Sep 15, 2020

நான் அறிந்த சூர்யா!

 




1993களில் சரவணனாக நான் பார்த்த இளைஞன் நடிகர் சூர்யாவாக பரிணமித்து இன்றைக்கு சமூக நீதிக்காக குரல் கொடுக்கும் கலகக் குரலாக வளர்ந்து நிற்பது கண்டு வியப்பும் மகிழ்ச்சியும் அடைகிறேன். காலம் காலமாக அமைப்புகளில் இயங்கும் நபர்கள் அதிகாரத்தைக் கேள்வி கேட்பது நடந்தாலும், உயிர் தியாகங்கள் செய்தாலும் நடிகர் (அல்லது பிரபலம்) ஒருவர் கேட்கும் கேள்வி அதிகார மையங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. இன்னொரு பக்கம் ஆட்சியைப் பிடிக்க அலைபாயும் சில கட்சிகளின் ‘ஆதரவாளர்களுக்கு’ பொறாமையை ஏற்படுத்துகிறது. இது மிகவும் சிறுபிள்ளைத்தனமான மனநிலை.

உண்மையான போராளிகளுக்கு ‘லைம் லைட்டை’ யார் அள்ளிக் கொண்டு போகிறார்கள் என்கிற கவலை இல்லை. அவர்களுக்குத் தேவை அதிகாரத்தை எதிர்க்கும் தங்களின் போராட்டங்களுக்கு வலுவான குரல்களும், ஆதரவுகளுமே. அந்த வகையில் சூர்யா (ஜோதிகா, கார்த்தி உள்ளிட்டோர்) போன்றோரின் குரல் மிகவும் முக்கியமானது. பலமானதும் கூட. ஏனெனில் அது பெருவாரியான மக்களிடையே நல்ல / சரியான சிந்தனையை / அரசியலைக் கொண்டு சேர்க்க உதவுகிறது. அதிகார மையங்களுக்கு அதுதான் பீதியைக் கிளப்புகிறது. சூர்யா தாக்குதலுக்கும், அச்சுறுத்தலுக்கும் உள்ளாகிறார். கூடுதலாக அவரின் உள்நோக்கம், வெளி நோக்கம், ஃபவுண்டேஷன், சாதி எல்லாம் தோண்டி எடுக்கப்படுகிறது.

சூர்யாவாக இருந்தாலும், யாராக இருந்தாலும் அவர்களின் தவறான செயல்பாடுகள் ஆதாரபூர்வமாக வெளியாகாதவரை அவர்களின் பேச்சும், செயல்பாடும் மட்டுமே கவனத்திற்குரியது. தவறு தெரியவரும்போது அதுகுறித்து கேள்வி எழுப்பிக்கொள்ளலாம். அதுவரை அவர் கேட்கும் கேள்விகளுக்கு அதிகார மையங்கள் பதில் சொல்லட்டும்.

நான் அறிந்த சூர்யா!

லயோலா கல்லூரியில் நான் விஸ்காம் படிக்கையில் அவர் பி.காம் படித்தார். (1992-1995). மிகவும் ‘சாது’. எனக்கு அவர் நண்பர் எல்லாம் இல்லை. சிவக்குமார் மகன் என்கிற ஒரு பிரபல்யத்தால் கவனிப்போம். அவ்வளவே.

பட்டப்படிப்பு முடிந்து ஒரு நண்பர்கள் குழுவோடு தொலைக்காட்சி தொடர் ஒன்றில் வின்சண்ட் செல்வா அவர்களிடம் உதவி இயக்குனராக நான் பணியாற்றிய போது நண்பர்களைக் காண அவ்வப்போது சரவணன் அங்கே வருவார். எதிரில் பார்த்தால் “ஹாய் நிம்மி” என்று சிரித்துவிட்டுப் போவார். பழக்கம் இல்லை எனிலும் அறிமுகம் இருப்பதற்கே அந்த மரியாதையைத் தருவார். சில வருடங்கள் கழித்து 2009இல் ஒரு பொது இடத்தில் பார்த்தபோதும் அதே “ஹாய் நிம்மி எப்படி இருக்க” என்னும் அன்பான விசாரிப்பு மாறவில்லை.

1999இல் ஓவியர் ஒருவருடன் எனக்கு திருமணம் முடிந்தது. 2000இல் என் மகள் பிறந்தாள். அவளும் ஓவியக் கலையில் நாட்டம் கொண்டு குழந்தை பருவத்திலேயே கண்காட்சிகள் வைப்பது, ஓவியப் போட்டிகளில் பங்கெடுப்பது என்றிருந்தாள். 2006ஆம் ஆண்டு குழந்தைகள் தினத்தன்று அவளுடைய முதல் தனி ஓவியக் கண்காட்சிக்கு திட்டமிட்டோம். அக்‌ஷரா ஹாசன், சுப்புலட்சுமி ஆகியோரை கண்காட்சியைத் தொடங்கி வைக்க அழைத்திருந்தோம். ஓவியம் தொடர்பாக வருணாவின் தந்தை நடிகர் சூர்யாவை, அவரது தந்தையை அவ்வப்போது சந்திப்பது உண்டு. வருணாவின் ஓவியக் கண்காட்சியில் முடிந்தால் கலந்து கொண்டு வாழ்த்துமாறு சிறப்பு அழைப்பு விடுத்திருந்தோம். நிகழ்ச்சி தொடங்கியபோதும் கூட அவர் வருவாரா என்னும் ஐயமே எனக்கு இருந்தது .
காரணமும் இருக்கிறது. ஏனென்றால் உடன் படித்த, நல்ல பழக்கம் உள்ள ‘பிரபல நடிகர்’ ஒருவரே நம்மை யாரோ போல் பார்த்து தவிர்க்க நினைத்த சூழலில், பழக்கமே இல்லாத ஒருவர் இத்தனை பிரபலமாக இருக்கிறாரே வருவாரா என்னும் சந்தேகம்!

