#BeepSongகிற்கு எனது எதிர்வினையை படித்து பல எதிர்வினைகளும்,
ஆதரவுக் குரல்களும் தெரிவிக்கப்படுகின்றன. (அவ்வெதிர்வினைகளில் தனிப்பட்ட வஞ்சம் தீர்த்துக்கொள்ளும்
பதிவுகளும் அடக்கம்)
எல்லாவற்றிற்கும் பதில் சொல்வது இயலாத காரியம். எனினும்
அவரவர் நேரத்தை நான் மதிக்கிறேன். வாசித்து கருத்து சொல்பவர்களுக்கு எனது நன்றி. பெண்
என்பதாலேயே இதைப் பெண்ணியப் பதிவு என சுருக்குவதை நான் ஏற்றுக்கொள்ள முடியாது. பாலினவாதத்திற்கு
எதிரான பதிவிது, இதில் மொழி அரசியல் பிரதானமானது, அத்தோடு வர்க்க அரசியலும். அனைத்திற்கும்
ஒரு வரலாறு உண்டு. அளவு மாறுபடும்போது பண்பு மாறுபடும். எனது அணுகுமுறையும் அவ்வாறானதே.
எனக்கிருக்கும் ஒரே வருத்தம் என்னவென்றால் அத்தகையோர்
ஏன் எனது பெயரை நேரடியாகக் குறிப்பிட்டு எழுதத் தயங்குகிறார்கள் என்பதே. பெண்ணியவாதி
என்று குறிப்பிடுவதை நான் விரும்புவதில்லை. இதை நான் ஏற்கணவே தெளிவுபடுத்தியுள்ளேன்.
காரணம், பெரும்பாலும் இங்கு பெண்ணியம் என்பது பெண் சார்பு எடுப்பது என்பதாக கையாளப்படுகிறது.
நான் வர்க்க அரசியலை உள்ளடக்கி பாலினவாதத்தை எதிர்ப்பவள், அதேபோல் சில நோய்களுக்கு
முரட்டு வைத்தியம்தான் கொடுக்க முடியும் என்று நம்புபவள். அதேபோல் எல்லாவற்றுக்கும்
இடம், பொருள், ஏவல் என்பது எப்படி பொருந்துமோ அதேபோல் ஒரு சொல்லின் பயன்பாட்டுக்கும்
காரண காரியங்கள், தேவைகள் உள்ளன. எல்லாவற்றையும் ஒரே தராசில் (பெண்ணிய தராசில்) வைத்துப்
பார்ப்பது பொருந்தாது என்பதை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்.
அதேபோல் எல்லோரும் ஒரே கோணத்தில்
சிந்திக்கவும் முடியாது, அது தேவையுமில்லை என்பதையும் அறிந்தவர்கள்தானே நாம். ஆகவே,
எனக்கெதிரான எதிர்வினைகளை நான் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.
குறைந்தபட்சம் பகுத்தாய்கிறோம் என்பதை அது வெளிப்படுத்துகிறது. பொதுவாக நட்பு, வட்டம்,
அமைப்பு சாதி என்று பார்த்து மௌனம் காப்பவர்கள்கூட எனது கடிதத்திற்கு ’பெண்ணிய’ அறச்சீற்றத்துடன்
கருத்து தெரிவித்திருப்பது மேலும் மகிழ்ச்சியளிக்கிறது.
ஒவ்வொரு வினைக்கும் சமமானதும், எதிரானதுமான எதிர்வினை உண்டு. இரண்டையும்
ஏற்றுக்கொள்வதே யதார்த்தம் என்பதை எனக்கு நானே சொல்லிக்கொண்டு, உங்களது அனைத்து கருத்துகளுக்கும்
எனது புன்னகையை பதிலாகப் பதிவு செய்கிறேன்.
நன்றி