Jul 17, 2010
கள்ளக்காதலின் கொலையுணர்வு. பாகம் 2
இதில் இருதரப்பும் யோசிக்காது போன கேள்விகள் அல்லது யோசித்தும் அதை நிறைவேற்ற இயலா மனப்போக்கு.
1 கணவன் சரியில்லை என்று ஒரு பெண் நாடிச்செல்லும் ஆண் ஏன் அவளுக்கு அன்பும், தோழமையும் காட்டுவதோடு நிறுத்திக்கொள்ளாமல் காதல் என்ற ஒன்றை முன் வைக்கிறார். அதுவும் பெரும்பாலும் அவர் திருமணமானவராகவே இருப்பது ஏன்? இந்த தோழமை என்ற புரிதலில் உடலுறவு ஏற்பட்டால் அதன் பங்கென்ன?
2 அப்படி ஒரு பெண்ணுக்கு மன ஆறுதல் தரும் ஆண், தன் மனைவி தன்னைப் பிடிக்கவில்லை என்று வேறொரு ஆணை நாட ஏன் அனுமதிப்பதில்லை. (பெண்ணுக்கும் பொருந்தும்)
3 திருமண உறவில் ஏமாற்றங்களுடன் தோழமை நாடி வரும் பெண்ணை அந்த ஆறுதல் தரும் ஆண் ஏன் தன் மனைவிக்கு அறிமுகம் செய்து வைத்து, அந்தப் பெண் மூலம் அவளுக்கு ஆறுதல் பெற்றுத் தருவதில்லை?
4 அல்லது அந்தப் பெண்ணின் கணவனை நேரில் சந்தித்து அவர் மனைவிக்கு அவரைப் பிடிக்கவில்லை, தன்னை விரும்புகிறார் என்று தைரியமாக கூறுவதில்லை?
5 இவையெல்லாவற்றையும் விட செல்போன் என்ற ஒன்றால் விளையும் பாதகங்கள் பல. ஒரு நண்பண் கொடுத்த எண் இது, தவறாக வந்த அழைப்பு என்ற ரீதியில் ஏதேனுமொரு ஆணிடம் பெண்ணிடம் குரல் மூலம் இன்புறும் தன்மை. இல்லறவாழ்வில் ஏற்படும் பிரச்சினைகளை மிகச்சரியாக ஆராயாமல் சோர்வு கொள்ளும் மனத்தோடு தங்கள் கணவரை\மனைவியை பேசும் குரலிலம் அலுப்பு நிறந்த குரலால் தெரிவிப்பது, பதிலுக்கு ஆறுதலாய் இரண்டு வார்த்தைகள் இவை போதும் எனத் தொடங்கி, நேரத்தை பிரச்சினைகளைத் தீர்க்க அணுகாமல் வேறொரு பிரச்சினையை தொடங்க ஆரம்பிக்கின்றனர். இது இப்பொழுது ஆண்பெண் மத்தியில் பரவலாக இருக்கும் மையப் பிரச்சினைகளில் ஒன்று.
6 கணவன் சரியில்லை எனும் பெண் தன்னிடம் பேசும் இன்னொரு ஆணுக்கும் அவனது மனைவிக்கும் உள்ள பிரச்சினைகள் என்னவென்பதை யோசிக்கமல் இருப்பது அதே போல் ஆணும்.
இவை எவற்றையும் யோசிக்காது மன ஆறுதல் என்ற ஒன்றினடியில் ஒளிந்துகொண்டு ஆண் பெண்ணாகிய இருவருக்கும் தேவைப்படுவது சொகுசு நிறைந்த, தொந்தரவற்ற உறவு.
