Dec 29, 2011

எம் தாயைப் புணர்ந்துக் கொண்டிருப்பவன்



அவனை நான் நன்கு அறிவேன்
அவன்
ன்
வெகு காலமாய் எம் தாயைப் புணர்ந்துக் கொண்டிருப்பவன்
தோட்டத்தில் அவள் ஈரத்துடன் நட்ட விதைகளைப்
பிடுங்கியவன்
சூரியக் கதிர்களை லிங்கமென சித்திரம்
தீட்டியவன்
அவளது
கருப்பையை முதலீடாக்கியவன்
ஸ்கலித எச்சிலை குறியீடுகளென
கோட்டைகளில் கொடியேற்றியவன்
உடல்களைச் செங்கலாக்கி கட்டிய
மாளிகைக்குள்
தன் நாற்காலியை மரத்த விரல்களால் இறுகப்பற்றிக் கொண்டு
அவளது யோனியை மேய்ச்சல் நிலமென்றாக்கியவன்

அவன்

நெற்கதிர்களுக்கு செந்நீராய் தெளிக்கப்பட்ட
தூமையை
கழிவென்றவன்

பால் வார்த்த முலைகளுக்கு
வரிகளை சுமத்தியவன்
காக்கும் எம் அம்மையை
வைசூரி
நீலி
என்று பயம் காட்டியவன்

தர்ம சூத்திரம் எழுதி
பெண் உடலுக்கு தீட்டறிவித்தவன்
இயலாத
தந்தைக்கு
தூமையை குடிக்கும் விதி விதித்தவன்

அவனே
ஆம்
அவன்
அவனேதான்

தற்போது
எம் தாய்களை
பெண்களை
சகோதரிகளை
குழந்தைகளை
மற்றும் அவர்களை
வரலாறெங்கும் புணர்ந்து கொண்டிருப்பவன்

Dec 21, 2011

உயிர் எழுத்து - பத்து நூல்கள் வெளியீட்டு விழா




உயிர் எழுத்து
பத்து நூல்கள் வெளியீட்டு விழா

நாள்: 31.12.2011
சனிக்கிழமை மாலை 6.00 மணி
இடம்: தேவநேயர் பாவாணர் அரங்கு
அண்ணா சாலை, சென்னை.

வரவேற்புரை: சுதீர் செந்தில்

தலைமை: பிரபஞ்சன்

ஆசிரியர்                                    நூல்                                       மதிப்புரை
           
லக்‌ஷ்மி சரவணக்குமார்              உப்பு நாய்கள் (நாவல்)                                    வெய்யில்
லக்‌ஷ்மி சரவணக்குமார்              வசுந்தரா எனும்
                                                நீலவர்ணப்பறவை (சிறுகதைகள்)             தமிழச்சி தங்கபாண்டியன்
அ. ரோஸ்லின்                           அழுகிய முதல் துளி (கவிதைகள்)                          மீனா
குமார் அம்பாயிரம்                      ஈட்டி (சிறுகதைகள்)                                            கடற்கரய்
கணேசகுமாரன்                          புகைப்படங்கள் நிரம்பிய அறை
                                                (கவிதைகள்)                                                 அய்யப்பமாதவன்
ச. விசயலட்சுமி                          ஒவ்வொரு மாலையிலும் எரியும்
                                                ஒரு குடிசை (கவிதைகள்)                                  கரிகாலன்
ஸ்ரீஷங்கர்                                 சொற்பறவை (கவிதைகள்)                           வா. மணிகண்டன்
வசுமித்ர                                    ....எர்னஸ்த்தோ செ’கெபாராவை
                                                கொலை செய்தல் (கவிதைகள்)                        அ. மார்க்ஸ்
ஆத்மார்த்தி                               தனிமையின் நீட்சியில் ஒரு நகரம்
                                                (கவிதைகள்)                                              மனுஷ்யபுத்திரன்
சுதீர் செந்தில்                             உயிர் எழுத்து கவிதைகள்
                                                (தொகைநூல்)                                            ந. முருகேசபாண்டியன்

நிகழ்ச்சித் தொகுப்பு: கவிதா முரளிதரன்                                                        
நன்றியுரை:  அரங்க மல்லிகா                                          


Dec 12, 2011

முல்லைப் பெரியார் அணைப் பிரச்சனையும், வெகுஜன தமிழ் ஊடகங்களின் சேவையும், ’தமிழர்களும்’:



கேரள அரசு தனது அரசியல் ஆதாயத்திற்காக பொய் பிரச்சாரங்களை கட்டவிழ்த்துவிட்டு அம்மாநில மக்கள் மனதில் பீதியை விதைத்து வெகு சாமர்த்தியமாக அவர்களை தமிழ் மக்களுக்கெதிராக முடக்கிவிட்டிருக்கிறது. இங்கிருக்கும் ‘சில’ தமிழ் உணர்வு இயக்கங்களும் ‘தமிழன்னா’ சும்மாவா என்று உணர்ச்சி அரசியலை முன்னெடுக்கிறது. வன்முறைகளை தவிர்க்கச்சொல்லி எழுதும் நபர்களை ‘அறிவுஜீவிகளே’ இன்னும் எத்தனை நாள் எங்களை மௌனம் காக்க சொல்வீர்கள் என்று சில ’இணைய’ போராளிகள் கொந்தளிக்கின்றனர்.  இச்சூழலில் எனக்கு சில கேள்விகள் எழுகின்றன:

1.  கடந்த ஒரு வாரமாக முல்லைப் பெரியார் அணைப் பிரச்சனை தீவிரமடைந்திருக்கிறது. அதே வேளை ஊடகங்களில் ‘திரைப் பிரபலங்களை’ வைத்து நடத்திய நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பு அதை விட தீவிரமடைந்திருக்கிறது.  சென்ற வாரம் ஏதோ ‘லண்டன்’ நிகழ்ச்சி காட்டப்படுவதாக விளம்பரம் பார்த்தேன். இந்த வாரம் ‘ஃபிலிம்பேர்.  அது தவிர வழக்கம் போல இசை சேனல்களில் ஆண், பெண்களின் கொஞ்சல் பேச்சுக்கள், சினுங்கல் பாடல்கள் எதற்கும் குறைவில்லை.  நிச்சயமாக வானொலிகளும் இப்பிரச்சனையை ஒரு பேச்சுப் பொருளாக பேசிக்கொண்டிருந்திருப்பார்கள் அதுவும் படுக்கழைக்கும் குரலில் தான்.  இவர்களில் எவரும் ‘தமிழர்கள்’ இல்லையா. தமிழ்நாட்டுக்கு கிடைக்கவேண்டிய தண்ணீரால் இவர்கள் எவருக்கும் ஆதாயம் கிடையாதா.

2.  விஜய் தொலைக்காட்சியில் நேற்று திவ்ய தர்ஷினியை ‘தலைவாஆஆஆஆஆஆஆஆஆ’ என்று கூவ விட்டு ரஜினி காந்தின் பிறந்த நாளை வியாபாரப் பொருளாக்கி ஒரு நிகழ்ச்சி நடத்திக்கொண்டிருந்தனர். அங்கும் சில ‘தமிழர்கள்’ தான் வாயப் பிளந்து கொண்டு அமர்ந்திருந்தனர். ரஜினி என்று பெயர் சொல்லும் பொழுதெல்லாம் கைதட்டி, கரகோஷம் எழுப்பி ஏதோ முல்லைப் பெரியார் அணை பிரச்சனையில் நமக்கு வெற்றி கிட்டியது போல் பல் இளித்துக் கொண்டிருந்தனர்.  தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் மட்டும்மொழி கடந்த ஒற்றுமையை எவ்வாறு உறுதிசெய்கின்றனர். 

3.  அதேபோல் நிச்சயமாக சூப்பர் சிங்கர், குயில் பாட்டு, அந்த பாட்டு, இந்த பாட்டு, டான்சு, சிரிப்பொலி, நடிகர்களின் முகத்தை கண்டுபிட்க்க சொல்லும் ‘அறிவியல்’ நிகழ்ச்சி என்று ஒரு நிகழ்ச்சிக்கும் குறைவிருந்திருக்காது. தொடர்களுக்கும் குறைவிருந்திருக்காது. 

4.  இன்று தேனீர் அருந்தும் போது எதேச்சையாக பார்க்கிறேன் எஸ்.ஜே. சூர்யா ரஜினியை பற்றி புகழ்ந்து ஏதோ உளரிக்கொண்டிருக்கிறார். இது போன்ற இயக்குனர்கள் தான் ’போராளிகளாகி’ ‘தமிழ்’ உணர்வை ‘கதை’யாக்கி வீரவசனங்களைப் பேசி ஏழாம் அறிவை வளர்த்து புரட்சிக்கு விதை விதைக்கப் போகின்றவர்கள் இல்லையா.

5. இதற்கிடையில் நிச்சயம் சில ‘தமிழ்’ பத்திரிகைகள் வெகு ஜனநாயகத்தோடு நடிகைகளின் மார்புகளையும், தொப்புளையும் அட்டைப்படமாக போட்டு தங்கள் இதழ்களை வெளியிட்டிருக்கும்.

6. 26/11, பாபர் மசூதி, அன்னா ஹசாரே போன்ற விசயங்களில் ‘நாட்டுப் பற்றை’ முன்வைத்து பேசும் ‘தேசிய’ ஆங்கில செய்தி ஊடகங்கள், தமிழர்களின் பிரச்சனைகளை இடது கையால் புறம் தள்ளி (ஓரளவுக்கு ஆந்திராவையும் இதில் சேர்த்துக்கொள்ளலாம்) சேவாக் எவ்வளவு ரன் அடித்தார், ஷாரூக் கானின் அடுத்த படம் என்ன, கரீனா கபூர் அடுத்து அணியவிருக்கும் உள்ளாடையின் நிறம் என்ன என்று சலிக்காமல் பேசிக்கொண்டிருக்கும். 

