Apr 23, 2017

ஆத்திரக்காரர்களுக்கு........!!

சாதியப் பிரச்சினைக்கான தீர்வு நூலையொட்டி சிலரின் முகநூல் பதிவுகள் அறிவு வளர்ச்சிக்கு எந்த விதத்திலும் பயனளிக்கவில்லை! என்றாலும் அது சில சந்தேகங்களை எழுப்பத் தவறவில்லை!
சாதி பற்றிய அவதூறுகளுக்கு நான் கண்டிப்பாக பதில் சொல்லப் போவதில்லை. ஆர்வமூட்டும் வகையில் மற்றொரு ‘பாயிண்டை’ பிடித்திருக்கிறார்கள் சில ‘தலித்தியவாதிகள்’!
1. கொற்றவை மட்டும் பெண்கள் அமைப்பு வைத்திருக்கவில்லையா?
2. கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்துகொண்டு பெண்கள் தங்களை பெண்ணியவாதியாய் உணரக்கூடாது என்று சொன்னால் ஏற்றுக்கொள்வாரா?
இந்த இரண்டு கேள்விகளுக்கு பதிலளிக்க விரும்புகிறேன். தன்னிலை விளக்கம் அவசியமற்றது என்றாலும், கம்யூனிஸ்டுகள் பற்றிய ஒரு பொது புரிதலை / வெறுப்பரசியலை/ திரிபுவாதங்களை வளர்க்க முற்படும் சிலரின் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியுள்ளது.
நான் தொடங்கிய (அது ஒரு கனாக்காலம்!) அமைப்பு குறித்து:
மாசெஸ் (Movement Against Sexual Exploitation and Sexism) – பாலியல் சுரண்டல் மற்றும் பாலியல் வாதத்திற்கு எதிரான அமைப்பு! இதன் பிரதான நோக்கம் பாலியல்வாதத்தை எதிர்ப்பது (எந்தப் பாலினமானாலும்) இரண்டாவது பாலியல் சுரண்டலை (sexual exploitation) எதிர்ப்பது (இதுவும் எந்தப் பாலினத்திற்கும் பொருந்தும்).
நான் ஏற்கனவே பல முறை குறிப்பிட்டுள்ளேன், பெண்ணாக என் சுயம் பற்றிய தேடலிலிருந்தும், என விடுதலை என வளர்ந்து பெண் விடுதலை என்று பரிணமித்து பின்பு சமூக விடுதலைதான் பெண் விடுதலை! சமூக விடுதலைதான் அனைவருக்குமான விடுதலை என்பதை உணர்ந்து மார்க்சியத்தை ஏற்றுக்கொண்ட ஒரு ‘பெண்ணாக’ மாறினேன். நான் விரும்புவது ஒட்டுமொத்தமான மானுட விடுதலை! (இன்னும் சொல்லப்போனால் நான் என்னைப் பெண்ணாக உணர்வதையே விரும்புவதில்லை!)
இது இப்படியிருக்க, மாசெஸ் அமைப்பின் focus area பெண்கள் பிரச்சினையில் குறிப்பிட்டதொரு அம்சத்தை எடுத்துக் கொள்ள முனைந்தது. இங்கேயும் மார்க்சியத்தை கற்க ஆரம்பித்த தொடக்க காலத்தில், அறிவுநிலை கட்டமைப்பை குறிவைத்து பேசுவதையே விருபினேன். அந்த வகையில், ஆணாதிக்க சமூகத்தின் பெண்-பெண்மை / ஆண்-ஆண்மை என்னும் கருத்தியலை ஈவு இரக்கமின்றி தூக்கிப் பிடிக்கும் காட்சி ஊடகம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதை, பிரதான நோக்கமாக எடுத்துக்கொள்ளப்பட்டது. ஆனால் அதை மட்டுமே இலக்காக வைத்து இயங்குவது என்று என்றைக்குமே இந்த அமைப்பு வரையறுத்துக் கொள்ளவில்லை.
Vision:
MASES believes in an Egalitarian Society. It strives towards egalitarianism by speaking to protect the rights of the excluded, women and children . Our Vision is for an egalitarian Society in which the rights and the needs of the excluded are addressed without any discrimination on the basis of gender, caste, religion, culture, class, politics, health and education.
Objective:
M.A.S.E.S – Movement Against Sexual Exploitation is a movement started with a primary objective to disseminate knowledge on Sexist Representations in Media. We strongly believe that Media has played key role in propagating and sustaining the Patriarchal values and gender discrimination. With its influence People have been conditioned to believe Gender characteristics is natural.
MASES is against all forms of discrimination and We commit ourselves primarily to expose Gender Stereotyping in Advertisements and other media. MASES is also keen in exposing various forms of violence against women, which includes sexual harassment, Rape and Honor Killing. MASES has been actively involved in fact finding work.
