Mar 8, 2019

பித்தனின் மரணம் (Death of Insane)




'ஏதோ ஒரு நிர்ப்பந்தம் இருக்க வேண்டும் : இந்த உலகம் முழு நிறைவுற்றதாக இல்லை. ஆகையாலே கலைஞன் இயங்குகின்றான். குறைவற்றதாக உலகம் இருப்பின் அதில் இசைவைத் தேட வேண்டியதில்லை. மனிதன் வெறுமனே அதில் வாழ்ந்து இருப்பான். கலைக்கான பயன்பாடும் இ‌ல்லாம‌ல் போயிருக்கும். சீர் குலைந்த உலகமே கலையை தோற்றுவிக்கிறது.' *
- ஆந்த்ரே தார்க்கோவஸ்கி.

கலை என்றால் என்ன? கலை குறித்து எண்ணற்ற விளக்கங்களை நாம் காண்கிறோம். எனினும் அதனை உற்று நோக்கினால் அத்தகைய வரையறைகளில் உள்ள வர்க்கப் பண்பு வெளிப்படும். அதிகார மையங்கள் அல்லது ஆளும் வர்க்ககலைமனங்கள் கலையைபொழுதுபோக்குதேவையாக வரையறுப்பதால்பொழுதை போக்காதபடைப்புகள்கலைஎன்றாகிறது. இது சற்று விநோதமானது, இல்லையா? அப்படியென்றால், ‘கலைஎன்றால் என்ன?

கலை என்பது எதிர்ப்பு”. அநீதியான ஒரு சமூகத்தில் கலையின் தேவையே கலையின் வரையறையை தீர்மானிக்க வேண்டும். ஏனென்றால் அது ஒரு சக்தி வாய்ந்த தொடர்பு சாதனமாகும். வரலாற்று வளர்ச்சியினூடாக மனித நடவடிக்கைகளின் அனைத்து அம்சங்களும் பரிணமித்தும், மாற்றம் பெற்றும் வந்துள்ளன. அனைவரையும் உள்ளடக்கிய சமூக அமைப்பானது மெல்ல மெல்ல சிந்தைந்து, ஒரு அநீதியான உலகாக மாறியது. அது ஏற்றத்தாழ்வு மிக்க வாழ்வை உண்டாக்கி, ஏழை பணக்காரர், அதிகாரம் உடையோர் அதிகாரம் அற்றோர், ஆள்பவர்கள் குடிமக்கள், முதலாளிகள் அடிமைகள் என்ற முரண்பட்ட பிரிவுகளை உண்டாக்கிவிட்டது. அதைத்தான் நாம் வர்க்க-சாதிய சமூகம் என்கிறோம். இந்த வர்க்க சமூகம் வளர வளர, மனித மாண்புகள், நம்பிக்கைகள், பண்பாடு ஆகியவையும் வளர்ச்சி பெற்றன, துரதிட்டவசமாக அது அந்த சுரண்டல்வாத சமூக அரசியல் அமைப்பை பாதுகாப்பதாக உருமாறி நிற்கிறது.

தொடர்பாடலுக்கான (communication) ஊடகமாக இயங்கிய கலையானது பின்னர் மக்களின் உழைப்பு மற்றும் வாழ்வாதார நிலைமைகளோடு பிணைந்த அக மற்றும் புற வெளிப்பாடாக பரிணமித்தது. போகப் போக அதன் கூட்டு-வெளிப்பாட்டு-பிரதிபலிப்பு தன்மை சிதைக்கப்பட்டு, ‘ஆளும் வர்க்கத்தால் அபகரிக்கப்பட்டுவிட்டது. அரசுருவாக்கத்தின் விளைவாக கலை அந்நியமானது. சுதந்திரமான வெளிப்பாடுதணிக்கைக்கு உள்ளானது, ஒருவித அமைப்பு சார்ந்த கட்டமைப்பும், கட்டுப்படுத்தப்பட்ட வெளிப்பாடாகவும் கலை சிக்கிக் கொண்டது. கலையானது அதிகார மையங்களின் பரப்புரை கருவியானது. காலப்போக்கில் கலைசெவ்வியல் கலை’ ‘நாட்டுப்புற கலை’, ‘மைய்ய நீரோட்ட கலை’ ‘மாற்று கலை’, ‘வணிகக் கலை’ ‘கலையாற்றல்மிக்க கலை போன்ற வகைப்பாடுகள் உண்டாயின. (கலையின் பரணாம அரசியல் என்பதே ஒரு தனிக் கட்டுரை. சுருக்கம் கருதி நான் விமர்சனத்திற்குள் செல்கிறேன்)

