Jul 4, 2019

பின்-காலனிய இந்தியாவில் முதலாளித்துவ வளர்ச்சியும், சாதியமைப்பும்



மதம் என்பது இன்றைக்கு ஆளும் வர்க்க மேலாதிக்கத்திற்குப் பயன்படும் செயலூக்கமுடைய மேற்கட்டுமானக் கருவியாகும். ஆனால், சாதியமைப்பு என்பது மேற்கட்டுமானத்தோடு மட்டும் பிணைந்திருப்பதல்ல. அது, முதலாளித்துவ உற்பத்தி உறவுகளிலும் ஆழமாகச் சிக்குண்டு, இணைக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது.

நிலப்பிரபுத்துவ எச்சம் அல்லது நிலப்பிரபுத்துவ மேற்கட்டுமானத்தின் ஆற்றல்மிக்க தொடர்ச்சி என்பதோடு தொடர்புடைய பிரச்சினையல்ல இது. சாதியடிப்படையிலான மதிப்பீடுகள்-நம்பிக்கைகள் மற்றும் பாகுபாடுகள் மூலம் பொல்லாங்குகள் கொண்ட ஒரு புதிய பொருளாதார அடித்தளமொன்று  உருவாக்கப்பட்டு விட்டது. பல்வேறு மக்கள் பிரிவின் சாதியக் கொள்கைகளை உடைக்காமல் முதலாளித்துவ உற்பத்தியும், விநியோக அமைப்பும் அதன் மேலாதிக்கத்தை நிறுவியுள்ளது. உதாரணமாக, இன்றைக்கு ஆதிக்க சாதி மக்களே பெரும்பாலும் அரசு அதிகாரத்தில் உள்ளனர். சுதந்திர அறிவுஜீவித் தொழில்களும், சாதியும் அவர்களின் ஒற்றுமைக்கும்,  தங்களின் வர்க்க நலனைக் காக்கவும் பிணைப்பாக செயல்படுகின்றன.  அதற்கு எதிர்ச்செயலாக, அவர்களின் கீழ்நிலையில் இருக்கும், தலித் சாதிகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சார்ந்த அலுவலர், எழுத்தாயர் மற்றும் சுதந்திர அறிவுஜீவிகள் சாதியடிப்படையிலானக் குழுக்களாக தம்மை ஒருங்குபடுத்திக் கொள்கின்றனர்.

கிராமப்புறங்களில், ஆதிக்க சாதி முதலாளித்துவ நில உடைமையாளர்கள் மற்றும் இடைநிலை சாதி குலாக்-விவசாயிகள் தலித்துகளையும், ஏழை விவசாயிகளையும் ஒடுக்க சாதியடிப்படையிலான அணிதிரட்டலை மேற்கொள்கின்றனர். அப்போது மேல் சாதியைச் சேர்ந்த ஏழைகள் கூட, எழுச்சியுடனோ அல்லது அடக்கத்துடனோ தங்கள் சாதியைச் சேர்ந்த சுரண்டலாளர்களின் பக்கம் நிற்கின்றனர் என்பதே இந்த சாதி அடிப்படையிலான அணிதிரட்டலின் மூலம் கிடைக்கும் வெற்றியாகும். அதேபோல், தலித்துகளும், தங்களின் அடையாளத்தையும், சுயமரியாதையையும் காக்கும் வண்ணம் தற்காப்பு ஒற்றுமை வேண்டி அம்பேத்கரின் பாரம்பரியத்தைத் தூக்கிப் பிடிக்கும் கட்சியின் தலைவர் பின்னால் அணிதிரள்கின்றனர்.

இடஒதுக்கீடானது 10 சதவிகித தலித் மக்களுக்கே பயன்பட்டுள்ளது, வேலைப் படிநிலையில் ஒருவர் மேலே போகும்போது, அது ஒன்று அல்லது இரண்டு சதவிகிதமாகக் குறைந்து போகிறது.
