Apr 27, 2019

பா இரஞ்சித்தின் உழைப்புப் பிரிவினை பற்றிய கருத்து தொடர்பாக

 


தனியுடைமையின் அடிப்படையிலான உற்பத்தி முறைக்கு ஏற்ற உழைப்புப் பிரிவினை தான் எல்லாவித ஏற்றத்தாழ்வுகளுக்கும் அடிப்படை. அதுதான் உற்பத்தி உறவுகள் - வர்க்கப் பிரிவினை எனப்படுகிறது. இதை கூறினால் இந்த கம்யூனிஸ்டுகளுக்கு சாதியப் பிரச்சினை குறித்து புரிதல் இல்லை என்பார்கள். சரி கம்யூனிஸ்டுகளுக்கு சாதி இல்லைஅதனால அவங்க சொன்னா கேட் வேண்டாம்மார்க்ஸ் இந்தியாவில் பிறக்கவில்லை.. (அதனால் அவருக்கும் சாதி இல்லை) அதனால் அவர் சொன்னாலும் கேட்க வேண்டாம்.

இப்போது தோழர் பா. இரஞ்சித் மார்க்சியம் எடுத்துரைக்கும் உழைப்புப் பிரிவினையை அடியொட்டி ஒன்றை கூறியிருக்கிறார். (அம்பேத்கர் அவர்கள் உழைப்புப் பிரிவினையை பேசியிருந்தாலும், அவர் உழைப்பாளர் பிரிவினை என்பதை வேறுபடுத்தி பார்த்து, அது சாதிஅது வேறு என்னும் வகையில் ஆய்வு செய்து, அதற்கான தீர்வுகளை முன் வைத்ததில் சில தவறுகளும், போதாமையும் இருக்கிறது என்பதே எங்களது வாதம்இதை அவதூறு என்பவர்கள்அதற்காக எனக்கு சாதி வெறி சாயம் பூசுபவர்கள்  அறிவார்ந்த விவாதங்களில் ஈடபட அறியாதவர்கள்அவ்வளவே). இரஞ்சித் சொல்வதன் அடிப்படையை எப்படி கண்டடைவது. வியாக்கியானம் சரிவிடை எங்கே…. அதற்குதான் மார்க்சியம் அவசியத் தேவை! (நான் மொழிபெயர்த்த நூல்களை வாங்கிப் படித்து என்னை கோடீஸ்வரியாக்கி விட வேண்டாம். மற்ற மார்க்சிய நூல்களை படித்துப் பார்க்கவும்.)

வரலாறு பற்றிய கருத்துமுதல்வாத கண்ணோட்டத்தைப் பொதுவாகவும், ஜெர்மானியின் பின்-ஹெகலிய தத்துவத்தைக் குறிப்பாகவும் விமர்சிக்கும்போது மார்க்ஸும், எங்கெல்ஸும் (1845-46: 63) இந்தியாவில் நிலவும் பக்குவற்ற உழைப்புப் பிரிவினையானது அரசு மற்றும் மத நிறுவனங்களால் சாதியமைப்பாக உருவெடுக்க வகை செய்தது என்றனர்.  சாதியமைப்புதான் பக்குவமற்ற அந்த உழைப்புப் பிரிவினையை ஏற்படுத்தியது என்னும் கருத்துமுதல்வாத நம்பிக்கையை அவர்கள் விமர்சனம் செய்தனர்3 .  இவ்வாறாக மார்க்ஸைப் பொறுத்தவரை (1846:158), சாதியப் படிநிலை ஆட்சி என்பதும் குறிப்பிட்ட வகையான உழைப்புப் பிரிவினையே4. வேறு சொற்களில் சொல்வதானால், “உழைப்புப் பிரிவினையே சாதியை உருவாக்கியது” (மார்க்ஸ் 1846-47: 114). இருப்பினும், இந்தக் குறிப்பிட்ட உழைப்புப் பிரிவினை பரம்பரை உரிமை’ என்னும் வகையில் உள்ளது (மார்க்ஸ் 1853b: 497)5.