இதில் உளவியலையும் சற்று பொருத்திப்பார்க்க வேண்டியுள்ளது. துணையுடன் உங்களுக்கு கசப்புணர்வு இருக்கிறது என்பதை ஓர் ஆணிடம் பகிர்ந்துக் கொள்ளும் பொழுது அதை அவன் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் ஆபத்தே அதிகம் உள்ளது. அதையும் தாண்டி ஒரு பெண்ணுக்கு ஆறுதல் தறுவதன் மூலம் அவன் மனதில் அவனைப் பற்றிய கதநாயகத் தன்மை அதிகமாகிறது. பிரச்சினைகளைத் உண்மையிலேயே தீர்க்கவேண்டுமெனில் உங்கள் மேல் அவன் அன்பு செலுத்துவானானால் உங்களை வைத்து (தேவைப் பட்டால், உங்கள் குழந்தைகளுடன்) அவன் வாழத் தயாரா என்பதை அறிந்து கொண்டு உங்கள் தேர்வை மேற்கொள்ளலாம். ஏனென்றால் ஆறுதலுக்காக காதல் வளர்க்கும் இதுபோன்ற ஆண்கள் வாழ்க்கையை இணைத்துக்கொள்ள தயாராய் இருப்பதில்லை.
(அவர்கள் குடும்பத்தை நினைத்து).
அதே போன்று அவனுடைய மனைவி குழந்தைகளின் நிலையையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். கற்பு சார்ந்து இக்கூற்றை நான் முன் வைக்கவில்லை. அறம் சார்ந்தே பேசுகிறேன். உங்களுக்கு இருக்கும் தேவையை பயன்படுத்தி உறவை வளர்க்கும் ஓர் ஆண் தன் மனைவியோ அல்லது தன்மகளோ இதுபோல் முறைக்குட்படாத (முறையற்ற என்று நான் சொல்லவில்லை, நான் கூறுவது அவுட் ஒப் சிஸ்டம் எனும் கூற்று) உறவு மேற்கொள்ள அனுமதிப்பதில்லை. தன் மனைவி தனக்கு நேர்மையாக இருக்க வேண்டும் என்று எதிபார்க்கும் கணவர்கள் தங்களுக்கென்று வரும் பொழுது அதை தளர்த்திக்கொள்கிறார்கள்.
கணவன் மனைவி உறவு முறையில் கற்பு எனும் அடிப்படையில் அதை காப்பாற்றுவதோ அல்லது மீறுவதோ, அடிமைத்தனம் அல்லது தனி மனித சுதந்திரம் என்று விவாதிப்பதோ பொருத்தமற்றதாக நான் கருதுகிறேன். இதை ஒழுக்கம், கற்பு, சார்ந்த விஷயமாக பார்ப்பதை விட ஒப்பந்தம் மற்றும் அர்பணிப்பு சார்ந்த விஷயமாக நான் கருதுகிறேன். (agreement & commitment). முறையற்ற அலைவு வாழ்வுக்கு ஒரு முறை ஏற்படுத்திக் கொண்டு ஒருவருக்கொருவர் துணையாக வாழ்வது ஓர் அமைப்பு. இந்த அமைப்பை ஏற்கும் போதே நாம் சில உறுதிகளை எடுத்துக்கொள்கிறோம். அதில் ஒரு முக்கிய உறுதி உனக்காக நான் உண்மையாக வாழ்வேன் என்பதே. அது முடியாதோர் இந்த அமைப்பை தேர்ந்தெடுக்காது வேறுமுறையான தனித்திருக்கும் வாழ்க்கை வாழ தேர்வு (option) உண்டு. அல்லது அந்த உறவிலிருந்து விடுபட்டு பிடித்த வாழ்க்கையை அமைத்துக்கொள்ளலாம்.
அப்படி துணிந்து முடிவெடுத்து ஒரு பெண் வெளியேறிவிட்டால் அவள் சந்திக்கவேண்டிய கலாச்சார சவால்கள் அதிகம். அதைச் சந்திப்பதில் பிழையொன்றும் இல்லை. குற்றவுணர்வோடு வாழ்வதை விட தனது சுதந்திரத்திற்காகப் போராடலாம்.
