Jan 16, 2011

ஆணின் பெண்: உடை அரசியல்.




நவீனம் அதி நவீனமாகி ஊதிப் பெருத்து மனிதனின் வாழ்க்கை முறைகளை தன் இரக்கமற்ற பொருளாதார வாய்களால் மென்று தின்று கொண்டிருக்கின்றன. வாழ்க்கை முறை மாற்றம் என்பது நடை, உடை, உண்ணும் உணவு வரை இன்னும் ஆழச்சொன்னால் மனிதர்களது கனவுவரை பெரும் தாக்கத்தைப் பாய்ச்சியிருக்கிறது. அதன் வெற்றியை பன்னாட்டு நிறுவனங்களின் பெருக்கம் உறுதி செய்கிறது. சமூகம் என்பது ஆணின் வெளி. அதில் பெண் பார்வையாளர்களாய் இருப்பதற்கும் தகுதியற்றவர்கள். ஆண் வெளிக்காட்டும் பாவனைகளில் எவ்வளவு நவீனங்கள் பெருகியிருந்தாலும் பெண் பற்றிய ஆணின் பார்வை ஒரு போதும் மாறுவதில்லை. ஆணுக்கு எப்போதும் பாலுறவுக்கான ஒர் பொருளே பெண். அதைத்தான் அன்றைய மனுதர்ம சாஸ்திரம் முதல் இன்றைய ஊடகம் வரை முன் மொழிகிறது. ஆண் இவ்விசயத்தில் பழமைவாதியாகவே இருக்கிறான்.

நவீனம், உடைகள் மூலம் சமூகத்தில் ஏற்றிவைக்கும் பெண் பற்றிய கருத்தாக்கங்களை பகுப்பாய்வுக்கு உட்படுத்த வேண்டும். உடை ஒன்றே நம் உடலுக்கு எப்போதும் மிக நெருக்கமான ஒன்றாக திகழ்கிறது. அது அல்லாதவரை பிச்சைக்காரர் என்றும், மன நிலை பிறழ்ன்றவர் என்றும் அடையாளம் காணப்படுகிறது. ( ஆள் பாதி ஆடை பாதி என்ற பழமொழியை நினைவில் கொள்க) உடலை மறைக்கவும், பாதுகாக்கவும், சுற்றுச்சூழலின் தாக்கத்திலிருந்து காக்கவும் உடை அவசியமாகிறது. ஆனால் இப்பயன்களையும், கண்ணோட்டங்களையும் தாண்டி உடை என்பது ஓர் மொழியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அது உடல் பற்றிய மொழியாகவும், ஒருவரது சிந்தனை, தேர்வு, சமுதாய வெளிப்பாடு மற்றும் மதம், ஜாதி ஆகியவற்றை வெளிப்படுத்தும் அங்கிகாரம், மற்றும் மொழியாகவும் திகழ்கிறது. (புத்தரும், காந்தியும் தங்கள் உடையை ஒரு ஆயுதமாகக் கூடப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்திய ராணுவ வீரர்களின் வன்புணர்ச்சிக்கெதிராக மணிப்பூர் பெண்கள் நிர்வாணத்தையும் ஆயுதமாக பயன்படுத்தியிருப்பது இங்கு நினைவில் வருவது தவிர்க்கவியலாதது)

உடைகளுக்கு இவ்வளவு பின்புலமும் அரசியலும் இருக்கையில் பெண்ணுடைகள் மட்டும் ஆணுக்கு கிளர்ச்சியைத் தந்தே ஆகவேண்டும் என்ற ஆண்களது பார்வையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆண்களாகிய முதலாளிகள் பெண்கள் மேல் செலுத்தும் உடைத்திணிப்பை நாம் அரசியலாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆண் பெண் உடலீர்ப்பு இயற்கையால் தீர்மானிக்கப்பட்டது. உடல் என்பது உயிருள்ள, உணர்ச்சிகளால் தூண்டப்பெறும் சாதனமாய் இருப்பதால்,. பெண்களுக்கான உடை வடிவமைப்பு குறித்தும் அதற்கு பின்னால் செயல்படும் ஆணாதிக்க (சமூக) அரசியல் குறித்தும் நோக்க வேண்டும். பெண்களை அடிமையாக்கி வைத்திருப்பதில் ஆடை, அலங்கார, அழகுணர்ச்சி கருத்தாக்கங்களே பெரும் பங்கு வகிக்கின்றன.   “பெண்கள் என்ன நகை மாட்டும் ஸ்டாண்டா” என்று பெரியார் கேட்கிறார்.

முதலாளித்துவ நுகர்வு கலாச்சாரத்தின் கீழ் நவ நாகரீகம், பெண் சமூகவயப்படுதல் மற்றும் பெண் சுதந்திரம், முற்போக்கு சிந்தனை, இன்னபிற.... பெயரால் பெண்கள் ஆண்களின் இச்சைகளுக்கு காட்சிப் பொருளாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. அதேபோல் திரைப்படங்கள், விளம்பரங்களைப் பார்த்து பெண்கள் “நவீன பாணி” (ஃபேஷன்) பித்து பிடித்தலையுமாறு பல்வேறு புனைவுகள் நடைபெறுகின்றன. பெண்ணுக்கு முன் நிறுத்தப்படும் சுதந்திரமானது ஆண் அவளுக்கு தர நினைக்கும் ( தன் பயன்பாட்டுக்கு உதவும் வகையில் ) சுதந்திரம்தானேயொழிய அது பெண்ணுக்குரிய சுதந்திரம் ஆகாது.

