Jul 13, 2019

இராம காதை – ஒரு விமர்சனப் பார்வை




128: இராம காதை – ஒரு விமர்சனப் பார்வை
கொங்கனி-ஆங்கில நடைமுறை கலைக்களஞ்சிய அகராதி
ஆசிரியர் – பண்டரிநாத் புவநேத்திர ஜனார்த்தன்
சென்னைப் பல்கலைக் கழக, பகுப்பாய்வு வேதியல் துறை ஒய்வு பெற்ற பேராசியர்,தலைவர்.
1999 அச்சிடப்பட்டது

1.  இராமன், விஷ்ணுவின் அவதாரம்:- விஷ்ணுவின் அவதாரங்களில், இராமன், கிருஷ்ணன் ஆகிய இரு அவதாரங்கள் பிரதானப்பட்டுள்ளது. அவதாரம் என்றால் வம்சாவளியாக வாரிசு அல்லது வானிலிருந்து இறங்கி வந்தவர் என்று பொருள்கள் உண்டு. அந்த பின்னணியில், விஷ்ணுவாகப்பட்டவர் வைகுண்டத்திலிருந்து பூமிக்கு இறங்கி வந்தவர். ஆனால் அவர் இறங்கிவந்ததை கண்டவர் எவருமில்லை. வின்வெளி வீர்ர்கள் தங்கள் கண்களாலோ அல்லது சக்திவாய்ந்த தொலைநோக்கிகள் வாயிலாகவேனும் யாராவது அவரைக் கண்டதாக ஆதாரங்கள் இல்லை. இருப்பினும் வைகுண்டம் என்பது வானத்தில் இருக்கிறது என்று நாம் நம்ப வேண்டும். தன்னுடைய தேவலோகத்தை விட்டு விஷ்ணு ஏன் இந்த சாதாரண உலகிற்கு வரவேண்டும்? எப்போது அதற்கான தேவை ஏற்பட்டது? இதற்கான விடையை அவரே கீதையில் அத்தியாயம் IV S1-7 இல் கூறுகிறார்:

யதா யதா ஹி தர்மஸ்ய …. = அதாவது எப்போதெல்லாம் தர்மம் வீழ்த்தப்பட்டு அதர்மம் தலைதூக்குகிறதோ, ஓ! அர்ஜுனா அப்போது நான் இந்த பூமியில் பிறப்பெடுப்பேன். இதில் கிருஷ்ண பகவான், “பிறப்பெடுப்பேன்” என்று சொல்வதாவது பொருளுடையது, ஆனால் புராணங்களோ “இறங்கி வந்தார்” என்று குழப்புகின்றன. வான்வெளியிலிருந்து இறங்குதல் அல்லது அவதாரமெடுத்தல் என்பது இறங்கி வருவது என்பது மேலிருந்து கீழே வருவது அல்லது தரையிறக்கப்படுவது என்றும் பொருளாகும். ஆனால், மாயாஜாலக் கதைகளைக் கேட்டு குதூகலமடையும் மக்கள் வாழ்ந்த காலத்தில் இத்தகைய கேள்விகள் எழவில்லை. ஆனால் நவீன காலத்தில் புராணக் கட்டுக் கதைகளுக்கு ஆதாரமேதுமில்லை என்னும் புரிதல் உண்டாகிவிட்டது.

என்ன கதைகள் சொன்னாலும், ஒரு அவதாரமென்பது பிறப்பதில்லை, உருவாக்கப்படுவது. தாமரை மொட்டு போன்ற கண்கள், முட்டியைத் தொடுமளவு நீளமான கைகள் (ஆஜானபாகு) கையில் சங்கு, சங்கிரம் (ரேகை) போன்ற ‘சாமுத்ரிகா’ இலட்சனங்கள் இருக்கும் ஒரு சிறுவனை கவனமாக தேர்ந்தெடுத்து ஒரு அசாதாரண மனிதன் போல் நடந்துகொள்ளும் வகையில் ஒரு குருவின் கீழ் பயிற்றுவிக்கப்படுகிறார். இதற்காக அந்த சிறுவனுக்கு இறுமாப்பு ஊட்டி வளர்க்கப்படுகிறது. இறுதியில் அவர் தன்னை ஒரு மாபெரும் அவதார புருஷனாக நம்பத் தொடங்குகிறார். புதிய இலாமாவை (திபெத்து) தேர்ந்தெடுப்பதை விட இது சற்று கடினமான பணிதான்.