எப்படி ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் பொழுது அதன் அமைப்புக்கு கட்டுப்பட்டு நடப்போம் என உறுதி மொழி கூறுகிறோம், உடன் பட இயலவில்லை என்றால் விலகி விடுகிறோம், அதை விடுத்து இங்கே சம்பளம் வாங்கிக்கொண்டு கள்ளத்தனமாக வேறொரு நிறுவனத்தில் வேலை செய்வது எவ்வளவு குற்றமோ (அறம் சார்ந்து) அதுபோல் தான் உறுதி எடுத்துக்கொண்ட உறவுகளில் கள்ளத்தனம் செய்வதென்பது.
உடன்படாத திருமண வாழ்வில் விலகிவிடுவதென்பது முறை மேற்கொண்ட ஒரு செயலில் முறையற்ற ஒன்றை நாம் செய்யும்பொழுது அது குற்றவுணர்வை ஏற்படுத்துகிறது . பிறகு மற்றொருவர் அதை வைத்து நம்மை பயன்படுத்திக்கொள்ளவும், பணியவைக்கவும் வழி வகுத்துக்கொடுக்கிறது.
பெங்களூரில், சமீபத்தில் காதலனுடன் சேர்ந்துக் கொண்டு, தனக்கு நிச்சயிக்கப்பட்ட மகனை ஆள் வைத்து கொன்றிருக்கிறார் ஓர் பெண் வக்கீல் என்ற செதியை படித்தேன். பத்திரிக்கைகள் வழக்கம் போல் அதன் பாணியில் எழுதியுள்ளது. ( இதில் உள்ள இன்னொரு வன்முறை கற்பழிக்கப்பட்ட, பாதிக்கப்பட்ட, தவறு செய்கிற பெண் அழகாய் இருந்தால் முழுப்புகைப்படத்துடன் பத்திரிக்கைகள் வெளியிடுகின்றன. இவற்றின் அந்தரங்க நோக்கம் என்னவென்பது நாம் அறிந்ததே.)
உண்மையில் அன்பு சார்ந்து ஏற்பட்ட உறவு, நியாயமான காரணங்களால் என்றால் அதை முறைப்படுத்திக்கொள்வதே சரி. அதுவல்லாத செயல் கயமை, பித்தலாட்டம், அலுப்பிற்கு மாற்றம் என்றே பொருள்.
பெண் சுதந்திரம், பெண்ணடிமைத்தனம் ஒழிப்பு, பெண்கள் முன்ணேற்றம், பெண்ணியம் என்று பெண்களின் உரிமைகளுக்காகவும் விழிப்புணர்வுகளுக்காகவும் போராடிக்கொண்டிருக்கும் இக்காலக்கட்டத்தில் தனக்கு ஒவ்வாத வாழ்வை முறித்துக்கொண்டு பிடித்த வாழ்வை அமைத்துக்கொள்ள எவ்வளவோ வழிமுறைகள் உள்ளன. அதை விடுத்து ஓர் உயிரைக் கொன்று குவிப்பது மன்னிக்க முடியாத குற்றம். இங்கேதான் பெண்களின் அறியாமையை சரியாக பயன்படுத்திக்கொள்கிறார்கள் ஆண்கள். ஆணைச் சார்ந்து வாழ்ந்தாலே ஒரு பெண்ணுக்கு சமூக அந்தஸ்து கிடைக்கும் என்ற நிலையை அவள் மேல் ஏற்றி, உன்னதக் கோட்பாடுகள் என்பனவற்றை எழுதா விதியாக்கி, அழகுணர்ச்சிக்கும், ஆடம்பரத்திற்கும் அவளை அடிமையாக்கி தாய்மை என்ற ஒன்றின் பேரால் அவளை ஆயுள் கைதியாக்கி விடுகிறது ஆண் சமூகம். அதே ஆண் சமூகம் தான், தன் உரிமைகளை சரியாக முன் வைத்து தன் வாழ்க்கையை தானே தீர்மானிக்கும் பெண்ணை விபச்சாரி, அடங்காப்பிடாரி என்ற ஆணாதிக்க அவமானக் கூற்றுகளைக் கூறி பெண்களை அச்சுறுத்தி வைத்திருக்கிறது. அதைப் பொருட்படுத்துவது அவசியமாகப் படவில்லை எனக்கு.
