Apr 13, 2018

நாம் மனிதர்கள் தானா?



கடவுளும் மதமும் மனித சமூகத்தில் நிலவிய சுரண்டல்வாத நிலைமைகளிலிருந்து பெண்களையும் உழைப்பாளர்களையும் ஒடுக்குவதற்காக, ஆளும் வர்க்க ஆயுதமாக தோன்றிய கருத்தியலாகும். சிறுமி ஆசிஃபாவிற்காக ஒட்டுமொத்த இந்தியாவும் கண்ணீர் வடிக்கையில் கடவுளுக்கெதிராக பேசுவது பாவமாகிவிடுமா?

மதவாத அராஜகங்களுக்கெதிராக, அதிலும் குறிப்பாக அது தற்போது குழந்தைகளையும் காவு வாங்குமளவுக்கு கொடூரமாக மாறி வரும் வேளையில் நீதி வேண்டுவதும், அத்தகைய கொடுமைகக்காரர்களை தண்டிக்க வேண்டுவதும் அவசியமே. ஆனால் எந்த மதமும், எந்த இறைத்தூதரும், எந்த மத சீர்திருத்தவாதியும் இந்த மனித சமூகத்தை பண்படுத்திவிட முடியாது என்பதை நாம் அனைவரும் இப்போதாவது உணர்வது அதைவிட முக்கியமானது.

மதம் என்பது ஒரு நிறுவனம். பணக்காரர் வர்க்கம் சொத்து சேர்க்க ஏதுவாக மற்றவர்களை ஒடுக்க தோன்றிய ஒரு நிறுவனம். மற்றவர்களைக் காட்டிலும் தம்மை மேன்மையானவர்களாகவும், தூய்மையானவர்களாகவும் பிரகடணப்படுத்தி பாகுபாட்டை போதிக்கும் ஒரு நிறுவனமிது. வெறுப்பும் அதிகாரமுமே அதன் உள்ளுணர்வு. அராஜகமும், காட்டுமிராண்டித்தனமுமே அதன் அடித்தளம்.

அறிவிருக்கும் மனிதர்களாக பகுத்தறிவோடு சிந்திப்பதிலிருந்து எது நம்மை தடுக்கிறது? இத்தனை கடவுளர்கள் இருக்கையில் ஏன் ஒரு கடவுள் (ஆண்) கூட இந்த அராஜகங்களை நிறுத்த முடியவில்லை என்ற ஒரு எளிய கேள்வியைக் கூட நம்மால் கேட்கவியலாதா? எது நம்மை தடுக்கிறது?

‘பாவம்’, ‘புண்ணியம்’, ‘மறு பிறவி’ போன்ற வாதங்களால் எதிர்கொள்ளாதீர்கள். ‘பாவம்’, ‘புண்ணியத்தில்’ நம்பிக்கை உண்டெனில் எதற்காக நீங்கள் ஆசிஃபாவிற்காக கண்ணீர் சிந்துகிறீர்கள்? ‘நல்லவன்’, ‘கெட்டவன்’ என்பதில் நம்பிக்கை உண்டெனில், எதற்காக நீதி வேண்டி நீதிமன்றத்திடம் போராடுகிறீர்கள்? வாருங்கள் நாம் அனைவரும் ஒன்றுகூடி நம் உணர்ச்சி மிகு குரலால், பக்திப் பாடலால் கடவுளை இறங்கிவரச் செய்வோம். அவர் அவதாரம் எடுத்து ‘அசுரனை’க் கொல்லட்டும்.

எந்த மதமும், கடவுளும் வன்புணர்வு செய்ய சொல்லி கற்றுத்தரவில்லை. அது ’கெட்ட’ விஷயங்களை போதிப்பதில்லை என்பீர்களானால், தயவு செய்து உங்கள் இல்லங்களில் உள்ள மத நூல்களை எடுத்துப் படித்துப் பாருங்கள் – அது பெண்களைப் பற்றியும், உழைக்கும் வர்க்கத்தைப் பற்றியும் என்ன சொல்கிறது என்பது உங்களுக்குப் புரியும்.

