முந்தைய
காலத்தில் ஒருவருக்கு குழந்தை பிறந்துவிட்டால் உழைப்பதற்கு இரண்டு கைகள் கூடுதலாக கிடைத்ததாகப் பெறுமை கொள்வார்களாம். உடல் என்பதை
உழைப்பதற்கான கருவி, கொண்டாடப்பட வேண்டிய ஒன்றென்பது உலகாயத பார்வையாக இருக்க, கடவுள்
நம்பிக்கையோ உடல் என்பது கர்ம வினை, பாவத்தின் விளைச்சல், பிரம்மத்தின் திருவிளையாடல்
என்ற பேச்சை முன்வைப்பதோடு, உடலை அசுத்தமானதாக பறைசாற்றுகிறது. சுத்தம் எனும் கருத்து உடலின் வெளிப்புற தன்மையை
சுட்டுகிறது. மேலும் அது ’அகம்’ என்ற ஒன்றாகவும் பிரிக்கப்பட்டு ‘அகச் சுத்தம்’ என்பதை
வலியுறுத்தித் திணிக்கிறது. இது மேலும் தீவிரமடைந்து உடலிலிருந்து உழைப்பைப்
பிரித்து அதை ஈனமாக சித்தரித்து, அதை பெண்ணுடலாக, சாதியுடலாக மாற்றி உடல் பற்றிய வரையரையை
உருவாக்கியது.
குரங்கிலிருந்து
மனித இனம் பரிணமிக்க உழைப்பே அடிப்படை. இயற்கையை மனிதன் தன்வயப்படுத்தியது உடலுழைப்பைக்
கொண்டே. இயற்கையோடு மானுட உடலும் ஒன்றோடொன்று உறவாடியபடி உழைத்த பொழுதிருந்த செழுமையும்,
ஆரோக்கியமும் பறிக்கப்பட்டுவிட்டது.நவீன கண்டுபிடிப்புகளால் மூளை உழைப்பு அதிகரித்து
வரும் சூழலில், உடல் என்பது இயந்திரத்தனமாக மாறிவருகிறது. அப்போதும் இப்போதும் பெண்
உடலும், ஒடுக்கப்பட்ட இன மக்களின் உடலுமே ’உற்பத்தி’, ’லாபம்’, ’அதிகாரம்’
எனும் காரணங்களுக்காக சுரண்டப்படும் ஒன்றாய் இருந்து வருகிறது.
மூளையை
பயன்படுத்தி, மூடிய அறைக்குள் இருந்து கொண்டு பணி புரிபவர்களின் வருவாய் லட்சக் கணக்கில்,
கோடிக் கணக்கில் இருக்க, தட்ப வெட்ப சூழல்களுக்கப்பால் தன் உடலை கருவியாகக் கொண்டு
உழைக்கும் ஒருவருக்கு கிடைக்கும் தின வருவாய் அதிக பட்சம் முன்னூறு ரூபாய். உயிர் வாழ்வதற்கு
தேவைப்படும் உழைப்பு என்பதைத் தாண்டி உழைப்பதற்காகவே உடலை சுமக்கும் நிலை. இந்நிலையில்
விரும்பிய உழைப்பை செலுத்தி, விரும்பிய வகையில் உடலை பராமரிக்கவும், கொண்டாடவும் நமக்கு சுதந்திரம் இருக்கிறதா என்பது கேள்வியாக இருக்கிறது.
தனி
மனித சுதந்திரம் என்பது அதிகார வர்க்கத்தின் அகராதிக்கு உட்பட்ட ஒன்றாகவும், அவர்கள்
பரப்பும் கருத்துரைகளாகவும் தான் இருக்கிறது. உடல் சுதந்திரம் என்று பேசும்பொழுது,
குறிப்பாக ஒரு பெண் பேசும் பொழுது அது பாலியல் சுதந்திரம் என்பதாகத்தான் புரிந்துகொள்ளப்படுகிறது.
(பெண்) உடலுக்கு உடலுறவு ஒன்றே இன்பம் தரக்கூடியது எனும் திணிக்கப்பட்ட ஆணாதிக்கச்
சிந்தனையின் விளைவே இது. அதிகார வர்க்கமானது உடலை இரண்டு முரண்களுக்குள் வைத்து கட்டுப்படுத்துகிறது.
ஒன்று உழைப்பை சுரண்டுவதற்கான உடல் பற்றிய இழிவான சிந்தனைகள். இது எல்லோருக்குமானது. மற்றொன்று இழிவென்று சொல்லப்பட்டதையே
இன்பம் என்று சுதந்திரத்தின் பெயரால் வியாபாரமாக்கப்பட்ட சுதந்திரம். இது ஒரு குறிப்பிட்ட
சிலருக்கானது. இந்த முரண்களிலிருந்து எழும்
தாழ்வு மனப்பானமை, போட்டி மனப்பன்மை உடலோடு உடலை மோதவிடுகிறது. உணவு உண்ண, மலம் கழிக்க,
உடலுறவு கொள்ள உடலுழைப்பை செலுத்தியே ஆகவேண்டும். எத்தனை அதிநவீன இயந்திரங்களை கண்டுபிடித்தாலும்
இம்மூன்று செயலுக்காக மனிதர் உழைத்தே ஆகவேண்டும்.
நிலைமை பொதுவாயிருக்க அரசும் மதமும் மனித உடல்களை பாலினம், வர்க்கம், சாதி,
மதம், இனம் எனும் அடிப்படையில் பிளவுபடுத்துகிறது. எந்த உடலை எவர் ஆள்வது, எவர் சுரண்டுவது
என்பதற்கான திட்டங்களை அது வடிவமைக்கிறது.
உடல்
உழைப்பு மற்றும் உழைப்புச் சக்தியை கைப்பற்றி, அவ்வுடல்களை பணப்பரிமாற்றமாக மாற்றுகிறது.
பரிமாற்றத்திற்கு அடிப்படையாய் ஒழுக்கவாத கருத்தாக்கங்கள மூலதனமாகக் கொண்டு முதலாளித்துவத்துவமும்,
மதவாத கோட்பாடுகளும் உடலை, புலன்களை அடக்கி ஆள்கிறது. அவ்வகையில் புலன்களின் இயல்பான உணர்ச்சிகள் கூட
மறுத்தலிக்கப்பட்டு, சுய அனுபவத்தை தாண்டிய ஒரு அறிவு நிலைக்குள் வைத்து கண்காணிக்கப்படுகிறது.
கண்காணிக்கப்படும் உணர்ச்சிகளில் முதன்மையாக இருப்பது காதல் மற்றும் காமம்.
காதலும்
(ஈர்ப்பு), காமமும் உயிரியற்கை. ஆனால்
பண்டைய காலம் தொட்டு பல்வேறு வகையான கருத்தியல்கள் இவ்விரண்டை சுற்றி ஏற்றிவைக்கப்பட்டிருக்கின்றன.
காதல் என்பதற்கான விளக்கத்திலிருந்து உடல் உறவுக்கான விளக்கப்படங்கள் வரை இறையியலுக்கு
நிகராக ஒரு மாயை கலந்த மிகையுணர்ச்சியுடன் கையாளப்படுகிறது. ’காதல்’ என்ற பதம் ஒரு
குறிப்பிட்ட வகையான ஈர்ப்பு உணர்ச்சி. இவ்வுணர்ச்சியை உயர்த்திப் பிடிக்கவும், நியாயப்படுத்தவும்
கொடுக்கப்பட்ட ஒரு சொல்.
ஆண் பெண் அல்லது ஒரே பாலினத்தவர் இப்படி யாராக இருந்தாலும் ஒருவருக்கு
மற்றொருவர் மீது ஓர் விருப்பம், ஈர்ப்பு என்பது பல்வேறு காரணங்களால் தோன்றுகிறது. குறிப்பாக,
பதின் பருவ வயதில் இது தொடங்கி விடுகிறது. குழந்தைப் பருவத்தில் ஆண், பெண் நட்பு கண்காணிக்கப்படுவதில்லை.