ஆளும் வர்க்கத்தின் சிந்தனைகளே ஒரு யுகத்தை ஆளும் சிந்தனைகளாக உள்ளன. ஆளும் வர்க்கம் என்றால் அது சமுதாயத்தின் பொருளியல் சக்தியை மட்டுமல்லாது அறிவுச் சக்தியையும் ஆளு கிறது. பொருள் உற்பத்திக்கான காரணங்களைத் தன் கட்டுக்குள் வைத்திருக்கிற வர்க்கமானது, அதன் காரணமாகவே அறிவு உற்பத்திக்கான காரணங்க ளையும் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறது. இந்தச் சாதனங்களைக் கொண்டிராதவர்களின் சிந்தனை கள் இதற்குப் பொதுவாகவே அடங்கிப் போய்விடு கின்றன.என்கிறார் கார்ல் மார்க்ஸ் [ஜெர்மன் தத்துவம்].

இதுபோன்ற சமூக வர்க்க உணர்வை பெற்றுவிடும் மக்கள் (தெரிந்தோ தெரியாமலோ) சமூகத்தின்மாற்றுகுரலாக அல்லதுகலைக் குரலாக மாறுகின்றனர், மீதமிருப்போர்சந்தையில்’ ‘கேளிக்கையாளர்களாகமாறிவிடுகின்றனர். ‘வணிகரீதியான கலைஞர்கள் ஒரு போலியான மெய்மையைகட்டமைக்கையில்’ (அது நல்ல விற்பனை சரக்கு) விழிப்புணர்வுடைய மாற்று கலைஞர்கள் யதார்த்தத்தை அதிகாரத்தின் இயக்கவியலை பிரதிபலிக்கவும், சமூகத்தில் அதன் தீமைகளை உணர்த்தவும் பாடுபடுகின்றனர். அத்தகைய உண்மையான கலைஞர்கள் வரலாற்றில் நூற்றுக் கணக்கில், ஆயிரக்கணக்கில் உள்ளனர். இன்னமும் இருப்பார்கள்!

இயக்குனர் சனல் குமார் சசிதரன் அத்தகையதொரு கலைஞர். திரைப்படம் என்னும் கலையை இவர் தனக்கான வெளிப்பாட்டு ஊடகமாகவும், மக்களோடு உரையாடுவதற்கான சாதனமாகவும் தேர்ந்தெடுத்துக்கொண்ட மாற்று கலைஞர். சனல் குமாரின் திரை மொழி என்பது வழக்கமான திரையாக்க விதிமுறைகளுக்கு அப்பாற்பட்ட,  ஆளும் வர்க்கஇலக்கணங்களுக்குஅடங்காத புதியதொரு மொழியாகும். அது அடுத்த தலைமுறைக்கு புதியதொரு இலக்கணத்தை உருவக்கித் தருவதோடு, புதிய நம்பிக்கையையும் விதைக்கிறது.

ஒழிவுதிவசத்தே களி, எஸ். துர்கா இப்போது உன்மாடியுடே மரணம் என்று தொடர்ந்து முத்திரைகளை பதித்து வருகிறார் சனல். இம்மூன்று கதைகளும் (சம்பவங்கள்!) வெவ்வேறாக இருப்பினும், அவற்றிற்குள் ஓர் ஒற்றுமை உண்டு. அவரின் படங்கள் அனைத்தும் அதிகாரத்தைஅரசு அதிகாரத்தை, ஆளும் வர்க்க-சாதி அதிகாரத்தை, மத அடிப்படைவாதத்தை அம்பலப்படுத்தி, அசிங்கப்படுத்தி, பிரதிபலித்து இறுதியில் அதிகாரத்திற்கு சவால் விடுவதாக அமைகின்றன. சனல் குமாரின் படங்களில் நாம் இனியும் பார்வையாளர்களாக இருக்க முடிவதில்லை, சாட்சிகளாக மாறிவிடுகிறோம்.