நம்மை நாமே ‘மனிதர்கள்’ என்கிறோம். அதாவது சிந்திக்கத் தெரிந்த ஆறரிவு பெற்ற மனிதர்கள். பகுத்தறியக் கூடியவன் மனிதன், அல்லவா? நாம் நம்மை மனிதர்கள் என்று கூறுகையில், அது நாம் இயற்கையைப் பற்றி அறிந்திராத விலங்காண்டிகளாக, காட்டுமிராண்டிகளாக வாழ்ந்து பண்பட்ட மனிதர்களாக வளர்ந்துவிட்ட வரலாற்று வளர்ச்சியைச் சுட்டுகிறது. விலங்காண்டிகளும் காட்டுமிராண்டிகளும் இயற்கையின் மாறுதல்களை, அதில் நேரும் அழிவுகளையெல்லாம் புரிந்துகொள்ளக் கூடியவர்களாக இருக்கவில்லை. ஆகவே இயற்கை / அழிவு குறித்த அச்சம் அவர்களுக்கு இருந்தது. ஆகவே அவர்கள் அதனை வழிபட்டும், தம் நல்வாழ்விற்காக அதன் கருணையை வேண்டியும் வாழ நேர்ந்தது. பயத்திலிருந்து மீளும் விதமாக தமக்குத் தாமே உதவிக் கொள்ளும் வகையில் ஏதோ ஒன்றை பற்றிக்கொண்டனர். அத்தகைய மூடநம்பிக்கைகளிலிருந்து ஒரு சாரார் செல்வம் சேர்க்கவும், அதற்கு வேண்டிய அதிகாரத்தைப் பெறவும் உண்டான சுரண்டல்வாத சமூகத்திலிருந்து மதமும் கடவுளும் தோன்றின.

ஆளும் வர்க்கமாக, அரசாக தோன்றிய இந்தப் பிரிவு மற்றப் பழங்குடிகளை ஒடுக்கவும், அவர்களின் செல்வங்களை சூறையாடவும் ஆயுதங்கள் மற்றும் ‘இராணுவத்தை’ப் பயன்படுத்தினாலும், அடிமைப்படுத்தப்பட்டோர் தாமாக அடங்கிப் போகும் வகையில் மத கருத்தாக்கங்களையும், நெறிமுறைகளை போதிக்கும் மத நூல்களையும் உருவாக்கியது. அதன் மூலம் பாவம் புண்ணியம் என்னும் பெயரிலும், விசுவாசம் என்னும் பெயரிலும் அதிகாரத்திற்கு அல்லது அரசனுக்கு அல்லது எஜமானனுக்கு அல்லது முதலாளிக்கு மற்றும் ஒரு பெண் ஆணுக்கு தானாக அடிபணிந்து நடக்கும் அடிமைகளாக மனிதர்கள் மாற்றப்பட்டார்கள். மனிதன் உண்டாக்கிய சுயநலமிக்க நயவஞ்சகமான கருவியே மதம் (கடவுள்).

மனிதர்கள் என்போர் தம் புலன்களால் இயங்கக் கூடியவர்கள், கற்கக் கூடியவர்கள், சிந்திக்கக் கூடியவர்கள். அப்படியிருக்கையில், இயற்கைக்கு அப்பாற்பட்டு ஒரு சக்தி இருக்கிறது என்று நம்புவது விந்தையானதும், முட்டாள்தனமானதுமில்லையா? நம் புலன்களுக்குப் புலப்படாத பல விஷயங்கள் இயற்கையில் உள்ளன. ஆம்! அதற்காக கடவுளை வழிபட்டால் இவையெல்லாம் விளங்கிவிடுமா? இதுவரை மனிதர்கள் கண்டுபிடித்துள்ள அத்தனை விஷயங்களும் மனித மூளையின், மனித முயற்சியின் விளைவுதான் என்று ஏற்றுக்கொள்வதில் நமக்கு ஏதும் பிரச்சினைகள் உள்ளனவா? கடவுள் பற்றிய கதைகளும், பிம்பங்களும், உருவங்களும் மனித வாழ்வை அதன் வக்கிரங்களோடும், ஏற்றத்தாழ்வோடும் பிரதிபலிக்கும் ஒன்றுதான் என்பதை நம்மால் பகுத்தறிய முடியாதா? பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோமே, நாளுக்கு நாள் தீமைகள் பெருகிக்கொண்டே இருக்கையில் தீமையை அழிக்க தசாவாதாரம் எதையும் நாம் காண முடியவில்லையே.

ஆசிஃபாவுக்காக, நிர்பயாவுக்காக அல்லது பாதிக்கப்பட்ட யாரோ ஒரு மனிதருக்காக அழும் எம் சகோதர சகோதரிகளிடம் நான் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் – முதலில் உங்கள் நம்பிக்கைகளைப் பற்றி கேள்வி எழுப்புங்கள். ஏனென்றால் நம்மைப் போன்ற ‘நம்பிக்கைக்காரர்களே’ (சாதி, மதம் மற்றும் இதர கருத்தியல்கள் மீது நம்பிக்கையுள்ளவர்கள்) சமத்துவத்திற்கு தடைக்கற்களாக இருக்கின்றோம். இச்சமூகத்தில் ஏற்றத்தாழ்வை ஒழித்து சமத்துவத்தை நிலை நாட்டி உண்மையான நீதியை நிலை நாட்ட நம்பிக்கைக்காரர்களே தடை சக்திகள்.