காலனிய சமூக-பொருளாதார அமைப்பிலிருந்து பிறந்து, ஏகாதிபத்திய உலகில் இருப்பது போன்று வளர்க்கப்பட்ட இந்திய முதலாளித்துவமானது, ஒரு எல்லைக்கு மேல் ஏகாதிபத்திய நலன்களுக்கு இடையூறு செய்ய முடியவில்லை (புதிதாக சுதந்திரம் பெற்ற நாடுகளின் முதலாளித்துவ வர்க்கத்தின் மிக தீவிர சக்திகள் கூட ஏகாதிபத்தியத்திடம் அடிப்படைக்கூறு சார்ந்து விரிசலை ஏற்படுத்த முடியவில்லை), பூர்ஷுவா நிலச் சீர்திருத்தங்களைக் கூட தீவிர முறையில் செயல்படுத்த முடியவில்லை. பிரிட்டிஷிடமிருந்து, நிர்வாக இயந்திரத்தையும், ஒன்றுபட்ட நாட்டின் சட்ட அமைப்பையும் உள்வாங்கிக் கொண்டது. பலவீனமான அரசமைப்பையும் உருவாக்கியது. தொடக்கத்தில், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு அதன் மீது அதிக செல்வாக்கு இருந்தது. ஆனால் ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான மோதல்களைப் பயன்படுத்திக்கொண்டு மெல்ல தனது பொருளாதார மாற்றுகளை அது விரிவுபடுத்தி, மேலான நிலைமைகளின் கீழ் மூலதனம் மற்றும் தொழில்நுட்பத்தை பெற முயற்சித்தது. அதனைத் தொடர்ந்து, அதே தொழில்நுட்பத்தை இந்தியமயப்படுத்தி, தனது சொந்த தொழில்நுட்பத்தை உருவாக்கியது.
இங்கிருந்த முதலாளித்துவ வர்க்கத்திடம் மூலதனப் பற்றக்குறை இருந்ததால், அந்நிய மூலதனத்தின் அழுத்தத்தைக் குறைத்து தனியார் துறை வளர்ச்சி துரிதப்படும் வகையில், அடிப்படை மற்றும் உள்கட்டைமைப்பு சார்ந்த தொழிற்சாலைகளைக் கட்டியெழுப்ப மக்கள் கடுமையாக உழைத்துச் சேர்த்தப் பணத்தைப் பயன்படுத்தியது. இறக்குமதிக்கு மாற்றான தொழில்மயமாக்கலின்பாதை இதுவே. முதலாளிகளுக்கு மேலும் மேலும் மூலதனத்தை கொடுக்கும் வகையில் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. செல்வ வளமுள்ள நடுத்தர வர்க்க வளர்ச்சியோடு பங்குச் சந்தையின் மூலம் பெருமளவிலான மூலதனத் திரட்டலுக்கான பாதை வேயப்பட்டது. இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் பலம் பாரிய அளவில் பெருகியபின்னர், அரசு நிறுவனங்களை அற்ப விலைக்கு விற்கும் நடைமுறை தொடங்கியது. இந்திய முதலாளித்துவத்தின் இந்த தனியார்மைய தாராளவாத யுகமானது, அதன் தேவையை, கட்டாயத்தை, அதிகரித்து வந்த அதன் நம்பிக்கையை உணர்த்துகிறது. இன்றைய நவ-தாராளவாத யுகத்தில், நெருக்கடிகள் ஆட்கொண்டுள்ள சர்வதேச மூலதனமும்கூட பாதுகாப்புக் கொள்கைகளை கைவிடச் சொல்லி அழுத்தம் கொடுக்கின்றன. பரந்த, தொடர்ந்து விரிவடைந்து வரும் இந்திய சந்தையில் தனது பங்கை எடுத்துக்கொள்ளும்விதமாக ஏகாதிபத்தியங்களுக்கு இந்திய முதலாளித்துவம் கதவைத் திறந்து விட்டது. மறுபுறம், உலகமயமாக்கப்பட்ட உலகச் சந்தையில், நாட்டிற்கு வெளியே மெல்ல முதலீடு செய்யத் தொடங்கியது. உலக முதலாளித்துவ அமைப்பில், இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் நிலையானது ஒரு இளைய பங்காளியைப் போன்றதாகும். உலகளவில் கைப்பற்றப்பட்ட உபரியிலிருந்து ஒரு சிறு பங்கைப் பெறுகிறது, ஆனால் உள்நாட்டளவில், இன்றைக்கும் அதுவே மிகப் பெரிய பங்குதாரராக உள்ளது. ஒப்பீட்டளவில், அதிக வளர்ச்சியுற்ற உற்பத்தி சக்திகளைக் கொண்டிருக்கும் பின்-காலனிய நாடுகளின் வரிசையில் உள்ளது.