சூர்யா விதிவிலக்கானவர். மரியாதை தெரிந்தவர்! நிகழ்ச்சி தொடங்கும் முன் சரியாக வந்து நின்றார். குழந்தையின் திறன் கண்டு அவ்வளவு மகிழ்ச்சி அவர் முகத்தில். அக்‌ஷரா, சுப்பு, யுவன் சங்கர் ராஜா, பவதாரிணி யுகி சேது, கௌதமி என்று அனைவரும் அப்படித்தான் இருந்தார்கள்.

வருணா எல்லோர் முன்பாகவும் நேரலையாக ஓவியம் வரைந்து காட்டினாள். சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் வருணாவை வாழ்த்தி ஊக்குவித்தார்கள். கூடுதலாக சூர்யா அதை அருகில் அமர்ந்து ரசித்து அந்த கோடுகளுக்குப் பின் இருக்கும் குழந்தையின் மனதை கேட்டு தெரிந்து கொண்டார். பின்னர் கண்காட்சியில் வைக்கப்பட்டிருக்கும் ஓவியங்களைப் பார்வையிட்டவர் திடீரென ஒரு ஓவியத் தொகுப்பைக் காட்டி “இதை எனக்குக் கொடுப்பியா வருணா” என்க என் மகளுக்கு ஒன்றுமே புரியவில்லை. பாக்கெட்டில் இருந்து 10,000 எடுத்துக் கொடுத்து ”இந்த ஓவியம் எனக்கு தான் சரியா” என்று வாங்கிக் கொண்டு “இந்த பணத்துல சாக்லெட்ஸ் வாங்கி சாப்பிடாம ஆர்ட் மெட்டீரியல்ஸ் வாங்கி இன்னும் நிறைய ஓவியம் வரையனும்” என்று கொடுத்துவிட்டு, ஒவ்வொரு ஓவியத்தைப் பற்றியும் அவளிடம் கேள்வி எழுப்பினார். வருணாவை எங்கே பார்த்தாலும் “என்னா ஆரிட்ஸ்டு” என்று மாறாத அன்போடு அழைப்பவர். கார்த்தியும் அப்படியே என்பதை வருணா கூற நான் கேட்டுள்ளேன்.

நிகழ்ச்சி தொடர்பான பேட்டியில் அவர் கூறியது “நாம் குழந்தைகளின் திறன்களை ஊக்குவிக்க வேண்டும்” (We have to tap the potential of the kids) என்றார். குழந்தைகள் உலகோடு தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்வது சூர்யாவின் இயல்புகளில் ஒன்று என்பதை நான் அன்று கண்டேன். பருவத்தே பயிர் செய் என்னும் வாக்குக்கு ஏற்ப குழந்தைகளின் திறனை இளம் வயதிலேயே கண்டறிந்து ஊக்குவிக்க வேண்டும் என்கிற எண்ணம்தான் குழந்தைகளுக்கு கல்வி வழங்கும் சேவை நோக்கி அவரை வழிநடத்தியிருக்க வேண்டும். (எனக்கு அவரோடு பழக்கம் இல்லை! 2010க்குப் பிறகு என் வாழ்க்கைப் பாதையை நான் மாற்றிக் கொண்டேன்!)

சூர்யா, கார்த்தியின் படங்களில் பெண்கள் சித்தரிப்பு தொடர்பாக நான் அவர்களை கடுமையாக விமர்சித்துள்ளேன். குறிப்பாக ஒரு விளம்பரம் தொடர்பாக நான் தொடர் பிரச்சாரமும் மேற்கொண்டேன். சூர்யா சமூக நீதி தொடர்பாகப் பேசுகையில் கூட இதில் கவனம் செலுத்தும் நீங்கள் சினிமாவில் பெண்களைப் பயன்படுத்தும் விதத்திலும் கவனம் செலுத்துங்கள் என்று பதிவு செய்துள்ளேன். சினிமாவில் பெண்கள் சித்தரிப்பு ஆணாதிக்க மனநிலையில் உள்ளதற்கு நாம் அவர்களை மட்டும் பொறுப்பாக்க இயலாது. எனினும், விமர்சனங்கள் மூலம் கவனத்தை ஈர்க்க முடியும். உயர்நிலையில் கதாநாயக அதிகாரம் இருப்பதால் உங்களால் முடியாதா என்கிற கேள்வியை எழுப்பி ஏதோ ஒரு மாற்றத்தை நிகழ்த்த முடியும் என்பதுதான் அந்த விமர்சனத்தின் நோக்கம். அதேவேளை தனிநபர்களாக அவர்களின் சமூக பங்களிப்புகளில் நியாயம் இருப்பின் அதனை வரவேற்கும் முதிர்ச்சியும், குறிவைத்துத் தாக்கப்பட்டால் ஆதரவு தெரிவிக்க வேண்டிய அவசியத்தையும் உணர்ந்தே இந்த பதிவை எழுதுகிறேன்.

மனிதர்களின் சிந்தனைகளும், செயல்பாடுகளும் காலப் போக்கில் மாறக் கூடியவை. வளர்ச்சி அடையக் கூடியவை. சூர்யாவின் வளர்ச்சியை திரைத்துறையிலும் சரி, சமூகத் தளத்திலும் சரி பாசாங்கற்ற உண்மையான பரிணாம வளர்ச்சியாகவே நான் காண்கிறேன்.

திரைத்துறை பிரபலங்கள் பெரும்பாலும் ஆளும் கட்சி “ஜால்ராக்களாக’ இருக்கையில் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்க துணியும் பிரகாஷ் ராஜ் சூர்யா போன்ற “மைய நீரோட்ட பிரபல’ நடிகர்களின் குரல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவர்களின் நற்செயல்களை வரவேற்போம்… முரண்பாடுகள் தெரியுமெனில் விமர்சிப்போம்…. ஆனால் அரசியல் உள்நோக்கத்தோடு “வெறுப்பரசியல்’ செய்வதும், அவதூறு செய்வதும் மிகவும் அற்பத்தனமானது. அரசியல் முதிர்ச்சியுமன்று.