இராமனின் விஷயத்திலோ, ஆயத்தமாக அப்படி ஒரு சிறுவன் கிடைக்கவில்லை. ஆகவே அதர்வ சடங்குகளை நன்கு அறிந்திருக்கும் வேத விற்பண்ணர்களை தேர்ந்தெடுத்து புத்ர காமேஸ்டி (ஆண் குழந்தை வேண்டி செய்யப்படும் யாகம் – மொ.ர்) யாகம் நடத்த வேண்டியிருந்தது. சட்டப்படி இராமனின் தந்தை தசரதன் எனினும், ருஷ்ய சிருங்கனே அவனை பெற்ற தந்தையாக இருக்கக் கூடும். இராமன் அவதாரமாக உருவாக்கப்படுகிறான் என்பது வசிஷ்டர், கோதமர், விஸ்வாமித்ரர் மற்றும் இந்திரன் போன்ற ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். தசரதனுக்குக் கூட தெரியாது. அதனால் தான் இராமனையும், இலட்சுமணனையும் விஸ்வாமித்ரனுடன் காட்டிற்கு அனுப்ப தசரதன் தயங்கிய போது, “இராமன் யார் என்பது எனக்கு தெரியும், உனக்கு தெரியாது” என்று அவர் கர்ஜித்தார். அதிர்ந்த தசரதன் உடனே வசிஷ்டரிடம் ஒப்புதல் வாங்கினான்.

இப்படியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இராமனுக்கு தன்னுடைய சபதங்களை நிறைவேற்றிக் கொள்ள வேண்டிய பயிற்சிகளை விஸ்வாமித்ரர் அளித்தார். உடனே அவன் இலட்சியபூர்வ நாயகனாகிறான். மற்றவர்களை விட இப்போது இச்சிறுவன் வேறு மாதிரி நடக்க வேண்டும். அதற்கு அவனுடைய இறுமாப்பை தூண்டிவிடுவதில், குரு முக்கிய பங்கு வகிப்பார். அதனோடு அவன் சில மாயாஜாலங்களைச் செய்ய வேண்டும், ஆகவே, மிதிலைக்கு செல்லும் வழியில், கல்லாகிப் போன அகலிகையை தொட்டு சாப விமோசனம் கொடுத்து அழகிய பெண்ணாக்குகிறான். சிவனின் (பினாகா) வில்லை முறித்தது மற்றொரு சாகசம். சத்திரியர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து, ஒரு சத்திரியனையும் உயிரோடு விடாத பரசுராமனை தோற்கடித்ததுதான் இராமனின் பெருஞ்சாகசம். அதற்கடுத்து ககாசுரனை (இந்திரனின் மகன்) வென்றது. இதெல்லாம் இராமனை பெருமைக்குரியவனாக்கியது. இப்படியாக தன்னுடைய சிந்தனை, வீர தீர செயல்கள் மூலம் ஒரு மனிதனை கடவுள் நிலைக்கு உயர்த்தினால் அதற்குப் பெயர் மேம்படுத்துதலே அன்றி அவதாரமில்லை (இறங்குதல் அல்லது தரையிரக்கம் இல்லை).

