சாதியமைப்பு பற்றிய மார்க்ஸின் கருத்துரு*:
ஒரு புனரமைப்பு
(ஆய்வுக்
கட்டுரை)
- பி.ஆர்.
பாபுஜி
அறிமுகம்
அ-மார்க்சியர்கள்
(மார்க்சிய எதிர்ப்பாளர்கள் உட்பட), கல்வியாளர்
புலத்திலும் சரி, பொது அறிவாளர் புலத்திலும் சரி, மார்க்ஸின் சமூகக் கோட்பாட்டிற்கு
எதிராக இரண்டு வகையான வாதங்களை முன் வைக்கின்றனர். முதல் வகையான வாதம், மார்க்ஸின் ஆய்வுகள் பத்தொன்பதாம்
நூற்றாண்டு ஐரோப்பாவிற்கு மட்டுமே பொருந்தக்கூடியது, இன்றைய நிலையில் இந்தியா உட்பட
எந்த நாட்டிற்கும் உதவாது. இரண்டாவது வகையான வாதம், சமகால முதலாளித்துவ உலகிற்கு மார்க்ஸ்
ஒருவேளை பொருந்தலாம், பொருந்தாமலும் போகலாம்; ஆனால் இந்தியாவில் வேறூன்றியிருக்கும்
சாதியமைப்பின் காரணமாக மார்க்ஸ் இந்தியாவிற்கு உதவ மாட்டார். சமகால முதலாளித்துவத்தை
ஆய்வு செய்ய மார்க்ஸ் எந்த வகையில் பொறுத்தமானவர் என்று மார்க்சியர்கள் தொடர்ந்து நிறுவிவந்துள்ளனர்.
இருப்பினும், சாதியமைப்பு பற்றிய மார்க்ஸின் கருத்துருவை இந்திய நிலைமைகளில் பொறுத்திப்
பார்த்து விளக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை, அல்லது மிகவும் சொற்பமானது.1
கார்ல் மார்க்ஸின் இறுதியானதும், முக்கியமான படைப்புமான மூலதனம்
உள்ளிட்ட பல படைப்புகளில் குறிப்பிட்ட அவரது அவதானிப்புகளை முன் வைத்து சாதியமைப்பு
பற்றிய மார்க்ஸின் கருத்துருவை புனரமைப்பு [மறு நிர்மாணம் – மொ.ர்] செய்வதே இந்த ஆய்வின் நோக்கம். பயன் மதிப்பு, பரிவர்த்தனை மதிப்பு, மூளை உழைப்பு,
உடல் உழைப்பு மற்றும் உழைப்புச் சக்தி போன்ற சாதியமைப்பிற்குத் தொடர்புடைய பொருளாதார
வகையினங்களைக் கொண்டு சாதி பற்றிய கருத்துருவைக் கண்டடைய முற்படுகிறது. சாதியமைப்பு
எவ்வாறு குறிப்பிட்ட வகையான உழைப்புப் பிரிவினையின் மீது சார்ந்திருக்கிறது என்பதை
இவ்வாய்வு விளக்கும்.
‘கீழ் சாதிகள்’ தங்களுக்கு
விருப்பமான தொழிலைத் தேர்ந்திடுத்துக்கொள்வதற்கான ‘சுதந்திரம்’ தொடர்பான அவதானிப்புகளும்
இதில் இடம்பெறும். மேலும், சாதி எதிர்ப்பு இயக்கங்களாக தம்மைக் காட்டிக் கொள்ளும் பாட்டாளி
வர்க்க இயக்கங்கள் அல்லாத இயக்கங்களின் தோற்றத்திற்கு
வழிவகுத்த அரசியல் நிலைமையையும் இந்த ஆய்வின் மூலம் விளக்க முற்பட்டிருக்கிறது.
‘சாதியமைப்பு’ குறித்த மார்க்ஸின் அவதானிப்புகள்:
‘சாதி’ குறித்து மார்க்ஸ் சிறப்பு ஆய்வுக் கட்டுரைகள்
எதையும் எழுதவில்லைதான், ஆனால் சாதி குறித்து அவர் தொடர்ந்து அவதானிப்புகளை
முன்வைத்துள்ளார், வலிமை வாய்ந்த கருத்துரு வகையினங்கள் கொண்டு அவை விளக்கப்பட்டுள்ளன.
காலவரிசைப்படி சொல்வதானால், மார்க்ஸும் எங்கெல்ஸும் இணைந்து,
முதல் முதலாக சாதியமைப்பு குறித்து ஜெர்மன்
சித்தாந்தத்தில் (1845-46) குறிப்பிடுகிறார்கள். சாதி பற்றிய இறுதி குறிப்பு மூலதனம் பாகம் 1 (1867) இல் வருகிறது. 2
வரலாறு பற்றிய கருத்துமுதல்வாத கண்ணோட்டத்தைப் பொதுவாகவும், ஜெர்மானியின்
பின்-ஹெகலிய தத்துவத்தைக் குறிப்பாகவும் விமர்சிக்கும்போது மார்க்ஸும், எங்கெல்ஸும்
(1845-46: 63) இந்தியாவில் நிலவும் பக்குவற்ற உழைப்புப் பிரிவினையானது அரசு மற்றும்
மத நிறுவனங்களால் சாதியமைப்பாக உருவெடுக்க வகை செய்தது என்றனர். சாதியமைப்புதான் பக்குவமற்ற அந்த உழைப்புப் பிரிவினையை
ஏற்படுத்தியது என்னும் கருத்துமுதல்வாத நம்பிக்கையை அவர்கள் விமர்சனம் செய்தனர்3
. இவ்வாறாக மார்க்ஸைப் பொறுத்தவரை
(1846:158), சாதியப் படிநிலை ஆட்சி என்பதும் குறிப்பிட்ட வகையான உழைப்புப் பிரிவினையே4.
வேறு சொற்களில் சொல்வதானால், “உழைப்புப் பிரிவினையே சாதியை
உருவாக்கியது” (மார்க்ஸ் 1846-47: 114). இருப்பினும், இந்தக்
குறிப்பிட்ட உழைப்புப் பிரிவினை ‘பரம்பரை உரிமை’ என்னும் வகையில் உள்ளது (மார்க்ஸ் 1853b:
497)5.
மார்க்ஸைப் பொறுத்தவரை (1867:321), முந்தைய சமுதாயங்கள் தொழில்களைப்
பரம்பரையாக்கி, சாதிகளாக அவற்றை ‘உறைந்து இறுகச் செய்யும்’ (இந்தியாவைப் போல்) அல்லது ‘கைவினைச் சங்கங்களாக
சமைந்து கெட்டிப்படச் செய்யும் (எகிப்தைப் போல்) போக்கைக் கொண்டிருந்தன6.
சாதியமைப்பின் கீழ் குறிப்பிட்ட ‘தீர்மானகரமான சட்டதிட்டங்களுக்கு’ ஏற்ப உழைப்புப்
பிரிவினை நிலவியது என்கிறார் மார்க்ஸ். இந்த சட்டங்களை சட்டம் இயற்றுபவர் ‘நிறுவவில்லை’
என்றவர், கூடுதலாக, பொருளாயத அடிப்படையிலேயே இந்நிலைமைகள் தோன்றின என்றும், அவை சட்ட
நிலைக்கு உயர்த்தப்பட்டன என்றும் கூறுகிறார்7. பின்னர் அந்த சட்டமானது தொழிலை ஒரு மரபார்ந்த உரிமையாக்கி,
சாதியமைப்பாக நிலைநாட்டப்படுகின்றன8. மார்க்ஸைப் பொறுத்தவரை, சமூகமானது
குறிப்பிட்டளவு வளர்ச்சியை எட்டிய பின்னரே சாதிகள் மரபு வழியிலான சட்டநிலையை எட்டியது9.
