May 11, 2013

அவர்களால் வளர்க்கப்பட்ட அந்த மிருகம்




அவர்கள் மிருகங்களை உற்பத்தி
செய்யும் கூடாரங்களை
செவ்வனே நடத்துகிறார்கள்
அவர்களால் வளர்க்கப்பட்ட
அந்த மிருகம்
அவள்
சிறுமியாய் இருக்கும் பொழுது
சோற்று பருக்கைக்கு கணக்கு எழுதியது
அவள்
பருவம் எய்தியவுடன்
தந்தமை உடை துறந்து
எஜமானருடை அணிந்தது

விலா எலும்பும்
வயிற்றுப் பகுதியும்
கன்னங்களும்
நாளும் சிவக்கத் தவறியதேயில்லை

இளமையை முதலீடாக்க பாடம் நடத்திய
அதன் பேராண்மை மிக்க உதடுகள்
எண்ணிக்கையைத் தவிர வேறெதுவும் உச்சரித்ததில்லை

உறக்கத்தை
கனவுகளில் மட்டும் வருமாறு
உத்தரவிட்டாள்
விழித்திருக்கும் வேளைகளில்
உலக வரைபடத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்
எல்லைக் கோடுகளை
அழிக்கும் ஒரு கருவியை செய்யத் தொடங்கினாள்

திருமண வயது நாற்பது
என்று தீர்மானம் இயற்றியதந்த மிருகம்
இருபது வருடங்களுக்கான
தண்டனையை உறுதி செய்துக் கொண்டாள்
அது மரண தண்டனையாகாமல் போனது

நாடோடி வாழ்க்கை
அச்சுறுத்தியபோது
அவள்
பெண்
என்பதை உறுதி செய்து கொண்டாள்

சரணடைய வைத்தது
எதிரொலிக்கும் குரல்கள்

மிருகம்
குறிகள் கொண்ட மிருகங்களாய் மாறி
குழந்தமையை
சிரிப்பை
சுயமரியாதையை
அறிவுநிலையை
காதலை
வாழ்க்கையை
இறுதியில்
ஆம் இறுதியில்
பரித்துக் கொண்டது
அந்தத் தங்கக் கோதுமையை

பூசியங்களுக்கிடையில்
அரைத்து விழுங்கியது
அவளது தாய்மையை


8 comments:

  1. நீங்கள் எழுதி நான் படித்த கவிதைகளில் இந்த கவிதை படித்தவுடன் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் எழுதப்பட்டிருப்பதால் மகிழ்ச்சி :-)
    "உறக்கத்தை
    கனவுகளில் மட்டுமே வருமாறு
    உத்தரவிட்டாள்" --- படிக்கையில் "அட" என்றது மனம் :-)

    ReplyDelete
  2. உங்கள் கவிதைகள் அனைத்தும் சோகத்தின் வெளிப்பாடாகவே அமைகிறது.... ஏன்!?

    ReplyDelete
  3. நன்றி..

    //உங்கள் கவிதைகள் அனைத்தும் சோகத்தின் வெளிப்பாடாகவே அமைகிறது.... ஏன்!?//

    அதை வெல்ல முயன்று கொண்டிருப்பதால் :)

    ReplyDelete
  4. என்ன ஆச்சரியம்... தோழரிடமிருந்து அனைவரும் புரியும்படியாக ஒரு கவிதை... ஏதாவது ஒரே ஒரு நேர்மறை கவிதையை நாங்கள் எதிர்பார்க்கலாமா தோழர்...... ( இதற்கு பதில் என்ன எழுதுவீர்கள் என்று எனக்கு தெரியும் )

    ReplyDelete
  5. சொல்லுங்கள் என் பதிலை நானும் தெரிந்து கொள்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. //ஏதாவது ஒரே ஒரு நேர்மறை கவிதையை நாங்கள் எதிர்பார்க்கலாமா தோழர்// இந்த சமுதாய அமைப்பே எதிர்மறையானதுதானே...யாரிடம் இருக்கிறது நேர்மறை சிந்தனை?? இருந்த போதும் உங்களின் வேண்டுகோள் கவனத்திற்கு உரியதுதான்.உங்களின் தொடர் வாசிப்பிற்கும் கருத்து தெரிவித்தமைக்கும் நன்றி. ( என் மீது கோபம் கொள்ளாதீர்கள் )

      Delete
  6. நீங்கள் க்ளோனிங் கூடம் ஏதேனும் தொடங்கலாம் போலிருக்கிறது :) நன்றி

    ReplyDelete