Sep 23, 2016

விமர்சன அரசியலின் உண்மை முகம் - 1

ரங்கநாயகம்மா சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு சொல்லவில்லை; மார்க்சியத்தை போதுமான அளவில் விளக்கவில்லை; அது மார்க்சியமே இல்லை என்றெல்லாம் கொச்சைப் பொருள்முதல்வாதியான ஈஸ்வரன் விளக்குவதில் உள்ள அபத்தத்தை நாம் இப்போது பார்ப்போம்:

இவரைப் பொறுத்தவரை, சாதி உலர்ந்து உதிர்ந்துவிடும் என்பதுதான் சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு சொல்லும் வகையில் எழுதுவதாகும். இந்த சமூக அமைப்பு எத்தகையது, உழைப்புச் சுரண்டல் என்றால் என்ன? உழைப்புச் சுரண்டலை புரிந்து கொள்ளவேண்டும், உழைப்புச் சுரண்டலை எதிர்க்க வேண்டும், தனி உடமையின் அடிபடையிலான உற்பத்தி சாதனங்களின் உடைமையை மாற்றி அமைக்க வேண்டும், அதன் அடிப்படையிலான உற்பத்தி உறவுகளை மாற்றி அமைக்க வேண்டும் என்று பாட்டாளி வர்க்க உணர்வு ஏற்படுத்தும் வகையில் விளக்குவது மார்க்சியமில்லை. மேலும், இதையெல்லாம் அடையும் விதமாக வர்க்கப் போராட்டம் தொடுப்பது, வர்க்கப் போராட்டப் பாதையில் மற்றப் போராட்டங்களை நடத்துவது, இதற்கான செயல் திட்டத்தோடு கம்யூனிஸ்ட் கட்சிகள் போராடுவது, அமைப்பு கட்டுவது அவசியம் என்று ரங்கநாயகம்மா விளக்குவதெல்லாம் சாதியப் பிரச்சினைக்குத் தீர்வல்ல.
உள்முரண்பாடுகளின் காரணமாக வர்க்கப் போராட்டம் வெடிக்கும், அப்போது சாதி உலர்ந்து உதிர்ந்து விடும் என்று மார்க்சின் முடிவுரையை அப்படியே சாதி என்ற சொல்லை மட்டும் வைத்து எழுதுவதுதான் சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு.

அந்த இயக்கப் போக்கை விரிவாக விளக்காததாலும், நடைமுறையோடு அதனை ஒப்பிட்டு விளக்காததாலும் ஈஸ்வரன் நமக்கு ஒரு பொருளாதார நிர்ணயவாதியாக மட்டுமே கடைசியில் எஞ்சுகிறார். அந்த நிர்ணயவாதத்தில் எந்த வகையிலும் நாம் பாடாளி வர்க்க உணர்வைக் காணமுடியாது. அது குட்டி பூர்ஷுவா அறிவுஜீவித்தனமாக மட்டுமே எஞ்சுகிறது. ஒருவகையில் நிலவுடைமை ஆதிக்க மனநிலையை கொண்டதாகவும் இருக்கிறது. தத்துவத்தின் full stop, comaவை மட்டும் சரி பார்க்கும் ஒரு ஆசிரியர் தன்மை விமர்சனங்களும், கொட்டேஷன் தொகுப்பு நூல்க்ளும் எந்த வகையிலும் பாட்டாளிவர்க்கத்தையோ-தலித் மக்களையோ (வர்க்க) அரசியல் மயப்படுத்த உதவாது. மேலும், பாட்டாகளிடையே, தலித்திகளிடையே அறச்சீற்றத்தையோ, போராட்டக் குணத்தையோ ஏற்படுத்தவும் உதவாது. அதனினும் பிரச்சினையாக மார்க்சியம் குறித்த ஒரு தப்பெண்ணத்தையும், நம்பிக்கையின்மையையுமே ஏற்படுத்த அது உதவும். அ.கா.ஈஸ்வரனின் நூலைப் படித்ததைக் கொண்டு நடைமுறையில் மார்க்சியத்தை எப்படி பொருத்திப் பார்த்து விளக்குவது என்பதற்கு எனக்கு எந்த வகையிலும் உதவியதில்லை. தம் சொந்த விளக்க முறையில் எழுதப்பட்ட அரசியல் பொருளாதாரம் உள்ளிட்ட மார்க்சிய நூல்களில் எனக்கு அந்த சிரமம் இருக்கவில்லை.

இவ்வாறாக வெறுமென்று மேற்கோள்களை வைத்து மட்டுமே மார்க்சியத்தை அறிமுகம் செய்வதால் ஈஸ்வரனிடம் அறமும் இல்லை, அறச்சீற்றமும் இல்லை, பாட்டாளி வர்க்க உணவும் இல்லை எனும் முடிவுக்கு நாம் வரவேண்டியதாகிறது. மேலும் அவரின் நூல்களைக் கொண்டு மார்க்சியத்தை நடைமுறையோடு இணைத்துப் பார்த்துப் புரிந்து கொள்வதாற்கான அறிவும் நமக்கு கிடைப்பதில்லை. எல்லாவற்றிலும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஆனால் கொச்சைப் பொருள்முதல்வாதியும், பொருளாதார நிர்ணவாதியுமான அவருக்கு- தான் ஒரு மார்க்சிய எழுத்தாளர், ஆத்தண்டிக் மார்க்சிய நீதிபதி என்கிற இறுமாப்புகள் ஏராளமாகக் கிடைக்கின்றன. அதன் மூலம் தனது நூல்களுக்கான சந்தையையும் அவர் உருவாக்கிக் கொள்கிறார்.

இன்னும் மிகத் தெளிவாகக் குறிப்பிடவேண்டுமென்றால், மார்க்சிய மூல ஆசிரியர்களின் தத்துவங்களை எத்தனையோ ஆசிரியர்கள் விளக்கி நடைமுறைக்கு உதவும்படி விளக்கம் சொல்லி, விவாதித்து வந்திருக்கின்றனர். ஆனால் கொச்சைப் பொருள்முதல்வாதியான ஈஸ்வரனோ மேற்கோள்களோடு மட்டும் மார்க்சியத்தை முன்வைக்கிறார். இதிலிருந்து மார்க்சிய அறிவுஜீவி என்ற அடையாளம் அவருக்கு ஒளிவீசும் பட்டமாகத் தெரிகிறது. தான் படித்ததை சமூகத்தில் நிலவும் பிரச்சினைகளோடு தொடர்புப்படுத்தி தம் சொந்த சொற்களில் விளக்கக் கூடத் தெரியாத அவர் மார்க்சிய மூல நூல்களைச் சுரண்டி தன்னை எழுத்தாளராக முன்வைக்கிறார்.

இது ஒருவகையில் மார்க்சியம் நடைமுறைக்கு உதவாத ஏட்டுச் சுரைக்காய் என்று மக்கள் கருதிக்கொள்வதற்கு மட்டுமே வகை செய்கிறது என்பதே என்வரையிலான கருத்து.

Sep 22, 2016

ஜெய் மார்க்ஸ்!!!!!

