Mar 13, 2014

மதயானைக் கூட்டம் : ஓர் பெண்ணியப் பார்வை



சாதியப் பெருமையில் ஊறிப் போய் மதம் கொண்டேறி அலையும் மனிதர்களின் வாழ்வியலைப் பேசும் ஒரு படமாக இது அமைந்திருக்கிறது. இந்தப் படம் சாதியை எதிர்க்கவுமில்லை (நேரடியாக) சாதியை ஆதரிக்கவுமில்லை. மதயானைக்கூட்டம் சாதியைப் பேசுகிறது, ஆனால் இதில் உள்ள சிறப்பம்சம் என்னவெனில், தன் சாதிப் பெருமை பேச இது மற்ற சாதிகளை இழிவுபடுத்தவோ அல்லது எதிர்நிலையில் வேறொரு சாதியையோ எடுத்துப் பேசவில்லை என்பதே. தேவர் சாதியில் பிறந்த மனிதர்களின் மனநிலையை அந்த சாதியச் சூழல் எப்படி கட்டமைத்திருக்கிறது, அதன் விளைவுகள் ஆகியவற்றை ஒரு ஆவணப்படம் போல் படம்பிடித்திருக்கிறார் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் என்று சொன்னால் அது மிகையில்லை. 

மரணத்தில் சாதிப் பெருமை பேசத் தொடங்கி இறுதியில் ஒரு மரணத்தின் வாயிலாகவே அதன் கோரத்தை தோலுறித்துக் காட்டுகிறது இக்கதை. உண்மையில் பழங்குடிகளின் எச்சமாக, தாய்வழிச் சமூகத்தின் எச்சமாக இருந்துவரும் தென்குடிச் சமூகங்களின் பல நம்பிக்கைகள் என்னை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்த வகையில் அவர்கள் இயற்கை மரணத்தைக் கொண்டாடும் ஒரு பண்பாடு என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. அந்த வகையில் இந்தப் படம் ஒரு இழவு கூத்துப் பாட்டுடன் தொடங்குகிறது. அந்தப் பாடலின் வாயிலாக ஒரு குடும்பம் பற்றிய அறிமுகம் கதாப்பாத்திரங்களின் அறிமுகம் நிகழ்கிறது. பாடலும் இசையும் மண்வாசனையோடு இருந்தது.

இப்படத்தின் கதை இணையத்தில் காணக் கிடைக்கும் ஆகவே அதனை மீண்டும் பதிவு செய்யவில்லை.

வீரம் எனும் கருத்தியலை தங்கள் மூச்சாக சுவாசித்து தம்மைத் தாமே அழித்துக்கொள்ளும் ஒரு சமூகத்தின் அவலங்களை மிகவும் கூறணர்வோடு பதிவு செய்திருக்கிறார் இயக்குனர். உண்மையில் இக்கதை ஆண்மையை ஏளணம் செய்கிறது, அதை வஞ்சப் புகழ்ச்சியோடு செய்கிறது. சதா சர்வ காலமும் தம் உடம்பில் ஓடும் ரத்தைப் பற்றியே பேசி வீணே மாண்டு போகும் அல்லது பழிவாங்கக் கிளம்பும் சமூகமாக அல்லது மனிதர்களாக இவர்கள் வாழ்வின் துன்பியலுக்கு அடித்தளமிட்டது சாதி. தாழ்த்தப்பட்டோர் துன்பியலுக்கு அடித்தளமிட்ட அதே சாதியும் சாதிய அரசியலும் சாதிய அரசியலைக் கையிலெடுத்த அரசியல் தலைவர்களுமே இவர்களின் இந்நிலைக்கும் காரணம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. 