நாகரீகமானது அதிகாரத்தின் கட்டமைப்பு. ஒவ்வொரு சமூகத்தையும் ஆளும் கருத்துக்கள் ஆள்வோரின் கருத்துக்களே என்கிற மார்க்சின் கூற்றை இங்கு நான் நினைவு கூறுகிறேன். அடிமைத்தனத்தின் வடிவம் தான் மாறுகிறது, அடிமைத்தனம் அப்படியே இருக்கிறது. நிலவும் சூழலுக்கேற்ப பெண் உரிமைக் கோட்பாடுகளை ஆராய்தல் காலத்தின் அவசியம். பெண்கள் தங்களது உடல், உணர்வு சுதந்திரம், அதற்கான தேவைகளை சிந்திக்கத் தவறும் நேரத்தில் ஆண்கள் அப்பொறுப்பை எடுத்துக்கொள்கிறார்கள். ஒடுக்கப்பட்ட்வர்களின் சுதந்திர நோக்கத்தை, அரசியல் பார்வையை ஒடுக்குகிறவர்கள் எழுத முடியாது. முடியுமாயின் அது முற்றும் திரிபாகவே முடியும். பெண்ணானவள் தான் செல்லும் வழி தன் தேர்வா, அல்லது திணிக்கப்பட்ட தேர்வா, அறியாமையால் பின்பற்றும் தேர்வா, சுயநலத் தேர்வா என்று பகுத்தாராய்வது தத்தமது சிந்தனைகளை வேவு பார்க்க உதவியாக இருக்கும்.

ஆதி காலத்தில் இருப்பியல் சூழலினால், பிறகு குழு வாழ்க்கை முறையினால், பின்னர் வணிக பரிமாற்றங்களினால் உடையின் வகைகள் பற்றிய தேர்வு (choice) கிட்டியது. மற்றொரு வகையில் புராணங்கள், புனிதப் புத்தகங்கள் வாயிலாகவும், பண்டைய சிற்பம், ஓவியங்கள் வாயிலாகவும் உடை பற்றிய அறிதல் கிடைக்கிறது. விவசாய பொருளாதாரத்திலிருந்து, தொழில் பொருளாதாரத்திற்கு மாறுதல் நடைபெறுகையில் உடை வகைகளில் பெரும் மாறுதல் ஏற்படுகின்றன. தொழில் சார்ந்து உடை வடிவமைக்கப்பட்டாலும், அந்நிறுவனங்களில் அதிகார படிநிலைகள் நிர்ணயிக்கும் பொருளாதார சூழல் உடைகளிலும் ஏற்றத் தாழ்வுகளை நிறுவியது. உலகமயமாக்கல் மூலம் அந்நிய பொருளாதார படையெடுப்பு நாகரீகத்தின் பெயரால் உடை என்பதை பயன்பாட்டுப் பொருட்குறிப்பிலிருந்து மாற்றி சமுதாய படிநிலை கருத்தாக்க குறியீடாக மாற்றிப்போட்டது. அதோடு நிறுத்திக்கொள்ளாமல் உடை என்பது அறிவு நிலையின் வெளிப்பாடாக, சுதந்திர சிந்தனையின் (கட்டமைக்கப்பட்ட) வெளிப்பாடாகவும் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. (உடை என்று நாம் பேசும்போது ஆடை, அணிகலன் இதர அலங்காரப் பொருட்களையும் சேர்த்துக்கொள்வது அவசியம்.)

இது எவ்வாறு நடக்கிறது? ஒவ்வொரு தனி நபரிடமும் உடை வடிமைப்பாளர் ஒருவர் வந்து கற்றுக்கொடுப்பதில்லை. மாறாக கூட்டுத் தகவல் தொடர்பு (group / mass communication) மூலம் நடக்கிறது. இது நாமே அறியா வண்ணம் நிகழ்கிறது. இது ஒரு மூளை மழுங்கடிக்கும் செயல். (Brain Washing). இச்செயலுக்கு முழுவதும் உறுதுணையாக இருப்பது ஊடகங்கள் (சினிமா, தொலைக்காட்சி, பத்திரிகைகள், காலாந்திர இதழ்கள், (periodical magazines), விளம்பரங்கள், இவர்கள் முன்னிறுத்தும் ஊடக மனிதர்கள் (media personalities) ).

ஒரு காலக்கட்டத்தில் புராணங்களிலிருந்தும், பக்தி இலக்கியங்களிலிருந்தும், கோயில் சிற்ப ஓவியங்களிலிருந்தும் கதாப்பத்திரங்களை மாதிரிகளாகக் கொண்டு அதில் குறிப்பிடப்படும் குணங்களுக்கும், வாழ்வியலில் ஒருவர் செயல்படும் கதாப்பத்திரத்திற்கும் (role) தக்கவாறு ஆடைகள் வடிவம் பற்றிய தேர்வு கிடைக்கப்பெற்றது (உ.ம் அரச / அரசியர் உடை, குடியானவன் உடை, திருடனின் உடை, ஒடுக்கப்பட்ட மக்களின் உடை, ஆண் உடை, பெண் உடை என்று பல. கண்ணகி, சீதை, தலைவி அணிந்த உடை, ஆடல் மகளிர், பரத்தையர் ஆகியோர் அணியும் உடை). உடை பற்றிய விளக்கங்கள் நமக்கு அதுபோன்ற உடைகளை அணிபவர் பற்றிய குணச்சித்திரத்தைத் தருகிறது. அச்சித்திரம் காரணமாக அன்றாட வாழ்வில் நம் சார்பை பிரதிபலிக்க உடைகளை தேர்ந்தெடுக்கும் போக்கு ஏற்படுகிறது. அதேபோல் அங்க லட்சணங்கள் பற்றிய வருணனைகள். வில்லொத்த புருவம், மீன் போன்ற கண்கள் கொண்டவளே சிறந்த அழகி என வருணிக்கப்பட்ட பெண்களைப் பின்பற்றி அழகு பற்றிய சிந்தனைகளை வளர்த்துக்கொண்டு அது போன்று அலங்காரம் செய்து கொள்வது நடக்கிறது. இதன் உச்சக்கட்ட வருணனை பெண் தெய்வங்கள் பற்றியது. நீண்ட கூந்தல், வளைந்த இடைகள், பெரிய பொட்டு, அணிகலன்கள் என்று தீட்டி இவைகளைக் கொண்டவளே தெய்வீகத் தன்மை நிறைந்தவள், பத்தினித் தன்மை நிறைந்தவள் என்று உள்வாங்கிக் கொண்டு அது போன்ற ஒப்பனைகளை செய்துக் கொள்வதும் உண்டு. இப்படி புத்தகங்கள் வாயிலாக கிடைத்த அறிதலின் அடுத்தக் கட்டமாக திரைப்படங்கள் உடைகளின் மூலமாய் அணிபவரின் குணாதியசங்களை சித்தரிக்கத் துவங்கின.