சகல தளங்களிலும் ஏற்றத்தாழ்வை களைவது! அதற்கு தேவைப்படும் விழிப்புணர்வை ஏற்படுத்துவது இதுதான் இவ்வமைப்பின் மைய்ய நோக்கு. அமைப்பு என்று சொல்வதை விட ஃபோரம் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் இது முறையான அமைப்பாக நிறுவப்படவே இல்லை. தொடக்கத்திலேயே எச்சரிக்கையாக இருந்தேன். நிதி பட்டுவாடாக்கள் கூடாது என்பதால், முதலிலேயே இது ஒரு ஜீரோ ஃபண்டட் அமைப்பு என்று பதிவு செய்திருக்கிறேன்!
எப்படியெல்லாமோ வளர்த்தெடுக்க வேண்டும் என்ற கனவுகளோடு தொடங்கப்பட்ட போதிலும் இது நிதி பெற்று செயல்படும் நிறுவனமாக மாறிவிடக்கூடாது என்னும் அச்சத்தினாலேயே தொடங்கிய புள்ளியிலேயே இன்னும் இருக்கிறது. சில தோழர்களோடு இணைந்து ஒரு சில விஷயங்களை முன்னெடுத்தபோதும், இதை ‘அமைப்பு’ என்று சொல்வதற்கோ, குறிப்பாக பெண்ணிய அமைப்பு என்று சொல்வதற்கோ ஏதுமில்லை!
ஆனால் அன்றைக்கு (2010-11) எனக்குத் தெரிந்ததெல்லாம், எந்த ஒரு பிரச்சினையையும் பேச ஓர் அமைப்பு வேண்டும், அதற்கென ஒரு செயல் திட்டம் வேண்டும். இந்த அறிவும் மார்க்சியத்தைக் கற்றதால் (வசுவுடன் இணைந்ததால்) வந்த அறிவு. ஆனால் நான் எடுத்துக்கொண்ட இந்த சிறு செயல்வெளிக்கு ஒரு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்பட ஏதுமில்லை என்பது எனது அப்போதைய புரிதல். மேலும் கம்யூனிஸ்ட் கட்சி, அவர்களின் செயல்திட்டங்கள் இவைபற்றியெல்லாம் ஏதுமறியாத, அவற்றை ஆய்வுசெய்யக்கூட தெரியாத ஒரு தொடக்க நிலை!
இப்படி தொடங்கி, உண்மை அறியும் குழு என்றெல்லாம் இயங்கி, பின்பு அதனால் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களின் காரணமாக ‘களப்பணி’ என்று சொல்லப்படும் ஒரு வெளியிலிருந்து தற்காலிகமாக விலகிக்கொள்வது! முதலில் இந்த சமூகப் பிரச்சினைகளை தெளிவாக ஆய்வு செய்யத் தேவைப்படும் அறிவை வளர்த்துக்கொள்வது, அவற்றை பரப்புரை செய்வது என்னும் தளத்தில் இயங்குவோம், பிறகு மற்றவற்றைப் பார்ப்போம் என்று முடிவு செய்து ‘இயக்கத்தை விட்டு வெளியேறி’ எழுத்தில் என்னை முடக்கிக் கொண்டேன்.
அமைப்பின் வேலைதிட்ட வரைவு: https://masessaynotosexism.wordpress.com/tag/draft-agenda-2/ - இந்த வேலைத் திட்டம் கூட எவரையும் அறியாதிருந்த காலத்திலேயே இ-மெயில் வழியாக கிடைத்த இமெயில்களுக்கு வரைவுகளை அனுப்பி, சில தோழர்களை நேரில் சந்தித்து கருத்துகளைக் கேட்டு, கூட்டு முயற்சியில் உருவாக்கியது! அமைப்பில் நிதி இருக்கிறதோ இல்லையோ ஜனநாயகம் இருக்க வேண்டும் என்ற ஓர் எச்சரிக்கை உணர்வு!
2. கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்துகொண்டு பெண்கள் தங்களை பெண்ணியவாதியாய் உணரக்கூடாது என்று சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களா?
பெண்களுக்கு மட்டும் என்ன விதிவிலக்கு. எந்த கம்யூனிஸ்ட் கட்சியும் அப்படி சிந்திப்பதில்லை. நானும் அப்படித்தான். கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கும் பெண்கள் தங்களை பெண்ணியவாதியாக உணரக்கூடாது. கம்யூனிஸ்டாகவே உணர வேண்டும்.
தோழர்கள் சுட்டிக்காட்டியது போல் அடையாளம் கடந்த வர்க்க உணர்வை – சாதி நீக்கம், வர்க்க நீக்கம், அடையாள நீக்கம் செய்து – ஊட்டுவது கம்யூனிஸ்ட் கட்சியின் பொறுப்பே ஆகும். ஆனால் அக்கட்சிகளிலும் சிலர் தங்களின் சுயலாபத்திற்காக இந்த அடையாளங்களை துறக்க தயாராக இல்லாதவர்களாக செயல்படுவதை அறியாதவர்கள் அல்ல நாம்!