எல்லாவகையான தொடுதல் சுதந்திரத்தோடும் அந்த உறவு சாத்தியப்படுகிறது. அந்த பருவத்தில்
பால் உறுப்பில் காணபப்டும் வேறுபாடுகளை குழந்தைகள் பேசிக்கொள்வதில்லை என்று நாம் உறுதிபடக்
கூறிவிட முடியாது. குழந்தைப் பருவத்தில் தொடுதல்,
கட்டி அணைத்தல், முத்தம் கொடுத்துக் கொள்ளுதல் என்பதை, அன்பின் வெளிப்பாடாகவே பெற்றோரும்,
இச்சமூகமம் கருதுகிறது. பெண் பருவம் எய்திய பின்னர் சில விதிமுறைகள் அவளுக்கு விதிக்கப்படுகிறது,
பெண்ணுடல் சார்ந்த தன்மையிலிருந்து இவ்விதி எழுகிறது. விளைவுகளைக் கருதி வைக்கப்படும்
இவ்விதியில் உடல் சார்ந்த கல்வியோ, அறிவுரைகளோ வழங்கப்படாமல் ‘புனிதம்’, ‘அகத் தூய்மை’,
‘கற்பு’ எனும் கருத்தாக்கத்தால் முன்வைக்கப்படுகிறது.
புனைவு,
இலக்கியங்கள் தொடங்கி திரைப்படங்கள் வரை பருவ மாற்ற உணர்வுகளை, எதிர் பால் ஈர்ப்பை
சுவாரசியமான, வியாபாரப் பொருளாக கையாண்டிருப்பதின் விளைவாக உடலின் வெளிப்பாடான இருவகை
உணர்ச்சியில் ஒன்றான ‘ஈர்ப்பு’ காதல் என்று புனிதப்படுத்தப்பட்டும், ’செயல்முறை’ என்பது
முறையற்ற காமம் என்றும் இழிவு படுத்தப்பட்டும் கையாளப்படுகிறது. தொடுதல் என்பது உயிரினத்தின் இன்றியமையாத வெளிப்பாட்டுக்
கருவி. மனித உயிரினத்தில் குறிபிட்ட வயதிற்கு பின்னர் அது விதிகளுக்குள்ளாகிறது. அதுவரை அனுபவித்து வந்த மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு
அனுபவம் உடலுக்கு மறுத்தலிக்கப்படுகிறது. தொடுதல்,
அரவணைத்தல், ஆகிய வெளிப்பாடுகள் மகிழ்ச்சி தருவதோடு மட்டுமல்லாமல், ஒரு பாதுகாப்புணர்வை,
உறவின் வெம்மையை வெளிப்படுத்தக்ககூடியது. இது போன்ற சமிக்ஞைகளை புறம் தள்ளிவிட்டு எதிர்பால்
உடல்களின் பௌதிக செயல்பாடுகளை (மதவாதிகள், ஊடகங்கள் பயன்படுத்தும் சொல் ‘கேவலம் உடல்
இச்சை) மட்டும் கணக்கில் கொள்கிறது கண்காணிப்பு அரசியல். பருவம் எய்திய இரு எதிர்பால் உடல்களின் (சமீப காலங்களில்
ஓர்பால் உறவு கொள்பவர்களாக இருக்கக்கூடும் எனும் கண்காணிப்பும் இப்பொழுது நடக்கிறது)
எல்லாவிதமான உடல் மொழியையும் காமம் என்பதற்குள் சுருக்கிக் காண்பதை ஆணாதிக்க தாக்கம்
என்றுதான் சொல்லவேண்டும்.
இந்த
ஒடுக்குமுறையிலிருந்து தப்பித்துக்கொள்ள சம்பந்தப்பட்ட இரு உடல்களுக்கு ஒருவித சமூக
அங்கீகாரம் பெற்ற உறவுமுறை தேவைப்படுகிறது. உடல்களுக்கு அவ்வங்கிகாரம் வேண்டி ‘காதல்’
என்ற ஒன்றை பற்றிக்கொள்வதைத் தவிர வேறு சாத்தியம் இருப்பதாகத் தெரியவில்லை. ஒருவர் மீது ஏற்படும் ஈர்ப்பு, அதன் தொடர்ச்சியான
பேச்சு, பழக்கம், தோழமை என்பது ஒரு நெருக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது, அவரோடு தொடர்ந்து
பேசுவது, கூடவே இருப்பது, எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்வது ஒரு மகிழ்வைத் தருவதாக
உணரும்பொழுது இன்னும் நெருக்கம் அதிகமாகிறது. அவ்வப்போது தொட்டுக் கொள்வது, கட்டி அணைத்துக்
கொள்வது என்று அன்பை வெளிப்படுத்த துவங்கும்போது, கூடவே ஒரு குற்ற உணர்வு தலைதூக்குவதை
பெரும்பாலானவர்கள் ஒப்புக்கொள்ளக் கூடும். சமூகம் விதித்திருக்கும் ‘கற்பு’ சார்ந்த விதிமுறைகளால் பீடிக்கப்பட்டிருக்கும்
பெற்றோர்கள் மகன் மகள்களைக் கண்காணிப்பதும், சமூகம் என்கிற ஒரு அதிகார வர்க்கத்தின்
கண்காணிப்பும், அதன் விளைவுகளால் வரும் குற்ற உணர்வும் அடுத்த கட்டம் நோக்கி தள்ளும்
பொழுது அவர்களின் ‘உறவைத் தக்கவைத்துக் கொள்ளும்’ போராட்டத்தில் ‘காதல்’ என்ற அடையாளம்
உள் நுழைந்துவிடுகிறது.
இதுமட்டுமல்லாது
இன்னும் சில உளவியல் கூறுகளை ஆண், பெண் உறவில் அவதானிக்க முடியும். உடல் உறவு என்பது
வேட்கையாக இல்லாமல் இருந்தாலும், சிறு சிறு உடல் மொழி வெளிப்பாடுகளுக்கும் நியாயம்
கற்பிக்க வேண்டி, அதற்கு ஒரு ‘புனிதத் தன்மை’ வேண்டி ‘காதல்’ எனும் அடையாளம் தேவைப்படுகிறது. ’அழகு’ அதற்கான அங்கிகாரம்,
பாராட்டு இவைகளுக்காக ஏங்கும் அல்லது அது கிடைக்கும் பொழுது மகிழும் மனமானது, அவ்வயதில்
‘காதல்’ என்பதை ஓர் கிடைத்தற்கரிய பேறாக, சாதனையாக, வாழ்வின் அத்தியாவசியப் பொருளாக
கருதும் வகையில் மனங்களில் ஊடுருவுகிறது. பெண்ணாய் இருந்தால் தன்னால் ஒரு ஆணை கவர முடியுமா
முடியாதா என்று தத்தளிக்கிறது, ஆணாய் இருந்தால் பெண்ணின் கவனத்தை நாடுகிறது. ஈர்ப்பு
கொண்ட ஒருவரை தக்கவைத்துக் கொள்ள நினைப்பதை ஒருவகையில் கிடைத்த அங்கீகாரத்தை தக்கவைத்துக்
கொள்ளும் செயலாக எடுத்துக்கொள்ளலாம். பொருளாதார ரீதியில் பின் தங்கியிருக்கும் நபர்களுக்கு,
’சமூகம் வரையறுத்திருக்கும் நிறம், உடல் அளவு, அழகு, தகுதி’ எனும் இத்தகைய ’அளவுரு’க்களில்
குறைபாடுடையவராக தன்னைப் பொறுத்திப்பார்க்கும் நபர்களுக்கு ‘எதிர் பால்’ உறவு அல்லது
தனக்கென ஒரு ‘உறவு’ அமைவது ’தன்முனைப்பாற்றலை’ (egoism) ஆற்றுப்படுத்துகிறது. அதன் தொடர்ச்சியாக ஏற்படும் மனவெழுச்சியை, தற்பெருமையை இழக்க அந்நபர்கள் தயாராயிருப்பதில்லை, குறிப்பாக
ஆண். அதன் தொடர்ச்சியாக ஏற்படும் உடமை உணர்வு அவ்வுறவில் தாக்கம் செலுத்தத் துவங்குகிறது.