கீழேயுள்ள ஈஸ்வரயிய கொச்சைப் பொருள்முதல்வாத அனுமானவாதத்தின்படி, வளர்ச்சியடைந்த நகர்புறங்களில் சாதி என்பது வெறும் கருத்தியல் மட்டத்தில் மட்டுமே செயல்படுகிறது, அது உற்பத்தி உறவுகளின் ஒரு பகுதியாக தன்னை தகவமைத்துக் கொள்ளவில்லை. இது எத்தனை அபத்தமான, மார்க்சின் உருவாக்கத்தை (formulation) அப்படியே கொச்சையாக (literal explanation) பொருள் கூறுவதாகிறது என்று இப்போது பார்ப்போம்.
இந்தியாவில் சாதியமைப்பு என்பது உழைப்புச் சக்திகளை படிநிலை அமைப்பாக வகைப்படுத்தும் மதரீதியான (இந்துத்துவம்) சட்ட வடிவமாக உள்ளது. உழைப்புப் பிரிவினைக்கு அது ஒரு கோட்பாட்டை, சட்ட வடிவத்தை வழங்கியுள்ளது. அதன்படி, துப்புறவுப் பணிகள் / கீழ்நிலை உடல் உழைப்புப் பணிகள் தலித் சாதிகளுக்கு (கீழ்நிலை சாதிகள்) மட்டுமே ஒதுக்கப்படுகிறது.
இந்தியாவில் முதலாளித்துவம் தோன்றி வெற்றிகரமாக வளர்ந்துகொண்டு வரும் இந்நாளைய நிலையில் கூட இந்த உழைப்புப் பிரிவினையை நாம் காண முடியும். அதாவது முதலாளித்துவ தன்மைகள் தோன்றிவிட்ட காலத்திலும் கூட சாதி என்பது உற்பத்தி நடைமுறையில்-(உற்பத்தி சக்திகளுக்கிடையில்) பகுதி அளவில் பிணைந்திருப்பதைக் காண முடிகிறது. உபரியை அதிகரிக்க, மூலதனத் திரட்டலை பெருக்க முதலாளித்துவத்திற்கு (தனியுடைமை அடிப்படையிலான எந்த ஒரு உற்பத்தி முறைக்கும்) மலிவான உழைப்புச் சக்தி தேவை. அதற்கு சாதியமைப்பு ஏற்றதொரு ஒடுக்குமுறை மற்றும் சுரண்டலுக்கு ஏதுவான சட்டதிட்டங்களைக் கொண்டிருக்கிறது.
ஆகவே, பகுதி அளவில் ஜனநாயகமாகவும், பகுதியளவில் அதனை தன் உற்பத்தி நடைமுறையோடும் இணைத்தே முதலாளித்துவ உற்பத்தியமைப்பும், வளர்ச்சியும் செயல்படுகிறது (இன்றைய நிலையில்). உதாரணமாக, உற்பத்தியில் – பொருள் தயாரிப்பு (product-manufacturing) மற்றும் விநியோகம் என்று வரும்போது, தொழிலின் அடிப்படையில், அது அனைத்து சாதியினருக்கும் தனது பொருளை சந்தைப்படுத்தும் விதமாக சாதியை மறுத்தும் / நெகிழ்த்தியும் செயல்படுகிறது.
அதாவது சர்க்கரை உற்பத்தித் தொழில் என்று எடுத்துக்கொள்வோம் – அந்த சர்க்கரையை தயாரிக்கத் தேவையான கச்சாப் பொருளைப் பெறுவதிலும், சர்க்கரையை விநியோகிப்பதிலும் முதலாளித்துவமானது சாதியைக் கடந்து அனைவரிடமும் தனது பரிவர்த்தனைகளை மேற்கொள்கிறது. ஆனால் உழைப்புச் சக்தியை அமர்த்துவதில் அது குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டுமே மேல்நிலைப் பணிகளை வழங்குகிறது, ஆலையில் துப்புறவுப் பணிகள் அல்லது கீழ்நிலைப் பணிகளில் பெரும்பாலும் தலித்துகளே இருக்கிறார்கள்.
பின்தங்கிய முதலாளித்துவ நாடுகளில், நிலவுடமை உற்பத்தி முறையின் கூறுகள் இன்னமும் ஒடுக்குமுறை வடிவங்களாக இருக்கும் ஒரு நாட்டில், உற்பத்திக் கருவிகளின் (உற்பத்தி சாதனங்களின்) வளர்ச்சி மிகவும் மெதுவாகவே நடக்கும். சாதியமைப்பின் வேறூன்றிய நடைமுறையானது (வெறும் கருத்தியல் நிலையில் மட்டுமல்லாது) முடிந்தவரை உற்பத்தி சக்திகள் மற்றும் உற்பத்தி சாதனங்களுக்கிடையிலான உள் முரண்பாட்டிலிருந்து ஏற்படக்கூடிய உற்பத்திச் சாதனங்களின் வளர்ச்சியைத் தள்ளிப்போட்டுக் கொண்டே வரும்.
துப்புரவுப் பணிகளில் இன்னமும் இயந்திரங்களைக் கொண்டுவராதிருப்பது, இதற்கொரு சிறந்த உதாரணம். இந்த தாமதத்திற்கு ஒரு வகையில் வேலைவாய்ப்பின்மையால் அந்த சாதியினர் மத்தியில் ஏற்படக்கூடிய பாதுகாப்பின்மை உணர்வின் காரணமாகவும், மாற்று பொருளாதார திட்டங்கள் இல்லாதது எந்தளவுக்குக் காரணமோ அதையும்விட சாதி அடிப்படையிலான உழைப்புப் பிரிவினையானது முதலாளித்துவச் சுரண்டலுக்கு மிக மிக ஏதுவாக இருப்பதும் ஒரு காரணம்.
இதையெல்லாம் வரலாற்று பொருள்முதல்வாதப் பார்வை இல்லாமல், இந்திய சமூகத்தின் உள்முரண்பாடுகள் அமுங்கி இருப்பதற்கான காரணங்களைக் கணக்கில் கொள்ளாமல் வெறுமனே இயந்திரத்தனமாக கோணார் உரை எழுதுவது போல் “வளர்ச்சியடைந்த நகர்புறங்களில் முதலாளித்துவத் தன்மைகள் தோன்றிய இடங்களில் சாதியப் போராட்டம், ஒரு கருத்தியல் போராட்டமாக, அதாவது பொருளாயத (material)உள்ளடக்கத்திலிருந்து விடுபட்டும் சிந்தனையில் சாதியம் செயற்படும் போது இங்குச் சித்தாந்தப் போராட்டமாக நடத்தப்பட வேண்டும்.” என்று சொல்வது எத்தனை அபத்தமானது; நடைமுறையிலிருந்து விலகி வெறும் ஏட்டுச் சுரைக்காய் வியாக்கியானமாக, கருத்துநிலை ‘ஆசீர்வாதமாக’ மட்டுமே எஞ்சுகிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
முதலாளித்துவம் முழுவதுமாக வளர்ச்சி பெரும் வகையில் முன்னேறும் கட்டத்தில் மட்டுமே உற்பத்திச் சாதனங்களின் வளர்ச்சி தீவிரமாக ஏற்படும். இந்திய நிலைமையில் சாதியமைப்பு அதுவரை பகுதியளவில் (பகுதியளவில் என்பதற்கு அழுத்தம் அதிகம்) அடிக்கட்டுமானத்தில் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும். ஆகவே முதலாளித்துவ தன்மைகள் தோன்றிய இடங்களில் சாதி பொருளாயத அடித்தளமாகவும் (பகுதியளவில்) இருக்கும் என்பதை நாம் காணமுடிகிறது.
