்களும், ஒழுங்கமைக்கும் ஏற்பாடுகளும் தான் அனைத்து உயிரினங்களில்
இருந்தும் மனிதனை வேறுபடுத்துகிறது.
ஆக! மனிதர்கள் உழைக்கத் தெரிந்தவர்கள்!
அந்த உழைப்பு என்பது இயற்கையை பயன்படுத்திக்கொள்வதன் மூலம் நிகழ்கிறது. இயற்கை என்பது
பொதுச் சொத்து! அதை சில தனி மனிதர்கள் ”மூலதனம்” என்னும் பெயரில் கையகப்படுத்திக்கொண்டு
மற்ற மனிதர்களை உழைக்கச் செய்து, அந்த உழைப்பின் பலனை அபகரித்து வாழ்கின்றனர். விலங்குகள்
தம் பசிக்கு இயற்கையை சார்ந்திருக்கும் முறையிலிருந்து மாறி மனிதர்கள் உழைப்பு மற்றும்
சிந்தனை மூலம் வெகுவாக முன்னேறிவிட்டார்கள்.
உழைப்பு என்பது கூட்டுச்
சமூக செயல்பாடு. அதன் பலன்களும் கூட்டாகத்தான் பிரித்தாளப்பட வேண்டுமே ஒழிய “இருக்குறவன் ஆள்றான்! அனுபவிக்குறான்” என்று வியாக்கியானம்
செய்து நம்மை அத்தகைய சுரண்டலை ஏற்றுக்கொள்ள பழக்கிவிட்டார்கள்!
“ஒருத்தண்ட இருக்குறது ஏன் அடுத்தவன்
கிட்ட இல்ல” என்று சிந்திப்பதில் தான் சமூக நீதியின் தொடக்கப்புள்ளி அடங்கியுள்ளது!
சொத்து / வளம் / மூலதனம் / உற்பத்திக் கருவிகள் அதன் மீதான அதிகாரம் எப்படி ஒரு சிலருக்கு
வாய்க்கப் பெற்றது என்பதையெல்லாம் புரிந்துகொள்ள #மார்க்சியம் படிங்க.
புலினா மானை வேட்டையாடத்தாம்லே
செய்யும்” னு எவனாச்சும் / எவளாச்சும் சொன்னா – “எலே அது புலிலே… நீ மனுசன்… உனக்குத்தான்
உழைச்சு சாப்புட கை, கால் இருக்குல” என்பதே பதில்…
”கடுமையா உழைச்சு தான வாழ்றோம்,
ஆனா என்னத்தக் கண்டோம்! அடிச்சு புடுங்கித் திங்குறவனெல்லாம் நல்லாருக்கான்!” என்று
நொந்துகொள்வோமெனில்… அந்த அநியாயத்தை நிறுத்த வேண்டுமே அல்லாது, விலங்கோடு ஒப்பிட்டு
நியாயப்படுத்துவது அறிவுடைமை ஆகாது.
இதுல வேற பெண்கள் மீதான பாலியல்
வன்முறைக்கும் புலி, மானுன்னு கிளம்பி வராய்ங்க! “புலிக்கும் உனக்கும் என்னவே சம்பந்தம்”!
புலி வாழ்ற மாதிரியா நீ வாழ்ற?
இதெல்லாம் விளங்கனும்னா குறைந்தபட்சம்
இந்த புத்தகத்தையாச்சும் வாசிக்கவும்: "மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய இடைநிலைப் படியில் உழைப்பின்
பாத்திரம்" - எங்கெல்ஸ்
அதிகாரம், வல்லுறவு, சுரண்டல்
இவற்றையெல்லாம் எதிர்க்கத்தான் மனிதனுக்கு அறிவு தேவை, மேற்சொன்ன முட்டாள் உதாரணங்களை
சொல்லி அநீதிகளை நியாயப்படுத்துபவர்கள் மனிதர்களே அல்ல!
No comments:
Post a Comment