Jan 22, 2016

நம்பிக்கையோடு அரசியல் களமாடுங்கள்


தோழர் ரோஹித் வெமுலாவின் தற்கொலை நம் அனைவருக்கும் வருத்தத்தைத் தரக்கூடியது.  அதேவேளை அவரை இந்த நிலைக்குத் தள்ளிய, இன்னும் சரியாகச் சொல்வதானால் அவரை தற்கொலைக்குத் தூண்டிய இந்துத்துவ அமைப்புகளுக்கெதிராகவும், அதன் அநீதிகளுக்கெதிராகவும் நாம் இன்னும் வீரியத்துடன் ஒன்றிணைந்து போராட வேண்டும், விளிம்பு நிலை மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக அது இருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டுவதாகவும் இருக்கிறது. ரோஹித்தின் குடும்பத்தாருக்கு மட்டுமல்ல நம் ஒவ்வொருவருக்கும் இது ஓர் இழப்புதான்.  போராளிகள் தம் நம்பிக்கயை ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டுமே அன்றி தம் உடலை ஆயுதமாகப் பயன்படுத்தக்கூடாது. விளிம்புநிலை மக்களை, போராளிகளை இந்த நிலைக்குத் தள்ளும் சாதியம் உள்ளிட்ட அனைத்து அதிகார அமைப்பையும் ஒழித்திட நாம் கடுமையாகப் பாடுபட வேண்டியிருக்கிறது.

காலத்திற்கேற்ப ஒடுக்குமுறை கருத்தியல்களும் வடிவங்களும் தம்மை தகவமைத்துக்கொண்டே இருக்கின்றன.  அதிலும் குறிப்பாக சாதியமும் அதன் மூல தத்துவமான இந்துத்துவமும் இன்று ஆட்சி அதிகார ஆதரவோடு சகல துறைகளிலும், மக்களின் சகல வாழ்வியல் அம்சங்களிலும் முன்பைக் காட்டிலும் வெளிப்படையாகவே அதிக்கம் செலுத்துகிறது. அடக்கி ஒடுக்குகிறது. இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய விஷயம்.

எதிர்கருத்து கொண்டவர்கள் அனைவரையும் அது தேச துரோகிகலாக, நக்சல்கள், மாவோயிஸ்டுகள் என்று கட்டமைக்கிறது. அதன் மூலம் முற்போக்கு சக்திகள், சமூக ஆர்வலர்கள், புரட்சிகர அமைப்புகள் குறித்த ஓர் எதிர்மறைக் கருத்தை, அச்சத்தை பரப்புகிறது.  அநீதிக்கெதிராகவும், நமது உரிமைகளுக்காகவும் நாம் குரல் கொடுப்பதைக்கூட கொச்சைப்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் எனும் பிம்பத்தைப் புனைகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக அரசியல் என்பது ஆள்வதற்கான ஒரு ஏற்பாடு, மக்கள் நலன் ஒன்றே அதன் குறிக்கோள் எனும் ஒரு தவறான கருத்தை பரவலாக்கம் செய்கிறது. அதாவது அரசு / அரசு இயந்திரத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமே அது சொந்தமானது என்று சொல்கிறது.  அதற்கு விசுவாசமாக இருப்பதும், கட்டுப்படுத்துவதும் மட்டுமே குடிமக்களின் கடமை என கட்டமைக்கிறது.  அந்த எழுதாத ஆணைக்கு அடிபணிய மறுப்பவர்கள் அனைவரும் தேச துரோகிகள். அதாவது பகுத்தறிவு, சுயமரியாதை கொண்டவர்கள் சமத்துவம் வேண்டும் சமூக அக்கறை கொண்டவர்கள் தேச துரோகிகள்.  ஒரு சிலரின் ஆதாயத்திற்காக தேச பக்தியின் பெயராலும், மக்கள் நலன் எனும் பெயராலும் மக்களைக் கொன்று குவிக்கும் அவர்கள் தேசப் பாதுகாவலர்கள்.  அரசின் அகராதியில் இதுதான் ஜனநாயகத்திற்கான பொருள்.