மார்க்ஸைப் பொறுத்தவரை (1867:321), முந்தைய சமுதாயங்கள் தொழில்களைப் பரம்பரையாக்கி, சாதிகளாக அவற்றை உறைந்து இறுகச் செய்யும்’ (இந்தியாவைப் போல்) அல்லது கைவினைச் சங்கங்களாக சமைந்து கெட்டிப்படச் செய்யும் (எகிப்தைப் போல்) போக்கைக் கொண்டிருந்தன6. சாதியமைப்பின் கீழ் குறிப்பிட்ட தீர்மானகரமான சட்டதிட்டங்களுக்குஏற்ப உழைப்புப் பிரிவினை நிலவியது என்கிறார் மார்க்ஸ். இந்த சட்டங்களை சட்டம் இயற்றுபவர் நிறுவவில்லைஎன்றவர், கூடுதலாக, பொருளாயத அடிப்படையிலேயே இந்நிலைமைகள் தோன்றின என்றும், அவை சட்ட நிலைக்கு உயர்த்தப்பட்டன என்றும் கூறுகிறார்7.  பின்னர் அந்த சட்டமானது தொழிலை ஒரு மரபார்ந்த உரிமையாக்கி, சாதியமைப்பாக நிலைநாட்டப்படுகின்றன8. மார்க்ஸைப் பொறுத்தவரை, சமூகமானது குறிப்பிட்டளவு வளர்ச்சியை எட்டிய பின்னரே சாதிகள் மரபு வழியிலான சட்டநிலையை எட்டியது9.

https://saavinudhadugal.blogspot.com/2017/08/blog-post.html

சாதியமைப்பு பற்றிய மார்க்ஸின் கருத்துரு*:


(சாதியப் பிரச்சினையும் மார்க்சியமும்: தொடரும் விவாதம், பக். 211)

********


சில குறிப்பிட்ட அசுத்தமான பழக்கங்களால் உறவாடுவதற்கு தகுதியற்றவர்களாக தாழ்த்தப்பட்ட மக்கள் கருதப்படுகிறார்கள். இதுவே ’மேல்’ சாதியினர் சுமத்தும் குற்றம். அதாவது அவர்கள் இறந்த விலங்கின் இறைச்சி உண்ணுகிறார்கள், அதனால் அவர்கள் அசுத்தமானவர்கள்... [ஆனால்], கொலாபா மற்றும் ரத்னகிரி மாவட்டங்களில் ஒட்டுமொத்த மஹர் சாதியும், இறந்த விலங்கின் இறைச்சியை உண்ணும் பழக்கத்தைக் கைவிட்டுவிட்டது, ஆனால் அவர்களின் துன்பமும், சமூக ஒடுக்குமுறையும் தொடரத்தான் செய்கிறது. அதைப் பேசக்கூட முடியாது. அவர்கள் மீதுபொருளாதாரத் தடை மற்றும் சமூக ஒதுக்கலும் நிகழ்கிறது. காலம் காலமாக அவர்கள் பயிரிட்டு வந்த நிலங்கள் சாதி இந்து நிலப்பிரபுக்களால் பறிக்கப்பட்டுவிட்டன. மீண்டும் அசுத்தப் பணிக்கு அவர்கள் திரும்ப வேண்டும் என்பதற்காக எல்லாவிதமான சமூக, பொருளாதார நெருக்கடிகளும் அவர்கள் மீது தொடுக்கப்படுகின்றன” (அம்பேத்கர், தொகுதி 2, பக். 484).

இந்தத் தகவல்கள் உணர்த்துவது என்ன? அது இரண்டுவிதமானச் சூழலை விளக்குகிறது:

(1) உற்பத்தி சாதனம் இல்லாததால்வறுமை’.

