May 18, 2018

சேவை என்று எதுவுமில்லை…. எல்லாம் வேலை தான்…


சமீபத்தில் ஓர் எண்ணை விளம்பரத்தில் உண்மையான ‘தங்கமான வெற்றியாளர்’ யார் என்ற கேள்வியை முன்வைத்து உங்களையெல்லாம் எந்தக் குறையுமில்லாமல் பார்த்துக்கொள்பவர் யார் என்று கேட்க குழந்தைகள் தங்களின் அம்மாவுக்கு விருது வழங்கி, தாய் தான் தங்கமான வெற்றியாளர் என்கிறார்கள். இதன் மூலம் நாம் குழந்தைகளுக்கும், சமூகத்திற்கும் என்ன கற்றுத் தருகிறோம். மீண்டும் மீண்டும் தாய்மையை புனிதப்படுத்துகிறோம்.
அவளின் வீட்டு வேலை செய்யும் மகத்துவத்தை வைத்தும், தன்னைப் பற்றி கவலைப்படாது 24 மணி நேரமும் அர்ப்பணிப்புடன் குடும்ப பராமரிப்பை மேற்கொள்ளும் ‘பெண்மணி’யே சிறந்த தாய் என்கிறோம். (பாவம் இதையெல்லாம் செய்தாலும் தந்தைக்கு எந்த அங்கீகாரமும் இல்லை!)
பெண்களின் மீது அளவில்லா மரியாதை கொண்டுள்ள ‘ஆண்களே’, முதலாளிகளே ஒருவர் மீது பாலின அடிப்படையில், சாதியின் அடிப்படையில் திணிக்கப்பட்ட வேலையை சேவை என்று சொல்லி காரியம் சாதிப்பதை முதலில் நிறுத்துங்கள். Service Industry என்பதே ஏமாற்று வேலை. எல்லாம் பணம் வாங்கிக்கொண்டு பண்டமாகத்தானே கொடுக்கிறோம்.
பெண்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் ஒதுக்கப்பட்டிருக்கும் வேலைகளில் இருந்து அவர்களை விடுவிக்காமல் (அசமத்துவமான உழைப்புப் பிரிவினையிலிருந்து) அவர்களின் ‘சேவையை’ புகழ்வதும், அங்கீகரிப்பதும், பரிதாபப்படுவதும், அதற்கென சில NGOக்களை உருவாக்கி அதன் மூலம் உதவிகள் செய்வதும், விருது வழங்குவதும் என்றில்லாமல் சமத்துவமான உழைப்புப் பிரிவினையை நிலைநாட்டுவதே இங்கே அவசியத் தேவை.
ஆண், பெண், மாற்றுப்பாலினம், மாற்றுத்திறனாளி என்று அனைவரின் உழைப்பையும் சுரண்டிப் பிழைத்துக்கொண்டிருக்கும் முதலாளித்துவத்தின் அசமத்துவ வேலைப்பிரிவினையை ஒழிப்பதே நம் புரட்சிகர இலக்கு என்றபோதிலும், பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் வேலைப் பிரிவினையை மாற்றியமைக்க நாம் உடனடியாக ஓரடியேனும் எடுத்து வைக்க முடியும் என்றே நம்புகிறேன்.
தாய்க்காகவும், சகோதரிகளுக்காகவும், காதலிகளுக்காகவும், மனைவிக்காகவும் கண்ணீர் வடித்து அவர்களின் நிலையைக் கண்டு உருகி அழும் ஆண்கள் (அழாத ஆண்களும்) முதலில் தங்களின் சமத்துவத்தை வீட்டிலிருந்து தொடங்கலாம்.