தன் தங்கையின் கணவன் இரண்டாம் திருமணம் செய்துகொண்டதால் அண்ணன் பாசத்தில் வீரத்தேவருக்கு ஏற்படுவது வன்மமாக இருக்க தான் இரண்டாம் திருமணம் செய்துகொண்டது மட்டும் ஆண்மைத்தனமானதாக, காதலாகத் தெரிகிறது. பூலோகராசாவின் கேள்விக்குப் பதிலாக இதற்குறிய நியாயப்படுத்துதலை அவரது இரண்டாம் மனையின் வாயிலாகப் பதிவு செய்தது  இயக்குனரின் புத்திசாலித்தனம். 

எள்ளலாகப் பேசப்படும் பாலியல் பேச்சுக்கள், அதேப் பேச்சுக்கள் பகை அல்லது கோபம் நிறைந்த சூழலில் எப்படி விபரீதமான பேச்சுக்களாக மாறுகிறது என்பதற்கு உதாரணம் பூலோகராசாவின் “தாய் மாமன் ஒருத்தன் சீர்” எனும் பாடல் அதையொட்டி நிகழும் கைகலப்பு, தன் அண்ணனைக் காக்க கதாநாயகனின் எதிர்ச்சண்டை; மீண்டும் ஒரு மரணம். கறிக் கஞ்சி ஊற்றுவது செய்முறை செய்வது தாய்மாமன் உறவு என்று இச்சமூகத்தில் ஆழ்ந்து வேறூன்றி இருக்கும் சடங்குகள், நம்பிக்கைகள் ஏற்படுத்தும் விளைவுகள், விபரீதங்கள் ஆகியவை வெகு நேர்த்தியாக எந்தப் புனைவும் இன்றி யதார்த்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  

வரலாற்றை நிகழ்த்துதல் பற்றி நாம் பேசி வருகிறோம் ஆனால் ஆணாதிக்க வரலாறும், சாதிய வரலாறும் இப்படிப்பட்ட சாதிகளுக்குள் நிகழ்த்தியிருப்பது என்ன என்பதை ஒரு குடும்பக் கதையின் மூலம் சிறப்பாக ஆவணப்படுத்தியிருக்கிறார் இயக்குனர். ஓரு நபரின் வரலாற்றை பாடுவதாக அமைந்திருந்தாலும் ஒட்டுமொத்த சமூகத்தையும் புரிந்து கொள்ள அது போதுமானதாகவே இருக்கிறது. ஆணாதிக்க கருத்தியலான வீரம் எனும் அந்தக் கருத்தியல் இவர்களை எந்த எல்லைக்கு நகர்த்துகிறது என்பதை இரத்தச் சாட்சியாகப் பதிவு செய்திருக்கிறார். அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து இதுவரை வந்தப் படங்களில் இது மிகவும் மாறுபட்டதாக இருக்கிறது. 

ஆயிரம் கோபங்கள் இருந்தாலும் மூன்றாம் நபர்களிடம் தம் சொந்தத்தை விட்டுக்கொடுக்காது, அவமானப்பட்டு நிற்கக்கூடாது என்பதற்காகவும் தன் தங்கையின் மனம் வருந்திவிடக்கூடாது என்பதற்காகவும் வீரத்தேவர் ஜெயக்கொடி தேவருக்காக விட்டுக்கொடுக்கும் சம்பவங்கள் நேர்த்தியாக வரையப்பட்டவை. ஆனால் அதேசமயம் தனக்கு ஒரு பாதிப்பு என்ற வந்தபின், தன் மகன் தன் மச்சினன் மகனால் (குறிப்பாக வைப்பாட்டி மகன்) கொல்லப்பட்டான் என்றவுடன் எப்படி அந்தத் தங்கைப் பாசம் தடம் மாறி ‘வீரத்திற்கான’ அறமும் தடம் மாறி விடுகிறது என்பது ஓர் துயர் மிகுந்த சம்பவத்தின் மூலம் உரைக்கப்படுகிறது. 