ஒழிவுதிவசத்தே களி மற்றும் எஸ். துர்கா ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை மையப்படுத்தி ஒரு அரசியல் உணர்வை ஊட்டும் விதமாக நகர்ந்து செல்லும். அவருடைய கதையாடலில் எப்போதும் கண்ணுக்குத் தெரியாத கதாப்பாத்திரம் ஒன்று உலவிக் கொண்டிருக்கும். அது தான் நாம், நமது மனசாட்சி. திரைப்படத்தில், ஏதோ ஒரு செயலில் ஈடுபட்டிருக்கும், அன்றாட வாழ்வின் பேச்சுக்களோடு பயணிக்கும் கதாப்பாத்திரங்களோடு தொடங்கும் கதையானது போகப் போக நம்மை வாள் முனையில் கொண்டு சென்று அமர்த்திவிடும். நாடக பாணியிலான, காது தெறிக்கும் வசனங்கள் இருப்பதில்லை, நம்மை அழச்சொல்லி பிழிந்தெடுக்கும் சோக காட்சிகள், முகத்திற்கு நெருக்கமான காட்சிகள் அவ்வளவாக இருப்பதில்லை! எளிமையான கதையாடலே, ஆனால் சம்மட்டியடி.

சனலின் படங்களில் வரும் சம்பவங்களும், கதாப்பாத்திரங்களும் பெரிய கதாநாயகத் தன்மை கொண்டவையாக இருப்பதில்லை. அது அன்றாட வாழ்வின் எளிய மனிதர்களையே பிரதிபலிக்கின்றன. அதனால் தான் நாமும் அந்த திரைப்படத்தின் ஓர் அங்கமாகி விடுகிறோம். மக்களின் மனங்களில் எரியூட்ட சனல் கைக்கொண்டிருக்கும் உத்தி இதுவே. ஆகவே அவரது படங்கள் சக்திவாய்ந்த அரசியல் பகடியாகவும் செயல்படுகிறது.

இந்தத் தொகுப்பில் பித்தனின் மரணம்என்னும் படம் உச்சபட்சம். ஆம் என்னைப் பொறுத்தவரை சனல் குமாரின் படங்கள் சமூக-அரசியல் உரையாடல் தொகுப்புகளே. அவை மேலாதிக்கத்தையும், போலித்தனத்தையும் அம்பலப்படுத்தி, அசிங்கப்படுத்தி, கேள்வி கேட்கிறது. ஒழிவுதிவசத்தே களியும், எஸ். துர்காவும் எளிமையான நேரடியான கதையாடலாக இருந்தன. பித்தனின் மரணத்தில் அவர் ஓர் உச்சபட்சகலைநயமிக்ககதை சொல்லும் வடிவத்தை கைக்கொண்டுள்ளார். அது காட்சிவடிவில் அழகியல் தன்மையோடும், அரசியல் ரீதியாக எரியூட்டக் கூடியதாகவும் இருக்கிறது. பித்தனின் மரணம் ஒருகவித்துவமான போர்’!

மாட்டுக் கறி உண்ண தடை விதித்து, மக்களின் உணவு பண்பாட்டில் கூட தலையிடும் அரசு உள்ள ஒரு நாட்டில், கண்காணிப்பும், கட்டுப்பாடுகளும் நம் படுக்கையறையைக் கூட எட்டிப்பார்க்கும் நாள் தொலைவில் இல்லை. பித்தனின் மரணத்தில் அத்தகையதொருகற்பனையானசூழலை விவரிக்கிறார் சனல். நகைச்சுவையான பொறுப்புத்துறப்பை (disclaimer) முன்வைத்து தொடங்கும் படம் போகப் போக எதிர்பார்க்காத தளங்களில் சுழன்றி அடிக்கிறது. ’பித்தன்ஒருவனின் பிரச்சினையை ஒருவர் விவரிக்கிறார். அவர் அப்படி என்ன செய்துவிட்டார். கனவு காண்கிறார்! கனவு காண்பது ஒரு பிரச்சினையா? கண்டிப்பாக சம்பந்தப்பட்டவருக்கு அது பிரச்சினையில்லை, ஆனால் அரசுக்கும், அதிகார மையங்களுக்கும், சுரண்டல்வாதிகளுக்கும், ஆளும் வர்க்கத்திற்கும் நம்முடைய கனவுகள் பிரச்சினையே. சொல்லப்போனால் அச்சுறுத்தக்கூடியவை. கனவு இங்கு சிறந்த உருவகமாக கையாளப்பட்டுள்ளது.  சக்தி வாயந்ததொரு  பகடியை அநாயாசமாக நெய்திருக்கிறார் சனல் குமார். அவர் கனவு பற்றித்தான் பேசுகிறார், நம்புங்கள்! இறுதியில் அது வாளை விட கனவு கூர்மையானது என்று உணர்த்துகிறதென்றால் அதற்கு அவர் பொறுப்பில்லை!