சமையலறை வேலை தொடங்கி, பிள்ளைகள் பராமரிப்பு, கழிப்பறை கழுவும் வேலை வரை அனைத்தையும் சமமாக பகிர்ந்துகொள்ளுங்கள். தேவைப்பட்டால் சுழற்சி முறையில் இப்பணிகளை மேற்கொள்ளுங்கள். வீட்டு வேலை பெண்களுக்கு, வெளி வேலை ஆண்களுக்கு…. அடுத்ததாக வெளி வேலை பெண்களுக்கு, வீட்டு வேலையும் பெண்களுக்கே என்கிற நிலையை மாற்ற முதலில் நம் வீட்டிலிருந்து தொடங்குவோம். என் அம்மா மாதிரி யாராலையும் சமைக்க முடியாது என்று சப்புக்கொட்டிக் கொண்டிருக்காமல், உங்களின் கை வண்ணத்தை உங்கள் தாயும், மனைவியும் சுவைக்கச் செய்யுங்கள். அப்போது தெரியும் உப்பும், புளியும், காரமும் குறைகிறதா, சோறு குழைகிறதா, இட்லி பூ மாதிரி வருகிறதா, தோசை பேப்பர் ரோஸ்ட் மாதிரி சுருள்கிறதா என்று.
வீட்டு வேலைகள் சிலவற்றை குழந்தைகளையும் செய்யச் சொல்லுங்கள். பெண் குழந்தை மட்டுமின்றி ஆண் குழந்தையையும் வீடு கூட்டி, துடைக்கச் சொல்லுங்கள், பாத்திரம் கழுவச் சொல்லுங்கள்.
இப்படிப்பட்ட சமத்துவமான உழைப்புப் பிரிவினை தத்துவத்தைத் தான் கம்யூனிஸ்டுகள் நடைமுறைப்பபடுத்த நினைக்கிறார்கள் (அதை மட்டுமல்ல). ஆகவே, இந்த ஆணாதிக்க சமூகத்திற்கும், முதலாளிகளுக்கும் அவர்கள் துரோகிகளாகி விடுகிறார்கள். மற்ற புரட்சிகரப் போராட்டங்களுக்குக் கைகொடுக்கவில்லை எனினும் இதற்காவது செவி மடுங்கள்.
அடுத்ததாக தலித் விடுதலை என்பது பாட்டாளி வர்க்க விடுதலையோடு தொடர்புடையது எனினும், குறிப்பிட்ட பிரிவினரின் விடுதலைக்கான விதையை நாம் தற்போது விதைக்க முடியுமாவென பார்ப்போம். சாதியப் பிரச்சினை குறித்து தொடர்ந்து எழுதி வந்துள்ளதுபோல் தலித்துகளில் ஒரு பிரிவினருக்கு ‘அசுத்தமான பணி’ என்று சொல்லப்படும் தூய்மை செய்யும் பணி ஒதுக்கப்படுகிறது. அதை ‘சேவை’ என்று சொல்லி அவர்களின் நிலைமைகளைக் கண்டு கண்ணீர் வடிப்போர் ஏராளம் பேர் உள்ளனர். இனிமேல் நாம் நம் கண்ணீரை விரையம் செய்ய வேண்டாம். நேரடியாக களத்தில் இறங்குவோம்.
தலித்துகள் / தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலையில் உண்மையான அக்கறை உள்ளவர்களாக ‘கீழ்’நிலை உழைப்பாக கருதப்படும் பொது கழிப்பறையை தூய்மை செய்யும் வேலையை அனைவரும் பகிர்ந்துகொள்வதற்கான ஒரு செயல்திட்டத்தை உருவாக்கி அதை உடனடியாக நடைமுறைபடுத்த முயல்வோம்.
அவரவர் வசிக்கும் பகுதிகளில் வார்டு வாரி வீட்டுப் பட்டியல் தயாரித்து சுழற்சி முறையில் மால்கள், இரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், பள்ளிக் கூடங்கள் என எல்லா பொதுக் கழிப்பறைகளையும் நாம் அனைவருமே தூய்மை செய்யலாம். அந்தந்த தெருக்களில் இருக்கும் குப்பைகளை அகற்றலாம். இதற்குத் தேவையான உபகரணங்களை நாம் தோற்றுவிக்கும் அமைப்பு / குழுக்கள் மூலம் மாநகராட்சியிடம் கேட்டுப் பெறலாம். தனியார் நிறுவனங்கள், அரசு அலுவலகங்களில் வேலை செய்வோருக்கான சம்பளத்துடன் கூடிய விடுப்பை அந்நாட்களுக்கென கேட்டுப் பெற வேண்டும். இதை சட்டமாக்கலாம். (பெரிய வேலைதான்!)