(2) ‘சாதிஎன்னும் வடிவத்திலானஉழைப்புப் பிரிவினையால் நிலவும்தீண்டாமை’.

இந்த இரண்டு நிலைமைகளும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. இருந்தாலும் முடிந்தவரை அவற்றை நாம் தனித்தனியே புரிந்து கொள்ள வேண்டும்.

        (1) வறுமை: தீண்டப்படாதோர், நிலத்தையோ, உற்பத்தி சாதனத்தையோ உடைமையாகக் கொண்டிருக்கவில்லை. அப்படியே இருந்தாலும், அது சொற்பமான அளவே. மற்ற ’கீழ்’ சாதி மக்களுக்கு, மற்றும் சில ’மேல்’ சாதி மக்களுக்கும் இந்நிலை பொருந்தும். பெருமளவிலான உற்பத்திச் சாதனம் ’மேல்’ சாதியின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. துல்லியமாக, அதுவே அச்சாதியினரின் ஆயுதம்.

        (2) தீண்டாமை: விவசாயம் மட்டுமல்லாது, தெருவைச் சுத்தம் செய்தல், மலம் அள்ளுவது, இறந்த விலங்குகளைப் புதைப்பது, கழிப்பறையைச் சுத்தம் செய்வது ஆகிய பணிகளும் தீண்டப்படாதோரின் பணிகள். சமூகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் தேவையான மிகவும் அடிப்படைப் பணிகள் இவை. விவசாயம் தொடர்பான பணிகள் தீண்டப்படாதோர் மற்றும் சூத்திரர்களுக்கானவை. ஆனால், துப்புரவுப் பணி தீண்டப்படாதோருக்கு மட்டுமேயானது. துப்புரவுப் பணிகளால்தான் தீண்டாமை நிலவுகிறது என்று சொல்ல முடியாதென்றாலும், ‘தீண்டப்படாதோரே அசுத்தப் பணிகளைச் செய்கின்றனர்என்று சொல்லலாம். இதன் மூலம் நாம் வறுமை மற்றும் துப்புரவுப் பணி என்பதை தீண்டப்படாதோர் மத்தியில் மட்டுமே காண்கிறோம். இதற்குத் தீர்வுதான் என்ன?

        உழைப்புச் சுரண்டலால்வறுமைதோன்றுகிறது, எனவே உழைப்புச் சுரண்டலை ஒழிப்பதே அதற்கான தீர்வு.  சமூகத்தின் ஒவ்வொரு நபரும் உழைக்க வேண்டும். உழைப்பைச் செலுத்தாத ஒரு வர்க்கம் கூட இருக்ககூடாது என்பதே இதன் பொருள். தீண்டப்படாதோர் மட்டுமே துப்புரவுப் பணிகளைச் செய்ய நேர்வதால், கூலி முறையை ஒழிப்பதும், சுரண்டலுக்கான உறவுகளிலிருந்து எழுந்த உழைப்புப் பிரிவினையை ஒழிப்பதுமே அதற்கு தீர்வு. இதன் பொருள், ஒரு குறிப்பிட்ட பிரிவுக்கு மட்டும் துப்புரவுப் பணிகள் ஒதுக்கப்படக்கூடாது. ஒவ்வொரு ஆணும், பெண்ணும் அதைத் தன் கடமையென்று செய்ய வேண்டும். இவ்வாறாக, நாம் பழைய உழைப்புப் பிரிவினை முறையை மாற்ற வேண்டும். 

          நாம் மற்ற ’கீழ்’சாதியினரை எடுத்துக் கொண்டாலும் அவர்களிலும் இதே பிரச்சினை நிலவுகிறது: (1) வறுமை மற்றும் (2) உடல் உழைப்புக்கு மட்டுமே ஆளாதல். வறுமை என்பது உழைப்புச் சுரண்டலின் விளைவு. உடலுழைப்புக்கு மட்டுமே உள்ளாதல் என்பது பழைய உழைப்புப் பிரிவினையின் விளைவு. இங்கும், நமக்கு அதே தீர்வுதான் வழி.