சூர்யாவின் அகரம் ஃபவுண்டேஷனில் படித்த குழந்தைகளின் நாடகத்தை ஒருமுறை காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பிரபல நடிகர்கள் தங்கள் ‘சேவைகளை’ ஏதேதோ வணிகத் துறைக்கும், சர்வதேச வலைப்பின்னல்களுக்கும் வழங்கிக் கொண்டிருக்க சூர்யா குழந்தைகளுக்குக் கல்வியைக் கொடுக்க நினைப்பதும், தொடர்ந்து அது தொடர்பாக பேசுவதும் வரவேற்கத்தக்கது. குறிப்பாக பா.ஜ.கவின் புதிய கல்விக் கொகை தொடர்பாக சூர்யா எழுப்பிய கேள்விகளும், விடுத்த அறைகூவலும் போற்றத்தக்கவை.

என் சமகாலத்தில் என்னுடன் படித்தவர்கள் ‘டாப் ஹீரோக்களாக’, திரைக் கலைஞர்களாக இருந்தும் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்று நான் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். அவர்களுக்கு மத்தியில் சூர்யா நிச்சயமாக ஒரு நிஜமான கதாநாயகனாகவே உயர்ந்து நிற்கிறார்.

Suriya Sivakumar சவால்களும், விமர்சனங்களும் ஒன்றும் உங்களுக்குப் புதிதல்ல. அதுதான் உங்களை வளர்த்துள்ளது… இனியும் வளர்க்கும்… தொடருங்கள் உங்கள் ஆயுத எழுத்தை! ஓங்கி ஒலிக்கட்டும் அநீதிக்கு எதிரான உங்கள் குரல்! வாழ்த்துகள் 😊

(http://artistvarunastudio.blogspot.com/…/…/my-2nd-show.html…

)

#TNStandWithSuriya

 


Sep 7, 2020

இந்த கம்யூனிஸ்டுங்க இன்னா பேசுறாங்கன்னே பிரில… மே!

 


ஆ.. ஊன்னா இந்த கம்யூனிஸ்டுங்க ‘இயக்கவியல் பொருள்முதல்வாதம்’னு பேசி மக்களை பயமுறுத்துறோமாம்! உழைக்கும் மக்களுக்குப் புரியுற மொழில பேசுறதில்லையாம்! பேசாம தான் இத்தனை புரட்சியும், இத்தனை உரிமைப் போராட்டங்களும், வெற்றியும் கிடைச்சுதா?

இதோ பாரு கொமாரு – புரியினும்னு நினைக்கிறவனுக்கு புரியுறதும்… புரிய வேணாம்னு நினைக்கிறவனுக்குப் புரியாமப் போறதும்… அரசியல்ல ரொம்ப சாதாரணமப்பா..

சரி! இயக்கவியல் பொருள்முதல்வாதம்னா இன்னா?

பொருள்ங்குறது சும்மா நிக்காது.. இயங்கிக்கிட்டே இருக்கு? இது பிரியுதா இல்லையா?

அதாவது – பொருள்னா என்ன – அது இருக்குதுன்னு சொல்லக்கூடிய தன்மைல - “உயிர்”னு வச்சுப்போம் இருக்கிற ஒண்ணு! அது சும்மா துண்டு துண்டு தூங்காம எப்பப் பார்த்தாலும் வேலை செஞ்சிக்கினே கீது!

அப்படி வேலை செய்றப்போ… அதாவது சுத்திக்கினே கீறப்போ, அசைஞ்சுக்கின்னே கீறப்போ – அதுக்குள்ள ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், சண்டை, “சேஞ்சு” எல்லாம் நடக்கும் – அதேமாதிரி வெளிலருந்து ஏதோ ஒண்ணு அதுகூட கலக்குறதும், அதனால அதுக்குள்ள லவ்வோ – ஜவ்வோ வரும்… அப்ப அந்த பொருளு தன்னோட “மாடலை” வுட்டுட்டு இன்னொரு “மாடலா” மாற வேண்டிய நிலைமை வரும்… ரூட்டு கிளியரா இருந்துச்சுன்னா சேர்ந்து இருக்கிறதும்… முட்டிக்கினா… புட்டுக்குறதுமா போயி… அதுலருந்து இன்னொரு டிசைன் உருவாகும்…

 மனுஷப்பய சமூகமும் அப்படித்தான் உருளுதுன்னு சொல்றதுதான் இயக்கவியல் பொருள்முதல்வாதம்!

 அதாவது கண்ணா! மனுஷப்பய அவனுக்குத் தேவையான “வேலைல” ஈடுபடுறான்ல… இதுல உனக்கு டவுட்டு கீதா… வேலை செஞ்சாதானப்பா வவுத்துக்கு சோறு.. தூங்க வூடு.. போட்டுக்க துணி இப்படில்லாம் தயார் பண்ண முடியும்.. (வேலைன்னா – உழைப்புன்னு சொல்லப்படுற அர்த்ததுல இல்ல.. சும்மா இல்லாம இயங்குனாதான் வாய்ல தோசை… அந்த மாதிரி)

 அப்படி எல்லாம் சேர்ந்து பொருள் தயாரிக்கிறப்ப… கூட்டாஞ் சோறுகிண்டைலன்னு வச்சுக்குவோம்- இது…. “இப்படி இருக்குது”, அது “அப்படி இருக்கிதுன்னு” பட்டி டிங்கரிங் பார்த்துட்டே இருப்பானுங்க… மனுஷப்பயலும் இயற்கைல ஒரு பொருள் தான அவனோட சிந்தனையும், இயக்குமும் கூட மத்த பொருள்மாதிரிதான் இருக்குன்னு மார்க்ஸ் எங்கல்ஸு லைட்டு அடிச்சு காட்டுனாங்க (அதுக்கு முன்னாடி ஹெகல்லாம் சொல்லிருந்தாலும் அதை சோக்கா சைன்ஸா நெத்தில அடிச்சா மாதிரி சொன்னாங்க)..