வரலாற்று நிலைமைகளில், தீவிர நிலச் சீர்திருத்தங்கள் மூலம் சிறு மற்றும் பெரிய நில உடைமையாளர்களின் நலன்களைத் திட்டவட்டமாக முறியடிக்க முடியாத வகையில் இந்திய முதலாளித்துவ பண்பு பரிணமித்தது. அதனால் அது, ஜெர்மானிய ஜங்கர் பாணி மாற்றம் மற்றும் ரஷிய ஸ்டோலிபின் பாணி நிலச் சீர்திருத்தங்களின் கலவையான இந்தியப் பாணியை நடைமுறைப்படுத்தியது. பழைய சுரண்டலாளர்கள் தங்களது சுரண்டல் முறையை மாற்றிக்கொள்ள வாய்ப்பு வழங்கியது. பழைய ராஜாக்கள், இளவரசர்களின் தோட்டங்களை எடுத்துக்கொண்டது, ஆனால் அவர்களது ஏராளமான செல்வம், கோட்டை மாளிகைகள் மற்றும் நில உடைமைகள் விட்டுவைக்கப்பட்டன. மேலும், இரண்டு தசாப்தங்களுக்கு இரகசிய பண முடிப்புகளும் வழங்கப்பட்டன. இந்த அடிப்படையில்தான் ராஜாக்கள், பெரிய முதலாளிகளின் வரிசையில், அவர்களது ஹோட்டல்கள், தொழிற்சாலைகளில் செயல்படா பங்காளிகளானார்கள் அல்லது முதலாளித்துவ நிலக்கிழார்களானார்கள். ஜமீன்தாரி ஒழிப்பு மெதுவான வேகத்தில் முன்னெடுக்கப்பட்டது, நிலக்கிழார்கள் குத்தகையை சார்ந்திருப்பதைக் காட்டிலும், சந்தைக்காக உற்பத்தி செய்யும் பூர்ஷுவா நிலப் பிரபுக்களாக மாறவும், நில உச்ச வரம்பிலிருந்து தங்களது நிலங்களைக் காத்துக் கொள்ளவும், நகர்புற மேல் மத்திய வர்க்கங்களின் வரிசையில் இணைவதற்குமான வாய்ப்புகளை வழங்கியது.
நிலவுடைமையாளரான பின்னர் முந்தையகால பணக்கார மற்றும் நடுத்தரக் குத்தகைதாரர்களின் பெரும் பிரிவினர்கூட முதலாளித்துவ விவசாய குலாக்குகள் ஆனார்கள். பெரும்பாலானவர்கள் ரெட்டி, கம்மா, தேவார், மராத்தா, ஜாட், குர்மி, குஷாவா, சைந்த்வார் போன்ற இடைநிலை சாதியினர் ஆவர். (இங்கு தேவர், கவுண்டர் போன்ற சாதிகள் மொர்.) பூர்ஷுவா கட்சிகளில், குலாக்குகள்-விவசாயிகள் குழுக்கள் உருவாக்கப்பட்டு, அவர்களது கட்சிகள் வட்டார அளவில் தோன்றலாயின. அத்தகைய கட்சிகளில் மக்களை அணிதிரட்டுவதில் சாதி ஒரு முக்கிய பங்காற்றியது. தலித்துகளை ஒடுக்குவதில், இந்த இடைநிலை சாதிகளின் விவசாயிகள் (சூத்திர சாதிகள் என்று சொல்லப்படுவோர்) பழைய நிலக்கிழார்களின் வாரிசுகளான மேல்சாதியைச் சேர்ந்த பூர்ஷுவா நிலப்பிரபுக்களையும் மிஞ்சியவர்களாக இருந்தனர்.
பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி என்றெல்லாம் சொல்லப்பட்ட புரட்சிகள், கிராமப்புறங்களிலும், வேளாண் தொழிலிலும் மூலதன வரவுக்கு வழிகோலும் விதமாக செழிப்பானக் களத்தை தயார் செய்தன. மறுபுறம், மூலதனத்தின் பலத்திற்கு ஏற்றவாறு, உபரியைக் கைப்பற்றிக் கொள்வதற்கான வாய்ப்பை முதலாளித்துவ நிலப்பிரபு-குலாக்குகளுக்கு வாரி வழங்கின. வேளாண் மற்றும் அதுசார்ந்த துறைகள் நாடு முழுவதிலும் வளர்ச்சியடைந்தது. நகர்புற செல்வந்தர்கள் கூட தங்களது மூலதனத் திரட்டிலிருந்து விவசாயத்தில் முதலீடு செய்தனர். மூலதனத் தீவிரமுடைய நவீன விவசாயப் போக்கு முன் நகர்ந்தது. விவசாயக் குடிகளுக்கிடையிலான பாகுபாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. இயற்கைப் பொருளாதாரம் மற்றும் வட்டாரச் சந்தை ஆகியவற்றின் எச்சம் துடைத்தழிக்கப்பட்டது, தொலைதூரப் பகுதிகள்கூட தேசிய மற்றும் சர்வதேசியச் சந்தையோடு இணைக்கப்பட்டது. பழைய நில வாடகை முறை இன்னும் சில இடங்களில் நிலவியது, ஆனால் முதலாளித்துவ வளர்ச்சிப் பாதைக்கு அது தடையாக இருக்கவில்லை (மார்க்ஸும் எங்கெல்ஸும் இதனை தெளிவுபடுத்தியுள்ளனர்).
வாடகையின் பண்பு முற்றிலும் முதலாளித்துவமாகி விட்டது. விவசாயத்தில் உள்ள முதலாளித்துவமானது ஒன்று, முன் முதலாளித்துவ அமைப்புகளை உடைத்துவிட்டது அல்லது இணைத்துக் கொண்டது. முன் முதலாளித்துவ எச்சங்களின் இருப்பு வட்டம் சுருங்கிக் கொண்டே வருகிறது. இந்தப் போக்கானது கிராமப்புறங்களிலிருந்து பெருமளவிலான உழைப்பாளர் இடப்பெயர்வுக்கு வழிவகுத்தது. தொழிற்துறை முதலாளித்துவத்திற்கு உழைப்பு சக்தியை குறைந்த விலைக்கு வாங்குவது எளிதாகி விட்டது. பெருநகர தொழில் நகரங்களின் நரகம் போன்ற தொழிலாளர் காலனிகள், தற்காலிக, முறைசாரா, தினக்கூலி, ஒப்பந்த மற்றும் எண்ணிக்கை விலைத் தொழிலாளர்கள் மற்றும் மாபெரும் அளவில் அரைப் பாட்டாளி வர்க்க கூட்டங்களால் நிரம்பியது.
இவ்வாறாக, இடைப்பட்டதரமான, சிதைந்த-நெளிந்த முதலாளித்துவமானது இந்தியாவில் கூடுதல் வலி மிகுந்த பாதையில் வளர்ந்தது, மெல்ல மெல்ல முன் முதலாளித்துவ அமைப்புகளை ஒன்று உடைத்தது அல்லது, இணைத்துக் கொண்டது அல்லது அடக்கியது. அத்தகைய முதலாளித்துவமானது ஆரோக்கியமான ஜனநாயக மதிப்பீடுகளையும், நம்பிக்கைகளையும் உருவாக்க தகுதியற்றது. அதன் ஜனநாயகமானது மிகவும் வரையறுக்கப்பட்டது, சிதைந்து-நெளிந்தது. அதனால்தான் அது முன்-முதலாளித்துவ மதிப்பீடுகள் மற்றும் நிறுவனங்கள் மீது கை வைக்கவில்லை. கப் பஞ்சாயத்துகள் மற்றும் சாதிப் பஞ்சாயத்துகள் தொடர்ந்தன, வைதீகத் தளைகளின் இருப்பு தொடர்ந்தது. அவை ஓரளவுக்கு பலவீனப்பட்டதென்றால், அது அரசின் முயற்சியாலோ அல்லது, அரசமைப்பு விதிகளினாலோ அல்ல மாறாக, முதலாளித்துவ வளர்ச்சியின் சுதந்திர புறவய இயக்கத்திற்கு அதில் பங்கிருக்கிறது. மதங்களின் தலையீடு முடிவுக்கு வரவில்லை, சற்று தளர்ந்திருக்கிறது. ஆனால், மறுபுறம் புதிய நவீனப் பிரிவுகள் தோன்றியுள்ளன, அவை மூட நம்பிக்கையை பரப்புவதற்கான, முன்பிருந்த நிலையை அப்படியே தக்கவைத்துக் கொள்வதற்கான செயலூக்கக் கருவிகளாக இருப்பதோடு, மூலதனத் திரட்டல் மற்றும் முதலீட்டிற்கான ஒரு சாதனமாகவும் இருக்கிறது. முதலாளித்துவ அமைப்பில், மதத்தின் புறவய அடிப்படையே, சரக்கு உற்பத்தியின் கண்ணுக்குத் தெரியாத சக்தி, மேலும், மதம் என்பது இன்றைக்கு ஆளும் வர்க்க மேலாதிக்கத்திற்குப் பயன்படும் செயலூக்கமுடைய மேற்கட்டுமானக் கருவியாகும். ஆனால், சாதியமைப்பு என்பது மேற்கட்டுமானத்தோடு மட்டும் பிணைந்திருப்பதல்ல. அது, முதலாளித்துவ உற்பத்தி உறவுகளிலும் ஆழமாகச் சிக்குண்டு, இணைக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது.
