ஜூலை
மாதம் முதல் வாரத்தில் கேரள உள்துறை அமைச்சரான திரு. ரமேஷ் சென்னிதாலா அவர்கள் இந்த
வருடம் மே மாதத்தில் ஆந்திர காவல்துறையால் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் தம்பதிகளான
ரூபேஷ் ஷைனா அவர்களின் மகள்களுக்கு ஒரு கடிதம் எழுதினார்.
அத்தம்பதிகள்
10 வருடங்களுக்கும் மேலாக தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தனர் என்றும் அவர்களுக்கு
19 வயதில் ஏமி என்ற மகளும், 10 வயதை நெருங்கும் சவேரா என்றொரு மகளும் உள்ளனர் என்றும்
காவல்துறையின் அறிக்கை தெரிவிக்கிறது.
தன்னுடைய கடிதத்தில், அமைச்சர் அவர்கள், பெற்றோரின் போதிய அரவணைப்பும், கவனிப்பும் கிடைக்காதவர்கள் என அக்குழந்தைகள் பற்றிய தன்னுடைய கவலையை வெளிப்படுத்தியிருக்கிறார். மேலும் அதில் அவர், “அர்த்தமற்ற பிரச்சாரங்களுக்கும், வெற்று சித்தாந்தங்களுக்கும்” பலியாகிவிட வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். அதுமட்டுமின்றி, தங்களுடைய படிப்பில் கவனம் செலுத்தி, “தேசத்தின் பொறுப்புமிக்க குடிமகர்களாக” உருவாகும்படி அறிவுரையும் வழங்கியுள்ளார்.
இதனைத்
தொடர்ந்து, தற்போது ஏமி, ரூபேஷின் மூத்த மகள் உள்துறை அமைச்சருக்கு வெளிப்படையான ஒரு
கடிதம் எழுதியுள்ளார். மேலும், அமைச்சரின் கடிதத்தில் கூறப்பட்டுள்ள கருத்துகளில் ஏற்றுக்கொள்ள
முடியாத, அதேவேளை சங்கடத்தையும் தரக்கூடிய அம்சங்களுக்கு எதிர்வினை ஆற்றியுள்ளார் ஏமி.
மத்யமம் எனும் மலையாள நாளிதழின் இணைய பதிப்பில் அக்கடிதம் வெளியிடப்பட்டுள்ளது.
அவனி
செய்தி எனும் தளத்தில் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது, அதன் தமிழ்
மொழிபெயர்ப்பு இதோ:
மதிப்பிற்குறிய
உள்துறை அமைச்சர் அவர்களுக்கு,
எங்கள்
மீது அனுதாபமும், கருணையும் பொழியும் உங்களது கடிதம் கண்டேன். இரண்டு பிள்ளைகளின் தகப்பனாராக,
பெற்றோரின் போதிய கவனிப்பைப் பெறாத எங்கள் நிலை குறித்து மிகவும் அக்கறையோடு நீங்கள்
கடிதம் எழுதியுள்ளீர்கள். உங்கள் அக்கறைக்கு
நன்றி. இருப்பினும், கடிதத்தில் சில தவறான தகவல்கள், இணக்கப்பாடற்ற தன்மைகள் வெளிப்படுகின்றன.
அதனால், எனது கருத்தைத் தெரிவிக்கும் வகையில் நான் ஒரு கடிதம் எழுத முடிவு செய்திருக்கிறேன்.
நானும்
எனது தங்கையும் பெற்றோரின் போதிய கவனிப்பைப் பெறவில்லை என்று சொல்வது தவறான கருத்தாகும்.
நான் அறிந்த குழந்தைகளைவிட நாங்கள் எங்கள் பெற்றோரின் அதிகமான அன்பையும் கவனிப்பையும்
பெற்றுள்ளோம். குழந்தையாக இருந்தபோதே எனது பெற்றோர் செல்லும் அனைத்து இடங்களுக்கும்
நான் அவர்களோடு சென்றுள்ளேன். எனது ஐந்தாம் வயதில், அப்படி ஒரு பயணத்தின்போது, ஜனவரி
1ஆம் தேதி நீங்கள் துன்புறுத்திய ஆதிவாசி குடியிருப்பு ஒன்றில் தங்க நேர்ந்தது. அதுமட்டுமின்றி
கொல்கத்தா, ரன்னி, மும்பை மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்குப் பயணம் செய்தபோது பல்வேறு
பண்பாட்டுச் சூழல்களையும், பிரச்சினைகளையும் அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பரந்தளவிலான
கண்ணோட்டத்தை வளர்த்துக்கொள்ள இப்பயணங்கள் எனக்கு உதவின. ஆனால், தற்போது நீங்கள் தலைமை
வகிக்கும் காவல்துறையினர் எங்கள் வாழ்க்கையில் நுழைந்தபோது எல்லாம் மாறிப்போனது.