எழில் கொஞ்சும் இயற்கை காட்சிகள், மெய் நிகழ்வுகள், மிகையதார்த்த வரைகலை காட்சிகள்பித்தனின்கனவுகளாக வருகின்றன. அரசு மற்றும் கலாச்சார காட்டுமிராண்டித்தனம் அதில் பகடி செய்யப்படுகிறது. எந்த ஒரு அரசியல் அமைப்பையோ, நபரையோ அவர் பகடி செய்யவில்லை, ஆனால் அந்த உருவகங்கள் செய்கின்றன! இதுதான் சனல் குமாரின் கைதேர்ந்த கலை நுணுக்கம். அதுவே அவரை ஒரு அசலான, விநோதமான, கேளிக்கை நிறைந்த அதேவேளை அறிவொளியூட்டக்கூடிய படைப்பாளியாக்குகிறது. ’நகைச்சுவையான போதனையேஅவரது பாணி, ஆனால் நல்ல மயக்க மருத்தை ஏற்றிவிட்டு ஊசி ஏற்றுகிறார். அவரின் படங்களைப் பார்த்துவிட்டு நாம் நன்கு சிரித்து மகிழ்ந்து கை கழுவிவிட்டு நகர்ந்துவிட முடியாது, விழிப்புணர்வு பெற்றவர்களாயிருப்பின் ஏதேனும் செய்தே ஆக வேண்டும் என்று தோன்றும், அதுவல்லாதோருக்கு அவர்களுடைய அமைதி மனித நேயத்திற்கு அவர்கள் செய்யும் துரோகம் என்பதை உணர்த்திச் செல்லும்.

கலையின் தேவை இதுவே. சமூக விழிப்புணர்வை தூண்டிவிடுவது! உன்மாடியுடே மரணம் தனக்கு நேர்ந்த (குறிப்பாக எஸ். துர்கா) ஒடுக்குமுறை, தணிக்கை மற்றும் வலதுசாரி மதவாத சக்திகளின் அராஜகங்களினால் உண்டான பாதிப்பின் வெளிப்பாடே என்று சனல் குமார் கூறினாலும் பித்தனின் மரணம் திரைப்படமானது ஓர் ஆழ்ந்த விமர்சனபூர்வ, தத்துவார்த்த, தனிச்சிறப்புடைய ஆவணப்புனைவு (Docu-Fiction).  அது அதிருப்தியாளர்களின் சமூக அக்கறையின் பிரதிபலிப்பு. நமக்கான குரல். சொல்லப்போனால் தனிப்பட்டது எதுவும் இங்கே அரசியல் தான். ஆகவே ஒடுக்குமுறைகளை ஏவும் அந்த பாசிஸ்டுகளை அம்பலப்படுத்துவது, கேள்வி கேட்பது, எதிர்ப்பது, அவர்களோடு மோதுவது தவிர நமக்கு இங்கு வேறு ஏதும் வழியில்லை. பித்தனின் மரணம் மூலம் கனவு பிடிப்பான்களுக்கு சவால் விட்டபடி பிறழ்மைய (eccentric) முறையில் அதனை சிறப்பாக செய்கிறார் சனல்குமார்.

தணிக்கையின் பெயரால் அரசு தடை செய்யும் அல்லது விலக்கி வைக்கும் படங்களை திரையிடவும், அதிகாரமிக்க வணிகச் சந்தைக்கு எதிராக சுயாதீன திரைக் கலைஞர்கள் உருவாக வேண்டும் என்கிற நோக்கத்தோடும் சுயாதீன திரைப்பட விழாவை ஏற்பாடு செய்து சிறப்பானதொரு பங்களிப்பை செய்துவரும் தமிழ் ஸ்டூடியோ அருண் அவர்களுக்கு நன்றியும் பாராட்டும் உரித்தாகுக. – கொற்றவை

* எனது மொழிபெயர்ப்பை விட கவிஞர் எம். ராஜா அவர்களின் மொழிபெயர்ப்பு இந்த மேற்கொளுக்கு பொருத்தமாக இருப்பதால் இங்கு அதை சேர்த்துள்ளேன். இதனை கவனப்படுத்திய தோழர் பசுபதி அவர்களுக்கு நன்றி J

No comments:

Post a Comment