7.  இந்தியா இந்தியா என்று கூப்பாடு போடும் இவ்வூடகங்கள் பகையை ஊதிப் பெருசாக்குவதைத் தவிர ஒரு மாநிலம் மற்ற மாநிலத்திற்கு பகிர்ந்தளிக்க மறுக்கும் வளங்களை மீட்டுத்தருவதற்கு இதுவரை என்ன செய்திருக்கிறது. கார்ப்ரேட்டுகளின் படிமத்தை ஏற்றிவைப்பதற்காக அவர்களிடம் நிதியுதவி பெற்று ‘இந்தியா தீர்மானிக்கிறது’ ‘வீர இந்தியன்’ போன்ற ’சமூக அக்கறையுள்ள’ நிகழ்ச்சிகளை நடத்தும் ’தேசிய ஊடகங்கள்’ இரு மாநிலங்களின் பிரச்சனையில் உண்மைத் தகவல்களை எடுத்துரைத்து நியாயத்தின் பக்கம் இதுவரை நின்று தைரியமாக பேசியிருக்கிறதா? வெத்து விவாத நிகழ்ச்சிகள், நடுநிலைமை, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவேண்டும் எனும் வகுப்பெடுப்பு இவைகளைத் தவிர ஏதாவது ஒரு ஊடகமாவது இதுவரை பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கான சட்ட அணுகுமுறையாவது செய்ய உதவியிருக்கிறதா. (தமிழகம் இந்தியாவில் இல்லையோ)

8.  தேசிய ஊடகங்களாவது போகட்டும், தமிழ் ஊடகங்கள் என்ன செய்கின்றன. மக்கள் போராட்ட குழுக்கள் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருப்பது போல் குறைந்தது ஒரு நாளாவது அடையாள ஆதரவாக தங்களது ‘பொழுது போக்கு’ நிகழ்ச்சிகளை நிறுத்தி வைத்துவிட்டு, முல்லை பெரியாரின் கட்டமைப்பு பற்றிய தகவல்களை தொடர்ந்து ஒளிபரப்பி, மக்களை இவ்வசியத்தில் கவனம் கொள்ளச்செய்கிறதா. முல்லை பெரியார் பற்றிய ஆவணப் படமும் வெளியாகியிருக்கிறது. கட்டுமான அறிஞர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகள் உள்ளன. எத்தனை மக்களிடத்தில் இது கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது.   

9. ஏ.ஆர். ரஹ்மானின் ஆஸ்கர் விருதுயிலிருந்து ’கொலைவெறி’ பாடல் வரை செய்தி பரப்பிய ஊடகங்களுக்கு மக்களை ஒரு இடத்தில் ஒருங்கிணைப்பது அவ்வளவு சிரமமான காரியமா. அந்த கொலைவெறிப் பாடலை அறிமுகப்படுத்துவதற்காக சிட்டி செண்டர் மாலில் ‘நவநாகரீக’ அசைவுகளை செய்து ஒலிப்பேழையை வெளியிட்ட அந்த கும்பல் முல்லைப் பெரியார் பிரச்சனையில் ஒரு சிறு துறும்பைக் கூட அசைக்கவில்லை. மற்றொரு சேனலில் ‘ஒஸ்தி’யாக ஒரு கும்பல் ‘தாய்மையை’ பேசிக்கொண்டிருக்கிறது. நாளையே இவர்கள் ’வேறு வழியின்றி’ ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்து கூடினால் எந்த வெட்கமுமின்றி அதையும் பார்த்துக்கொண்டிருக்க செய்யப்போகிறது வெகுஜன ஊடகங்கள்.

10.  இவ்வளவு மோசமான சமூக சூழலிலும் கூட ஊரில் உள்ள அத்தனை ’மால்களிலும்’, ’நட்சத்திர உணவகங்களிலும்’, பார்களிலும், பப்புகளிலும், சுற்றிக்கொண்டிருக்கும் அந்த ‘தமிழர்கள்’, நடிகர், நடிகைகளின் புகைப்படங்களை தங்கள் அடியாளமாக போட்டுக்கொண்டிருக்கும் ‘முகப்புத்தக தமிழர்கள்’, விஜய்க்காகவும், நமிதாவுக்காகவும் எதையும் செய்யத் துணியும் ‘தமிழர்கள்’, ‘ஏழாம் அறிவுத் தமிழர்கள்’ என்று அத்தனை ‘தமிழர்களும்’ தங்கள் சந்தோசங்களில் கவனம் செலுத்திக்கொண்டு சொந்த மண்ணுக்கு செய்யும் துரோகத்தை விடவா மூளை சலவை செய்யப்பட்டதால் பயத்தில் உழலும் அந்த அப்பாவி மலையாள மக்கள் துரோகம் செய்கின்றனர்.

மலையாளிகளின் கடைகளை அடித்து உடைக்கும் ‘தமிழின’  உணர்வாளர்கள் ஏன் இந்த வணிக ஊடகங்களைப் பார்த்து தங்கள் கண்டனங்களை எழுப்புவதில்லை. குறைந்தபட்சம் ஒரு நாளாவது (அரை நாள்!) பொழுது போக்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பக்கூடாது என்று கோசங்கள் எழுப்புவதில்லை. ‘குத்தாட்ட’ நிகழ்ச்சிகளுக்காக ‘சமூக அக்கறை’ நிறைந்த தொடர்களை நிறுத்தி விட்டு ஒரு பாட்டுக்கு பத்து விளம்பரங்கள் போட்டு கும்மியடிக்கும் அவ்வூடகங்களின் நிலைப்பாடென்னவென எவருக்கும் தெரியாது. கட்சி பேதமின்றி ஒரு மனதாக கோரிக்கையை முன்வைத்து ஒரு பொது இடத்தில் மக்களை ஒருங்கிணைக்கும் ஒரு அறிவிப்பையாவது வெளியிடச் சொல்லி நம்மால் அவர்களை நோக்கி குரல் எழுப்ப முடியுமா.

பச்சிளம் குழந்தைகளைக்கூட விட்டுவைக்காமல் சுரண்டிப் பிழைக்கும் நிகழ்ச்சிகளை நடத்தி மக்கள் மனதில் ‘தாக்கத்தை’ ஏற்படுத்தும் இவர்கள் ஏன் மக்கள் போராட்டங்களில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தமுடிவதில்லை. ஊர் ஊராக வேனை ஓட்டிச் சென்று பங்கேற்பாளர்களை சேர்க்க ஓடும் ஊடகங்கள் விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சனையான இதில் ஒரே ஒரு போஸ்டராவது அடித்திருப்பார்களா. வட இந்திய ஊடகங்கள் அன்னா ஹசாரேவுக்கு சேகரித்து தந்த ஆதரவைக்கூட இவ்விசயத்தில் ’தமிழ்’ ஊடகங்கள் பெற்றுத்தர இயலவில்லை. தமிழ் நாளிதழ்கள், அரசியல்வாதிகளின் சாகசங்களை ஒரு முழுபக்க அளவு வெளியிட்டு ‘சேவை’ செய்வது போல் ‘முல்லை பெரியார் அணை பாதுபாப்பானதே’ என்று ஒரு பக்க விளம்பரமாவது கொடுத்திருக்கலாமே.  ஈழத்தை வைத்து, பிரபாகரனை வைத்து, ‘தமிழர்களின்’ பிரச்சனையை வைத்து ஆதாயம் தேடும் ஊடகங்கள் கூட இதில் விதிவிலக்கல்ல.

தேனி, கம்பமெட்டு, குமிளி, கேரள எல்லையில் தங்கள் எதிர்ப்பை வன்முறையின்றி தெரிவிக்க குவிந்து அடி உதைகளை வாங்கிக்கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான விவசாயப் பெருமக்களான அவர்கள் நிச்சயம் ‘மானமுள்ள தமிழர்களாக’ இருக்க முடியாது. ரஜினிகாந்தின் ஃப்ளெக்ஸ் பேனரை மலையளவுக்கு அச்சிட்டு அதற்கு முன் சூடம் ஏற்றி வழிபட்டதை, அன்னதானம் இட்டதை ஒளிபரப்பி ஊக்குவிக்கும் ஊடகத்தினரே மானமுள்ள தமிழர்கள்...

அப்படிபட்ட மானமுள்ள தமிழராய் இருப்பதில் பெறுமை கொள்வோம்...அதையெல்லாம் நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், பாடகர்கள், பாடகிகளின், சூப்பர் சிங்கர்களின், இசை, நடன நிகழ்ச்சிகளுக்கான நீதிபதிகள், நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள், கிரிக்கெட் விளையாடுபவர்கள் இன்னும் இதர ‘பொதுமக்களாகிய தமிழர்களின்’ கால்களுக்கு நம் பெறுமைகளை சமர்ப்பணம் செய்வோம். 

Dec 11, 2011

மதவாதம் முன்வைக்கும் மக்கள் நலன் என்ன - ஓர் இணைய விவாதம் - இறுதிப் பகுதி

இதுவே இறுதிப் பகுதி....வீண் விவாதத்தை முடித்துக் கொள்வது என் நேரத்தை காக்க எனக்கு அவசியமாகிறது...அடிப்படைவாதிகளிடம் நேரத்தை விரையம் செய்வதைவிட, இன்னும் இரண்டு புத்தகங்களை கூடுதலாக படிக்கலாம் என்று முடிவு செய்துவிட்டேன்...


Bharat Voice Sujin:
கண்டிப்பாக விவதத்தை முடிக்கலாம் சகோதரி. முடியாமல் தொடரும் விவாதம் வீண் என்பார்கள். இந்த விவாதத்தின் எனது முடிவுரையும், உங்கள் கருத்துக்கான எனது பதிலும்.

சாவர்கரின் இந்து யார்? சித்தாந்தத்திலேயே அவர் பாரதத்தை புன்னிய பூமி என்று தான் விளக்கியுள்ளார். ஆதலால், நான் இந்து யார்? என்ற சாவர்கரின் விளக்கத்தை அவர் கூறியபடி தானே கூற முடியும். இதுபோக, என் தேசம் எனக்கு புன்னிய பூமி தான். பெருமைமிக்க பாரத தேசத்தை புன்னிய பூமி என்று அழைப்பதை நான் பெருமையாக கருதுகிறேன். "இந்தியா" தான் தற்போதைய பெயர் என்கிறிர்கள். இது தவறு. பாரத அரசியல் சட்டத்திலேயே "பாரத்" என்ற பெயரும் Officialஆக உபயோகிக்க வழிவகை செய்துள்ளது. பாரதம் என்ற சொல், ஆட்சிமுறை திரிபு அல்ல. பாரதம் என்ற சொல் எங்கள் புராணங்களிலேயே உபயோகிக்கப்பட்ட சொல் தான். பாரதம் என்பது ஒன்றுபட்ட நாடு என்று விஷ்ணுபுராணத்திலேயே கூறப்பட்டுள்ளது. அப்புராணத்திலேயே பாரத தேசத்தில் எல்லைகள் வரைக்கும் தெளிவாக கூறப்பட்டுள்ளது. அரசியல் லாபத்துக்காக பாரதம் என்ற சொல்லை உபயோகிக்க வேண்டிய அவசியமும் இல்லை. காரணம், பாரதம் என்ற ஒன்றுபட்ட நாடு தான் இன்று இருக்கிறதே. இதில் என்ன அரசியல் லாபம் தேடுவதற்கு இருக்கிறது? பாரதத்தை மீண்டும் துண்டாக்க நிணைப்பவர்கள் தான், அரசியல் லாபத்திற்காக செயல்பட்டு கொண்டு இருக்கின்றனர். புராணங்கை நீங்கள் நம்ப மாட்டீர்கள். ஆனால், இந்து என்ற ஒற்றைச் சொல் பாரதத்தை ஒன்றாகவே வைத்திருக்கும். உங்களின் பிரிவினை கோசங்கள் எல்லாம், காந்தி காலத்திலேயே மடிந்து போய்விட்ட ஒன்று. பிரிவினை கோசத்தை எரியவைத்தாலும், அதை அனைக்கும் சக்தி எங்களிடம் உள்ளது.