 இப்ப இந்த மனுஷப்பயலுக பட்டி டிங்கரிங் பார்க்குறதைத்தான் – ஒழுங்கமைச்சுக்கிறதைத்தான்– நாம சமூகம், பண்பாடு, அரசியல், அரசு, சட்டம் திட்டம்ன்னு சொல்றோம். ஆனா இதுக்கெல்லாம் பேஸ்மெண்ட் இன்னாது – அவனவன் வாழுறதுக்கு தேவைப்படுற “ஐடம்”களை தயாரிக்கிற அந்த வேலை… அந்த தேவை.. மனுஷனோட பொருள் தேவை தான் பஞ்சாயத்து தலைவரு/தலைவி!

 அப்ப அவனுங்க இன்னா பண்றானுங்கன்னா வேலைய சுளுவா முடிக்க… எதையாச்சும் கண்டுபுடிச்சிக்கினே இருக்கானுங்க… இருக்காளுங்க… அது இன்னா பண்ணுது வேலை செய்ற “மெதட்ட” சுளூவா ஆக்கி… கம்மியா வேலை செஞ்சாலும் முன்னாடி விட அதிகமா பொருள் கொடுக்குது… அப்புறம் வேற வேற தேவைக்காக ஒரு பய இன்னொரு பயனோட வூட்டாண்ட போயி சண்டை வலிக்க வேண்டியிருந்துச்சு…

 சண்டை வலிச்சு ஜெயிச்சவன் தோத்தவனை அடிமைப் படுத்துறான்… அவனை வச்சு வேலை வாங்குறான்… தேவைக்கு அதிகமா “டூல்ஸ்”னாலையும்… அடிமைங்க “உழைப்புனாலையும்” பொருள் கிடைக்குது… அதைத்தானய்யா உபரின்னு சொல்றோம்… அப்ப சொத்துன்னு ஒரு பூதம் மண்ணுக்குள்ளருந்து பூன்னு வந்துச்சு பாருங்க… அப்ப புடிச்சுது மனுஷ சமூகத்துக்கு சனியன்…

அதுவரைக்கும் ஒண்ணா வேலை செஞ்சு ஒண்ணா பிரிச்சு துண்ண மனுஷங்கள்ள கொஞ்சம் பேரு… உழைக்காம வாழுற ருசி கண்ட பூனைங்களா மாறுனாங்க..

 நான் ஆம்பளை.. நீ பொம்பள! நான் மேல நீ கீழ! நான் உசத்தி… நீ மட்டம்னு” ஒண்ணொன்னா அவுத்துவுட்டானுங்க…

 இங்க ஆரம்பிச்சுதுய்யா டிஷ்யூம் டிஷ்யூம் – அதைத்தேன் முரண்பாடுன்னு சொல்றோம்! பொருளுக்குள்ள இருக்கிற இயக்கவியலை இங்க கொண்டு வந்து உக்காரவச்சாங்க மார்க்ஸும் – எங்கல்ஸும்!

 அந்த காலத்துலருந்து இன்னைக்கு வரைக்கும் என்ன நடந்துச்சுன்னு “லிஸ்டு” போட்டு சொல்றாகல்ல அதைத்தேன் வரலாற்றுப் பொருள்முதல்வாதம் – வரலாற்று வளர்ச்சின்னு சொல்றோம்!

இப்ப விளங்குதாங்க!

 நியாயமா இருந்த ஒரு சமூகம் – வேலை – மனுஷப்பய உறவு இதெல்லாம் அநியாயமா மாறுச்சு… எதனால? ஒரு கூட்டம் பொருள் தயாரிக்கத் தேவையான “சாமானையெல்லாம்” தன்னோட கட்டுப்பாட்டுல வச்சுக்கினு மத்தவனை உழைக்க வச்சு பிழைச்சானுங்க… உழைப்பாளிங்களுக்கு அப்பல்லாம் கூலி கிடையாது… உயிரோட இருக்க கொஞ்சூண்டு கஞ்சி ஊத்துவானுங்க… இது ஆண்டான் அடிமை சமூகம்… அப்புறம் டிஷ்யூம் டிஷ்யூம் போட்டு மனுஷன் அடுத்த சமூகமா முன்னேறுனான்… அது நிலப்பிரபுத்துவ சமூகம்… பண்ணையார் விவசாயக் கூலி சமூகனு சிம்பிளா சொல்லிக்கலாம்!

 டிஷ்யூம் டிஷ்யூம் நடக்குறதை யாரும் தடுக்க முடியாது.. ஏன்னா முரண்பாடு இருந்தா மோதல் இருக்கத்தேன் செய்யுங்குது மார்க்சியம்… (ஜெய் இயக்கவியல் பொருள்முதல்வாதம்)

 இப்ப பண்ணையாருங்க அட்டகாசம் பண்ண பண்ண மக்களுக்கு கோவம் வருது… முரண்பாடு முத்துனதும்.. அடுத்த சமூகமா முதலாளித்துவ சமூகம் வருது… டிஷ்யூம் டிஷ்யூம் நடக்குறது ஒருபக்கம்னா… மனுஷன் தன்னோட தேவைக்காக – அதான் வேலைய சுளுவா முடிக்கிறதுக்காக ‘டூல்ஸ்.. மெஷினு” இதெல்லாம் வேற கண்டுபுடிச்சிக்கினே கீறான்ல… அது இன்னா பண்ணுதுன்னா – பொருள் தயாரிக்கிற “மாடலை” மாத்திக்கினே கீது! அது மாற மாற மனுஷப்பய உறவும் மாறுது… பண்பாடு மாறுது… அரசமைப்பு மாறுது எல்லாம் மாறுது… ஆனா எல்லாம் இட்லி… தோசைன்னு டிசைன்ல மாறுச்சே தவிர “மாவு என்னமோ ஒண்ணுதேன் தம்பி”ங்குற கதையா இருக்குது… இதையும் நம்ம மார்க்ஸப்பா சோக்கா சொல்றாருமே…