அதேபோல் “முதலாளித்துவம் அனைத்துத் துறைகளில் வளர்ச்சியடையும் போது சாதியம் உள்ளடக்கத்திற்கான வடிவமாகக் காணப்படாமல், மீதமிச்சமாக உதிர வேண்டிய நிலையாக மாறிவிடும். அந்நிலையில் கருத்தியல் போராட்டமாக நடத்தப்பட்டுச் சாதியம் உலர்ந்து மறையும்.” என்று ஈஸ்வரன் மொட்டையாகச் சொல்லும்போது, அதை உற்பத்தி நடைமுறையின் உதாரணங்கள் எதையும் முன்வைத்து விரிவாக விளக்காமல் போவதால், அவருடைய ஏட்டுச் சுரைக்காய் சிறுகுறிப்புகள் ஏற்படுத்தும் புரிதல் என்னவெனில்: முதலாளித்துவம் வந்துவிட்டால் சாதி மறைந்துவிடும், உலர்ந்து உதிர்ந்து விடும்; அதுவரை நீங்கள் கைக்கட்டி வாய்ப்பொத்தி வேடிக்கை பாருங்கள். மேடை போட்டுக்கொண்டு சாதி வெறும் கருத்தியல், கருத்தியல், கருத்தியல் என்று சொல்லிக் கொண்டு மார்க்ஸின் மேற்கோள்களைச் சுட்டிக் காட்டி ‘கருத்தியலுக்கு எதிரான’ அறச்சீற்றமற்ற வகையில், மென்மையாகப் பேச்சுவார்த்தை நடத்துங்கள்.
வர்க்கப் போராட்டம் என்றால் என்ன, சுரண்டல் என்றால் என்ன, சுரண்டலை எப்படி உழைக்கும் வர்க்கத்திற்குப் புரியும் வகையில் விளங்க வைப்பது, அந்த மக்களின் வாழ்க்கை நடைமுறையிலிருந்து, குறிப்பாக அவர்களின் நிலைக்கு பிரதான ஒடுக்குமுறை வடிவமாக இருக்கும் உழைப்புப் பிரிவினையை எப்படிப் புரியவைப்பது? உழைக்கும் வர்க்கத்தை ஒருங்கமைக்கத் தடையாக இருக்கும் அடையாள அரசியலை, மார்க்சியம் குறித்த தவறான (அம்மக்களின்) தலைவர்களின் வழிகாட்டுதல்களை எப்படி தவறென்று புரியவைப்பது இதையெல்லாம் அவரிடம் கேட்டுவிடாதீர்கள். மேற்கோள்களுக்கு அப்பாற்பட்டு நடைமுறையிலிருந்து விளக்கி எழுத மார்க்ஸ், எங்கல்ஸ் நூல்கள் இப்போது இல்லையே. தெரிந்தால் சொல்லிவிட மாட்டாரா!
“முதலாளித்துவ உற்பத்தி உறவுகள் சாதிய அடிப்படையிலானதல்ல” – சமூக வளர்ச்சியானது புராதனப் பழங்குடிகள் காலத்திலிருந்து வளர்ச்சியடைந்து முதலாளித்துவ காலத்திற்கு வரும்வரையில் உற்பத்தி நடைமுறையின் போக்கில், உற்பத்தி உறவுகள் பரிணாமம் பெற்று வளர்கிறது, மாறுகிறது. அந்த வகையில் குறிப்பிட்ட உழைப்புப் பிரிவினை (இந்தியாவில் சாதியமைப்பின் செல்வாக்குக்கு உட்பட்ட) உற்பத்தி உறவுகளின் அடிப்படையாக இருக்காதெனினும், முழுமையான முதலாளித்துவ வளர்ச்சி ஏற்படும் வரை பகுதியளவில் அது அடிக்கட்டுமானத்திலும் செல்வாக்கு செலுத்தி அடிக்கட்டுமானத்தில் அரை நிலவுடைமையாகவும், அரைக் காலனியமாகவும் இருக்கிறது. இன்றைய நிலையில் முதலாளித்துவ உற்பத்தி உறவுகளில் சாதியமைப்பு எப்படி செயல்படுகிறது என்று மேலே பார்த்தோம்
கருத்தியல்கள் மேற்கட்டுமானம் என்றாலும், உற்பத்தி நடைமுறையில், சுழற்சியில் ஒரு கட்டம் வரை அடிக்கட்டுமானத்தில் செல்வாக்கு செலுத்தும். சாதியமைப்பு என்பது உழைப்புப் பிரிவினையை சட்டவடிவமாக்கியதால், இந்தியாவில் அதன் செல்வாக்கு மிக அதிகமாகவே இருக்கிறது (பொருளாயத அடிப்படையில்தான்) அதனால் மார்க்சின் உலர்ந்து உதிர்ந்து மறையும் என்பதை நாம் உங்கு இயந்திரத்தனமாகக் பொருள்கொடுக்கும் வகையில் எழுதுவதென்பது எத்தனை ஆபத்தானது, குழப்பம் ஏற்படுத்தக் கூடியது.
நடைமுறையோடு அதனை தெளிவாக விளக்காமல், ஆசீர்வாதம் செய்வது போல் “சாதி மறைந்து போகும்” என்று தப்பும் தவறுமாக உரை எழுதுவது யாருக்குப் பயன் தரும்.
மார்க்சின் சொற்களிலேயே சொல்வதானால், வியாக்கியானங்கள் நிறையவே இருக்கின்றன, பிரச்சினை என்னவென்றால் அதை மாற்றியமைப்பதுதான். முதலில் அதற்கு மார்க்சியத்தை சுரண்டல்வாத அமைப்பின் அனைத்து வகையினங்களையும் (categories) – உற்பத்தி உறவுகள், உழைப்புசார் உறவுகள், சொத்துறவுகள், பரிவர்த்தனை உறவுகள் என்று ஏற்றத் தாழ்வுக்கான அனைத்து வகையினங்களையும் - புரியும்படி சொல்லவேண்டும். சொல்லப்போனால் அறச்சீற்றத்தை ஏற்படுத்தும் வகையில் சொல்ல வேண்டும்.
இந்தப் போக்கில் உற்பத்தி உறவுகள் எனும் சொல்லையே தவிர்த்து ஒருவர் மார்க்சியத்தை விளக்கினாலோ அல்லது உற்பத்திச் சாதனங்களின் வளர்ச்சியினால் ஏற்படும் உள்முரண்பாடுகள் ஏதுமிருக்காது, பாட்டாளி வர்க்கம் உணர்வு பெற்றுவிட்டால் புரட்சி வெடித்துவிடும் என்று சொன்னாலோ அது தவறு என்று சொல்லலாம். ரங்கநாயகம்மா அப்படி எங்கேயும் சொல்லவில்லை, வர்க்கப் போராட்டம் என்பதை வெறுமென்று உழைப்புச் சுரண்டலை மட்டும் ஒழிப்பது என்பதோடு நிறுத்திக் கொள்ளவுமில்லை, தனியுடைமை அடிப்படையிலான உற்பத்தி சாதனங்களின் உடைமையையும் மாற்றி அமைக்க வேண்டும் என்றே கூறுகிறார்.
ஆனால் முழுமையாக ஒருவரின் எழுத்தைப் படித்து தொகுத்துப் பார்த்து அது தரும் விளக்கத்தை அறிவகந்தையும், அடையாள இருப்பு சார்ந்த உள்நோக்கமும் இன்றி படித்தோமானால் இதுபோன்ற திரிபு வேலைகளை செய்யாமல் தவிர்க்கலாம். முதலாளித்துவத்தின் வளர்ச்சியை அந்தந்த நாட்டின் உள்முரண்பாடு மற்றும் ஒடுக்குமுறை வடிவங்களை வைத்து நடைமுறையில் தொடர்புப்படுத்தி, ஆய்வுபூர்வமாக விளக்காமல், மார்க்சின் சொற்களை மட்டுமே எடுத்துப்போட்டு, கொச்சையான பொருள்முதல்வாத வியாக்கியானங்களை மட்டுமே ஏட்டறிவில் செய்யும் ஈஸ்வர நாமேதேய வகையறாக்களினால்தான் மார்க்சியம் என்பது வெறுமனே பொருளாதார நிர்ணயவாதம் என்று பலராலும் குற்றம் சாட்டப்படுகிறது.
தோழர்களே, நமக்கெல்லாம் ஈஸ்வர ஆசீர்வாதம் கிடைத்துவிட்டது, நாள்தோறும் மார்க்சின் மேற்கோள்களை ஜெபிக்கலாம். முதலாளித்துவம் வளர்ந்துவிட்டால் சாதி மறைந்துவிடும். அதன் பின்னர் நாம் வர்க்கப் போராட்டத்தைத் தொடுப்போம்.
ஜெய் மார்க்ஸ்!!!!!!!
மார்க்ஸே நமஹ!!! எங்கல்ஸ் அய்யாவுக்குத் தோத்திரம்!!! லெனின் இன்ஷா அல்லாஹ்!!!!
பாதி புத்த அட்ட தீவ் பாவ்!
மார்க்ஸே சரணம் கச்சாமி!!!

