Jan 22, 2015

நாங்கள் அமெரிக்காவில் பிறக்கவில்லை, ஆனால் அம்மண்ணில் பிறந்தோம்…….


நாங்கள் பிறந்தோம்
உங்களுக்குச் சொந்தமான இறந்தகாலத்தில்
மண்ணுக்கு உரமாகப் போகும் உடல்
மரணம்
பயமில்லை
இறந்த காலத்தின் பிறந்த நாளை
அறிவிக்கும் கேளிக்கைகள்
எதிர்காலச் சாவுகளின் கோரிக்கைகள்
எங்களிடத்தில் இருந்ததில்லை

எம் தேசத்துச் சிறார்களின்
கண்மணிகளைப் பறித்து
உதிரத்தில் நனைத்து விரைத்த
உடையில்
நட்சத்திரம் பொருத்தினீர்கள்

தரகர்களான உம் அமைச்சகம்
எங்கள் படுக்கையறைகளுக்கு
எண்ணிட்ட அட்டை கொடுத்தது

எமது
பாதங்களோடிய
நிலங்களில் உங்கள் கடவுளரின்
ஆவிகளை உலாவவிட்டீர்கள்
எம்
பெண்களை புனித ஆவி
வல்லாங்கம் செய்யும் போது
எவர் நாக்கு சொல்லக்கூடும்
அறிவுக் கனிதின்ற
ஆதித் தாயின் குழந்தை அவளென்று


ஜனநாயகத்தின் பசிய குரல்வளையை
தோட்டாக்களால் துளைக்கும் பொழுதில்
பாடல்கள் அரங்கேற
பூட்ஸ்கள் பாடி வருகின்றன
உலக அமைதிக்காகவே
பீரங்கிகளை படைக்கிறோம்
பீரங்கிகளைப் படைக்கிறோம்
சமாதானத்திற்காக

சேவலிறகு தைத்த இரவுகளின்
கொழுத்த தசையுண்டு
பெருத்தலையும்
சிறைச் சாலைகள்
கம்பிகளின் வழியே
பழங்குடி
நிர்வாணத்தை
வரைந்து காட்டுகிறான்

மாற்றம் குறித்து வாக்குறுதி
அழைப்பு மணிக்கு
பிண விறைப்போடு
சல்யூட் அடிக்கும்
அதிபர்களுக்கு மிட்டாய்களை வழங்கி

யார் சொல்லக்கூடும்
உரத்த குரலில்
அம்மிட்டாய்கள்
சொந்த நிலத்தின் பிணங்களின் மேல்
பயிர் செய்யப்பட்டவைகளென

அவர்களுக்கு
சொல்ல வேண்டும்
பெருவெடிப்பிலிருந்து
பிறந்தவர்கள் நாங்களென்று
சொல்லவேண்டும்
நாங்கள்
பிறந்துகொண்டிருக்கிறோமென்று
சொல்ல வேண்டும்

மண் இனமறியாது
மண் குற்றமுமறியாது
மண் துரோகமறியும்

எங்கள் செங்குருதிகளை
கோடுகளாக்கி
பறக்கவிடப்பட்ட
உமது கொடிகளை
அறுத்தெரியும்
செவ்விறகு
எம் சிறார்களிடம்


லியோனார்ட் பெல்டியருக்கு…………


 நன்றி: கொம்பு, காலாண்டிதழ்.

#LeonardPeltier 

No comments:

Post a Comment