நடிகர்கள் அணியும் உடையானது சித்தரிக்கும் கதாப்பத்திரங்களின் குணம் பற்றியக் கருத்து மக்களைப் பற்றத் துவங்கியது. பெரும்பாலும், கற்பு நெறியில் உயர்த்தி சித்தரிக்கப்படும் நடுத்தர குடும்பக் கதாநாயகிகள் அணியும் புடவை, முக்கால் கை கொண்ட ரவிக்கை, நடு வகிடெடுத்து சீவி, புட்டம் வரை தொங்கும் கூந்தல், மஞ்சள் பூசிய முகம், பெரிய பொட்டு, கை நிறைய வளையல்கள், போன்றவை நடுத்தரக் குடும்பப் பெண்கள் தங்களுக்கன அடையாளங்களாய் மாற்றிக்கொண்டனர். பணக்காரப் பெண்ணாய், கற்றவளாய் வலம் வரும் கதாநாயகிக்கான அடையாளம் உடலைக் கவ்விப் பற்றிய சுடிதார், வடிவமைக்கப்பட்ட புடவை (designer saree) குதிகால் உயர செருப்பு, அரிதாரம் பூசிய முகம், நவ நாகரீக கைப்பை போன்றவை ஒரு அடையாளத்தை முன் மொழிந்தது. வெளிநாட்டுக்குச் சென்று வரும் கதாநாயகி அல்லது மெத்தப் படித்தவள் என்றால் குட்டைப்பாவாடை, விரித்த கூந்தலுடன் திரியும் திமிர் பிடித்தப் பெண். இப்படி பெண்களின் குணத்தை கற்பனைக்கேற்றவாறும், அவர்களின் எதிர்பார்புகளுக்கேற்றவாறும் ஆண் (ஆதிக்க) படைப்பாளிகள் அக்காலம் முதல் இக்காலம் வரை புனைந்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு பிறகு திரைப்படங்களும் அவை சித்தரிக்கும் குணங்களும் மக்கள் மனதை பெரிதும் ஆட்கொள்ளத் தொடங்கின. அதற்கு பெரிதும் உதாரணமாக நடிகர்கள் பெயரில் சந்தையில் உலவும் ஆடை அணிகலன்கள். கதாநாயகிகளின் பெயரால் தயாரிக்கப்பட்டு, திரைப்படங்களின் பெயராலும் தயாரிக்கப்பட்டு சந்தைக்கு வருகின்றன. அவற்றைத் தேடிப் போய் பெண்கள் வாங்குகிறார்கள். திரைப்படங்களில் அவற்றை அணிந்துக் கொண்டு வரும் பெண் மிகவும் அழகானவளாகவும், தேவதையாகவும், எல்லோரையும் கவர்பவளாகவும், உயர்வானவளாகவும் சித்தரிக்கப்படுகிறாள். அவற்றைப் பார்க்கும் பெண்களின் மனது அவற்றை அணிவதன் மூலம் தன்னையும் ஒரு கதாநாயகியாகக் கற்பனை செய்துக்கொண்டு மகிழ்கிறது. (இது ஆணுக்கும் பொருந்தும் என்று சொன்னாலும் அவனது ஆண் தன்மைதான் பெண்மையை வடிவமைக்கும்போது அவன் தன் தேர்வை மிக எளிதாக மாற்றிக்கொள்ளக்கூடும்.) பெண்ணுக்குரிய உடல் அளவு (size zero), அங்கங்களின் அளவுகளை குறைவின்றிக் காட்டும் இறுகப் பற்றும் உடைகள், அதற்கு பொருந்தும் இதர அணிகலன்கள், காலணி, கைப்பை என எல்லாவற்றையும் விளம்பரங்களும், திரைப்படங்களும்தான் கற்றுத் தருகின்றன. சரியாகச் சொல்வதென்றால் நாம் ‘நுகர்வுக் கலாச்சாரத்திற்கு மாறிப்போன உடல்கள்’ – ராமாநுஜம்.

திரைப்படங்களில் தாய், தங்கை கதாப்பாத்திரங்கள் அணியும் உடையும், கதாநாயகி அணியும் உடையும் எவ்வாறு இருக்கிறது? குறிப்பாக பாடல் காட்சிகளில் கதாநாயகி அணியும் உடை எத்தகையது? தாய், தங்கையான பெண்கள் மங்கலமான (அவர்களின் குறிப்பின்படி), முழுவதும் போர்த்திய உடை அணிபவர்களாக இருப்பார்கள். கதாநாயகியோ மார்புக்கோடு தெரியும் உடை, தொப்புள் காட்டும் உடை, குட்டைப் பாவாடை, குட்டைச் சட்டை, ஸ்லீவ்லெஸ் உடை என்று அணிந்துக் கொண்டு சுற்றி சுற்றி வருவார்கள். கதாநாயக ஆணின் பார்வையைக் கவரும் விதத்தில் வலம் வருவாள். அவளது நோக்கம் முழுதுமே கதாநாயகனான ஆணைக் கவர்வதும், அவனை மகிழ்சிக்குள்ளாக்குவதும் மட்டுமே. (அப்படிக் கவர்ந்தால்தான் அவள் கதாநாயகியாக முடியும் என்ற ஆணின் கட்டமைப்பு). இதற்கு எதிர்மறையாக கதாநாயகனது தங்கை கதாப்பாத்திரமானது குடும்பப் பாங்கான பெண்ணாக இருப்பாள், ஒழுக்கமான (கதாநாயக ஆணின் குறிப்பின்படி, எதிர்பார்ப்பின் படி) உடை அணிந்திருப்பாள். அவளை வேறு ஆண் உற்று நோக்கினால் அண்ணனாகிய கதாநாயகன் வெட்டிப் போடவும் தயங்கமாட்டான். ( இதிலிருந்து நாம் ஆணாதிக்க வரலாற்றை கூறு போடலாம்.) அதே கதாநாயகன் கதாநாயகியை உள்ளாடைக்கு நிகரான ஆடையை அணியவைத்து தானும் அவள் தொப்புளைச் சுற்றி நடனமாடிக்கொண்டிருப்பான்.