பெண்களே உங்கள் இனம் பற்றி, உங்கள் மீது ஏற்றிவைக்கப்பட்டிருக்கும் பெண் கருத்தாக்கங்கள் பற்றி உன்னதங்கள் பற்றி கற்பதும், பெண்கள் விடுதலைப் போராளிகளின் வாழ்க்கையயும், தத்துவங்களை கற்பதும் ஆண்களின் சதிகளில் நீங்கள் வீழாதிருக்க உஙளுக்கு உதவும். நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவது, அழகுணர்ச்சியை முதலில் தூக்கி எறியுங்கள். நகை ஆசைகளை விட்டொழியுங்கள். உங்களுக்காகத்தான் சம்பாதிக்க ஓடுகிறேன் என்று கூறி உங்களைப் பொருட்படுத்தாத கணவனாயின் அவன் சம்பாதிப்பதை மறுத்துவிடுங்கள். ஏனென்றால் அது உண்மையல்ல. இந்த சமுதாயத்தில் தன்னையும் தன் வாரிசையும் உயர்தரமாக நிறுவிக் கொள்ளவே அவன் ஓடுகிறான். ஆணை தெய்வமாக்கி உங்களை தாழ்த்தி மனநிறைவற்ற வாழ்வு வாழ்ந்து மன உளைச்சல் பெற்று சூழ்நிலைக் கைதியாகி பரிதாப உணர்வை வளர்த்துக்கொண்டு மீண்டும் ஓர் ஆணிடம் சிக்கிக்கொள்ளாதீர்கள்.
பிடிக்கவில்லை என்றால் பிரிவதென்பது சுலபமில்லையே கணவனோ / மனைவியோ விவாகரத்துக் கொடுப்பதில்லையே என்று ஒரு வாதத்தை நீங்கள் முன் வைக்கலாம். அதற்கும் என் பதில் போராடுங்கள், சட்டத்தின் உதவியை நாடுங்கள். பிரிந்து வாழ்வதற்கு யாரும் தடை செய்ய முடியாது. முறையான பத்திரம் கைக்கு வருவது தான் தாமதிக்கும். அதற்கும் சட்டமும், மனித உரிமைக் அமைப்புக்களும் கண்டிப்பாக உதவ இயலும். அதை விடுத்து அவமானங்கள் நேரக்கூடாதென சாமர்த்தியமாக கள்ள உறவு வைத்துக்கொள்வது முற்றிலும் முறையற்ற ஒன்றே.
எல்லா வகையிலும் வாழ்க்கை உங்களை வரவேற்றுக்கொண்டே இருக்கிறது. தேர்வு செய்யுங்கள். அதற்கான உரிமையும் சுதந்திரமும் உங்களுக்கிருக்கிறது.
நல்ல பதிவு. அயர்வும் சோர்வும் உண்டாகிறது. கள்ளக்காதல் வாழும் அல்லது சுயமாய் தன்னை இல்லாமல் ஆக்கிகொள்ளும் அல்லது வேறொன்றை கொல்லும் என்பது சமசீர் சாத்தியப்பாடுகள். அந்தந்த சூழலும் அவர்களின் புரிதலும் இத்தகைய செயல்பாடுகளை தேர்வுக்கு எடுத்துக்கொள்ளும். கொலையோ தற்கொலையோ இங்கு ஒரு வெளியேற்றம் மட்டுமே. என்னைப்பொருத்தவரையில் சூட்சுமம் உடலுறவில் இருக்கிறதாகப் படுகிறது. உடலுறவு இல்லாமல் காதல் இருக்கும். கள்ளக்காதல் இருக்காது. அறிவுத்தேற்றம் பெற்றவர்கள் தனது உரிமைக்காக போராடக்கூடும் கொற்றவை. யோசித்துப்பாருங்கள் அடுத்தவேளை உணவுக்கில்லாதவன் எத்தனைபேர் திருடுகிறார்கள். அவனை திருடவிடாமல் எது தடுக்கிறது. அறமா சட்டமா. என்னைப்பொருத்தவரையில் இரண்டும்தான். அதுபோலத்தான் ஆண்பெண் உறவு தேவைகளும். உடல் தேவைதான் கள்ளக்காதலை தீர்மானிக்கிற பிரதான காரணி. அதற்கு பின்தான் lack of care போன்றவைகள்.
