May 18, 2018

உழைக்கும் மகளிர் (அறிக்கை)


ந. கா. க்ரூப்ஸ்கையா எழுதிய அறிமுகம்
இச்சேறேடு நீண்டகாலத்திற்கு முன் 1889ஆம் ஆண்டில் சைபீரியாவில் உள்ள யெனிசெய் மாகாண மினுசின்ஸ்க் பகுதியின் ஷுஷென்ஸ்கோயே கிராமத்தில் இருந்தபோது எழுதப்பட்டது. அங்குதான் நான் வ்ளாடிமிர் இலியீச்சுடன் (லெனின்) நாடு கடத்தப்பட்டேன். இதுதான் நான் எழுதிய முதல் சிற்றேடு என்பதால் என்னால் இயலுமா என்கிற நடுக்கம் எனக்கிருந்தது. வ்ளாடிமீர் இலியீச்தான் எனக்கு ஊக்கமளித்தார். அக்காலகட்டத்தில் இத்தகைய சிற்றேட்டை வெளிப்படையாக வெளியிட முடியாது, மீறினால் வெளியிடுபவர் கைது செய்யப்படுவார். இரகசியமாக சட்ட அங்கீகாரமின்றியே இவற்றை வெளியிட வேண்டியிருந்தது. 1900இல் ப்ளெக்கனோவ், அக்செல்ராட், சாஸுலிச், மார்தோவ் மற்றும் பொட்ரெசோவுடன் வ்ளாடிமீர் இலியீச்சும் இஸ்க்ரா இதழை தொகுக்க வெளிநாடு சென்றார். அப்போது ரஷ்யாவில் இரகசியமாக இஸ்க்ரவை ஒரு தேசிய நாளிதழாக தொகுக்கும் முயற்சி நடந்து வந்தது. நான் ஊஃபா நகரத்தில் நாடுகடத்தப்பட்ட நிலையில் வாழ்ந்து வந்தேன். நான் மிகவும் மதிக்கும், விரும்பும் மூத்த புரட்சியாளராகிய வேரா இவனோவா சாஸுலிச்சிடம் உழைக்கும் மகளிர் கைப்பிரதியை வ்ளாடிமீர் இலியீச் காண்பித்தார். அவருடைய மதிப்பீடு எனக்கு மிகவும் முக்கியமானது. அதனைப் படித்த வேரா இவனோவா: “சிற்றேட்டில் சில தவறுகள் இருப்பினும் அவர் பிரச்சினையின் ஆணிவேரைப் பிடித்துவிட்டார்” என்று சொல்லி பதிப்பகத்தையும் பரிந்துரை செய்தார். இஸ்க்ரா இச்சிற்றேட்டை பதிப்பித்தது. ரஷ்யாவில் அது ஒரு இரகசிய அச்சகத்தில் மறுபதிப்பும் செய்யப்பட்டது. 1905இல் தான் வெளிப்படையாக அச்சிட்டு விநியோகிக்கும் நிலைமை உருவானது. நான் அவ்வப்போது பயன்படுத்திய “சப்லீனா” என்னும் புனைப்பெயரில் கையொப்பம் இட்டிருந்தேன். வெகு விரைவில் அது மீண்டும் தடைசெய்யப்பட்டது.