          உற்பத்தி சாதனத்தின் பொருளாதாரப் பெயர்சொத்து. இது நிலம் மற்றும் இதர வளங்களைக் குறிக்கிறது.

          சாராம்சத்தில் சொத்து இரு வகைப்படும்: 1. தன் சொந்த உழைப்பை அடிப்படையாகக் கொண்ட சொத்து; 2. சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட சொத்து.

          (1) தன் சொந்த உழைப்பினால் கிட்டிய சொத்து: உதாரணத்திற்கு, ஒரு குடும்பத்திடம் 4 ஏக்கர் விவசாய நிலமிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். நிலமிருப்பதாலேயே பயிர் விளைவதில்லை. அதற்குப் பல வகையான உழைப்பைச் செலுத்த வேண்டும். நிலத்தில் பயிர்விளைவிக்க அக்குடும்பத்தில் உள்ள ஆணும் பெண்ணும் பலவிதமான உழைப்பைச் செலுத்துகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதில் கிடைத்த பயிரின் ஒரு பகுதியை விற்று, மற்றவர்களிடமிருந்து தமது வாழ்விற்குத் தேவையான பொருட்களை வாங்கி வாழ்கிறார்கள் என்றால், அவர்கள் தங்கள் சொந்த உழைப்பில் வாழ்கிறார்கள் என்று பொருள்.  இங்கு, மற்றஉழைப்பாளிகளைபணிக்கமர்த்தும் அவசியம் வரவில்லை. அதனால் இங்குஎஜமானர், உழைப்பாளிஉறவு இல்லை. இந்தக் குடும்பத்திற்கு 100 ஏக்கர் நிலங்கள் சொந்தமாக இருப்பின், தங்களுடைய சொந்த உழைப்பைக் கொண்டு ஒட்டு மொத்த நிலத்தையும் அக்குடும்பத்தால் உழ முடியாது. வேறு சொற்களில் சொல்வதானல், ஒவ்வொரு குடும்பமும் தம்மால் உழைக்கக்கூடிய அளவுக்கான உற்பத்தி சாதனங்களை மட்டுமே உடைமையாகக் கொண்டிருக்க வேண்டும். தன்னுடைய உழைப்பின் ஒரு பகுதி மற்றவற்களுக்குச் செல்லவில்லையென்றால், ஒருவர்ஏழ்மையில்வாழும் நிலை ஏற்படாது. அதேபோல், மற்றவரின் உழைப்பின் பகுதி தமக்குக் கிடைக்கவில்லையென்றால் ஒருவர்செல்வத்தைப்பெற முடியாது. ஒவ்வொரு மனிதரும் தமது சொந்த உழைப்பால் வாழும் அமைப்பில் ஏழ்மையோ, செல்வமோ நிலவாது என்பதே இதன் பொருள். அத்தகையச் சூழலில், வாழ்க்கை இயல்பாக இருக்கும் ஏனென்றால், வாழ்வின் தேவைகள் நிறைவேறப்பட்டு அங்கு தட்டுப்பாடோ, கூடுதலோ இருக்காது. எல்லாக் குடும்பங்களும் இதேபோல் வாழ்கின்றன என்று எடுத்துக் கொண்டால், எவரும் எஜமானரும் இல்லை, உழைப்பாளரும் இல்லை. எல்லா மனிதர்களும்சமஉழைப்பு உறவில் வாழ்வர். ஒவ்வொரு மனிதரும் / குடும்பமும் தனித்தனியாக வாழும் சமூகம்தனிநபர் உற்பத்தியாளர்களின் சமூகம்’. அது, ‘தனி நபர் உற்பத்தியாளர்களின் சொத்துடைமை அமைப்புஎன்றாகும். 