பாரத கண்ட்த்தில் ஆரிய இராஜ்ஜியத்தை பரப்பி, நிலைநாட்டுவதும், ஆரியர்களை பாதுகாப்பதும் தான் அவதார புருஷனுக்கான கடமை. அதாவது ஆரிய தர்மத்தை நிலைநாட்டி அதர்மத்தை ஒழித்தல். கூர்மதியுடன் ஒருவர் புராணங்களை ஆய்வு செய்தால், “ஆரியரால்லாதாரின் தர்மத்தை” ஒழித்தால் ஒழிய ஆரிய தர்மத்தைக் காக்க இயலாது என்பது தெளிவாகும். ஆரியரல்லாத (அநாரிய) என்றால், ஆரிய குலத்தைச் சாராதவர்கள் என்று பொருள், அதாவது ஆதிவாசிகள், பழங்குடிகள் என்றாகிறது. வேளாளர்களான ஆரியர்கள் மற்றும் பழங்குடிகளின் வாழ்வாதாரம் காடுகளைச் சார்ந்திருந்தது, ஆகவே அவர்களிடையே கடுமையான மோதலும் நிலவியது. யாகம் என்னும் பெயரில் ஆரியர்கள் காடுகளை தீயிட்டு கொளுத்தி அழித்தனர். தங்களுடைய வாழ்விடங்கள் அந்நியர்களால் அழிக்கப்படுவதைப் பார்த்துக்கொண்டு யார்தான் அமைதியாக இருப்பார்கள்? மூட்டப்பட்ட தீயை அணைக்க தண்ணீர் ஊற்றினால், அது அதர்மாகிவிடுகிறது. ஆரியர்களின் யாகத்தை குலைக்க அவர்கள் யாக குண்டத்தில் இரத்தத்தை ஊற்றினார்கள் என்றெல்லாம் குற்றம் சாட்டப்பட்டது. இப்படியாக ஆரியரல்லாத பழங்குடிகளுக்கு தீங்கு இழைக்காமல் ஓர் அவதார புருஷனால் ஆரியர்களுக்கு எந்த நன்மையும் செய்ய இயலவில்லை. “கடவுளானவர் தன்னுடைய படைப்பில் ஒவ்வொரு குழந்தையையும் நேசிக்கிறார்” என்னும் பழமொழி பொய்யாகிறது. ஆனால் ஆரிய புராணங்களோ விஷ்ணு கடவுளர்கள் அல்லது ஆரியர்களிடம் பாகுபாடு பார்க்கிறார் என்கின்றன. சரி, தர்மம் – அதர்மம் என்னும் இந்த மோதலில், எந்த சூழல் இராம அவதாரத்தை உண்டாக்கியது? சில காரணங்கள் பின்வருமாறு:

1.  பழங்குடிகள் பிரதானமாக விந்திய மலைப் பகுதியில் வாழ்ந்து வந்தனர். அதில் வானரர்கள், இராட்சசர்கள் ஆகிய பழங்குடிகள் பெரும்பான்மையினர். வானரர்களை (காட்டுவாசிகள்) வால்மீகி இராமாயணத்தில் வானரங்கள் (நீள வால் குரங்கு) என்று சித்தரித்தார். தக்‌ஷின கண்டத்திற்கு (தக்காணம்) பயணித்த ஆரியர்கள், பழங்குடிகள் மத்தியில் பெண்களை வேட்டையாடத் தொடங்கினர். வானரர்கள் இதனை எவ்வித எதிர்ப்புமின்றி மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டனர். இராட்சசர்கள் எதிர்த்தனர். ஆகவே ஆரியர்கள் இராட்சசர்கள் குறித்து அவதூறுகளை பரப்பினர் . மறுபுரம், வானரர்களை விஷ்ணுவின் படைப்பு என்று புகழ்ந்து, இராவணனை (சுரா சர்வே ஜயரேன் பூமாஒ வானர ரூபினா சஹாயம் கர்த்தும் மே இராவண நிக்ரஹே – ஸ்ரீ இராமோதந்தம்) எதிர்ப்பதற்கு ஏற்ற கூட்டணியை உருவாக்க திறம்பட வேலை செய்தனர்.

2.  இராட்சசர்களோ ஒழுங்கற்ற வகையில் வரவிக் கிடந்த இனமாகும். தொடக்கத்தில் ஆரியர்கள் அவர்களுக்குள் ஊடுறுவ முடிந்தது. அப்போதுதான் அவர்கள் இனத்தில் மானமும், விவேகமும் நிறைந்த ஒரு இராட்சசன் உதய சூரியன் போல் உதயமானான். அவன் தான் இராவணன். தன் கொடையின் கீழ் அந்த இனத்தை ஒருங்கிணைத்து தனயர்கள், நாகர்கள் மற்றும் இந்திரனை தோற்கடித்தான். இராட்சசர்களிடமிருந்து ஆரியர்கள் அபகரித்த நிலங்களையெல்லாம் மீட்டான். குபேரனிடமிருந்து இலங்கையை மீட்டான். வணிக முக்கியத்துவம் வாய்ந்த நீர் தடங்கள் பல இலங்கையில் இருந்தன. ஆரிய விரிவாதிக்கத்திற்கு இடைஞ்சலாக இருந்ததால் இராவணனின் இருப்பு அவர்களுக்கு அதர்மமானது.

