மது வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு என்றுதானே அரசு
எல்லா மட்டத்திலும் விளம்பரம் செய்கிறது, பின்பு ஏன் மதுவிலக்கை அமல்படுத்தக்கோரும்
போராட்டங்களை வன்முறையால் ஒடுக்க நினைக்கிறது? மதுவுக்கு பெரும்பாலான இளைஞர்கள், மாணவர்கள்
அடிமையாகிவிட்ட நிலையில் மீதமிருக்கும் மாணவர்கள், மாணவிகள் மதுவுக்கு எதிராக போராடுவதைக்
கண்டு மகிழ்ந்து அவர்களுக்கு துணை நிற்க வேண்டிய அரசும், காவல்துறையும் மாணவர்களை இப்படி
அடித்து உதைத்து, இழுத்து, மாணவிகளை மானபங்கப்படுத்தி மதுப் பழக்கத்திற்கு ஆதரவாக நிற்பது
ஏன்? எவரின் நலனுக்காக? இதற்குப் பெயர் மக்கள் ஆட்சியா?
கணவன்மார்களை குடி பழக்கத்திற்கு அடிமையாக்கி பெண்களின்
தாலியை ஒரு கையால் பறித்துக்கொண்டு மறு கையால் பாலூட்டும் அறைகள் திறந்து என்ன பயன்?
தாய்க்கும் சரி, சேய்க்கும் சரி போதிய ஊட்டச்சத்தும், பாதுகப்பான குடும்ப வாழ்வும்
அமைய போதிய பொருளாதார உத்திரவாதமற்ற சூழ்நிலையில், கணவன்மார்கள் தங்கள் சம்பாத்தியம்
மட்டுமல்லாது கடன் வாங்கி மதுக்கடைகளில் தஞ்சம் புகுந்து தம் குடும்பத்தாரை மீளாத்
துன்பத்திலும், வறுமையிலும் தவிக்க விடும் நிலையில், தாய்மார்களுக்கு பால் சுரப்பதில்லை,
கண்ணீர் மட்டுமே தாரை தாரையாக வழிந்தோடுகிறது. அதையும் மீறி தன் ரத்தத்தை பாலாக்கி
தன் பிள்ளைகளை ஊட்டி வளர்ப்பவள் தாய் ஆனால் தமிழக முதலமைச்சர் அம்மாவோ அத்தகைய குடும்பங்களின்
ரத்தத்தை உறிஞ்சி எவருக்குப் பால் வார்க்க நினைக்கிறார்?
எந்த ஒரு தாயும் தம் பிள்ளைகள் குடித்து சீரழிய வேண்டும்
என்று எண்ண மாட்டாள். ஆனால், தமிழகத்தின் தாய் எல்லோரும் குடித்தே ஆக வேண்டும் என்று
சொல்லாத குறையாக மதுவுக்கு எதிராகப் போராடும் இளைஞர்களை, முதியவர்களை, பெண்களை, அரசியல்
கட்சித் தலைவர்களை, சமூக ஆர்வலர்களை அடித்து உதைத்து இதுவரை வரலாற்றில் அரங்கேறிடாத
வன்முறையை ஏவுகிறார்.
ü குடித்து
விட்டு வந்து அடித்து சித்திரவதை செய்யும் கணவன்மார்களிடமிருந்து தம்மைக் காத்துக்கொள்ள,
தம்மின் வாழும் உரிமையை நிலைநாட்டிட மதுவுக்கு எதிராகப் போராடும் உரிமை பெண்களுக்கு
உண்டு.
ü தனது
சம்பாத்தியம் முழுவதையும் டாஸ்மாக்கில் தொலைத்துவிட்டு தமக்குப் போதிய உணவு, இருப்பிடம்,
கல்வி, மருத்துவம் இது எதையும் அளித்திட முடியாத தந்தையை மதுபோதையிலிருந்து மீட்டு
தம் அடிப்படை உரிமைகளை உறுதி செய்வதற்காக மதுவுக்கு எதிராகப் போராடும் உரிமை குழந்தைகளுக்கு
உண்டு.