Sep 20, 2016

உண்மையை நோக்கி நகர்தல்....

திறனாய்வுக் கூட்டத்தில் பலவிதமான விமர்சனங்களுக்குப் பதில் அளிக்கையில், தொடக்கத்தில் நானும் பெரியார், அம்பேத்கர் ஆகியோர் மீது மிகுந்த ஈடுபாட்டுடனேயே இருந்தேன். மாசெஸ் அமைப்பு தொடங்கியபோது நான் வெளியிட்ட்ட 18 நிமிட காணொளியில் கூட அம்பேத்கரின் உரையைப் பயன்படுத்தியுள்ளேன்: “இந்தப் பக்கம் வரத் தயாராக இல்லாத அவர்கள் வருவார்கள். அவர்களை இந்தப்பக்கம் இழுக்க... அவர்களுக்கு அதை சாத்தியப்படுத்திக் கொடுப்போம்.” (2012இல் வெளியிட்டது, என்னுடைய அந்த காணொலியில் உள்ள தவறுகள் பற்றி இன்று எனக்கே பல விமர்சனங்கள் உண்டு! பகுதி 1: https://www.youtube.com/watch?v=tsJ... , பகுதி 2: https://www.youtube.com/watch?v=Xuy... - அம்பேத்கர், பெரியார் மேற்கோள் வரும் பகுதி.) ‘களப்பணி’ எல்லாம் முயற்சித்துப் பார்த்துவிட்டு, எனக்குக் கிடைத்த அனுபவங்களின், வைக்கப்பட்ட ‘அவதூறுகளின்’ காரணமாகத்தான் நான் அதிலிருந்தெல்லாம் விலகி, முதலில் மார்க்சியத்தை சரியாகக் கற்று அதை மற்றவர்களிடத்து கொண்டு சேர்க்கும் வேலையைச் செய்வோம் என்று ஒதுங்கிவிட்டேன் என்று கூறினேன்.
வரலாற்று வளர்ச்சி எனும்போது அது எல்லாருக்கும் பொருந்தும், நானும் அப்படித்தான். மெல்ல மெல்ல மார்க்சியத்தைக் கற்று, இன்று அதன் அறிவியல்தன்மையை உணர்ந்ததால்தான் ஒரு கட்டத்தில் “நான் பெண்ணியவாதி அல்ல மார்க்சியவாதி” என்றேன். அதேபோல் பலதையும் ‘இணைத்து ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்ற ‘போலியான, சுயநலம் மிக்க பூர்ஷுவா அரவணைப்பு’ மனநிலையிலிருந்து மாறி ‘கராரான’, ‘நேர்மையான’ விமர்சனங்களை வைக்கிறேன் அல்லது அவற்றோடு உடன்படுகிறேன்.
ஆய்களோ, தீர்வுகளோ, விமர்சனங்களோ, சொல்லாடல்களோ எது எப்படி இருப்பினும், அது உண்மையை நோக்கி நகர்வதாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தேன்.
வசுமித்ர பேசுகையில் (நினைவில் இருப்பதிலிருந்து), எனக்கு அம்பேத்கரை ரொம்ப பிடிக்குங்க! அவர் வாழ்ந்த வாழ்க்கையையோ, அனுபவித்த அவமானங்களையோ நானோ (நாமளோ) ஒரு துளி அனுபவிச்சிருந்தாக் கூட ஒண்ணு கொலைகாரனாகி இருக்கணும், இல்லன்னா தற்கொலை பண்ணிக்கணும்… ஆனால் அதையெல்லாம் விட்டுட்டு அந்த மனுஷன் இவ்வளவு உழைச்சு அந்த மக்களுக்காகவே கடைசி வரைக்கும் நின்னு போராடியிருக்காரு….. ஆனால் அவர் முன்வச்ச தீர்வு போதுமான்னா போதாது!
தோழர் முருகன் பதிலளிக்கையில், அம்பேத்கரை நீங்கதான் உங்களுக்கான தலைவரா மட்டும் பார்க்குறீங்க… நாங்க அவரை எல்லாருக்குமான தலைவராதான் பார்க்குறோம்…..
கூட்டத்தில் பேசும்போதே நான் சொல்லியிருந்தேன், சாதியப் பிரச்சினை மற்றும் மார்க்சியம் குறித்து நடந்துள்ள விவாதங்கள், அம்பேத்கரின் சிந்தனைகள் மீதான விமர்சனங்கள், இதுவரை இந்நூல் குறித்து வந்த எதிர்வினைகள் எல்லாவற்றையும் தொகுத்து கூடிய விரைவில் ஒரு நூலைக் கொண்டுவரவிருக்கிறோம். தொகுப்புக்காக பல்வேறு ஆய்வுகளையும், நூல்களையும் படித்துவருகிறோம். அந்த வரிசையில், தன்னுடைய நூலுக்கு ரங்கநாயகம்மா அளித்தி சில பதில்களின் தொகுப்பாக ‘Caste and Class: A Marxist Viepoint’: A collection of Polemical Articles எனும் நூலை வாசிக்கத் தொடங்கியுள்ளேன்.
அதில், அம்பேத்கர் மற்றும் சாதியப் பிரச்சினை பற்றி இரண்டு கேள்விகளும், இரண்டு பதில்களும் எனும் தலைப்பில் ஒரு உரையாடல் உள்ளது. அது பின்வருமாறு.
கேள்வி-1: அம்பேத்கரை முன்வைத்து நீங்கள் எழுதிய புத்தகத்தைப் படித்து நான் எவ்வளவு வருந்தினேன் என்று என்னால் சொல்ல முடியவில்லை. உங்களுடைய மற்ற நூல்களையும் நான் படித்துள்ளேன். ஆனால் அம்பேத்கர் பற்றிய புத்தகம் என்னை மிகவும் காயப்படுத்திவிட்டது. அவரைப் படிக்காமலேயே நீங்கள் எழுதியுள்ளீர்கள்.
பதில்: அம்பேத்கரின் எழுத்துகளை படிக்காமல் நான் எப்படி அவ்வளவு மேற்கோள்களைக் கொடுக்க முடியும்? அவருடைய நூல்களில் எதெல்லாம் விமர்சிக்கத்தக்கதோ அதை நான் விமர்சித்துள்ளேன். அம்பேத்கரின் நூல் மூலமாகத்தான் நான் காந்தியின் சதியைப் பற்றி கற்றரிந்தேன். அம்பேத்கர் உங்களுக்கு மட்டும்தான் சொந்தம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அப்படியே சொந்தம் கொண்டாடினாலும், எங்களுடைய தலையீட்டைக் கோரும் சில விஷயங்களையும் பரிசீலித்துப் பார்க்க வேண்டும். ஸ்டாலின் மற்றும் மாவோவைக் கூட விமர்சித்து நான் நிறைய எழுதியுள்ளேன். அதற்கும், அவர்களைப் பிடிக்காததுதான் காரணமா? இல்லை, பாராட்டுக்குரிய சில விஷயங்களில் எனக்கு அவர்களைப் பிடிக்கும். விமர்சனம் தேவைப்படும் விஷயங்களில் நான் அவர்களை விமர்சிக்கிறேன்.
சாதியம், வறுமை மற்றும் வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றால் துன்பப்படும் மக்களுக்காக எழுதிய அம்பேத்கர் - சொத்துறவு, சுரண்டல் மிக்க உழைப்புசார் உறவுகள் பற்றியெல்லாம் புறக்கணித்துவிட்டு, பூர்ஷுவா அரசமைப்பில் நம்பிக்கைக் கொண்டிருந்தாரே, அது உங்களுக்குப் பரவாயில்லையா?
மார்க்சியத்தை ‘பன்றிகளின் தத்துவம்’ என்று சொல்லிவிட்டு, தாழ்த்தப்பட்ட சாதி மக்களின் விடுதலைக்காக ஏதேனும் கோட்பாட்டை அவரால் முன்வைக்க முடிந்ததா? அஷ்டாங்க மார்க்கத்தைப் (புத்தரின் தர்மம் எனும் பாதை) பின்பற்றுவதால் ஏழைகளுக்கு விடுதலைக் கிடைத்துவிடுமா? நீங்கள் வருத்தப்பட்டீர்கள் என்பதை அறிந்து நானும் வருத்தபப்டுகிறேன்; ஆனால், அதை நீங்கள் சற்று பொறுத்துக்கொண்டு, சரியான பாதை எது என்பதைக் கண்டறிய வேண்டும். நம் தலைவர்கள் சொல்லாதவற்றையும் நாம் கற்றரிய வேண்டும். அம்பேத்கர் ‘பயன்படமாட்டார்’ என்று நான் சொல்லவில்லை; அவர் ‘போதாது’ என்றுதான் நான் சொல்கிறேன். மக்களின் விடுதலைக்காக அவர் முன்வைத்த திட்டங்கள் போதுமானது என்று நீங்கள் கருதுகிறீர்களா? சரி, குறைந்தது, ’பௌத்த அஷ்டாங்க மார்க்கம்’ போதுமானதா? இதுபோன்ற கேள்விகளை எழுப்பாமல் நாம் எப்படி கூட்டிலிருந்து வெளியே வருவது?
எனக்கும் அம்பேத்கரைப் பிடிக்கும்! ஆனால், அம்பேத்கரைக் காட்டிலும் உண்மையை அதிகம் பிடிக்கும்!

Sep 10, 2016

கிளிப்பேச்சுதான் மார்க்சியத்தை சரியாக விளக்கும் முறையா?

அம்மா என்றால் யார்?
அம்மா என்றால் உன்னை பத்து மாதம் சுமந்து பெற்றவள்…
அம்மா என்றால் நீ பிறப்பதற்கு காரணமாய் இருந்தவள்…
இரண்டு விளக்கமும் ஒரே பொருளைத்தானே கொடுக்கிறது. முன்னது நடைமுறையை, காலத்தை பிரதானமாக முன் வைத்து விளக்குகிறது. பிந்தையது விளைவைப் பிரதானமாகக் கொண்டு விளக்குகிறது. எந்தவகையிலும் இது உண்மையை சிதைக்கவில்லை. (அம்மா என்றால் பெண், பெண் என்றால் கருப்பை என்ற அகராதிப் பொருள் போல் இல்லையே இது!!)
அதேபோல்தான் பொருளாதார பாடத்தில் - உற்பத்தி நடைமுறையில் இடம்பெறும் (உள் நுழையும்) ‘பொருள்’ எனப்படும் பொருள், கடக்கும் கட்டங்களை ‘தெளிவாக’ (கூடுதலாக) விளக்க ஒருவர் குறிப்பிட்ட வழிமுறையை பின்பற்றலாம்.
அந்த வகையில்தான் ரங்கநாயகம்மா இயற்கைப் பொருள் – பொருள் – சரக்கு எனும் கூம்பகத்தை வழங்குகிறார் என்பது என் வரையிலான கருத்து. அது உழைப்பின் பாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து விளக்குவதாகும். (இணைப்பைப் பார்க்கவும்). ஒருவகையில் சுரண்டல்வாத சமூகத்திற்கு விளக்க இந்த அழுத்தம் தேவை என்றே கருதுகிறேன். நிலம், காற்று, நீர்.. (இன்னபிற) என்பது இயற்கையில் கிடப்பது. ஆனால் அதை தனி நபர் (அல்லது அரசு) உடைமையாக்கி அதற்கு வாடகை (வட்டி, இலாபம்) என்று வசூலிப்பதை இயற்கையான ஒன்றுதான் என்று கருதும் (அப்படி கருதவைக்கப்பட்ட) ஒரு சமூகத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.