எனக்குப்
பத்து வயதிருக்கும், அப்போது எனது தங்கை சவேராவுக்கு நான்கு வயது, காரணமேயின்றி எனது
தயார் விசாரணைக் காவலுக்கென காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டார். உங்கள் தரப்பினரின்
தொடர் துன்புறுத்தலை சகிய முடியாமல் கேரள உயர் நீதி மன்றத்தில் தான் பார்த்து வந்த
பணியை விட்டு விட்டு எனது தாயார் முழு நேர சமூகப் போராளி ஆனார். இப்படி ஒரு முடிவை
எடுக்க காரணமாயிருந்த நிலைமைகள் குறித்து அப்போதைய முதல் அமைச்சர் வி.எஸ் அச்சுதானந்தன்
அவர்களுக்குக் கடிதமும் எழுதினார். நீங்கள் தலைமை வகிக்கும் அந்தக் காவல்துறையே எங்களின்
இந்த கல்வி பெற முடியாத நிலைக்குக் காரணம் என்பதை உங்களுக்கு மென்மையாக நினைவூட்ட விரும்புகிறேன்.
மேலும்,
உங்கள் கடிதத்தில், எப்படி நாங்கள் தவறாக வழிநடத்தப்படுகிறோம் என்றும் வருந்தியிருந்தீர்கள்.
அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி வலியுறத்தவும் செய்துள்ளீர்கள். ஆனால் யதார்த்தம்
அதுவல்ல. கைதுக்கோ, சோதனைக்கோ எவ்வித வாரண்டும் இன்றி காவல்துறையின் கூட்டம் ஒன்று
எங்களது வீட்டின் முன் கதவை உடைத்து உள்ளே நுழைந்தது. என்னை அக்கூட்டம் அவமதித்துப்
பேசியது. ஒருவேளை எனது தந்தை பிடிபட்டால் அவர் தலையில் பெரிய கல்லை போட்டு அடித்துக்
கொல்வோம் என்று அவர்கள் என் ஐந்து வயது தங்கையிடம் கூறினர்.
இதுபோல்
நிறைய கதைகள் உள்ளன… கலாச்சார முன்னணியினர் நடத்திய நிகழ்ச்சிக்கு நானும் எனது தங்கையும்
சென்றபோது, நாங்கள் மாவோயிஸ்டுகள் என்று குற்றம் சாட்டப்பட்டு மஹிளா மந்திரில் அடைக்கப்பட்டோம்.
மேலும், என்னுடைய கற்பு குறித்து காவல்துறையினர் கேள்வி எழுப்பினர்: “நான் கன்னித்தன்மையோடு
இருக்கிறேனா? என்னுடைய கன்னித்திரை கிழியாமல் இருக்கிறதா?” போன்ற கேள்விகள் மூலம் அதனை
அறிய விரும்பினர்.
ஒரு
காவல்காரர் என்னுடைய முகநூல் கணக்கின் கடவுச்சொல்லை அறிய விரும்பியபோது, ஒரு மூத்த
அதிகாரியின் முன்புதான் என் முகப்புத்தகத்தை நான் திறந்துகாட்ட இயலும் என்று சொன்னேன்.
அதற்கு அவர், நான் இணங்கவில்லையென்றால் வெளியுலகையே பார்க்க முடியாது என்று எச்சரித்தார்.
மஹிளா மந்திரில் இரவு முழுவதும் தொண்டை வற்ற அழுதுகொண்டே இருந்த என் தங்கைக்கு உங்கள்
பதில் என்ன?
கலாச்சார
முன்னணியினர் எங்களைக் கடத்திச் சென்றதாக உண்மைக்குப் புறம்பாக குற்றம் சாட்டப்பட்டு
அவர்கள் மீது வழக்குகள் தொடரப்பட்டன. நாங்கள் கடத்தப்படவில்லை என்று மீண்டும் மீண்டும்
கூறிய பின்னரும் இது நடந்தது. உங்கள் காவல் படையினர் சட்டவிரோத நடவடைக்கை தடுப்புச்
சட்டத்தின் உதவியோடு கட்டவிழ்த்துவிட்ட அட்டூழியங்கள்தான் எங்களது வாழ்வை நரகமாக்கியது.
அப்போதுதான் இந்த ஜனநாயகம் எப்படிப்பட்ட தவறான நம்பிக்கைகள் மீது கட்டியெழுப்பப்பட்டுள்ளது
என்பதை எங்கள் வாழ்வில் நாங்கள் எதிர்கொண்ட தொடர் துன்புறுத்தல்கள் உணர்த்தின. என்
பெற்றோர் ஏற்றுக்கொண்ட சித்தாந்தங்கள், அவர்களின் போராட்டங்கள் சரியானதே என்பதை காவல்
துறையின் மக்கள் விரோதக் கொள்கைகளே எனக்கு உணர்த்தின.