ஏற்கனவே
ஆண் பெண் உறவு பற்றிய கருத்தாடல்கள், கண்காணிப்புகள், ‘கற்பு’ சிந்தனைகள் ஆகியவை ’தயார்
ஆயுதமாக’ கிடைக்க, இயற்கை வெளிப்பாடான ஈர்ப்பு உணர்வு, அதை ஆற்றுப்படுத்தும் உடல் மொழி
வெளிப்பாடுகள் இறுகி இறுகி ’காதல்’ என்று உருவெடுத்து ஒரு ‘புனிதத் தன்மை’க்குள் பொய்மையாகச்
சுருங்கிவிடுகிறது. பெண்ணுக்கு இது கிட்டத்தட்ட
‘பால்ய விவாக’த்திற்கு நிகரான விலங்காக அமைந்து விடுகிறது. ஆணுக்கு அது தன் ‘ஆண்மை’ சார்ந்த சவாலாகிவிடுகிறது.
தன் ‘காதலை’ ஏற்க மறுக்கும் பெண்ணை அமிலம் ஊற்றி மிரட்டும் அளவுக்கு இந்த ஆண்மை உணர்வு
ஆட்கொள்கிறது. (தான் காதலிக்கும் பெண்ணின் வீட்டில் நவீன ஒட்டுக் கேட்கும் கருவிகளைப்
பொறுத்தி அப்பெண்ணுக்கும், அவளது பெற்றோருக்கும் அச்சுறுத்தல் விடுத்த நிகழ்வுகளும்
இப்பொழுது நடந்தேறிவருகிறது.இதில் உள்ள கண்காணிப்பு அம்சத்தையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும்.)
பெண்கள்
மத்தியில் இது வேறு விதமாக செயல்படுகிறது, சிறுவயதிலிருந்தே அவள் ‘பெண்மையுடன்’ ஆணை
சார்ந்திருக்குமாறே வளர்க்கப்படுவதால், ’காதல்’ கொள்ளும் பருவத்திலும் அவள் மனதளவில்
‘மனைவி’ என்ற பாத்திரத்தை கடைபிடிக்கத் துவங்குகிறாள், ஆண் ‘கணவனாக’ அவளை வெளியில்
அழைத்துச் செல்வது, அவளுக்காக செலவு செய்வது என்று ‘ஆண்மையை’ கட்டிக் காத்துக் கொள்கிறான்.
(அவ்வளவும் பெற்றோரின் பணத்தில் நடந்தாலும்). அப்படி செலவு செய்யக்கூடிய ஒருவனையே சில
பெண்கள் நாடுவதென்பதும் சமூகத்தில் ஒரு உயர்வு நிலையில் வாழ்பவர்களுக்கு கிடைக்கும்
மதிப்பின் விளைவே. தனக்கு கிடைத்திருக்கும் ‘ஆள்’ ’பணம் படைத்தவன்’ என்று மார்தட்டிக்கொள்ளும்
தற்பெருமை உணர்வு. அது தொடர்ச்சியாக நடக்கும்பொழுது அவனது ‘அன்பிற்கு’ ஈடாக தன் உடலை
கொடுப்பது எனும் முடிவுக்குப் பெண் வந்துவிடுகிறாள். மேட்டுக்குடி பெண்ணாய் இருப்பின்
தற்காலத்திய குழப்பவாத ’முற்போக்கு’ சிந்தனைகள் அவள் உதவிக்கு வந்துவிடும். சமூகத்தின் ’அழகு’ வரையரைகளினால் தாழ்வு மனப்பான்மையில் உழலும் ஆண் ‘அழகான’ பெண்ணைக் கவர,
தக்கவைத்துக்கொள்ள பணத்தை பயன்படுத்துவதையும் காணமுடிகிறது. சாதாரண உடல் ஈர்ப்பும் அதற்குத் தேவைப்படும் வழிகாட்டலும், மறுக்கப்படும் சுதந்திரமும் இரு உடல்களை இத்தகைய சிக்கல்களில்
கொண்டுவந்து விடுகிறது.
மறுபுறம்
சமூக வரையரையினால் ‘காதல்’ பற்றிய புரிதலை வளர்த்துக் கொள்ளும் நபர்கள் அது முறிந்துவிடும்
பொழுது தற்கொலையை நாடுகின்றனர். அங்கு தனது உடலுக்கு நேரும் தோல்வியை உடல் கொண்டே பழிதீர்த்துக்கொள்ளும்
மனநிலை ஓங்குகிறது. ‘உறவு முறிவு’ என்பது பெறும் அவமானத்துக்குரிய விசயமாக கருதும்
அளவுக்கு ‘காதல்’ மிகையுணர்ச்சி நிறைந்ததாக உருவேற்றப்பட்டிருக்கிறது. திரைப்படங்கள்,
மற்றும் எண்ணற்ற ஊடகங்கள் இதில் பெரும் பங்கு வகிக்கின்றன. திருமண முறிவைக் காட்டிலும் ‘காதல்’ முறிவுகள் பெரும்
‘புனித’ அளவீடுகளால் அளக்கப்படுகின்றன. அதனால் நிகழும் தற்கொலைகளும் அதிகமாக இருக்கின்றது.
( அந்தத் தற்கொலையும் புனிதமான ஒன்றாக இங்கு கற்பிக்கப் படுவதை வைத்து இதன் தன்மையை
உணரலாம்)
மனதில்
ஒருவனை நினைத்துவிட்டால் அம்மனதில் மற்றொருவனை நினைப்பதென்பது வேசைத்தனம் என்று மீண்டும்
மீண்டும் ஓதப்படும் கருத்தானது, அச்சிறு வயதிலேயே ஆணின் எத்தககைய வன்முறைகளையும், விதிமுறைகளையும்
சகித்துக் கொள்ள வேண்டும் எனும் கருத்தை பெண்கள் மீது திணிக்கிறது. ஆண்களுக்கு இது கற்பு சார்ந்த விசயமாக இருப்பதைக்
காட்டிலும் ‘ஆண்மை’ சார்ந்த பிரச்சனையாக இருக்கிறது. தற்காலத்தில் இதெல்லாம் சர்வசாதாரணமாகி
விட்டது என்று சொல்வது சில மேட்டுக்குடிக் ‘காதல்’களை மட்டும் கணக்கில் கொள்வதாகும்.
ஒரு
குறிப்பிட்ட வயதிற்குப் பின்னர் ஒருவருக்கு மற்றொருவர் உறவு தேவைப்படுகிறது.
இது தவிர்க்கவியலாத ஒன்றாக இருப்பதை பெற்றோர் நினைவில் கொண்டு தங்கள் பிள்ளைகளை
கையாள்வதும், அவர்களுக்கு வழிகாட்டுவதும் அவசியமாகிறது. நிச்சயம் அவர்களும் அத்தகைய
உணர்வுகளை கடந்து வந்திருப்பர். உடல் தேவைகளை இயற்கையான உணர்வுகளாக புரிந்து கொண்டால்
மட்டுமே பிள்ளைகளுக்கு சரியாக வழிகாட்ட முடியும். மத கருத்தாடல்களை போற்றி ‘கற்பு’,
‘தூய்மை’, ‘புனிதம்’, ‘பெண்மை’ ‘பெண்’ என்று பரிதவிப்பார்களானால் அதெல்லாம் வெறும்
கட்டுக்கதை என்று அறிவைக் கொண்டு தர்க்கம் செய்து வென்று விடுவதொன்றும்
சிரமமல்ல.
காதலுக்கும்,
காமத்திற்கும் பெரிய வேறுபாடு இருப்பதாக கருதுவது தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்வதாகக்கூடும்.