இதுபோன்ற ‘உடமை’ முறையும், வருவாய் முறையும் (மதிப்பு வடிவம்) இயற்கையானதல்ல என்பதை விளக்கும்போது உதாரணமாக “காடு” என்பது இயற்கைப் பொருள் (natural substance) ”தோட்டம்” என்பது பொருள் என்கிறார் ரங்கநாயகம்மா. இது எந்த வகையில் பொருள்முதல்வாதப் பார்வையிலிருந்து விலகிச் செல்கிறது? இன்னும் சொல்லப்போனால், இந்தளவுக்கு பகுத்துப் பார்ப்பதற்குக் கற்றுக்கொடுக்கும் போது மார்க்சியக் கோட்பாட்டை அதன் உட்பொருளுக்காக மட்டுமின்றி அதன் வரலாற்று நோக்கினையும் சேர்ந்து புரிந்துகொள்ள வகை செய்கிறது. வரலாற்று சூழலுக்கேற்ப, சொற்களும்கூட பண்டமாகிவிட்ட சூழலில், சில சொற்கள் சில நியாயங்களை தாமாக வழங்கக்கூடிய சூழலில் (உற்பத்தி முறையில்) இது ஒரு வகையில் கூடுதல் பகுப்பாய்வு – கூடுதல் விளக்கம்.
எளிமையாகச் சொல்வதெனில், இப்படி ‘கூடுதலாக’ வகைப்படுத்தி விளக்கும்போது பாமரர் மனதில் தோன்றக்கூடியதாக எனக்கு ஏற்பட்ட உணர்வுகள் - ”இயற்கையையே ஒருத்தன் (ஒருத்தியும்தான்) சொந்தம் கொண்டாடுரானேப்பா”, “நாம உழைக்கலன்னா இவனுங்களுக்கு எங்கருந்து ‘பொருள்’ (சரக்கு) கிடைக்கும்”, ”எல்லாருக்கும் சொந்தமா இருக்குற இயற்கையை கைப்பத்தி, நம்மளை உழைக்க வச்சு ‘கூலிங்கிற’ பேர்ல பிச்சை போட்டு, அவன் ‘இலாபம்’னு அள்ளிக்கிட்டு போறான்யா…. நம்மை உழைப்பை சுரண்டுறானுங்கப்பா… இதையெல்லாம் விளக்குறதுதான் கம்யூனிசமாம்பா… நாம என்னவோ அது உற்பத்தி உற்பத்தின்னு ஏதோ பெரிய கணக்கு வழக்கு பேச்சு பேசுதுன்னுல்ல நினைச்சோம்… இயற்கை, நம்ம உழைப்பு, அதுல கிடைக்கிற ‘விளைச்சல்’ இதெல்லாம் நமக்கும், எல்லாருக்கும் சமமா சொந்தமாகனும்பா… அதுக்கு கம்யூனிசம் வேணுமப்பா..”
“ உற்பத்தியா – உழைப்பா – உற்பத்தி நடைமுறையா – உழைப்பு நடைமுறையா எது பெரிது? எது முக்கியம் எனும் போக்கினை ரங்கநாயகம்மா எடுக்கவில்லை. ஆனால் அச்சொற்கூறை பிடித்து தொங்குவதன் மூலம் (பொருள்) உற்பத்தி நடைமுறையே (உற்பத்தி உறவுகளின் கூட்டுமொத்தம்) முக்கியம் என்று சொல்லி உழைப்பைப் பின்னுக்குத் தள்ளுவதன் மூலம் இவர்களது வாதங்கள் வரலாற்று பொருள் இரண்டாம் பார்வை என்று சொல்லலாமா? அல்லது ‘மூளை உழைப்பில்’ மட்டுமே ஈடுபடும் வர்க்கச் சிந்தனையின் பிரதிபலிப்பு என்று சொல்லலாமா? உழைப்பின் பாத்திரத்திற்கு அழுத்தம் கொடுத்து இயற்கைப் பொருள் – பொருள் – சரக்கு (சந்தைக்கு வரும்போது மட்டுமே அது சரக்காக (மதிப்பு பெற்ற பொருள்) இருக்க முடியும். மற்ற நேரங்களில் அது (பயன் மதிப்பு கொண்ட) பொருள் மட்டுமே). இதைத்தான் ரங்கநாயகம்மாவும் விளக்குகிறார். இந்த கூடுதல் வகைப்படுத்தலினாலோ அல்லது உழைப்புசார் உறவுகள் என்று சொல்வதாலோ கோட்பாட்டிற்கு எந்த வகையில் ‘இழிவு’ ஏற்பட்டுவிடும்?
//The natural things available in nature without the intervention of human labour sometimes act as raw-materials also// //For example, wind energy used in the wind mill. The wind is available in nature and it is a natural thing. And no labour is involved in making of the wind. But the wind energy is converted into electrical enegy in the wind mill. How do you call the wind energy used in the wind mill? It is no doubt the wind used in the wind mill is a raw material to the electrical energy.//
காற்றாலை மின்சக்தி உற்பத்தியில் காற்று என்பது கச்சாப் பொருள். சரி! ஆனால் அந்த காற்றை தடுத்து மின் உற்பத்தி செய்யப்படுகிறது. அப்படி தடுத்து நிறுத்துவதற்கு இறகுகள் கொண்ட இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. அந்த இயந்திரங்கள் (உழைப்புக் கருவி – உற்பத்திக் கருவி) உழைப்பின் தலையீடின்றி உருவானதா? உழைப்பினால் உருவான ஒரு கருவியின் தலையீடின்றி, இயற்கையாக ஒரு திசையில் சென்றுகொண்டிருந்த காற்றை தடுத்து நிறுத்தும் அந்த நடைமுறை தொடங்காதவரை காற்றானது ‘இயற்கைப் பொருளா’ இல்லையா? (இல்லை என்று சொல்வோமானால், அது மார்க்சியர்களுக்கு சூழலியல் பார்வை இல்லை என்ற விமர்சனத்தில் தப்பில்லை எனலாம்).
அந்தக் காற்றை நாம் கச்சாப் பொருள் என்று சொல்வோமேயானால் – இயற்கையையே கச்சாப் பொருளாக வரையறுத்து – பல்வேறு உத்திகள் / தொழில்சார் சொற்கூறுகளை முன் வைத்து இயற்கையை கூறு போடும் முதலாளித்துவ சிந்தனையா இல்லையா? குறைந்தபட்சம் முதலாளித்துவ ‘கொள்ளைகளுக்கு’ வலுசேர்க்கக்கூடியதா இல்லையா?
அதேபோல் காட்டில் உள்ள மரம் என்பது இயற்கைப் பொருள் அதை வெட்டி பலகை ஆக்கிய பின்னர் நாற்காலி தயாரிக்க அப்பலகை கச்சாப் பொருளாகிறது. பொதுபுத்தியில் நாம் அந்த மரத்தை கச்சாப் பொருள் என்போம், ஆனால் அந்த மரம் இயற்கையிலேயே விளைந்திருந்ததா அல்லது காடு வளர்ப்பில், மனித உழைப்பின் மூலம் மரங்கள் வளர்க்கப்பட்டதா என்பதைப் பொறுத்து மரம் கச்சாப் பொருளாகும் அல்லது பலகை கச்சாப் பொருளாகும். இங்கேயும் உழைப்பின் தலையீடின்றி பொருள் உற்பத்தி (நுகர்வுக்காக, சரக்காக) சாத்தியமில்லை என்பதை விளக்கவே இப்படி ‘ஆழமாக’ வகைப்படுத்தி விளக்கப்படுகிறது. இந்தப் பகுப்பாய்வின்றி மரத்தை கச்சாப் பொருள் என்றால் காட்டை ஏலம் எடுக்கும் மூலதனமும், உழைப்பு சக்தியை விலைக்கு வாங்கும் திறனும் உள்ள முதலாளித்துவ ‘தொழிற்முறையை’ நாம் நியாயபப்டுத்துவதாகாதா?
