Mar 9, 2017

சாதியப் பிரச்சினையும் மார்க்சியமும்......

 
“மார்க்சியம் பற்றிய அவரது (அம்பேத்கர்) எழுத்துக்களைப் படிக்கும்போது, பூர்ஷுவா சமூகவியலாளர்களின் மேம்போக்கான விமர்சனங்கள் மற்றும் மேற்கோள்களைத் தாண்டி மார்க்சிய மூல நூல்கள் ஒன்றைக் கூட அவர் படித்திருக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. அவர் விளக்கியது பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரமும் அல்ல. சோஷலிசம் மற்றும் கம்யூனிசம் இடையிலான வேறுபாடுகளைக் கூட அவர் அறிந்திருக்கவில்லை. அரசின் வர்க்க குணாம்சத்தைப் புரிந்துகொள்ளத் தவறியதால், விவசாயம் மற்றும் தொழிற்சாலைகள் தேசியமயமாக்கப்பட்டாலும், அரசின் வர்க்கப் பண்பு பூர்ஷுவா பண்பாக இருக்கும் பட்சத்தில், அது சோஷலிசமாக இருக்க முடியாது, அது அரச ஏகபோக முதலாளித்துவமாகவே இருக்கும் என்பதை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஒரு வர்க்கத்தின் அரசை பலவந்தமாக தூக்கி எறிவதன் மூலமே மற்றொரு வர்க்க ஆட்சியை நிறுவ முடியும் என்பதையும் அவரால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. 
 
வரலாற்றில், எந்த ஒரு வர்க்கமும் அமைதியான முறையில் தம் அதிகாரத்தை தாரை வார்த்துக் கொடுத்ததில்லை. வர்க்கப் போராட்டத்தில் வன்முறை என்பது இன்றியமையாததே அன்றி, எவருடைய விருப்பமும் அல்ல. கம்யூனிஸ்டுகள் வன்முறை குறித்து பேசும்போது அவர்கள் தனிநபர் வன்முறையைக் குறிப்பதில்லை, மாறாக, அது வர்க்க வன்முறை, பலவந்த முறைகளைக் கைகொண்டு அதிகாரத்தில் இருக்கும், பலவந்த முறையில் இயங்கும், பலவந்த முறையில் பரமாரிக்கப்படும் அரசை பலவந்தமாக தகர்ப்பது என்று பொருளாகும். (ஆனால், இந்த நடைமுறையில் வன்முறைக்கு அவசியமில்லாமல் போனால், வன்முறை என்பது தத்துவார்த்த அளவோடு நின்று விடும்). அதேபோல், அம்பேத்கர் ஒரு பொருளாதார அறிஞராக இருந்தும், சரக்கு உற்பத்தி முறை, உபரியை அபகரித்தல் அல்லது மூலதனத் திரட்டல் பற்றிய மார்க்சிய விளக்கங்களைக் குறித்து ஏதும் அறிந்திருக்கவில்லை. பொருளாதார அடித்தளம் (உற்பத்தி உறவுகளின் கூட்டுமொத்தம்) மற்றும் மேற்கட்டுமானத்திற்கும் இடையிலான இயங்கியல் தொடர்பு பற்றியோ, உற்பத்திச் சக்திகள் மற்றும் உற்பத்தி உறவுகள் இடையிலான தொடர் போராட்டத்தின் காரணமாக ஏற்படும் அளவுரீதியான பாய்ச்சல் பற்றியோ, உற்பத்திச் சக்திகள், உற்பத்தி உறவுகளை தகர்ப்பதன் விளைவாக புதியதொரு உற்பத்தி முறை நிறுவப்படுவதே சமூகப் புரட்சி என்னும் விளக்கத்தையும் அவர் சுத்தமாக அறிந்திருக்கவில்லை. 
 