அறிவியலுக்குப் புறம்பான நம்பிக்கைக்காரர்கள் தான் நம் ‘எதிரிக்குப் பாடம் புகட்ட வேண்டும்’ என்று அழித்தொழிக்கும் அதிகாரத்தை வழங்குபவர்கள். நாமே அதன் பாதுகாவலர்களும் கூட. ‘சரி’, ‘தவறு’, ‘நல்லது’, ‘கெட்டது’, ‘மேலானது’, ‘கீழானது’ என்றெல்லாம் சொல்லப்படும் ஒன்றை என்னவென்று கேள்வி கேட்காமல், ஆளும் வர்க்கம் நிர்ணயித்துள்ள இந்த எதிர்மறைகளின் உண்மையானப் பொருளை கேள்வி கேட்காமல் ‘தீமை’யை அழிக்கவும், தண்டிக்கவும் அதிகாரம் வழங்கும் நாம் தானே உண்மையில் ‘தீயவர்கள்’.

நம்பிக்கைக்காரர்களாக நாம் இந்த சமூகத்தில் நிலவும் நன்மை, தீமை, ஏழ்மை, செல்வநிலை, நல்லவர், கெட்டவர், தூய்மையானது, அசுத்தமானது, பலமானவர், பலவீனமானவர், மதம் x மதம், சாதி x சாதி, பாலினம் x பாலினம், இனம் x இனம் என்று பகைமை நிலவுவதற்கான அடிப்படை காரணங்களைப் பற்றி கேள்வி எழுப்ப விரும்புவதில்லை. ‘பாவம்’ x ‘புண்ணியம்’ அல்லது ‘நல்லவன்’, ‘கெட்டவன்’ ஆகிய வியாக்கியானங்களைப் பேசி சமாதானம் கொள்வோம். மிஞ்சிப் போனால், தாயின் ‘வளர்ப்பு’ சரியில்லை என்று ஒரு பெண்ணுக்கு சான்றிதழ் வழங்குவோம்.

மனிதர்கள் ஒன்று அறியாமையினாலோ அல்லது சுயநலத்தாலோ இதுபோன்ற ‘நம்பிக்கைக்காரர்களாக’ இருப்பார்கள் (சுயநலமே முதன்மை காரணம்). ஆனால், மனிதர்களாக சக மனிதனை துன்புறுத்தவும், கொல்லவும், வன்புணர்வு செய்யவும், ஒடுக்கவும், சுரண்டவும் அதிகாரம் வழங்கும் நம்பிக்கைகளை (மார்க்கம் - மதம்!) கேள்வி எழுப்பாமல் போனால் நம்மை ‘நாகரீக மனிதர்கள்’ என்று சொல்லிக் கொள்ளும் தகுதியும் நமக்கு உள்ளதோ?

To Read in English - https://masessaynotosexism.wordpress.com/2018/04/13/are-we-humans/



Apr 8, 2018

விளம்பரம் என்னும் நஞ்சு...