ஒருவகையில் இது அறம்சார்ந்த பகுப்பாய்வையும் கோருகிறது. ஆனால் அந்த அறம் என்பது அகவாதமோ அல்லது கருத்துமுதல்வாதமோ கிடையாது. இது இயற்கை மீதான பொது உரிமையை (சொல்லப்போனால் மனித வாழ்விற்காகத் தேவைப்படும் பொருள் உற்பத்திக்காக மட்டுமே இது பொருந்தும்… அல்லையேல் யாரும் இயற்கை மீது உரிமை கோர முடியாது – இயற்கையான உழைப்பு சக்தியை விலைக்கு வாங்க முடியாது) நிலைநாட்டுவதற்காக, புரியவைப்பதற்காக முன்வைக்கப்படும் ‘பொருளாயத அறம்’. இதைப் புரிந்துகொள்ளும்போது நமக்கு ஒரு அறச்சீற்றம் ஏற்படுகிறது. அந்த அறச்சீற்றமானது ‘சரியான’ பகுத்தறிவினையும், பொருள்முதல்வாதப் பார்வையையும் ஊட்டுவதாக (உள்ளடக்கி) இருக்கிறது. அந்த வகையில் மார்க்சியத்தை பாமரருக்கும் புரியும் வண்ணம் கொண்டு சேர்க்கும் செயலை அது செவ்வனே செய்கிறது.
புரட்சியாளன் இறந்தாலும், வன்புணர்ச்சியாளன் இறந்தாலும் இரண்டும் ஒன்றுதான் என்று கூறும் மையவாதம்தான் அறவாதமே தவிர பின்னால் இருக்கும் நீதிக்கான காரணங்களை விளக்குவது அறக்காரணம்மல்ல. ஒரு மார்க்சியவாதிக்கு அறப்பார்வை கூடாது என்கிற மொண்ணையான விளக்கங்கள்தான் மார்க்சியத்தை வறட்டு வாதமாக மாற்றுகிறது.
இதனால்தான் மார்க்சியத்தில் அன்பு இல்லை, பண்பு இல்லை, என்று தூற்றுவதற்கு வாய்ப்பளிக்கிறது.
“இதுநாள் வரையில், மரியாதைக்கு உரியதாக இருந்த, பயபக்தியுடன் பார்க்கப்பட்டு வந்த, வாழ்க்கைத் தொழில் ஒவ்வொன்றையும் முதலாளித்துவ வர்க்கம் மகிமை இழக்கச் செய்துவிட்டது. அது, மருத்துவரையும் வழக்குரைஞரையும், மதகுருவையும் கவிஞரையும், விஞ்ஞானியையும் தன்னிடம் ஊதியம் பெறும் கூலி-உழைப்பாளர்களாக ஆக்கிவிட்டது. முதலாளித்துவ வர்க்கம், குடும்பத்திடமிருந்து அதன் உணர்ச்சிபூர்வ உறவுத்திரையைக் கிழித்தெறிந்துவிட்டது. குடும்ப உறவை வெறும் பண உறவாகக் குறுக்கிவிட்டது.” என்ற மார்க்சின் வார்த்தைகள் கூட குடும்ப வாதமாகவோ,அறவாதகமோ உணர்சிவயப்பட்டதாகவோதான் இது போன்ற விவரணையாளர்களுக்குப் படுமேயன்றி அவற்றிற்குப் பின்னால் இருக்கும் நோக்கங்கள் அல்ல. இவர்களைப் பொறுத்தமட்டில் வெறும் காசு பணம் சம்பந்தப்பட்ட பொருளாதாரந்தான் மார்க்சிய அரசியல் பொருளாதாரம்.
மேலும், அறமே இல்லாத பொருளாதாரம் தான் முதலாளித்துவ பொருளாதாரம். அனைவருக்கும் அனைத்தும் வேண்டும் என்ற (மார்க்சின்) வார்த்தைகளுக்குப் பின் பொருளாதாரம் மட்டுமல்ல அன்பும், நேசமும், அறமும் இருக்கத்தான் செய்கிறது. இதை ஒற்றை வார்த்தைகளில் அறவாதம் என்று சுருக்கும் போக்கானாது மார்க்சியத்தை வெறும் இயந்திரப் பொருள்முதல்வாதமாக முன்வைக்கும் ஒன்றாகும்.
இது ஒருபுறமிருக்க, விளக்க முறையில் ஒரு மாறுபட்ட வழிமுறையைக் கையாண்டாலும், மார்க்சிய அடிப்படையிலிருந்து விலகாமல் மார்க்சிய பொருளாதாரத்தைப் புரியவைக்கும் ரங்கநாயகம்மா நூலை இவ்வளவு நுனுக்கமாக பிரித்து மேய்ந்து ‘திறனாய்வு’ செய்கிறார்களே (மகிழ்ச்சி)! இதேபோன்று தமிழ்நாட்டு ‘மார்க்சியர்கள்’ எழுதி தமிழில் வந்துள்ள எத்தனை ‘மார்க்சிய’ நூல்களை இப்படி அக்கு வேறு, ஆணி வேராகப் பிரித்து மேய்ந்திருப்பார்கள். அந்நூல்களில் உள்ள மார்க்சிய திரிபுவாதங்களையும், திருத்தல்வாதங்களையும் கண்டித்து விமர்சனக் கூட்டம் நடத்தி இருப்பார்கள்?
கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்துகொண்டே ‘திரிபுவாதம்’, ‘திருத்தல்வாதம்’ செய்யும் ’எழுத்தாளர்கள்’, ‘அத்வைத, வைணவ, இத்தியாதி’ வகை ’மார்க்சியர்கள்’, அடையாள அரசியலை மார்க்சிய (கட்சி) அரசியலாக முன்வைக்கும் ‘பரந்த சிந்தனையாளர்கள்’, மார்க்சியத்தை வளர்த்தெடுக்கிறோம் என்று பல இசங்களை கூட்டுக் கதம்பம் செய்த ‘கலப்புவாதிகள்’, மண்ணுக்கேற்ற மார்க்சியம் ‘செய்கிறோம்’ எனும் ‘நவ உற்பத்தியாளர்கள்’ என்று இங்கு உள்ள ‘மார்க்சிய’ப் பட்டியல் ஏராளம். ஆனால், அதுபோன்ற நூல்கள் மற்றும் அச் ‘சிந்தனையாளர்களின்’ உள்நோக்கம், ஒவ்வாமை பற்றியெல்லாம் எத்தனை திறனாய்வு கட்டுரைகள் / நூல்கள் வெளிவந்திருக்கின்றன?
கிளிப்பேச்சு பேசுவதுதான் மார்க்ஸை/ மார்க்சியத்தை விளக்க ஒரே வழியென்பது அறிவு ஒவ்வாமை அன்றி வேறில்லை.
மார்க்சியத்தை பாமரர்களுக்கு, உழைக்கும் வர்க்கத்திற்கு கொண்டு சேர்ப்பதைவிட அதை ஒரு அறிவார்ந்த, எவரும் நெருங்க முடியாத ‘பூச்சாண்டி’ என்று முத்திரை குத்தி ‘அந்நியப்படுத்துவதுதான்’ இவர்களது பூரிப்பற்ற வகையிலான உள்நோக்கம் என்ற முடிவுக்கு வந்துவிடலாமா?
இவர்களைப் போன்றவர்கள், ஒட்டுமொத்தமாக மார்க்சியத்தை கொச்சைப் பொருள்முதல்வாதமாக மாற்ற முயல்கிறார்கள் என்பதைத் தவிர சொல்ல வேறொன்றுமில்லை. எளிமைப்படுத்துவதற்கும், கொச்சைப்படுத்துவதற்கும் பாரதூரமான வேறுபாடுகள் உள்ளன.