தொடக்கத்திலிருந்து அண்ணன் தங்கை பாசத்தை முன் வைத்து கதை நகர்கிறது, கதாநாயகன் பார்த்தியை மூத்த மனைவியே காக்கும் நிலை வருகிறது, அவன் தாய்க்கும் பாதுகாப்பளிக்கிறாள் என்று கதை நகரும்போது இறுதியில் செவனம்மா இரண்டாம் மனைவியின் மகனைக் காப்பதற்காக தன் சொந்த அண்ணனையேக் கொல்லப் போகிறாள் என்பதாகக் கதையை முடிப்பார்களோ எனும் எண்ணம் தோன்றியது, ஆனால் இயக்குனர் கொன்றது பாசத்தை அல்ல கதாநாயகத்தன்மையை, வன்மத்தை விதைத்து உயிர் குடிக்கும் அந்த ஆண்மைக் கருத்தியலை என்பதாகவே எனக்கு இந்தக் கதை விளங்குகிறது. 

பார்த்தி தலைமறைவாகி கேரளாவில் இருக்கும்போது பொன்ராம் அடைக்கலம் தருவதாக அழைப்பு விடுத்து நீ உன் மாமனைப் போட்டுடு இல்லன்னா அவனுக உன்னை வாழவிடமாட்டாங்க என்று சொல்லும்போது பார்த்தி சொல்லும் பதில் “பொன்ராம்னு பேர் வச்சிக்கிட்டு பொண்டுகத்தனம்* செய்யாத” என்பது.  (பெண்களை பொண்டுகச்சி என்றுசொல்வதாக அறிகிறேன்). அதாவது வீரம் என்பது நேருக்கு நேர் நின்று மோதுவதே ஒழிய முதுகில் குத்துவதல்ல என்பதான கதாநாயகனின் நிலைப்பாடு. தன் தாய் கொல்லப்பட்டு வீரத்தேவனை நேருக்கு நேர் சந்திக்கும்போதும் பார்த்தி இதையே உரைக்கிறான். அதுபோக தனது குற்ற உணர்வையும் பதிவு செய்கிறான். வீரம் பேசி தோள்களைத் விரிக்கும் இந்த மனிதர்கள் தங்கள் காதுகளையும் மனசாட்சியையும் அடைத்து விடுகிறார்கள் என்பதற்கு அந்த இறுதிக் காட்சியேச் சான்று.




இறுதிக் காட்சியில் டாப் ஆங்கிளில் விஜி ரத்தத்தை துடைக்கும் காட்சியில் இறுதியில் ரத்தம், வீரம், பிறப்பு என்று ஆண்களின் பெருமை பேச்சுகளுக்கு சற்றும் குறைவில்லாமல், சொல்லப்போனால் இன்னும் கூடுதலாக பெருமை பேசும் இப்பெண்களுக்கு மிஞ்சியது இதுதான் – அதாவது ரத்தத்தை – பாவத்தை கழுவும் துன்பம் மட்டுமே என்றுரைக்கிறது இப்படம்.

பார்த்தி ஒற்றை மனிதனாக துனிவோடு மோதத் தயாராக அங்கு அவனிடம் மோதுவது நான்கைந்து பேர். இது எப்படி நியாயமும் வீரமும் ஆகும் என்பதே அக்காட்சியின் மூலம் இயக்குனர் வைக்கும் கேள்வி. அங்கு பார்த்தியின் தங்கை “அங்கையும் கள்ளப்பய ரத்தம் தானே ஓடுது” என்று பதிவு செய்கிறாள். தாய் வேறு சாதியானாலும் தந்தையின் ரத்தமே பிள்ளைகளின் அடையாளமாக இருக்கிறது எனும் தந்தை ஆதிக்க சமூகத்தின்  கருத்தியில் இந்த வசனத்தில் ஆழமாகப் பிரதிபலிக்கிறது. இப்படித்தான் எல்லா சமூகமும் சிந்திக்கிறது. ஒரே சாதியானாலும் வன்மம் என்று வரும்போது அங்கு எந்த இரக்கமும் காட்டப்படவில்லை எனும்போது இந்த சாதிப்பெருமை பேசி நீங்கள் கண்டதென்ன என்பதே அங்கு தொக்கி நிற்கும் கேள்வியாகத் தோன்றுகிறது. வீரம், பகை, வன்மம் ஆகியவற்றை பற்றிக்கொள்வதன் மூலம்  மூன்றாம் நபரே ஆதாயமடைகிறார் என்பதையும் பொன்ராமின் கதாப்பாத்திரம் வழியாக உணர்த்தப்படுகிறது.

