May 27, 2021

“யார் உண்மையான பிராமணர்” என்றொரு விவாதம்

யார் உண்மையான பிராமணர்” என்றொரு விவாதம் நடக்கிறது!

உண்மையில் இப்படிப்பட்ட விவாதங்களே தவறானவை! அவசியமில்லாதவை! புண்ணை நோண்டி முகர்ந்து பார்ப்பது போன்றது அது! (மன்னிக்கவும்).

 மேன்மைத் தன்மை”, அல்லது “புனிதத் தன்மை” அல்லது ”உயரிய” குணம் என்ற ஒன்றை அடிப்படையாகக் கொள்ளும் பார்வைதான் பார்ப்பனிய படிநிலை உருவாக்கத்தின் அடிப்படை..

 உங்களில் யார் வேண்டுமானாலும் பிராமணர் ஆகலாம்? யார் உங்களை தடுத்தது? நீங்கள் அதற்குரிய தகுதிகளை வளர்த்துக்கொள்ளுங்கள்… ” என்பது விவேகானந்தர் வாதம் (இந்தியா காலத்தை எதிர்நோக்கி, யேன் மிர்தால்) .. நமக்கு அது தேவையா?

அந்த காலத்தில் “குணங்களுக்கு” ஏற்ப ஒரு “இடம்” வழங்கப்பட்டது… உங்களை நீங்கள் உயர்த்திக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டது, சூத்திரனும் பிராமணன் ஆகலாம்! இதெல்லாம் என்ன மாதிரியான பேச்சு?

 இந்த” குணம் உயர்ந்தது என்று வகுக்கும் அதிகாரத்தை யார் கொடுக்கிறார்கள்? யார் எடுக்கிறார்கள்?

 மார்க்சியம் கற்றோரால் எளிதில் சொல்லிவிட முடியும் “ஆளும் வர்க்கத்திற்கு சார்பான குணங்கள் உயர்ந்தவை, தொல்லை கொடுக்கும் குணங்கள் தாழ்வானவை” என்று! ஆனால் இதை ஏற்றுக்கொள்ளத்தான் இங்கு ஆட்கள் குறைவு!

 குணம்” என்பது மருவி பின்புபிறப்பு” என்று ஆனது. ஆனால் ஆழ்ந்து ஆய்வு செய்தால் “தொழிலின்” (அதாவது உழைப்பு, வேலை) அடிப்படையில் தான் உயர்வு தாழ்வு கற்பிக்கப்பட்டு அது கோட்பாடானது! இதையும் மார்க்சியமே உணர்த்தும்!

இதையெல்லாம் விட்டுவிட்டு “யார் உண்மையான பிராமணர்கள்?” என்று தொடங்கி “அப்படிப்பார்த்தால் இன்னார் தான் (அதாவது பிறப்பால் பிராமணரல்லாதவர்) உண்மையான பிராமணர்?” என்று சொல்வதன் மூலம் அவர்கள் பிராமணிய தத்துவத்தை ஏற்றுக்கொள்கிறார்கள் என்றல்லவா பொருளாகிறது.

இதற்கு பெயர் பகுத்தறிவல்ல! வருத்தமாக உள்ளது!

 மனிதனாக பிறந்த எவரும் சுயமரியாதையுடன் நடத்தப்பட வேண்டும். உயர்வு தாழ்வு கற்பித்தல் கூடாது. அனைத்து உயிர்களும் சமமாக வாழ இடம் வேண்டும். உயர்ந்தவரோ, தாழ்ந்தவரோ இல்லை என்னும் இடத்தில் ஒருவரை (யாராக இருந்தாலும்)உயர்ந்த குணம்” கொண்டவர் என்று பகுத்து அவரை போற்றுவதற்கான தேவை என்ன உள்ளது?

