Oct 24, 2020

தேனி மாவட்ட தமுஎகச குறித்து


இன்றைக்கு இந்துத்துவ கும்பல் தோழர் திருமாவளவனுக்கு என்ன செய்கிறதோ அதைத்தான் ‘தலித்தியவாதிகள்’ சிலர் எங்களுக்கு 4 வருடங்களாக செய்து வருகின்றனர். பா.ஜ.க கல்யாணுக்கு நிகராக ஆபாசமாகப் பேசியுள்ளனர்!

 தமுஎகச, சிபிஎம் போன்ற ‘கம்யூனிஸ்ட் அமைப்புகள்’ ‘பிரபலங்கள்’ என்றால் ஒரு நிலைப்பாடு மார்க்சியத்திற்காக வாதிடும் தோழர்கள் என்றால் வேறொரு நிலைப்பாடு எடுப்பதை காலம் பதிவு செய்திருக்கிறது. எப்படி, பெரியார், அம்பேத்கர், தற்போது தோழர் திருமா உட்பட சாதிய அதிகாரத்திற்கு அடங்கமறுத்து சீறி எழுகிறார்களோ அதேபோல் அடையாள அரசியல் கும்பல்களுக்கு எதிராக, மார்க்சியத்தை வீழ்த்த நினைக்கும் சீர்குலைவு முயற்சிகளுக்கு எதிராக நாங்களும் கிளர்ந்தெழுவோம் :)

 கீழுள்ள பதிவை எழுதியவர் Vasu Mithra

தமுஎகசவின் மதிப்புறு தலைவர் தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு,
அன்புடன் வசுமித்ர எழுதிக்கொள்வது.....

வணக்கம்.

தமுஎகசவின் மீதும் ஆதவன் தீட்சண்யா மீதும் ஜெயமோகன் வைத்த குற்றச்சாட்டுக்களும், அவ்வமைப்பின் மதிப்புறு தலைவராக நீங்கள் எழுதியதையும், படித்தேன். உங்கள் இருவரின் கடிதங்களிலும் எனது பெயர் இருப்பதால் இந்த விளக்கத்தைக் கொடுக்க நினைக்கிறேன். ஜெயமோகனுக்கு என்னைக் கவிஞர் என்று. தெரிந்திருக்கிறது நல்ல விசயம்தான். ஆனால் தாங்களோ என்னை முன்பின் தெரியாதவன், பார்த்திராதவன் போல் வசுமித்ர ‘என்பவர்’ என்று சுட்டும்போது உங்கள் மனம் எவ்வாறு செயல்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டேன்.

தமுஎகச என் மீது வழக்குத் தொடுத்தது என்று ஜெயமோகன் கேள்விப்பட்டது தவறுதான். ஆனால் அது குறித்து நீங்கள் எழுதியது இன்னமும் சிக்கலாக மாறுகிறது. தங்கள் அமைப்பு வழக்குத் தொடுக்கவில்லை என்பதைக் கம்பீரமாக அறிவிக்கும் நீங்கள், உங்களது கட்சியின் வெகுஜன அமைப்பான தீண்டாமை ஒழிப்பு முன்னணி வழக்குத் தொடுத்ததை ஏன் சொல்ல தயங்குகிறீர்கள். ஏதோ ஒரு அமைப்பு தொடுத்த வழக்கு போல் ஏன் கடந்து செல்ல நினைக்கிறீர்கள். கருத்துச் சுதந்திரத்துக்கு உங்கள் கட்சியின் வெகுஜன அமைப்பு மட்டும் விதிவிலக்கா?

நீங்கள் அவ்வமைப்பில் இருந்த 25 ஆண்டுகாலமாக தமுஎகச மட்டுமல்ல, சிபிஎம் கட்சியும் யார் மீதாவது தனிப்பட்ட வழக்கை, அதுவும் வன்கொடுமை வழக்கை பதிவு செய்திருக்கிறதா என்ன? பிள்ளை கொடுத்தாள் விளை கதைக்குப் பிறகு ஆதவன் அத்தகைய மிரட்டலை எங்கும் வைத்ததில்லை என்பதை எந்த வகையில் உறுதி செய்துகொண்டீர்கள். அப்படியெனில் அந்தக் கதை மீது அவர் வைத்த வன்கொடுமை வழக்கு மிரட்டல் சரியானதுதான் என்கிற தோற்றத்தையே உங்களது கடிதத்தில் பார்க்கமுடிகிறது. அவரது விமர்சனம் குறித்து இன்றைய தினம் கூட உங்கள் விமர்சனங்களை வைக்கத் தடுப்பது எது தமுஎகசவின் மதிப்புறு தலைவர் என்கிற பதவியா?