அது மனம் என்று கற்பிக்கப்பட்ட ஒன்றை தர்க்கம் செய்து ஏமாற்ற உதவுமே அன்றி உயிரியல்
பூர்வ உண்மையாக இருக்க வாய்ப்பில்லை. ’பாலியல்
செயல்பாடுகளுக்கு உரிமம் அளிக்கப்பட்ட’ ஒன்றாக காதலை கருதுவது தவறாகிவிடாது. (It’s
just license to touch & feed the desire to sex). இதில் விவாதிப்பதற்கு என்ன இருக்கிறது என்று தோன்றலாம்,
கண்டிப்பாக இருக்கிறது. ‘காதல்’ என்பது ஒரு அதிசயப் பொருளாக, புனிதப் பொருளாக, ‘திரைப்பட விற்பனைப் பொருளாக’ இருப்பதால் அது பற்றிய கட்டுடைப்புகள் தொடர்ந்து
அவசியமாகிறது.
’ஈர்ப்பு’
உணர்ச்சி உயிரியர்க்கை என்று புரிந்து கொள்வதும், அதை திறம்பட கையாள்வது பற்றிய பாலியல்
கல்வியும், பெண்ணுள் ஆளுமையை வளர்க்கும் பெண்ணியக் கல்வியும் தேவைப்படுகிறது. சில பள்ளிகள்
பாலியல் கல்வி அளிக்கப்படுகிறது என்றாலும், இன்னும் முழுவீச்சில் அது முன்னெடுக்கபப்டவில்லை. உயிரியர்க்கை என்று பேசுவதால், விருப்பம் போன்று
காமத்தை துய்க்கும் சுதந்திரம் வேண்டியோ அல்லது அதைக் கட்டுப்படுத்த வேண்டியோ இக்கட்டுரை
எழுதப்படவில்லை. உயிரியர்க்கையை எப்படி கையாள்வது எனும் அறிவும், அதற்குப் பின்னணியில்
செயல்படும் ஆணாதிக்க சமூகம் திணித்திருக்கும் உளவியலை அறிந்துகொள்ளமுற்படுவதும் தேவை
என்று வலியுறுத்துவதே இதன் நோக்கம். அதன் மூலம் காதலின் பரிசாக கிட்டும் கலப்பு திருமணங்களை எதிர்த்து
‘காதலர்களை’ எரிக்கும் அளவுக்கு செல்லும் வெறியர்களை ’புனிதக் கேடு’, ‘ஊருக்கு
அழிவு’, ‘சாதிக் கேடு’ என்று கருதி சமூகம் சகித்துக் கொள்ளவேண்டிய அவசியமில்லை.
’காதல்’
உறவில் ஏற்படும் பாலுணர்வு வேட்கை எவ்வாறு கையாளப்படுகிறது
என்று பார்க்கையில் பெரும்பாலும் அதற்கு வடிகால் தேடி ‘காதலர்கள்’ தங்கள் வசதிக்கேற்ப
இடங்களை நாடிச் செல்கின்றனர். ‘புனிதமாக’ துவங்கும் காதலில் சில நாட்களிலேயே உடல் தேவைகள்
ஊடுருவிடுவதை ‘புனிதவான்கள்’ எப்படி பகுப்பாராய்கின்றனர். அதற்கு மத ரீதியான கட்டுப்பாடுகளை
‘அகம்’ ‘புறம்’ என்று பேசி பூசி மெழுகுகின்றனரே ஒழிய அதை இயல்பூக்க
அடிப்படையில் பகுத்தாராய்வதில்லை. மனதை
அடக்கியாள்வதைப் பற்றிய பிதற்றல்கள் நடைமுறையில் எத்தகைய பயனையும் அளிப்பதில்லை மாறாக
மன உளைச்சல்களையே அதிகரிக்கிறது. இயல்பூக்கம் என்று புரிந்து கொண்டு ஒவ்வொரு பெற்றோரும் அவர்கள் பிள்ளைகளுக்கு
அத்தகைய உணர்வுகளுக்கு வடிகால் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதல்ல வாதம், ஆனால் குறைந்தபட்சம்
அத்தகைய உணர்வுகள் இயற்கையான ஒன்று என்று விளக்கும் பொழுது தனக்கு ஏற்படும் பரவச உணர்வை
கையாளவும், அப்பரவசம் கிட்டாத போது மனமுடைவதற்கு ஒன்றுமில்லை என்பதை புரிந்து கொள்ள
உதவும். ‘புனிதக் கேடு, கற்புக் கேடு’ என்று எதுவுமில்லை என்ற புரிதல் எழும்போது ஆண்,
பெண் உறவு இன்னும் ஆரோக்கியமாக வளரும் வாய்ப்பிருக்கிறது. தோழமையோடு பழகும் இருவர்
தங்களை சமூகத்தின் பார்வைக்காக ‘காதலர்கள்’ என்று அறிவித்துக் கொள்வதும், உடைமைப் பொருளாக
ஒருவரை ஒருவர் கருதிக் கொள்வதும் நேராமல் தவிர்க்கலாம். பாலியல் கல்வி மூலம் ‘சுய இன்பம்’
பற்றிய குற்ற உணர்வு போக்கப்பட்டுவிட்டால் பாலியல் தேவைக்காக எதிர்பாலை சுரண்டும், ஏமாற்றும் போக்கு குறையலாம். மேலும் குழந்தைகள், பெண்கள் வன்புணர்வு, உடல் சிதைப்பு,
கொலை ஆகியவை இந்த குற்றவுணர்வை போக்குவதன் மூலம் குறையலாம். அத்தோடு, ஒரு முதிர்ச்சியான
மனநிலையில் தனக்குப் பொருத்தமான வாழ்க்கைத் துணையை தேடும் நிதானமும் கிட்டும்.
பெற்றோரும், சமூகமும் ‘இராணுவ அதிகாரிகளாக’ செயல்படுவது
ஒரு எல்லை என்றால் ’சுதந்திரம்’ என்ற பெயரில் எல்லாவற்றையும் கேள்வியின்றி அனுமதிக்கும்
மனநிலை மற்றொருபுறம். கேள்வியின்றி அனுமதிக்கும் ‘சுதந்திர’ உறவைக் காட்டிலும் கேள்வி
கேட்டாலும் அதன் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளும் உறவே இன்று அவசியமாகிறது. அது
முற்றிலும் வெளிப்படைத்தனமையை அறிவுபூர்வமாக அனுமதிக்கும் உறவாக இருப்பது பயனளிக்கும்.
இது பெற்றோர் பிள்ளை உறவுகளில் மட்டுமின்றி, சமூகத்தின் எல்லா வகை உறவுகளுக்கும் பொருந்தும்.
சமூகமே காமம் என்ற உணர்வை கட்டுப்படுத்த வேண்டிய ஒன்றாக பார்ப்பதில் இருந்து ‘கையாளப்
படவேண்டிய’ உணர்வாக பார்ப்பது அவசியம்.
எவ்வகையில்
உயிரியற்கை செயல்பாடுகள் ஆபாசம் எனப்படுகிறது. எவருக்கு அது ஆபாசம். நாய்களைப் போல்
நடந்து கொள்கின்றனர் என்று சொல்லப்படுகிறது.
நாய்களை நாம் கண்காணிப்பது நாய்களுக்குத் தெரியாது, அது அதைப் பற்றி அவைக் கவலைப்படுவதும்
இல்லை. ஒரு அறிவு கூட இருப்பதால் பகுத்தாராய வேண்டும், பண்புடன் நடந்து கொள்ள வேண்டும்
என்போர் இந்த பகுத்தாராயும் திறனை பெரும்பாலும் உடலுறவு, பெண்
நடத்தை சார்ந்த விசயங்களுக்குப் பொருத்திப் பார்ப்பதோடு நிறுத்திவிடுகின்றனர்.