அப்படியென்றால் பிரச்சினைகளின் தனித்தன்மைக்கேற்ப பிரிவுகள், முன்னணிகள் இருக்கக்கூடாது என்று சொல்கிறீர்களா என்னும் கேள்விக்கு பதில் – கூடாது என்று சொல்லும் வரட்டுவாதிகள் அல்ல கம்யூனிஸ்டுகள்!
பிரச்சினைகளின் தனித்தன்மைக்கேற்ப, அந்தந்தப் பிரிவு மக்களை ஒருங்கிணைக்க தனித் தனி முன்னணிகள் தேவை (தனிக் கட்சிகள் அல்ல). ஆனால் அவை எந்த தத்துவத்தின் அடிப்படையில், எந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் கட்டப்படுகிறது, அதன் இறுதி இலக்கு அனைவருக்குமான விடுதலையை உறுதி செய்யும் பாதையில் சங்கமிக்குமா? ஏற்றத்தாழ்வற்ற பொதுவுடைமை சமுதாயத்தைப் படைக்க உதவுமா என்பதே இங்கு கவனத்தில் கொள்ள வேண்டியது.
அடுத்து, முன்னணிகள் என்று வரும்போதும் அந்தப் பிரிவின் செயல் திட்டம், மூல உத்தி, செயல் உத்தி இதெல்லாம் கவனிக்கப்பட வேண்டியவை. ஆகவே, தோழர்களே,
பெண் விடுதலை முன்னணி அவசியமா? அவசியம் – (அதாவது அவசியமில்லை என்று சொவதற்கில்லை)
சாதி ஒழிப்பிற்கான முன்னணி அவசியமா? அவசியம்.
விவசாயிகள், மாணவர்கள், என்று ஒவ்வொரு பிரச்சினைக்குமான முன்னணி கட்டுவதை யாரும் இங்கு மறுக்கவில்லை! ஆனால்! தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்றால் என்ன? சாதி இருக்கட்டும், தீண்டாமையை ஒழிப்போம் என்பதா என்னும் கேள்வி எனக்கு எழும் (கேள்வி கேடலாம் தானே). தலித் விடுதலை முன்னணி என்று கட்ட நினைத்தால் – அப்படியென்றால் சாதி வாரியாக முன்னணிகள் கட்டுவீர்களா என்ற கேள்வி எனக்கு எழும்?
கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து கொண்டு அல்லது ஒரு மார்க்சிஸ்டாக இருந்து கொண்டு பெண் விடுதலை பேசலாம், ஆனால் பெண்ணியம் (பெண்ணியவாதி) என்ற தனிப்பிரிவாக இயங்கக் கூடாது! சாதி ஒழிப்பு பேசலாம் – ஆனால் தலித்தியவாதியாக இயங்கக் கூடாது! சிறுபான்மையினர் விடுதலை பேசலாம் ஆனால் ஒரு மதவாதியாக இயங்கக் கூடாது! விவசாயிகள் விடுதலை பேசலாம் ஆனால் தம் வர்க்க நலனிலிருந்து (நிலப்பிரபுத்துவ வர்க்க நலனிற்காக) இயங்கக் கூடாது!
ஆகவே தோழர்களே! மீண்டும் மீண்டும் சொல்கிறேன் –
நான் பெண்ணியவாதி அல்ல! மார்க்சியவாதி!
நான் எப்படி சாதி மறுப்பாளரோ அப்படியே அடையாள அரசியல் மறுப்பாளர்!
நான் மானுட விடுதலை பேசிக்கொண்டிருக்கிறேன்! அதற்கு அவசியத் தேவையாக இருக்கும் மார்க்சியக் கோட்பாடு குறித்து பேசிக்கொண்டிருக்கிறேன். ஆனால், இந்த அடையாள அரசியல்வாதிகளும், அதன் ஆதரவாளர்களும் குறிப்பிட்ட பிரிவினரின் குறிப்பிட்ட பிரச்சினையை – ஒடுக்குமுறையை களைய முற்பட்ட, குறிப்பிட்ட எல்லைவரை ஒரு சில ‘நிவாரணங்களை’ பெற்றுத் தந்த சில வழிகாட்டுதல்களை முன்வைத்து அதுவே தீர்வு என்று பேசுவதை விமர்சனத்திற்கு உட்படுத்தும் உரையாடலை நிகழ்த்திக் கொண்டிருக்கிறேன். இது அறிவுச் செயல்பாடு பொருள்முதல்வாதிகள் இப்படித்தான் இயங்க முடியும்! தொழுகை மனப்பான்மையில் இயங்குபவர்கள் கருத்துமுதல்வாதிகள்! அவர்கள் ஆத்திரக்காரர்கள்!
ஆத்திரக்காரர்களுக்கு……… !!!!!
நன்றி
கொற்றவை

No comments:

Post a Comment