ஜீவாவின் விமர்சனத்திற்கான எதிர்வினை

சாதியப் பிரச்சினைக்கான தீர்வு... நூல் பற்றி தோழர் ஜீவானந்தம் எழுதிய திறனாய்வைப் படித்தேன். அவரே கூறியிருப்பதுபோல் கூட்டத்திற்காக தயார் செய்த கட்டுரை அது. அவர் கூட்டத்திற்கு வர முடியாமல் போனதற்கு என் கவனக்குறைவே காரணம். டிக்கெட் புக் செய்ய இன்னமும் காலம் உள்ளதே என்று நினைத்து நான் தாமதித்ததால், கடைசி நிமிடத்தில் டிக்கெட் கிடைக்காமல் போனது.
விமர்சனத்திற்கு வருவோம்: சாதியத் தாக்குதல்கள், 'மார்க்சிய தாக்குதல்களுக்கு' இடையில் வந்திருக்கும் நாகரீகமான விமர்சனம் என்பது ஆறுதல். அம்பேத்கரை நாம் எப்படியெல்லாம் புரிந்துகொள்ள முடியும் என்று 'பொறுப்போடு' பேசியுள்ள பிரியத்துக்குரிய தோழர் எங்களை நன்கறிந்திருந்தும் எங்கள் மீது தொடுக்கப்படும் 'சாதியத் தாக்குதல்' மற்றும் 'பின்னணி' குறித்த பேச்சுகளுக்கு ஒரு சிறு கண்டனங்களைக்கூட பதிவு செயாதது கண்டு கூடுதல் மகிழ்ச்சி!
தோழர் ஜீவானந்தத்துடன் மார்க்சியம் குறித்தும் - கோட்பாட்டு விளக்கம் குறித்தும் எங்களுக்குப் பல முரண்பாடுகளும், விமர்சனங்களும் உண்டு. அதை நாங்கள் உரையாடியும் வருகிறோம்.
தோழர் ஜீவா உட்பட சில தோழர்கள் பெரும்பாலும், எவருடைய மார்க்சிய நூல்களையும் - சிக்கலுடையது, திரிக்கிறது, பிரச்சினைக்குரியது என்று சொல்லியே நாங்கள் கேட்டிருக்கிறோம். மார்க்சியக் கோட்பாட்டு விளக்கம் மற்றும் நடைமுறைப்படுத்துதல் குறித்து மார்க்சியர்களிடையே முரண்பாடு இருப்பது உலகறிந்ததே. அந்த வகையில் தோழர். ஜீவானந்தத்தின் விமர்சனம் அவருடைய மார்க்சியப் புரிதலிலிருந்து வருகிறது. அதில் எப்படி மற்றவர்களுக்கு விமர்சனம் இருக்கிறதோ, அப்படி மற்றொரு கோட்பாட்டாளரிடம் ஜீவாவுக்கும் விமர்சனம் இருக்கலாம். நாகரீக உரையாடல் நிகழும்வரை, உரையாடலைத் தொடர முடியும். அவ்வளவே!
ரங்கநாயகம்மாவின் விளக்க முறையில் தோழர் ஜீவானந்தம் ஏற்கனவே முரண்பட்டு விமர்சனங்களை எழுதியுள்ளார். நானும் அவருடன் கடுமையாக முரண்பட்டு தர்க்கவாதம் புரிந்துள்ளேன். உதாரணமாக குழந்தைகளுக்கான பொருளாதாரம் நூலில் கச்சாப் பொருள் என்பது எது என்பதை விளக்குகையில், ரங்கநாயகம்மா - ஒரு பொருள் இயற்கையாக விளைந்திருக்குமெனில் அது இயற்கைப் பொருள் அதன் மீது உழைப்பு செலுத்தப்படும்போது அது கச்சாப் பொருளாகிறது (பயன் மதிப்பை்புடைய பொருள், பின்னர் அது சந்தைக்கு வரும்போது மதிப்பாக மாறுகிறது), அதாவது ஒரு கிழங்கு மண்ணுக்கடியில் இயற்கையாக இருக்கிறதென்றால் அது இயற்கைப் பொருள், அதை ஒருவர் பறித்து சமைப்பார் எனில் அப்போது அந்த கிழங்கு கச்சாப் பொருளாகிறது என்பார். சந்தைக்கு வரும்போது மட்டுமே அப்பொருள் சரக்காகிறது. இல்லையேல் தனிப்பட்ட தேவைக்காகப் பரித்து சமைத்தது என்றே பொருள்படும். பொருள், இயற்கைப் பொருள், இயற்கை வஸ்து, கச்சாப் பொருள், சரக்கு இவற்றையெல்லாம் ரங்கநாயகம்மா விளக்கும் முறையில் ஜீவா மாறுபடுவார்.
ஜீவாவைப் பொறுத்தவரை அது தவறு. //The natural things available in nature without the intervention of human labour sometimes act as raw-materials also// அவரது கட்டுரையைப் படித்தால் முழுமையான கருத்தை வாசகர்கள் அறிந்துகொள்ளலாம். ஆனால் இதில் எனக்குள்ள பிரச்சினை என்னவெனில் உழைப்பின் தலையீடின்றி இயற்கைப் பொருளானது கச்சாப் பொருளாகவும் இருக்கும் எனும்போது அது முதலாளித்துவ சிந்தனையாகிப் போகிறது. இயற்கையையே கச்சாப் பொருளாகப் பார்க்கும் பேராபத்து அதில் நிலவுகிறது.
ரங்கநாயகம்மா உழைப்புக்கு (உழைப்பு நடைமுறைக்கு) முக்கியத்துவம் கொடுத்து விளக்கும் முறை மற்றும் மேற்சொன்ன உதாரணத்தில் பொருள், கச்சாப்பொருள் பற்றியெல்லாம் மார்க்சின் மூலதனத்தை வைத்து அவர் விளக்கும் முறையில் எனக்கு எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை என்று நான் ஏற்கனவே அவரிடம் உரையாடி இருக்கிறேன். இப்படி எங்களுக்குள் நிறைய முரண்பாடு உண்டு. அது கோட்பாட்டு விளக்கம் சார்ந்தது. (அதுமட்டுமின்றி உழைப்புசார் உறவுகள் மற்றும் உற்பத்தி உறவுகள் இரண்டும் ஒன்றே என்ற விளக்கத்தையும் ரங்கநாயகம்மா அளித்து விட்டார், அதையும் நான் அவரிடம் பகிர்ந்திருக்கிறேன்.)
அடிப்படையில் மார்க்சியம் என்பது தனியுடைமையை எதிர்க்கிறது. அதன் அடிப்படையிலான உற்பத்தி முறையை, உழைப்புப் பிரிவினையை, உழைப்புச் சுரண்டலை (விளக்குகிறது) எதிர்க்கிறது. இந்த அடிப்படையிலிருந்தே ரங்கநாயகம்மா அம்பேத்கரை விமர்சிக்கிறார். ஏனென்றால் அம்பேத்கரது பொருளாதார சிந்தனை ஆளும் வர்க்கக் கருத்தியலின் அடிப்படையில் உள்ளது. அது முதலாளித்துவ பொருளாதாரத்திற்கே உதவக்கூடியது எனும் வகையில் தலித் மக்கள் விடுதலைக்கு அது போதாது. இதுதான் ரங்கநாயகம்மா முன் வைக்கும் சாரம். அதேபோல் சாதி ஒழிப்புக்கு அம்பேத்கர் முன் வைக்கும் தீர்வு பௌத்தம் (அஷ்டாங்க மார்க்கம், பஞ்சசீலம்). அதன் போதாமையை மார்க்சியக் கண்ணோட்டத்திலிருந்து அவர் விளக்குகிறார். இதையெல்லாம் இவர்கள் (ஜீவா, ஏறத்தாழ இதே கேள்விகளை தனது கட்டுரையில் முன் வைத்த அவரது நண்பர், மற்றும் சிலர்) ஏற்றுக்கொள்கிறார்களா இல்லையா என்பதை அவர்களது விமர்சனங்களின் வாயிலாகப் புரிந்துகொள்ள முடியவில்லை.
அம்பேத்கரை கராராக விமர்சிப்பதில் இவர்களுக்கு அச்ச உணர்வு இருப்பதாகவே கருத வேண்டியுள்ளது. அதற்கு பொருள்முதல் பார்வை என்று சப்பைக்கட்டு கட்டுகிறார்கள். காலவரிசிப்படி புரிந்துகொள்ள வேண்டும் , குறிப்பிட வேண்டும் என்பதெல்லாம் சரி, ஆனால், நாம் ஒருவருக்கு மட்டும் பொருள்முதல்வாதப் பார்வையை apply செய்து புரிந்துகொண்டு சார்புநிலை எடுக்க வேண்டுமெனில், இதே நிலைப்பாட்டை காந்தி தொடங்கி இந்துத்துவவாதிகள், மத நூல்கள் என அனைத்திற்கும் கொடுத்து, எல்லாவற்றிலுமிருந்து 100கிராம் வீதம் எடுத்து ஒரு கதம்ப மார்க்சியத்தை உருவாக்கலாம்.