தனிச்சொத்து பேணுதல், பொருள் சேர்ப்பதற்காக செய்து கொள்ளும் சமரசம், சமூகத்தில் நிலவும்
படிநிலை பாகுபாடு, சாதிய பாகுபாடு, லஞ்ச லாவண்யம், சர்வாதிகாரப் போக்கு ஆகியவற்றில்
எத்தகைய பண்பையும், பகுத்தறிதலையும் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக ‘உடலை’ விற்பனைப்
பொருளாக பயன்படுத்தும் திரைத் துறை, ஊடகத் துறையினருக்கு ஏன் அத்தகைய ‘பண்பு’ பொருந்துவதில்லை.
முறையற்ற உடலுறவு ‘புனிதக் கேடு’ என்போர் முறையுடன் உறவு கொள்ளும் முறையை ஏற்படுத்திக்
கொள்வதற்கு முன்னர் இருந்த சமூக அமைப்பை அறிந்திருக்கவில்லையோ எனும் ஐயம் ஏற்படுகிறது.
ஒரு
கடவுள் கோட்பாட்டிற்கும், தந்தை வழிச் சமூகத்திற்கும் மாறும் காலகட்டத்திலிருந்துதான்
’உறவு’ பற்றிய பல்வேறு வகையான சமூக கருத்தாக்க மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஒருவகையில்
ஒடுக்குமுறை மாற்றங்கள் என்று சொல்லலாம். ஆடையின்
தோற்றம் நிர்வானத்தை ஆபாசமாக்கியது போல், தந்தைக் கடவுள் கோட்பாடு உயிரியர்க்கை உணர்வுகளை
ஆபாசம் என்கிறது. அவ்வளவே. காலத்திற்கேற்ப
ஏற்படுத்திக் கொள்ளும் சமூக முறைமைகள் ஒரு வசதிக்காகவேயன்றி அதுவே காலம் முழுமைக்குமான
சட்டமாகி விடமுடியாது. மேலும் அப்படி அமைக்கப்படும் முறைமைகள் குறித்தான குறை நிறைகளை
உரையாடலுக்கு உட்படுத்துவது தர்க்கபூர்வமான அனுகுமுறையாகக் கருதாமல் ‘புனிதக் கேடு’,
‘சீர் கேடு’ எனக் கருதுவது ஆணாதிக்க மதக் கருத்தாக்கத்தில் ஊறிப் போனதன் விளைவு.
காதலின்
வரலாற்றோடு காதல் எனும் உணர்வில் வேதியலின் செயல் மற்றும் உடற்கூறியல் ஆகியவற்றை
டயன் அக்கர்மென் விளக்குகிறார். காதல்
இயற்கையானது, மனவெழுச்சி தரக்கூடியது என்கிறார். அப்படி இயற்கையான காதலுணர்வு
மூளையின் ஒரு பகுதியில் ஏற்படும் காயத்தினால் வேதியல் மாற்றத்திற்கு ஆளாவதைக்
குறிப்பிடுவதோடு, பொருளாதாரச் செழுமை அல்லது இன்மை எப்படி காதல் உணர்வில் தாக்கம்
செலுத்துகிறது என்றும் விளக்குகிறார். ஜான் எனும் 35 வயது நபருக்கு மூளையில்
தீங்கு விளைவிக்கும் கட்டி அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்படுகிறது. அதற்குப் பிறகு
அவருடைய ஆளுமைப் பண்பு முற்றிலும் மாறிவிடுகிறது.
மீண்டும் அவரைப் பரிசோதித்துப் பார்த்ததில் அவருடைய மூளையின் மேற்புறப்
பகுதியில் முன்புறம் உள்ள சாம்பல் நிறப் பகுதி சிதைந்திருப்பதை கண்டறிந்தனர். அது ஒரு மனவெழுச்சித் தொழிற்சாலையாக
இருந்திருக்கவேண்டும். மனவெழுச்சி
கொடுக்ககூடிய பாலியல் சார்ந்த ஸ்லைடுகள், வன்முறை நிகழ்வுகள், இதர நிகழ்வுகள் என
எவற்றுக்கும் ஜான் எவ்வித சைகையையும் வெளிப்படுத்தவில்லை. பூந்தோட்டமும்,
கொலைக்களமும் அவருக்கு ஒன்றுபோல் தோன்றியிருக்கிறது. மனிதத்தன்மையற்று போனார். அதாவது
மனிதத்தன்மையுடன் இருப்பது என்பது மனவெழுச்சியுடன் இருப்பதாகும், ஒழுங்காக காதல்
உள்ளிட்ட பல வகையான மனவெழுச்சிகளால் தாக்கப்படும் ஒரு உடலைப் பெற்றிருப்பது என்பதாகும்.
மற்றொரு
உதாரணத்தில் அவர் ஆப்பிரிக்க ஈக் இன மக்களைப் பற்றிய டெர்ன்புல்லின் கள ஆய்வுத்
தகவல்களைக் கொண்டு பொருளாதார சூழல் மனிதர்களில் காதல் உணர்வை, நற்பண்புகளை பறித்துக்
கொண்டுவிடுகிறது என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். எல்லாப் பழங்குடி இனத்தவரைப் போல்
களித்து வாழ்ந்திருந்த ஈக் இன மக்களின் மனங்கள் காதல் உணர்வை இழந்து நின்ற காலம்
உருவெடுத்திருந்தது. உகாண்டா அரசு அவர்கள் வேட்டையாடிய ஒரு பகுதியில்
வேட்டையாடுவதற்கு தடை விதித்த பின்னர் அம்மகளுடைய பொருளாதார நிலைமை
சிதைவுறுகிறது. மூன்று தலைமுறைகள் கடும்
வறட்சிக்கும், பட்டினிக்கும் பிறகு ஈக் இனத்தவர்கள் எதிர்ப்பு மனப்பான்மை
உள்ளவர்களாகவும், சுய நலமுள்ளவர்களாகவும், அற்பத்தனம் உள்ளவர்களாகவும் ஆனார்கள்
என்கிறார். மேலும், “அவர்கள் காதலையும் (*இங்கு காதல் எனப்படுவது உடலுறவு கொள்வதைக்
குறிக்கிறது), மற்ற நற்பண்பியல்களுடன் தொலைத்து விட்டனர். ஏனெனில் அதை அவர்கள் வழங்க இயலாத நிலையில்
இருந்தனர். அது பொருளாதாரம் சார்ந்ததாக
இருந்தது. அவர்கள் விழித்திருக்கும் ஒவ்வொரு விநாடியையும் அவர்களது கழிவறையில்
உட்கார்ந்து கொண்டும், பாலியில் உறவு கொண்டும் (மிகவும் அரிதான செய்கை) உணவுக்கு
வானத்தை உற்றுநோக்கிக் கொண்டும் செலவிட்டனர்”.
ஒருவருக்கொருவர் கைமைதுனம் செய்துகொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் கூட அதில்
முழுமுற்றான இன்பத்தை பெறமுடியாமல் இருப்பதை கண்ட அவர் சொல்வது “அவர்கள் உணவு
கிடைக்க அடையாளங்கள் உள்ளனவா என்று வேறு வேறு திசையைப் பார்த்துக் கொண்டிருந்தனர்”
என்கிறார்.
மேற்கூறிய
உதாரணங்களில் ஒன்று புறச் சூழலால் நிகழ்ந்த விளைவு, மற்றொன்று நரம்பு மண்டலத்தில் ஏற்பட்ட காயத்தினால் வந்த விளைவு. இதோடு
ஊட்டச்சத்துக் குறைவும் மூளை வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சத்துக்
குறைபாடுள்ளவர்களுக்கு காதல் உணர்வு எத்தகைய மனவெழுச்சியை ஏற்படுத்தும் என்பது இங்கு
கேள்விக்குறியதாய் இருக்கிறது. சோமாலிய மக்களுக்கு காதலை அனுபவிக்கும் அகச்
சூழலும் இல்லை, புறச் சூழலும் இல்லை என்பதை நாம் நினைவு கூறலாம். “ஒரு
பழங்குடி இனத்தவரிடையே காதல் இவ்வளவு சீக்கிரம் அழிந்து போகும் என்றால் அது
அத்தியாவசியமானது அல்ல” என்கிறார் அக்கர்மென். இச்சூழலில் புனிதத்தன்மை
கேள்விக்குள்ளாகிறது. “பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்ற ஔவையார் கூற்று இங்கு
ஆராயத்தக்கது. இந்தியாவில் இந்த புனிதப் பித்து சகித்துக் கொள்ள முடியாத நிலையை
எட்டியதில் சாதியத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது. பசு மூத்திரத்தைக் கூட புனிதம்
என்று சொல்லி நம்மை அருந்தச் செய்யும் திறன் மிக்க ‘புரோகிதர்கள்’ நம்மிடையே
இருக்கின்றனர்.