திரு. சூர்யா நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை உணர்ந்துதான் செய்கிறீர்களா, அல்லது வெறும் நடிகன் என்கிற உணர்விலிருந்து மட்டுமே உங்கள் தேர்வுகளை பொதுவெளியில் மேற்கொள்கிறீர்களா?
மீண்டும் மீண்டும் தவறான கருத்தியலை, பாகுபாட்டை நியாயப்படுத்தும் வகையிலான விளம்பரங்களிலேயே நடிக்கிறீர்களே, இதன் ஆபத்தை எப்போது உணர்வீர்கள்?
உஜ்ஜாலா கிர்ஸ்ப் & ஷைன் என்னும் விளம்பரத்தை இன்று காண நேர்ந்தது. அதில் என்ன திறமை இருந்தாலும் இந்த உலகம் ஒருவனின் உடையை வைத்துத்தான் மதிக்கிறது என்று ‘அக்கறையுடன்’ பேசியுள்ளீர்கள். குறைந்தபட்சம் அதையாவது பேசினீர்களே, மகிழ்ச்சி. ஆனால் அப்படி பாகுபடுத்திப் பார்க்கும் ஒரு பிரச்சினைக்குத் தீர்வு பாதிக்கப்பட்டவருக்கு அறிவுரை வழங்குவது, அல்லவா? இது எவ்வளவு வன்முறையானது, ஆபாசமானது என்பதை உணர முடிகிறதா உங்களால்?
முதல் விளம்பரத்தில், ஒரு அதிகாரி உங்கள் மிளிரும், விரைப்பான உடையக் கண்டு சுரேஷ் என்பவராக உங்களை நினைத்து புன்னகையுடன் அழைக்கிறார், அது தாங்கள் இல்லை என்றதும் மங்கலான கசங்கிய சட்டையுடன் வரும் மற்றொருவரைப் பார்த்து அந்த அதிகாரியின் முகம் கோணுகிறது. சந்திப்பதை தவிர்த்து செல்கிறார். ஆம் இதுதான் சமூக யதார்த்தம்.
அடுத்த விளம்பரத்தில் நேர்முகத் தேர்வுக்கு வந்திருக்கும் ஒருவர் தன்னுடைய MERITகளை சொல்லி பெருமை பேசுகிறார், ஆனால் அதே திறமைகளைக் கொண்டிருக்கும் உங்களின் உடைக்காக அந்த நிறுவனம் உங்களை தேர்ந்தெடுப்பதாகச் சொல்கிறது. உடனே “இந்த உலகம் நம்ம திறமையை மட்டுமல்ல, நம்ம டிரஸ்ஸையும் எடை போடும்” என்று உருக்கமாகப் பேசுகிறீர்கள்.
ஆனால் இதற்குத் தீர்வு – உஜாலாவுக்கு மாறுவதா? அல்லது அப்படி பேசிய அதிகாரியின் சட்டையைப் பிடித்துக் கிழிப்பதா? உங்கள் திரைப்படங்களில் அநியாயங்களை எதிர்த்தும், ஒடுக்குபவனை அடித்தும் பேசும் தார்மீக்க் கோபங்கள் எங்கு போனது? உங்களைப் போன்றோரை கதாநாயகனாக கட்டமைக்க ‘படைப்பாளிகள்’ அக்கறையோடு புனையும் வசனங்களையும், சிந்தனைகளையும் ஓய்வாக இருக்கும் போது அசை போட்டு பார்த்தாலே, கொஞ்சமேனும் அரசியல் விழிப்புணர்வு ஏற்படுமே. அதில் பெண் விடுதலைக்கு இடமில்லை எனினும், அநியாயங்களை தட்டிக் கேட்க வேண்டும், ஏற்றத்தாழ்வு கூடாது என்னும் Formula உணர்வையாவது எடுத்துக்கொள்ளலாமே.