ஆண் பித்தாகித் திரியும் அக்கதாநாயகிகளை வாழ்வின் மாதிரிகளாக பாவித்து அவர்கள் அணிவது போன்று உடைகளைத் தேர்வு செய்யும் போக்கு இன்று அதிகமாக்க் காணப்படுகிறது. இன்று நடிகர்களுக்கு கிடைக்கும் புகழும், பணமும் வேறு எந்தத் துறையினருக்கும் கிடைப்பதில்லை. உயரிய, பயனுள்ள படைப்புகளை கொடுத்த எழுத்தாளர்கள், சமுதாய சீர்த்திருத்தவாதிகளின் பெயர்களை எவரும் அறிந்து வைத்திருப்பதில்லை, ஆனால் ஒரு திரைப்படத்தில் / தொலைக்காட்சி நாடகத்தில் ஒரே ஒரு காட்சியில் தலைக் காட்டிவிட்டுப் போகும் ஒரு நடிகரை எல்லோரும் அறிந்து வைத்திருப்பார்கள். நடிகர்களை ஊடகம் கொண்டாடும் விதமே இதற்குக் காரணம்.

கற்பு நெறி, ஒழுக்கம், சமுதாய அக்கறை பேசும் கதாப்பாத்திரங்களில் நடிக்கும் நடிகர்கள் அதற்கு முரணாக கதாநாயகியின் உடை விஷயத்தில் முற்போக்கு எண்ணம் கொண்டவராக இருப்பார். இது எதன் பொருட்டு? பெண் சுதந்திரமா? அப்படியென்றால் அவர் தாயும், தங்கையுமாய் நடிக்கும் பெண் பெண் இல்லையா? நிஜ வாழ்க்கையிலும் தங்களின் குடும்பப் பெண்களுக்கும் அந்த சுதந்தித்தைக் கற்றுத் தர வேண்டியதுதானே. திரைப்படங்களில் தாய்மைப் பற்றியும், பெண்ணின் பெருமைகளைப் பற்றியும் கண்களில் கருணையோடு பேசும் கதாநாயகர்கள் ஏன் முதலாளிகளின் பிடியில் சிக்கித் தவிக்கும் பெண்களுக்காக குரல் கொடுப்பதில்லை? பெண்களைக் கவர்சிப்பொருளாகக் காட்டுவதை எதிர்த்து தீர்மானங்கள் இயற்றுவதில்லை. கவர்ச்சி நடனங்கள் வேண்டாம் என்று மறுப்பதில்லை? மாட்டார்கள், அவர்களின் கதாநாயகத் தன்மை கெட்டுவிடும். அதற்கும் மேலான காரணம் மூலதனம்.

இதற்கடுத்து விளம்பரங்கள் இதில் பெண் சுதந்திரம் பற்றிய கருத்துக்கள் அனைத்துமே அவள் உடை சார்ந்தே இருக்கிறதே ஏன்? அல்லது ஆணுக்கு நிகராய் பெண்களும் ஊர் சுற்றலாம் என்று முன் வைக்கிறார்கள். இது தான் ஒட்டு மொத்தப் பெண்களுக்கான சுதந்திரம் என்று இவர்கள் தீர்மானிக்கிறார்கள். பெண்களுக்கான பொருளாய் விளம்பரப்படுத்தப் படுபவையெல்லாம் பெரும்பாலும் அழகு சாதனப் பொருட்கள். அவள் அந்த அழகுப் பொருட்களை பயன்படுத்தி அழகாய் மாறியவுடன் நடப்பது என்ன.. மாடலிங்கிற்கான வாய்ப்பு, நடிப்பதற்கான வாய்பு அவளைத் தேடிக்கொண்டு வரும். அல்லது பல ஆண்கள் அவளை ஆச்சரியத்துடன் வாய் பிளந்து பார்த்துக்கொண்டு பின்னால் ஓடுவார்கள்.

வீட்டு உபயோகப்பொருட்கள் என்றால் போர்த்திய உடையணிந்தப் பெண் சமைத்துப்போட்டு தன் கணவனைக் கவர்வது, மாமியாரைக் கைக்குள் போட்டுக்கொள்வது, உறவினர்களை திருப்திப்படுத்துவது. ஆணுக்கான பொருட்கள் என்றால் அவன் அதை உபயோகித்து அடைவது பெண் அல்லது பெண்கள். அதுவே அவனுக்கு சாதனை. ஆக இப்பொருட்கள் எதுவுமே தனக்கான பயன்பாட்டை விட, மற்றவரைக் கவர்வதற்கான ஒன்றாக விளம்பரப்படுத்தப்படுகிறது. அங்கிகாரம் ஒன்றே மனிதத் தேவையாக, அவஸ்தையாகக் கட்டமைப்பது முதலாளிகளே. அப்பொழுதுதான் அந்த அங்கிகாரத்தை தங்கள் பொருள் கொடுக்கும் என்று தங்கள் பொருகளை சந்தைப் படுத்த முடியும்.