“காதல்
என்பதும் பரிணாம வளர்ச்சியின் ஓர் அங்கமே. காதல் உணர்வு (மனவெழுச்சி) மேலெழும்போது
உயிர் மறு-உற்பத்திக்கான அடித்தளமாய் உடலுறவுக்கான இச்சை தூண்டப்படுகிறது.
சந்ததிகள் பெருகுவதை உணர்ந்த ஆதிகால மனிதர்கள் அதை ஓர் உயிரியல் கட்டளையாக
உணர்திருக்கின்றனர். ”அந்த
வழித்தோன்றல்கள் காதலிக்கும் ஆற்றலை மரபு வழியில்
பெறுகிறார்கள். காலப்போக்கில்
காதலிக்கும் எண்ணம் நம்முடைய மரபணுத்திரள் அமைப்பு முறையின் ஒரு பாகமாகிவிடுகிறது.
அதன் பிறகு அது எண்ணம், நாட்டம் அல்லது வெகுமதி என்ற அளவில் இல்லாமல் மிகவும்
ஆழமாகப் பதிக்கப்பட்டு, வாழ்க்கையில் நம்முடைய ஒவ்வொரு முயற்சிக்கும்
துணைபுரிவதாய் அமைகிறது. மனிதர்கள் மனவெழுச்சியுடன் துணிகர முயற்சிகளை
மேற்கொள்ளும் முதலாளிகளாக ஆகிறார்கள்” எனும் அக்கர்மென் மேலும் சொல்வது தனக்கு
பிடித்தமான ஒருவரை காணும்போது இதயத்துடிப்பு அதிகரிக்கிறது என்றும் அதனால் தான்
இதயத்தை காதலின் இடமாக கருதத்தோன்றுகிறது என்றும் கூறுகிறார்.
காமம்
என்பது இழிவான ஒன்றாக பார்க்கப்படுகிறது, அதே வேளை காதல் இதயத்தில் இருப்பதாக
கருதப்படுகிறது. வேடிக்கை என்னவென்றால் இரண்டும் ஒரே உடலின் மூலமே உணரப்படுகிறது. “மனம் மூளையை மட்டும் இடமாகக்
கொண்டிருக்கவில்லை, அது உடலெங்கும் முடிவில்லாத நாளமில்லா சுரப்பிகள், நொதியங்கள்
கொண்ட குழுவுடன் பயணிக்கிறது. இதயத்தை அறுவை சிகிச்சை செய்துப் பார்த்தால் காதல்
எங்கிருக்கிறது என்பதற்கான தடயம் ஏதும் இருப்பதில்லை”. (அக்கர்மென்)
காதலில்
எழுவதும் மனவெழுச்சிதான், காமத்தில் ஏற்படுவதும் மனவெழுச்சிதான். இவ்வுச்சம் (Orgasm) சிலருக்கு பிடித்த உணவை சாப்பிட்டவுடன் ஏற்படுகிறது, சிலருக்கு
பிடித்த இசையைக் கேட்டவுடன் ஏற்படுகிறது. தொலைபேசியில் எப்பொழுதும்
பேசிக்கொண்டிருப்பதில் என்று பல்வேறு நிலையில் உச்சத்தை ஒருவர் அடையக்கூடும். இவையெல்லாம் புறசுழலின் உதவியோடு ஒரு உடலில்
ஏற்படும் மனவெழுச்சி. இதையெல்லாம் ஆபாசம் என்று கருதாத சமூகம் உடலுறவு
கொள்ளும்பொழுது அங்கு இரு உடல்கள் உறவு கொள்வதை ஆபாசம் என்கிறது. சாதீய (இனக்)
கலப்பு நேர்ந்து விடக்கூடாது, சொத்து கை மாறிவிடக்கூடாது என்பதன்றி இதற்கு வலு
சேர்க்கும் காரணம் எதுவுமில்லை.
சுரண்டல்வாத
அதிகார மையமாக உருவான மதம் எனும் நிறுவனம் சதா சர்வ காலமும் காமத்தைப் புனிதக்
கேடு என்கிறது. அந்நிறுவனமானது முதலாளி வர்க்கத்திற்கும், (முன்னர்
நிலப்பிரபுத்துவ வர்க்கத்திற்கு) அரசுக்கும், மக்களுக்கும் இணக்கம் காண முடியாத
ஏற்பாடுகளை செவ்வனே செய்கிறது. இம்மூன்று அதிகார வர்க்கத்தினருக்கும்
உழைப்பதற்கும், விசுவாசத்திற்கும் மனித உடல் தேவைப்படுகிறது, அது அவர்கள் கட்டுப்பாட்டில்
இருக்கும் வரை மட்டுமே அவர்கள் அதிகார வர்க்கமாய் இருக்க முடியும் என்பதை அறிந்து
வைத்திருக்கின்றனர். அதை உழைக்கும் மக்கள் அறிந்து கொள்ள முடியாத வகையில் அவர்கள்
அறிவு நிலைகள் மழுங்கடிக்கப்படுகின்றது.
எதுவும் பலிக்கவில்லையென்றால்
துறவு எனும் ஆயுதத்தைக் கையில் எடுக்கின்றனர். ’துறவை’ புனிதமாக எவ்வளவு பேசினாலும்,
அத்தகைய துறவை மேற்கொள்ளும் உடல், உடல் உறவிலிருந்துதான் பிறந்தது என்பதை மறுக்க முடியுமா.
குழந்தையாக இருக்கும் போது ஆராதிக்கப்படும் உடலானது, பருவ வயதெட்டியவுடன், பொருள் ஈட்டும்
வயது வந்தவுடன் பல்முனை தாக்குதல்களுக்கு உள்ளாகிறது. அந்த உடலைக் குறிவைத்து பலரும்
தங்களது கருத்தாக்க அம்புகளைத் தொடுக்கின்றனர். ஒவ்வொரு உடலும் சமூக உற்பத்தித் தேவையின்
மூலதனம் என்பதே இதற்கு காரணம்.
தாய் வழிச் சமூக மரபில்,
உலகயாத மரபில் துறவு எனும் கருத்தாக்கம் இருந்திருக்கிறதா என்பது
கேள்வியாக இருக்கிறது. தந்தைக் கடவுள் கோட்பாடு வந்த பின்னரே இக்கருத்து தோன்றியிருப்பதாகத் தெரிகிறது. பெண்களின் பல்முனைத் திறனால்,
மறு-உற்பத்தி திறனால் பொறாமை கொண்ட ஆண் சமூகமானது தாழ்வு மனப்பான்மையிலிருந்து தங்களை
மீட்டுக்கொள்ளவும், பெண்களிடமிருந்த அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்ளவும், சமூகத்தில்
தங்களது அதிகாரங்களை நிலை நிறுத்திக் கொள்ளவுமாக ‘துறவை’ தோற்றுவித்திருக்கிறது என்பதை
வரலாறு நமக்கு உணர்த்துகிறது. இது இரு பலன்களை அவர்களுக்கு கொடுத்தது. ஒன்று பெண்களின்
மீது ஆண்களுக்கான கட்டுப்பாடில்லாத அதிகாரம். மற்றொன்று சமூகத்தின் மீதான அதிகாரம்.