12 minutes agoBharat Voice Sujin
இந்து மதம் தான் என்றுமே இந்நாட்டின் மதமாக இருந்துள்ளது. இந்து என்ற பெயர் வேண்டுமானால் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வந்ததாக இருக்கலாம். ஆனால், எங்கள் மதம் பாரத தேசத்தில் யூக யூகமாக வாழ்ந்து, எங்களையும் வாழவைத்துக் கொண்டிருக்கிறது. சைவம், வைணவம் போன்ற வழிபாடுகள் பார்பனியச் சொல்லாடலா? இதை கேட்டு சிரிப்பு தான் வருகிறது. எதற்கேடுத்தாலும் பார்பனன் தானா? சைவ நாயன்மார்களில் மீனவ தொழில் செய்த ஒருவர் நாயன்மாராக உள்ளாரே, அவர் கூட பார்பனரா? பக்தியின் உச்சம் என்று புகழப்படும், கண்ணப்பர் என்ற வேடுவர் யார்? என்னும் எத்தனையே சொல்லலாம். இந்து மதத்தை சும்மா தாக்க வேண்டும், அதனை வைத்து உங்கள் கம்யூணிச, நாத்தீக சித்தாந்தங்களை பாரத தேசத்து இந்து மக்களிடம் திணிக்க வேண்டும் என்பதற்காக, மறுபடியும் மறுபடியும் இந்து மதம் என்பது பிராமணர்க்கு மட்டுமே உரிய மதம், பார்பனர்க்கான மதம் என்று திரும்ப திரும்ப சொல்வதான் எந்த பயணும் இல்லை. பெரியார் போன்றவர்களாலே முயர்ச்சிக்கப்பட்டு தோல்வியை தழுவிய வாதம் தான் இது. என்னும் சொல்ல போனால், பெரியார் போன்ற இந்து மத வெறுப்பாளர்கள் வளர்ந்த பின்பு தான், இந்து அரசியலின் அவசியத்தையும், இந்து ஒற்றுமையின் தேவையையும் மக்கள் புரிந்து கொண்டனர். நீங்கள் கூறும் மூதாதையர் வழிபாடு, இயற்கை வழிபாடு எல்லாம், இந்து மதத்தின் ஒரு பகுதி. தற்போதும் இந்த வழிபாடுகள் எல்லாம் சிறப்பாகவே நடந்து கொண்டிருக்கிறது. எடுத்துக்காட்டாக. பஞ்ச பூத வழிபாடு, கங்கை வழிபாடு போன்ற வழிபாடுகள் அனைத்துமே இயற்கை வழிபாடுகள் தான். ஒரு வகையில் பார்த்தால், ராமர், கிருஷ்னர் வழிபாடுகள் கூட மூதாதையர் வழிபாடு தான். இது போன்று, சிறு தேவ வழிபாடு என்பது இந்து மத வழிபாடு அல்ல என்று கிறுத்தவ அறிவாளிகளின் உதவியோடு சில நாத்தீகர்கள் பிரச்சாரம் செய்கின்றனர். சுடலைமாட சுவாமியின் வரலாற்றை இவர்கள் அறிந்திருப்பார்களா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. நான் முன்பே கூறியது போல, அவரவர் சித்தாந்தங்கள் மக்கள் மத்தியில் இருக்க வேண்டும் என்பதற்காக, இந்து மதத்தை எதிர்க்க கூறப்படும் பொம்மை வாதங்கள் தான் இவை எல்லாம். இதில் ஒன்று தான் வேதம் என்பது உணவுக்காக இறைவனிடத்தில் வேண்டுவது என்பதேல்லாம். நான்கு வேதத்திலும் பல்லாயிர கணக்கான ஸ்லோகங்கள் உள்ளன. இவை அனைத்துமே இப்பாடி தான் என்ற உங்களின் வாதம் எந்த அளவுக்கு உண்மையாக இருக்கும் என்று நீங்களே சிந்தித்து பார்க்க வேண்டும்.

12 minutes agoBharat Voice Sujin
உங்களின் கம்யூணிச கண்ணோட்டத்தில் நீங்கள் சாதி முறையை கூறுகிறிர்கள். சரி. ஆனால், ஒரு பெரிய சுற்று சுற்றி மறுபடியும் சாதிக்கு இந்து மதம் தான் காரணம், ஏற்ற தாழ்வுக்கு இந்து மதம் தான் காரணம் என்று கூறுவது தவறு. ஏற்ற தாழ்வுக்கு ஒரு சில சாதிகள் காரணம் என்று கூறுவது தான் சரியே தவிற, மதம் அல்ல. சத்திரிய குலம் ஆட்சி செய்தது எப்போது? பிரிட்டிஸ் ஆட்சிக்கு முன், எத்தனையோ அரசர்கள் இருந்தனர். அவர்கள் அனைவரும் சத்திரியர்களா? எத்தனையோ பிராமணர்கள் மன்னர்களாக இருந்துள்ளனரே? இதைத்தான் நான் வர்ண முறையில் இருந்து திரிந்த சாதிய முறை என்று நான் முந்தைய பதிலில் கூறினேன். நீங்கள் கூறுவது போல, வர்ணத்தின் தமிழ் சொல் தான் சாதி என்பது தவறு. கோத்ரம் என்பதின் தமிழ் சொல்லைத் தான் சாதி என்பார்கள்.

8 minutes agoBharat Voice Sujin
பிராமணரின் கடமை என்பதே அனைவருக்கும் பூஜை செய்வது தான். இதில் மன்னர், சூத்திரர் என்ற பார்வை எல்லாம் கிடையாது. மனுவை பெரிய வில்லன் போன்று சித்தரிக்கிறீர்களே, அவர் கூறுவது என்ன தெரியுமா? "எவர் ஒருவர் தன் குலத்தை பெரிது படுத்தி தவறான வழியில் சம்பாதிக்கிறானோ, இது அவர் தன் வாந்தியை தானே உண்பதற்கு சமம்." என்கிறார். மனு தர்மம் என்பது திரிக்கப்பட்டுவிட்டது என்பது தான் நிஜம். அதை நான் ஒத்துக்கொள்கிறேன். மனு தர்மத்தில் சுமார் 2685 சுலோகங்களில், 1471 சுலோகங்கள் சிலரின் சுயநலத்திற்காக மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். இது சுலோகங்கள் மத்தியில் எழும் Contradictionஐ வைத்தும் கூறுகின்றனர். மனு தர்மம் சாதி ஏற்ற தாழ்வுகளை ஆதரிக்கிறது என்று கூறுவது தவறு. மனு தர்மம் கூறுவது: சூத்ரோ ப்ராம்மணதாமேதி ப்ராம்மணஸ்சைதி சூத்ரதாம் க்ஷ்த்ரியாஜ்ஜாதமேவம் து வித்யாத் வைச்யாத் ததைவச. அதாவது, சூத்திரன் பிராமணன் ஆகலாம். பிராமணன் சூத்திரன் ஆகலாம். க்ஷத்திரியன் மற்றும் வைசியன் வேறு வர்ணத்தை அடையலாம் என்பது தான் இதன் பொருள். இந்த ஸ்லோகம் என்ன கூற வருகிறது என்றால், எப்போது ஒரு சூத்திரன் தன் நிலையை பிராமண நிலைக்கு உயர்த்துகிறானோ அப்போது, அவன் பிராமணன் ஆகிறான். அதே போல, எப்போது ஒரு பிராமணன் தன் குணத்தில் இருந்து தாழ்கிறானோ, அப்போது அவன் சூத்திர வர்ணத்தை அடைகிறான். இதே போல, வைசியரும், க்ஷத்திரியனும் வேறு வர்ணத்தை அடையலாம். விளக்கமாக சொன்னால், வர்ணம் என்பது ஒருவன் தொழிலை வைத்து தான் அமைகிறது. அதன் படி, ஒரு சூத்திரன் வேதங்களை கற்று, பிராமணக்கான நிலையை அடையும் போது அவன் பிராமணன் ஆகிறான். ஆக, வர்ணம் என்ற முறையில் பரம்பரை தொழில், எற்ற தாழ்வு என்ற வர்த்தைக்கே இடமில்லை. வர்ணம் என்பது வர்ண்ஜ (Vrinja) என்ற வார்த்தையில் இருந்து வந்தது. வர்ண்ஜ என்பது தெரிந்தெடுத்தல் எனப்படும். இதற்கு வலு சேர்கும் வகையில் தான் மேலே கூறப்பட்ட ஸ்லோகம் அமைந்துள்ளது. வர்ணம் என்பது யாரோ நமக்காக தரும் பட்டமல்ல. நாமாக நமக்காக தெரிந்து எடுப்பது தான் வர்ணம்.