பெரும்பாலும் அவற்றை எவ்வித எதிர் கேள்வியும் இல்லாமல் பொதுமூளையில் அழுத்தமாகப் பதியவைக்கிறார்கள்.. ஊடகக் கதாபத்திரங்கள் மூலம் உடல் மற்றும் உடை பற்றியக் கருத்துக்கள் அல்லாமல், சமுதாயப் படிநிலைகளையும் ஏற்றிவைக்கிறார்கள். உதாரணமாக கருமைத் தோலுடன் இருக்கும் ஒர் பெண் நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்தவளாக இருப்பாள், அல்லது வேலைக்காரியாக இருப்பாள். கருமை நிறத் தோலுக்கு கிரீம்களைப் பூசி வெண்சருமம் பெற்றதும் பணக்காரியாகி விடுவாள். இவற்றைப் பார்க்கும் ஒரு பெண் முதலில் தன் சரும நிறம் பற்றிய தாழ்வு மனப்பான்மையை வள்ர்த்துக்கொள்ளும் சாத்தியம் இருக்கின்றது. பின்பு பொருளாதார நிலைக் குறித்து அவமான உணர்வை வளர்த்துக்கொண்டு சமுதாயத்தில் தன் பணத்தகுதியை உயர்த்திக்கொள்ள எப்பாடுபட்டாவது அப்பொருட்களை வாங்கும் நெருக்கடியை ஏற்படுத்திவிடுகிறார்கள். அது தன் உடம்பாலும், அழகாலும் மட்டுமே முடியும் என்றும் கட்டமைத்துவிடுகிறார்கள் முதலாளிகள்.

நாம் எதற்காக அழகாய் இருக்கவேண்டும் என்று நினைக்கிறோம்? கவர்சியான உடை அணிகிறோம், உயர்த்திக்காட்டிக்கொள்ள முனைகிறோம்? மற்றவர்களின் அங்கிகாரத்திற்காகத் தானே, குறிப்பாக எதிர் பாலின கவனத்தைப் பெறவே. இது நேர்மையாக ஏற்றுக்கொள்ள கூசத்தான் செய்யும். சந்தேகியுங்கள். உடலைக் கொண்டாடவேண்டும் என்பதில் எனக்கு முழு உடன்பாடுதான் ஆனால் அது ஆணின் வக்கிரங்களுக்கு முன்னால் ரசனையாக அல்ல ஆயுதமாக.

மேலை நாட்டுப் பெண்கள் மட்டும் அங்கங்கள் தெரிய உடை அணியவில்லையா? ஆண்களுக்குப் பயந்து நாங்கள் போர்த்திக்கொண்டு நடக்க வேண்டுமா? இது போன்ற கேள்விகள் இங்கு எழலாம். எங்கிருந்தாலும் பெண் ஆணுக்கு போகப் பொருளே இந்தியாவில் மார்பகம் கண்ணுக்கு விருந்தென்றால் ஃப்ரான்சில் பெண்ணின் கால்கள், இப்படி ஆணுக்கு ஒட்டு மொத்த பெண்ணுமே கிளர்ச்சிச் சாதனம்தான்.

மேலை நாட்டவர் உடல் பற்றிக் கொண்டிருக்கும் கருத்து வேறு, காமம் பற்றிய அவர்கள் புரிதல் வேறு. கலாச்சாரத்தை மறு நிர்மாணம் செய்து கொண்டார்கள் அவர்கள். கருத்துக்களை அறிவியல் விளக்கங்களோடு பகுத்தாராயும் முறையை கையாளுகிறார்கள். கல்லாமை என்பது அங்கு குறைவு. அறிவியல் நிகழ்வான கிரகணத்தைக் கூட பாம்பு சூரியனை விழுங்கும் பார்பணியக் கதைகளை நம்பிக்கொண்டிருக்கும் மத நம்பிக்கைவாத மக்களின் மனநிலையை நாம் நிணைவு கொள்ளவேண்டும். (பார்பணிய வர்ணபேதத்தால்) கல்வியறிவு நிராகரிக்கப்பட்டு பல்வேறு ஒடுக்குமுறைகள் நிலவும் சூழலில் நாம் வாழ்கிறோம். ஒழுக்கம், கற்பு என்று கட்டுப்படுள்ள நம் நாட்டில் தான் வன்புணர்ச்சிகள் அதிகம் நடைபெறுகின்றன .(2,3 வயது குழந்தைகள் உட்பட), ஒருத்தனுக்கொருத்தி என்பது இந்திய சமூகம் என வாய்கிழியப் பேசிய இந்தியத் தன்மான வாயில்தான் எயிட்ஸ் சிறுநீர் பெய்தது. இன்னும் அசிங்கமாகச் சொல்லப்போனால் ஜாதி இங்குதான் தன் வெறிக்கரங்களை ஆழ அகல பரப்பிப் பற்றியிருக்கிறது. இதிலும் ஒன்றைக் கவனிக்க வேண்டும் - எதேனும் ஒரு ஜாதியையோ, மதத்தையோ கதா நாயகன் அசிங்கப்படுத்தியோ தரக்குறைவாகவோ பேசினால் கொதிக்கும் அமைப்புகள் ஒரு பேச்சுக்குக் கூட தங்கள் ஜாதி, மத, பெண்களை இவ்வளவு அசிங்கமாகக் காட்டியிருக்கிறார்கள் என்று போராடுவதில்லை. (பெண்களமைப்புகள் உட்பட, பெண் கற்பு பற்றி ஏதாவது கருத்து தெரிவித்துவிட்டால் போராட்டங்கள் செய்கிறார்கள்) அப்படி ஒன்றிரண்டு நடந்தாலும் அது அந்தப் பெண்ணை வைத்து சம்பந்தப்பட்ட தனிமனித விரோதங்களை பயன்படுத்திக்கொள்ளவே.

மேலும் ஊடகங்கள் மற்றும் பாலியல் பற்றிய அறியாமை - எங்குப் பார்த்தாலும் பெண்ணின் மார்பும், தொப்புளும், இடுப்பும், தொடையையும் காட்டும் சுவரொட்டிகள், பத்திரிகை அட்டைப்படங்கள், சினிமாக் காட்சிகள், தொலைக்காட்சி நிகழ்சிகள் என்று கவர்ச்சித் திணிப்பு (hyper-sexualization). மறு பக்கம் கற்பு, ஒழுக்கம், ஆண் பெண் வேற்றுமை என்று கட்டுப்பாடுகள். எப்படி சாத்தியம் பெண்களின் விடுதலை.....

