- ஆய்வுக் குழு, அரவிந்த் மார்க்சியக் கல்வியகம்
சோஷலிச சகாப்தத்தில் சாதி எப்படி ஒழிக்கப்படும்
என்பதை இதுவரை விவாதித்தோம், ஆனால் அதற்காக முதலில் சோஷலிசத்திற்காகப் போராடுவோம்,
பின்னர் சாதியமைப்பு தானாக மறைந்துவிடும் என்பதல்ல எங்களது வாதம். சோஷலிசத்திற்கான
போராட்ட நடைமுறையின் தொடக்கத்திலிருந்தே சாதியப் பிரச்சினை நமது செயல்திட்டத்திலோ அல்லது
அதற்கான உடனடி நடவடிக்கைகளோ இல்லாது போனால், புரட்சியை வழிநடத்தும் வர்க்கமானது, சாதியப்
பாகுபாடு மற்றும் பூர்ஷுவா சாதிய தேர்தல்முறை மற்றும் சீர்திருத்தவாத தலைவர்கள், ஆதரவாளர்களின்
பரப்புரைக்கு பலியாவது தொடரும். தலித் மக்களின்
பெருவாரியான மக்கள் கூட்டமானது அரைத் தூக்கத்திலிருப்பது தொடரும், ஏதோவொரு சாதித் தலைவரை
குறிக்கோளின்றி பின்தொடர்வது தொடரும். பாட்டாளிகளின் துணை வர்க்கங்களிலும் இதே நிலைத்
தொடரும். இவ்வாறாக, சோஷலிச சகாப்தத்தில் இறுதியான சாதி ஒழிப்பு நிகழும் என்றாலும்,
வர்க்கப் போராட்டத்திற்கான தயாரிப்பின்போதும், அதன் வளர்ச்சியின் போதும் சாதியின் செல்வாக்கைக்
குறைக்கும் நனவுபூர்வ முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் (அப்போது வர்க்கப் போராட்ட
எழுச்சிக்கு அதன் சொந்த புறநிலை அழுத்தங்கள் கூடும், வர்க்க அணிதிரட்டலானது, சாதிய
அணிதிரட்டலை பின்னுக்குத் தள்ளும்).
முதல் நடவடிக்கை, சோஷலிசத்தின் மூலம் சாதியமைப்பிற்கான
தீர்வை, சாதி ஒழிப்பிற்கான சோஷலிச வேலைத் திட்டத்தை தொடர்ந்து, தீவிரமாகப், பரவலானப்
பரப்புரைகள் மூலம் பல்வேறு வழிகளில் மக்களிடம் கொண்டு சேர்ப்பது. கம்யூனிஸ்ட் இயக்கங்களின்
பலவீனத்தாலும், திருத்தல்வாத தவறுகளாலும் (குறிப்பிட்ட அளவு தெளிவின்மையும் அதற்குக்
காரணம்) உழைக்கும் மக்கள் கூட்டம், குறிப்பாக தலித் மக்களுக்கு சாதி ஒழிப்பிற்காக கம்யூனிஸ்டுகள்
பரிந்துரைக்கும் பாதையென்ன என்பது சுத்தமாக தெரியாது. இந்தப் பணிக்காக, பாட்டாளிவர்க்கக் கட்சிக்கு, கூர்மையான, செயலூக்கமுடைய
கம்யூனிஸ்ட் பிரச்சாரகர்கள் நூற்றுக் கணக்கில், ஆயிரக் கணக்கில் தேவைப்படுவார்கள்,
துண்டறிக்கைகள்-கையேடுகள், கலாச்சார நிகழ்ச்சிகள், சிறிய கல்விக் குழுக்கள் ஆகியவைத்
தேவைப்படும். ஆனால், இப்போதைக்கு இந்தியளவிலான ஒரு கட்சியைக் கட்டி எழுப்புவதேக் கூட
தொலைதூரக் கனவாகத் தெரிகிறது. முடிவற்ற முயற்சிகள் மூலம் அதனை முதலில் அருகில் கொண்டு
வரவேண்டும். ஆனால், ஒருவேளை கம்யூனிஸ்டுகள் ஒரு குழுவாகவோ அல்லது அமைப்பாகவோ தனித்தனியாகத்
திரண்டிருந்தாலும், இந்தப் பணியை முதலில் கையிலெடுக்க வேண்டும். சில நடவடிக்கைகளை இன்றே கூட எடுக்க முடியும். இன்றைய
நிலையிலேயே பிரச்சார அளவிலும், ஆர்ப்பாட்டம் மற்றும் இயக்க அளவிலும் வைக்கக்கூடிய சில
கோரிக்கைகளும் உள்ளன.
