Mar 17, 2019

என்னுடைய நிர்வாணப் போராட்டம் குறித்து!




அன்புள்ள வளர்மதி,

பொள்ளாச்சி பாலியல் வன்முறை கொடுமையை ஒட்டி நான் பகிர்ந்திருந்த எனது அரை நிர்வாணப் படத்தின் அழகியல் தன்மை குறித்து நீங்கள் கேள்வி எழுப்பியிருந்தீர்கள். உண்மையில் எனக்கு அது பெருமகிழ்ச்சியை அளித்த்து. இதன் மூலம் எனது அரசியல் பார்வையை மீண்டும் ஒருமுறை பரப்ப உதவி செய்துள்ளீர்கள்.

முதலில் நான் 43 வயதாகும் ‘முதிர் பெண்’, அரசியல் விழிப்புணர்வு பெற்றுள்ள பெண். உடல் மட்டுமல்லாது எல்லாவற்றிலும் நான் அழகியல் எதிர்ப்பை கொண்டாடும் பெண், கலை முதல் வாழ்வு வரை. மார்க்சியம் படித்து நான் பெற்ற அக விடுதலையால் முதலில் நான் அழகுணர்ச்சியிலிருந்து தான் என்னை விடுவித்துக்கொண்டேன். புருவம் சரி செய்வத், மயிர் மழிப்பது, முகத்திற்கு ஃபேஷியல் செய்வது, எல்லாவற்றிற்கும் மேலாக உடலை வடிவாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சி செய்வது என்று எதையும் நான் செய்வது கிடையாது. இதற்கு ஒரே காரணம் நான் பெண்மை என்னும் உணர்விலிருந்து என்னை விடுவித்துக் கொண்டது மட்டுமே (ஆனால் என்னுடைய பெண்மை துறப்பு பற்றி பெண்ணிய விழிப்புணர்வு பெற்ற மற்றவருக்கு முரண்பாடு இருக்கும்!)

மேலும், உங்களுக்கு தெரிந்திருக்கும் நான் பதினெட்டு வயது நிரம்பிய ஒரு பெண்ணின் தாய்!

குழந்தை பெற்று 43 வயதாகும் ஒரு பெண்ணின் உடல் வடிவு பற்றி உங்களுக்கு நிச்சயம் தெரியும், அதிலும் உடலை வடிவாக வைத்துக்கொள்ள ஏதும் செய்யாத ஒரு வயது முதிர்ந்த பெணின் உடல் எப்படி இருக்கும் என்று உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.

நான் அந்த சைஸ் ஜீரோ என்று சொல்லக்கூடிய உடல் அமைப்பு கொண்டவள் அல்ல! என்னுடைய முலைகள் தொங்கும் முலைகள். நான் படுத்திருக்கையில் ஒன்று இடமாகவும், ஒன்று வலமாகவும் சரிந்து விழும். மிகவும் சிறிய மார்புகள் என்னுடையது. மகா ஸ்வேதா தேவியின் “இரவிக்கைக்குப் பின்னால் என்ன இருக்கிறது” கதை படித்திருக்கிறேன். அது வெறும் கொழுப்பு தான் என்று எனக்கும், இந்த உலகத்திற்கும் சொல்லிவிடுவேன்.

என்னுடைய இடுப்பும், தொடைகளும் ’பொருந்தாத’ விகிதத்தில் இருக்கும்! அடி வயிற்றில் தொங்கும் சதையும், வரி தழும்புகளும் இருக்கும்! எனக்கு வடிவான இடுப்பு கிடையாது, சொல்லப்போனால் அந்த இடுப்பு வளைவானது எனக்கு என்னுடைய புட்டத்தின் கீழ் தொடையின் தொடக்கத்தில் தான் இருக்கும். பார்ப்பதற்கு அது விநோதமாக இருக்கும் (நிலவும் அழகியல் அதிகார விதியின்படி) . என்னுடைய இந்த விநோதமான வடிவை நான் காட்சிப்படுத்த விரும்புகிறேன். பெண்களே, வடிவமாகவும், அழகாகவும் இல்லையென்றால் பரவாயில்லை! எல்லாமே இங்கு வடிவு தான் என்று கத்த விரும்புகிறேன்! இதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறேன்!