நடிகைகள், மாடல்கள் அணியும் உடைகளாக முதலாளிகள் கொடுப்பவை எது போன்றவை? உடலை, பாலுறுப்புகளை அங்கும் இங்கும் காட்டும் உடைகள். உலகமயமாக்கலின் காரணத்தினால் முதலாளிகள் வெளிநாட்டு உடைகளை சந்தைகளில் நிரப்பி விடுகிறார்கள். அவற்றை அணிந்துக் கொண்டு நடிகைகள்,மாடல்கள் வருவதால் எல்லோரும் அவர்களைத் திரும்பிப் பார்ப்பதாக விளம்பரப்படுத்துகிறார்கள். அது ஏதோ பெரிய மரியாதைக்குரிய விஷயமாகவும், முற்போக்குச் செயலாகவும் கட்டமைக்கிறார்கள். அவ்வுடைகளை அறிமுகப்படுத்தும் பெண்கள் பணம் படைத்தவர்கள். ஆகையால் கார்களில் பாதுகாப்பாக செல்வார்கள். ஆண்களோ வீதியில் செல்லும் பெண்களின் மேல் அவ்வுடைகளை அணிந்து அவர்களே அதைக் கிழித்தும் வன்புணர்ச்சி செய்வார்கள். உடையை அறிமுகப்படுத்திய பெண்ணோ காரில் வலம் வருவாள், ஆண்களின் பாதுகாப்போடு. இங்கு பெண் என்பவள் ஆணின் கருத்தாக்கத்தை ஏற்று அதை பணமாக மாற்றும் முதலாளி என்றும் பொருள் கொள்ளலலாம்.

ஒரு நடிகை, மாடல் ஆணைப் பொருத்த வரை வேசி. ஆகவே அது போல் உடை அணியும் அப்பெண்ணும் அதுபோலத்தான் இருப்பாள் என்று வம்புக்கிழுக்கிறான். ஆம், திரைப்படங்களில் கதாநாயகியைக் கவரும், வம்பு செய்யும் ஆணைக் கதாநாயத் தன்மைக் கொண்டவராக காட்டும் பொழுது இப்பெண்ணைக் கவர்வதின் மூலம் , வம்பிழுப்பதின் மூலம் அவன் அந்த அந்தஸ்தைப் பெற நினைக்கிறான்.

“காலங்காலமாக ஆண்கள் பெண்களைப் பகுத்தறிவற்றவர்களாக, பகுத்தறிவுக்கு உரிமை கொண்டாடத் தகுதியற்றவராக கருதி வந்ததால் பெண்கள் பகுத்தாய்ந்து சிந்திக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள வாய்ப்பில்லாமல் போய்விட்டது; பெண்கள் உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழப் பழகிவிட்டனர்.; தம்மைக் கட்டுப்படுத்தி ஆண்களுக்கு அடிமையாக்கும் விஷயங்களில் காதலுக்கும், இதர உணர்ச்சிகளுக்கும் பங்குண்டு என்பதைப் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டும்; காதலைத் தூண்டும், உணர்ச்சி ததும்பும் அனுபவங்களையும் மோகத்தையும் பகுத்தறிவின் துணை கொண்டு கடந்துச் செல்ல பெண்கள் பழக வேண்டும்; உணர்ச்சிகள், உடலுறவு ஆகியவற்றைக் கடந்த தனிமனித உறவுகள்தான் அறிவான, முறையான குடும்பம், பகுத்தறிவுக்கு கட்டுப்பட்ட நெறியான, நீதியான சமுதாயம் ஆகியன உருவாக வழிவகுக்கும்” என்கிறார் மேரி வுல்ஸ்டன்க்ராஃப்ட்.

ஆண் வக்கிரங்களிலிருந்து பெண் தன்னைக் காத்துக்கொள்ள மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுவது அழகுணர்சியிலிருந்து மீள்தல். உங்கள் உடலை சுயமரியாதையுடன் அணுகுங்கள், அவற்றை முன்னிறுத்திக் காட்டுவதன் மூலம் நீங்கள் (உங்களையறியாமலேயே) ஆண்களுக்கு விடுப்பது அழைப்பு. ஆம் ஒரு ஆணின் அங்கிகாரம் தேவையில்லை என்றால் ஏன் அழகை , உடலை எடுத்துக்காட்டும் விதத்தில் உடை அணியும் எண்ணம் தோன்றுகிறது? என்று உங்களுக்கு நீங்களே கேள்வி எழுப்புங்கள். ”cleavage” தெரிய உடை அணிந்து செல்லும் ஒரு பெண்ணைக் காணும் ஆண் அதைக் கண்டுக் கொள்ளக் கூடாது என்று சுதந்திரம் பேசும் நாம், கொலையுணர்சி என்பதையும் ஒருவரின் சுதந்திரமாக கருதலாமா? இக்கருத்துக்கள் யாருடைய திணிப்பு என்று சிந்திக்கவேண்டாமா?

