ஊரடங்கின் காரணமாக பெரும் ஓய்வு கிட்டியுள்ளது. (குறிப்பிட்ட வர்க்கத்திற்கு!)
வேலைப் பதட்டமற்ற, சமர்க்கிப்பட ஏதுமில்லாத இலக்கற்ற சூழல் மனநலனையும்
உடல் நலனையும் பேண உதவுகிறது. அத்தோடு அறிவை வளப்படுத்திக்கொள்ள நல்வாய்ப்பாகவும் உள்ளது.
உண்மையில் மனித வாழ்வு இப்படித்தான் அன்றாடம் இருக்க வேண்டும். குறைந்த
நேர உழைப்பு, உடல் பராமரிப்பு, சமூகக் கூடல், அறிவு வளர்ச்சி, சமூகப் பங்களிப்பு இப்படியாக
எல்லாவற்றுக்கும் நேரமிருக்கும் வகையில் தான் இருக்க வேண்டும். ஆனால் செல்வந்தர்களின்
வளர்ச்சிக்கான தனியுடைமை உற்பத்தி முறையில் மீண்டும் நாம் இணைக்கப்படுகையில் உழைப்பும்,
ஓட்டமும் தவிர நமக்கு வேறெதுவும் கிடைக்கப் போவதில்லை. ஏழ்மை நிலையில் இருக்கும் உழைக்கும்
வர்க்கத்திற்கு அடிப்படைத் தேவைகளும் கூட கிடைப்பதில்லை.
இது இன்று நேற்று இருக்கும் பிரச்சினையல்ல. உழைப்புச் சுரண்டல் தொடங்கிய
ஆண்டான் அடிமை காலந்தொட்டு, வர்க்க சமூகம் உருவான காலம் தொட்டு உழைப்பவர்களின் நிலை
இப்படித்தான் இருக்கிறது. அதில் கடைநிலை உழைப்பாளிகள், பழங்குடிகள் வாழ்வென்பது சொல்லொணாத்
துயரம் நிறைந்தது.
அந்த துன்பங்களிலிருந்தே புரட்சியும் ஊற்றெடுக்கிறது. அப்படி ஒரு புரட்சிகர
சமூகத்தின் வாழ்வை, எழுச்சியை அந்த எழுச்சிக்கு வித்திட்ட ஒரு புரட்சி நாயகனின் வாழ்க்கை
வரலாற்றை மூன்றே நாளில் படித்து முடித்திருக்கிறேன். அவனே பீர்ஸா முண்டா.
பிரிட்டிஷ் காலனியமும், ஆதிக்க சாதி நிலவுடைமையாளர்களும், அவர்களுடன்
கை கோர்த்துக்கொண்ட தரகர்களும் பழங்குடிகள் மீது நிகழ்த்தியுள்ள வன்முறைகள், அநீதிகளை
படித்தறிய வேண்டிய சமூகத்தில் நமக்கு போதிக்கப்படுவது என்ன? பார்ப்பனிய ஆளும் அர்க்க
இலக்கியங்களும், வரலாறும். இந்த கல்வியினால் ஏதும் பயன் இருக்கிறதா?
வரலாற்றில் பெரும்பாலும் புரட்சிக்கு வித்திடுபவர்கள் இளைஞர்களாகவே
இருக்கிறாரக்ள்! புரட்சி என்பது வெற்றி தோல்வியால் அளக்கப்படுவதில்லை. நாங்கள் அடிமைகளாக
வாழ மாட்டோம் என்று முழங்கும் சுயமரியாதையால் அளக்கப்படுகிறது.
ஸ்பார்ட்டகஸ், பகத் சிங், பீர்ஸா முண்டா, சே குவெரா,ரோசா லுக்சம்பர்க்
இப்படி எண்ணற்றோர் அத்தகைய குரல்களாக உள்ளனர். அநீதிக்கு எதிரானோரின் உணர்வில் உள்ளனர்.
துரதிர்ஷ்டமாக மனிதன் மனிதனுக்கு நிகழ்த்தும் இத்தகைய அநீதிகளைப் பற்றி அறிந்துகொள்ளாமலேயே
இங்கு எல்லாம் சரியாகவே உள்ளது என்று நம்பும் ஒரு கூட்டம் உள்ளது. அறிந்தாலும், அது
தவறில்லை அதிகாரம் என்பது இயல்பானதே, அது நிர்வாகம், அது ஓர் ஆட்சிமுறை, சமூக ஒழுங்கு
என்று நியாயப்படுத்தும் ஒரு கூட்டமும் உள்ளது. இரண்டிலும் அல்லாது ‘விதி’ என்று நடக்கும்
அநீதிகளை ஏற்றுக்கொள்ளும் கூட்டம் ஒன்றும் உள்ளது (இதுவே பெரிதும் பாதிக்கப்படும் கூட்டம்).