ரங்கநாயகம்மா புத்தகம் வந்ததும் ஆதவன் தீட்சண்யா அவதூறைத் தொடங்கி வைத்தார். மார்க்ஸ் அவசியம் என்கிற நூலை பீயிக்கு ஒப்பாகச் சொன்னதுடன். கொற்றவை மீது வன்கொடுமை வழக்கு என்கிற மிரட்டலையும் மறைமுகமாக விடுத்தார். அதன்பின் அவரது வகையாறக்கள் என்னையும், கொற்றவையையும் முகநூலில் எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்குக் கீழாக வசைகளாலும் ஏளனங்களாலும் எதிர்கொண்டனர். அந்த வகையறாக்கள் யார் என்று நீங்கள் கேட்டால் பெயர்களோடு, அவர்கள் வைத்த வார்த்தைகளையும் ஆதாரமாக முன்வைக்க நான் தயாராக இருக்கிறேன். தமுஎகசவின் மதிப்புறு தலைவராக நீங்கள் அந்த வார்த்தைகளுக்குப் பொறுப்பெடுத்துக் கொள்வீர்களா. அப்படி இருந்தால் சொல்லுங்கள். அத்தனை வார்த்தைகளையும் முன்வைத்தே நான் உரையாடத் தயார்.

பாரதி புத்தகாலயப் பொறுப்பாளர்கள் முதல்கொண்டு 'ஏன் வாப்பா ஒரு ரௌடி இல்லை' என்பது போன்ற வார்த்தைகளால்தான் தங்களது மார்க்சிய அறிவை முன்வைத்தார்கள். இதில் தமுஎகச போராளிகள் சிலர் ‘வக்காலி’ என்றெல்லாம் எழுதி தமுஎகசவின் அறிவை பறைசாற்றினார்கள். அந்த வார்த்தைக்கு அர்த்தம் என்னவென்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

ஆதவன் தீட்சண்யா தனது சாதி அடையாள அரசியலைத்தான் தலித்தியம் என முன்வைப்பார். அதை அம்பேத்கரியமாக சித்தரித்து, அதனடிப்படையில் எவரின் மீதும் வசைகளையும் அவதூறுகளையும் எழுதுவார். வன்கொடுமை வழக்கு போட்டுவிடுவோம் என்கிற பயத்தில்தான் கொற்றவை கவனமாக எழுதியதாக சித்தரிக்கும் அளவுக்கு அவரது சாதிய வன்மம் தலைகாட்டியிருக்கிறது. இது கிட்டத்தட்ட வன்கொடுமை வழக்கை வைத்து மிரட்டுவோம் என்கிற மறைமுக மிரட்டலன்றி வேறென்ன. மார்க்ஸை முன்வைத்து அம்பேத்கரை விமர்சித்ததை, சாதியப் புரிதலின் அடிப்படையில் அவர் திரித்துப் பேசியதை எல்லாம் தாங்கள் அறியவில்லையா என்ன?