 அடுத்து இன்னா சொல்றாருன்னா ”இப்படியே ஒரு மனுஷன் இன்னொரு மனுஷனையும், இயற்கையையும் சுரண்டிக்கினு இருந்தா ரொம்ப நாள் தாங்காது” மறுபடியும் டிஷ்யூம் டிஷ்யூம் வரும்… ஏன்னா வேலை செஞ்சே சாவ வேண்டிய நிலைமைல இருக்கிற மனுஷனுக்கு வாழவே வழியில்லாம போகும்.. அதுக்கும் மேல மனுஷன்னா கொஞ்சம் மான ரோஷமும் இருக்கும்ல… அவங்க “உங்களை சும்மா வுட மாட்டாங்கடா பேமானிங்களா”ங்குறாரு…

 அதாவது மறுபடியும் முரண்பாடு முத்தி நீ அவங்ககிட்ட இருந்து புடுங்கின எல்லாத்தையும் மறுபடியும் அவங்க உன்கிட்டருந்து புடுங்குவாங்கடா… ஆமாம் புடுங்குவானுங்கடா! #சொத்து_வேணாம்_போடா #சுரண்டல்_வேணாம்_போடா

 இதுவரைக்கும் கிடைச்ச அனுபவத்துலருந்து சூடு பட்டதால நியாயமா எல்லாத்தையும் பொதுவுல வச்சா எல்லாரும் சோக்கா வாழலாம்னு ஒரு நிலைமைதான் வரும்னு சும்மா நச்சுன்னு சொல்லிவச்சிருக்காரு…

இன்னா இது புரியுற மாதிரி கீதா?

 நீயும் நானும் நல்லாருக்கனும்னு ரெண்டு பேரு சேர்ந்து இராப்பகலா படிச்சு, அங்க இங்கன்னு துரத்துனப்பவும் இதுக்கு முன்னாடி யார் இன்னா இன்னா சொன்னாங்க… இதுவரைக்கும் இன்னா நடந்துச்சு… இந்த மனுஷப்பய பொழைப்பு ஏன் இப்படி இருக்கு? எதைத் தின்னா பித்தம் தீரும்னு… ஓயாம ஆராய்ச்சி பண்ணி “இதுதான் பிரச்சினை… இதுக்கு இது இது காரணம்… இத இப்படி மாத்திக்கோ… நல்லாருப்பன்னு” சொல்றாங்க…

 அதை எந்த “மெதட்ல” ஆராய்ச்சி பண்ணாங்கன்னு தான்யா அந்த ரெண்டு ”டேர்ம்ஸ” திரும்ப திரும்ப சொல்றோம்! அதுவும் எதுக்கு எல்லாம் கடவுளோட “மிராக்கிள்”னு புருடா உட்டுக்குனு திரியுறானுங்களே முட்டாப் பசங்க அவனுங்களுக்கு எதிரா “டேய் இது சைன்ஸ்டா மாங்கா”ன்னு சொல்றதுக்குதேன்..

 மத்தபடி நம்ம மொழி என்னைக்கும் உழைக்கும் மக்கள் மொழிதேன்! அது அவுகளுக்கு புரிஞ்சுதேன் கம்யூனிஸ்டுங்க கூட லவ்வாகுறாங்க.. அது பொறுக்காத “வில்லனுங்க” இன்னா பண்றாங்க “மூட்டி வுடுறாங்க”…

 நீ இன்னாதான் கொளுத்திப் போட்டாலும்… சும்மா ஊதி அணைப்போம்ல! ஏன்னா நம்மகிட்ட சவுண்டா தத்துவம் கீது தம்பி!

பி.கு: இந்த மொழிப் பயன்பாடு எள்ளல் கண்ணோட்டத்தோடு பயன்படுத்தப்படவில்லை… இம்மொழி பாணி எனக்கு மிகவும் பிடித்த மொழி… பாமர மொழி என்னும் காதலுடன்….

 உழைக்கும் வர்க்க ஒற்றுமை வாழ்க! புரட்சி ஓங்குக!

 

Sep 6, 2020

சாதியா வர்க்கமா ஓர் இயக்குனரின் கேள்வி

 


ஒருமுறை என்னிடம் ஓர் இயக்குனர் கேட்டார் “எல்லாமே வர்க்கம்னு சொல்றீங்களே ஒரு வீட்ல - அதையும் தாழ்த்தப்பட்ட சாதின்னே வச்சுப்போம் - அண்ணன் ஐ.டி. கம்பெனில வேலை செய்றார், தம்பி மூட்டைத் தூக்கும் வேலை செய்றார். இவங்க எந்த வர்க்கம்னு எப்படி சொல்ல முடியும்? என்ன வர்க்க உணர்வு இருக்கும்? அதுவுமில்லாம சாதி அடிப்படையில படிச்சவனுக்கும் இங்க ஒரே நிலைமைதான… அப்ப சாதிதான எல்லாம்”

பதில்: “இரண்டு பேருமே உழைக்கும் வர்க்கம் தான். இருவரிடமும் தம் பிழைப்பிற்குத் தேவையான உற்பத்திச் சாதனங்கள் இல்லை. தம் பிழைப்பிற்காக இருவருமே முதலாளியைத்தான் சார்ந்திருக்கிறார்கள். 

