Jan 26, 2019

முதன் முதலாக: நினைவில் மிதக்கும் பனிக்குடம்

கொற்றவை
12.9.1999-ல் எனக்குத் திருமணம் நடந்தது. அவர் ஓர் ஓவியர். பின்னர் திரைப்பட இயக்குநரானார். தற்போது, அருங்காட்சியகம் மற்றும் கலைத்துறையில் பரிணமித்து வருகிறார். 2010-க்குப் பிறகு, நாங்கள் அந்த உறவை நட்புறவாக்கிக் கொண்டோம். அது இன்றளவும் நட்புறவாகத் தொடர காரணமாக, வாழ்வின் பிடிப்பாக இருப்பவள் எங்கள் மகள், வருணா!

‘வருணா’ என்றால் வண்ணங்கள், மழைக்கடவுள் என்றுதான் பொதுவாகப் பொருள் கொடுக்கின்றனர். ஆனால்,  ‘வருணா’ என்றால் ‘கடவுளுக்கெல்லாம் கடவுள்’ என்ற பொருள் இருப்பதாகக் கூறப்படுகிறது. கடவுள் இல்லவே இல்லை எனும் எனக்கு, இப்பெயருக்கான பொருள்களில் பெரிய நாட்டமில்லை. ஆனால், தற்போது அவளுடனான 18 வருட உறவில் வருணா என்றால் தோழி, அன்பு, துணிவு, தெளிவு, புரிதல், அரவணைப்பு, தன்னம்பிக்கை, உற்சாகம், எல்லாவற்றுக்கும் மேலாக என் வாழ்வின் ஒரே காரண காரியமும் ஆகிறாள்.

என் அப்பா Xerox கடை வைத்திருந்தார். குடும்பமாக உழைத்தே நாங்கள் வாழ்ந்தோம். அதில் என் தாய், கடுமையான உழைப்பாளியாக்கப்பட்டவர். நாங்களும் (நானும் எனது தம்பியும்) 10 வயது தொடங்கி, எங்கள் கடையில் வேலைசெய்தே பிழைத்தோம். உழைத்து வாழ வேண்டும் என்பதை மட்டுமே என் தந்தை எங்களுக்கு வலியுறுத்தி வந்துள்ளார். (அவருக்கு மார்க்ஸியமெல்லாம் தெரியாது!) ஆண்கள் வந்துபோகும் இடங்களில், கடைகளில், பெண்கள் அமர்ந்து வேலைசெய்தால், இந்த ஆணாதிக்கச் சமூகம் அவளுக்குப் பல பட்டங்களை வழங்கி கௌரவிக்கும். அந்தப் பட்டங்களைப் பரம்பரைச் சொத்துமாக்கிவிடும். ஆகவே, நான் தினம் தினம் எங்கள் சாலையைக் கடந்து எங்கள் கடைக்குச் செல்லும் வழியில் பல ஆண்களின் ஆபாசப் பேச்சுகளையும் பட்டங்களையும் சுமந்தபடியே செல்வேன். அந்தச் சிறு வயது தொடங்கி, என்னுள் ஒரு நெருப்பு கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. நான் வளர்ந்து பெரியவளாகி, ‘குடும்ப’ வாழ்வில் ஈடுபட்டு, பத்தினியாக (அடிமையாக வாழ்தல் என்பது அப்போது தெரியாதல்லவா) வாழ்ந்து, ‘சிறந்த குடும்பப் பெண்’ எனும் பெயரெடுப்பேன். அவ்வாழ்வில் கண்டிப்பாக ஒரு பெண் குழந்தையை மட்டுமே பெற்றெடுப்பேன். இந்த உலகமே வியக்கும் அளவுக்கு அவளை ஓர் ஆளுமையாக வளர்ப்பேன் எனும் வேள்வித் தீ அது. என்மேல் திணிக்கப்பட்ட பாவங்களை மகள் என்னும் ‘திருவுரு’ கொண்டு கழுவிக் களைதல் எனும் பேதைமை மனம். இப்போது அந்த வீண் வீராப்பு வேடிக்கையாக இருந்தாலும், எங்களின் தாய் - மகள் உறவு, சுயமரியாதை, சமதர்மம் என்று வேறொரு தளத்தில் பரிணமித்து பெருவாழ்வு கண்டுள்ளது.