என்னுடைய அரசியல் பயணம் நிறைய கட்டங்களைக் கொண்டது! ஆண் வெறுப்பில் தொடங்கி, மிதவாத பெண்ணியவாதியாகி நான் மார்க்சியவாதி ஆனவள். என் மீதான ‘பிம்பம்’ மட்டுமின்றி ‘இசங்கள்’ பற்றிய பிம்பங்களையெல்லாம் உடைக்க எனக்கு அது உதவியது.

இந்தப் போக்கில், ஒவ்வொரு முறையில் என்னை அதிகம் துன்புறுத்தும் ஒடுக்குமுறை நிகழ்வுகளைப் பொறுத்து நான் ஒரு ‘கலகச்’ செயல்பாட்டில் ஈடுபடுவேன். ஒட்டுமொத்த சமூக விடுதலைக்காக மார்க்சியத்தை பிரச்சாரம் செய்வதோடு, நான் எழுத்தாளர் (மார்க்சிய – பெண்ணிய) என் மீது ஏற்றிவைக்கப்படும் பிம்பங்களையும் தகர்க்க விழைகிறேன். (அடங்க மறு தான்!) என்னுடைய உடலை நான் காட்சிப்படுத்துகிறேன் – மூடியதாக – நிர்வாணமாக! (ஆனால் அதை மட்டும் நா செய்துகொண்டிருப்பதில்லை என்பதை இங்கு நான் யார்க்கும் விளக்கத் தேவையில்லை). நீங்க ஒருவேளை என்னை பல ஆண்டுகளாக அவதானித்து வந்திருந்தால், இந்த 1 வருடமாகத் தான் நான் என்னுடைய புகைப்படங்களை அதிகமாக பகிர்ந்து வருகிறேன்.

அந்த நிர்வாணப் படமும் இத்தகையதொரு கலக பரிசோதனை முயற்சிக்காக எடுக்கப்பட்டது. நான் ஒருவேளை ‘குண்டாக & அசிங்கமாக’ இருந்தாலும் இதை செய்வேன். (உங்களுக்கு என் ஆக்ரோஷம் தெரியாது). மேலும், நான் செய்யவிருக்கும் ஒரு வேலைக்கான பரிசோதனை ஷூட் அது. என்னுடைய வீட்டில் வீழும் சூரிய ஒளி கொண்டு எடுக்கப்பட்டது (சிகப்பு விளக்கு அல்ல). அது ஒளிப் பரிசோதனை ஆய்வும் கூட! என் வீட்டு திரைச் சீலை ஆரஞ்சு நிறத்திலானது. அதன் வழியாக வரும் ஒளியை படம்பிடித்து பார்த்தோம். நானும் எனது ஆண் நண்பரும் ஒரு ‘ப்ராஜெக்ட்’ முயற்சிக்கிறோம். அதற்கான பரிசோதனை அது.  அதை எடுக்கையில் நிலவும் வரம்புகள் தெரியவந்து, அதை சரி செய்து பின்னர் எடுப்போம் என்று கற்று வருகிறோம். அதனோடு என்னுடைய ‘வடிவமற்ற’ உடலையும், ஒளியையும் பரிசோதனை செய்து வருகிறோம் அன்பே! ஆனால் அவையெல்லாம் முழு நிர்வாணப் படங்கள்! முகநூல் (சமூக வலைதள) விதிகளின்படி அதனைப் பகிர முடியாது! சொல்லப்போனால் நான் காலை கக்கூஸ் போவது முதல் எல்லாவற்றையும் காட்ட விரும்புகிறேன், குறிப்பாக மலம் வெளி வராமல் முக்கும் போது முகம் எப்படி இருக்கும்! அந்த முகத்தைப் பார்த்து ஆண்களால் “நீ அழகாய் இருக்கிறாய்” என்று சொல்ல முடியுமா என்று கேள்வி எழுப்ப விரும்புகிறேன் (இது உண்மை!). ஆனால் முகநூல் அதை நீக்கி விடும். நிச்சயமாக புகைப்பட கண்காட்சி வைக்கலாம்.