ஒரு சாமானிய எழுத்தரைப் போல், மார்க்சியத்தை பொருளாதார நிர்ணயவாதம் - உண்மையில், இயந்திரத்தனமான பொருள்முதல்வாததின் விளைவான பொருளாதார நிர்ணயவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் தோன்றிய மார்க்சியத்தை - என குற்றம் சாட்டுகிறார்; மார்க்சியர்கள் மனிதர்களை வெறும் பொருளாதார விலங்குகளாகவே கருதுகின்றனர் என்கிறார். மார்க்சியம் சொல்வது இதுதான்: உற்பத்தி நடவடிக்கைகள் என்பது மனித நடவடிக்கைகளின் அடிப்படையாகும், அதனால் அவர்கள் உற்பத்தி உறவுகளாக பிணைப்புக்குள்ளாகிறார்கள். இந்த உற்பத்தி உறவுகளின் கூட்டுமொத்தமே சமூகத்தின் அடிக்கட்டுமானமாக இருக்கும், அதன் மேல் அரசியல்-கருத்தியல்-கலாச்சார-சமூக நிறுவனங்கள் ஆகிய மாபெரும் தூண்கள் கட்டியெழுப்பப்படுகின்றன. கட்டியெழுப்பப்பட்டதும், அந்த மேற்கட்டுமானமானது சுதந்திர நகர்ச்சியைப் பெற்றுவிடும். சுழற்சியில், அது அடிக்கட்டுமானத்திலும் செல்வாக்கு செலுத்தும், புதிய அடித்தளத்திற்கும், புதிய மேற்கட்டுமானத்துக்கும் இடையிலான மோதல் தொடரும். சோஷலிசத்திற்கு மாறும் கட்டம் முழுவதிலும், பல்வேறு வகையான முதலாளித்துவ அடிக்கட்டுமானங்கள் எஞ்சியிருக்கும், மாற்றத்திற்கான தொடர் முறையிலான நீடித்த நடைமுறையுடன், பழைய மேற்கட்டுமானத்தோடு தொடர்ந்து போராட்டங்களும் நிகழும். இந்த திட்டங்கள் பற்றி ஏதுமறியாததால், அம்பேத்கர் 1938இல் ஜனதாவில் எழுதிய ஒரு கட்டுரையில், கலாச்சாரம் மற்றும் மதமெனும் தூண்கள் பொருளாதார அடித்தளத்தின் மேல் நிலவுகிறது என்றால், அடித்தளத்தைத் தகர்கக வேண்டுமெனில், முதலில் தூண்களைத் தகர்க்க வேண்டும் என்று சிறுபிள்ளைத்தனமாக கருத்து தெரிவித்தார். இந்தக் கருத்தையும் ஏதும் புரியாமலேயே தெரிவித்திருக்கிறார்.
 
கம்யூனிசமும், பொருளாதார அடித்தளத்தைத் தகர்க்க - மக்களின் வர்க்க உணர்வை தட்டி எழுப்பி, அரசை தகர்ப்பதற்காக அணிதிரட்டப்படும் வரை - அரசியல் பொருளாதார பரப்புரையுடன் - முதலில், மேற்கட்டுமானத்தின் மைய அரசியல் நிறுவனமான அரசை தகர்க்க வேண்டும், மதச்-சட்டங்கள், மதிப்பீடுகள் மற்றும் நிறுவனங்கள் அனைத்திற்கும் எதிராகப் போராட்டம் தொடுக்கப்பட வேண்டும் என்றுதான் சொல்கிறது.
 