நிலப்பிரபுத்துவ எச்சம் அல்லது நிலப்பிரபுத்துவ மேற்கட்டுமானத்தின் ஆற்றல்மிக்க தொடர்ச்சி என்பதோடு தொடர்புடைய பிரச்சினையல்ல இது. சாதியடிப்படையிலான மதிப்பீடுகள்-நம்பிக்கைகள் மற்றும் பாகுபாடுகள் மூலம் பொல்லாங்குகள் கொண்ட ஒரு புதிய பொருளாதார அடித்தளமொன்று உருவாக்கப்பட்டு விட்டது. பல்வேறு மக்கள் பிரிவின் சாதியக் கொள்கைகளை உடைக்காமல் முதலாளித்துவ உற்பத்தியும், விநியோக அமைப்பும் அதன் மேலாதிக்கத்தை நிறுவியுள்ளது. உதாரணமாக, இன்றைக்கு ஆதிக்க சாதி மக்களே பெரும்பாலும் அரசு அதிகாரத்தில் உள்ளனர். சுதந்திர அறிவுஜீவித் தொழில்களும், சாதியும் அவர்களின் ஒற்றுமைக்கும், தங்களின் வர்க்க நலனைக் காக்கவும் பிணைப்பாக செயல்படுகின்றன. அதற்கு எதிர்ச்செயலாக, அவர்களின் கீழ்நிலையில் இருக்கும், தலித் சாதிகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சார்ந்த அலுவலர், எழுத்தாயர் மற்றும் சுதந்திர அறிவுஜீவிகள் சாதியடிப்படையிலானக் குழுக்களாக தம்மை ஒருங்குபடுத்திக் கொள்கின்றனர்.
கிராமப்புறங்களில், ஆதிக்க சாதி முதலாளித்துவ நில உடைமையாளர்கள் மற்றும் இடைநிலை சாதி குலாக்-விவசாயிகள் தலித்துகளையும், ஏழை விவசாயிகளையும் ஒடுக்க சாதியடிப்படையிலான அணிதிரட்டலை மேற்கொள்கின்றனர். அப்போது மேல் சாதியைச் சேர்ந்த ஏழைகள் கூட, எழுச்சியுடனோ அல்லது அடக்கத்துடனோ தங்கள் சாதியைச் சேர்ந்த சுரண்டலாளர்களின் பக்கம் நிற்கின்றனர் என்பதே இந்த சாதி அடிப்படையிலான அணிதிரட்டலின் மூலம் கிடைக்கும் வெற்றியாகும். அதேபோல், தலித்துகளும், தங்களின் அடையாளத்தையும், சுயமரியாதையையும் காக்கும் வண்ணம் தற்காப்பு ஒற்றுமை வேண்டி அம்பேத்கரின் பாரம்பரியத்தைத் தூக்கிப் பிடிக்கும் கட்சியின் தலைவர் பின்னால் அணிதிரள்கின்றனர்.