பிள்ளை கொடுத்தாள் விளை கதையில் ஆதவன் தீட்சண்யா போன்றவர்களின் பார்வையை முன்வைத்துத்தான் ரவிக்குமார் “தலித்துக்களுக்கு இலக்கியத்தை புரிந்துகொள்ளும் அறிவு கிடையாது, அவர்கள் சாதியைச் சொல்லி ‘பிளாக் மெயில்’ செய்யக் கூடியவர்கள்” என்பது போன்ற தவறான கருத்துக்கள் வலுப்படவே வழிவகுக்கும். அது நிச்சயமாக தலித்துகளுக்கு உதவக்கூடியதல்ல.” என்று எழுதினார். ஆனால் ஆதவன் தீட்சண்யா அதை இன்னமும் செய்து கொண்டுதான் இருக்கிறார். ரங்கநாயகம்மா நூல் விசயத்தில் கொற்றவை நோக்கி அவர் வைத்த கருத்தும் அதுதான். ஆதவன் அப்படிப் பேசியதில்லை என்று உறுதியாகக் கூறும் நீங்களே இதற்கும் விளக்கம் அளிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வளவு ஏன்? மார்க்சிஸ்ட் கட்சியின் நிர்வாகக் குழுவில் பார்ப்பனர்கள் அதிகம் உள்ளார்கள் என்பதெல்லாம் கூட பொதுவெளியில் அவர் வைத்த விமர்சனங்கள்தான். இதனடிப்படையில் சிபிஎம் கட்சி பார்ப்பனக் கட்சி என்ற அவதூறுக்கு வலுச் சேர்க்கிறது. இதற்குக் கூட நீங்கள் எந்த விளக்கத்தையும் கொடுக்கவில்லை. தமுஎகசவில் இருப்பதால் ஒரு மார்க்சிஸ்ட் கட்சியை சாதிக் கட்சி எனச் சித்தரிக்கும் அவதூறுகளையெல்லாம் நீங்கள் ஏன் கடந்து செல்ல விளைகிறீர்கள் என்பதும் புரியவில்லை. தமுஎகசவை ஜெயமோகன் குறைச் சொல்லும்போது மட்டும் மதிப்புறு தலைவராக முன் வருகிறீர்களே ஏன்?

மேலாக ஜெயமோகனுக்கு கடிதம் எழுதியவர் தேனியில் நடந்த கூட்டத்தில் எஸ்வி.ராஜதுரையை நான் அவதூறு செய்ததாக தவறாகப் புரிந்து கொண்டுள்ளார். அப்படி அவதூறு செய்தால் ராஜதுரை சும்மா இருப்பாரா என்று அவரையே கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். கூட்டத்தில் நான் பேசியதற்கு வீடியோ ஆதாரம் எனது முகநூல் பக்கத்திலேயே உள்ளது. ராஜதுரையை மார்க்சிய அறிஞர் இல்லை எனச் சொல்வது தமுஎகசவுக்கு அவதூறாகத் தெரிந்தால் அது அவர்களது மார்க்சிய அறிவு அவ்வளவே. அவதூறுக்கும், வசைக்கும், அறிவார்ந்த விமர்சனத்துக்கும் தமுஎகசவில் இடமில்லை என்பதை அந்தக் கூட்டத்திலேயே உணர்ந்துகொண்டேன்.

இவ்வளவு ஏன், ராஜதுரை முன்னிலையில் நான் வைத்த விமர்சனத்தை அதே மேடையில் ராஜதுரை திரித்துத்தான் பேசினார். ‘ராஜதுரை மார்க்சிய அறிஞர் அல்ல’ என்ற எனது விமர்சனத்தை ‘நான் ராஜதுரையை மார்க்சிஸ்ட் அல்ல என்று சொன்னதாக தனது மனம் போக்கில் பேசினார். விளைவு ஆதவனது வகையாறாக்கள் முகநூலில் என் மீதும் கொற்றவை மீதும் வசைகளை வைத்தனர்.

மேடையிலையே என்னை மனநோயாளி என்றெல்லாம் பேசும் ஆதவன் தீட்சண்யா தமுஎகசவின் தலைவர் பொறுப்பில் இருப்பதால் அவை ஆய்வு வார்த்தைகள் என்று மதிக்கப்படுமா? இதுகுறித்து தாங்கள் இன்று வரை பேசியதே இல்லையே ஏன்? இப்பொழுதும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி போட்ட வழக்கை தமுஎகச போட்டது என்று ஜெயமோகன் எழுதியதும், ஆகா! கிடைத்தது ஒரு பாயிண்ட் என்றுதான் எழுத வந்திருக்கிறீர்களே தவிர இதுவரை ஆதவன் தீட்சண்யா வைத்த அவதூறுகளுக்கும், வசைகளுக்கும் நீங்கள் எந்த இடத்திலும் பதில் சொல்லியதில்லை. உங்கள் அமைப்பைச் சேர்ந்தவர் எது சொன்னாலும் வேதவாக்கு என்று நம்புவதெல்லாம் எதன் அடிப்படையில்?