புரட்சிகர அமைப்புகளின் செல்வாக்கின் கீழ்
இயக்கும் புரட்சிகர சங்கங்கள், மாணவர்-இளைஞர் அமைப்புகள், பெண்கள் அமைப்புகள், கிராமப்புற
தொழிலாளர் அமைப்புகள் மற்றும் அனைத்து வெகுஜன அமைப்புகள் அனைத்தும் தங்களின் வேலைத்
திட்டத்தில் சாதியப் பிரச்சினையைச் சேர்க்க வேண்டும், சடங்கு முறையாக இன்றி, இந்தப்
பிரச்சினையை முன் வைத்து தொடர்ந்து பரப்புரைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஜாட்-பாண்ட்
டோடக் போஜ் (சாதியை உடைப்பதற்கான உணவுத் திருவிழாக்கள்) நடத்த வேண்டும், தொழிலாளர் இயக்கங்களில், தலித் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு
முன்னுரிமை வழங்கப்பட வேண்டும், தலித் தொழிலாளர்கள் இயக்கத்தில் (துப்புரவு தொழிலாளர்
இயக்கம் போன்று) உற்சாகத்துடன் பங்கெடுக்க வேண்டும், அவர்களுக்கு ஆதரவாக மற்ற தொழிலாளர்களைக்
கொண்டுவர விடா முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கிராமப்புறத் தொழிலாளர்களை ஒருங்கமைக்கும்போது,
அவர்களுக்கிடையிலான சாதி அடிப்பிடையிலானப் பிரிவினைகளை உடைப்பதற்கு எல்லா முயற்சிகளும்
மேற்கொள்ளப்பட வேண்டும்.
கலாச்சார அமைப்புகள், தங்களுடைய பரப்புரை நடவடிக்கைகளில்
சாதி ஒழிப்புக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஜனநாயக உரிமை இயக்கமானது, சாதிய ஒடுக்குமுறை மற்று
கப் பஞ்சாயத்துகளுக்கு எதிரான சட்டபூர்வ போராட்டங்களுகு அப்பால் உன்மை கண்டறியும் குழு,
கையெழுத்து இயக்க, எதிர்ப்பு கடிதங்கள் எழுதுவது என்னும் சடங்குபூர்வ அறிவார்ந்த வட்டத்திற்குள்
இருந்து வெளியே வந்து, பரந்த அளவில் இயக்கங்கள் மூலம் இடையீடு செய்யத்தக்க வகையில்
தன்னை ஒருங்மைத்துக் கொள்ள வேண்டும்.
உலகளாவிய, சமச்சீரான, இலவசக் கல்வி மற்றும்
அனைவருக்கும் வேலை வாய்ப்பு என்பது நீண்ட காலத்திற்கான கோரிக்கை. ஆனால், இந்த முழக்கத்தின்
அடிப்படையில் மாணவர்கள், அனைத்து சாதியைச் சேர்ந்த இளைஞர்கள் உடனடியாக ஒருங்கமைக்கப்பட
வேண்டும், தலித் இளைஞர்களை இணைக்க சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். கல்வி
நிறுவனங்களில், சாதி அடிப்படையிலான பாகுபாடுகள் பிரச்சினைக்குரியதாக்கி எதிர்க்க வேண்டும்.