3. ததாகி என்பவள் சக்திவாய்ந்த இராட்சசி. அவள் இராவணனின் உறவினள். அகத்திய முனிவர் தன் ஆசிரமத்தை ததாக வனத்தில் அமைத்தார். அப்போதுதான் வில்வித்தை பிரபலமாகி வந்தது. அவர் அதில் வித்தகர். கற்கள் மற்றும் மரங்களின் கிளைகள் கொண்டு சண்டியிட்டு வந்த வானரர்கள் மற்றும் இராட்சசர்களால் நீண்ட தூரம் பாயும் இரும்பாலான ஆரியர்களின் அம்புகளை எதிர்கொள்ள இயலவில்லை. அகத்தியரும் அவரது சீடர்களும் ஆசிரமத்தின் அருகில் வரும் இராட்சசர்களுக்கு தொந்தரவு கொடுப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார்கள். ஒரு நாள் இரவு ததாகை ஆசிரமத்திற்கு திடீர் விஜயம் செய்து, அகத்தியரை கைது செய்தாள். அகத்தியரின் சகோதரன் புலத்சிய பிரம்மனின் கண் முன்னே அகத்தியர் கழுத்தில் கயிறு கட்டப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டார். இந்த அவமானத்தைப் பொறுக்க முடியாது கடுஞ்சினம் கொண்ட பிரம்மன், இராட்சசர்களின் பௌலத்ஸய இனத்தையே அழித்தொழிப்பேன் என்று சபதம் பூண்டான்.

4. தான்யர்கள், நாகர்கள் அடங்கிய பெரும் படையுடன் இராவணன் இருந்தான். அவனது இலங்கை இராஜ்ஜியத்திற்கு போகும் வழிகளில் நிறைய ரிஷிகளின் ஆசிரமங்கள் இருந்தன. அதில் ஒருவர் இராஜ ரிஷி குஸத்வஜ ஜனகர். மிதிலையின் சிரத்வஜ ஜனகரின் அண்ணன். அகலிகைக்கும் இந்திரனுக்கும் பிறந்தவள் வேதவதி. சட்டப்படி அவளுடைய தந்தையான கோதமர் வேதவதியை தன்னுடன் வைத்துக்கொள்வதை அவமானமாகக் கருதினார். எனவே குஸத்வஜர் வேதவதியை தத்தெடுத்துக் கொண்டார். 16 வயதில் வேதவதி பேரழகியாக வளர்ந்து நின்றாள். எனவே பல இராட்சச இளைஞர்கள் அவளை பெண் கேட்டு குஸத்வஜரை அனுகினர். தன்னை விட்டு வேதவதி சென்றுவிட்டால் தனிமையில் துன்புற வேண்டுமே என்ற சுயநலம் காரணமாக தன் மகளை விஷ்ணுவிற்கு மட்டுமே திருமணம் செய்து கொடுப்பேன் என்று அந்த முதியவர் சொல்லி வந்தார். தன்னை வீட்டிலேயே அடைத்துவைக்கவே இந்த திட்டம் என்பது அப்பெண்ணுக்கும் தெரியும். ஆசிரமத்தை சுற்றி வலம் செல்லும் இராவணனை அவள் அடிக்கடி பார்ப்பாள். தன்னுடைய பலத்தால் இராவணன் அப்போது புகழ்மிக்கவனாக இருந்தான். இராவனேஸ்வரன் என்று அவனை எல்லோரும் கொண்டாடினர். அவன் தான் விஷ்ணுவிற்கு பதிலானவன் என்று வேதவதி பலமுறை எண்ணினாள். ஒருநால் அவர்களின் கண்கள் நான்கும் சந்தித்தன. சில நாட்களில் அவர்கள் நெருங்கி பழகத் தொடங்கினர். வேதவதிக்கு இராவணனின் வீரமும், புகழும் பிடித்திருந்தது. எனவே கந்தர்வ முறைப்படி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. உடனே கோரமாஸ்ரம்மும், குஸத்வஜ ஆசிரமமும் கோபத்தாலும், சாபத்தாலும் நிறைந்தது; இராவண குலத்தை அக்குலத்தின் சொந்த கரு கொண்டே அழித்திடுவதாக கோதமர் சபதம் பூண்டார். சில மாதங்களில் குழந்தையை தூக்கிக் கொண்டு சதாநந்த கோதமி மிதிலையில் ஓர் வனத்தில் கிடத்திச் சென்றாள். அக்குழந்தையை சிரத்வஜ ஜனகர் கண்டெடுத்தார். இதுதான் சீதையின் பிறப்பு மற்றும் வளர்ப்பு குறித்த இரகசியம். ஆனால் அவள் பூமா தேவியின் மகள் என்று இட்டுகட்டினர். வேதவதியை இராவணன் திருமணம் செய்தது பெரும் அதர்மம், ஏனென்றால், இராட்சச குலம் கீழ் வர்க்கம் (சாதி – மொ.ர்) எனவே இராவணன் தண்டனைக்குரியவன், கொல்லப்பட வேண்டியவன்.