மேலும், சாதியப் பாகுபாடுகளானது ‘இந்திய நாட்டு முன்னேற்றத்திற்கும், இந்திய அதிகாரத்திற்கும்’
தீர்மானகரமான இடையூறாக நின்று இந்தியச் சமூகத்தை ‘பாழ்படுத்தி’ வருகிறது என்றார். அதுமட்டுமின்றி, ‘இரயில்வே முறையின் விளைவாகத் தோன்றும் நவீன தொழிற்சாலை,
இந்தியாவின் சாதிகளை தாங்கி நிற்கும் பாரம்பரிய உழைப்பு பிரிவினையை கலைத்துவிடும்’
என்றும் அவதானித்தார். இருப்பினும், மலிவு விலையில் பஞ்சு மற்றும் இதர கச்சாப் பொருட்களை
எடுத்துச் செல்லவே பிரிட்டிஷ் முதலாளித்துவமானது இரயில்வேயை அறிமுகப்படுத்தியது என்பதை
மார்க்ஸ் அறியாமல் இல்லை.
தொடர்புடைய சில கருத்துரு வகையினங்கள்
சாதியமைப்பு பற்றிய மார்க்ஸின் கருத்துருவை மறு நிர்மாணம் செய்வதற்கு
முன், நம்முடைய விவாதத்திற்குத் தொடர்புடைய சில பொருளாதார வகையினங்களின் பொருள்களை
அறிந்துகொள்வோம்.10
1. சமூகம் என்பது வெறுமென்று தனி நபர்களின் கூட்டமல்ல,
மாறாக, இந்தத் தனிநபர்களுக்கிடையிலான உறவுகளின் கூட்டுமொத்தத்தையும், அவை கட்டியெழுப்பப்பட்டிருக்கும் நிலைமைகளையும்
குறிப்பதாகும்.
2. உழைப்பு என்பது மனிதர்களும் இயற்கையும் இணையும்
ஒரு நடைமுறை, அதாவது இயற்கை மீது மனிதர்கள் நிகழ்த்தும் செயல்பாடு. அதன் போக்கில் மனிதர்கள்
தங்களுக்கும் இயற்கைக்கும் இடையிலான பொருளாயத உறவுகளை ஏற்படுத்தியும், ஒழுங்கமைத்தும்
அதைக் கட்டுப்படுத்தவும் செய்யும் நடைமுறை.
3. உழைப்புப் பிரிவினை என்பது வெவ்வேறு வகையான
உழைப்பாகும், அது வெவ்வேறு வகைப் பொருள்களில், சரியாகச் சொல்வதானால், சரக்கில் வெளிப்படும்
ஒன்றாகும். வேறு சொற்களில் சொல்வதானால், குறிப்பிட்ட சிலர் குறிப்பிட்ட உழைப்பிலும்,
மற்றவர் வேறு வகையான உழைப்பிலும் ஈடுபடும் நிலைமை.
4. சரக்கு என்பது மனிதர்களின் தேவையைப் பூர்த்தி
செய்யத்தக்க பண்புடைய ஒரு பொருள். மனித உழைப்பின் உருவகமாக அது மற்றொரு சரக்கோடு பரிவத்தனை
செய்யும் மதிப்பைப் பெறுகிறது.
5. பயன் மதிப்பு என்பது ஒரு சரக்கின் பயன்பாடு
ஆகும்.
6. பரிவர்த்தனை மதிப்பு என்பது ஒரு சரக்கின்
உற்பத்தியில் செலவிடப்பட்ட உழைப்பின் கூட்டுமொத்தமாகும்.
7. உழைப்புச் சக்தி என்பது மூளை உழைப்பாகவோ அல்லது
உடல் உழைப்பாகவோ குறிப்பிட்ட உழைப்பில் ஈடுபடும் ஒருவரின் மொத்தத் திறனாகும்
8. உழைப்புச் சக்தியின் மதிப்பு என்பது உழைப்புச்
சக்தியை உற்பத்தி/மறு-உற்பத்தி செய்யத் தேவைப்படும் சமூகத்திற்கு அவசியமான உழைப்பு
நேரமாகும். உழைப்புச் சக்தியின் மதிப்புக்கு
குறைந்தது நான்கு அம்சங்கள் பங்களிக்கின்றன. (i) உழைப்பாளியின் பிழைப்பாதாரத்திற்கான
பராமரிப்பு (உணவு, உறைவிடம் மற்றும் உடை) (ii) உழைப்பாளரின் குறிப்பிட்ட வகையான உழைப்பு
(பயிற்சி அளிப்பது, மற்றும் இதர…) (iii) பண்பாட்டு நிலை (கலை, இலக்கியம்) மற்றும்
(iv) உழைப்பாளரின் மறு-உற்பத்தி (புதிய தலைமுறை உழைப்பாளர்களை உண்டாக்குதல்).
9. மூளை உழைப்பு என்பது பெரும்பாலும் மூளைத்
திறனைக் கொண்டு ஈடுபடும் உழைப்பு (உ.ம். கற்பித்தல், எழுதுதல் போன்றவை).
10. உடல் உழைப்பு என்பது பெரும்பாலும் உடல் திறனைக்
கொண்டு ஈடுபடும் உழைப்பு (உ.ம். நெசவு, தோல் பதனிடுதல் போன்றவை).
11. தேர்ச்சி பெற்ற உழைப்பு என்பது சிறப்பு பயிற்சிகளை
உள்ளடக்கியது, குறிப்பிட்ட கால அனுபவத்தினாலும் அதனைப் பெற முடியும். அது மூளை உழைப்பாகவோ
அல்லது உடல் உழைப்பாகவோ இருக்கலாம்.
12. தேர்ச்சியற்ற உழைப்பு
என்பது சிறப்பு பயிற்சிகளற்றது, குறுகிய கால அனுபவத்தினால் அந்த உழைப்புத் திறனைப்
பெற்றுவிட முடியும். அதுவும் மூளை உழைப்பாகவோ அல்லது உடல் உழைப்பாகவோ இருக்கலாம்.
13. சுத்தமான பணி என்பது துப்புரவு, அசுத்தங்கள்
மற்றும் மாசு நீக்குதல் போன்ற பணிகள் அல்லாதவை (உ.ம். கற்பித்தல்) அது மூளை உழைப்பாகவோ
அல்லது உடல் உழைப்பாகவோ; தேர்ச்சி பெற்றதோ அல்லது தேர்ச்சி பெறாத உழைப்பாக இருக்கலாம்.
14. அசுத்தமான பணி என்பது அழுக்கு, அசுத்தம்,
மாசுகளோடு தொடர்புடைய உற்பத்தி நடைமுறையைக் குறிக்கிறது. மாசு நிறைந்த கச்சாப் பொருட்கள்,
துணைப் பொருட்கள் ஆகையவற்றைப் பயன்படுத்தி செய்யும் வேலை (உ.ம். பிணங்களை அப்புறப்படுத்துதல்,
தோல் வேலை, மலம் அள்ளுதல், கழிவுநீர் சுத்திகரிப்பு, முடி திருத்தம் செய்வது, சலவை
செய்வது போன்றவை) அசுத்தப் பணி என்பது முழுக்க முழுக்க உடல் உழைப்பே ஆகும், அதற்கு
பயிற்சியோ, தேர்ச்சியோ தேவைப்படாது.
15. உழைப்பாளிகள் என்போர் ஏதோ ஒரு வகையான உழைப்பில்
ஈடுபடுபவர்கள், உபரி உற்பத்தியைப் படைப்பவர்கள் அதாவது தங்களது பிழைப்பாதாரத்திற்குத்
தேவையான அளவைக் காட்டிலும் அதிக அளவிலான பொருட்களை உற்பத்தி செய்பவர்கள்.