நகரங்களின் நிலைமை சற்று மாறுபட்டது. ஆனால் அங்கும், அதன் பொருளாயத அடிப்படையிலும் சாதி அடிப்படையிலான பாகுபாடுகள் நிலவத்தான் செய்கின்றன. முறைசார் தொழிலாளி வர்க்க மக்களில் மேலான வாழ்க்கை நிலை கொண்ட தலித்துகளின் விகிதம் என்பது மிகக் குறைவு. முறைசாராத் தொழிலாளர்களில் அவர்களுடைய விகிதம் குறிப்பிடத்தக்கது, அங்கும் அசுத்தம் எனக் கருதப்படும் பணிகளிலேயே அவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். மேலும், கடுமையான, குறைந்த ஊதியம் மட்டுமே கிடைக்கக் கூடிய தொழில்களையும் அவர்களே செய்ய வேண்டும். அரசாங்கப் பணிகளிலும், துப்புரவுத் தொழிலாளர்கள் தலித்துகளே. இடஒதுக்கீடானது 10 சதவிகித தலித் மக்களுக்கே பயன்பட்டுள்ளது, வேலைப் படிநிலையில் ஒருவர் மேலே போகும்போது, அது ஒன்று அல்லது இரண்டு சதவிகிதமாகக் குறைந்து போகிறது. நிர்வாகம், இராணுவம், காவல்துறை, நீதித்துறை மற்றும் சுதந்திர அறிவுஜீவிப் பணிகள் எல்லா இடத்திலும் இதே நிலைதான். இதற்கு சமமான நிலையில் இருக்கும் சமூகம் ஒன்று உண்டென்றால் அது முஸ்லிம் சமுதாயமாகும், பெரும்பாலானவர்கள் ஏழைகளாக இருக்கின்றனர், அவர்களில் பெரும்பாலர் சுதந்திர கைவிவினைத் தொழிலில் ஈடுபடுகின்றனர்.
தொழிற்சாலை தொழிலாளர்களிடையே, வேரோடு இன்னும் தூக்கி எறியப்படாத மேல் மற்றும் இடைநிலைச் சாதிகளை சார்ந்தவர்கள் பெரும் எண்ணிக்கையில் உள்ளனர். இருக்கும் கொஞ்ச நஞ்ச நிலத்தில் நஷ்டத்தையும் சமாளித்துக்கொண்டு தங்கள் கூலிகள் மூலம் காலம் தள்ளுகின்றனர். அத்தகைய தொழிலாளர்களின் பாட்டாளி வர்க்கப் பண்பில் விவசாயத்தின் சாயல்களை நாம் காண முடியும், மேலும் அது வர்க்க உணர்வை மழுங்கடித்து, சாதிய முற்சாய்வை தக்கவைத்துக் கொள்கிறது. சாதி அடிப்படையிலான பாகுபாடு மற்றும் தாழ்த்தப்படுதலானது சாதியடைப்படையில் ஒன்றுபடும் உணர்வையே அவர்களிடத்தில் ஏற்படுத்துகிறது. நகரங்களிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் தலித் சாதிகள் விலக்கி வைக்கப்படுவது நிகழ்கிறது. கிராமங்களைப் போல் அது வெளிப்படையாகத் தெரிவதில்லை. இப்போக்கை தொழிலாளர் வர்க்கத்தில் மட்டுமல்ல இடைநிலைச் சாதிகளிலும் காணலாம். குடியிருப்பு கூட்டுறவு சமுதயாங்களில், தலித்துகளோ முஸ்லீம்களோ உறுப்பினராவதென்பது இயலாத காரியம். பெரு நகரங்களில்கூட வீடு வாடகைக்குப் பிடிப்பது கடினமாக இருப்பதற்கும் சாதி (அல்லது மதம்) ஒரு காரணம்.