பொருளாதார அடிக்கட்டுமானத்தை தகர்த்தால் மட்டுமே மேற்கட்டுமானத்தை முழுமையாக, முற்றிலுமாக தகர்க்க முடியும் என்றுதான் மார்க்சியம் சொல்கிறது. அடிக்கட்டுமானமே தீர்மானமகரமான சக்தி என்று மட்டுமே மாக்சியம் சொல்கிறது. இந்த விவாதத்திற்கு பின்னர் திரும்புவோம்.
மார்க்சியம் மனிதர்களை வெறும் “பொருளாதார விலங்குகளாகக்” கருதுவதாகச் சொல்லி, அதனை மறுக்கும்விதமாக எந்தவொரு சிவில் சமூகத்திலும் மதம் என்பது அவசியம் என்றார். அம்பேத்கரின் இந்த “சிவில் சமூகம்” என்பது, ஹெகலின் சிவில் சமூக கருத்துருவுக்கு மட்டுமின்றி, சமூக-அரசியல் மட்டத்தில் மதத்தின் இருப்பை முற்றிலுமாக நிராகரித்த கருத்தியல் வடிவிலான பகுத்தறிவு மனநிலையினைக் கொண்டிருந்த லோக்கே, ரூசோ போன்றவர்களின் சிவில் சமூக கருத்துருவுக்கும் கூட நெருக்கத்தில் இல்லை. உண்மையில், மதத்தின் வரலாற்று வளர்ச்சி குறித்தோ, திட்டவட்டமான சூழ்நிலைகளில் மதத்தின் உருவாக்கம் குறித்த மார்க்ஸுக்கு முந்தைய, புரட்சிகர பொருள்முதல்வாத பூர்ஷுவா சிந்தனையாளர்களின் சிந்தனைகளைப் பற்றி கூட அம்பேத்கர் அறிந்திருக்கவில்லை.
 
மதம் என்பது ஏதோ, மனிதர்களுக்கும் மேலானதாக, வழிகாட்டும் நெறியாகக் கருதினார், அதன் சமூகத் தோற்றம் குறித்த அறியாமையில் இருந்தார். இந்த விஷயத்தில் அம்பேத்கரும் காந்தியைப் போல் ஒரு பழைமைவாதியே. இந்துமதத்தை விட மேலான ஒரு மதம்தான் அவருக்குத் தேவைப்பட்டது, அதைத்தேடி இறுதியில் 2000 வருடம் பழமை வாய்ந்த புராதன பௌத்த மதத்தைக் கண்டடைந்தார். பிராமணிய எதிர்ப்புடைய பண்டைய பொருளாயத தத்துவங்களான ஆசீவகம், லோகாயதம் அல்லது சாங்கிய மதங்களைத் தேடி அவர் செல்லவில்லை. ஏனென்றால் அவை ஒழுங்கமைக்கப்பட்ட மதங்கள் இல்லை. அம்பேத்கரின் ஆன்மீக வெறுமையே, மதம் ஒன்று மட்டுமே ஆன்மீக செல்வம் எனக் கருதக் காரணம். மனிதர்களை வெறும் “பொருளாதார விலங்கு” என்று கருத்துவதற்கெல்லாம் அப்பால், மார்க்சியமானது ஆன்மீக செல்வமற்ற மனிதரை மனிதர் எனும் தகுதியைப் பூர்த்தி செய்யாத ஒருவராகவே கருதுகிறது; பெரும்பான்மை உழைக்கும் மக்கள் உயிர் வாழ்வதற்காகக் கூட கடுமையாக உழைத்து துன்புறும் நிலையில், ஆன்மீக செல்வம் மறுக்கப்பட்டு ஒருபுறமிருக்க, மறுபுறம் ஒட்டுண்ணி வர்க்கங்களோ உழைப்பெனும் இயற்கையான மனிதப் பண்பற்றவர்களாக, ஆன்மீக செல்வத்தின் பேரால் காமம் மற்றும் போகத்தில் திளைக்கும் சீரழிந்த கலாச்சாரத்தை கடைபிடித்து வாழும் ஒரு நிலையை அனுமதிக்கும் சமூக அமைப்பை ஒழிக்க வேண்டும் என்பதே அதன் கொள்கை.
 