சீர் செய்வதில் குறை வைத்த வீரத்தேவரை மரும்கன் பூலோகராசா (செவணம்மா மகன்) எள்ளல் செய்கிறான் சண்டை போடுகிறான் அப்போது செவணம்மா சொல்வது “நீயெல்லாம் ஒரு ஆளுண்டு என் அண்ணன் உன்கிட்ட பேசணுமா. என் அண்ணன் என்னைக்கும் சிங்கம்” என்பதாக, ஆனால் அந்த ’ஆண் சிங்கம்’ இறுதியில் செய்ததென்ன – மறைந்திருந்து தாக்கி நியாயமற்ற முறையில் அறமற்ற முறையில் ஓர் உயிரைக் கொன்றது என்பதே இப்படம் குறியீடாக வைக்கும் அறிவிப்பு.

ஒற்றை ஆளாக பார்த்தி அத்தனை பேரையும் வீழ்த்த ஒருவன் தப்பித்து ஓடி அப்பா அவன் எங்களைக் கொன்றுவான் போல இருக்கு காப்பாத்துப்பா என்று வீரத்தேவரிடம் கெஞ்ச வீரத்தேவர் ஏணிப்படிகள் ஏறி மறைந்திருந்து கத்தியை பார்த்தி கழுத்துக்கு வீசுகிறார். பார்த்தி மடிகிறான். அந்த நபர் தப்பி ஓடி வந்து அவ்வசனத்தை பேசாமலேயேகூட இயக்குனர் அந்த முடிவை வைத்திருக்க முடியும் ஆனால் அவர் கேட்க நினைப்பதாக எனக்குப் புரிவது என்னவென்றால் – இதையா நீங்கள் வீரம் என்று பெருமை பேசி வந்தீர்கள் என்பதாக இருக்கிறது.

கணிதவியலாக அமைந்திருக்கிறது திரைக்கதை ஒரு முழு வட்டமாக கணக்குத் தீர்க்கப்படுகிறது. ஒரு கதாப்பாத்திரம் மற்றொரு கதாப்பாத்திரத்திற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒரு தீங்கிழைத்து விடுகிறது. சம்பந்தப்பட்ட அந்தக் கதாப்பாத்திரங்களுக்கு தண்டனைகள் வழங்கப்பட்டு வட்டம் முற்றுபெறுகிறது. 

அற்புதமான திரைக்கதைப் பாணி, டிஜிட்டல் (அல்லது ஆப்டிகல்) ஒப்பனைகள் ஏதுமற்ற யதார்த்த ஒளிப்பதிவு, மிகைப்புனைவு ஏதுமற்ற யதார்த்தமான கதாப்பாத்திர வடிவமைப்பு, கூறுணர்வு மிக்க வசனங்கள்,  மண்வாசம் மிக்கப் பாடல்கள், அதற்கு எந்த வகையிலும் குறைவில்லாத இசை, தேர்ச்சி மிக்க நடிப்பு (நடிகர்கள்) என்று எல்லா வகையிலும் மதயானைக்கூட்டம் ஓர் சிறப்பானத் திரைப்படமாக அமைந்திருக்கிறது.  சாதியைப் பேசிய இந்தப் படத்தையும் சாதியப் பெருமை பேசிய மற்றப் படங்களையும் ஓர் ஒப்பாய்வு செய்து நூல்களைக் கொண்டுவரலாம். 