இந்த நாட்டில் (உலகெங்கிலும்) மொழி, இனம், சாதி, மதம், பாலினம், உடல் திறன் என்று பல்வேறு ’அடையாளங்களை’ வைத்து மனிதர்கள் பாகுபாட்டிற்கு உள்ளாகிறார்கள், ஒடுக்கப்படுகிறார்கள், அடித்துக் கொல்லப்படுகிறார்கள். எல்லாரும் உஜாலாவுக்கு மாறிவிட்டால் தப்பித்துக்கொள்லலாமா? உலகம் இப்படித்தான் இருக்கு நாமதான் மாறணும் என்பது என்னவிதமான சமூக அக்கறை, என்னவிதமான அரசியல் புரிதல்? பெண்களும், குழந்தைகளும் வன்புணர்வுக்குள்ளாகையில் அவர்களின் உடைதான் காரணம் என்று இந்த ஆணாதிக்க சமூகம் வியாக்கியானம் செய்கிறதோ, அதற்கு நிகரான ஒரு உபதேசத்தை நீங்கள் இந்த விளம்பரத்தில் செய்துள்ளீர்கள். அதைப் பார்க்க பார்க்க நெஞ்சு பதைபதைக்கிறது. விளிம்பு நிலையில் உள்ளவர்களுக்குத் தான் அதில் உள்ள ஆபத்தான வணிகப் பேச்சின் பாதிப்பு புரியும். நீங்கள் எல்லாம் ‘மேட்டுக் குடியினர்’ உங்களைப் போன்றோருக்கு ‘சமூக அக்கறை’ என்பது பொழுதுபோக்கு, பெயர், புகழ், புண்ணியம் சேர்க்கும் வழிமுறையாக இருக்கலாம். எங்களுக்கோ அது வாழ்க்கைப் போராட்டம். போராட்டமே எங்கள் வாழ்க்கை என்னும் நிலையில் உள்ளோம். போராடுபவர்கள் அதற்கும் உரிமை இன்றி சிறையிலடைக்கப்படுகிறார்கள். போலீஸும் அரசும் அப்படித்தன் ஒடுக்கும், விரைப்பான உடை அணிந்து சென்றால் விட்டுவிடும் என்று நாம் சொல்ல முடியாது சூர்யா.
இந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் திரள் (உழைப்பாளிகள்) உடுத்த கோவணம் கூட இல்லாமல் இருப்பதைக் கண்ட காந்தி தன் மேலாடையைத் துறந்தார். இந்த விளம்பரத்தில் வருவது போல் - பிறப்பாலேயே ஒரு பிரிவினர் தீண்டத்தாகாதோர், நாகரீகமற்றோர், குற்றப்பழங்குடிகள் என்றெல்லாம் ஒதுக்கப்பட்ட சமூகத்திலிருந்து தலைவனாய் மேலெழுந்த அம்பேத்கர் ’நாகரீக’ உடை அரசியலை கையிலெடுத்தார். அப்போதும் அவரது சாதியைச் சொல்லி ஆதிக்க சமூகம் அவரை அவமானப்படுத்தி, ஒதுக்கி வைத்து கொடுமைகள் செய்தது. தங்களை வன்புணர்வு செய்யும் இராணுவத்திற்கு எதிராக பெண்கள் சிலர் முழுவதுமாக ஆடைகளைத் துறந்து தங்கள் நிர்வாண உடலை ஆயுதமாக்கினர். இப்படிப்பட்ட போராட்டங்கள் எல்லாம் அதிகாரத்திற்கு எதிராக ஆயுதமேந்துவதாக இருந்ததே ஒழிய பாதிக்கப்பட்டவர்களுக்குப் (வணிக ரீதியான) பொருள்களை வழங்கி உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளுங்கள் என்று சொல்லவில்லை. முதலாளிகளே உங்கள் விடிவெள்ளி, அவர்கள் தயாரிக்கும் பொருள்களே எங்கள் ‘உயர்வுக்கு’ வழி என்பது எவ்வளவு சுயநலம் மிக்க போதனை.