இந்தியாவில் உள்ள பூர்ஷுவா பாராளுமன்ற அரசியலானது சமூக பொருளாதார திட்டங்களின் அடிப்படையில் வேலை செய்வதில்லை. மாறாக, மூலத்தனத்தின் திறந்த விளையாட்டின் உதவியுடனும், சில ஜனரஞ்சக வாக்குறுதிகள் மூலமாகவும் அல்லது நிலவும் மனநிலைக்கு ஏற்பவும் செயல்படுகிறது. ஆனால், சாதி அடிப்படையிலான பிரிவினை என்பதே இன்று அதன் முக்கியத் தூண். பூர்ஷுவா கட்சிகளின் கொள்கைகள் மூலம் சாதிக்கு எந்த சேவையும் செய்யவில்லை, மாறாக ஆளும் வர்க்கத்திற்கே சேவை செய்கிறது. அது, சிறு, பெரு முதலாளிகள், குலாக்குகளின் குழுக்கள் மற்றும் நிலக்கிழார்கள், குலாக்குகள் மற்றும் வட்டார முதலாளிகளை உள்ளடக்கியிருக்கிறது. பிராந்திய முதலாளிகள் தங்களுக்கென்று கட்சிகளை வைத்துக்கொள்கிறார்கள், அவர்களுடைய வர்க்க நலன்களும் ஒன்றோடு ஒன்று மோதுகின்றன. ஆனால், பொதுவான பூர்ஷுவாப் பொருளாதார கொள்கைகள் மற்றும் பாராளுமன்ற அமைப்பின் மீது அவர்களுக்குள் ஒற்றுமை நிலவுகிறது.
அதேபோல், பல்வேறு சாதியினரின் ஆதரவு வேண்டி ஒவ்வொரு பெரிய பூர்ஷுவாக் கட்சிகளிலும் பல்வேறு சாதித் தலைவர்கள் உள்ளனர். சட்டமன்றத் தொகுதிகளுக்கு வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பது கூட குறிப்பிட்ட தொகுதியின் சாதி விகிதம் பொருத்தே அமைகிறது. பிராந்திய முதலாளிகளின் நலன்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சிகளைப் பொறுத்தவரை, நடுத்தர வர்க்கமே அவர்களது முக்கிய ஓட்டு வங்கி. தலித்துகளின் பிரதிநிதிகளாகச் சொல்லிக் கொள்ளும் அனைத்து பாராளுமன்ற கட்சிகளும், கொள்கை அளவில் மிகுந்த சந்தர்ப்பவாதக் கட்சிகள், வளம் மிக்க தலித் நடுத்தர வர்க்கம் அதில் தலைமைப் பதவி பெற்றுவிடுகின்றன. தலித் அரசு அதிகாரிகளும், அறிவுஜீவிகளும் அதற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். நூற்றாண்டுகாலமாக ஒடுக்கப்பட்டுவந்த தலித் மக்களை சாதிய அடிப்படையிலான ஓட்டு வங்கியாக மாற்றுகின்றனர். அடிப்படை ஆதார மாற்றம் என்று கூறி புதிய நம்பிக்கைகளை இக்கட்சிகள் ஊட்டுகின்றன. அதேவேளை, காங்கிரஸ், பிஜேபி அல்லது எந்தக் கட்சியுடனாவது சந்தர்ப்பவாதக் கூட்டணிகள் அமைத்துக் கொள்ளத் தயங்குவதுமில்லை. கூட்டணி எனும் பூர்ஷுவா அரசியலில் இக்கட்சிகள் எடைத் தராசின் எடைக் கற்களாகின்றனர். அதிகாரத்தில் பங்குபெற்று சமூக ஒடுக்குமுறை மற்றும் இழிவுபடுத்துதலை வெல்ல நினைக்கும் தர்க்கமானது கடந்த எழுபது ஆண்டுகளில் இந்தளவில்தான் இருக்கிறது; அடையாள அரசியலின் விற்பனையாளர்கள் ஒரு அரங்கத்திற்குள் இதை எவ்வளவு வேண்டுமானாலும் கொண்டாடிக் கொள்ளட்டும், ஆனால் சாதாரண உழைக்கும் தலித் மக்கள் இதனால் எந்தப் பயனையும் அடையப்போவதில்லை. இதுவரையிலும் எதையும் சாதிக்கவில்லை, எதிர்காலத்திலும் எதையும் சாதிக்கப் போவதுமில்லை.
(சாதியப் பிரச்சினையும் அதற்கான தீர்மானங்களும்: ஒரு மார்க்சியக் கண்ணோட்டம் - அர்விந்த் மார்க்சியக் கல்வியகம், சாதியப் பிரச்சினையும் மார்க்சியமும்: தொடரும் விவாதம்... பக். 84)


No comments:

Post a Comment