இந்த பொள்ளாச்சி பாலியல் வன்முறை கொடுமை சம்பவம் நடந்ததும் அது குறித்து எல்லோரும் எழுதி வந்தனர். உண்மையில் அவற்றைப் படித்து எனக்கு சினம் தான் பொங்கியது. இந்த உலகத்தைப் பார்த்து, குறிப்பாக பெண்களைப் பார்த்து “ஏய் பெண்களே, உங்கள் உடல் பற்றியோ நிர்வாணத்தைக் கண்டோ நீங்கள் அவமானப் பட ஏதுமில்லை” என்று கூச்சலிட விரும்பினேன். நாங்கள் எடுத்து மிகக் குறைவான புகைப்படங்களில் இதை மட்டுமே பகிர முடிகிற விதிமுறைக்குள் இருந்தது. (புதிதாக எடுக்க ஆளோ, நேரமோ அன்று இல்லை). இதுவும் ஒரு ‘போலி அழகியல் எதிர்ப்பு’ புகைப்படமாக புரிந்துகொள்ளப்படும் என்று நான் அறிவேன். ஆனால் இத்தகைய சந்தர்ப்பங்களில் எனது மூர்க்கமே என்னை வழிநடத்தும். அந்த ஆனாதிக்கப் பன்றிகளைப் பார்த்து “ஃபக் ஆஃப்” என்று சொல்வது போல்! இது முழுக்க முழுக்க என்னுடைய உத்தி (அது சரியாக இருக்க வேண்டியதில்லை). பெரியார் சினம் கொண்டு கடவுள் படங்களை செருப்பால் அடிப்பது போல் தான் இது! இதனால் நான் எதிர்கொள்ள வேண்டிய சவுக்கடிகள் பற்றியும் அறிவேன். எதிர்கொள்வேன்! எதிர்கொள்கிறேன்! ஆனால் அதைவிட பெரிதாக நான் பெருவது என்னவெனில், உரையாடும் வாய்ப்பு! இது இரட்டை நன்மை!

என்னுடைய கண்ணோட்டத்தில் ஏற்படுத்த முடிகிற விழிப்புணர்வு, அதன் மீது உங்களைப் போன்ற அரசியல் புரிதலுடைய பெண்கள் வைக்கும் விமர்சனங்கள் மூலம் விழிப்புணர்வு.

எதுவாக இருந்தாலும் அது பெண் உடல் பற்றிய கட்டுடைப்பு பிரச்சாரத்திற்கே பயன்படும், அல்லவா!

அன்புடன்
கொற்றவை

பி.கு: கண்டிப்பாக இது சுயவிளக்கம் அல்ல, நியாயப்படுத்தலோ, பாவமன்னிப்பு கோருவதோ அல்ல. உங்களைப் போல் பலருக்கும் இத்தகைய கேள்விகள் இருக்கும். இதனை நான் மீண்டும் அறிவுப் பகிர்தலாகவும், பிரச்சாரமாகவும் தான் காண்கிறேன். உங்களுடைய மாற்று கருத்தை நான் வரவேற்கிறேன். உண்மையில் பெண்கள் ஒருவரோடு ஒருவர் அறிவார்ந்த வகையில் முரண்பட வேண்டும். அதன் மூலம் நடக்கும் உரையாடல் மேலும் மேலும் அறிவு பரவலாக்கமே!

No comments:

Post a Comment