ஆண் ஏற்றிவைக்கப்பட்ட ஆண்மைக் குணங்களைக் கொண்டு வாழ்வதைத் தவிர வேறு சாத்தியங்கள் இல்லை என்கிற அளவுக்கு பண்டைய வேதக் கலாச்சாரம் முதல் இன்றைய ஆங்கிலேய ஏகாதிபத்திய கலாச்சாரம் வரை முன் மொழிவது ஆணாதிக்கத்தைத் தான். முந்தையப் பெண்ணினம் கலாச்சார அடிமைத்தனத்திலிருந்து விடுதலைக் கோரியக் காலத்தில் அவர்கள் கல்வியறிவு இல்லாமலும், பொருளாதார சுதந்திரம் இல்லாமலும் இருந்தார்கள் ஆகையால் கலாச்சார அடிமைகள் ஆக்கப்பட்டார்கள். பெண்களின் உற்பத்தி திறன் மீது ஆண்கள் கொண்ட பயமும், குடும்பம் எனும் நிறுவனம் மூலம் கிடைக்கும் சொத்துக்களை தக்கவைத்துக்கொள்ளும் முயற்சிகளே அதற்கு காரணமாய் அமைந்திருக்கின்றன. இன்றைய பெண்கள் கல்வி, பொருளாதார சுதந்திரம் பெற்றவர்களாக இருக்கிறார்கள். அதனால் கலாச்சார மீறலை முன்னிறுத்தி, அழகுணர்சிகளுக்கு அடிமைகளாக்கி, பொருளாதாரத்தை தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்கிறது முதலாளித்துவம். ஆகவே இன்றையப் பெண்ணியமானது பொருளாதார அடிமைகளாகிப் போன சமுதாயத்தில் பெண் மீதான நவ நாகரீகத் திணிப்புகளைக் கண்டறிந்து மீண்டும் ஆண்களுக்கு இரையாகமல் இருப்பதற்கான செயல்பாடுகளில் ஈடுபடுதல் அவசியமாகிறது. உடை பற்றிய திணிப்பு கருத்தாக்கங்களை மீள் கருத்தாக்கம் செய்வது, பெண் பற்றிய பார்வையை சரியாக எடுத்துரைப்பதற்கு வித்திடும்.

நாம் நமக்கெதிரான பார்வைகளை களைந்தெரிய (மார்க்சிய, ஷோசலிச) பெண்ணியக் கல்வியை பயன்படுத்த வேண்டும். பிரிவினைகளை உண்டாக்கும் முதலாளித்துவ சிந்தனைகளைக் கைவிட்டு முதலில் பெண்களுக்குள் ஒற்றுமையை ஏற்படுத்தவேண்டும். மதம், கலாச்சாரம், கல்வி, அரசியல் பொருளாதார சுதந்திரம் பற்றிய சரியான அறிதல் இல்லாமல் வாழும் பெண்கள் ஒரு புறம், கலாச்சார புரட்சி, கல்வி, பொருளாதார சுதந்திரம், நவநாகரீக கருத்தாக்கங்கள் கொண்ட பெண்கள் மறுபுறம் என்று நாம் சிதறுண்டு கிடக்கிறோம். நமக்குத் தேவையானது மொத்த இனத்திற்குமான சுதந்திரம். அது ஒருமித்த அடையாளங்களை தோற்றுவிப்பதின் மூலமே சாத்தியம்.

லெனினின் வாசகங்களை இங்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். “இது நடைமுறை புரட்சிகர உசிதமேயன்றி, முதலாளித்துவ பெண்ணுரிமைவாதமல்ல”. மேலும் அவர் கூறுகிறார் – “சுதந்திரக் காதல், பாலுறவு சுதந்திரம், இதயத்திலிருந்து விடுதலை, குடும்ப அமைப்பை நிராகரித்தல், ஆகியவை தொழிலாளி வர்கத் தேவையில்லை. அது குட்டி-பூர்ஷ்வா ஜனநாயக கோட்பாடுகள், முதலாளித்துவ-தனிமனித நோக்கம் நிறைந்தவை”.

ஆண்களுக்கு நிகராய் புகைப்பிடிப்பதும், மது அருந்துவது பாலியல் உறவுகளுக்கான சுதந்திரம் கோருவது போன்றவை ஆண்களை முன் உதாரணமாக நாம் ஏற்றுக்கொண்டதாக அமையும். மேலும் இவையெல்லாம் முதலாளித்துவ பெண்ணுரிமை வாதம், எல்லோருக்கும் பொதுவான உரிமைப் பிரச்சனையாக கருதிவிட இயலாது. இது பொருளாதார ரீதியில் சுதந்திரமாக இயங்கும் பெண்களுக்கே நன்மையளிக்கும் விஷயமாக இருக்கிறது.

ஒட்டு மொத்த சமுதாயமும் பொதுவாக உடல் பற்றிய கருத்தாக்கங்களை மாற்றிகொள்ளாத போது பணம் படைத்தவர்கள், ஆதிக்கவாதிகள்  பேசும் சுதந்திரமானது பெரும் சுயநலம் கொண்டது, நம்மை விலைப் பேசும் தன்மைக் கொண்டது என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். ஏனென்றால் முதலாளிகள் (ஊடகங்கள் மூலம்) பெண் பற்றிய தவறான கருத்தாக்கங்களைத்தான் ஏற்றிவைத்திருக்கிறார்கள். ஆணாதிக்க முதலாளிகள் கட்டமைக்கும் ஒன்றை பெண்கள் தேர்வாகக்கொண்டால் பெண்கள் அடிமைகளே. முன்பு பெண்கள் அதிகாரத்தின் அடிமைகள், இப்பொழுது “பொருளாதார அடிமைகள்”. அன்று கற்பின் பெயரால் பெண்களை அடிமையாக்கினார்கள், இன்று போலி பெண் சுதந்திரத்தின் பெயரால் பெண்களை இரையாக்குகிறார்கள். இதிலிருந்து விழித்துக்கொள்வது பெண்களின் கைகளில் தான் இருக்கிறது.  முதலாளிகள் தங்களது வக்கிரத்தை ஆதிக்கப்பார்வையை, தங்களது சுதந்திரத்தை, எதிர்பார்ப்புகளை பெண்கள் சுதந்திரமாக மாற்றி பெண்களின் உடலைக் கண்காட்சிப் பொருளாக மாற்றி பெண் என்பவள் வெறும் பாலியல் பண்டமே என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்கள்.

பெண் என்பவள் ஆணுக்கு யார்? பெண் என்பவள் யார்? விவாதிப்போம் தோழர்களே.


(இம்மாத அகநாழிகை இதழில் வெளிவந்திருக்கும் எனது கட்டுரை - நன்றி திரு. அகநாழிகை பொன். வாசுதேவன்.)