முன்னோட்டங்கள் முடிந்தது, இனி வருணா பிறந்த கதைக்கு வருவோம். 15.8.2000 அன்று வருணா பிறந்தாள். அன்றுதான் என் பிறந்த நாளும் என்பதுதான் இந்தக் கதையின் ஆர்வமூட்டும் அம்சம். எப்படி அவள் அதே நாளில் பிறந்தாள்?
நான் கருவுற்றிருந்தேன் என்பது அன்றைக்கு எனக்குத் தெரியாது. எங்கள் வீட்டிற்கு ஒரு விருந்தினர் வந்திருந்தார். என் முகத்தைக் கண்டு, “என்னம்மா உண்டாகியிருக்கியா?” என்றார். “இல்லையே... அதெல்லாம் வாய்ப்பில்லை!” என்றேன். சிரித்துவிட்டுச் சென்றார். பிறகு, மதியம் வேறொருவர் வந்தார். அவர் கேள்வியெல்லாம் கேட்கவில்லை. “நீ உண்டாகியிருக்க. அது பெண் குழந்தை. மகாலட்சுமியே உனக்கு வந்து பிறப்பாள். குழந்தை வேண்டாம் என்று கருவைக் கலைத்துவிடாதே” என்று சொல்லிச் சென்றார். எனக்கு எதுவுமே புரியவில்லை. அடுத்த நாள், நான் உணவு உண்ணும்போது,  வாந்தி வந்தது. பரிசோதித்துப் பார்த்தபோது, நான் தாயாகி இருந்தேன். அந்த நிமிடம் முதல், அது பெண் குழந்தையாக இருக்க வேண்டுமே எனும் அந்த வேள்வித்தீ மீண்டும் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

தாயோ உறவுகளோ அருகில் இல்லாத நிலையில், என் வயிற்றை வளர்த்தது, மயிலாப்பூர் கிரிஜா கார்டனில் வசித்த அன்பு உள்ளங்களே. ஒரு காலனியே என் தாயாக மாறிய அனுபவக் காலம் அது.
வாய்க்கு ருசியாக அவர்கள் எனக்கு எவ்வளவு சமைத்துப் போட்டாலும், மூன்று உணவுப் பொருள்களுக்காக என் நா ஏங்கித் தவிக்கும் (craving). சொன்னால் சிரிப்பீர்கள், பழைய சோறு, கற்பூரவல்லி வாழைப்பழம் மற்றும் ஒரு நூடுல்ஸ் (பெயர் சொல்லக் கூடாதல்லவா). எவ்வளவு பழம் தின்றேன் என்று கணக்கே இல்லை. அதேபோல் அந்த நூடுல்ஸ் அவா இருக்கிறதே ஸ்ஸ்ஸ்ஸ்... யப்பா... சரியாக மதியம் 12 மணிக்கு வெறி பிடித்தாற்போலாகிவிடும். வயிற்றுக்குள் இருந்துகொண்டு எப்படி ஆட்டி வைத்திருக்கிறாள் பாருங்கள்!

இப்படி நூடுல்ஸை குமுக்கிக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு நாள், அதில் உள்ள MSG குறித்து எங்கேயோ படிக்க, தொற்றிக்கொண்டது பீதி. பயத்தில் குழந்தைக்கு மூளை வளர்ச்சி குன்றிவிடுமோ என்று அழுகையே வந்துவிட்டது. என் மருத்துவருக்குத் தொலைபேசியில் அழைத்து, விவரம் சொல்லிக் கேட்டேன், கேவலமாகத் திட்டாத குறை. அதன் பிறகு, அதைக் கைவிட்டேனா என்பது  நினைவில்லை. ஏனென்றால், நாவை அடக்க முடியாதே!

இப்படியாகப் பல கலவைகளுக்கு மத்தியில் வயிற்றில் குழந்தை வளர்ந்தது.

எட்டாம் மாதம் நெருங்கும்போது, வயிறு வழக்கத்தைவிட மிகவும் பெரிதாக இருக்க, மருத்துவர் சற்று அச்சம்கொண்டார்.  ‘என்னதாம்மா பண்ற நீ’ என்பதுபோல இருந்தது அவர் பார்வை. “ஒருவேளை கர்ப்பகால நீரிழிவாக (Gestational Diabetes) இருக்குமோ என்னவோ தெரியவில்லை, பரிசோதித்துப் பார்ப்போம். அப்படியிருந்தால், பிரசவ தேதிக்குச் சில நாள்கள் முன்பே நீ மருத்துவமனையில் சேர வேண்டும்” என்றார். அச்சமும் குற்றவுணர்வும் பற்றிக்கொள்ள, மீண்டும் பதற்றம். அம்மா எங்கோ இருந்த நிலையில், மீண்டும் அக்கம் பக்கத்தவரே ஆறுதல்.