இடஒதுக்கீட்டைப் பொறுத்தவரை, கடந்த 60 ஆண்டுகளின் உண்மையை, புள்ளிவிவரங்களை இளைஞர்கள்
மற்றும் மாணவர்கள் முன் வைத்து நமது நிலைப்பாட்டைப் பேச வேண்டும். கடந்தகாலத்தில் பெறப்பட்ட
இந்த ஜனநாயக உரிமையை நாங்கள் எதிர்க்கவில்லை, அதை நீக்க வேண்டும் என்றும் கோரவில்லை,
அதன் நடைமுறையில் நடக்கும் ஊழலை எதிர்க்கிறோம். அதேபோல், இந்த கோரிக்கையானது பூர்ஷுவா
ஜனநாயக மாயை உருவாக்கவே பயன்படுகிறது, பரந்த ஏழை தலித் மக்களுக்கு இது எந்த விதத்திலும்
பொருளுள்ளதாக இல்லை; மேலும், பொது மக்கள் மட்டுமின்றி, தலித் சாதிகளிடையேகூட மோதலும்,
பிரிவினையும் ஏற்படுத்துகிறது என்பதை உணர்த்த வேண்டும். அனைத்து சாயல்களிலும் வரக்கூடிய
பூர்ஷுவா தலித் அரசியல் மற்றும் பூர்ஷுவா தலித் அறிவுஜீவிகளின் வாதங்களுக்கு தர்க்கப்பூர்வமாகவும்,
பொறுமையாகவும் பதிலளித்து நமது பரப்புரைகளைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
நாளிதழ்களில் சாதியடிப்படையிலான வரன் தேடும்
விளம்பரங்கள் பிரசுரிப்பதற்குத் தடை கோர வேண்டும். கலப்பு மணம் மற்றும் காதல் திருமணத்திற்கு
வெளிப்படையான ஆதரவு வழங்க வேண்டும்; குடும்பத்தின் பாதிச் சொத்தை பெண்களுக்கு வழங்குவதற்கு
சட்டபூர்வமான கோரிக்கை வைக்க வேண்டும்.
சாதி அமைப்புகள், சாதிக் கூட்டங்கள், கப் மற்றும்
சாதி பஞ்சாயத்து மற்றும் அவர்களின் தீர்ப்புகள் இவற்றின் மீது சட்டபூர்வமான தடை கோரி
இயக்கங்களை ஒருங்கமைக்க வேண்டும்.
பொது சமகம்களுக்கு (மதக் கூட்டங்கள்) தடை கோர
வேண்டும், ஆசிரமங்கள், கோவில்களின் பாரம்பரிய கண்காட்சிகளுக்கு, திருவிழாக்களுக்கு
சிறப்பு வரி விதிக்கக் கோர வேண்டும், அரசாங்க அலுவலகங்கள் மற்றும் பள்ளி நிகழ்ச்சிகளில்
மதச் சடங்குகளை நடத்த தடை கோர வேண்டும்.
தலித் சாதிகளுக்கென தனியான அமைப்பை உருவாக்குவதை
நாங்கள் முறையற்றதாகவே கருதுகிறோம், ஆனால் கம்யூனிஸ்ட் புரட்சியாளர்களுக்கு போதிய பலம்
இருப்பின், சாதி ஒழிப்பு மன்றங்களை அமைத்து, தலித்துகள் மட்டுமின்றி, ஜனநாயக உணர்வுள்ள
மற்ற சாதி மக்களையும் அதில் இணைக்க வேண்டும். இந்த மன்றமானது, சாதி மறுப்பு பரப்புரைக்
கூட்டங்களைத் தொடர்ந்து நடத்த வேண்டும், புத்தகங்கள், கையேடுகள் போடுவது, கலப்பு மணம்
மற்றும் பிரச்சார நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். தலித்துகள் மீதான அட்டூழியங்களை தீவிரமாக
எதிர்க்க வேண்டும்.
இறுதியாக, ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது.