7 minutes agoBharat Voice Sujin
சூத்திரர் பற்றிய என் கருத்தை நீங்கள் விமர்சித்தீர்கள். சூத்திர வர்ணம் என்பது ஒரு தொழில். அவ்வளவு தான். ஒரு பியூணை எடுத்துக்கொள்ளுங்கள். ஐரு பியூண் ஒரு பள்ளியில் வேலை செய்கிறார். அவரின் தொழில் குணம் என்பது, அங்குள்ள ஆசிரியரையோ, தலைமை ஆசிரியரையோ ஒப்பிடும் போது குறைவாக தெரியும். அதை தான் விசேஷ குணம் என்று குறிப்பிட்டேன். இதில் என்ன மனித தன்மை இல்லை? அதுவும், வர்ண முறைபடி, யார் வேண்டுமானாலும் எந்த வர்ணத்தை வேண்டுமானாலும் அடையலாம் என்பது தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள். உண்மையான தெய்வ பக்தி இருக்குமிடத்தில் உழலல் மட்டுமல்ல, பிற தீய குணங்களும் இருக்காது. ஒரு சில சாமியாரை கொண்டு எல்லாரும் இப்படி தான் என்று கூறுகிறீர்கள். அப்படியானால், நாத்தீகம் கம்யூனிசம் பேசுபவனும் தவறு செய்கிறான். அதை வைத்து, எல்லா நாத்தீகணும் இப்படி தான். எல்லா கம்யூனிஸ்ட்டும் இப்படி தான் என்று கூறினால் நீங்கள் ஏற்று கொள்வீர்களா? அனுமன் பற்றி நீங்கள் கூறிய தகவல்கள் தவறு. சூரிய பகவான் ஒளியில் பிறந்தார் என்றேல்லாம் யார் கூறியது? அதே போல, இந்து மதமா? எல்லாம் பிராமணன், எல்லாம் பிராமணன் என்று கூறுகின்றீர்களே, ராமாயணத்தை எழுதியது யார்? ராமர் என்ன பிராமணரா? கிருஷ்ணர் எந்த குலத்தில் வளர்ந்தார்? போன்ற கேள்விகளுக்கு பதிலை தேடுங்கள். எனக்கு தெரிந்து அனைத்து குறிப்புகளுமே, வியாசரின் பிறப்பை ஒரே மாதரித்தான் கூறுகிறது. உங்களிடம் உள்ள பிரச்சனையே இது தான். "இந்து எதிர்ப்பு" என்னும் ஒரு கருத்தை உங்கள் மனதில் பதிய வைத்துக் கொண்டு, அதை எதிர்க்க பிராமண மதம், பார்பனிய மதம் என்று கூறுகின்றீர்கள். Birth base caste system பற்றி நான் எனது முந்தைய கருத்திலே தெளிவு படுத்திய பின்பும், பறையர் பிராமணர் ஆக முடியுமா? தேவர் ஆக முடியமா? என்று வினா எழுப்புவது, பிராமணர் ஆக பணம் வேண்டும் என்று கூறுவது எல்லாம், சும்மா இந்து மதத்தை தலித்து விரோதியாக காட்டத்தான். வர்ண முறை நடைமுறையில் இருந்த வரை, கல்வி கூட அனைவருக்கும் இலவசமாக தான் வழங்கப்பட்டது.

3 minutes agoBharat Voice Sujin
இந்து மதம் ஏற்ற தாழ்வு அற்றது என்பதை குறிப்பிட, வியாசரே மீனவ பெண்ணுக்கு தான் பிறந்தார் என்று கூறியதும், அவர் அப்படி பிறந்தால், அவர் சொல்வதை கேட்க வேண்டுமா? என்கிறீர்கள். இதுவே, உங்களின் குரல் தலித்துக்காகவா? இல்லை, இந்து விரோதத்துக்காகவா? என்பதை காட்டுகிறது. தண்ணீர் தர மாட்டேன் என்கிறான் என்றால், அது தேசிய கோசமா? இல்லை, உங்களைப் கொள்கை சாந்த இயக்கங்கள் போல அரசியல் அதிகாரம் பெற போடும் நாடக கோசமா? தேசிய கட்சியான காங்கிரஸ், பாஜ கூட இப்படி கோசம் போடுகின்றனர். இதுவும் தவறு தான். சரி. தனி நாடாக இருந்தால் மட்டும் உங்களுக்கு தண்ணீர் கிடைத்துவிடுமா? அது சரி, நீங்கள் தாங்கி பிடிக்கும் கம்யூனிச வழிவந்த மார்க்சிஸ்ட்டுகளே சீனாவுக்கு அடிவருடி, பாரத - சீன யூத்தத்தின் போது, சீன பக்கம் சாய்ந்தவர்கள் தானே? அதனால், தேசியம், தேச பற்று எல்லாம் நாத்தீக _ கம்யூனிஸ்ட்களிடம் எடுபடாது என்பது உண்மை தான். மதத்தை எதிர்கிறேன் என்கிறீர்கள், நாத்தீகம் என்கிறீர்கள். ஆனால், முஸ்லீம், கிறுத்தவ மதங்களை எதிர்த்து எத்தனை முறை மசூதி, சர்ச்சு முற்றுகை போராட்டம் உங்கள் சித்தாந்தத்தில் உள்ளவர்களால் நடத்தப்பட்டிருக்கிறது? தலாக், தலாக் என்று கூறுவது பெண் அடிமை தனமாகவே, இல்லை அறிவியல் சர்ந்தோ தவறாக நாத்தீகர்களுக்கு தெரிவதில்லையே. ஏன்? கோவிலில் தமிழ் அர்ச்சனை தான் செய்ய வேண்டும் என்கிறீர்கள். அது கூட ஒரு வகையில் இந்து ஒற்றுமைக்கு நன்மை தான் செய்கிறது. ஆனால், குராண் அரபி மொழியில் ஓத கூடாது என்று ஏன் யாரும் போராடுவதில்லை? மார்க்சிடம் வர வேண்டியுள்ளதா? யார் வர வேண்டியுள்ளது? சரி. கம்யூனிச சித்தாந்தம் என்பது ஆங்கிலேய காலத்திலேயே வந்துவிட்டது நம் நாட்டுக்கு. ஆனால், அதன் வளர்ச்சி எப்படியுள்ளது? அதே சமயம், இந்து ஒற்றுமை சமீப காலமாக எந்த வேகத்தில் செல்கிறது? இந்து ஒற்றுமையை, நான் அரசியல் கட்சிகளின் வளர்ச்சியை வைத்து கூறவில்லை. இந்து உரிமைக்காகவும், இந்து ஒற்றுமைக்காகவும், இந்து துவேஷங்களை எதிர்த்தும் போராட முன்வந்துள்ள மக்கள் சக்தியையும், கடல் போல கோவில் குவியும் இந்து மக்களின் மக்கள் சக்தியை முன்வைத்து தான் கூறுகிறன். எத்தனை கால ஆனாலும், எங்கள் புன்னிய பாரத பூமி மக்கள் எங்கள் தெய்வத்தை ஆன்மீகத்தின் மூலம் தேடுவார்களே தவிற, மார்கஸையும், ஸ்டாலினையும் தேடமாட்டார்கள். பொன்னான தங்களின் நேரத்தை செலவு செய்து விவாதித்ததற்கு என் நன்றிகள். வாழ்க பாரதம். வெல்க பாரதம்.

 ______________________________________________________

Nirmala Kotravai
உங்கள் நோக்கம், இந்துத்துவத்தின் நோக்கம் ஆகியவற்றை மிகச் சரியாக விளக்கினீர்கள்...மார்க்சிய, பெண்ணிய, பெரியாரிய, அம்பேத்கரிய, பௌத்த சிந்தனைகளை இன்னும் தீவிரமாக மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும் எனும் உறுதி மொழியை எனக்கு நானே மீண்டும் வலியுறுத்திக் கொள்கிறேன்...நன்றி


Bharat Voice Sujin
நன்றி. வருங்கால அரசியல் மேடையில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் சந்திப்போம்.

Nirmala Kotravai:
ஹா..ஹா...அரசியல் மேடையேறி புண்ணிய பாரத பூமியைக் காப்பது உங்கள் விருப்பமாக இருக்கலாம்...எனது விருப்பம் மேடையில் ஜொலிப்பதல்ல....அது மானுட விடுதலை...நான் அடிமைப்படுத்தப்பட்டுக் கிடக்கிறேன் என்று உணர்ந்தேன்...அடிமைபட்ட வரலாற்றை சமத்துவ சிந்தனையாளர்களின் நூல்களைப் படித்து உறுதி செய்து கொண்டேன். அதிலிருந்து விடுதலைப் பெறுவதற்கான வழிமுறைகளை நான் நடைமுறைபடுத்திப் பார்த்து அதில் வெற்றியும் கண்டுள்ளேன்...என் போல் அடிமைப்பட்டுகிடக்கும், அல்லது அப்படி உணர்ந்து ஒன்றிணையும் நபர்களோடு சேர்ந்து என் குரலையும் ஒலிக்கச் செய்கிறேன்..அவ்வளவுதான்...

இப்படிக்கு,
அமெரிக்க, ஐரோப்பிய, அதிகார வர்க்க இந்துத்துவ அடிவருடிகளுக்கெதிராக அறச்சீற்றம் கொள்ளும் கம்யூனிஸ்டு அடிவருடி (உங்கள் மொழியில் சொன்னால் சீன அடிவருடி...)


புத்தம் சரணம் கச்சாமி
தம்மம் சரணம் கச்சாமி.

நன்றி. கொற்றவை.

Dec 8, 2011

மதவாதம் முன்வைக்கும் மக்கள் நலன் என்ன - ஓர் இணைய விவாதம் - 3

திரு. சுஜின் அவர்களின் பதில்:




·          
o    சகோதரி நிர்மலா அவர்களே, உங்கள் தளத்தில் கருத்து பதிவு செய்ய Gmail ACCOUNT தேவைபடுகிறது. ஆனால் MOBILE NUMBER கொடுக்க வேண்டியுள்ளதால், நான் GMAIL ACCOUNT வைத்துக்கொள்வதில்லை. REDIFF & YAHOO ACCOUNT மட்டுமே நான் உபயேக படுத்துகிறன். எனது தளத்திலும் நான் கருத்து எழுதும் வசதியை வைக்கவில்லை. ஆதலால், என் கருத்தை உங்களுக்கு FACEBOOK MSG செய்கிறேன்.
·         Bharat Voice Sujin
o    RSSயின் இந்து யார்? அல்லது சாவர்கரின் இந்து யார்? இந்த இரண்டு கோட்பாட்டில் இருந்தும் நான் சற்று வித்தியாசப்படுகிறேன். சாவர்கரின் இந்து யார்? என்பதை சுருக்கமாக சொன்னால், பாரதத்தை புன்னிய பூமியாக கொண்டவர்கள் அனைவருமே இந்துக்கள் தான். அதாவது, இந்த பாரத பூமியில் தோன்றிய மதங்களை பின் பற்றுபவர்கள் அனைவருமே இந்துக்கள் தான். சாவர்கரின் கோட்பாட்டின் படி, சமண, புத்த, சீக்கிய மதத்தை பின்பற்றுபவர்களும் இந்துக்கள் தான். சாவர்கர் இந்து என்று குறிப்பது, இந்து மதத்தை அல்ல. இந்து(சைவ, வைணவ, பற பரிவுகள்), சமண, புத்த, சீக்கிய மதங்கள் பாரதத்தில் தோன்றிய மதங்கள். இவற்றை பின்பற்றுபவர்களின் பொது அடையாள பெயர் தான் இந்து. சாவர்கரின் கோட்பாட்டின் படி முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் இந்துக்கள் அல்ல. ஏன்யென்றால், இஸ்லாமும், கிறிஸ்தவமும் பாரதத்தில் தோன்றாத வெளிமதங்கள். இவர்களின் புன்னிய பூமி மேக்காவும், ஜெருசலேமும். ஆதலால், இவர்கள் இந்துக்கள் அல்ல. இது சாவர்கரின் கோட்பாடு.