1900 தொடங்கி தற்போது 25 வருடங்கள் கழிந்துவிட்டன. ஃபிப்ரவரி மற்றும் அக்டோபர் புரட்சி உட்பட இக்காலகட்டத்தில் பல்வேறு எழுச்சிகளும் ஏற்பட்டன. பாட்டாளி வர்க்கம் ஆட்சியைப் பிடித்துவிட்டது. பாட்டாளி வர்க்கத்தின் நிலைமைகள் மாறிவிட்டன, அதனோடு உழைக்கும் மகளிர் மற்றும் விவசாய மகளிரின் நிலைமைகளும் மாறிவிட்டன. உழைக்கும் மகளிரின் நிலைமைகள், அவளது உரிமைகள் மற்றும் அரசாட்சியில் பெண்களை இணைத்தல் குறித்தெல்லாம் வ்ளாடிமீர் இலியீச் பேரார்வத்துடன் அழகாகவே எழுதியுள்ளார். அதேபோல் மற்ற தோழர்களும் இதுகுறித்து நல்லபடியாக நிறையவே பேசியுள்ளனர். கம்யூனிஸ்ட் கட்சியின் பெண்கள் அமைப்புகளும் தங்களுடைய நடவடிக்கைகளை பரந்த தளங்களில் நீட்டித்திருக்கின்றனர். இதன் விளைவாக ஒவ்வொரு நாளும் உழைக்கும் மகளிர் மற்றும் விவசாய மகளிர் மேலும் மேலும் அரசியல் விழிப்புணர்வு பெருகின்றனர், தன்னம்பிக்கை பெறுகின்றனர். புதிய வாழ்வை அமைத்திடுவதில் மேலும் ஊக்கத்துடன் பங்கெடுக்கின்றனர்.
இந்த உழைக்கும் மகளிர் அறிக்கையானது காலத்தால் பழையது.
இருப்பினும், இத்துண்டறிக்கையைப் படிக்கையில், இதனை மறுபதிப்பு செய்ய வேண்டும் என்ற தோழர்களின் திட்டத்தை நான் ஏற்கிறேன். அன்றைய உழைக்கும் மகளிரின் நிலைமைகள் பற்றிய விவரணங்களைப் படிக்கும்போது அங்கிருந்து நாம் இன்று எதுவரை முன்னேறியுள்ளோம் என்ன சாதித்தோம் என்பதை அறிந்துகொள்ள முடியும். அதேவேளை நாம் சாதிக்காதது என்ன, உழைக்கும் மகளிரின் முழுமையான விடுதலைக்காக நாம் இன்னும் தீவிரமாக, விடாப்பிடியாக எவ்வளவு உழைக்க வேண்டும் என்பதையும் அறிந்துகொள்ள முடியும்.
உங்களுடைய சொந்த வாழ்வையோ அல்லது நீங்கள் அறிந்த ஒரு பெண் தொழிலாளியின் வாழ்வையோக் கூட சற்று திரும்பிப் பாருங்கள். நெக்ரசோவின் சொற்களில் சொல்வதானால், “ஓ! பெண்களின் பாடுதான் எவ்வளவு கடினமானது, பெண்ணைப் போன்றொதொரு துன்பப்படும் பிறவியும் உள்ளதோ. கிராமமோ, சிறு நகரமோ உழைக்கும் வர்க்கப் பெண்கள் “நிலையான, எப்போதைக்குமான தொழிலாளியாகவே இருக்கின்றனர்.” ஆண்களைக் காட்டிலும் அதிகம் உழைக்க வேண்டியுள்ளதோ இல்லையோ, கண்டிப்பாக பெண்கள் குறைவாக உழைப்பதில்லை. அவளும் அதே ஏழ்மையை, ஊட்டச்சத்துக் குறைபாட்டை, தூக்கமின்மையை பகிர்ந்துகொள்கிறாள். அதனோடு கூட துயரமும் அவமானமும் அவளை கூடுதலாகப் பீடிக்கிறது.”