இங்கே மூட்டைத் தூக்குபவரை மட்டுமே ”கூலி” என்பார்கள், ஆனால் சம்பளம் வாங்கிப் பிழைக்கும் அனைவருமே “கூலிகள்” தான். இருவரில் ஒருவர் மூளை உழைப்பாளி, இன்னொருவர் உடல் உழைப்பாளி! இருவருக்கும் வர்க்க உணர்வு தானாக வந்துவிடாது. அவர்களுக்குக் கிடைக்கும் அரசியல் வெளிச்சம் பொறுத்துதான் அது அமையும். ஆனால் உடல் உழைப்பாளிக்கு தன் மீதான உழைப்புச் சுரண்டல் எளிதாக விளங்கிவிடும். மூளை உழைப்பாளிக்குத் தாமதம் ஆகலாம் அல்லது மாறியும் அமையலாம். வர்க்க ரீதியாக ஒருவர் உடல் உழைப்பாளி - ஏழை, இன்னொருவர் நடுத்தர வர்க்கமாக அமையலாம். ஆனால் இருவருக்குள்ளும் உழைக்கும் வர்க்க உணர்வைத் தட்டி எழுப்புவதுதான் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு முன்நிபந்தனை. அதற்குத்தான் கம்யூனிஸ்ட் கட்சி!  வர்க்க ஒற்றுமை நேராமல் தடுக்கவே இங்கே இத்தனை பிரிவினைவாதப் போக்குகள் நிலவுகின்றன. கம்யூனிஸ்ட் கட்சிகளை உடைக்கும் முயற்சிகளும்!

படித்தும் சாதி மாறவில்லை! எங்களை சமமாகக் கருதவில்லை”  உண்மைதான்! ஏனென்றால் சாதி என்பது பண்பாட்டளவில் ஆதிக்கம் செலுத்துகிறது. வர்க்கப் படிநிலை அமைப்பிற்குத் தேவையான படிநிலைக்கு அது பார்ப்பனியம் என்னும் மதக்கொள்கை கொண்டு ஒரு சட்ட வடிவத்தையும், அங்கீகாரத்தையும் கொடுத்திருக்கிறது. அத்தகைய சமூகத்தில் உண்டாகும் கூட்டுச் சமூக உணர்வை புதியதோர் சமூக அமைப்புக் கொண்டு  மெல்ல மெல்லதான் மாற்ற இயலும். புதிய பண்பாட்டை அப்போதுதான் நிறுவ இயலும். அந்த பண்பாட்டமைப்பில் கல்வியும் தொடர் பிரச்சாரங்களும், சமத்துவமான உழைப்புசார் உறவுகளும் நிலவும். அப்போதுதான் முழுமையான மாற்றம் ஏற்படும்.  எதுவும் தனித்ததில்லை என்பதை இதிலிருந்தே நீங்கள் விளங்கிக் கொள்ளலாம்.

 பொருளாயத அடிப்படையில் போட்டிப் பொருளாதார அமைப்பு உழைப்பாளர்களுக்குள் போட்டியைத் தக்கவைக்க பல்வேறு அடையாளங்களைப் பயன்படுத்திக் கொள்கிறது. இரண்டு சாதிகளுக்குள் இந்த போட்டி நிலவுவது போல், வெறுப்பு நிலவுவது போல் ஆண் பெண் உழைப்பாளர்களிடமும் அதே மனநிலை நிலவுகிறது. பெண்களால் தான் தங்கள் வேலை வாய்ப்பு போகிறது என்று கருதும் ஆண்கள் பெண்கள் வேலைக்குப் போவதை விரும்புவதில்லை. அதேபோல் சாதிரீதியாக இடஒதுக்கீடுதான் தாழ்த்தப்படடவர்களுக்கு வாய்ப்பு வழங்குகிறது என்னும் தவறான புரிதலை பொருளாதார நிலைமையில் ஏற்படுத்தி வைத்திருக்கிறது. இந்த இரண்டும் அதாவது – சாதியப் படிநிலை மற்றும் வர்க்க முரண்பாடு இரண்டும் தான் அந்த தீண்டாமையைக் காக்கிறது. இந்து முஸ்லிம் வெறுப்பும் அதுபோலவே, வெள்ளை இன கறுப்பின வெறுப்பு அது போலவே, மொழிரீதியான பகைமையும் அது போன்றதே.

அதனால்தான் மீண்டும் மீண்டும் சொல்கிறோம் சாதியை – எந்த ஒரு முரண்பாட்டையும் - தனியாக ஒழிக்கவே இயலாது. அதனைத் தாங்கிப் பிடிக்கும் அடிக்கட்டுமானமான தனியுடைமை அடிப்படையிலான உற்பத்தி முறையை மாற்றி சொத்துறவுகளை ஒழித்து சமத்துவமான உழைப்புப் பிரிவினையை நிறுவ வேண்டும். உழைப்புச் சுரண்டலை ஒழிக்க வேண்டும்.

அதற்கு வர்க்கப் போராட்டமே தேவை. வர்க்கமாக ஒருங்கிணைக்க சாதியை முதலில் ஒழியுங்கள் என்றால் அதை ஒழிக்கவே வர்க்கமாக ஒன்றிணையச் சொல்கிறோம். நமக்குள் இருக்கும் முரண்பாடுகளை கூர்தீட்டும் ஆயுதம் “மூலதனம்”! அது தீட்டும் அடையாளங்களைக் கைவிட நாம் தானே முயற்சி செய்ய வேண்டும்? அதைவிடுத்து அரசியல் ரீதியாக, உழைப்பு ரீதியாக, வர்க்க ரீதியாக மேலெழுந்திருக்கும் சிலர் அந்த அடையாளங்களை உயர்த்திப் பிடித்து, இது சாத்தியமில்லை.. அது சாத்தியமில்லை என்று பிரச்சாரம் செய்வதன் நோக்கம் என்ன? ஒரு சிலருக்கு அது அறியாமை! ஆனால் அவர்களை வழிநடத்தும் தலைமைகள் அதைத் தெரிந்தே செய்கின்றனர்!