RSSயின் இந்து கோட்பாடு என்பதும், சாவர்கரின் இந்து கோட்பாடும் கிட்டதட்ட ஒன்று தான். RSSயின் இந்து கோட்பாடும் மதத்தை குறிப்பதல்ல. பாரதத்தில் வாழும் பல்வேறு மதங்களைச் சார்ந்த, மக்கள் அனைவரையும் குறிப்பது. ஆனால், ஆர்எஸ்எஸ்யின் கோட்பாட்டின் படி, பாரதத்தில் வாழும் கிறுத்தவர்களும், இஸ்லாமியர்களும் இந்துக்கள் தான். ஏன்யென்றால், இங்கு வாழும் இஸ்லாமியர்களும், கிறுத்தவர்களும் ஒரு காலத்தில் பாரத மதமான இந்து(சைவ, வைணவ, பற பரிவுகள்), சமண, புத்த, சீக்கிய மதங்களில் இருந்து மதம் மாறியவர்களே. ஆதலால், RSS இஸ்லாமிய, கிறுத்தவ மதங்களை ஏற்று கொள்ளவில்லை என்றாலும், அம்மக்களை இந்து என்று தான் கூறுகிறது. இது RSSயின் கோட்பாடு. இந்த இரண்டு கோட்பாட்டில் இருந்தும் நான் வேறுபடுகிறேன். நான், RSS மற்றும் சாவர்கரின் இந்து கோட்பாட்டை தேசியமாக மதிக்கிறேன். ஆனால், சில விஷ்யங்களில் எனக்கு மாற்று கருத்துள்ளது. ஆனால், இது பற்றி குறிப்பிட வேண்டியதில்லை. அது விவதத்தை அர்எஸ்எஸ் திசையின் இருந்து, என் திசைக்கு இழுத்துச் சென்றுவிடும்.

இப்போது கோட்பாடுகளை மறந்துவிடுங்கள். மதத்துக்கு வருவோம். இந்து மதத்தை பிராமணர்களின் சாதிக்குள் அடைப்பது தவறு. நான் உங்களுக்கு அளித்த LINKஐ நீங்கள் படித்திருந்தால் நாம் அடுத்தகட்ட விவாதத்திற்கு சென்றிருப்போம். ஆனால், நீங்கள் LINKஐ தவிர்த்துவிட்டீர்கள். இருந்தாலும், இந்து மதம் பிராமணர்களுக்கான மதமில்லை என்பதை குறிக்க அந்த கட்டுரையில் இருந்து சில முக்கியமான கருத்துக்களை கூறுகிறேன்.
·         Bharat Voice Sujin
o    நாம் இப்போது பின்பற்றிவரும் சாதி முறை, பிறப்பின் அடிப்படையில் வருவது (BIRTH - BASE). அதாவது, நீங்கள் நாடார் சாதியாக இருந்தால், உங்கள் குழந்தையும் நாடார் தான், உங்கள் குழந்தையின் குழந்தையும் நாடார் தான். இந்த சாதி முறை தான், ஏற்ற தாழ்வுகளையும் தீண்டாமை கொடுமைகளையும் அரங்கேற்றி வருகிறது. சரி. இந்துக்கள் பின்பற்றும் இந்த சாதி முறைக்கு இந்து மதம் தான் காரணமா? "இல்லை.". காரணம், இந்துக்களின் வேதமான ரிக், எஜர், சாம, அதர்வண வேதங்கள் எதிலும், "பிறப்பு அடிப்படியில் சாதி" என்ற கோட்பாடு இல்லை! இன்னும் சொல்லப் போனால், வேதத்திலும் சரி, வேதக் காலங்களிலும் சரி, சாதி என்ற ஒன்று கிடையாது. வர்ணம் என்ற முறை மட்டுமே பின்பற்றப்பட்டு வந்தது. சாதி என்பது வேறு, வர்ணம் என்பது வேறு. வர்ணம் என்பதில் நான்கு பிரிவுகள் மட்டுமே உள்ளது. அங்கு, தேவர்; பறையர்; நாடார்; வேளாளர்..... போன்ற எந்த பிரிவுகளும் கிடையாது. வர்ண முறை என்பது மனிதர்களை பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்று நான்கு வகைகளாக, அவர்களின் குணத்துக்கு ஏற்ப வகுக்கப்பட்டுள்ளது. ஒருவர் செய்யும் தொழில் என்பது அவரவர் குணத்துக்கு ஏற்ப இருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. அதாவது, பிரமணன் என்பவனிடம் அடக்கம், தவம், பொறுமை, நூலறிவு, தெய்வபக்தி போன்ற குணங்கள் மிகுதியாய் இருக்கும். க்ஷத்திரியனிடம் வீரம், துணிவு, உறுதி, திறமை, கொடை, ஆளுமை திறன் போன்ற குணங்கள் மிகுதியாய் இருக்கும். வைசியரிடம் உழவு, கால்நடை, வாணிபம் போன்றவற்றை நடத்தும் அறிவு மிகுதியாய் இருக்கும். சூத்திர வர்ணத்தவரிடம் தனிப்பட்ட எந்த விஷேச குணமும் இருக்காது. பிராமணர்களுக்கும், க்ஷத்திரியர்களுக்கும், வைசியர்களுக்கும் உதவி புரிவது இவர்கள் தொழில். ஆக, நாம் இதில் இருந்து முக்கியமாக புரிந்து கொள்ள வேண்டியது, "வர்ணம் என்பது பிறப்பு அடிப்படையில் வகுக்கப்படுவது அல்ல" என்பதாகும். அதாவது, நீங்கள் ஒரு பிராமணன் என்று வைத்து கொள்ளுங்கள். உங்கள் குழந்தைக்கு பிராமணனுக்குறிய குணம் இல்லாமல், வீரம், துணிவு, ஆளுமை திறன் போன்ற குணங்கள் மிகுதியாய் இருந்து, ஒரு போராளி ஆகிறான். இப்போது, உங்கள் குழந்தையின் வர்ணம் க்ஷத்திரியனே தவிற பிராமணன் அல்ல. இது தான் சாதி முறைக்கும், வர்ண முறைக்கும் உள்ள வித்தியாசம். வர்ண முறையின்படி, "ஒருவரின் வர்ண அமைவுக்கும், அவரின் தந்தை / தாயின் வர்ணத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை." 

வியாசர் தான் இந்து மதத்தின் நான்கு வேதங்களையும் தொகுத்தவர். இவர் யாருக்கு பிறந்தவர் தெரியுமா? ஒரு மகரிஷிக்கும் மீனவப் பெண்ணுக்கும் மகனாய் பிறந்தவர் தான் வியாசர். இதில் இருந்து நாம் அறிய வேண்டிய விஷ்யங்கள்: * ஒரு மீனவ பெண்மணிக்கு பிறந்த வியாசர் தான் புனிதமான வேதத்தை தொகுத்தவர். * மீனவ பெண்ணுக்கு பிறந்தார் என்பதற்காக வியாசரால் தொகுக்கப்பட்ட வேதத்தை யாரும் தீட்டு என்று கூறுவதில்லை. * இதே வேத மந்திரம் தான் கோயிலில் முழங்கிக் கொண்டு இருக்கிறது. மீனவ பெண்ணுக்கு பிறத்த வியாசர் தொகுத்த வேதம் முழங்குவதால், கோவில் தீட்டாகிவட்டது என்று யாரும் கூறுவதில்லை. * ஒரு மகரிஷி, மீனவ பெண்ணை திருமணம் செய்திருக்கிறார். அப்படி என்றால், அந்த காலத்தில் வர்ண அடிப்படையில் ஏற்ற தாழ்வு இல்லை என்று தானே அர்த்தம்? அதே சமயம், திருமணத்துக்கு வர்ணம் ஒரு பொருட்டல்ல என்பதும் தெளிவாகும்.
·         Bharat Voice Sujin
o    தேவைப்பட்டால், வேதத்தில் இருந்து மேலும் பல கருத்துக்களை கூற முடியும். இது மட்டுமல்ல, நாயன்மார்களில் மனவர் ஒருவரும் இருந்துள்ளார், கண்ணப்பர் என்ற வேடரும் வருகிறார். ராமாணுஜர், ராகவேந்தர், ஆதிசங்கரர், விவேகானந்தர் போன்ற பல மகான்களும் சாதியை ஏற்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.
RSS சேவை பற்றி கோட்டீர்கள். RSSயின் மொத்த சேவை பட்டியலையும் இங்கு குறிப்பிட்டால் விடிந்துவிடும் அத்தகைய நீண்ட பட்டியல் இது. இருந்தாலும் பொதுவாக சிலவற்றை கூறுகிறேன். எந்த இடத்தில் இயற்கை சீற்றம் நடந்தாலும், முதல் ஆழாக அங்கு நிற்பது RSS தான். RSSஐ இதற்காக தான் READY FOR SELFLESS SERVICE என்பார்கள். சமீபத்தில் நடந்த தீருப்பூர் மழை வெள்ளத்தில் நிவாரண பணியை முன் நின்று நடத்தியது RSS.

கோட்சே அவர்களுக்கும் RSSகும் சம்பந்தம் இல்லை என்று யாராலும் மறுத்துவிட முடியாது. ஆனால், கோட்சே காந்தியை கொன்ற சமயம் இந்து மகா சபாவில் இருந்து தான் தன் பணியை செய்து வந்தார். ஒரு பத்திரிக்கையையும் நடத்தி வந்தார். ஒரே நேரத்தில் இரண்டு இயக்கத்திற்காக எவ்வாறு பணியாற்றியிருக்க முடியும்? ஆர்எஸ்எஸ்க்கும் மகா சபாக்கும் கொள்கைகள் கிட்டதட்ட ஒன்றாக இருந்தாலும், இயக்கம் வேறு வேறு தான். அது மட்டுமல்ல, காந்தி இறந்ததற்கு ஆர்எஸ்எஸ் சார்பில், துக்கம் வரைக்கும் அனுஷ்ட்டிக்கப்பட்டது. என் தனிப்பட்ட கருத்துப்படி, ஆர்எஸ்எஸ் அவ்வாறு செய்திருக்க கூடாது. கோட்சே தூக்கில் போட்டதற்கு தான் துக்கம் அனுஷ்ட்டித்திருக்க வேண்டும். ஆர்எஸ்எஸ்கும் காந்தி கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது கோபால் கோட்சே அவர்களின் பேட்டியே தெரிவிக்கிறது.
சில வேலைகளுக்கு நடுவில், இரவில் TYPE செய்தது. எழுத்து பிழை கண்டிப்பாக இருக்கும். அதை சரி செய்து படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.