உற்பத்தி முறை மாறாமல்… உடைமை வடிவம் மாறாமல், சோஷலிசப் புரட்சி நடைபெறாமல் முழுவதுமாக குறிப்பிட்ட வேலையை ‘குறிப்பிட்ட உழைக்கும் மக்கள் பிரிவிடமிருந்து’ மாற்றியமைப்பது அவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும், அல்லவா? அதற்காக நாம் செய்யக்கூடியது என்னவெனில், இதுவரை அவர்கள் நம்மை பராமரித்து வந்தார்கள் அல்லவா, அதற்கு ஈடாக (ஈடு செய்ய முடியாதெனினும்) நாம் சுழற்சி முறையில் அந்த வேலை செய்து ஈட்டக்கூடிய ‘கூலியை’ அம்மக்களுக்கே சென்று சேருமாறு செய்ய வேண்டும். (தலித் மக்கள் கல்வி பெற்று ‘குலத்’ தொழிலில் இருந்து விடுபட்டு அதிக்க சாதியினர் போல் மற்ற வேலைகள் பெறும் வகையிலான முயற்சிகள், போராட்டங்கள் தொடர வேண்டும்).
அலுவலகங்களிலும், ஹோட்டல்களிலும் கூட House Keeping என்றொரு துறையை வைத்திருக்கிறார்கள். அதிலும் கழிப்பறைகளை தூய்மை செய்பவர்கள் பெரும்பாலும் பெண்கள் அல்லது தாழ்த்தப்பட்ட சாதியினராகத் தான் இருக்கிறார்கள்.
ஆதிக்க சாதிகள் (முதலாளிகள் உட்பட) இந்த வேலைகள் செய்ய நிர்பந்திக்கப்பட்டால் ஒழிய சாதிய ரீதியான உழைப்புப் பிரிவினை மாறாது, சமத்துவமும் மலராது.
இயந்திரங்களே வந்தாலும் அப்பணியை குறிப்பிட்ட பிரிவினரே செய்யும் நிலை தான் இருக்குமெனில் அது சாதியமே. ஆகவே இதை அனைவரும் பகிர்ந்துகொள்வதே சமத்துவத்தை நோக்கி நகரும் வழி.
குறிப்பிட்ட வேலை குறிப்பிட்ட பிரிவினருக்கே என்றிருக்கும் நிலையை மாற்றாமல் நாம் சாதியை ஒழிக்க முடியாது, பெண் விடுதலையை எட்டவும் முடியாது.
தீண்டாமை ஒழிப்பு முன்னணி, சாதி ஒழிப்பு முன்னணி, இதர மா.லெ கட்சிகள், தலித்திய கட்சிகள் இணைந்து இப்படி ஏதேனும் ஒரு செயல்திட்டத்தை உருவாக்க முடியாதா? இல்லை இது ஏற்கனவே முயன்று தோற்ற விஷயமா? இது சிக்கலானதாக, ஆர்வக்கோளாறு பேச்சாகக் கூட தோன்றலாம், ஆனால் இதுபோன்று உழைப்புப் பிரிவினையை நிலைநாட்டவில்லை எனில் நாம் வேண்டும் சமத்துவம் என்பது என்ன?
ஒருவேளை இது முட்டாள் தனமான வாதமாக இருக்குமெனில், மாற்று வேலைத்திட்டத்தை யாரேனும் விரிவாக எழுதி அறிவூட்டலாம்!
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் உரிமையைக் கோருகிறோம், ஏன் அனைத்து சாதியினரும் கழிப்பறை தூய்மை செய்வோம், தூய்மைப் பணிகளை மேற்கொள்வோம் என்னும் குரல் எழுப்ப மறுக்கிறோம்?
(வழிகாட்டிய கட்டுரை -http://saavinudhadugal.blogspot.in/2017/08/blog-post.html )

No comments:

Post a Comment