இந்த கூட்டத்திலிருந்து விலகி மேலாதிக்கமும், படிநிலைகளும், செல்வந்தர்களின்
ஆட்சியும் இயல்பானதல்ல! அது அவசியமும் அல்ல என்பதை உணர்ந்து சுரண்டலாளர்களின் அதிகாரத்தை
தகர்க்க கிளம்பியவர்களே புரட்சியாளர்கள்! அன்று முதல் இன்றுவரை இவர்கள் தேச துரோகிகள்,
கலகக் காரர்கள், தூண்டிவிடுபவர்கள் என்றே அறியப்பட்டுள்ளார்கள்.
அத்தகைய ஒரு கலகக் காரனை, தூண்டி விட்டவனை பற்றிய வரலாறே (புனைவாக)
மகா சுவேதா தேவி எழுதிய காட்டில் உரிமை!
புரட்சியாளர்கள் ஏன் ஆயுதம் ஏந்துகிறார்கள்? புரட்சியாளர்கள் ஏன் ‘தோற்கிறார்கள்’?
அல்லது புரட்சி ஏன் தோற்கிறது? போர் தர்மம் என்று வாய் கிழிய பேசும் ஆளும் வர்க்கம்
அதில் ஒன்றையாவது பின்பற்றுகிறதா? வீரம் வீரம் என்று முழங்குபவர்கள் எதிர் தரப்பிடம்
நியாயமான முறையில் நடந்துகொள்கிறார்களா? இப்படி பல கேள்விகளுக்கு இந்த நாவல் உங்களுக்கு
பதில் அளிக்கும். அப்போது உண்மையில் எது வீரம், யார் உண்மையான வீரன் என்னும் உண்மையும்
விளங்கும்!
அன்றைக்கு அந்நியன் நம் நாட்டை ஆக்கிரமித்துக் கொண்டு இந்திய மக்களை
அடிமப்படுத்தினான். பூர்வகுடிகளுக்கு எதிராக போர் தொடுத்தான். அவர்களின் உடைமையை பறித்துக்கொண்டு
பிச்சைக்காரர்களாக்கி, உழைக்கும் கூலிகளாக்கினான். தங்களின் நிலத்திற்காக, உரிமைகளுக்காகப்
போராடியவர்களை கொன்று குவித்து மக்களின் ரத்தம் குடித்து வாழ்ந்தான். இதற்கு ‘இந்திய
ஆதிக்க சாதி’ ஆளும் வர்க்கமும், நிலவுடைமையாளர்களும் துணை போனார்கள்!
பெயரளவில் வெள்ளையன் வெளியேறினான். அவர்களின் ஆசீர்வாதத்துடன் அந்த
இடத்தை அதே ‘இந்திய ஆதிக்க சாதி’ பிடித்துக்கொண்டது. முதலாளிகளாக, நிலவுடைமையாளர்களாக
அவர்களே நம்மை ஆண்டு கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கெதிரான போர் இன்னும் தொடங்கவே
இல்லை!
பீர்ஸாவின் குரல் பயங்கரமாக, கம்பீரமாக ஒலித்தது.
“நம்ம காலம் வந்து விட்டது! நான் நம்ம நாட்டை உங்களுக்குத் திருப்பித்
தருவேன்! நம்ம நாட்டிலே ஒரு வயலுக்கும் இன்னொரு வயலுக்கும் நடுவிலே வரப்பு இருக்காது.
எல்லா நிலமும் எல்லாருக்கும் சொந்தம். எல்லா நிலத்தையும் எல்லாரும் உழுது பயிரிடுவாங்க.
எல்லா விளைச்சலும் எல்லாருக்கும் சொந்தம். நம்ம நாட்டிலே எந்த ஒரு முண்டாவும் முதலாளியாயிருக்க
முடியாது. நம்ம நாட்டிலே யுத்தம் இருக்காது. நம்ம ராஜ்ஜியம் தரும ராஜ்ஜியம். நம்ம பாட்டன்
– முப்பாட்டன்மார் எப்படி அரசாட்சி செஞ்சாங்களோ, அதே தரும வழியில் நாம அரசாட்சி செய்வோம்.
தடியாலே, ஆயுதத்தாலே, ஆட்சி செய்ய மாட்டோம்!”
இதுவே பழங்குடிகள் ஆட்சி! புராதன பொதுவுடைமை ஆட்சி! அது அகற்றப்பட்டு
விட்டது. ஆனால் அழிக்க முடியாது.
வரலாற்று வளர்ச்சியின் மாற்றங்களைத் தொடர்ந்து பறிக்கப்பட்டு விட்ட
மக்களின் உரிமைகளையும், நிலங்களையும், நல் வாழ்வையும் மீட்டு விஞ்ஞான சோஷலிசத்தை அமைத்து
பீர்ஸா முண்டா போன்ற தியாகிகளுக்கு நியாயம் செய்திடுவோம்! ஒவ்வொரு நாட்டிலும்! ஒவ்வொரு
தேசிய இனத்தினிடையேயும்!
நமக்குத் தேவை உழைக்கும் வர்க்கத்தின் உரிமைக்குரிய தர்ம இராஜ்ஜியமே
தவிர, இராம இராஜ்ஜியமல்ல! காட்டுக்குள் இருந்து அதனை பீர்ஸா உங்களுக்கு உணர்த்துகிறான்!
வாசிக்காதவர்கள் வாசித்திடுங்கள்!