ü மது
போதையில் தம் குடும்ப உறுப்பினர்களை துன்புறுத்துவதோடு, முதியவர்களான தம்மையும் துன்புறுத்தி,
வீதியில் விடும் தம் மகனை மதுபோதையிலிருந்து மீட்க மதுவுக்கு எதிராகப் போராடும் உரிமை
முதியோருக்கு உண்டு.
ü தம்
எதிர்காலம், நாட்டின் எதிர்காலம் எல்லாம் சீரழியக் காரணமாக இருக்கும் மதுவுக்கு எதிராகப்
போராடும் உரிமை மாணவ, மாணவிகளுக்கு உண்டு.
ü மக்களுக்குப்
பணி செய்திடவும், பாதிக்கப்படுவோருக்கு நீதி பெற்றுத் தந்திடவுமே அரசியல் கட்சிகள்
தோன்றுகின்றன. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டையே போதை நாடாக மாற்ற நடக்கும் முயற்சியிலிருந்து
தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களையும் மீட்க மதுவுக்கு எதிராகப் போராடும் உரிமை
அரசியல் கட்சிகளுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் உண்டு.
ü மதுபோதையில்
பெண்ணின் உடலை, சிறுமியின் உடலை, குழந்தையின் உடலை மிருகமென வேட்டையாடும் மனிதனை மது
எனும் அரக்கனிடமிருந்து மீட்பதற்காக மதுவுக்கு எதிராகப் போராடும் உரிமை அனைத்து சமூக
ஆர்வலர்களுக்கும் உள்ளது.
ü மதுக்
கடைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் மீது நிகழ்த்தப்படும் உழைப்புச் சுரண்டலை ஒழித்திடவும்,
மதுவுக்கு அடிமையாகி வாங்கும் அந்த சொற்ப சம்பளத்தையும் டாஸ்மாக்கிலேயே தொலைத்துவிட்டு
மனைவி, மக்கள், பெற்றோரின் பசியாற்றிட முடியாத அந்தத் தொழிலாளர்கள் மட்டுமின்றி, அனைத்து
தொழிலாளர்களையும் மது போதையிலிருந்து மீட்க மதுவுக்கு எதிராகப் போராடும் உரிமை ஒவ்வொரு
புரட்சிகர இடதுசாரி தோழர்களுக்கும் உண்டு.
ü மதுவிலக்கை
அமல்படுத்தக் கோரி தன் இன்னுயிர் நீத்த தோழர். சசிபெருமாள் அவர்களின் கனவை மெய்ப்பிக்கவும்,
அவரது மரணத்திற்கு நீதி கேட்டுப் போராடவும் தோழர் சசிபெருமாளின் குடும்பத்தாருக்கும்,
அவரது ஆதரவாளர்களுக்கும் உரிமை உண்டு.
ü தமிழ்நாட்டின்
பொருளாதார ஆதாரம் எனும் பெயரில் தனிநபர் பொருளாதாரத்தையும், அவர்களது வாழ்வாதாரத்தையும்
நலிவடையச் செய்யும் தமிழக அரசின் மதுக்கொள்கைக்கு எதிராகப் போராடும் உரிமையும், கடமையும்
ஒவ்வொரு குடிமகர்க்கும் உண்டு.
ü திரு.
வைகோ, திரு. திருமாவளவன் உள்ளிட்ட தோழர்கள், மாணவ மாணவிகள், பொது மக்கள் மீதான அரசின் வன்முறையை வன்மையாகக் கண்டிப்போம்.
ü நமது
உரிமைகளை நிலை நாட்டுவோம், உரிமைகளுக்காகப் போராடுவோம், போராடும் மக்களுக்கு ஆதரவு
தெரிவிப்போம். குடியரசைப் போற்றுவோம், குடிக்கச் சொல்லும் அரசுக்கு எதிராக ஒன்றிணைந்து
செயல்படுவோம்.
No comments:
Post a Comment