அரசியல் நமக்கெதற்கு எனும் இந்த எண்ணம் இப்போது மட்டுமல்ல காலம் காலமாக சொல்லப்படுகிறது.  ரோஹித்தின் மரணத்தையும்கூட சில ஊடகங்கள் இதற்குப் பயன்படுத்தின.  பின்வரும் வாக்கெடுப்பு அதற்கு ஓர் உதாரணம்:

      தலித் மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலையை சுட்டிக்காடி,
      தலித் மற்றும் ஏழைகளின் உரிமையை பறித்து, மோடி அரசு ஜனநாயக
      படுகொலை செய்வதாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டு..
         (A) சரியான பார்வை  (B)  தவறான சாடல்  (c) வழக்கமான அரசியல்

என்னவிதமான கேள்விகள் இவை? வெகுஜன ஊடகங்கள் சிலவற்றின் ‘நடுநிலையும்’, ‘கருத்து சுதந்திரமும்’, வாக்கெடுப்புகளும், விவாத நிகழ்ச்சிகளும்…  வாயாடி அரசியல், வியாக்கியான அரசியல், அரசியலுக்கெல்லாம் அரசியல் என்று சொல்லலாமா?

அந்த அரசியல் ஒருபுறமிருக்க,  நாம் முன்னெடுக்கும் அரசியல் என்பது ஆளும் வர்க்கத்தின் பொருளில் சுரண்டல்வாத ஆளும் அதிகாரமல்ல, சுரண்டலற்ற சமத்துவ சமுதாயத்தை நிறுவுதல் அதற்காக உழைத்தல் என்பதுதான் நமது அரசியல். ஆனால் இம்மாற்றங்கள் வந்தால் தங்களுக்கு  ஆபத்து என்று கருதும் ஆளும் வர்க்கமும், அதன் பிரதிநிதியான அரசும், அதன் கருத்தியலான இந்துத்துவமும் உண்மையானப் போராளிகளை பழிவாங்கும் செயலில் ஈடுபடுகிறது.  உண்மையில் இதற்குப் பெயர் அரசியல் இல்லை குண்டாயிசம். 

மாணவர்களின் அரசியல் ஆர்வம் கண்டு இந்த ஆட்சியாளர்களும், ஆளும் வர்க்கமும் ஏன் இப்படி அஞ்சுகின்றன? தாங்க அடித்து விரட்டப்படுவார்கள் என்றா? ஒரு மாணவர் அநியாயமாக தற்கொலைக்குத் தள்ளப்பட்டதைக் கண்டித்து மாணவர்கள் போராடுவதைக் கூட அனுமதிக்காத ஓர் அரசை நாம் எப்படி எதிர்க்காமல் இருக்க முடியும்.  நியாயம் கேட்பவர்கள் மீது தண்ணீரைப் பீய்ச்சி அடிப்பதும், தடியடி செய்வதும் என்ன ஜனநாயகம். மாற்றுத் திறனாளிகள், கண்பார்வையற்றோர் மீது கூட இத்தகைய வன்முறைகள் ஏவப்படுகின்றன.  பாராளுமன்றத்தில் சில்லரை அரசியல் செய்பவர்கள் ஈடுபடும் வன்முறையைக் காட்டிலுமா எம் மாணவர் சமுதாயம் வன்முறையில் ஈடுபட்டுவிட்டது?

அநீதி என்று தாம் நம்பும் ஒரு விஷயம் குறித்து பிரச்சாரம் செய்யவும், அதற்கு ஆதரவாக கருத்துகளைத் தெரிவிப்பதும் தனிப்பட்ட சுதந்திரமாகும். மாணவராய் இருப்பதால், கூலி பெரும் பணியாளராய் இருப்பதால் அதற்கு கட்டுபாடுகள் விதிப்பது அடிப்படை உரிமைக்கு எதிரானது இல்லையா? ASAவின் செயல்பாடுகளுக்கு தொல்லைகள் கொடுத்தும், மதவாத, சாதியவாத கருத்தியலோடு செயல்படும் ABVP போன்ற மாணவ அமைப்புகள் மீதுதானே அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விடுத்து ரோஹித் உள்ளிட்ட மாணவர்களை தண்டிப்பதும், வெளியேற்றுவதும் என்ன நியாயம்? பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி மாணவர்களாக இருக்கும் அவர்களுக்கு இந்த உரிமைகள் கூட மறுக்கப்படுவது கேலிக்கூத்தானது. யாகூப் மேமனுக்கு ஆதரவு தெரிவித்தது ஏன் குற்றமாகிறது? மரண தண்டனை என்பது யாரையெல்லாம் காவு வாங்குகிறது, யாரையெல்லாம் விடுவிக்கிறது என்பதை நாம் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம். இந்த அநீதியை எதிர்த்து மாணவர்கள் குரல் கொடுக்ககூடாதா?  