          இந்த எல்லாத் தனிநபர்களும் தங்களுடைய தனிச்சொத்துக்களை ஒன்றிணைத்து, முன்னர் போலவே உழைத்தால் அதுகூட்டு உற்பத்தியாளர்களின்சமூகமாகும். வேறு சொற்களில் சொல்வதானால், அது கூட்டு உற்பத்தியாளர்களின் அமைப்பு.

          எல்லா நபர்களும் உழைப்பதால்தனிநபர் உற்பத்தி சொத்துடைமை அமைப்பிலோ அல்லது, கூட்டு உற்பத்தி சொத்துடைமை அமைப்பிலோ உழைப்புச் சுரண்டல் இருக்காது. ஒரு தனிநபர்கூட ஏழ்மையில் வாழும் நிலை ஏற்படாது. எஜமானர், உழைப்பாளி என்னும் சமமற்ற உழைப்புசார் உறவு (உற்பத்தி உறவு) நிலவாது. (அல்லது ஏற்றத்தாழ்வுடன் கூடிய உற்பத்தி உறவுகள் நிலவாது).

          (2) உழைப்புச் சுரண்டலினால் நிலவும் சொத்துடமை அமைப்பு:  இது முதலில் சொன்ன அமைப்பிலிருந்து முற்றிலும் மாறானது. இதைப் புரிந்துகொள்ள, முதலில் சொன்ன அமைப்பைத் தலைகீழாகப் போட்டால் போதுமானது. இந்த சொத்துடைமை அமைப்பில், ஒரு சிறுபான்மைக் கூட்டம் சொத்துடைமையின் பெயரால் நிலத்தையும், மற்ற உற்பத்தி சாதனங்களையும் கொண்டிருக்கும். பெரும்பான்மை நபர்களுக்கு சொத்திருக்காது. உற்பத்தி சாதனங்கள் தாமாக பொருளை உற்பத்தி செய்யாது. அந்த உற்பத்தி சாதனத்தைக் கொண்டு பலவிதமான உழைப்பைச் செலுத்தினாலே வாழ்க்கைக்குத் தேவையான பொருளீட்ட முடியும். ஆனால் இந்த அமைப்பில், உற்பத்திச் சாதனங்களைக் கொண்டிருப்போர் உழைப்பைச் செலுத்துவதில்லை. அவர்கள் எஜமானர்களாகி, உற்பத்தி சாதனங்களற்றோரை, உழைப்பாளிகளாகப் பணிக்கமர்த்துகின்றனர். அதன் பிறகு நடப்பதென்ன என்பது வெட்டவெளிச்சம். உழைப்பாளிகளின் பெருமளவிலான உழைப்பு எஜமானர் வர்க்கத்திற்கு செல்கிறது. இப்படித்தான் அந்த வர்க்கம் வாழ்கிறது. இது உழைப்புச் சுரண்டலின்றி வேறில்லை. இது பலவித அடையாளங்களின் கீழ் நடக்கிறது: ‘நிலத்திற்கு வாடகை’, ‘சொத்துக்கு’ ‘வட்டிமற்றும்இலாபம்’. ஒட்டுமொத்த சுரண்டலின் இரகசியமும், இந்த மூன்று வருவாயில் ஒளிந்திருக்கிறது: வாடகை, வட்டி மற்றும் இலாபம்.  இந்த வருவாய் மூலங்கள் ஒருவருடைய சொந்த உழைப்பால் கிட்டுவதில்லை. இந்த சொத்துடைமை முறையில், உழைக்கும் வர்க்கத்திற்கு வறுமையும், எஜமானர் வர்க்கத்திற்குச் செல்வமும் வாழ்க்கை நிலைமைகளின் அங்கங்களாகின்றன.

          இந்தச் சொத்துக்கள் அடிமை உடைமையாளர்களின் சொத்து என்பதாகவோ, முதலாளிகளின் சொத்து என்பதாகவோ, அல்லது இதே பண்புகளோடு வேறு பெயர்களைக் கொண்டதாலோ நிலவுகின்றது.