கலாச்சாரம், கலை-இலக்கியம், இசை, தத்துவம் இவையனைத்தையும் ஆன்மீக செல்வங்கள், மனித சாரம் என்றே மார்க்சியம் கருதுகிறது. “1844 ஆண்டின் பொருளாதார மெய்யியல் கையேடு”, “புனிதக் குடும்பம்”, ‘ஜெர்மன் தத்துவம்’, ‘அரசியல் பொருளாதார விமர்சனத்திற்கு ஒரு பங்களிப்பு’ (’க்ருண்ட்ரிஷே’ அவரது வாழ்நாளில் பதிப்பிக்கப்படவில்லை) போன்ற மார்க்ஸ், எங்கெல்ஸின் நூல்களை அவர் படித்திருந்தால், ‘மூலதனத்தில்’ அங்கிங்கு வரும் குறிப்புகளை அவர் படித்திருந்தால், 1950 வரை வெளிவந்த லெனின், ஸ்டாலின், மாவோ, கார்க்கி, லுனாச்சார்ஸ்கி, ப்ரெக்ட், லூக்காஸ், வோரோவ்ஸ்கி, வொரொன்ஸ்கி போன்ற டஜன் கணக்கானவர்களால் இயற்றப்பட்ட மொழியியல் கோட்பாடு பற்றிய படைப்புகள், இலக்கியம், கலை, இசை மற்றும் சோஷலிச கலை இலக்கிய, இசை, சினிமாத் துறையில் நடந்த பரிசோதனை முயற்சிகள் எல்லாம் பற்றி நூற்றில் ஒரு பங்காவது அறிந்திருந்தால் மார்க்சியத்தின் ஆன்மீக செல்வம் பற்றிய அவரது பார்வை இத்தனை மேலோட்டமாக இருந்திருக்காது...”
 
 
மேலும் வாசிக்க...
 
சாதியப் பிரச்சினையும் மார்க்சியமும்.
தொடரும் விவாதம்...
தேர்வும் தொகுப்பும்
கொற்றவை.