இன்பமாக வாழ ரஷ்யாவில் யாருக்கு கொடுத்துவைத்திருக்கிறது (To whom in Russia is it given to live well) என்று நெக்ரசொவின் கவிதை ஒன்றிருக்கிறது. அதில் ஒரு விவசாயப் பெண் தன்னுடைய கசப்பான வாழ்வு பற்றி ஒரு யாத்ரீகரிடம், “பெண்ணின் மகிழ்ச்சிகரமான வாழ்விற்கும், சுதந்திரமான இன்பகரமான வாழ்க்கைக்குமான சாவியை மறந்து கடவுளானவர் அதை தொலைத்தும் விட்டார்… ஆம் தொலைந்துவிட்டது! ஏதோ ஒரு மீன் அதனை விழுங்கிவிட்டது என்று நினைத்துக்கொள்ளுங்கள்… எந்த மீன் அந்த விலைமதிப்பற்ற சாவியை விழுங்கியது… அது எந்தக் கடலில் நீந்திக் கொண்டிருக்கிறது என்பதை கடவுள் மறந்துவிட்டார்!” என்று கூறுகிறாளாம். அந்த விவசாய அடிமைப் பெண்ணால் புலம்பவும், என்றோ ஒருநாள் அந்த மறைத்துவைக்கப்பட்ட சாவியை கடவுள் கண்டுபிடித்துவிடுவார் என்ற நம்பிக்கையிலும் மட்டுமே வாழ முடிகிறது. அத்தகைய நம்பிக்கைகளை இப்போதைய பெண் தொழிலாளர் கைவிடுகிறாள், இருட்டில் தட்டுத்தடுமாறி அச்சாவியை தானே தேட முற்படுகிறாள். “பெண்ணின் மகிழ்ச்சிகரமான வாழ்விற்கும், சுதந்திரமான இன்பகரமான வாழ்க்கைக்குமான சாவியை அவள் எங்கு தேட வேண்டும்? சரியாக இதைத்தான் இந்த சிற்றேடு விளக்கப்போகிறது. தொழிற்சாலைகள், பட்டறைகளில் வேலை செய்யும் பெண்கள் அல்லது குடிசைத் தொழில் செய்யும் உழைக்கும் மகளிர் மற்றும் விவசாய மகளிரின் நிலைமைகளை நாம் ஆய்வு செய்வோம். உழைக்கும் மகளிரின் நிலைமை குறிப்பாக கடினமானதாக இருக்கிறது, ஏனென்றால் அவள் பாட்டாளி வர்க்கத்தின் அங்கம். அவளுடைய நிலைமைகள் ஒட்டுமொத்த பாட்டாளி வர்க்க நிலைமைகளோடு பிணைந்துள்ளது. பாட்டாளி வர்க்க வெற்றியே பெண் விடுதலைக்கான திறவுகோல். மேலும், குடும்ப அமைப்பினுள் பெண்ணின் சார்பு நிலையையும், அதனால் அவள் ஆணுக்கு அடிமையாக்கப்படுவதைப் பற்றியும் பார்ப்போம். அத்தகைய சார்பு நிலைமைக்கான காரணங்களையும் நாம் பேசுவோம். அதனூடாக பாட்டாளி வர்க்க விடுதலையோடு தான் ஒரே நேரத்தில் அவள் முழுச் சுதந்திரத்தையும் பெறமுடியும் என்பதையும் விளக்குவோம்.
இறுதியாக, ஒரு தாயாக உழைக்கும் மகளிருக்கு அந்த வெற்றியில் நலன்கள் உள்ளன என்பதையும் எடுத்துரைப்போம். தொழிலாளர்களின் நலனுக்காக பெண்கள் தோளோடு தோள் நின்று போராடினால் மட்டுமே “சுதந்திரமான இன்பகரமான வாழ்க்கைக்கான சாவியை” பெண்கள் கண்டுபிடிக்க முடியும்”.
- நதீஸ்டா கான்ஸ்டாண்டினோவா க்ரூப்ஸ்கையா (1869 – 1939)
லெனின் என்னும் ஆளுமை மீதான பரவலான ஈர்ப்பால் மற்றுமொரு ஒரு புரட்சியாளர், கட்டுரையாளர் என்று இருட்டடிப்பு செய்யப்பட்டதோடு துரதிர்ஷ்டவசமாக பலராலும் ‘லெனினின் மனைவி’ என்று மட்டுமே அறியப்பட்டவர். கல்வியாளராக அவர் ஒரு தனித்துவமான ஆளுமை என்றபோதும் க்ரூப்ஸ்கையாவின் எழுத்துகள் இதுவரை ஆங்கிலத்தில் புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளது என்று டிமிட்ரி கொலெஸ்நிக்கும், அலெக்ஸ் கார்டனும் பதிவு செய்கிறார்கள்.

No comments:

Post a Comment