 நற்குணங்களை கொண்டவர்களை மதிப்போம், பாராட்டுவோம், பின்பற்றுவோம் பிரச்சினையில்லை! அதற்கு ஒரு “நற்சான்றிதழ்” எதற்கு.. அதுவும் ஒரு சமஸ்கிருத (ஆரிய… ப்ளா ப்ளா) அங்கீகாரம் எதற்கு?

 அதேபோல் தீய குணங்கள் கொண்டோர்.. அதாவது “மதங்கள் சொல்லும் நற்குணங்கள்” அல்ல மற்றவரை துன்புறுத்தும் வகையிலான குணங்களைக் கொண்டோரை தண்டிக்கவும், நல்வழிப்படுத்தவும் தேவை இருக்கிறது. அதற்காக ஒரு சுரண்டலான படிநிலை அமைப்பில் கற்பிக்கப்பட்டிருக்கும் உயர்வு தாழ்வு குறித்து எது உண்மையில் உயர்ந்தது என்று வாதிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா?

 தீயவர் உருவாக காரணமாக இருக்கும் நிலைமைகள் என்ன என்பதை குறித்து ஆய்வு செய்யலாம்.. அதை மாற்ற என்ன செய்ய வேண்டும் என்று விவாதிக்கலாம்! ஆனால் இதற்கும் சரியான ஒரு சமூக விஞ்ஞான வழிகாட்டி தேவையல்லவா? பகுத்தறிவு என்கிற பெயரில், பிராமண எதிர்ப்பை மட்டுமே மனதில் கொண்டு ஒரு குரூப் இயங்கிக் கொண்டிருக்கிறது!

 அவர்களில் பலருக்கு - உழைப்புச் சுரண்டல் பற்றி கவலையே இல்லை! தங்கள் சாதியினர் முதலாளியாகவோ, ஆட்சியாளராகவோ ஆகிவிட்டால் போதும்… தங்கள் சாதி மக்கள் சுரண்டப்பட்டால்… பரவாயில்லை… உழைச்சு முன்னேறு என்று சொல்லிக் கொள்ளலாம்!

பிராமண எதிர்ப்பு மிக மிக அவசியம் அதில் எனக்கு மாற்று கருத்தே இல்லை! ஆனால் பிராமணியம் என்றால் என்னவென்பதை சமூக-அரசியல்-பொருளாதார அறிவோடு ஆய்ந்தறிந்து பேச வேண்டும்.. அதை விடுத்து ஒரு வெறுப்பு அரசியல் மனநிலையிலிருந்து கொதித்தெழுவதும், “நீ மட்டும் தான் பெரியாளா, நானும் தான்” என்பதும், “உன்னை விட நான் பெரியாளு… ஏன்னா நான் தான் ஆதி….” என்பதும் “நீ பெரியாளே இல்ல… அந்த இலக்கணப்படி அவர் தான் பெரியாளு” என்பதும்… எந்த வகையிலும் நாம் ஒழிக்க நினைக்கும் பார்ப்பனியத்தை அசைக்கக் கூட உதவாது!

 தயவு செய்து பகுத்தறிவுக்கு அப்பால் உங்கள் சமூக அக்கறையை வளர்த்துக்கொள்ளுங்கள்! அதாவது கடவுள் மறுப்பு, மத மறுப்பு, பிறப்பின் அடிப்படையிலான பார்ப்பன எதிர்ப்பு, தேர்ந்தெடுத்த விஞ்ஞானவாதம் என்பதைக் கடந்த சமூக-அரசியல்-பொருளாதார பகுத்தறிவு தேவை! உலகத்தில் உள்ள செல்வங்களை எல்லாம் படைத்தும் உயிர் வாழக் கூட உணவின்றி செத்து மடியும் உழைக்கும் வர்கத்தின் நிலையிலிருந்து அனைத்தையும் பார்ப்பதும், ஆராய்வதும் தேவை. அதற்கு மார்க்சியத்தைக் கற்பது உதவும்! முயன்று பாருங்கள்!

  

No comments:

Post a Comment