பிரசவ தேதி நெருங்கும்போது அம்மா வந்தார். ஆகஸ்ட் 22 என்று தேதி கொடுத்திருந்தார்கள். ஆனால், என் அம்மாவோ “கண்டிப்பாக அவள் உன் பிறந்த நாளன்றுதான் பிறப்பாள் பார்!” என்றார். அற்புதங்களில் எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால், அன்பு உள்ளங்களின் வாழ்த்தில் உண்மை இருக்குமல்லவா. ஆசையும் தொற்றிக் கொண்டது. கேட்கவா வேண்டும், சங்கு சங்கென்று சலங்கை கட்டிவிட்டதுபோல் ஆடத் தொடங்கியது மனம். 14 ஆகஸ்ட், 2000 அன்று, வலி வருவதுபோல் உள்ளது என்று சொல்லி நானே வலிந்து மருத்துவமனைக்குச் சென்றேன். உண்மையில் வலி உடலில் இருந்ததா அல்லது மனம் அதை வரவழைத்ததா என்று எனக்கு நினைவில்லை. பிரசவ அறை இல்லாத நிலையில், பொது வார்டில்தான் சேர்ப்பேன் என்றார்கள். “பரவாயில்லை டாக்டர், எனக்கு வலி அதிகரித்துவிட்டால் என்ன செய்வது? நான் இங்கேயே இருக்கிறேன். எனக்கு நாளை குழந்தை பிறந்துவிடும்” என்றேன். பின்னர் மாலையில் தனியறை கொடுத்து மாற்றினார்கள். மயிலாப்பூர் இசபெல் மருத்துவமனை, மருத்துவர் உஷா கிருஷ்ணகுமார். பெண்களின் கடவுளாக பார்க்கப்படும் மருத்துவர். இன்றைக்கு முதுமை எய்தியும், எத்தனை பிரசவங்களைப்  பார்த்துக்கொண்டிருக்கிறார் அத்தாய்.

எனக்கு வலியும் வரவில்லை ஒன்றும் வரவில்லை. மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் கன்னியாஸ்திரீகள் வந்து பார்த்துப் பார்த்துச் சென்றார்கள். நான் ஹாயாக அமர்ந்துகொண்டு “வந்துடும்... வந்துடும்” என்று சொல்லிக்கொண்டிருந்தேன். இதற்கிடையில், படிகளில் இறங்கி நடப்பது (புவியீர்ப்பு விசை!), வராண்டாவில் நடப்பதென்று இயற்கைப் பிரசவத்திற்கான ஆலோசனைகளையும் வழங்கிக் கொண்டிருந்தார்கள். “வலி வரவில்லை என்றால், உன்னை வீட்டுக்கு அனுப்பி விடுவோம். அடுத்த வாரம் நீ வந்தால் போதும்” என்றார்கள். பித்து தலைக்கேறிய பின்னர் அடங்க முடியுமா? படிகளில் ஏறி இறங்கத் தொடங்கினேன். செவிலியர்களும் கன்னியாஸ்திரீகளும் என்னைக் கண்டு நகைக்கத் தொடங்கி னார்கள். “ஏம்மா நல்லா இவ்ளோ தெம்பா நடக்குற, உனக்கு இப்பப் புள்ளை பொறக்கப் போகுதா?” என்றனர். “பிறக்கும்!” என்றேன்.
இரவு 10 மணிபோல் கன்னியாஸ்திரீ ஒருவர், என் யோனிக்குள் தன் கையைவிட்டுப் பரிசோதித்து, “குழந்தைக்கு இன்னும் தலை திரும்பவில்லை மகளே, திரும்ப வேண்டும், உனக்கு முதுகுத்தண்டு எலும்பும் விலகிக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் இயற்கைப் பிரசவம் நடக்கும்… பார்ப்போம்” என்றார். அறைக்குள் நடக்கத் தொடங்கினேன். வராண்டாவில் நடந்தேன். என் உயிரின் சாட்சியாக மற்றோர் உயிர் பிறப்பதற்கான அந்த வலி வரத் தொடங்கியது. உச்சத்தை அடையத் தொடங்கியபோது, “ஐயோ எனக்குக் குழந்தையே வேண்டாம், ஏன் பொம்பளைங்களுக்கு மட்டும் இந்த நிலை” என்று தொடங்கி, எல்லா வசைகளையும் பாடித் தீர்த்தேன். அப்போதும் அவர்கள் வந்து பார்த்துவிட்டு, “இது பொய் வலியாகவும் இருக்கலாம் பார்ப்போம்!” என்றார்கள். இரவு முழுவதும் வலியால் அமர முடியவில்லை, உறங்க முடியவில்லை. அழுகையும் புலம்பலும் கத்தலுமாகக் கழிந்தது. காலை ஏழு மணி, எழுந்து நின்றபோது தரை முழுதும் ஈரம். ‘பனிக்குடம்’ உடைந்துவிட்டது என்று பதற்றமடைந்தனர். எனக்கு எதுவுமே புரியவில்லை. ஆனால், என்னால் நிற்கக்கூட முடியவில்லை.  உடனடியாக மருத்துவருக்குத் தகவல் தெரிவித்தனர். பிரசவ வார்டுக்கு அழைத்துச் சென்றனர். பிரசவ அறிவுறுத்தல்கள் தொடங்கின. குழந்தையை வெளியே தள்ள முக்க முக்க, மலம் வேறு வெளி வந்துகொண்டிருந்தது. ஏதோ ஊசி போட்டார்கள், எனிமா கொடுத்தார்கள். மயங்கினேனா என்பது எனக்கு நினைவில்லை. உயிர்ப் போராட்டமும் மற்றோர் உயிருக்கான போராட்டமும் உச்சத்தை அடைந்தது.