          மனித சமூகத்தின் பண்டையக் காலத்தை விட்டுவிட்டுப் பார்த்தால், இன்றுவரை நிலவும் வரலாறு முழுக்க சுரண்டல் உறவின் பல வடிவங்களையே கொண்டிருக்கிறது.

          சாதியமைப்பைஎடுத்துக் கொண்டாலும், தீண்டப்படாதோரும், சூத்திரர்களும் ’மேல்’ சாதியினருக்குப் பணி செய்யும் உழைப்பாளிகள். இந்தப் பிரிவு செலுத்தும் உழைப்பு முழுவதும் உடலுழைப்பே. ’மேல்’ சாதியின் ஒரு பிரிவு உடலுழைப்பைச் செலுத்தாமல், மூளை உழைப்பைச் செலுத்துகிறது. ’கீழ்’ சாதியினருக்கு மூளை உழைப்பைச் செலுத்தி பிழைக்கும் வாய்பு இல்லை.

          இதுவே அவர்களின் நிலைமை. இந்த நிலைமைகளை நாம்வறுமை’, ‘சாதிப் பாகுபாடுஎன்று பகுத்துக் காண வேண்டும்.

          வறுமைக்கானத் தீர்வுஉழைப்புச் சுரண்டலைஒழிப்பது. எல்லா மனிதரும் உழைத்து வாழ வேண்டும். சுரண்டலின் விளைவால் ஈட்டும் சொத்துடைமை அமைப்பை ஒழிக்க வேண்டும். ‘சாதியப் பாகுபாட்டிற்கானதீர்வு, சுரண்டல் நிறைந்த உழைப்புப் பிரிவினையை மாற்றி அமைக்க வேண்டும்.  ஒவ்வொரு நபரும் ஒரு குறிப்பிட்ட அளவு உடலுழைப்பையும் (அசுத்தப் பணிகள் உட்பட), குறிப்பிட்ட அளவு மூளை உழைப்பையும் செலுத்தி வாழ வேண்டும். சாதிக் கலப்புத் திருமணம் போன்ற சில மேல்மட்ட மாற்றங்களும் இந்த மாற்றத்தின் ஒரு பகுதியே.

          தீண்டாமை ஒழிப்பு, சாதி ஒழிப்பு மற்றும் வறுமை ஒழிப்பு போன்ற எல்லாப் பிரச்சினைகளையும் அம்பேத்கர் விவாதித்தார். மேலும், ‘மதம்என்பதை மனித சமூகத்தின் ஒரு இலக்காக அவர் சேர்த்துக் கொண்டார். இனி வரும் அத்தியாயங்களில் இந்தப் பிரச்சினைகளை நாம் ஆய்வு செய்ய வேண்டும்.

…. (சாதியப் பிரச்சினைக்கான தீர்வு: புத்தர் போதாது, அம்பேத்கரும் போதாது! மார்க்ஸ் அவசியத் தேவை, பக். 152 – 155)

இந்தச் சொற்களுக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்தப் பொருளாதாரத்திற்கும் இரண்டு பொருள் உள்ளது. உழைப்புச் சுரண்டலை மேற்கொள்வதற்கான எல்லாவிதமான பொருளாதார உரிமைகளையும், ஒத்த உறவுகளையும் அங்கீகரிப்பதே முதல் வகையான பொருளாதாரம். அதுவே முதலாளித்துவப் பொருளாதாரம் அல்லது பூர்ஷுவா பொருளாதாரம். அதற்கு எதிரான பொருளாதாரமே இந்த உழைப்புச் சுரண்டலை எதிர்க்கிறது, பூர்ஷுவா பொருளாதாரத்தை நிராகரிக்கிறது. அதுவே மார்க்ஸியப் பொருளாதாரம் அல்லது கம்யூனிசப் பொருளாதாரம். 