பெற்றோரின்றி
நாங்கள் வளர்ந்ததற்காக கவலைப்படுவதற்கு நேரம் எடுத்துக்கொண்ட உங்களால், ஒவ்வொரு வருடமும்
அட்டப்பாடியில் இறந்து பிறக்கும் 150 குழந்தைகளை எப்படி புறக்கணிக்க முடிகிறது?
எண்டோ
சல்ஃபான், பிளச்சிமட, அரிப்பா, கத்திகுடம் மட்டும் அல்லாது இன்னும் நிலத்துக்கான பல
போராட்டங்கள் கேரளாவை ஒரு வெகுஜன இயக்க பூமியாக மாற்றியுள்ளது.
இந்த
நிலங்களிலும் குழந்தைகள் பிறக்கின்றனர், நீங்கள் ஏன் அவர்களைக் கண்டுகொள்வதில்லை?
ஆரம்பப்
பள்ளியில் சேரும் பெரும்பாலான பழங்குடியினரின் பிள்ளைகள் உயர் நிலை படிப்பைத் தொடரமுடியாமல்
வெளியேறுகின்றனர். அவர்களில் நான்கில் மூன்று பேர் மேல்நிலைக் கல்வியை எட்ட முடிவதில்லை.
இந்தத் தோல்விகளை நீங்கள் புறந்தள்ள முடியுமா? கல்வித்துறை தனியார்மயமாக்கப்பட்டுவிட்டதால்
ஆயிரக்கணக்காணோர் கல்விக் கடன் பெற முடியாமல் தற்கொலை செய்துகொள்ளும் நிலை உள்ளது.
அவர்களை
ஏன் நீங்கள் கண்டுகொள்வதில்லை?
உங்கள்
கடிதத்தில், அழிவல்ல ஆக்கமே நமக்குத் தேவை என்று கூறியுள்ளீர்கள். சுவாரசியம் தரும்
வகையில், என் தந்தை சென்ற வருடம் உங்களுக்கு எழுதிய ஒரு கடிதத்தை நான் படிக்க நேர்ந்தது.
நிலமற்ற பழங்குடியினரின் பிரச்சினைகளை புரிந்துகொள்ளுமாறு அவர் அதில் வேண்டியுள்ளார்.
அவர்களின் உற்பத்திக்கு கிடைக்கும் விலையானது சவப்பெட்டிக்கு அறையப்படும் ஆணி போன்றது
என்றும் கூறியுள்ளார். அரசாங்கத்தின் மக்கள் விரோத கொள்கைகளினால் சித்திரவதைக்கு உள்ளாகும்
பழங்குடியினர் பற்றியும், ஏழை விவசாயிகள் பற்றியும், நலிந்து போகும் அவர்களின் வாழ்க்கை
குறித்தும் நான் படித்திருக்கிறேன். ஆனால் அப்பிரச்சினைகளை காது கொடுத்துக் கேட்கவும்கூட
நீங்கள் தயாராக இல்லை.
என்
பெற்றோரை வீணர்கள் என்று நீங்கள் குற்றம் சாட்டுகிறீர்கள், ஆம் உங்களுக்கும் உங்களுக்கு
முன்பு பதிவியிலிருந்தோருக்கும் அவர்கள் நிச்சயம் வீணர்களே. முந்தைய காலங்களில் காலனியத்தை
எதிர்த்த பகத் சிங், சுபாஷ் சந்திர போஸ் மற்றும் பலர் வீணர்கள் என்றே அழைக்கப்பட்டனர்.
ஜனநாயக விரோத சட்டங்களாலும், இருண்ட நிலவறைகளில் அடைக்கப்பட்டும் அத்தகைய போராளிகள்
தண்டிக்கப்பட்டனர். இன்றைக்கு என்னுடைய பெற்றோரையும் நீங்கள் அதே முறையில் கையாள்கிறீர்கள்.
ஆனால், ஏழ்மையில் உழலும் பெரும்பாலான எமது மக்கள் என் பெற்றோரை வீணர்கள் என்று பார்ப்பதில்லை.
உங்களது முயற்சிகளைக் காட்டிலும் எனது பெற்றோரின் போராட்டங்கள் அவர்கள் மத்தியில் பலமான
அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன. எங்கள் பெற்றோர் ஒன்றும் எவரையும் ஏமாற்றி பணம் சம்பாதித்து
தங்கள் எதிர்காலத்தை வளமாக்கிக்கொள்ளப் போராடவில்லை மாறாக, கேரளாவின் ஏழை மக்களின்
வாழ்வை உயர்த்திடவும், இந்த நாட்டைக் காக்கவுமே அவர்கள் போராடினர். என் பெற்ரோரின்
போராட்டம் மக்களுக்கானது.
http://avaninews.com/article.php?page=43
No comments:
Post a Comment