சம்பந்தப்பட்ட தேனிக் கூட்டத்தில், நீங்கள் என்னிடம் சொன்னது ‘தம்பி இங்க உன் கருத்துக்கும் சப்போர்ட் இருக்குப்பா நீ சொன்ன கருத்தைத்தான் தி.சு.நடராசனும் சொன்னார் என்று என்னிடம் சொன்னீர்களே. அப்படியென்றால் தோழர் நடராசன் ராஜதுரை மீது வைத்தது அவதூறா? தோழர் தி.சு.நடராஜனிடம் இதைக் குறித்து நான் பேசினேன்.

எல்லாம் போக கூட்டம் முடிந்து அவர் வெளியே வந்த போது கூட ராஜதுரையிடம் நான் பல விசயங்கள் குறித்துப் பேசினேன். அவரை அவதூறு செய்திருந்தால் அத்தகைய உரையாடல் எங்களுக்குள் சாத்தியமாயிருக்காது. எனக்கு அவர் முத்தமும் கொடுத்திருக்க மாட்டார். அந்த முத்தமும் அவதூறு முத்தமாகத்தான் ஆதவனது வகையாறாக்களால் ஏசப்பட்டது.

கூட்டம் முடிந்தபின் தோழர் சீருடையானிடம் கூட பேசினேன். ராஜதுரையை எந்தவகையில் மார்க்சிய அறிஞர் என்று அழைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு அவர் செம்மலரின் ஒரு கட்டுரை படித்தேன் அதன் மூலம் அவரை மார்க்சிய அறிஞர் என்று சொன்னோம் என்றார். அதே செம்மலரில்தானே தோழர் தோதாத்ரி அவரை திரிபுவாதி என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார் என்று கூற அதற்குப் பதில் அவரிடம் எதுவும் இல்லை. இதற்கெல்லாம் மேலாக கூட்டம் தொடங்கும் முன்பாகவே எனது கேள்விகளைக் குறித்து தோழர் சு.வெங்கடேசனிடம் சொன்னேன். அவரும் பேசுங்கள் என்றார். ஆனால் ராஜதுரையை லோக குருவாக நினைத்து அந்த மண்டபத்தில் ஆதவன் தீட்சண்யா செய்த ஆர்ப்பாட்டங்களை நீங்கள் பார்க்கவில்லையா என்ன? ஆதவன் மேடையில் ரங்கநாயகம்மா குறித்தும் என்னைக் குறித்தும் பேசியபோது, பேசுனதையே எதுக்குப்பா பேசிக்கிட்டு என்று நீங்கள் அங்கு எரிச்சல் அடைந்ததாக சக தோழர்களும் சொன்னார்கள்.

ஆதவன் தீட்சண்யா சாதி அடையாள அரசியலையே தனது முற்போக்கு முகமாக காட்டுபவர். அவரது எழுத்துக்களை வாசிக்கும் யாரும் இதை உணர்ந்து கொள்ள முடியும். நீங்கள் இலக்கியவாதி வேறு. “அடித்தால் திருப்பியடி என்ற ஆவேச முழக்கமெல்லாம் சுவற்றில் எழுதப்படும் வெற்று வாசகங்களாக தேய்ந்து தலித்துகள் எப்போதுதான் சுயமரியாதையோடு வாழத்தொடங்குவது என்பது பற்றி மீசையை முறுக்கி போஸ் கொடுப்பதிலேயே பொழுதைக் கழிக்கும் பிற தலித் தலைவர்கள்” என்றெல்லாம் எழுதுவது அவரது வாடிக்கை. இது ஒரு உதாரணத்துக்குத்தான். அவரது சாதி அடையாள அரசியலின் வார்த்தைகளையும் வசவுகளையும் தொகுத்தால் அதுவே தனித் தொகுப்பாக மாறும்.

தீண்டமை ஒழிப்பு முன்னணி குறித்து உங்களுக்கு தெரியாதென்றே எடுத்துக்கொண்டு இந்தக் கடிதத்தின் வாயிலாக ஒரு வேண்டுகோளை வைக்கிறேன். கருத்துச் சுதந்திரம் குறித்தான வரையறைகள் உங்களுக்குத் தெரிந்திருக்கும். எனது வார்த்தைகளைத் திரித்து என்னை மிரட்டுவதற்காக தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்கிற ஒரு அமைப்பே என் மேல் சாதி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் என்னைக் கைது செய்யுமாறு புகார் தொடுத்தது ஏன்? வழக்கிற்கான முகாந்திரமாக நான் என்ன சொல்லி உள்ளேன் அவர்கள் என்னவிதமாகத் திரித்துள்ளனர் என்பதை உங்கள் அமைப்பில் உள்ளவர்களோடு கேட்டு நீங்கள் விவாதிக்கத் தயாரா?