ReplyDeleteநிறைய எழுதுங்கள். நன்றி.
Thanks Maki & Vijay
ReplyDeleteநீங்கள் சொல்வதை வைத்து, கணவனின் அனுமதியோடு மனைவி தனக்குப் பிடித்த வேறு ஆணோடு ' தொடர்பு ' கொள்ளலாம் என்று நாங்கள் அர்த்தப் படுதிக்கொள்ளலாமா ? அப்படித்தான் சொல்லவருகிறீர்கள் என்றால், அது நிச்சயம் தன்னிச்சையாக ஒரு ஐம்பது ஆண்டுகள் கழித்து இந்த சமூகத்தில் நடக்கும். அப்படி நடப்பவர்கள் ' வகைப்படுத்தப் ' படுவார்கள்.
Deleteசெல்போன் பிரச்சனையை குறித்து சொன்னீர்கள். மிகச்சரி !
கொற்றவை, சமீபத்தில் பதினேழு வயது சிறுவனை ' காதலித்த ' அந்த முப்பத்தேழு வயது ஆசிரியை பற்றி என்ன நினைக்கிறீர்கள். அந்த ஆசிரியையின் அறியாமையை அந்த மாணவன் பயன்படுத்திக் கொண்டானா என்ன ? அப்படித்தான் கூறுவீர்கள் போல. உங்கள் கட்டுரைகளில் ஒன்று திரும்பத் திரும்ப மறைமுகமாகச் சொல்லப்படுகிறது. பெண்கள் கைப்பாவையாக மட்டுமே இருப்பவர்கள், பொம்மை போன்றவர்கள், அப்பாவிகள், வஞ்சிக்கப் பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்கள்............ என்பது. இது எதைக் காட்டுகிறது என்றால், உங்களுக்கே தெரியாமல் நீங்கள் பெண்களின் ' சக்தியைக் ' குறைத்து மதிப்பிட்டுக் கொண்டே இருக்கிறீர்கள் என்பதை உணர்கிறீர்களா ?
வீட்டுவீட்டு உணவு ருசியாக இருந்தால், ஆண் ஏன் வெளியில் உணவு தேடப்போகிறான் என்பது பெண்களுக்கும் பொருந்தும் தானே. வீட்டு உணவு ருசியாக இருந்தால், ஆண் ஏன் வெளியில் உணவு தேடப்போகிறான் என்பது பெண்களுக்கும் பொருந்தும் தானே. உணவு ருசியாக இருந்தால், ஆண் ஏன் வெளியில் உணவு தேடப்போகிறான் என்பது பெண்களுக்கும் பொருந்தும் தானே.
’உடல் தேவைதான் கள்ளக்காதலை தீர்மானிக்கிற காரணி’ ’உடலுறவு இல்லாமல் காதல் இருக்கும். கள்ளக்காதல் இருக்காது’. எனக்குப் புரியவில்லை. இதை தட்டையாக புரிந்துகொள்ளக்கூடாதென்றே புரியவில்லை எனக் கேட்கிறேன்.
ReplyDeleteஇதில் முன் கையெடுக்கும் ஆணுக்கு ஏன் தன் மனைவி உடலுக்கும் சூட்சம உடல் கொண்ட ஆண் தேவை என்பதை அனுமதிக்க முடிவதில்லை.
அறிவுத் தேற்றம் கொண்டவர்கள்தான் போராடமுடியும் என்றால் பாமரர்களுக்கு எது சரி எது தவறு என புரிவதில்லையா...மார்க்ஸ் புன்னகைக்கிறார் மகி.