எனது பதில்:

o     
o     இந்து யார் என்பதற்கான இருவிளக்கங்களில் இருந்து இருதரப்பினரின் பார்வையிலும் ஓர் அதிகாரப் போக்கே தெரிகிறது.  ’புண்ணிய பாரத பூமி’ என்பன போன்ற அடைமொழிகளை தவிர்ப்பது நல்லது, மீண்டும் மீண்டும் இந்துத்துவ பாவ புண்ணிய சித்தாந்தங்களிலிருந்து உதிரும் சொற்கள் அவை. தற்போது இந்நாட்டிற்கு கொடுக்கப்பட்டிருக்கும் பெயர் இந்தியா..அவ்வளவுதான். கிறுத்தவர்களும், இஸ்லாமியர்களும் இந்துக்கள் என்று சொல்வது எத்தகைய ஓர் அநீதி. இந்தியா என்பது பாரத நாடாக இருந்தது என்பதே ஆட்சிமுறைக்கான திரிபு வரலாறு. பாரதம் என்று எப்போது அதற்குப் பெயர் இருந்தது? இந்து மதம் என்பது இம்மண்ணின் மதமாக எப்போது மாறியது? அது என்ன சைவ, வைணவ, பற பரிவுகள் பற பிரிவுகள் என்பது பார்ப்பனியச் சொல்லாடல் அன்றி வேறென்ன? மதம், உருவ வழிபாடு என்று தோன்றுவதற்கு முன்னர் இயற்கை வழிபாடு, மூதாதையர் வழிபாடு என்பது தானே உலகம் முழுமையிலும் இருந்திருக்கிறது. அப்போது தாய்வழிச் சமூகமாகவும், தாய் தெய்வ வழிபாடும் (அதாவது இயற்கையை பிரதி எடுத்தல் பெண்ணின் உற்பத்தி சக்தி) கூட்டுச் சமூக வாழ்வும், கூட்டுச் சமூக ப்ரார்த்தனையும் தானே இருந்திருக்கிறது.  வேதங்களில் உள்ள பாடல்கள் (அவை ஸ்லோகங்கள் அல்ல) இறைவனிடத்து உணவு, செல்வம் ஆகியவற்றை இறஞ்சிக் கேட்கும் பாடலன்றி வேறில்லை. மூன்று வேதங்களாக இருந்தவை எப்போது நான்கு வேதங்களாக மாறியது.  வேதப் பாடல்களில் வரும் மிருகங்களின் பெயர்கள் குலகுழுக்களின் குலக்குறி என்றும் வேதத்தை ஓதுவதாக சொல்லிய ஒரு பிரிவினர் (அப்போது அவர்கள் இந்துக்கள் இல்லை, ஆனால் மேய்ச்சல் பொருளாதார பிரிவினர், தந்தை வழி சமூகத்தவர் என்றும் சொல்லலாம்) இந்நிலத்தில் வாழ்ந்த குலக்குறிகளை அழிக்கச் சொல்லியும், அவர்களை விட தன தானியங்கள் நிறைய வேண்டும் என்றும் இறைவனிடத்தில் கெஞ்சும் பாடல்கள் அவை..நச்சரிப்பு பாடல்கள்..(பார்க்க: உலகாயதம்).

o        வாழ்வாதார போட்டி, பொருளாதார அமைப்பில் மாற்றம் ஆகியவை மக்களை எப்போதும் இடம் பெயரச் செய்து கொண்டேதான் இருந்திருக்கிறது. அப்படிப் பார்த்தால் எவருமே இந்தியர்களாக இருக்க முடியாது...எல்லோரும் ஆப்பிரிக்கர்களாக இருக்க வேண்டும் ஏனென்றால் மனித இனம் ஒரே இடத்தில் தோன்றி பின்னர் காலத்தின் மாற்றத்தால் இடம் பெயற நேரிட்டது.  ஆரியர் முற்றுகை என்பது கட்டுக்கதை என்ற வாதத்தை உண்மை என்று எடுத்துக்கொண்டாலும், அப்போதிருந்த சமூக அமைப்பில் வேளான் பொருளாதாரத்தில் நலிவடைந்த ஒரு பிரிவினர், மேய்ச்சல் பொருளாதாரத்தில் ஈடுபட்டு அதிலும் வெற்றி காணமுடியாமல், வேளான் பொருளாதாரத்தில், நீர் வளப் பொருளாதாராத்தில் இன்னும் இதர கைவினைத் தொழில்கள்களில் ஈடுபட்டு வந்த சமூகத்தினரை சூரையாடியது வரலாறுண்மை.  இது ஏதோ மகாபாரதப் போர் போன்று சில நாட்களில் கத்திச்சண்டைகள் மூலம் நடந்தேரியதன்று...படிப்படியாக பொருளாதார நலன்களை சூரையாடியது. இத்தகவல்களை ரொமிலா தாப்பரின் நூல்களில், இன்னும் இதர மார்க்சிய அறிஞர்களின் நூல்களில, இந்துத்துவம் பேணாத வரலாற்றாசிரியர்களின் நூல்களில் காணலாம்.

o        இந்துத்துவவாதிகள் சொல்வதுபோல் இங்கு ஏற்கணவே சாதிய முறை இருந்தது என்பது திரிபு வாதம் அது வர்க்க அடிப்படையில் காணப்படவேண்டிய ஒன்று.  நவீன தொழிற்முறைப் பொருளாதாரம் தோன்றுவதற்கு முன்னர் குலக்குழுக்களாக வாழ்ந்த சமூக அமைப்பில் ஒவ்வொரு குலத்தினர் / பரம்பரையினர் ஒரு குறிபிட்ட தொழிலில் ஈடுபட்டுவந்தது ‘தொழிற் திறமை’ அதற்கான மரியாதையோடு நிலவியிறுக்கக்கூடிய ஒன்று. அப்போது ஒரு குறிப்பிட்ட குலத்தினர் / தொழிற்முறையினர் பிறப்பாலேயே உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று பேதங்கள் இருக்கவில்லை. அப்போது ஒரு வகையான பொது உடைமைச் சமூகமாகத்தான் இருந்திருக்கிறது. பின்னர் ஜனபதாக்கள் ஆக்கப்படுகின்றன, பின்னர் மன்னராட்சி, நிலப்பிரபுத்துவம், தொழிற்முறைப் பொருளாதாரம். இதற்கிடையில் குலக்குழுக்களிடையே வளங்களின் பொருட்டு போட்டி மனப்பான்மையும், மோதல்களும் தோற்றுவிக்கப்படுகின்றன. இம்மோதல்களை எப்படி ஏற்படுத்துவது என்று சொல்லிக்கொடுப்பதுதான் ‘அர்த்த சாஸ்திரம்’ (உலகாயதம்). ஒரு பெண்ணை அனுப்பியாவது ஒற்றுமையாக இருக்கும் குலங்களைப் பிரித்துவிடுவது என்பதுதான் சாணக்கியத் தந்திரம்.  இச்சூரையாடல்களை செவ்வனே செய்வதற்கான ஒரு உத்தியே வர்கத்தை சாதீயமாக மாற்றிய மநுவாதம்.  மன்னராட்சி முறையில் ஒரு குறிப்பிட்ட குலமே (சத்ரியக் குலம் என்று சொல்லப்படும் ஒன்று) நிலைத்திருக்க மன்னர்களுக்கு ஓர் அதிகார வரைவு தேவைப்பட்டது, உழைப்பை செலுத்தாமல் யாகங்கள், பூசைகள் செய்து (அதுவும் மன்னரின் நலனுக்காக) பிழைத்து வந்த பிரிவினர் நில மானியங்களைப் பெற்று வாழ்ந்து வந்தது. அந்நிலங்கள் பூர்வக்குடிகளிடமிருந்து கைப்பற்றப்பட்டவை.  உழைக்கும் மக்களின் நிலமது.

o        இதற்கு கடுமையான எதிர்புகள் நிலவி வந்த சூழலில், சத்ரிய மன்னரும், மநு என்கிற பார்ப்பணனும் (வேதம் ஓதுபவர்கள்) இணைந்து உருவாகியதே மநு தர்மம். அதுவே பிறப்பின் அடிப்படையில் ஒருவர் உயர்ந்தவர், தாழ்ந்தவர் எனும் வாதம். அப்படி அப்பிரிவினர் உயர்ந்தவர் என்று சொல்வதற்காக ப்ரம்மனின் தலையிலிருந்து தோன்றியவர் ப்ராமாணன் என்று உயர் அந்தஸ்த்தை நிறுவியது. சத்திரியர்களின் (மன்னர்கள், காவாலாளிகள், வீரர்கள்) இவர்களின் உதவி, மானியம் பார்பனர்களுக்குத் தேவையாகையால் அவர்களுக்கு ப்ரம்மனின் இதயத்தில் இடம், வணிகர்களின் ஆதரவும் அவர்களுக்குத் தேவை என்பதால் தொடையில் அவர்களுக்கு இடம். ஒவ்வொரு பிரிவினருக்கும் அவர்களுக்கு கீழ் ஓர் அடிமை தேவைப்படுகிறான் எனும் உளவியல் அறிந்து வைத்திருந்த மநு பார்ப்பணன், இதர தொழில் செய்து வந்தவனுக்கு சூத்திரன் எனும் அடிப்படையில் காலில் கருணையோடு இடம் கொடுத்தான். இவர்கள் யாரும் செய்ய விரும்பாத தொழில்கள், ஆனால் சமூக ‘சுத்தத்திற்கு’ மிகவும் அவசியமான தொழிலக்ளை செய்து வந்த பிரிவினரை (பிணம் எரித்தல், கழிவு நீர் சுத்த்கரிப்பு, முடி திருத்துதல், சலைவை தொழில் என்று சுத்தம் சம்பந்தமான தொழில்களைச் செய்தவர்களை) பஞ்சமர் என்று சொல்லி புண்ணியவான் ப்ரம்மனின் உடலில் அவர்களுக்கு எந்த இடமும் கொடுக்காமல், அவர்களை ஈனர்களாக நிறுவினான்.