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வெகுஜன அமைப்பான கலை இலக்கியப் பெருமன்றம் அவ்வழக்குக்கு எதிரான தங்களது கருத்தை முன்வைத்ததையும் நீங்கள் அறியவில்லை அப்படித்தானே? உங்கள் கருத்துச் சுதந்திரம் பெருமாள் முருகனோடு முடிந்து விட்டது என்றால் அது உங்கள் கருத்துச் சுதந்திரம். எனக்கு அப்படி அல்ல.

அம்பேத்கரும் அவரது தம்மமும் நூல் வெளியான ஓரிரு நாட்களிலேயே எனக்கு முகநூலில் பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. அது குறித்தான எதிர்வினையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் முன்வைத்தும் பேசியது.

மிரட்டல்களுக்கு இணையான வசைகளையும், அவதூறுகளையும் ஆதவன் தீட்சண்யா வகையறாக்கள் வைத்திருக்கிறார்கள். அதற்கும் மேலாக என் மீது, சிபிஎம்மின் தீண்டாமை ஒழிப்பு முன்னணி எனது கருத்தையே திரித்து வன்கொடுமை வழக்குச் சட்டத்தின் மூலமாக என்னைக் கைது செய்யத் துடிக்கிறது. கருத்துச் சுதந்திரமென்றால் என்ன என்று நீங்கள் பொதுவெளியில் மற்றவர்களுக்கு வகுப்பு எடுக்கும் முன் தாங்கள் சார்ந்திருக்கும் அமைப்புகளுக்குச் சொல்லிக்கொடுங்கள்.

என் மீதான தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் வழக்கை எதிர்கொள்வதற்கான அறிவை எனக்கு மார்க்சியம் வழங்கியுள்ளது. அதை எதிர்கொள்வேன். அதே சமயம் தீண்டாமை ஒழிப்பு முன்னணி என் மீது போட்ட வழக்கு குறித்தான உங்களது கருத்துச் சுதந்திர வியாக்கியானங்களை அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். அவ்வளவே.

சிறுகுறிப்பு;

ஆதவன் தீட்சண்யா வகையாறா என்பது தவறாக இருந்தால் எஸ்.வி.ராஜதுரை வகையறாக்கள் என்றுகூடப் புரிந்துகொள்ளலாம். ஏனெனில் எஸ்.வி.இராஜதுரை ‘ சிபிஎம் கட்சியின் தேசியச் செயலாளரான, பிரகாஷ் காரட்டுக்கு அரசியல் அரிச்சுவடி கூட தெரியாதெனச் சொல்லியவர். பாரதிய ஜனதாவுக்கும், சிபிஎம்முக்கும் வேறுபாடுகள் இல்லை எனச் சொன்னவர். அனைத்திற்கும் மேலாக அம்பேத்கருக்கு ஏபிசிடி மார்க்சியம்தான் தெரியும் என்றவர். அதற்கு இன்றுவரை சிபிஎம் எந்தப் பதிலும், விளக்கமும் கொடுக்கவில்லை. ஆனால், உங்களது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் அவருக்கு தேனி மாவட்டத்தில் மார்க்சிய அறிஞர் பட்டம் கொடுத்தது. இது குறித்து சிபிஎம் கட்சியின் அன்றைய மாநிலச் செயலாளராக இருந்த தோழர் ராமகிருஷ்ணனுக்கு பகிரங்கமாக கடிதம் கூட எழுதியுள்ளேன். அதையும் அறிந்திருக்க மாட்டீர்கள். இணைப்பைத் தந்திருக்கிறேன். படித்துப் பாருங்கள்.

https://makalneya.blogspot.com/2017/10/blog-post_29.html?m=0

மேலதிக குறிப்பு:

தேனி மாவட்ட தமுஎகச குறித்து அதன் மதிப்புறு தலைவராக இருக்கும் உங்களை விட நான் கொஞ்சம் நன்கறிவேன் என்பதைப் பணிவுடன் சொல்லிக்கொள்கிறேன்.