ரோஹித்தின் தற்கொலைக்கு இந்துத்துவ சாதிய அதிகாரத்தின் வன்மமே காரணம்.  ஆனால் இவர்களுக்கு ஒன்று புரியவில்லை, இந்த ஒடுக்குமுறைகள் பெருவெடிப்பை ஏற்படுத்தக்கூடியவை.  இவர்களின் சகிப்பின்மைதான் எதிர்தரப்பின் போராட்டக் குணத்தை மேலும் வலுப்படுத்தப்போகிறது.  இது ஏதோ கோஷமல்ல. Its science.  ராக்கெட் விடுவதற்குக்கூட சோசியம் பார்க்கும் அறிவிலிகளுக்கு இந்த சமூக விஞ்ஞானம் புரியாது.

ஆனால் ஒன்று தோழர்களே, சுயநலத்திற்காக அரசியலில் ஈடுபட்டிருக்கும் அவர்களே வெட்கமின்றி அஞ்சாது செயல்படும்போது ரோஹித் போன்றோர் எதற்கும் தளரக்கூடாது என்பதே எனது வேண்டுகோள்.  தங்களுக்காகவும், தங்கள் வாரிசுகளுக்காகவும் சொத்து சேர்க்க, அதிகாரப் பசியோடு அரசியலில் ஈடுபடுபவர்கள், சுரண்டும் அமைப்பின் பிரதிநிதிகள் உயிர்வாழ தயங்காத போது நாம் ஏன் நம் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும்?

போராளிகள், முற்போக்கு சக்திகளுக்கு துணையாக உண்மையான சமூக அக்கறை கொண்டவர்கள் இருக்கிறோம்.  மக்கள் ஒவ்வொருவருக்கும் நிம்மதியான வாழ்க்கையை சுரண்டலற்ற சமுதாயத்தை அமைத்துக் கொடுத்திட ரோஹித், முத்துக்குமார், செங்கொடி போன்றோர் நிச்சயம் உயிரோடிருக்க வேண்டும்.  நம் எண்ணிக்கை நிச்சயம் குறையக்கூடாது.  தம்மைப் போன்ற போராளிகளை உருவாக்கும் கடமை முற்போக்கு எண்ணம் கொண்ட ஒவ்வொரு மாணவருக்கும் உள்ளது. நமது படை பலம் அதிகரிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  ஆகவே, உயிரை மாய்த்துக்கொள்ளும் தவறை செய்யாதீர்கள்.


கார்ல் மார்க்ஸ் சொன்னதுபோல் நாம் அடைவதற்கு ஓர் பொன்னுலகம் இருக்கிறது. அதை அடைந்தே தீருவோம் எனும் நம்பிக்கையோடு அரசியல் களமாடுங்கள். 

image credit: NDTV

1 comment:

  1. இந்த ஒடுக்குமுறைகள் பெருவெடிப்பை ஏற்படுத்தக்கூடியவை. இவர்களின் சகிப்பின்மைதான் //எதிர்தரப்பின் போராட்டக் குணத்தை மேலும் வலுப்படுத்தப்போகிறது. இது ஏதோ கோஷமல்ல. Its science. ராக்கெட் விடுவதற்குக்கூட சோசியம் பார்க்கும் அறிவிலிகளுக்கு இந்த சமூக விஞ்ஞானம் புரியாது.//

    ReplyDelete