சமத்துவத்தை நிலைநாட்ட யார் மாற வேண்டும்?

நீங்கள், இயலாதவர்களுக்கு கல்வி கொடுக்கும் இலட்சிய அமைப்பை நடத்துகிறீர்கள்.
முதலாளிகளுக்கு மலிவான கூலிகளை உற்பத்தி செய்வதற்கான கல்விதான் அது எனினும், அதன் பயனைக் கூட வீணடிப்பதில் திரைப்படங்களும், விளம்பரங்களும் முதன்மைப் பங்கு வகிக்கின்றன.
உலகெங்கிலும் வறுமையே மரணத்திற்கான முதல் காரணமாக இருக்கிறது. அதில் மூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள். ஒருநாளைக்கு 20 ரூபாயில் வாழும் நிலையில் 836 மில்லியன் மக்கள் இருப்பதாகவும், தினம் தினம் 7000 இந்தியர்கள் வறுமையின் காரணமாக இறப்பதாகவும் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதைத் தவிர ஊட்டச்சத்து குறைபாட்டால் இறக்கும் குழந்தைகள், பெண்களின் எண்ணிக்கை இலட்சக் கணக்கில், ஆனால் நமக்கிருக்கும் கவலையோ முதலாளிகளின் பொருள்களுக்கு நுகர்வோரைப் பிடித்துக் கொடுத்து (ஆம், ஆட்பிடிக்கும் வேலைதான் அது) அவர்களை காப்பதாகவே இருக்கிறது.
மிகவும் வேதனையாக உள்ளது சூர்யா.
திரைத்துரையில் பெரும்பாலும் எதையோ செய்து பிழைக்கிறீர்கள்… பிற்போக்குத்தனமான சிந்தனைகளை உயர்த்திப் பிடித்து இந்த சமூகத்தை பின்னுக்குத் தள்ளுவதில் முனைப்புடன் இருக்கிறீர்கள். அதை பொறுத்துக்கொள்கிறோம். ஆனால் விளம்பரங்களிலும் அதுபோன்ற கருத்தியல்களை போதித்து இச்சமூகத்தை சீரழிவிற்குத் தள்ளிவிடாதீர்கள். ஏனென்றால் திரைப்படம் என்பதை பார்க்க அல்லது பார்க்காமல் இருக்க குறைந்தபட்ச தேர்வு எங்களிடம் உள்ளது, ஆனால் விளம்பரம்என்பது எங்களின் அனுமதியின்றி எங்கள் படுக்கையறை வரை எட்டிப் பார்க்கும் சாதனம். அது மீண்டும் மீண்டும் ஒளிபரப்பாகிறது. குறிப்பாக குழந்தைகள் விளம்பரங்களால் மிகவும் ஈர்க்கப்படுகின்றனர். அவர்களின் சிந்தனைகளை விளம்பரங்கள் கட்டமைக்கவல்லது. குறிப்பாக தரம், அந்தஸ்து, வெற்றி, இலட்சியம் பற்றி விளம்பரங்கள் போதிப்பவை எல்லாம் போட்டி போட்டுக்கொண்டு மனிதனை மனிதன் வெறுக்கச் செய்தலே. அதிலிருந்து அவர்களை மீட்டெடுப்பது பெரும் சவாலாக மாறி வருகிறது.
இச்சமூகத்தை நுகர்வு கலாச்சார அடிமைகளாக்குவதில் விளம்பரங்களே பெரும்பங்கு வகிக்கின்றன. அதனால் பயனடைவது முதலாளிகளே அன்றி மக்கள் அல்ல. Pl do not work hard to make a Capitalist Rich at the cost of our lives & problems.
கூடுதலாக இதற்கும் ஆலோசனை வழங்குங்கள்: பெண்கள் என்பதால் அவர்களின் உடலை இழிவாகப் பார்க்கும், நுகர நினைக்கும், வன்புணர்வால் சிதைக்கும் “எக்சக்குட்டிவ் லுக்கிலிருந்து” தங்களைக் காத்துக்கொள்ள பெண்கள் எதற்கு மாற வேண்டும்?
உங்களைப் போன்று உச்சத்தை எட்டாமல் கூலிக்கு மாறடிக்கும் நிலையில் உள்ளவர்களை நோக்கி நாம் இக் கேள்விகளை எழுப்பும் அவசியமில்லை, ஆனால் எல்லாவிதத்திலும் இன்று நீங்கள் ஓர் உயர்நிலையை எட்டியுள்ளீர்கள். தேர்வு செய்யும் சுதந்திரமும், அதிகாரமும் உங்களிக்கிருக்கிறது. அதை கூருணர்வுடன் பயன்படுத்துங்கள்.
உங்களின் சமூக அக்கறையின் காரணமாகவே இந்த வேண்டுகோளை நாங்கள் விடுக்கிறோம். அத்தோடு, இது உங்களுக்கு மட்டுமான வேண்டுகோளன்று விளம்பரங்களில் நடிக்கும் அனைத்து நடிகர்கள், நடிகைகள் மற்றும் இதுபோன்ற ஆபத்தான, பிற்போக்குத்தனமான, வணிகரீதியான சமூக அக்கறையை பண்டமாகப் பயன்படுத்தி விளம்பரங்களை உருவாக்கும் ‘படைப்பாளிகள்’ ஆகியோரிடமும் வைக்கும் வேண்டுகோள்.
விளம்பரங்கள் மிகவும் ஆபத்தான பிரச்சாரம் … சமூக பொறுப்புடன் செயல்படுங்கள்.
நன்றி
கொற்றவை

Apr 6, 2018

தனிமை என்னும் துணை



தனிமை - அதன் பன்முகத்தைக் கண்டுகொண்டால், தனிமை என்பது எப்போதும் துயராகாது.  
தனிமை குறித்து என்னைச் சுற்றியுள்ளவர்கள் துயரோடு பேசுகையில், அவர்களுக்காக இதை எழுத விழைகிறேன்.

தனிமை என்பது துணையின்றி வாழ்வதாகக் கருதப்படுகிறது. துணையோடு வாழ்வதே பெரும்பாலும் தனிமையாக உருமாறுகிறது என்பதே இச்சமூகத்தின் நகை முரண். சுயநலம், அதிலிருந்து விளைந்த சமூக மதிப்பீடுகள், அதற்கேற்ற சமூக உறவுகள், அதிலிருந்து எழும் நெருக்கடிகள் இதுவே வாழ்க்கை வட்டமாகிவிடுகிறது. குடும்ப உறவுகளும், காதல் உறவுகளும் அதன் ஒரு சிறிய அமைப்பு வடிவம். அவ்வளவே! இதில் பெறுவதற்கு நிறைய இருப்பினும், இழப்பதற்கு ஏதுமில்லை என்பதே எனது கண்டறிதல். அப்படியே ‘இழப்பு’ ஏற்படினும், அங்கு ஒரு புதியதற்கான இடம் பிறக்கிறது. இழப்பு அனுபவமாக மாறுகிறது. அது பல தத்துவங்களை உருவாக்கவல்லது. தேவைப்படுவதெல்லாம் அகவய மூழ்குதலுக்குப் பதிலாக புறவய எதிர்நீச்சல்.

