#வசுமித்ர அரிவாள் வெட்டு! என்னவென்று தெரியாத நண்பர்களுக்காக… மார்ச் 17, 2010 (நான் வசுவுடன் இணைந்து 3 மாதங்கள் இருக்கும்) அன்று இரவு 9.30 மணிக்கு
இருவரும் கை கோர்த்துக் கொண்டு கே.கே நகர் அழகிரிசாமி சாலை அருகே நடந்து செல்லும்
போது ஒரு ரௌடி கலாச்சார காவலராக “ஏய்! கையை விட்டுட்டு நடங்க,
உங்களை மாதிரி ஆளுங்களால தான் கலாச்சாரம் கெடுது” என்று எச்சரிக்கை விடுத்தான். அதனைத் தொடர்ந்து வசு எதிர்ப்பு
தெரிவிக்கும் விதமாக வாக்குவாதம் செய்தான். பேச்சில் தனது பெயர், ஊர், தான் செய்யும் வேலைகளைக் குறிப்பிட்டு இதுதான்
என் பயோடேட்டா… உன்னைப் பற்றி சொல்லு, யார்
நீ… யார் உன் தலைவன் என்று கேள்விகளை எழுப்ப… அந்த ரௌடி வசுவின் சாதியை உணர்ந்துகொண்டான். அதனால் தான் வெட்டினான்!
அதாவது சாதியப் பெருமையையும், ஆணாதிக்கப் பெருமையையும்
காத்துக்கொள்ள வெட்டினான். அதாவது வெட்டியவன் ‘சாதி’,
வெட்டப்பட்டவன் ‘சாதி’ ஒன்று
தான். (குறைந்தது அந்த மூன்றில் ஒன்று)
ஊர் வழக்கில் சொல்வதானால் “சொந்த
சாதிக்காரன் தாம்போய்” வெட்டினான். (வசு பிழைத்ததே பெரிய
விசயம். அதன் பிறகு அந்த வெட்டிய நபரையும் எனது பின்னணியையும் இணைத்து இங்கு
வதந்திகள் பரப்பப்பட்டு நான் எதிர்கொண்டவை ஏதும் ... சாதி எந்த விதத்துலையும்
எங்களை காப்பாத்தல... அதுக்கு அப்பன்களா சொல்லிக்கிற ஆர்.எஸ்.எஸ் கோஷ்டிகளும்
தான்)..
ஆக, சாதி எல்லா சாதியினருக்கும், எல்லா வர்க்கத்தினருக்கும் எமன் தான். தன் பெருமையை காத்துக்கொள்ள அது
எவரையும் பாவம் பார்த்து விடப்போவதில்லை. வெட்டுக் குத்து இதெல்லாம் ஆண்மை,
வீரம், சாதியப் பெருமை, ஆண்மை
என்று ஆணாதிக்க வெறி, ஆதிக்க வெறியை ஏற்றிவைக்கும். இதற்கு
சாதிய பேதம் கிடையாது.
சொந்தப் பிள்ளையையே வெட்டிக் கொல்லும் அளவுக்குத தந்தையர்களை, சகோதரர்களை, உறவினர்களை, ஊர்க்காரர்களை வெறியேற்றக் கூடியது சாதி. இதில் இழப்பு, வலி, அவமானம் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு மட்டுமன்று. (அவர்களின் பாடுகளை குறைத்து மதிப்பிடவில்லை).
இதுபோன்று கூலிக்கு ரௌடிகளாகவும், கொலைகாரர்களாகவும் மாறி தம் வாழ்க்கையைத் தொலைக்கும் இளைஞர்களில்
(பெரியவர்களும்), பெரும்பகுதியினர் இடைநிலை சாதிகளில்
உள்ளனர் என்றும் சொல்லலாம். குறைந்தபட்சம் தலித்திய அரசியல் எழுச்சிக்குப் பின்னர்
பகுத்தறிவு, சமூக நீதிக்கான தேவை, சாதி
ஒழிப்பு அரசியல் விழிப்புணர்வு என்ற வழிகாட்டுதல்கள் தலித் மக்களுக்கு
கிடைக்கிறது. ஆனால் இடைநிலை சாதி மக்கள் இன்னும் சாதிய அரசியல் தலைமைகளுக்கே
பலியாகி கிடக்கிறார்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
அம்மக்களிலும் ஆதிக்க சக்திகளாக இருப்பது சிறியளவிலான கூட்டமே.