5. திபெத்தின் வம்சாவளி மன்னன் இராவணன். அப்பொது அது திவிஸ்தபா என்று அழைக்கப்பட்டது. அநேகமாக அவன் அண்டை நாடுகள் பலவற்றையும் வென்றிருந்தான். இந்திரனின் அமராவதி மட்டுமே எஞ்சியது. போதிய முன் தயாரிப்புகள் இன்றி, அதிலும், இந்திரன் இத்தகைய தாக்குதலை எதிர்பார்த்து ஏற்கனவே படைகளை தயார் நிலையில் வைத்திருந்தான் என்றரியாது அமராவதி மீது போர் தொடுத்தான். தோல்வியின் விளைவாக இராவணன் பல நாட்கள் சோகத்தில் மூழ்கினான். மேகநாதன் தன் தந்தையின் இன்னலைக் காண முடியாது, மின்னல் வேக நடவடிக்கை எடுத்து, அமராவதி நகரத்தை துவம்சம் செய்தான். இந்திரனை கையும், காலும் கட்டி இழுத்துவந்து இராவணனின் காலில் கிடத்தினான். எல்லை வாயிற்கதவில் கட்டப்பட்டான், இலங்கையின் ஒவ்வொரு குடிமகனௌம் இந்திரனை ஏளனம் செய்தனர், கடவுளர்களின் அரசனை நையாண்டி செய்தனர்.  புலஸ்தைய பிரம்மனின் வேண்டுகளுக்குப் பிறகு, அதுவும் தனக்கு இந்திரஜித் (இந்திரனை வென்றவன்) என்று பட்டமளித்தப் பின்னரே இந்திரனை விடுவிக்க மேகநாதன் ஒப்புக்கொண்டான். இதனால் வன்மம் கொண்ட இந்திரன் என்ன விலை கொடுத்தேனும் இராவணனை பழிதீர்க்க கங்கணம் கட்டினான்.

இப்படியாக, இந்திரன், அகத்தியன், விஸ்வாமித்ரன், குஸத்வஜன், கோதமன், வைஸ்ரவணன் இன்னும் சிலரின் கோபங்களுக்கு இராவணன் ஆளானதாலேயே, அவனைக் கொல்வதற்கு இவர்கள் கூட்டணியில் இராமாவதாரம் உருவானது. அதுமட்டுமா, ஒவ்வொரு அவதார புருஷர்களின் உருவாக்கத்திற்குப் பின்னரும் தேவரிஷி நாரதன் (பண்டையக் கால நடமாடும் செய்தித் தாள்) தான் இருக்கிறான் என்பது பெரும்பாலருக்குத் தெரியாது. ஹிரண்யகசிபுவைக் கொண்ற வராஹ யாகத்திற்கு அவனே காரணம். மஹாபலியை ஏமாற்றிய உபேந்திரனின் தோற்றத்திற்குப் பின்னிருப்பவன் அவனே. அதேபோல் இராமனின் விஷயத்தில் நாரதன் செய்தது என்ன? தன்னுடைய சீடனான வால்மீகியிடம் ஒரு கதைக் கருவைக் கொடுத்தான். அவர் தன்னுடைய கவித் திறனால் அதனை ஒரு விரிவான நாடகமாக வடித்தார். இராமன் பிறக்கும் முன்பே இந்த திரைக்கதை உருவாகிவிட்டது. அதனைத் தொடர்ந்து இராமாயணம் என்பது அந்த திரைக்கதையின் அரங்கேற்றம் மட்டுமே.

தொடரும்….


No comments:

Post a Comment