சமூக உறவுகள் பற்றிய அறிவுத் தேடல் எதிர்நீச்சல் போடும் சக்தியை வழங்கும். கைக்கொண்டு பாருங்கள். மனித சமூகத்தின் வரலாற்று வளர்ச்சியோடு மனிதர்களுக்கிடையிலான உறவுகள் பரிணமித்து வந்துள்ளன. உறவும் கூட பண்டமயமாகிவிட்ட இக்காலகட்டத்தில் பொருள்களின் (நுகர்வுப் பொருள்/பணம்) இருப்பும் அளவுமே ஒருவரின் வாழ்வை, சிந்தனையை, தேவையை, உறவுகளை, தேடலை வடிவமைக்கிறது. இந்த உண்மை விளங்குகையில், நம்மைக் கட்டுப்படுத்தும் எதுவொன்றும் - உணர்ச்சிகள் – உணர்வுகள் உட்பட எதுவும் இயற்கையானதல்ல என்னும் உண்மையும் விளங்கும். அந்த உண்மையே நல் துணையாக மாறி நம் வாழ்வை இன்பமயமாக்க வல்லது.

ஆனால், இத்தேடலை மேற்கொள்ளக்கூட நமக்கு ஒரு மனநிலை தேவைப்படுகிறது. தனிமைத் துயர் என்னும் மூடநம்பிக்கை அதற்குள் நம்மை மூழ்கடித்துவிடுகிறது. துன்பப்படாமல் இருக்க முடியாது எனினும், அதற்கொரு சிறப்பிடம் கொடுத்துவிடாதீர்கள். ஏனென்றால் பிறகு அதனை சுவைக்கத் தொடங்கி, அதுவே ஒரு போதையாகி விடக்கூடும்.

தனிமை என்பது அதிகாரமளித்தல். நம்மை நாமே நிர்வகித்துக்கொள்ளவும், சுதந்திரமாக இயங்குவதற்குமான அதிகாரத்தை அது நமக்கு வழங்குகிறது. தனிமை என்பது நேரம். அது முழுக்க முழுக்க நமக்கானதாய் அமைகிறது. அதனை திகட்ட திகட்ட பருகலாம்.  

துணை என்று ஒன்றிருந்தால் இவற்றையெல்லாம் சரிசமமாக பகிர்ந்துகொள்ளலாம். இல்லையேல் அதுவும் நமகே நமக்காய்… கொண்டாடுங்கள். எல்லாவற்றுக்கும் மேலாக தனிமை என்பது வீடு / குடும்பம் என்னும் அமைப்பிற்குள் நம்மை அடைத்துக்கொண்டு நாம் கற்பனை செய்வதாகும். அந்த சிறைக்குள்ளிருந்து நாம் தான் நம்மை விடுவித்துக்கொள்ள முடியும். அதற்கு நூல்களும், வாசிப்பும் சிறந்த ஊக்கமருந்து. வாசிக்க வாசிக்க சிறகு முளைப்பதை உணர முடியும். அடுத்ததாக இசை எந்த முயற்சியுமின்றி நம்மை தளர்த்தக்கூடியது. பயணம். தனியாக வாழ்பவர்கள் பெற்றிருக்கும் சிறந்ததொரு அதிகாரமிது.

“இதற்கெல்லாம் பணம் தேவையில்லையா. சாப்பாட்டிற்கே வழியில்லாத போது எங்கிருந்து புத்தகம் வாங்க, பயணம் போக…”    

இப்போது நான் சொல்லப்போவது சற்று காட்டமாக இருக்கலாம். உண்மையில், கடின உடல் உழைப்பாளிகளுக்கும். கொடிய வறுமையில் வாடுவோருக்கும் தனிமைத் துயர் பற்றி எண்ணக் கூட நேரமிருக்குமா தெரியவில்லை. இந்தத் தனிமை துயரில் வாடுவோரும் பெரும்பாலும் குறிப்பிட்ட வர்க்கத்தினராக (பெரும்பாலும் மூளை உழைப்பாளிகளாக) இருக்க வாய்ப்புள்ளதோ என்று நான் எண்ணுவதுண்டு. வறுமைக்கோட்டில் வாழ்வோருக்கு வாழ்வதே போராட்டமாக இருக்கையில் உழைத்து களைத்து உறங்கச் சென்றுவிடுகிறார்கள் போலும். அதையும் மீறி துணை சார்ந்த விஷயங்களில், ‘அழகான வாழ்க்கை’ பற்றிய அவர்களுடைய எதிர்பார்ப்புகள் முற்றிலும் வேறானதாக இருக்கிறது. ஆகவே உறவமைதல் எளிதாகி விடுகிறது. அந்நிலையிலிருந்து சற்றே மேல் நிலையில் இருப்பவர்களுக்கே சமூக அழுத்தத்தின் காரணமாக இந்த மனச்சிக்கல் ஏற்படுகிறது. (அதற்கும் மேல் நிலையில் இருப்பவர்களின் நிலை வேறு).
இன்பமென்றும், காதலென்றும், சிறந்ததொரு வாழ்வென்றும் நமக்குப் போதிக்கப்படுவதை கற்பனை செய்துகொண்டிருக்க நிறைய நேரமிருப்பதாலும், பகுத்தறியாமல் அவற்றை அப்படியே உள்வாங்குவதாலும் கூட தனிமை என்பது துயர் மிகுந்ததாகிவிடுகிறது.