// சூத்திர வர்ணத்தவரிடம் தனிப்பட்ட எந்த விஷேச குணமும் இருக்காது. பிராமணர்களுக்கும், க்ஷத்திரியர்களுக்கும், வைசியர்களுக்கும் உதவி புரிவது இவர்கள் தொழில்.//

நண்பரே மிகவும் வருத்தமளிக்ககூடிய, மனிதத்தன்மையற்ற சொற்கள் இவை..விஷேச குணம் என்று எதுவும் இருக்கத்தேவையேயில்லை. ’விஷேச குணம், தூய குணம், நல்லது, கெட்டது’ it’s a relative term.  இக்குணங்களை வரையருக்கும் தகுதியும், உரிமையும் எப்படி பார்ப்பனக் குலத்திற்கு மட்டும் கிட்டியது, அவர்களின் ‘தூய ஆத்மாவைப்’ பரிசோதித்து பார்த்து எவர் சான்றிதழ் வழங்கினர்.

//பிரமணன் என்பவனிடம் அடக்கம், தவம், பொறுமை, நூலறிவு, தெய்வபக்தி போன்ற குணங்கள் மிகுதியாய் இருக்கும்.// - மனிதனாக பிறந்தவருக்கு மேற்சொன்ன குணங்கள் இருக்க வேண்டும் என்று நிறுவியது யார்? அந்த அதிகாரம் அவர்களுக்கு எப்படி கிட்டியது? எதற்காக தெய்வபக்தி கொண்டவன் மதிக்கப்படவேண்டும்? தெய்வபக்தி கொண்ட எவரும் ஊழல் செய்வதில்லையா? வன்புணர்ச்சியில் ஈடுபடுவதில்லையா? கோவில்களில் நடப்பது என்ன? பத்மநாப சாமி கோவிலில் நடப்பது என்ன? மேன்மை குணம் கொண்ட ப்ராமணர்கள் (அவர்களோடு கைகோர்த்த ஆதிக்க சாதியினரில் சிலர்) தானே அத்தகைய கொள்ளைகளில் ஈடுபடுகின்ற்னர்.

வர்ணம் என்பது சமஸ்கிருத பெயர், சாதி என்பது தமிழ்ப் பெயர் அவ்வளவுதான், சாதியை நிறுவியது பார்ப்பனியமே....தொழில்முறை பிரிவுகளுக்கான அடையாளப் பெயர்களை சாதீயப் பெயர்களாக மாற்றியது அவர்களின் கைங்கரியமே. //யார் வேண்டுமானாலும் ப்ராமணன் ஆகலாம் உண்மைதான்// அதையும் ரொமிலா தாப்பர் குறிப்பிடுகிறார், ஆனால் அதற்கு நிறைய பணம் கொடுக்க வேண்டும் அப்படித்தான் சில சத்ரிய மன்னர்கள் பார்ப்பன குல அரசர்களானார்கள், சில வணிகர்கள் அத்தகைய தகுதிகளை, சான்றிதழ்களைப் பெற்றனர். பார்ப்பனிய பகுப்பான ‘பற, பள்ள, பஞ்சம, புலைய, வண்ணான்’ சாதிகள் அச்சான்றிதழைப் பெற முடியாது ஏன் தெரியுமா, அவர்கள் செய்து வந்த ‘சுத்திகரிக்கும்’ தொழிலை இப்பார்ப்பன சமுதாயம் செய்யாது, அப்படி அவர்கள் சாதி மாறிவிட்டால், அடிமைகளாக எவர் கிடைப்பர்? இதையெல்லாம் நியாயப்படுத்துவதே ‘இந்துத்துவம்’, அதை அம்மக்களே விரும்பி ஏற்றுக்கொள்ளும் வகையில் செய்வதற்கே பாவ, புண்ணிய கதையாடல்கள், வேதம், உபநிடதம், ஆகமம், சுக்தம், சாங்கியம், அத்வைதம், சாக்தம், இராமாயணம், மகாபாரதம் etc., etc., அசுரர் என்று இந்துதுவம் குறிப்பிடுவது பூர்வக்குடிகளை. this is called a deconstruction study.. இத்தகைய கட்டுடைப்புகள் அவசியம். நீங்கள் உங்கள் கடவுளரையும், மதத்தையும், புராணங்களையும், இதிகாசங்களையும் நம்புவது போல் நாங்கள் ஏன் அதை மறுக்கக்கூடாது.

o    //க்ஷத்திரியர்களுக்கும், வைசியர்களுக்கும் உதவி புரிவது இவர்கள் தொழில். // - இதை சொல்ல ப்ராமணன் யார்/ மநு யார்/ வேதம் ஓர் மனிதனால் தானே தொகுக்கப்பட்டது, உங்கள் விளக்கத்தின் படி வியாசர் (* ஒரு மீனவ பெண்மணிக்கு பிறந்த வியாசர் தான் புனிதமான வேதத்தை தொகுத்தவர். * மீனவ பெண்ணுக்கு பிறந்தார் என்பதற்காக வியாசரால் தொகுக்கப்பட்ட வேதத்தை யாரும் தீட்டு என்று கூறுவதில்லை. *). வியாசர் ’இருபிறப்பாளன்’ என்பதற்கு ஏதேனும் ஆதாரம் உள்ளதா. வியாசர் அப்படி கலப்பில் பிறந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக ஒட்டுமொத்த சமுதாயமும் அவரின் போதனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சட்டம் ஏதாவது இருக்கிறதா...வியாசர் மட்டுமல்ல தோழரே ‘மாருதி’ அதாவது அனுமான் கூட ஓர் பழங்குடி பெண்ணுக்கும் (அஞ்சனை) ஓர் பார்ப்பன அரசனான மாருத்துக்கும் பிறந்தவர்தான், அதனால் தான் அவர் மாருதி அந்த இரகசியம் தெரிந்தால் அவரைக் கடவுள் ஆக்கமுடியாது என்றுதான் அவர் சூரியனுக்குப் பிறந்தார் என்று கதை கட்டிவிட்டார்கள். (சூரியனின் கதிர்கள் எப்படி ஒரு பிள்ளைப் பேற்றக் கொடுக்கும் என்ற குறைந்தபட்ச அறிவாவது வேண்டாமா, குறியீடு என்று சொல்லி மழுப்ப வேண்டாம்)  இராமன் யார், அகத்தியன், வருணன், நாரதர் இன்னும் இதர ரிஷிகள் யார் எனும் வரலாற்றுத் தகவல்கள் அடங்கிய புத்தகம் என்னிடமும் இருக்கிறது, ஆனால் அது சொல்லும் கதை வேறாக இருக்கிறது, இதில் முரண் நகை என்னவென்றால் அக்கதைகளும் ஓர் பார்ப்பனக் குலத்தை சேர்ந்தவர் எழுதியிருப்பதுதான்.

யாரும் ப்ராமணன் ஆகலாம் என்று ஏதோ ப்ராமணன் என்பதை உயர் தகுதியாக கருதும் பிரிவினைவாத அரசியல் எங்களுக்கு உதவாது நண்பரே…ப்ராமணன் உயர்வானவன் என்றால் பாப்பாத்தி…..??? அவளும் சூத்திரனுக்கு சமம் என்கிறார் மநு…இழிபிறப்பு…சூத்திரர்களைப்போல் ப்ராமணர்களுக்கு சேவை செய்து, அடுத்த பிறப்பில் ‘ஆணாக’ பிறந்து சொர்கத்தை அடையலாம் என்கிறார்…என்னே சமத்துவம்…என்னே கருணை…


o    //தேவைப்பட்டால், வேதத்தில் இருந்து மேலும் பல கருத்துக்களை கூற முடியும். இது மட்டுமல்ல, நாயன்மார்களில் மனவர் ஒருவரும் இருந்துள்ளார், கண்ணப்பர் என்ற வேடரும் வருகிறார். ராமாணுஜர், ராகவேந்தர், ஆதிசங்கரர், விவேகானந்தர் போன்ற பல மகான்களும் சாதியை ஏற்கவில்லை என்பது குறிப்பிடதக்கது. //
o     
o    நீங்கள் சொல்லியுள்ளவர்களில் ராமானுஜம் சற்று விதிவிலக்கு, ஆனால் மேற்சொன்ன அணைவரும் இந்துத்துவத்தின் ப்ரம்மம், ஆண்மா போன்ற கருத்துமுதல்வாதத்தை முன்வைத்தவர்களே. அன்பே சிவம் என்பதில் உள்ள அரசியல் மிகக் கேவலமானது….ஏன் அன்பு சிவமாக இருக்க வேண்டும்? ஏன் வைணவர்களின் கடுவுளான விஷ்னுவமாக இருக்கக்கூடாது? ஏன் அது ஒரு தாய்க் கடவுளின் பெயராக இருக்கக்கூடாது? சைவக் கடவுளான சிவமாகத் தான் இருக்க வேண்டுமோ? ஒவ்வொரு தத்துவமும், கடவுளர் கதைகளும், அவதாரங்களும் சமூக எதிர்ப்பின் உக்கிரத்திலிருந்து தோற்றுவிக்கபப்ட்டவை, பென் கடவுள் வெறும் பெண்டாட்டியாக, சாபங்களை பெற்று கணவனிடம் சரணடைபவளாக ஒரு இடத்தில் இருப்பாள், மற்றொரு இடத்தில் அவள் மஹிஷாசுர மர்தினியாக மாற்றப்படுவாள், பெண்களை ஏமாற்ற இது ஒரு யுக்தி…சரபேஷ்வரர் என்று ஓர் கடவுள் இருக்கிறார்…அது வைணவ நரசிம்ம அவதாரத்தை அவமதிக்கும் விதமாக சைவர்களால் தோற்றுவிக்கப்பட்ட கடவுள்…நரசிம்மரை தணிய வைக்க சிவனன்றி வேறில்லை என்று சொல்லும் கதை…அதற்கு இறக்கை கொடுத்து உதவுவது ப்ரத்யங்கரா தேவி எனும் பெண் கடவுள்..தேவி யார்? சிவனின் மனைவி? ஏன்
o    லக்‌ஷ்மிக்கு அத்தகைய வீரியம் இல்லை?
o     
  • ஒவ்வொன்றாக கட்டுடைக்கலாம் நண்பரே…போய்க்கொண்டேயிருக்கும்..
எப்படி கடவுள் புனைவுகளில் ப்ராமணர்கள், அவர்களுக்கு இரையான ஆதிக்க சாதியினர் சில சலுகைகளை வழங்கினார்களோ, உட்செறித்திக்கொண்டார்களோ, ‘உதவிகள்’ செய்தார்களோ அதே போன்றதொரு முகமூடிதான் RSS செய்யும் ‘சேவை’கள். அப்படி அவர்கள் சில நல்லதுகள் செய்தாலும் விமர்சனத்திற்க்கப்பார்பட்டவர் எவறும் இருக்க முடியாது...எல்லாம் சமூக மேம்பாட்டிற்குத்தானே???!!
o     
o    உங்கள் வாதப்படி இந்து மதம் ப்ராமணர்களின் மதமல்ல…மிகச் சரி..ஆனால் அவர்களால் வடிவமைக்கபப்ட்ட, ஒருங்கிணைக்கப்பட்ட மனிதத்தன்மையற்ற கூறுகளை கொண்ட, கேள்வியின்றி அப்படியே ஏற்றுக்கொள்ளச் சொல்லும் ஒரு மதம்…இது இந்து மதம் ஒன்றிற்கான குணம் மட்டுமன்று, ஒவ்வொரு ஆணாதிக்க மதமும் இதைத்தான் செய்கிறது…கிறத்தவர்களில் எத்தனை பிரிவு – ஒவ்வொருவரும் மற்ற பிரிவினிரை இகழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இஸ்லாத்தில் நடக்கும் சன்னி, ஷியா பிரிவு சண்டைகள், இந்தியச் சூழலில் அம்மதங்களிலும் இருக்கும் மநுவாதம் ஆகியவற்றைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