          உழைப்புச் சுரண்டலை ஒழிப்பதற்கும், சமத்துவத்தை ஈட்டவும் மார்க்ஸியப் பொருளாதாரம் மூன்று விசயங்களை முதன்மையாகத் தருகிறது.

1)       ஆண் பெண் உள்ளிட்ட அனைத்து நபர்களும் உழைக்க வேண்டும். அவர்களுடைய உழைப்பே அவர்களின் வாழ்வாதாரத்திற்குப் பொருள் ஈட்டித்தர வேண்டும்.
          2)       வருமானத்தை ஈட்டித்தரும் வாடகை, வட்டி, இலாபம் மற்றும் சுரண்டல்வாதச் சொத்துரிமை ஆகியவற்றை ஒழிக்க வேண்டும்.
          3)       ஒரு நபர் உடல் உழைப்பையும், மற்றவர் மூளை உழைப்பையும் செலுத்தும் சுரண்டல்வாத உழைப்புப் பிரிவினையை ஒழிக்க வேண்டும். எல்லா ஆண்களும், பெண்களும் குறிப்பிட்ட அளவு உடல் உழைப்பு, குறிப்பிட்ட அளவு மூளை உழைப்பு செலுத்தும் புதிய வகை உழைப்புப் பிரிவினையை நிறுவ வேண்டும்.

          இந்த மாற்றங்கள் நிகழ்ந்தால் மட்டுமே, உழைப்புசார் சுரண்டல்வாத உறவுகள் சமமான உழைப்புசார் உறவுகளாகும் (உற்பத்தி உறவுகளாகும்). சுரண்டல்வாதச் சமூகம் ஒரு புதிய தன்மை கொண்ட சமூகமாக மாறும்.

          மார்க்சியம் குறித்த அறைகுறை ஞானம் உடையவர்களே அது முதலாளிகள் மற்றும் தொழிலாளர்கள் உறவு பற்றி மட்டும் பேசுகிறது, பெண்கள் உட்பட சமூகத்தின் மற்ற பிரிவுகள் குறித்துப் பேசவில்லை என்று கருதுகின்றனர். ஆனால் அது முற்றிலும் தவறானது.

          அடிமைச் சமூகக் காலத்திலிருந்து வரலாற்றில் நாம் எந்தக் காலத்தை எடுத்துக் கொண்டாலும், சமூகம் பல வர்க்கங்களாக, உட்பிரிவுகளாக பிளவுபட்டிருப்பதைக் காண முடியும்.  ஆனால் அந்த வர்க்கங்களும், உட்பிரிவுகளும் அடிப்படையில் இரண்டு வர்க்கங்களாகச் சுருங்கி நிற்கும், அவை: உழைக்கும் வர்க்கம், உழைக்காத வர்க்கம். மூன்றாவதாக ஒரு வர்க்கம் ஒரு பகுதி தனது உழைப்பிலும், ஒரு பகுதி சுரண்டலிலும் வாழ்ந்தாலும், அந்த உட்-பிரிவுகளில் ஒரு பகுதியை நாம் உழைக்கும் வர்க்கமெனவும், ஒரு பகுதியை உழைக்காத வர்க்கம் எனவும் வகுத்துக் கொள்ளலாம். மொத்தத்தில் ஒட்டுமொத்த மக்கள் தொகையும் - ஆண், பெண் மற்றும் முதியவர் அனைவரும் இந்த இரண்டு வர்க்கத்தின் கீழ் வருபவரே. இந்த இரண்டு வர்க்கம் பற்றிய குறிப்பு ஒட்டு மொத்த சமூகத்தையும் குறிப்பதாகும்.

          எஜமானர் என்ற சொல்லை நாம் பயன்படுத்தினால், அவர் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் அந்த பதத்தின் கீழ் வருவர். உழைப்பாளர் என்ற சொல்லை பயன்படுத்தினால், அவர் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் அந்த பதத்தின் கீழ் வருவர். இந்த இரண்டும் சேர்ந்து முழுச் சமூகமாகிறது.