16. உழைப்பாளி அல்லாதார் என்போர் உழைப்பாளிகள்
புதிதாக உற்பத்தி செய்யும் உபரி பொருட்களை அபகரித்து வாழ்பவர்கள். இந்த உழைப்பாளி அல்லாதாரிடமே
உற்பத்தி சாதனங்களின் உடைமையும் கட்டுப்பாடும் இருக்கின்றது.
மார்க்சை முன்வைத்து சாதி என்னும் கருத்துருவை
புனரமைத்தல்
சாதியமைப்பு பற்றி மார்க்சின் அவதானிப்புகளை அடிப்படையாகக் கொண்டும்,
அதனை தொடர்புடைய மற்ற கருத்துருவாக்க வகையினங்களோடு இணைத்தும், சாதி என்னும் கருத்துருவை
மார்க்சைக் கொண்டே நம்மால் மறுநிர்மாணம் செய்ய முடியும்.
ஒரு வரைபடத்தின் மூலமாகவும் (பின்னிணைப்பைக் காணவும்) குறிப்பிட்ட
கருத்துருவாக்கத் தரவுகள் மற்றும் முன்மொழிவுகளைக் கொண்டும் நாங்கள் எங்கள் மறுநிர்மானத்தை
(புனரமைப்பு – மொ.ர்) விளக்க விரும்புகிறோம்.
1) மனிதர்கள் எப்போதும் சமூக இருத்தலுக்கான உற்பத்தியில் (புரொடக்ஷன் ஆஃப் சோஷியல் எக்சிஸ்டன்ஸ்)
ஈடுபடுகிறார்கள். அது உடல், மூளை, பொருள், பொருளல்லாத, ஸ்தூலமான, அருவமான வகைகளில்
இருக்கலாம்.
2) சமூக இருத்தல் என்பது பல்வேறு மட்டங்களிலான நடவடிக்கைகளைக் கொண்டதாக
இருக்கும்: பொருளாதாரம் (அடிக்கட்டுமானம்) மற்றும் அரசியல், சட்டம், தத்துவம், கலை,
மதம், சித்தாந்தம் (கருத்தியல் – மொ.ர்) போன்றவை (மேற்கட்டுமானம்).
3) சமூக இருத்தலுக்கான உற்பத்தியானது சமூக உழைப்பின் மூலம் நடைபெறுகிறது.
சமூக உழைப்பு ஒழுங்கமைக்கப்படும் முறை ‘உழைப்புப் பிரிவினை’ எனப்படுகிறது. இது ஆதியில்
(அதாவது பரிவர்த்தனை என்பது தோன்றுவதற்கு முன்பாகவும் உ.ம்: புராதன பழங்குடி சமுதாயங்கள்)
‘இயற்கையாக வளர்ச்சி பெற்ற பல்வகைப்பட்ட வணிக/ தொழில்களாக இருந்தன.
4) மனித சமூகத்தில் நடைபெறும்
உழைப்பை நாம் பின்வருமாறு பிரிக்கலாம்: உடல் உழைப்பு / மூளை உழைப்பு, தேர்ச்சி பெற்ற
/ தேர்ச்சி பெறாத உழைப்பு, நிர்வாகம் / நிர்வாகமல்லாத பணிகள், சுத்த/அசுத்த உழைப்பு,
பலாத்காரம்/பலாத்காரமல்லாத (அதாவது உடல்ரீதியான பலவந்தத்தை, வன்முறையை பிரயோகிப்பது)
பணிகள், அடிக்கட்டுமானம் சார்ந்த நடவடிக்கைகள், மேற்கட்டுமானம் சார்ந்த நடவடிக்கைகள்,
நியாயமான/தவறான (உ.ம். போர் தொடர்பானவை) நடவடிக்கைகளைக் கொண்ட சமூக இருத்தலுக்கான உற்பத்தி
5) பல்வகைப்பட்ட உழைப்பானது பரவலாக இரண்டு பயன் மதிப்புகளின் கீழ்
வருகிறது: உடல் உழைப்பு சார்ந்தவை, மூளை உழைப்பு சார்ந்தவை.
6) வெவ்வேறு வகையான உழைப்புக்கு வெவ்வேறு அளவிலான பரிவர்த்தனை மதிப்பு
உள்ளது (உ.ம். உழைப்பு சக்தியின் மதிப்பு – வருவாய் அல்லது பிழைப்பாதாரப் பொருள்).
அதன் குறிப்பிட்ட இயல்பைப் பொறுத்து. (உ.ம். மூளை, நிர்வாகம், தேர்ச்சி, சுத்தமான பணிகளுக்கான
உழைப்பு உடல் உழைப்பு, நிர்வாகமல்லாத, தேர்ச்சியற்ற, அசுத்தப் பணிகளுக்கான உழைப்பைக்
காட்டிலும் அதிக பரிவர்த்தனை மதிப்பைக் கொண்டது).
7) வரலாற்றுரீதியாக இதுவரை அறியப்பட்ட உழைப்புப் பிரிவினையானது
‘மரபுவழியிலான’ (சம்பிரதாயங்கள் மற்றும் சட்டத்தின் மூலம் பெறப்படுவது) மற்றும் மரபு
வழி அற்றவை.
8) மரபுவழி உழைப்புப் பிரிவினையானது இந்தியா போன்ற சமூகங்களில்
‘சாதியமைப்பிற்கும், ‘தனிப்பட்ட கைவினைச்
சங்க அமைப்பு’ தோற்றத்திற்கும் வழிவகுத்தது; அதேபோல் மரபுவழி அல்லாத உழைப்புப் பிரிவினையானது
சாதியமைப்பற்ற, தனிப்பட்ட கைவினைச் சங்க அமைப்புகளற்ற சமூகங்களாக இருக்கின்றன.11
9) குறிப்பிட்ட அளவு வளர்ச்சியை எட்டியபின், இயற்கையாக வளர்ச்சி
பெற்ற பல்வகைப்பட்ட வணிகங்களும் தொழில்களும் ‘மரபார்ந்த சாதிகளாக’ இறுகிப் போகும்.
10) சாதியின் மரபார்ந்த தன்மையானது குறிப்பிட்ட சாதி தனிநபர்களை/
தலைமுறைகளை குறிப்பிட்ட வகையான உழைப்புப் பிரிவினையோடு
கட்டிப் போடுகிறது, அதன்மூலம் குறிப்பிட்ட வகையான திருமண அமைப்பையும் (அகமண முறை) வரையறுக்கிறது.12
11) பொருளாயத மற்றும் மூளை சார்ந்த உற்பத்தி சாதனங்களை கட்டுப்பாட்டில்
வைத்திருக்கும் சமூக வர்க்கங்கள் அல்லது குழுக்களே சாதியமைப்பின் வடிவத்தில் குறிப்பிட்ட
வகையான உழைப்புப் பிரிவினையை ஒழுங்குபடுத்தும் சமூக விதிகளைப் படைக்கின்றன. 13
12) குறிப்பிட்ட வகை/வகைகளிலான
உழைப்பில் ஈடுபடும் பிரிவு/பிரிவுகள் ‘உயரிய’ பரிவர்த்தனை மதிப்பைப் பெற்று ‘மேல்’
சாதிகளாகின்றனர், ‘கீழான’ பரிவர்த்தனை மதிப்பை உடையோர் ‘கீழ்’ சாதிகளாகின்றனர் மற்றையோர்
‘இடை’ சாதிகளாகின்றனர். 14
13)
சுத்தப் பணி மற்றும் அசுத்தப் பணிகளுக்கு (’குறைவான அசுத்தப்’ பணி மற்றும் ‘மோசமான’
அசுத்தப் பணியை உள்ளடக்கியது) இடையிலான வேறுபாடானது ‘தீண்டாமை’ என்னும் நிகழ்வுப்போக்கு
தோன்ற வழிவகுத்தது. 15
14)
மரபுவழியிலான உழைப்புப் பிரிவினையின் அடிப்படையில் இருக்கும் இந்திய சாதிகள் ‘இந்தியாவின்
முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கும் தீர்மானகரமான தடைக்கற்கள்’ ஆகும்.