தேனி மாவட்ட தமுஎகசவில் தலைவர்களாக, செயலாளர்களாக, உறுப்பினர்களாக இருப்பவர்கள், இருந்தவர்களில் பெரும்பாலோர் அவரவர்கள் சார்ந்த சாதிச் சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். நீங்களோ முற்போக்கு என்ற பெயரில் சாதியை ஒழிப்போம் என்பதை அமைப்பின் விதியாக வைக்க, உங்களது உறுப்பினர்களோ அதை வெற்றுக்கோஷமாக புன்னகையுடன் கடந்து செல்கிறார்கள்.

தேனி மாவட்ட தமுஎகசவின் இலக்கியப் பெருந்தூண்களாக நீங்கள் கருதும் தோழர்! ம.காமுத்துரை உட்பட சாதிச் சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இவ்வளவு ஏன்? தேனி மாவட்ட சிபிஎம் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் கூட சாதிச் சங்க உறுப்பினராக இருக்கிறார். இது தகவல் அல்ல. உண்மையை உள்ளபடியே இலக்கியவாதிக்குரிய மனநிலையோடு காமுத்துரைதான் தெரியப்படுத்தினார்.

சாதிச் சங்கத்தில் உறுப்பினராக இருப்பது குறித்து அவரது மனம் குற்றவுணர்ச்சி கொள்கிறது. அத்தகைய குற்றவுணர்ச்சிக்கும், சாதிச் சங்கத்தில் இருப்பது அவமானம் என்பதற்குமான அந்த குற்றவுணர்ச்சியை மிக மோசமாக வளர்த்துவிட்டது அடியேன்தான். அதை அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். சாதிச் சங்கத்தில் இருந்துகொண்டே தமுஎகசவை வளர்க்கும் நபர்களின் நீண்ட பட்டியல் வெளிவரும். அதில் உங்கள் அமைப்பின் விருதுபெற்றவர்கள் கூட இருக்கலாம்.

அடைவதற்கோர் பொன்னுலகம் இருக்கிறது’ என்ற மார்க்சின் வார்த்தைகள், தேனி மாவட்ட தமுஎகசவைப் பொறுத்தவரை ‘அடைவதற்கோர் சாதிச் சங்கம் இருக்கிறது’ என்பதாகத்தான் இருக்கிறது. மற்ற மாவட்டங்களில் எப்படியோ? நீங்களோ, தீண்டாமை ஒழிப்பு முன்னணியோ, அல்லது சிபிஎம் கட்சியோ இதை உடனடியாக கவனத்தில் கொண்டு, பேரிடர் பணியாக கருதி இதை முடித்து வையுங்கள். மத அமைப்புகளிலும் உங்களது உறுப்பினர்கள் இருக்கலாம். கவனியுங்கள்.

தமுஎகசவின் முற்போக்குப் போர் எப்பவும் முன்னணியில் நிற்க வேண்டும். அதன் இலக்கிய வளம்! தமிழகத்துக்கு அவசியம். அன்றாடத் தேவைகளில் ஒன்று. இதுநாள் வரை இலக்கியத்தில் அது ஆற்றிய பணிகளை இது போன்ற செயல்கள் பின்னுக்கு இழுத்துவிடக் கூடாது என்பதில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தமுஎகச வாழ்க! வளர்க! தமுஎகச நாமம் வாழ்க.

சாதியை ஒழிப்போம், தீண்டாமையை ஒழிப்போம் என்ற கோஷங்களுக்கு, குறைந்தபட்ச முன்நிபந்தனை சாதிச் சங்கத்தில் இருந்து வெளியேறுவதே. செய்யுமா தமுஎகச? செய்யுமா தீண்டாமை ஒழிப்பு முன்னணி? செய்வீர்களா தமுஎகசவின் மதிப்புறு தலைவர் தமிழ்ச்செல்வன் அவர்களே...செய்வீர்களா!

பிரியத்திற்குரிய தம்பியும் தோழனுமாகிய
வசுமித்ர

 

 

No comments:

Post a Comment