மீதம் மூளை உழைப்பாளிகளாக (ஓரளவுக்கு), கூலி
உழைப்பாளிகளாக (பெரும்பான்மை), விவசாயம் பொய்த்துப் போய்
பாட்டாளிகளாக மாற வேண்டியவர்களாக, வேலைவாய்ப்பற்றவர்களாக
திரிந்துகொண்டிருக்கிறார்கள். கடும் சுரண்டலுக்கு உள்ளாகிறார்கள்.
இந்தச் சுரண்டல் என்பது சாதி-வர்க்க ரீதியிலானது என்பதை
புரியவைப்பதில் தான் நம்முடைய சமத்துவ, சமூக
அரசியல் விடுதலைப் போராட்டத்தின் வெற்றி அடங்கியுள்ளது. பிறப்பின் அடிப்படையிலான
சமூக-மத அடையாளங்களை முன்வைத்து அரசியல் செய்வதன் மூலம் அதை புரியவைக்க முடியாது.
போட்டி நிறைந்த பொருளாதார அமைப்பில் ஆதிக்க சக்திகளும்,
ஆளும் வர்க்கமும் இத்தகைய அடையாள அரசியலை மற்ற தரப்பினருக்கான
அச்சுறுத்தலாக முன்நிறுத்தி, ஒரு பாதுகாப்பற்ற உணர்வை
ஏற்படுத்திவிடும். அது மீண்டும் சாதியே (அந்தந்த சமூக அடையாளங்களே) தனக்குப்
பாதுகாப்பான வளையும் என்று நம்ப வைக்கும். சாதியம்… தலைகீழ்
சாதியம் என்று மாறி மாறி அது சுழலும். இதுதான் இப்போது நடந்துகொண்டிருக்கிறது.
சாதி வெறும் மனநோயோ அல்லது மதப் பிரச்சினையோ, ஒடுக்குமுறை
கருவியோ மட்டுமல்ல. அது ஆளும் வர்க்கத்தின் சுரண்டல் கருவியும் கூட.
சாதி ஒழிப்பென்பது ஏதோ தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தேவை மட்டுமன்று.
குறிப்பாக பெண்கள், காதலர்கள், முற்போக்காளர்கள்,
அரசு மற்றும் ஆளும் வர்க்க எதிர்ப்பாளர்கள் எல்லாம் பாதுகாப்ப வாழ
சாதி ஒழிப்பென்பது அனைவருக்குமான தேவையாகத்தான் இருக்கிறது. பிறப்பின்
அடிப்படையில்தான் சாதி ஒழிப்பு உணர்வு ஏற்படும், அவர்கள்
தான் அதற்கு விசுவாசமானவர்கள், நம்பிக்கைக்குரியவர்கள்
என்னும் பேச்சுகள் எல்லாம் முட்டாள்தனமன்றி வேறில்லை. ஏனென்றால் உழைக்கும்
வர்க்கமாக இருக்கும் வரையில் அனைத்து ஆதிக்கங்களும் அந்த வர்க்கத்தையும்
பாதிக்கிறது. அனைவரையும் உள்ளடக்கிய விடுதலையின்றி தன் விடுதலையும் சாத்தியமில்லை
என்ற அறிவைப் பெற மார்க்சியம் உதவுகிறது. அதைக் கற்றரிந்தோருக்கு எந்த ஒரு
ஆதிக்கத்திற்கு துணை நிற்பதும் தனக்குத் தானே சவக்குழி தோண்டிக் கொள்வதற்குச் சமம்
என்று தெரியும்.
ஆகவே அடையாள அரசியல் மீதான விமர்சனங்களை சாதியை வைத்துக் காணும்
நபர்களுக்கு - காமாலை கண்களுக்கு கண்டதெல்லாம் மஞ்சளாகத் தான் தெரியும்.
No comments:
Post a Comment