15)
பிரிட்டிஷ் முதலாளித்துவத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இரயில்வே அமைப்பின் விளைவாக தோன்றிய
நவீன தொழிற்சாலைகள் இந்தியாவில் சாதியமைப்பை முழுமையாக ஒழிக்காவிட்டாலும், குறிப்பிட்ட
அளவு பலவீனப்படுத்தியுள்ளது.
16) ‘நவீனத் தொழிற்சாலை’யின் விளைவாக (அதாவது, முதலாளித்துவ
உற்பத்தியின் கூறுகள்) தங்களது பரம்பரை தொழில்களை மட்டுமே அந்ததந்த சாதிகள் கண்டிப்பாக
பின்பற்ற வேண்டும் என்று மக்களுக்கு கட்டளையிடும் சமூக விதிகள் ஏதுமில்லை.
17) ‘மாபெரும் சமூக புரட்சி’யின் விளைவாக (அதாவது சமத்துவமற்ற/மரபுவழியிலான
உழைப்புப் பிரிவினையை வேரோடு மாற்றியமைப்பதன் மூலம்) சாதியமைப்பு தூக்கி எறியப்படும்.
சாதியை ஒழிப்பதற்கான பாட்டாளி
வர்க்க புரட்சிகர செயல்திட்டம்
‘இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் எதிர்கால விளவுகள் பற்றி
விவாதிக்கையில் மார்க்ஸ் (1853b) இரயில்வே அமைப்பால் தோன்றப் போகும் நவீனத் தொழிற்சாலைகளின்
விளைவாக சாதி கலையக்கூடிய சாத்தியம் பற்றி மார்க்ஸ் குறிப்பிடுகிறார். பிரிட்டிஷ் பூர்ஷுவாக்களின்
நலனுக்காகவே இரயில்வே அறிமுகப்படுத்தப்படுகிறது என்பதை அவர் அறிவார். இருப்பினும்,
பிரித்தானியத்தில் பாட்டாளி வர்க்கப் புரட்சி நடக்காதவரை; அல்லது இந்தியர்கள் தாமாக
காலனிய நுகத்தடியை ஒட்டுமொத்தமாக தூக்கிய எறியாதவரை பூர்ஷுவாக்களால் சிதறடிக்கப்படும்
சமூகத்தின் புதிய அம்சங்களின் பலன்களை இந்தியர்கள் அறுவடை செய்ய மாட்டார்கள் என்று
மார்க்ஸ் நினைத்தார். ’மாபெரும் சமூகப் புரட்சியும்’, நவீன தொழிற்சாலைகள் மீது மக்களின்
‘பொதுக் கட்டுப்பாடு’ நிறுவப்படுவதுமே ‘மனித முன்னேற்றத்திற்கு’ வழிவகுக்கும் என்று
மார்க்ஸ் முடித்தார்.
இதுநாள் வரை இந்தியா எந்தவித சமூகப் புரட்சியையோ அல்லது நவீன
தொழ்ற்சாலைகள் மீது ‘பொதுக் கட்டுப்பாட்டையோ’ பெறவில்லை என்பது வெளிப்படையானது. எனினும்,
மார்க்சின் அரசியல் பொருளாதரம் பற்றிய விமர்சனம் (’மூலதனம்’) மற்றும் அவருடைய இதர எழுத்துக்கள்
சாதியை ஒழிப்பதற்கான புரட்சிகரமான செயல்திட்டத்தை நமக்கு வழங்குகின்றது.
மரபுவழியில் பக்குவமற்ற உழைப்புப் பிரிவினையினால் சாதி தோன்றியதால்,
அத்தகையதொரு உழைப்புப் பிரிவினை வோரோடு மாற்றியமைக்கப்பட்டால் ஒழிய சாதி ஒழியாது. இன்றைக்கு, உழைப்புப் பிரிவினையானது பரம்பரை வகையில்
(‘மனு ஸ்மிருதியில் மற்றும் இதர நூல்களில் உள்ளது போல்) ஆதிகாலம் போல் நிலவவில்லை என்பது
உண்மைதான் அரை நிலப்பிரபுத்துவ மற்றும் அரை முதலாளித்துவ இந்திய அரசமைப்புகூட கொள்கை
அளவில் ‘தீண்டாமையை’ அனுமதிப்பதில்லை. மேலும், பட்டியல்/ஒடுக்கப்பட்ட/தலித் சாதிகளுக்கு
சில சட்ட பாதுகாப்புகளை வழங்குகிறது. ’தொழில்
முறையிலான மாற்றங்கள்’ அல்லது ‘பரம்பரை தொழிலிலிருந்து விடுபடுவதற்கான’ஆதாரங்கள் உள்ளன.
இருப்பினும், சாதிக்கும் தொழில்களுக்கும் இடையில்
குறிப்பிடத்தக்க தொடர்பு இருக்கத்தான் செய்கிறது (டூபே 1996:2-3), பானினி
1996:31). ‘கீழ்’ சாதிகள், குறிப்பாக தீண்டப்படாதோர் தங்களது மரபார்ந்த தொழில்களிலிருந்து
இன்னும் விடுபட முடியாமல்தான் இருக்கிறார்கள் (காரத் 1996:91). ஆகவே, அனைத்து ‘கீழ்’
சாதியினரும் ‘கீழானவர்களாக’ மதிப்பிடப்படுகிறார்கள். உதாரணமாக, ஜரினா பாட்டி அஷ்ரஃப் அல்லாதார் சாதிகளை முன்வைத்து சொல்வது போல்,
சில ‘கீழ்’ சாதிகளை தரவரிசைப்படுத்த முதலும் முக்கியமானதுமான அளவுகோல் என்னவெனில்,
அவரவர் செய்யும் தொழிலில் உள்ளடங்கியிருக்கும் அசுத்தம் அல்லது மாசின் அளவைப் பொருத்தது.
கௌசாலி இஸ்லாமியர்களிடையே உள்ள சில ‘கீழ்’ சாதிகள் குறித்து ஜரினா பாட்டி
(1996:250) குறிப்பிடும் இந்த அவதானிப்புகள் சாதியப் படிநிலையில் கீழ்நிலையில் இருக்கும்
அனைத்து தொழில்களுக்கும் பொருந்தும். ஜரினா சரியாகவே ஆய்வு செய்கிறார், “அசுத்தமானவை,
சுத்தமானவை என்னும் பாகுபாடு மட்டுமின்றி, சில விஷயங்கள் மிகவும் அசுத்தமானவை எனக்
கருதப்படுகிறது. பரம்பரை தொழிலில் ஈடுபடும் போக்கில், வழமையாக மிகவும் அசுத்தமான பணிகளில்
ஈடுபடும் சாதிகள் சிறிதளவு அசுத்தமான பணிகளை செய்யும் சாதிகளைக் காட்டிலும் கீழான படிநிலையில்
இருக்கின்றன” (உ.ம். மனிதக் கழிவுகளை நீக்கும் பணிகள், இறந்த விலங்குகளின் உடல்களை
அடக்கம் செய்தல், கழிவுகளை உண்டு வாழும் பன்றிகளோடு தொடர்புடைய தொழில்கள் போன்றவை).