பெண்களின் மீதான அதிகாரம் அவர்களின் மறு-உற்பத்தி சக்தி, அத்தோடு தொடர்புடைய உழைப்புச்
சக்தியைக் கட்டுக்குள் வைப்பதாக அமைகிறது. மற்றொன்று சமூகத்தின் மீது அதிகாரம் செய்யும்
பலத்தை அவர்களுக்களித்தது.
ஒரு
குழந்தை ஆரோக்கியமாக வளர்வதற்கு தொடுதல், கட்டியணைத்தல், முத்தமிடுதல் அவசியம்
என்று ஆய்வுகள் சொல்கின்றன, அது ஒரு பாதுகாப்புணர்வை தரக்கூடியது, அதனால் குழந்தை
மகிழ்ச்சியுடன் வளர்கிறது, அத்தகைய தொடுதல் இன்றி வளரும் குழந்தைகள் பல்வேறு
குறைபாடுகளுடன் வளர்கிறது. எலிகள், குரங்குகள் மற்றும் மனிதர்களிடம் நடத்திய
ஆய்வில் தடவிக் கொடுக்கப்பட்டு காதலிக்கப்பட்டவை இயற்கையான வளர்ச்சியைப்
பெறுகின்றன அல்லாதவை முடக்கப்பட்டவர்களாக இருக்கின்றன என்று அக்கர்மென்
குறிப்பிடுகிறார்.
விலங்குகளும்
தங்களுக்குள் ஈர்ப்பு கொள்வதை காமம் என்று விளிக்கும் மனிதச் சொற்கள், மனிதனின்
ஈர்ப்பை காதல் என்கிறது. மனிதர்கள் தாங்கள் செய்யும் செயல்கள் தெய்வீகத் தன்மை,
புனிதத் தன்மை நிறைந்ததாக கற்பனை செய்துகொள்வதன் மூலம் தான் மற்றவர்களிடமிருந்து
வேறுபட்டு இருப்பதாக கருதிக்கொள்ள போராடுகின்றனர். இது இருப்பு சார் பிரச்சனை, அந்த
அடையாளச் சிக்கலிலிருந்தே அறிவின் வீழ்ச்சி துவங்குகிறது. இந்த அடையாளச் சிக்கலைப் பூர்த்தி செய்ய அதிகார
வர்க்கம் பல்வேறு சிந்தனைகளை உட்புகுத்துகிறது. அதில் முதன்மை பெறுவதே காதலும்,
காமமும்.
காதலின்
வேதியல்தன்மையில் பங்களிக்கும் சில சுரபிகள் பற்றி இப்போது காண்போம். துத்தநாகம் ஒருவகையான பாலுணர்வூக்கி எனக்
கண்டறியப்பட்டிருக்கிறது அதேபோல் ஜின் செங். துத்தநாக குறைபாட்டால், குறைவான
விந்தணுவின் எண்ணிக்கை குறைபாடு ஏற்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் பார்ப்பனர்கள்
‘மடி, ஆச்சாரம், பத்து’ என்று வெறுத்து ஒதுக்கும் வெங்காயத்திலும், பூண்டிலும்
அதிக பாலுணர்வூக்கிகள் இருக்கிறது.
“சுவிப்ட்ஸ்’
எனப்படும் பறவை உணவு, யுனாகி என்னும் விலாங்கு மீன், சாக்லேட்ட்கள்,
வாசனைப்பொருட்கள், இசை, எக்ஸ்ப்ரஸோ காபி, ஒட்டகத்தின் பால், ஆண்குறி வடிவிலான
பழங்கள், தண்ணீர் விட்டான் கொடி, கறுப்பு அவரை, ஆர்ட்டிசோக்ஸ் எனப்படும் முள்
நிறைந்த தண்டுச் செடி, முதலையின் விந்து இப்படி எண்ணற்ற பொருள்கள்
பாலுணர்வூக்கிகளாக கண்டறியப்பட்டிருக்கிறது. காதலுக்கு மிக நெருக்கமான ஒன்று
‘சாக்லேட்’, சாக்லேட்டுகள், மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டும் மென்மையான, நாம்
காதல் வயப்பட்டிருக்கும்போது உடல் இயற்கையாக உற்பத்தி செய்யும் “ஆம்பிட்டமைன்”
போன்ற மருந்துப் பொருள்களைக் கொண்டிருக்கின்றன. மோண்ட்சுமா என்னும் அரசன் அறுநூறு
பெண்களைக் கொண்ட அவனது அந்தப்புரத்திற்குப் போவதற்கு முன், அவனுடைய வீரியத்தை
அதிகப்படுத்திக் கொள்வதற்காக ஐம்பது கோப்பைகள் சாக்லேட்டை அருந்தினான் என்று ஒரு
தகவலைப் பகிர்கிறார் அக்கர்மென். பெண்களுக்கான ஒரு விருப்புப் பொருளாய் சாக்க்லேட்
சந்தைப்படுத்தப்படுவதன் காரணத்தை தொடர்ப்புபடுத்திப் பார்ப்போமானால் ஒரு பெண்ணை
காதல் வயப்படுத்த, அல்லது உறவு கொள்ளும் மனவெழுச்சியை தூண்ட அது வசிய மருந்து போல் செயல்படுகிறது என்றால் அது
மிகையல்ல.
ஆர்வமூட்டும்
மற்றொரு தகவலையும் அவர் பகிர்கிறார் “பாலுணர்வு தூண்டும் பொருள் வளர்ப்போர் இருவார
இதழில்” (The Aphrodisiac Growers Quarterly) வந்த கட்டுரையொன்றில் இலக்கியங்களில் ஐநூறுக்கும் மேற்பட்ட வன்புணர்வுக்
காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு, அவற்றில் 98 விழுக்காடு அவை நிகழ்வதற்கு முன்னல்
பாலுணர்வினைத் தூண்டும் உணவுகளை உண்டிருப்பதாகக் கண்டறியப்பட்டிருக்கிறது.
“இரண்டு
தனிஆளுமைத் திறன் வாய்ந்த நபர்கள் சந்திப்பது இரண்டு வேதியல் பொருள்கள் தொடர்பு
கொள்வது போன்றது” என்று காரல் யுங் கூறியுள்ளார். இரண்டு நபர்கள் ஒருவருக்கொருவர்
கவர்ச்சியாக இருக்கக்கண்டால், அவர்களுடைய உடல்கள் திடீரென வழியும் PEA
(பினிலெத்தாலமைன்) என்னும் நரம்பு திசுக்களுக்கிடையே செய்தியனுப்பும் நுண்துகள்களால் நடுங்குகின்றன.
ஆம்பிட்டாமைன் போன்ற ஒரு வேதியல் பொருளான பினிலெத்தாலமைன் மூளையை சொடுக்கி மயக்கமான ஒரு ஆர்வ நிலைக்கு உட்படுத்துவதால்,
காதலர்கள் ஒரு நல்ல நிலையை உணரவும், புத்துணர்ச்சி பெறவும், நம்பிக்கை
உள்ளவர்களாகவும், சக்தியூட்டப்பட்டவர்களாகவும், இரவு முழுவதும் உட்கார்ந்து
பேசிக்கொண்டிருப்பதில் மகிழ்ச்சியும் அல்லது முடிவில்லாது பல மணி நேரங்கள் காதல்
உறவில் ஈடுபடுபவர்களாகவும் இருக்கிறார்கள். ஏனெனில் உடலின் இயல்பான வேகமும்கூட
அதற்கு அடிமையாக்கக்கூடிய ஒரு பழக்கமாக இருக்கிறது. (மருத்துவர் ஷாலினி)
சிலவேளைகளில்
வேதியல் பசியால் தூண்டப்பட்டு மனித மனம் பொருத்தமில்லாத துணைவர்களைத் தேர்ந்தெடுக்கும்
நிலைக்கு ஆளாகிறது. அதைத் தொடரும் ஏமாற்றமானது உறவு முறிவுக்கு இட்டுச் செல்கிறது.