இந்தத் தனிமை என்னும் ‘சாத்தானை’ பிறக்க விடுவதே ஆபத்து. கருவிலேயே அழித்துவிடுங்கள். இல்லையேல் அது சாத்தானை விடக் கொடிய ‘கடவுளாய்’ வளர்ந்து நம்மை அழிக்க அவதாரம் எடுத்துவிடும்.

தனிமையிடமிருந்து விடுபட மற்றொரு உயிர்தான் துணையாக இருக்க வேண்டுமென்பதில்லை. ஓருயிர் என்பதை விடுத்து பல்லுயிர்களை நாடிப்பாருங்கள். மனிதனிடமிருந்து விலகி, சமூகத்தை நெருங்குங்கள். நமக்கு இன்பம் தரும் நிலையில் இங்கு எந்த மனிதருமில்லை. நமக்கான இன்பத்தை நாம் தான் உருவாக்கிக்கொள்ள முடியும். அதற்கு நமக்கான இன்பம் என்ன என்பதை முதலில் நாம் வரையறுக்க வேண்டும்.  அப்படி வரையறுக்க பகுத்தறிவே வழிகாட்டி. சமூக உறவுகள் (மனித சாரம்) பற்றிய சமூக விஞ்ஞான நூல்கள் (எழுத்துகள்) அதற்கான கலங்கரை விளக்கம்.

மேற்சொன்னவை நம்மை மனதளவில் விடுவிக்க உதவலாம். உடல் ரீதியான தேவைக்கு என்ன செய்வது என்றொரு கேள்வி எழலாம். துணை இருப்பதால் மட்டுமே யாரும் உடலின்பத்தில் திளைத்து மகிழ்ந்து வாழ்ந்துவிடுவதில்லை. அது வேறொரு புதிய சிக்கலாக மாறிவிடுவதும் உண்டு. குறைந்தபட்சம் தனியாக வாழ்வோருக்கு இத்துன்பம் வாய்க்காது. இயற்கை அதற்கும் நமக்குள் சில இயல்பூக்க வழிகளை வகுத்துள்ளது. அதன் மூலம் அவ்வேட்கையை சற்று தணித்துக்கொள்ள முடியும் என்று கருதுகிறேன்.

துரதிர்ஷ்டவசமாக பாலுறவு மற்றும் காமம் சார்ந்த இழிவான ஆணாதிக்க சமூக கட்டமைப்பால் உடலுறவு என்னும் இயற்கைத் தேவையை நாம் ‘முறைபடுத்தப்பட்ட உறவுக்குள்’ மட்டுமே பூர்த்தி செய்துகொள்ள முடியும். ஆனால் அதுபற்றிய அரசியல் அறிவை பெற்றுவிட்டால், இச்சக்கலிலிருந்து விடுபடவும், தேவையான தீர்வை வகுத்துக்கொள்ளவும் நாமே கற்றுக்கொள்வோம்.

நம் (மன) மகிழ்ச்சிக்காக நாம் எவரையும் சார்ந்திருக்கும் வரை மகிழ்ச்சி என்பது எட்டாக் கனியே.

சொல்லுதல் யார்க்கும் எளியவாம் என்று எண்ணிவிடாதீர்கள். இது அனுபவப் பகிர்தலும் கூட J

தனிமை வாய்ப்பு!
தனிமை திறப்பு
தனிமை புதுமை!
தனிமை விடியல்!
தனிமை புத்துணர்ச்சி
தனிமை செல்வம்
தனிமை இன்பம்
தனிமை கொண்டாட்டம்
தனிமை புதுமொழி
தனிமை காதல்
தனிமை பேரறிவு
தனிமை மெய்யறிவு
தனிமை விடுதலை