ஆகவே, பாட்டாளி வர்க்கப் புரட்சிகர செயல்திட்டமானது, மரபுவழியிலோ, அது அல்லாமலோ ‘அசுத்தமான’தொழில்களை குறிப்பிட்ட சில மக்கள் பிரிவின் மீது
சுமத்தும் இந்த சுரண்டல்வாத, சமத்துவமற்ற உழைப்புப் பிரிவினையை அடிப்படையிலிருந்து
வேரோடு மாற்றியமைப்பதற்கான திட்டத்தோடு இருக்க வேண்டும்
பின்வரும் வழிமுறைகளைக் கொண்டிருக்கும் பாட்டாளி வர்க்க புரட்சிகர
செயல்திட்டமானது சமத்துவமற்ற உழைப்புப் பிரிவினையை அடிப்படையிலிருந்து வேரோடு மாற்றியமைத்து
இறுதியில் சாதி ஒழிப்பிற்கு வழிவகுக்கும். 16
(1) அரை நிலப்பிரபுத்துவ மற்றும் அரை முதலாளித்துவ (அதாவது
சுரண்டல்வாத) அரசை தூக்கி எறிவது.
(2) இதுவரை உழைக்காமல் வாழ்ந்துவந்த பிரிவினரை (அதாவது உபரியை
கைப்பற்றி வாழும் வர்க்கம்) பலவந்தமாக உழைப்பில் ஈடுபடுத்துவது.
(3) ஒவ்வொருவரும் உடல் மற்றும் மூளை உழைப்பில், தேர்ச்சி
பெற்ற, தேர்ச்சி பெறாத உழைப்பு, சுத்த-அசுத்த பணிகள், குறைந்தளவில் சுத்தமான/அசுத்தமான
பணிகள் எனஅனைத்து வகையான உழைப்பிலும் அனைவரும் (ஆண் பெண், சாதி பேதமின்றி) ஈடுபடும் வண்ணம் நிலவும் உழைப்புப் பிரிவினையை மாற்றியமைப்பது.
(4) வீட்டிலும்,
வெளியிலும் இதுவரை பெண்களுக்கான பணிகள் என்று ஒதுக்கப்பட்டிருக்கும் பணிகளில் ஒட்டுமொத்த
ஆணினத்தையும் ஈடுபடுத்துவது.
நிகழ்கால அரசியல் வெற்றிடம்
பாட்டாளி வர்க்க அரசியல் அமைப்புகளால் மட்டுமே பாட்டாளி வர்க்க
புரட்சிகர செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும். ஆனால், தொழிலாளர் வர்க்கத்தின்
முன்னணிப்படைகள் என உரிமை கோரும் இந்தியவில் உள்ள கம்யூனிஸ்ட் அமைப்புகள் சாதி பற்றிய
மார்க்ஸின் கருத்துருவாக்கத்தைப் பின்பற்றுவதில்லை. இந்திய தொழிலாளர் வர்க்கத்தின்
முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கும் சாதிய பாகுபாட்டை அப்படியே நீடித்திருக்க வகை
செய்யும் நிலவுகின்ற உழைப்புப் பிரினையை அடிப்படை சார்ந்து மாற்றி அமைக்கும் புரட்சிகர
செயல்திட்டமும் அவர்களிடத்தில் இல்லை. 70 வருட அமைப்பார்ந்த அனுபவங்கள் இருந்தும்,
ஆயிரக்கணக்கானத் தொண்டர்களின் கற்பனை செய்தும் பார்க்க முடியாத தியாகங்களுக்குப் பிறகும்,
பல லட்சம் கணக்கான தொழிலாளர் கூட்டத்தின் அரசியல் அனுதாபத்தைப் பெற்றிருந்தும், மார்க்சின்
அரசியல் பொருளாதாரம் பற்றிய விமர்சனத்தினை படித்தறியாத காரணத்தால் இந்த கம்யூனிஸ்ட்
அமைப்புகளால் ஒரு விரிவான புரட்சிகர செயல்திட்டத்தை இன்னமும் வகுக்க முடியவில்லை. நாங்கள்
இப்படி சொல்வது ‘கல்வித் திமிர்’ அல்லது ‘குட்டி பூர்ஷுவ அறிவார்ந்த அகந்தை’ என்று
தோன்றலாம். இருப்பினும், இதுவே வெளிப்படையான உண்மை. 17
கம்யூனிஸ்ட் அமைப்புகளின் இன்றைய நிலைமையைக் காணும்போது,
130 வருடங்களுக்கு முன்பு ஜெர்மன் தொழிலாளர் வர்க்க இயக்கத்திற்கு எங்கெல்ஸ்
(1874:170) வழங்கிய அறிவுரைதான் நினைவுக்கு வருகிறது. “இதற்கு ஒவ்வொரு போராட்டத் துறையிலும் கிளர்ச்சித்
துறையிலும் இரட்டித்த முயற்சிகள் தேவைப்படும்.
குறிப்பாக, எல்லாத் தத்துவார்த்தப் பிரச்சினைகளிலும் மேலும் தெளிவான உட்பார்வை
பெறுவதும், பழைய உலகக் கண்ணோட்டத்திலிருந்து சுவீகரித்த மரபுச் சொற்றொடர்களின் சொல்வாக்கிலிருந்து
மேன்மேலும் விடுவித்துக் கொள்வதும், சோஷலிசம் ஒரு விஞ்ஞானமாக ஆகிவிட்டதால் அதை ஒரு
விஞ்ஞானமாகப் பின்பற்றுவது – அதாவது, அதைப் பயில்வது-அவசியம் என்பதை இடையறாது நினைவில்
கொள்வதும், தலைவர்களின் கடமையாக இருக்கும்.”18, 18அ
மார்க்ஸின் சாதி பற்றிய கருத்துருவாக்கத்தோடு போதிய பரிச்சியமில்லாத
நிலையும், கம்யூனிஸ்ட் அமைப்புகளிடம் பாட்டாளி வர்க்க புரட்சிகர செயல்திட்டம் இல்லாததும்
ஒரு அரசியல் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது, குறிப்பாக ‘சாதியப் பிரச்சினையில்’. இந்த
நிலைமையின் காரணமாகவே, பலவிதமான சாதியக் கட்சிகள், குழுக்கள், சாதிய இயக்கங்கள் மற்றும்
போராட்டக் குழுக்கள் தோன்றிவிட்டன. அதேபோல், ‘புரட்சிகர’ கம்யூனிஸ்ட் (நக்சலைட்) குழுக்களின்
சிலத் தொண்டர்களும் ‘தலித் இயக்கங்கள்’ எனப்படும் குழுக்களில் இணைந்து விட்டனர். வட
இந்தியாவில் 19 பகுஜன் சமாஜ்வாடி கட்சி (பிஎஸ்பி) மற்றும் சமாஜ்வாடி கட்சி
(எஸ்பி) தவிர ஆந்திராவில் ‘மாலா மஹானாடு’(பட்டியல்
சாதிகளில் குறிப்பிட்டதொரு உட்பிரிவு), ‘மடிகா டண்டூரா’ (பட்டியல் சாதியில் இது மற்றொரு
பிரிவு), சத்யஷோஷக் சமாஜம் (இதர பிற்படுத்தப்பட்ட அறிவுஜீவிகள் அடங்கிய சிறு குழு),
பகுஜன் குடியரசு கட்சி (பிஎஸ்பியிலிருந்து உடைந்த குழு) போன்ற பல சிறு சிறு ‘தலித்’
குழுக்கள் உள்ளன. இவற்றில் எந்தக் குழுவும்/அமைப்பும் சாதி ஒழிப்பிற்கு வழிவகுக்கும்
விதமாக நிலவும் உழைப்புப் பிரிவினையை வேரோடு மாற்றி அமைக்கும் செயல்திட்டம் எதையும்
கொண்டிருக்கவில்லை. “உழைப்பவருக்கே நிலம் சொந்தம்!”, “ஏகாதிபத்திய மூலதனத்தைப் பறிமுதல்
செய்!” என்பன போன்ற பூர்ஷுவா ஜனநாயக கோரிக்கைகளைக் கூட இவர்கள் வைப்பதில்லை. பிராமணிய/மனுவாதக் கட்சிகள் எனப்படும் கட்சிகளோடுகூட
கூட்டணி வைத்து கூட்டணி அரசாங்கம் அமைப்பதிலேயே அவர்களின் வேட்கை இருக்கிறது. அல்லது
சில சட்டமன்ற/பாராளுமன்ற இடங்களைப் பிடிப்பது, மற்ற உட்சாதிகள்/இணைசாதிகளைக் காட்டிலும்
கல்வி மற்றும் வேலைவாய்ப்பை அதிகமாகப் பெறுவது என்பதே இவர்களின் இலட்சியம். ஆனால்,
பலவித நவ-முற்போக்கு சொல்லாடல்கள் மூலம் இந்தியாவிற்கு மார்க்ஸ் பொருந்தமாட்டார் (அல்லது
போதமாட்டார்), இந்தியாவில் ‘சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு’ சொல்வதில் மார்க்சியம்
‘தோற்றுவிட்டது’ என்று சொல்வதில் மட்டும் இவர்கள் அனைவரிடத்திலும் வியக்கத்தக்க வகையில்
ஒற்றுமை காணப்படுகிறது. இந்த அரசியல் சூழமைவில், மார்க்சின் சாதி பற்றிய கருத்துருவாக்கத்தை
புனரமைப்பதற்கான முக்கியத்துவமும் அவசரத் தேவையும் முன்னெப்போதையும்விட இப்போது அதிகமாக
இருக்கிறது.