சமூக மட்டத்தில், சாதி மற்றும் இதர அடையாளங்கள் வர்க்க ஒற்றுமைக்கு எதிராக இருப்பது எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு ஒடுக்கப்பட்டோருக்காக இயங்குவதாக சொல்லிக் கொள்ளும் சில - கட்சிகள்  / கலைஞர்கள் / அமைப்புகள் / எழுத்தாளர்கள் அவர்களின் ஜால்ராக் கூட்டங்கள் – என அனைவருக்கும் முக்கியப் பங்குண்டு. இதுவும் ஒரு குறிப்பிட்ட வர்க்க நலனிருந்து நிகழும் புற யதார்த்தம். அதையும் முறியடிக்கும் வழிமுறையை மார்க்சியம் வழங்குகிறது.

 


உடம்புக்கு கேடு தொந்தி! நம்ம ஒற்றுமைக்குக் கேடு இந்தி!

 



ஹிந்தியோ தொந்தியோ எங்களுக்கு வேணும்னா வச்சுப்போம்!
மூச்சு முட்டுனா விரட்டுவோம்!
தொந்தி வச்சே ஆகணும்னு எவனாச்சும் சொல்ல முடியுமா? ஹிந்திக்கும் அதே இடம்தான்!

இந்தி எல்லாத்தையும் ஒண்ணாக்குங்கிறான்! ஆனா பொழைப்புன்னு வந்தா நீ வேற நான் வேறங்குறான்!

உடம்புக்கு கேடு தொந்தி! நம்ம ஒற்றுமைக்குக் கேடு இந்தி!

தாய்மொழியப் பறிக்க நினைக்கிறவன் யாரு?
நம்ம உழைப்பைச் சுரண்டிப் பிழைக்க தரகு வேலை பார்க்குறவன் பாரு!

நான் மேல! நீ கீழ!
என் சாமி பெருசு! உன் சாமி சிறுசு!
நான் ஆம்பளை ஆளப் பொறந்தவன்! நீ பொம்பள அடங்கி இருக்கப் பொறந்தவ!
என் மொழி எஜமானன்! உன் மொழி அடிமை மொழி!
இதைச் சொல்றவன் எல்லா மொழிலையும் இருக்கான்! அவன் யாரு?
இதைச் சொல்ற அதிகாரம் அவனுக்கு மட்டும் எப்படி வருது?

உன் சாதி, மதம், மொழி, பாலினம் எதுவா இருந்தாலும் இந்த சமூகத்துல உன்னோட இடம் எதுன்னு உன் பொழைப்பு சொல்லுது!
அவனோட மொழி அதிகாரத்தை உடைக்கனுமா! மூலதனத்தை உடை!
பாசிசத்தை ஒழிகணுமா? மூலதனத்தை ஒழி!
நான் முதலாளி! நீ பாட்டாளிங்குறானே அந்த மொழியை ஒழி!
உன் தாய்மொழி தானா வாழும்!

 

Sep 1, 2020

தலித்தியத்தின் பெயரால் சாதிய வன்மம்

 தங்களின் சொந்த சாதி வெறியிலிருந்து மீள முடியாமல் வர்க்க நீக்கமும் செய்துகொள்ள மனமின்றி முதலாளித்துவ / நவதாராளவாத நலன்களுக்காக இந்த சமூகத்தின் கேடான சாதியத்தை, துண்டு துண்டான அடையாளங்களை தம் அரசியல் வளர்ச்சிக்காக, நலன்களுக்காக பயன்படுத்திக்கொள்ளும் கூட்டம் எல்லா சாதியிலும், வர்க்கத்திலும் உண்டு.

காஞ்சா அய்லய்யா போன்ற ’தலித்திய’ அறிவுஜீவிகளும், தமுஎகச போன்ற போலி முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ஒரு கூட்டமும், சில தலித்திய என்.ஜி.ஓ பண்பாட்டு மையக் குழுக்களும் அத்தகைய ஆதிக்க சாதிய அரசியலை செய்வதில் சளைத்தவர்கள் அல்ல. அதனால் தான் உழைக்கும் வர்க்க ஒற்றுமைக்கு எதிரான கம்யூனிச வெறுப்பு அரசியலை தலித்தியம் என்னும் பெயரில் செய்து வருவதை அம்பலப்படுத்தி வருகிறோம். அதற்கு அவர்கள் அம்பேத்கரைப் பயன்படுத்திக் கொள்வதையும், அம்பேத்கரிடம் சாதியப் பிரச்சினைக்கு உண்மையில் தீர்வு உள்ளதா என்பதையும் சில மார்க்சியர்கள் விவாதத்திற்கு உட்படுத்தி வருகிறோம்.

காஞ்சா அய்லாவின் இதற்கு முன்பு எழுதிய ஒரு பதிவுக்கு நான் எதிர்வினை ஆற்றிய போது இனவாத தமிழ் தேசியர் ஒருவரும், ‘தலித்திய’ கருணையாளர்களும் பொங்கி எழுந்தனர். இதோ இப்போது மறுபடியும் அய்லய்யா கம்யூனிஸ்ட்கள் குறித்து அவதூறு செய்துள்ளதோடு கம்யூனிஸ்டுகளை தொடர்ந்து பிராமின் கம்யூனிஸ்ட் என்று கேவலமான சாதியப் புத்தியில் எழுதியுள்ளார். (Dr Ambedkar - "they (Indian left) are just a bunch of Brahmin boys, drummer boys" என்று கூறி இதற்கு வழிகாட்டியுள்ளார்).