ஆனால் அதை எதிர்கொள்ளத் தெரியாமல் காதல் பற்றிய புனித வசனங்களை திரைப்படங்களின்
பாதிப்பினால், சமூக நெருக்கடியால் பேசிக்கொண்டு ஒருவரை ஒருவர் அழிக்கும் செயலுக்கோ
அல்லது சுய அழிப்புக்கோ செல்லும் நிலை ஏற்படுகிறது. முதல் ஈர்ப்பு எனும் கவர்ச்சி பதின்பருவ
வயதிலேயே ஏற்பட்டுவிடுகிறது, அது தன் ஆளுமை பற்றிய ஒரு மாயையில் உழல உதவுகிறது. ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ள நிறைய
செய்திகள், அனுபவங்கள் இருக்கையில் அருகாமை என்பது ஒரு ஆர்வமூட்டும் உணர்வை
ஏற்படுத்துகிறது (இங்கு எண்டார்பின் எனும் சுரபி வேலை செய்கிறது), அதைத் தொடர்ந்து
ஒரு நம்பிக்கை வளர்ந்து தனது பிற்பகுதி வாழ்க்கைக்கான துணையாக அவரைக் கருதும்
உணர்வு மேலோங்குகிறது. அதன் பிறகு அதற்கேயுறிய சோதனை முயற்சிகள், உறவின் மீது
கட்டளைகள் என்று வளர்கிறது. நடைமுறையில் சில நடவடிக்கைகள் நெருடல்களை
ஏற்படுத்தும்போது அது தன் ஆளுமைக்கான வீழ்ச்சியாக கருதப்படுகிறதே ஒழிய இரண்டு
உயிர்கள், இரண்டு அனுபவங்கள், இரண்டு சிந்தனை சக்திகள் ஏதோ சில காரணங்களால்
இணையமுடியாத நிலையாக கருதப்படுவதில்லை.
மாயாவாத புனித கதையாடல்கள், தன்முனைப்பாற்றல்கள் குறுக்கிட்டுவிடுகின்றன. (எப்படிப்பட்ட வேதியல் பசி இருப்பினும்
மூளையானது தனக்கான உடல் தேர்வில் கவனத்துடன் இருக்கிறது. கருப்பு உடல்கள்,
‘அழகற்றது’ என்று சொல்லபப்டும் குறியீட்டின் கீழ் வரும் உடல்கள், ஏழையின் உடல்கள்,
மாற்றுச் சாதி உடல்கள் இவற்றுக்கு சமூகத்தில் கிடைக்கும் வரவேற்பு எத்தகையது. )
ஒரு
காதல் உறவு முறிந்து மற்றொரு காதல் உறவு துவங்குவதும் இத்தகைய வேதியல் சுழற்சியே.
இழந்த பரவசங்களை, மனவெழுச்சிகளை கண்டடையும் வேட்கை. அதைத் தேடி
செல்லவில்லையென்றாலும், அத்தகைய ஒரு நபரை காணும்போது இயல்பூக்கமாக அது
அமைந்துவிடுகிறது. மனவெழுச்சி சார்ந்த இவ்வுணர்வில், ஒவ்வொருவரும் வாழ்க்கை
முழுவதற்குமான ஒரு பிணைப்பினை ஏற்படுத்திக் கொள்ள, உண்மையான ஒரு காதலைத் தொடர்ந்து
தேடிக்கொண்டு இருக்கிறார்கள். காதலில்
ஈடுபடும் இருவரும் ஒருவரை ஒருவர் உடமையாக்கிக் கொள்ள முயல்கிறார்களே ஒழிய
தோழமையோடு சம உரிமைகளை பகிர்ந்து கொள்வதில்லை. காதல் என்று சொன்னாலும் அங்கும் செயல்படுவது
குடும்ப உறவின் கணவன் மனைவி தாக்கமே. ஆண் மேலானவன், பொருளீட்டி பென்ணை பராமரிப்பவன்
எனும் அதிகாரப்போக்கே காதல் உறவிலும் செயல்படுகிறது. ஆண்களும் பெண்களும் ஒரே வாக்கியத்தைப்
பேசும்போதுகூட, அவர்கள் முற்றிலும் வேறுபட்ட பொருளை அதன் மூலம்
குறிப்பிடுகிறார்கள் என்று டிபோரா டேனன் “நீ புரிந்து கொள்ளவில்லை” (You
Just Don’t Understand) என்ற தனது நூலில் கேளிக்கையாக
கூறியிருப்பதாக மேற்கோள் காட்டுகிறார் டயன் அக்கர்மென்.
சுருக்கமாக
சொல்வதானால் காதல் என்பது தனியே தோன்றும் ஒரு உணர்ச்சியல்ல. அது ஒரு வகையான
இயல்பூக்கம் சார்ந்த உயிரியல் கட்டளை என்ற அறிவியல் பூர்வ அனுகுமுறை உறவுகளை
கையாள்வதில் அவசியமாகிறது. ஊடகங்கள்,
திரைப்படங்கள், விளம்பரங்கள் எடுத்துரைக்கும் ‘காதல் மாயை’யிலிருந்து விடுபட்டு
நமக்கான உணர்வை, உறவுத் தேடலில் நமக்கான விதிமுறைகளை நம் சொந்த அனுபவத்திலிருந்து
வகுத்துக்கொள்வதன் மூலம் உறவுகளை செழுமைப் படுத்திக் கொள்ள முடியும்.
இங்கு
ஒரு விசயத்தை அழுத்தம் கொடுத்து சொல்ல வேண்டியுள்ளது. இப்போது நாம் துய்க்கும்
காதலானது, நுகர்வுக் காதல். இலக்கியம்,
முதலாளிகள், திரைப்படங்கள், வெகுஜன ஊடகங்கள், இவைகள் கற்றுக் கொடுக்கும் காதலை
சுரணையற்ற பண்டங்களாக அப்படியே ஏற்றுக் கொள்கிறோம். ஒரு பெண்ணை எங்கு தொட வேண்டும்,
என்ன வார்த்தைகளைச் சொல்லிக் கவர வேண்டும், என்ன பரிசுப் பொருள் கொடுக்க வேண்டும்,
எப்படி உடல் உறவை தொடங்க வேண்டும் என்று எல்லாவற்றையும் சொல்லிக் கொடுக்கிறார்கள்.
சுதந்திரம்
எனும் சொல்லை கொச்சை சொல்லாக, பொறுப்பற்ற செயல்பாடுகளாக மாற்றுவதில் இந்த ஆணாதிக்க
அதிகார மையங்கள் வெற்றி பெற்றுள்ளன. இன்னும் சொல்லப் போனால் ஒவ்வொரு பெண் உடல் மீதும் கட்டுப்பாடு
செலுத்துவது, அவளை நுகர்வது அவளது காதலரோ, கணவரோ அல்ல முதலாளிகள், ஊடகங்கள்.
நன்றி: குறளி
நன்றி: குறளி
Wonderful!
ReplyDeleteஅருமை ..ஆனால் ’எதுவும் பலிக்கவில்லையென்றால் துறவு’ ஏற்புடையதா? புத்தர் அப்படியா குடும்பத்தை துறந்தார்? பெண்களும் துறந்திருக்கிறார்களே?
ReplyDeletePadikumbothu Marx ezhuthuna maathiri irukenu ninacha apuram tha unga profile paatha Marx vazhi pen nu....super sister valimaiyana varthaigal,thelivana paarvai.....fb la ungala yeppaum follow pannum nalla ezhuthin rasigan.....
ReplyDeleteவிஜயராகவன், அது அப்படியில்லை, உடல் மீது அதிகாரம் செலுத்த மதவாதிகள் துறவை ஓர் ஆயுதமாக, ஒரு கருத்தியலாக முன் வைக்கிறார்கள் எனும் பார்வையிலிருந்து சொல்லியிருக்கிறேன்.. புத்தர் ஏன் துறவறம் மேற்கொண்டார், அதை மார்க்சியப் பார்வையில் எப்படி அனுகுவது என்பதற்கும் நிறைய விமர்சனங்கள் உள்ளன... நன்றி
ReplyDelete