(தொடர்புக்கு: brbapuji@yahoo.com)
குறிப்புகள்
* தங்களது மேலான கருத்துகளையும், ஆலோசனையையும் வழங்கிய ஆசிரியருக்கும்,
பெயர் குறிப்பிட விரும்பாத இரண்டு நடுவர்களுக்கும் எனது நன்றிகள்.
1. இப்படிச் சொல்வதால், மாபெரும் அறிஞர்களான டி.டி. கோசாம்பி
(1956, 1964), தேவிபிரசாத் சட்டோபாத்யாயா (1959) மற்றும் சிலர் செய்திருக்கக்கூடிய
அறிவார்ந்த பணிகளை மறுப்பதாகிவிடாது. சாதி குறித்து மார்க்ஸ் என்ன கூறினார் என்பத அழுத்தம்
திருத்தமாக விளக்குவதற்கான முயற்சிகள் இல்லை அல்லது மிகவும் சொற்பமானது என்கிறேன். சாதி குறித்து கடந்த கால மார்க்சிய ஆய்வுகளின் போதாமை பற்றியும்
எழுதுமாறு நான் குறிப்பிட்டுள்ள 2 நடுவர்களும் பரிந்துரைத்தார்கள், ஆனால் இந்த
ஆய்வின் நோக்கம் அதுவல்ல. சாதியமைப்பு பற்றிய மார்க்ஸின் கருத்துருவினை மறுநிர்மாணம்
செய்வதே இந்த ஆய்வின் நோக்கம். இருப்பினும், சாதியமைப்பு குறித்த தங்களது ஆய்வுகளில்
மார்க்ஸை குறிப்பிட்டு விளக்கிய இரண்டு முக்கிய மார்க்சிய அறிஞர்கள் குறித்து குறிப்பிட
விரும்புகிறேன்: ஆர். எஸ். ஷர்மா, இர்பான் ஹபிப். எனினும், சாதி குறித்த அவர்களது ஆய்வுகளை
திறனாய்வு செய்ய நாங்கள் முற்படவில்லை, ஏனெனில் சாதியமைப்பு பற்றிய மார்க்ஸின் கருத்துருவினை
மறுநிர்மாணம் செய்யும் குறிப்பான ஆய்வுகள்.
2) அதிக இடத்தைப் பிடிக்கும் என்பதால்
மார்க்ஸின் அவதானிப்புகளை நாங்கள் நேரடியாக மையக் கட்டுரையில் வைக்கவில்லை.
எனினும், சாதி குறித்த மார்க்ஸின் (எங்கெல்ஸும்) மேற்கோள்களை அடிக்குறிப்பில்
குறிப்பிடும்படி 2ஆம் நடுவர் பரிந்துரைத்தார்.
3) “இந்தியர்கள் மற்றும் எகிப்தியர்கள் மத்தியில் நிலவும் பக்குவமற்ற (crude) உழைப்புப் பிரிவினை
அவர்களது ஆட்சியிலும், மதத்திலும் சாதி-அமைப்பை நிறுவியதைக் காணும்போது, வரலாற்றியலாளர்கள் சாதி-அமைப்பே அந்த பக்குவமற்ற சமூக வடிவத்தை உருவாக்கிய சக்தி என்று
கருதுகிறார்கள்.” (ஜெர்மன் சித்தாந்தம்,
மாஸ்கோ பதிப்பு 176, ஆங்.பக். 63).
4)
“எனினும் சாதி அமைப்பு முறையுங்கூட
ஒரு குறிப்பிட்ட உழைப்புப் பிரிவினை அல்லவா? அதேபோல், கூட்டுஸ்தாபன (corporations)** முறைகூட ஒரு குறிப்பிட்ட உழைப்பு பிரிவினை தானே? இங்கிலாந்திலே
பதினேழாம் நூற்றாண்டின் மத்தியிலே தொடங்கி பதினெட்டாம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியிலே
முடிந்த பட்டறைத் தொழில் அமைப்பு முறையின் கீழிருந்த உழைப்புப் பிரிவினையும் பெருமளவான
நவீன காலத் தொழில்துறையின் உழைப்புப் பிரிவினையிலிருந்து முற்றிலும் வேறுபட்டதல்லவா?”(தத்துவத்தின்
வறுமை, அலைகள் வெளியீட்டகம், 2016, பக். 197)
5) “மரபு வழியிலான உழைப்புப் பிரிவினை, அதன் மீதுதான் இந்திய சாதியமைப்பு
கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது (“இந்தியாவில்
பிரிட்டிஷ் ஆட்சியின் எதிர்கால விளைவுகள்” காலனியம் குறித்து, மாஸ்கோ பதிப்பு 1974,
பக். 85).