சமூகத்திலிருந்து தனித்து விடப்படுவோம் என்று சொல்லி, தங்களுடைய தனிப்பட்ட வாழ்வில்
மதச் சடங்குகளில் (திருமணங்கள், பிறப்பு, இறப்பு, யக்ஞோபவீதம், உபநயனம் போன்ற) கலந்துகொள்ளும்
பல கம்யூனிஸ்டுகள் இருக்கின்றனர். இந்தச் சடங்குகள் சாதியின் வரம்பிற்குள்ளேயே வருகிறது,
வெவ்வேறு சாதிக்கு வெவ்வேறு சடங்குகள். மேற்சொன்ன சாக்குகளைச் சொல்லியே, பல கம்யூனிஸ்டுகள்
மத சின்னங்களை அணிவது, தங்களின் உரைகளில் கடந்தகால மதத் தலைவர்களோடு தங்களைத் தொடர்புபடுத்திப்
பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது ஒரு சமூக கோழைத்தனம் மற்றும் கொள்கையற்ற ஜனரஞ்சகவாதமும் ஆகும். முரணாக,
பொதுமக்கள் மனதில் கம்யூனிஸ்டுகள் பாசாங்குவாதிகள் எனும் எண்ணத்தை வேறு அது ஏற்படுத்துகிறது.
மதச் சடங்குகளிலிருந்து பணிவுடன் ஒதுங்கியிருப்பது, திருமணங்களை எந்த சடங்குகளுமின்றி
நடத்துவது, மரணத்தின்போது கூட மதச் சடங்குகள் ஏதும் செய்யக்கூடாது என்று உயில் எழுதி
வைப்பது போன்ற கம்யூனிஸ்ட் நடத்தைகளால் எந்தவகையிலும் நாம் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தப்படுவதில்லை.
மாறாக, கம்யூனிஸ்டுகள் மதிப்பு கூடவே செய்கிறது.
நாம் நமது கருத்தியல்களை எவர் மீதும் திணிக்க
வேண்டியதில்லை; ஆனால் நம் சொந்த வாழ்வில் அதைக் கடைபிடிக்கலாம். பூர்ஷுவா ஜனநாயகமும்,
இந்நாட்டின் அரசமைப்பும்கூட அதைத்தான் சொல்கிறது.
நாங்கள் ஏன் இதைச் சொல்கிறோம் என்றால், மத நடத்தை என்பது சாதியோடு தொடர்புடையது.
கம்யூனிஸ்டுகளின் தனிப்பட்ட வாழ்க்கை முறையும் மதமற்றதாக இருப்பின், இந்த மனிதர் மனதார
சாதியில் நம்பிக்கையற்றவர் எனும் நம்பிக்கை தலித்துகளுக்கு வரும்.
சாதியப் பிரச்சினை என்பது ஆயிரம் ஆண்டுகள்
பழமை வாய்ந்தது. இதற்கு உடனடியான ஒற்றை மருந்து கிடையாது. நீண்டகால, கடினமான நடைமுறை
தேவை. முதலாளித்துவ அழிவோடு இந்தப் பிரச்சினை தொடர்புடையது. இன்றைய நிலையில், சாதி ஒழிப்பிற்கு எதிரான எந்தத்
திட்டமும் துணிவுமிக்கதே. ஆனால், ஒவ்வொரு கடினமானப் பணியும் துணிவைக் கோருவதே. சாதி
ஒழிப்பு இன்றைக்கு வேண்டுமானால் கனவாக இருக்கலாம், ஆனால் ஒரு கனவுக்கு அறிவியல் அடிப்படை
இருக்குமெனில், அதை மெய்யாக்க முடியும். அத்தகையதொரு கனவை ஒவ்வொரு உண்மையான புரட்சியாளரும்
கொண்டிருக்க வேண்டும்.
‘சாதியப் பிரச்சினையும், மார்க்சியமும்’ என்னும் தலைப்பில் நடத்தப்பட்ட அரவிந்த்
மெமோரியலின் நான்காம் கருத்தரங்கில் (12-16 மார்ச் 2013, சந்திகர்) சமர்ப்பிக்கப்பட்ட
தலைமையுரை.
சாதியப் பிரச்சினையும் மார்க்சியமும்: தொடரும் விவாதம் என்னும் நூலிலிருந்து.
No comments:
Post a Comment