           உற்பத்தி ஈட்டும் உழைப்பு, உற்பத்தி ஈட்டாத உழைப்பு மற்றும் குடும்ப உழைப்பு என்று வெவ்வேறு வகையான உழைப்புசார் உறவுகள் இந்த சமூகத்தில் பின்னிப் பிணைந்திருக்கின்றன.

          ஆண், பெண், இளைஞர் என எல்லாரும் ஏதோ ஒரு வர்க்கம் அல்லது ஒரு வர்க்கப் பிரிவின் கீழே வருவர். உழைப்புசார் உறவில் ஒருவர் பெறும் இடமும், வாழ்வாதாரத்திற்கான அவரது பொருளீட்டும் முறையும் வர்க்கத்தில் அல்லது பிரிவில் அவரது இடத்தைத் தீர்மானிக்கிறது.

          பிச்சைக்காரர்கள், சிறைக் கைதிகள், அனாதை ஆசிரமத்தில் வசிப்போர், மத நிறுவன ஊழியர்கள், ரௌடிகள் போன்றோரும் தங்களது வருமான ஆதாரத்தைப் பொறுத்து ஒரு ஏதோ ஒரு வர்க்கத்தின் கீழ் வருவர். இந்த உதாரணங்களில், மத நிறுவனங்களில் வாழ்வோர் தவிர மற்ற அனைவரும் தொழிலாளர் வர்க்கத்தைச் சார்ந்தவர்கள். விலை மாதர்களும் ஒரு தொழில் செய்து வாழ்கின்றனர் என்றாலும், அதை உழைப்பு என்று சொல்ல முடியாது. விலைமாதர்கள், ரௌடிகள் உழைப்பாளிகள் அல்லர்.

          இந்த உழைப்புசார் உறவுகள் (உற்பத்தி உறவுகள்) அனைத்தையும் நாம் புரிந்து கொண்டால், சமூகத்தின் ஒட்டுமொத்த மக்கள் குறித்தும் மார்க்சியம் பேசுகிறது என்பது விளங்கும். 

(சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு: புத்தர் போதாது! அம்பேத்கர் போதாது! மார்க்ஸ் அவசியத் தேவை, பக். 189 – 190)

சிறு குறிப்பு: இந்நூல் தான் நான் மொழிபெயர்த்த முதல் நூல். ஆகவே மொழிபெயர்ப்புக்கு நேர்மையாக இருப்பது என்னும் புரிதலின் காரணமாக lower, upper என்பதை அப்படியே மேல், கீழ் என்று மொழிபெயர்த்திருந்தேன் (Oppressed, Depressed என்றால் மட்டுமே ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட என்று பொருள். அம்பேத்கர் அவர்களின் எழுத்துகளை மொழிபெயர்த்திருப்பவர்களும் இத்தகைய தவறுகளை செய்துள்ளனர்). பின்னர் தோழர் அரங்க. குணசேகரன் அவர்கள் அது தவறு என்பதை சுட்டிக்காட்டி, குறைந்தபட்சம் அடைப்புகுறிகளுக்குள் நீங்கள் போட்டிருக்கலாம் என்றார். ஆனால் அதற்குள் நூல் வெளி வந்துவிட்டது.

ஆகவே இப்போது நான் அதையே மேற்கோள் காட்டியிருப்பதால் மொழிபெயர்ப்பை மாற்றுவது நேர்மையாக இருக்காது. ஆனால் அது அதிகாரச் சொற்கள் என்பதால் அடைப்புக்குறியை மட்டும் சேர்த்துள்ளேன்.

மொழிபெயர்ப்பு தவறுக்காக மன்னிப்பு வேண்டுகிறேன். 

No comments:

Post a Comment