6) “பட்டறைத் தொழிலானது பொதுவாக சமுதாயத்தில் தொழில்கள் இயற்கையாகவே வேறுபட்டு
வளர்ந்திருக்கக் கண்டு, அந்த வேறுபாட்டை அப்படியே எடுத்தாள்வதோடு, பட்டறைக்குள்ளேயே
திட்டமிட்டு அதனைத் தீவிரப்படுத்துவதன் மூலம் நுணுக்கத் தொழிலாளியை தனித்தேர்ச்சி
பெறச் செய்கிறது. மறு புறம், பகுதி-வேலையை ஒருவரது வாழ்க்கைத் தொழிலாக
மாற்றுவதென்பது, முந்தைய சமுதாயங்கள் தொழில்களைப் பரம்பரையாக்கி, சாதிகளாக அவற்றை
உறைந்து இறுகச் செய்தோ, குறிப்பிட்ட வரலாற்று நிலைமைகளின் காரணமாய் சாதி
அமைப்புக்கு ஒவ்வாத முறையில் வேறுபடும் தன்மை தனி ஆளிடம் தலைதூக்கும் போதெல்லாம்
அவற்றை கைவினைச் சங்கங்களாக சமைந்து கெட்டிப்படச் செய்தோ வந்த போக்கிற்கு ஒத்ததே
ஆகும். தாவரங்களும் மிருகங்களும்
இனங்களாகவும் ராசிகளாகவும் வகைபிரிவதை, முறைப்படுத்துகிற அதே இயற்கை விதியின்
செயலிலிருந்தே, சாதிகளும் கைவினைச் சங்கங்களும் பிறக்கின்றன; ஒரே ஒரு வேறுபாடு
என்னவென்றால், குறிப்பிட்ட வளர்ச்சி நிலையை அடைந்ததும் சாதி மூலமான பரம்பரைத்
தன்மையும் கைவினைச் சங்கம் மூலமான பிரத்தியேகத் தன்மையும் சமுதாயச் சட்டத்தின்
மூலம் நிலைநாட்டப்படுகின்றன என்பதே”. (மூலதனம், பாகம் 1, பக்.461, தியாகு
மொழிபெயர்ப்பிலிருந்து இந்த மேற்கோள் எடுக்கப்படுள்ளது)
7) “தந்தைவழி ஆட்சிக் கால அமைப்பு முறையிலும் சரி, சாதி அமைப்பு
முறையிலும் சரி, நிலப்பிரபுத்துவ, கூட்டுறவு***
அமைப்பு முறையிலும் சரி, சமுதாய முழுவதிலும்
நிர்ணயமான விதிகளின்படி உழைப்புப் பிரிவினை இருந்தது. இந்த விதிகளை சட்டமியற்றுபவனா
நிலை நாட்டினான்? கிடையாது. பொருளுற்பத்தி
நிலைமைகளிலிருந்து அடிமூலத்தில் பிறந்த இவை வெகுகாலத்திற்குப் பின்னரே சட்டங்களின்
அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டன. இவ்வழியே உழைப்புப்
பிரிவினையின் வெவ்வேறான வடிவங்கள் சமுதாய அமைப்பின் அத்தனை அடித்தளங்களாயின.” (தத்துவத்தின்
வறுமை, அலைகள் வெளியீட்டகம், 2016, பக்.148)
8) “அல்லது, சட்டம் ஒரு சில குடும்பங்களக்கு மட்டும் நில உரிமையை
நிலைத்திருக்கச் செய்யலாம், அல்லது பரம்பரை உரிமையாக உழைப்பை நிர்ணயிக்கலாம், இவ்வாறு
சாதியமைப்பாக இறுகுவதில் அது முடிவடைகிறது.” (அரசியல் பொருளாதார விமர்சனத்திற்கு ஒரு
பங்களிப்பு, மாஸ்கோ பதிப்பு, ஆங்.201 ).
9) “தாவரங்களும் மிருகங்களும் இனங்களாகவும் ராசிகளாகவும்
வகைபிரிவதை, முறைப்படுத்துகிற அதே இயற்கை விதியின் செயலிலிருந்தே, சாதிகளும் கைவினைச்
சங்கங்களும் பிறக்கின்றன; ஒரே ஒரு வேறுபாடு என்னவென்றால், குறிப்பிட்ட வளர்ச்சி நிலையை
அடைந்ததும் சாதி மூலமான பரம்பரைத் தன்மையும் கைவினைச் சங்கம் மூலமான பிரத்தியேகத் தன்மையும்
சமுதாயச் சட்டத்தின் மூலம் நிலைநாட்டப்படுகின்றன என்பதே”. (மூலதனம், பாகம் 1, என்சிபிஎச்,
2012, பக்.464)
சாதியானது மரபுவழியிலான
ஒரு சமூக விதியாக ஏன், எப்படி உருவானது என்பதற்கு நம்மிடையே போதுமான ஆதாரங்கள் இல்லை
என்பது கவனத்திற்குரியது. குறிப்பிட்ட வகையான உழைப்புப் பிரிவினையானது இந்தியாவில்
மட்டும் எப்படி பரம்பரை உரிமையானது என்பதை விளக்கும் நூல்கள் ஏதும் காணப்படவில்லை.
ஆகவே, அதனை நாம் ஊகத்திற்கே விட்டுவிட வேண்டும். சமூகம் பற்றிய மார்க்ஸின் பொதுவான
கோட்பாட்டைப் பின்பற்றி நாம் சொல்லக்கூடியது என்னவெனில், பின்-வேதக் காலத்தில் தோன்றிய
ஆரம்பகட்ட ஆளும் வர்க்கமானது தங்களுடைய ஆளும் வர்க்க நலனுக்கு ஏற்றவகையில், பரம்பரை
முறையிலான உழைப்புப் பிரிவினையை ஒரு ‘சட்டமாக’ நிலைநாட்டியிருக்கக் கூடும். சாதியமைப்பு
என்பது “அவ்வமைப்பின் உயரிய நிலையில் இருந்த புரோகித சாதிகளின் சுயநல கண்டுபிடிப்பு” என்கிறது என்சைக்ளோபீடிய ப்ரிட்டானிக்கா.
(10) மார்க்ஸின் பொருளாதார வகையினங்கள் பற்றிய இந்த விளக்கங்கள்
எங்களுடைய முந்தையப் படைப்புகளை அடிப்படையாகக் கொண்டவை (1993a, 1993b). மார்க்ஸின்
மூலதனத்தை படித்தறிந்ததே எங்கள் புரிதலுக்கான அடிப்படை. இக்கட்டுரையில் நாங்கள் குறிப்பிட்டிருக்கும்
சுத்தப் பணி, அசுத்தப் பணி ஆகியவற்றுக்கு தொடர்புடைய மார்க்ஸின் எழுத்துக்களையும் குறிப்பாக
கொடுக்கும்படி இரண்டாம் நடுவர் பரிந்துரைத்தார். மார்க்ஸ் அத்தகைய சொற்களைப் பயன்படுத்தவில்லை
என்பதை இங்கே தெளிவுபடுத்துவது அவசியமாகிறது. இருப்பினும், மார்க்ஸின் உழைப்புப் பிரிவினை
பற்றிய விளக்கங்களை கூர்யே (Ghurye, 1932) மற்றும் பாரி (Parry, 1985) ஆகியோர் இந்திய நிலைமைகளுக்குப் பொறுத்திப்
பார்த்து விளக்கியது போல் நாங்கள் இந்திய நிலைமைக்குப் பொறுத்திப் பார்த்து விளக்குகிறோம்.
அடிக்குறிப்பு 15ஐ பார்க்கவும்.
(11) எகிப்தைப் பொறுத்தவரை, பின்வரும் குறிப்பை மூலதனம் பாகம்
1இல் மார்க்ஸ் கொடுத்துள்ளார். ““எகிப்தில் கலைகளும் தேவையான பூரணத்துவத்தின் உச்சத்தை
அடைந்துவிட்டது. மற்றொரு வர்க்கக் குடிகளின் விவகாரங்களில் தலையிடாத கைவினைஞர்கள் வாழும்
ஒரே நாடு அதுவாகத்தான் இருக்கும். ஆனால் வாழ்வாதாரத்
தொழில் (life calling) மட்டும் இனங்களுக்குள்ளான பாரம்பரியத்திற்குட்பட்டது... மற்ற
நாடுகளில் வணிகர்கள் தங்களது கவனத்தை பல தொழில்களுக்கிடையில் பகிர்ந்தளித்தனர். ஒரு
சமயத்தில் அவர்கள் வேளாண்மையை முயல்கின்றனர், மற்றொரு சமயத்தில் வாணிபம், வேறொரு சமயத்தில்
இரண்டு அல்லது மூன்று தொழில்களை கவனிப்பதில் ஒருங்கே ஈடுபட்டிருந்தனர். சுதந்திரமான
நாடுகளில், அவர்கள் மக்கள் மன்றங்களை அடிக்கடி கூட்டுபவர்களாக இருந்தார்கள்..... அதற்கு
நேர்மாறாக எகிப்தில் அரசு விவகாரங்களில் தலையிட்டால், அல்லது ஒரே நேரத்தில் பல தொழில்களில்
ஈடுபட்டாலோ கைவினைஞர்கள் கூட கடுமையாக தண்டிக்கப்பட்டனர். இவ்வாறாக அவர்கள் தங்களது
வாழ்க்கைத் தொழிலை மேற்கொள்ள இடையூறு எதுவும் இருக்கவில்லை..... மேலும், தங்களது மூதாதையர்களிடமிருந்து
எண்ணற்ற விதிமுறைகளை உள்வாங்குவதால், அதிலிருந்து புதிய அனுகூலங்களைக் கண்டுபிடிக்க
எப்போதும் ஆர்வமாய் இருப்பர்.” (பக். 461).