தலைக்கனம் பிடித்த ஓர் உயிர் என் வயிற்றுக்குள் கருவுற்றிருந்தது. ஆம், அதன் தலை அவ்வளவு பெரிதாக இருந்ததால் வெளிவரவில்லை. Vaccum போட்டு இழுக்கலாம் என்று ஏதோ பேசினார்கள். பின்னர் என்னமோ செய்தார்கள். சிவப்பும் கருமையும் பச்சையும் பிசுபிசுப்பான வெண்ணிற திரவமும் சுற்றியபடி ஓர் உயிர் பிறப்பெடுத்தது.

15.8.2000, செவ்வாய்க்கிழமை, காலை எட்டு மணி, ‘நூடுல்ஸும் வாழைப்பழமும் தின்று என்னைக் கொழுக்கவைத்த நாயே’ என்று என்னைத் திட்டுவதுபோன்ற ஓர் அலறல். ‘பெண் குழந்தை’ என்றனர். மயங்கி, ஓய்ந்து, விழித்து கையை நீட்டினேன் அவளைக் கேட்டு. “இரு தூய்மை செய்து கொண்டு வருவார்கள்” என்றனர். காற்றை உறிஞ்சிய பலூன்போல என் வயிற்றைக் கண்டு, “ஐயோ என் வயிற்றைக் காணோம்” என்று கத்தத் தொடங்கினேன். “எல்லாம் இங்கதாம்மா இருக்கு” என்று வலப்பக்கம் சுருங்கிய பைபோல் ஒன்றிக்கொண்டிருந்த அந்த வயிற்றுச் சதையை இழுத்துப் பிடித்துக் காட்டினார்கள். நினைத்தால் எல்லாம் கனவுபோலத்தான் உள்ளது.

இன்று 18 வயதாகிவிட்டது அவளுக்கு. மகளாய் இருந்தவள், அவளின் 10 வயதில், நான் மிகப் பெரிய முடிவொன்றை எடுத்தபோது, “உனக்கு எது சந்தோசமோ அதைச் செய் மம்மி” என்று கூறி எனக்குத் தாயானாள். இப்போது, தோள் கொடுக்கும் தோழியாக…

மாதராய்ப் பிறந்திட மாதவம் செய்திடல் வேண்டுமடி!
நன்றி: விகடன் தடம் 
https://www.vikatan.com/thadam/2018-dec-01/column/146274-interview-with-writer-kotravai.html

No comments:

Post a Comment