சில பெரியாரிஸ்டுகளும், தலித்திஸ்டுகளும் சில கம்யூனிஸ்டுகளை பூனூலிஸ்டுகள் என்று எந்த தார்மீக அறமும் இன்றி கூறுவதை நாம் கண்டுள்ளோம். இது அப்பட்டமான சாதி வெறி அரசியல் மட்டுமின்றி, மார்க்சிய வெறுப்பு. அதோடு, தனியுடைமையை ஒழிப்பதே தம் விடுதலைக்கான வழி என்பதை தலித்துகள் உணர்ந்துவிட்டால் தம் பிழைப்பு என்னாவது என்னும் சுயநலம் நிறைந்த பிழைப்புவாதமன்றி வேறு ஏதுமில்லை.

காஞ்சா அய்லய்யாவின் கம்யூனிஸ்டுகள் பற்றிய சாதிய அவதூறுகளுக்கு தோழர் மூர்த்தி என்பவர் எழுதியுள்ள மறுப்பு கீழே உள்ளது. மேலும் தோழர் டி.வி ராவை “பிராமண கம்யூனிஸ்ட்” என்றும் தோழர் டி.நாகி ரெட்டியை “சூத்திர கம்யூனிஸ்ட்” என்றும் பேசியுள்ளார்..

// Ilaiah speaks of “those days” in Andhra…and of Tenali, which was known as centre for cunning brahminism…of Brahminical, vegetarian communism etc etc…//

சாதிய வன்மம் நிறைந்த ஒருவரால் தான் கம்யூனிஸ்டுகளை இப்படி சாதிவாரியாகப் பார்க்க இயலும். இவர்களின் இந்த கீழ்த்தரமான சாதி வன்ம அரசியலால் கம்யூனிஸ்டுகள் “அவர் இந்த சாதியாக இருந்தாலும்…” என்னும் விளக்கங்களைக் கொடுக்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்….

// VSR came up in such an atmosphere:Though he was born into a Brahmin community, since his young age, he never followed or practiced any customs, traditions and beliefs of that community. He did never wear the so-called ‘sacred thread.’ He became a staunch Marxist and communist by the age of 25 years. He devoted his entire life to the working class movement, until he breathed his last on 8th September, 1998. . He was an anti-thesis of comfortable, arm-chair intellectual, Brahmin communist, imagined or created by Ilaiah. There were many Brahmin cadres who never wrote anything beyond their party work reports, but worked in masses, and a couple of them were shot dead too.// என்று தோழர் மூர்த்தி பதிலளிக்கிறார்.

இப்படி கட்டுரை நெடுக கம்யூனிஸ்டுகள் எப்படி வர்க்க நீக்கம் சாதி நீக்கம் செய்துகொண்டு உழைக்கும் வர்க்க அரசியலுக்காக தங்களையே அர்ப்பணித்துக்கொள்கின்றனர் என்றும் ஒரு காலத்தில் தலித்துகள், இடைநிலைசாதி உழைக்கும் வர்க்கத்தினர் சாதி மறந்து கம்யூனிஸ்டுகளுடன் அணிதிரண்டு எப்படி போராடினர் என்பதையும் குறிப்பிடுகிறார்.

உற்பத்தி முறையில் மாற்றத்தின் விளைவாக ஏற்பட்ட மாற்றம் / வளர்ச்சி & அதன் விளைவாக உழைப்புசார் உறவுகளில் ஏற்பட்ட மாற்றம் புதிய வர்க்கங்களை தோற்றுவித்துள்ளது. அது இடைநிலை மற்றும் தலித் சாதிகளிலும் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை புதிய நடுத்தர / மேட்டுக்குடி வர்க்கமாக முன்னேற வழி வகுத்துள்ளது. அப்பிரினிவரில் உள்ள சில ‘அறிவுஜீவிகள்’ / அரசியல் சக்திகள் தம் குட்டி முதலாளித்துவ நலனிலிருந்து சாதியப் பாகுபாடுகளை தம் அரசியலுக்காகப் பயன்படுத்திக்கொள்கின்றனர்.

கம்யூனிச வெறுப்பரசியலை வளர்க்க மார்க்சியம் இந்தியாவுக்கு ஏற்ற சித்தாந்தமல்ல, கம்யூனிஸ்டுகளுக்கு சாதி ஒழிப்பில் அக்கறை இல்லை என்று நிறுவ சாதி அடிப்படையில் அவர்களை அவதூறு செய்து தம் பிழைப்பை நடத்துகின்றனர். சிலர் கிறித்தவ நிறுவன என்.ஜி.ஓ.களின் ஆதரவோடு செவ்வனே இதை செய்கின்றனர் என்ற ஐயங்களும் முன்வைக்கப்படுகின்றன.

என்னதான் அய்லய்யாக்கள், ஒரு விமர்சன நூலை தம் சாதி வெறியிலிருந்து நரகல் என்பவர்கள், வழக்கு தொடுத்து அச்சுறுத்துபவர்கள், கலர் கலரான பண்பாட்டு மையங்கள் மார்க்சியத்தையும் - கம்யூனிஸ்டுகளின் அர்ப்பணிப்புகளையும், போராட்டங்களையும் தியாகங்களையும் - நிராகரிக்க முயற்சித்தாலும் வர்க்க முரண்பாடும் உழைப்புச் சுரண்டலும் இருக்கும் வரை எத்தகைய அவதூறுகளையும் துடைத்தெறிந்துவிட்டு கம்யூனிஸ்டுகள் இயங்கிக் கொண்டே இருப்பார்கள்… வரலாறே அதற்கு சாட்சி.


Article: https://countercurrents.org/2020/09/life-and-work-of-com-vuppuluri-subba-rao-renowned-working-class-leader-viewed-in-the-light-of-controversy-created-by-kancha-ilaiah/?fbclid=IwAR3N15PMka0i_8JaHO0sGxwWvjaVVXVBTRLQfnZDIlFOPgCzXM1vNLbAAxs