அன்பை, சுய ஒழுக்கத்தை, அறத்தை போதிக்கும் பௌத்தம் எதனால் இம்மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்டது, பின்னர் ஏன் அவர் பத்து அவதாரங்களில் ஒருவராக்கப்பட்டார்.  தயவு செய்து அவர் இம்மண்ணின் இந்துத்துவ தத்துவங்களிலிருந்துதான் எல்லாவற்றையும் பேசினார் என்று சொல்லி புத்தரை அவமதிக்காதீர்கள். எதனால் சமணர்கள் கழுவேற்றப்பட்டனர்? எதனால் ‘இப்புண்ணிய்’ பூமியில் இருப்பவர்கள் மதம் மாறினார்கள்? ’இந்து’ன்னு வெள்ளைக்காரன் பேர் வச்சானோ நாம தப்பிச்சோம் என்று பெரியவா சொன்னதைப் படித்திருக்கிறீர்களா…அந்த காஞ்சி மடப் பெரியவாளை, அம்மடத்தவரை மற்ற அதீனங்கள் கிட்ட சேர்ப்பதில்லை எனும் உட்பூசல் உங்களுக்குத் தெரியுமா…(பார்க்க: இந்து மதம் எங்கே போகிறது, மற்றும் நா.வானமாலை அவர்களின் மதம், கருத்தியல் பற்றியக் கட்டுரைகள்)

மதத்தின் செய்லபாடு என்ன? ஆண்மீகம் என்ற பெயரில் வெவ்வேறு கருத்தியல்கள் இறைவன் என்றொருவனை போதித்து அப்பெயரின் கீழ்த்தரமான மத அரசியலையும், சுரண்டல்களையும், அதிகாரத்தை ஏவுவதையும் தவிர வேறெதற்குப் பயன்படுகிறது.  பாவம் பலகீனமானவர்களுக்குப் பற்றிக் கொள்ள ஏதாவது தேவைப்படுகிறது, தன்னம்பிக்கையற்றவர்களாய் மனிதர்களை மாற்றுவதும் அவர்களைப் பயன்படுத்திக்கொள்வதையும் தான் மதங்கள் செய்கின்றன..நம் சூழலில் அது இந்துத்துவம் எனும் பெயரில் ஒவ்வொருவருக்கும் ஏற்ற வடிவங்களில் (customized for each person) கோப்பையில் ஊற்றிக் கொடுக்கப்படுகிறது…பருகுபவருக்கு ஒரு போதை கிடைக்கிறது, (மீண்டும் நாம் கார்ல் மார்க்சிடம் தான் வரவேண்டியுள்ளது – மதம் ஒரு அபினி..)ஆனால் விளைவுகள் தெரிவதில்லை, அதை தெரிந்து கொள்ள முனைவதுமில்லை…அப்படி முனைந்து முன்னெடுப்பவர்களை வன்முறையால் ஒடுக்கும் மிரட்டல்கள்…என்ன ஒரு ஜனநாயகப் பண்பு மதவாதிகளிடம்…

கடவுள் மறுப்பை நாங்கள் மக்களின் நலனை முன் வைத்துப் பேசுகிறோம், மதவாதமானது ‘நாட்டு நலன்’ என்கிற பெயரில் நிலத்தை தக்கவைத்துக்கொள்ளும் நலனை பேசுகிறது…எண்ணிக்கை குறைந்துபோனால், ‘மவுசு’ குறைந்து போனால் மற்ற மதத்தின் முன் அவமானம் எனும் ஈகோவே அதற்கு அடிநாதம்…மதவாதங்களுக்குள் நடக்கும் போட்டிக்கு அப்பாவி மக்கள் பலியாகின்றனர்.

சக மாநில மனிதர்களுக்கு தண்ணீர் தரமறுக்கும் நிலையில் ‘தேசம்’, ‘நாட்டு பற்று’ எனும் கோஷங்கள் யாருக்காக? இவ்வளங்களை சுமூகமாகப் பிரித்துக் கொடுக்க கடவுள் வர மறுப்பது ஏன்? புண்ணியம் செய்தவர் ஒருவர் கூட இல்லையா இப்பூமியில்? எல்லோரும் பாவிகள் என்றால் ’பாவத்தை’ செய்விப்பது யார்? புண்ணியத்திற்கு மகுடம் சூடிக்கொள்ளும் அவரே பாவங்களுக்கும் பொறுப்பானவர் (குறைந்த பட்சம் யேசுவாது தான் பாவிகளுக்காக தோன்றியவர் என்றார், அவரும் கடவுளாக்கப்பட்டு, அதுவும் ஓர் மதமாகி நிற்கிறது) படைப்பை விருப்பமாக செய்யும் கடவுள் தான் வணங்கப்படவேண்டும் என்று நிணைப்பது கடவுள்தன்மையல்ல அது சுயமோகம் (Narcism)…அப்படி அவர் கேட்கவிலை..ஒழுக்க போதனைகளுக்காக மனிதர்கள் செய்த ஏற்பாடு என்றால் அம்மனிதர்களின் கதையாடல்களை நாங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டுமென்றோ, அடிபணிய வேண்டும் என்றோ அவசியம் இல்லை…

ஒழுக்கத்தை போதிக்கும் போதனைகள் எங்களிடமும் இருக்கிறது..அது சமத்துவ சிந்தனை… நீங்களும் மக்கள் நலனை, நாட்டு நலனை கருத்தில் கொண்டுதான் செயல்படுகிறீர்கள் என்று நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்வது போல் எங்களது நாட்டு நலனுக்கான வழிமுறைகளையும் எங்கள் வழியிலேயே விட்டுவிடலாமே எதற்காக எங்களை ஒடுக்க வேண்டும். மதவாதிகளின் பின்னால் தான் நாங்கள் செயல்படவேண்டும் என்ற வற்புறுத்தல். உங்களை பக்திமானாக, ஆண்மீகவாதியாக படைத்து (உங்களையென்றால் மதவாதிகளை) மக்கள் பணியாற்ற கடவுள் தான் அனுப்பிவைத்தார் என்றால், கடவுளை நம்பும் நீங்கள் எங்களையும் அப்பணிக்காக அவர்தான் மாற்று வழிமுறைகளை சொல்லிக் கொடுத்து அனுப்பி வைத்தார் என்று ஏற்றுக்கொள்ளலாமே. அதுதான் கடினம், கடவுள்களே அரக்கர்களை சம்ஹாரம் செய்வதாக கதைப் புனைந்தவர்களுக்கு மிக மிக கடினம்…அரக்கர்கள் என்பவர் மன்னராட்சி, ப்ராமண, அதிகார அமைப்பிற்கு எதிரிகள் என்பதை நாங்கள் கட்டுடைத்து கண்டுவிட்டோம்..கடவுளர்கள் பேச்சு வார்த்தையில் ஈடுபடவே மாட்டர்கள் போலும். அவர்களே பாவம் செய்விக்க எங்களைப் பகடைகளாக பயன்படுத்துவர், பின்னர் அவரின் வீர் சாகசங்களுக்காக எங்களை சம்ஹாரம் செய்வர்.  இக்கொலைகளை நியாயப்படுத்தும் மதச் சட்டம், பட்டினியால், சமூக அவலங்களால் உயிரை மாய்த்துக் கொள்வதைக் குற்றம் என்கிறது, பிள்ளைகளைக் கொன்று அவலங்களிலிருந்து விடுதலைப் பெற நிணைக்கும் தாயைக் குற்றவாளி என்கிறது…எல்லாவற்றையும் கடவுள் தான் செய்வாரா…அவர் கையில் பொம்மலாட்ட பொம்மைகளாக இருப்பதை விட, சுயமரியாதையோடு எதிர்த்து நின்று மடிவது மேல்…

எங்களைப் போன்ற அரக்கர்கள் இருந்தால் தானே கடவுளுக்கு வேலை இருக்கிறது.  உங்கள் புராணங்களில் இருப்பது போல் அவரே நேரில் வந்து சம்ஹாரம் செய்யட்டுமே, இடையில் ‘தரகர்கள்’ எதற்கு?

தேசியம் என்றப் பெயரில் நாங்கள் பிரிவினைவாதம் பேசுகிறோம் என்கிறீர்கள், நாட்டைத் துண்டாடுகிறோம் என்கிறீர்கள். வெள்ளைக்காரன் வந்து ஒருங்கிணைக்கும் வரை தனித்தனி சியங்களாகத்தானே இருந்தது, நாங்கள் அம்முறைக்கே திரும்பவேண்டும் என்கிறோ. ஒன்றாக இருப்பதால் மட்டும் அண்டை மாநிலங்கள் தண்ணீர் தந்துவிடப்போகிறதா, வளங்களை விட்டுத் தரபோகிறதா…ஒவ்வொரு மாநிலத்திற்கும் தன் வளம், தன் நலன் பிரதானம்..ஆட்சியில் இருப்பவர்களுக்கு இறையாண்மை என்று எதுவும் கிடையாதா? கடவுள் எனும் அதிகார மையத்தை ஏற்றுக்கொள்ளும் எவராலும், சமூக அநீதிகளை எதிர்ப்பதில் உண்மையாக இருக்க முடியாது, ஒரு கட்டத்தில் அவர்கள் அக்கடவுளர்களின் மதங்களுக்கு, அதன் பிரிவினைவாத  கருத்துக்களுக்கு சார்ப்பாக சரியவே நேரும்…அப்போது மக்கள் இரண்டாம் பட்சம் ஆகிவிடுவர்.

எங்களால் அது முடியாது….

உங்கள் பங்கெடுப்புக்கும், பொறுமைக்கும் நன்றி…என்னிடம் உரையாடிப் பயனில்லை என்று நீங்கள் கணித்திருந்தால் உரையாடலை இத்தோடு முடித்துக்கொள்ளலாம்…