Mar 7, 2017

உழைக்கும் மகளிர் தின வாழ்த்துகள்

நான் ஒரு பெண். ஆமாம் பெண்! பெண்மையற்றவள்! தாயாகி தாய்மையிலிருந்து வெளியேறியவள்!
இது எப்படி சாத்தியமாயிற்று? நான் பெண்ணாய் இருப்பதால் மட்டுமே சாத்தியமாயிற்று. நான் இயல்பாக இருக்க முடியவில்லை என்னும் உணர்தலே விடைகள் தேடி என்னை நகர்த்தியது. 35 வயதில் தான் இந்த உணர்தல் எனக்கு ஏற்பட்டது. இழந்த காலத்தை ஈடு செய்ய முடியாதெனினும் என்னைப் போன்ற பெண்களின் காலங்களையாவது காக்க உதவ வேண்டும் என்ற எண்ணமே நான் எழுத காரணமாய் அமைந்தது. பெண்ணை விடுவிக்க தொடங்கிய அந்தக் ‘கோபம்’ மார்க்சியத்தின் வழிகாட்டுட்தலால் சமூக விடுதலையை இலக்காக கொண்டு செயல்பட வேண்டும் என்னும் ‘அறிவாக’ மாறியது.
மானுட விடுதலை என்பது சமூக விடுதலையோடு தொடர்புடையது. அதற்கு சரியான வழிகாட்டியாக மார்க்சியம் இருப்பதை கற்றும், விவாதித்தும், முடிந்த வரை சமூக நிலைமைகளோடு பொருத்திப் பார்த்தும் நான் உணர்ந்தபோது எனக்குள் நான் அடைந்த விடுதலை உணர்வை சொற்களால் விளக்கிட இயலாது. ஒடுக்கப்படுபவர்களை மீட்டு சமத்துவத்தை உண்மையிலேயே நடைமுறைபடுத்த வழிகாட்டும் மார்க்சியத்தை பிரச்சாரம் செய்வதே என் ‘பெண்ணிய’ பாதை.
இந்த பாதையில் நான் பயணிக்கத் தொடங்கி 7 ஆண்டுகள் ஆகின்றன. நான் நினைத்த வேகத்தில் ஓட முடியவில்லை என்னும் குறை எனக்குள் இருந்தாலும், இயங்கியல் அறிவோடு சூழ்நிலையை ஆய்ந்தறிய மீண்டும் எனக்கு அந்தக் கோட்பாடுதான் துணையாக இருக்கிறது. வழக்கமாக முதலாளித்துவ SELF-HELP கையேடுகள் Emotional Intelligence என்று மனோ நிலை நிர்வாகத்தைப் பற்றி பேசும். அதைப் படிக்கும் போதெல்லாம் நம்மை சிறந்த அடிமைகளாக மாற்ற எப்படியெல்லாம் கதை விடுகிறார்கள் என்று தோன்றும்! (மிகை தான்). ஆனால், என்னைப் பொறுத்தவரை மார்க்சிய நூல்கள் அந்த இமோஷனல் இண்டலிஜென்சை நமக்கு தரக்கூடியவை. பொருள்முதல்வாதப் பார்வையுடன் உலகை அணுகும்போது கிடைக்கும் அறிவும், தெளிவும், நிதானமும், ஊற்றெடுக்கும் அன்பும் இயற்கைக்கும், இயல்புக்கும் நெருக்கமாய் இருப்பதாக நான் உணர்கிறேன்.
ஆகவே, தோழர்களே, பெண் என்னும் அடையாளத்துடன் பிறந்திருப்பதாலேயே உங்களுக்கென விதிக்கப்பட்டிருக்கும் விதிகளை அப்படியே ஏற்றுக்கொண்டு வாழும் எனதருமை தோழிகளே பெண் என்பவள் இந்த சமூகத்தின் வரையறைப்படி யார் என்னும் கேள்வியை எழுப்புங்கள். உங்களுக்கும், உங்களை சுற்றி இருப்பவருக்கும் விதிக்கப்பட்டிருப்பது என்ன? அதை விதித்தது யார்? அது இயல்பானதா? அறிவியல் பூர்வமானதா என்னும் கேள்விகளை எழுப்ப முயற்சி செய்யுங்கள்..
இந்த சமூகத்தில் நடப்பவை குறித்தும், நம்மோடு சக பயணியாய் வரும் ஆண்கள் எப்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைக் குறித்தும் அறிய முயலுங்கள். ஆண்களுக்கும் அதை புரிய வைக்க முயற்சிப்போம்.
ஒவ்வொன்றையும் கேள்வி கேளுங்கள். அறிவியல்பூர்வ கோட்பாடுகள் கொண்டு அதற்கான விடை தேடுங்கள். நீங்கள் கண்டறியும் விடைகள் சமூகத்தை விடுவிக்கக் கூடியதாய் இருப்பின் அறிவைப் பரப்புங்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக மனிதர்களிடையே பல்வேறு வகையான பாகுபாட்டினை ஏற்படுத்தி அன்பையும், சமத்துவத்தையும் குலைத்து இயற்கைக்கும், இயல்புக்கும் மாறாக வாழ காரணமாக இருக்கும் பொருளாயத அடிப்படைகளை – அதாவது பொருளாதார அமைப்பை கற்றரிய முயற்சி செய்வோம்.
இன்று உழைக்கும் மகளிர் தினம். மனிதனை மனிதனே ஒடுக்கவும், சுரண்டவும் காரணமாக இருக்கும் நிலவும் தனியுடைமை பொருளாதார அமைப்பின் பல்வேறு அரசியல்-சமூக நிலைமைகளை மற்றியமைக்க வேண்டும் என்பதை நினைவூட்டி, அதற்காக உழைத்து, போராடி, தியாயகங்கள் செய்து நமக்கான உரிமைகளை பெற்றுக் கொடுத்த பெண்களை நினைவு கூறும் தினம்.
சமூக பாகுபாட்டின் அடிப்படையாக இருக்கும் உடைமை வடிவத்தை, சுரண்டல்வாத உழைப்புப் பிரிவினையை ஒழித்து சமத்துவமான பொருளாதார-சமூக அமைப்பினை நிலைநாட்ட இந்த உழைக்க்கும் மகளிர் தினத்தன்று சூளுரைப்போம்.
தோழர்கள் அனைவருக்கும் உழைக்கும் மகளிர் தின வாழ்த்துகள்.
- கொற்றவை