இதேபோன்ற முன்மொழிவுகளுக்கு, நெஸ்ஃபீல்ட் 1855, பெத்ரீ
1923 (கூர்யே 1932:114&142இல் குறிப்பிட்டுள்ளது போல்). வில்சன் (1855-75-370) பார்க்கவும். இரண்டாம் நூற்றாண்டிலிருந்து
ஏற்பட்ட இந்த முன்னேற்றங்களைக் குறிப்பிடுகின்றன.
(12) நெஸ்ஃபீல்டைப் பொறுத்தவரை (1855, காக்ஸ் 1948:97இல்
உள்ளது போல்) ‘இந்திய நாட்டிற்குள் ஆரியர்கள் நுழைந்து ஆயிரம் ஆண்டுகள் வரை திருமணத்தில்
சாதிகள் விதிக்கும் கட்டுப்பாடுகள் தோன்றியிருக்கவில்லை, அதற்குள் மீட்க முடியாத அளவுக்கு
பூர்வகுடிகளிடையே ஆரிய இரத்தக் கலப்புகள் நடந்துவிட்டன’ – மனுவின் காலத்தை வைத்து நெஸ்ஃபீல்ட்
இதை சொல்கிறார், அதாவது கி.பி 200 வாக்கில்.
(13) ‘கௌதம தர்ம சுத்ரா’ வைப் பொறுத்தவரை (கூர்யே கூறுவதுபோல்
1932:76), சட்டங்களை அனைவரும் பின்பற்றுவதை உறுதி செய்வதும், அதை மீறினால் தண்டிப்பதும்
அரசரின் கடமை.
(14) மார்கரெட் மற்றும்
ஜேம்ஸ் ஸ்டட்லி (1977) ‘திறன் அல்லது வரத்து மற்றும் தேவையைப் பொறுத்து கைவினைத் தொழிலும்,
மற்ற தொழில்களும் தரவரிசைப்படுத்தப்பட்டன…’ என்கிறார். மார்க்ஸின் உழைப்புச் சக்தியின் மதிப்பீடு பற்றிய
கருத்துருவாக்கத்தோடு இந்த அவதானிப்புகளை நாம் ஒப்பிட்டுக் காண வேண்டும்.
(15) கி.பி 1020ஆம் கால அல்பெரூனி (கூர்யே 1932:313) ’கிராமப்புறங்களை
தூய்மைப்படுத்துவது மற்றும் அதுபோன்ற துப்புரவுப் பணிகளில் சண்டாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்’. தொழிலிலோ
அல்லது இதர சேவைகளிலோ தூய்மை என்னும் கருத்தியலை கூர்யேவே (1932:307) ‘தீண்டாமையோடு’
தொடர்புபடுத்துகிறார். பாரி (1985) அங்கதத்தோடு
ஒரு ஆர்வமூட்டும் விவாதத்தை முன்வைக்கிறார்: “… இயற்கையான உலகில் தங்களது செயல்பாடுகளின்
காரணமாக விளையும் அசுத்தங்களை தூய்மைப்படுத்த அசுத்தமான சாதிகள் இருந்தால் மட்டுமே
தூய்மைவான்கள் தங்களின் தூய்மையைக் காத்துக்கொள்ள முடியும்.”
(16) இத்திட்டங்களை,
மூலதனத்திற்கு ஓர் அறிமுகம் என்னும் நூலில் அத்தியாயம் 9, தொகுதி 3இல் பகுதி
2இல் ரங்கநாயகம்மா உருவாக்கம் செய்திருக்கிறார்.
(17) இந்தியாவின் பல்வேறு கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆவணங்களை
(குறிப்பாக கட்சித் திட்டங்களை) படித்தாய்ந்ததிலிருந்து நாங்கள் இந்த அவதானிப்பை வைத்துள்ளோம்.
(18) எங்கெல்ஸுன் கருத்துரைக்கு அப்பாற்பட்டு மேலும் வலுவான
பரிந்துரைகள் தேவை என்று முதலாம் நடுவர் கருதினார். இருப்பினும், அவையனைத்தையும் விவாதிப்பதற்கான
இடமாக இக்கட்டுரை அமையவில்லை. அது தனியானதொரு முயற்சியாக இருக்க வேண்டும். இந்தியாவில்
சாதியமைப்பு மற்றும் பாகுபாடு பற்றிய ஆய்விற்காக மிகவும் கொண்டாடப்படும் அம்பேத்கர்
பற்றிய ரங்கநாயகம்மாவின் (2000) நூலில் அத்தகையதொரு விமர்சனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
(19) எஸ்.பி கட்சி சூத்திரர்களின் கட்சி, தலித் கட்சி அல்ல
என்று முதலாம் நடுவர் கூறுகிறார். வெளிப்பார்வைக்கு அது அப்படித் தெரிகிறது, ஏனென்றால்,
ஆரம்பத்தில் சூத்திர ஜாதிகள் எனப்படும், குறிப்பாக இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின்
ஆதரவோடு தலித்துகளின் ஆதரவை அது அணிதிரட்டியது. அதேபோல், பிஎஸ்பி ஆரம்பத்தில் இதர பிற்படுத்தப்பட்ட
வகுப்பு மற்றும் தலித்துகளுக்கானப் பிரதிநிதி என்று தன்னைக் கூறிக்கொண்டாலும், ‘மேல்’
சாதி எனப்படுவோரோடு அது தேர்தல் அரசியல் கூட்டணி வைத்துக்கொண்டது. மேலும், எங்களது
பார்வையில் எஸ்.பி மற்றும் பிஎஸ்பி ஆகிய கட்சிகள் தங்களது அரசியல் பிழைப்புவாதத்திற்காக,
அவ்வப்போது ‘கீழ்’சாதிகளுக்காக பூர்ஷுவா ஜனநாயக கோரிக்கைகளை முவைக்கும் இந்திய சுரண்டும்
வர்க்கத்தின் பிரதிநிதிகளாவார்கள்.. .
18.
அ. எங்கெல்ஸின் அந்த மேற்கோளின் தமிழாக்கம் லெனினின் என்ன செய்ய வேண்டும், முன்னேற்றப்
பதிப்பகம் நூலிலிருந்து கொடுக்கப்பட்டுள்ளது. பக்.43.
** ஆங்கிலத்தில் அது corporations என்றே உள்ளது, வேறொரு பதிப்பில்
guild என்று இருந்ததால் அத்தமிழாக்கத்தில் கைவினைச் சங்க அமைப்பு என்று மொழிபெயர்ப்பாளர்
குறிப்பிட்டிருக்கலாம்.
*** ஆங்கிலத்தில் அது corporative system என்றே உள்ளது, வேறொரு பதிப்பில் guild என்று இருந்ததால்
அத்தமிழாக்கத்தில் கைவினைச் சங்க அமைப்பு என்று மொழிபெயர்ப்பாளர் குறிப்பிட்டிருக்கலாம்.
- மொழிபெயர்ப்பு, கொற்றவை