விஜி, வேலராமமூர்த்தி, கதிர் உட்பட அனைத்து நடிகர்களும் சிறந்த நடிப்பிற்கான விருதுகள் பெற தகுதியானவர்களே. பூலோகராசாவாக வந்தவரின் (கலையரசன் என்று நினைக்கிறேன்) நடிப்பு கூடுதல் பாராட்டிற்குரியது. 

ஏகாதசியின் பாடல் எழுதும் திறனுக்கு ஆடுகளம் ஓர் மாதிரி என்றால் மதயானைக் கூட்டம் ஆவனம் என்று சொன்னால் அது மிகையாகிவிடாது. சினிமாப்பாடல் எனும் பாணியைக் கடந்து மண்ணைப் பேசும் வரிகள் உண்மையில் மெய்சிலிர்க்க வைப்பதாக இருக்கிறது. அவரின் பாடல் வரிகளுக்கு ஏற்ற இணையாக என்.ஆர் ரகுநந்தன் அமைந்திருக்கிறார். இருவரையும் தேர்ந்தெடுத்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரின் தேர்வு பாராட்டுக்குறியது. 

மதயானைக்கூடம் – கதாநாயகத்தன்மைக்கு அடித்திருக்கும் சாவுமணி. 

சிறுகுறிப்பு:
1.    கதை தொடங்கும் கூத்துப்பாடலில் முத்துராமலிங்கத் தேவர் பற்றிய வரிகளில் அவர் சாதி வேறுபாடு பார்க்காதவர் என்று வரும் வரிகள் அம்மக்களின் மத்தியில் நிலவும் இன்றைய நம்பிக்கையையையும் அவர்கள் இன்றளவும் அதை அப்படியே பேசிவருவதையும் பிரதிபலிக்கும் விதமாகவே அமைந்திருக்கிறது என்பதாகவே நான் கருதுகிறேன். ஆனால் யதார்தத்தில் இன்றளவும் அந்நம்பிக்கையின் விளைவாக நேர்பவையும், அத்தலைவரது வழிகாட்டுதலின் விளைவும் நிச்சயம் விமர்சனத்துக்குறியவை என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால் தேவர் சாதியினரின் வாழ்க்கையை அவர்களது பண்பாட்டை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் என்பதால் அவர்கள் மத்தியில் நிலவும் பல்வேறு நம்பிக்கைகளில் ஒரு நம்பிக்கையாக இது இருக்கிறது என்பதை பதிவு செய்கிறது என்கிற அளவில் இதைக் கடந்து செல்வதில் தவறில்லை என்றே நினைக்கிறேன். ஒருவேளை இது இருவேறு சாதிகளை மையமாகக் கொண்டு ஒரு சாதியப் பிரச்சாரமாக கருத்துக்கள் வைக்கப்பட்டிருப்பின் நிச்சயம் நாம் அதைக் கண்டித்திருப்போம். 

1.    கதாநாயகியின் அறிமுகக் காட்சியில் கதாநாயகனும் நண்பர்களும் பெண்களுக்காக காத்திருப்பது ஏளனம் செய்வது போன்ற காட்சி அமைப்பைத் தவிர்த்திருக்கலாம். ஆண்களின் ‘கலாச்சாரம்’ இப்படித்தான் இருக்கிறது என்றாலும் வேறு வகையான ஒரு உரையாடலை வடிவமைத்திருக்கலாம்.  அவர்களுடைய வாழ்வுமுறை சார்ந்து பேசவே எவ்வளவோ இருக்கையில் மீண்டும் மீண்டும் ஆண்கள் பெண்களின் பார்வை விழுமா… என்று அலைபவர்களாக இன்னும் எத்தனை சினிமாக்களைப் பார்ப்பது…

எதுவாக இருப்பினும் மதயானைக் கூட்டம் ஓர் முக்கியமானப் படம், ஓர் வித்தியாசமான முயற்சி. பாராட்டுக்கள்.


நன்றி: http://www.penniyam.com/2014/03/blog-post_2509.html