உண்மையில் இவர்கள் அம்பேத்கரை பரிதாபத்திற்குரிய ஆளுமையாக மாற்றுகிறார்கள். ஆனால் ரங்கநாயகம்மா (நாங்களோ) அவரை அப்படிப் பார்க்கவில்லை. மாபெரும் அறிவுஜீவி, சாதி ஒழிப்பிற்காக பல ஆய்வுகளையும், பணிகளையும் மேற்கொண்ட ஆளுமை என்கிற வகையில், அறிவுதளத்தில் அம்பேத்கரின் சிந்தனைகள், திட்டங்கள் குறித்து திறனாய்வு செய்கிறார். ஒரு பொருளாதார அறிஞர் என்கிற வகையில், அவருடைய பொருளாதார திட்டங்களில் உள்ள சிக்கலை மார்க்சியக் கண்ணோட்டத்தில் விமர்சிக்கிறார். (இங்கு கூறுமுறை கொஞ்சம் கராராக, முகத்தில் அறைந்தார் போல் உள்ளது அவ்வளவே!)
அதேபோல் புத்தரை ஒட்டுண்ணி என்கிறார் என்றால், உழைக்காமல் மற்றவர் உழைப்பில் (உபரியைக் கைப்பற்றி வாழ்வதற்கு அது சமம்) வாழும் ஒருவரை அப்படி சொல்வதில் என்ன தவறு? மார்க்சியம் மதத்தை (தொழிலாக) போதிப்பதை ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் இவர்கள் ஏன் அதற்கு வக்காலத்து வாங்குகிறார்கள் என்று எனக்குப் புரியவுமில்லை. (இது என்ன மார்க்சியம்?) எல்லாரும் உழைத்து வாழ வேண்டும். எல்லாருமே இரண்டு வகையான உழைப்பிலும் ஈடுபட வேண்டும். இது மார்க்சிய அடிப்படை. இதை விளக்கினால் இதை அறவாதம் என்கிறார்கள். உழைப்புச் சுரண்டல் என்பது அறமற்ற செயல்தானே? பொருள்முதல்வாத பார்வையற்ற ஒருவர் எப்படி மார்க்சியத்தை அடிப்படையாக வைத்து பேசுவார்? உழைப்பாளர்களை பரிதாபத்துக்குறிய வகையிலா அவர் சித்தரிக்கிறார்? மார்க்ஸ் முன்வைத்த அடிக்கட்டுமான தகர்ப்பு, சோஷலிச சமூக உருவாக்கம், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம், புரட்சி என எல்லாவற்றையும் முன்வைத்துத்தானே பேசுகிறார். அதுமட்டுமின்றி அம்பேத்கரிடமிருந்து எதை எடுத்துக்கொள்ளலாம் அல்லது எது பயனளிப்பது என்பதையும் பட்டியலிட்டுள்ளார்.
அதேபோல் அம்பேத்கர் முன்வைத்த புத்தரைத்தான் அவர் நையாண்டி செய்கிறார். (புத்தர் துறவரம் மேற்கொண்டதற்கு அம்பேத்கர் சொல்லும் கதையைப் படித்தால்…..) புத்தரை எப்படி அணுகுவது என்பதையும் ரங்கநாயகம்மா தெளிவாகவே விளக்குகிறார். சமூகத்தை எப்படி ஆய்வு செய்வது, நிலவும் ஏற்றத்தாழ்வுக்கான அடிப்படைக் காரணத்தை எப்படி புரிந்துகொள்வது என்று விளக்கும் தத்துவம் மார்க்சியம்; அதனால் மார்க்சியம் தேவை என்கிறார். மார்க்சியத்தின் அடிப்படைகளை, அதாவது ஏற்றத்தாழ்வைக் களைந்திட மார்க்சியம் எப்படி உதவும் என்று போதுமான அளவுக்கு விளக்கியுள்ளார்.
போதா குறைக்கு வலிந்து மார்க்ஸ் கூட உழைக்கவில்லை, கட்சித் தோழர்கள் உழைப்பதில்லை என்று இவர்களாகவே எடுத்துக்கொடுத்து வியாக்கியானம் செய்கிறார்கள். (உச்சபட்சமாக, தீவிரவாத குழுக்களுக்கு லைசன்ஸ் வழங்குகிறார் என்று ஏதோ பதிவு செய்திருக்கிறார். இது ஏதோ அமைப்பு சார்ந்த பிரச்சினையாக இருக்கும்போலிருக்கிறது. உண்மையில், இவர்கள் யாருக்கு pointகளை எடுத்துக் கொடுக்கிறார்கள்?).
கார்ல் மார்க்ஸோ, கட்சித் தோழர்களோ உபரியைப் பெற்று, உழைப்புச் சுரண்டலில் ஈடுபட்டு வாழ்க்கையை நடத்தவில்லை, நடத்துவதுமில்லை. மத போதனைகளில் ஈடுபடவில்லை. அரசுக்கு ஆதரவாக சமரசம் செய்துகொள்வதில்லை. பாட்டாளி வர்க்கப் புரட்சிக்குத் தேவைப்படும் அணிதிரட்டலுக்குத் தேவையான உழைப்பில் ஈடுபடுகின்றனர். (அதில் கட்சி, இயக்கம் சார்ந்து பலவீனங்கள், குறைபாடுகள் இருக்கலாம்). முன்னவர் சமூக மாற்றத்திற்காக மூளை உழைப்பில் ஈடுபட்டவர். கட்சித் தோழர்கள் (பெரும்பாலும்) உடல் உழைப்பில் ஈடுபடுபவர்கள். நேரடியாக இது உற்பத்திக்கு பங்களிக்காவிட்டாலும் சுரண்டல் நிறைந்த உற்பத்தி முறையை தகர்த்தெரிவதற்கான சமூக மாற்றத்திற்காக உழைக்கிறார்கள். இந்த அமைப்புகளை அரசு நிதி கொடுத்து வளர்ப்பதில்லை. அதேபோல், அந்த அமைப்புகளும் - கடன் பெற்றவர், இராணுவ வீரர்களை (ஒருகட்டம் வரை பெண்கள்) அமைப்பில் சேர்த்துக்கொள்ள மாட்டோம் என்று அரசை திருப்திபடுத்தும் ‘கொள்கைகளை’ வைத்திருப்பதில்லை என்பது யதார்த்தம்.
ஆனால், புத்தரின் ‘மூளை உழைப்பு’, ‘செயல்பாடு’ அத்தகையதா? புத்தரோ, பௌத்த மடாலயங்களோ, மத நிறுவனங்களோ அப்படி இல்லை. அதுமட்டுமின்றி மத நிறுவனமாக பௌத்தம் எப்படி அரசுக்கு சாதகமான கருவியாக பின்னாளில் மாறியது என்றெல்லாம் மார்க்சிய ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர். அதே நிலைப்பாட்டைத்தான் ரங்கநாயகம்மாவும் கொண்டுள்ளார். ஆனால் இவர்களின் நிலைப்பாடு என்னவென்பதுதான் எனக்கு விளங்கவில்லை.
பாட்டாளி வர்க்க விடுதலைக்கான மக்கள் இயக்கம் என்பது சுரண்டல்வாத சமூகத்தில் அவசியம் என்பதையும் இதுபோன்ற அமைப்பு முறை கொண்ட அரசியல் இயக்கத்தின் தேவையைக் கூட நிராகரிக்கும் அளவிற்கோ அல்லது அவர்களை ஒட்டுண்ணி என்று சொல்லும் அளவுக்கோ ஒருவர் முட்டாளாக இருக்க முடியாது. ஆனால், தம்மை இந்த இணைய வெளியிலும், ‘விமர்சகர் வட்டத்தி்லும்’ நிரூபித்துக்கொள்ளும் பதட்டத்தில், எப்படிப்பட்ட ‘குதர்க்கமான’ கேள்விகளை பூரிப்பின்றி முன்வைக்கும் நிலைக்கு இவர்கள் ஆளாகிறார்கள் என்பது சற்று வியப்பாகவே உள்ளது.
உழைக்கும் வர்க்கத்திற்கு உழைப்புச் சுரண்டலைப் பற்றியும், தாம் உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாவதையும் எளிமையாகப் புரியும் வண்ணம் ரங்கநாயகம்மா விளக்குகிறார் என்பதே என்வரையிலான கருத்து. மார்க்சியத்தைப் புரிந்துகொள்வதில் எனக்கு அவருடைய எழுத்துகள் பேருதவியாக இருந்திருக்கின்றன. இனி வாசகர்கள் அவருடைய நூலையும், மார்க்சிய மூல நூல்களையும் தாமே நேரடியாகப் படித்து சீர் தூக்கிப் பார்த்து தெளிவு பெறலாம்.