Jan 12, 2011

கருப்பையின் கதவுகளை தட்டுகிறாள் மகள்



குழந்தையின் குரலொன்று கேட்கிறது சில இரவுகளில்
இழப்பின் சாயலைக் கொண்டிருக்கிறது அவ்விரவுகள்
உடுத்தி வருகிறது பிரசவக் கோடுகளை

ஓலத்தின் இசைக் குறிப்பு
தொலைந்து விட்டது
அயர்சியுற்ற கைகளை பார்வைக்கு வைத்திருக்கிறேன்

கருப்பையின் கதவுகளை தட்டுகிறாள் மகள்
தொலைதூரத்தில் புதைந்துபோன கைகளை
மீட்பதற்கில்லை

தும்பிகள் கூட்டமாய் பறந்து போகும் காட்டில்
தொப்புள் கொடியின் வாடை பிடித்து
தப்பித்து செல்கையில்
வனமெங்கும்
அவளது முகம்
அவளது சிரிப்பு
அவளது மழலைச் சொற்கள்

பேய்கள் மூளை நரம்புகளை பங்கிட்டு உண்கிறது
ஆழியின் பெருத்த அலைகள்
முட்டிச் செல்கிறது எலும்புகளை

மரணத்தை பற்றிய அனுபவம் இருக்கவில்ல
பிணங்களின் அறிமுகம் உண்டு


Jan 9, 2011

துரோகங்களின் பட்டியல் – 4 : பாடநூல்களில் துரோகம்


         “கேடில்        விழுச்செல்வம்     கல்வி         யொருவற்கு       
           மாடல்ல     மற்றை       யவை.”

ஒருவனுக்கு துன்பம் தராத சிறந்த செல்வம் கல்விச் செல்வமே ஆகும்; ஏனையப் பொருள் செல்வங்கள் எல்லாம் சிறந்த செல்வங்கள் ஆகமாட்டா.

இக்குறளின் பொருளில் குறிப்பிடப்படும் ஒருவன் ‘தான்’ ஒருவனாகவும், தன்னால் துன்பம் பெறக்கூடாதவனாக இருக்கவேண்டிய ‘மற்றவன்’ ஒருவனாகவும் பொருள் கொள்ளுதல் அவசியமாகிறது.

கல்வி எனும் பொழுது அது பள்ளிப்படிப்பால் கிட்டுவது என்பதோடு, பல்வேறு முறைகளில் அறிவைத் தேடி பெருவதற்கான ஒரு அடித்தளத்தை அமைத்துக் கொடுப்பதாகவும் இருத்தல் வேண்டும்.  சமூகத்தில் நிலவும் ஒடுக்குமுறைகளை, ஏற்றத்தாழ்வுகளை ஒழித்து சக மனிதர் மீது அக்கறை செலுத்தி மனித குலத்தை உயர்த்துவதற்கான செயல் திட்டங்களை உருவாக்குவதற்கு ஒருவரைத் தயார் செய்யவே கல்வி என்பது அவசியமாகிறது. 

ஆனால் பள்ளிக்கூடங்களில் வரலாற்றுப் பாடங்கள் என்ற பெயரில் மத அடிப்படைவாதமும், பிரிவினைப் புத்தியும், இந்துத்துவ விசுவாசமும் தான் கற்பிக்கப்படுகிறது.  தன்னளவில் ஒருவன் தன்னை, தன் மத விசுவாசத்தை உயர்த்திக் கொண்டு சுயநலத்தை வளர்த்தெடுக்கும் இந்துத்துவ மடங்களாகத்தான் கல்விக் கூடங்கள் செயல்படுகின்றன.  அப்படி சுயநலத்தில் வளர்ந்து முதலிடம் பிடிக்கும் பிள்ளைகளை அடையாளம் காணவே மதிப்பெண் பட்டியல்கள் உதவி புரிகின்றன.  கம்யூன் என்று சொல்லக்கூடிய கூட்டுச் சமூகத்தை உருவாக்குவது கல்வியின் நோக்கம் என்றால் தனித் தனி மதிப்பெண் பட்டியல்களின் தேவை ஏற்படாது.  குடும்பம் எனும் சமூக நிறுவனத்திற்கும், மத நிறுவனத்திற்கும், அரசாங்கத்திற்கும், முதலாளிகளுக்கும் விசுவாசியாக உழைத்துக் கொட்டவே கல்விக் கூடங்கள் ஒருவரைத் தயார் செய்கிறது. 

சமூகப் போராளிகளாக, சமூக சீர்திருத்தவாதிகளாக, மாற்று சிந்தனைக் கொண்டவர்களாக, சமதர்மத்தைக் கோருவோராக, தன் பிள்ளைகளை மட்டும் பிள்ளைகளாக கருதாமல் உலகில் உள்ள ஒவ்வொருவரையும் பிள்ளைகளாக கருதுவோராக இருந்தவர்கள், இருப்பவர்கள் எல்லோரும் கல்விக் கூடங்களுக்கப்பாற்பட்ட புத்தகங்களையும், சமூக விஞ்ஞானங்களையும் தேடிப் பயின்றவர்களாக இருபதே இதற்கு சாட்சி.

அரசாங்கம் கற்றுத் தரும் பாடங்களை அப்படியே மனப்பாடம் செய்து தேர்வுகள் எழுதி அரசு எந்திரத்திற்கு எந்த சேதமும் நேராமல் இருக்க தந்திரமானத்  திட்டங்களை, சட்டத் திட்டங்களை வகுத்துக் கொடுப்பதற்கான வங்கி அறிவைக் (deposited intelligence) கொடுப்பதே கல்விக் கூடங்களின் லட்சியமாக இருக்கிறது. அரசு எந்திரமானது முதலாளிகளையும், இந்துத்துவ மத நிறுவனங்களையும், இந்துத்துவவாதிகளையும், ஆதிக்க வர்க்கத்தினரின் நலன்களை காப்பாற்றவும் தோன்றிய ஒன்றாகவே கருதத்தோன்றுகிறது. சிறுபான்மையினரின் நலன்கள் பெரும் போராட்டங்களுக்குப் பின்னரே சிறிய அளவில் நிறைவேற்றப்படுகிறது. அப்படி ஏதாவது இட ஒதுக்கீடு தீர்ப்பாயங்கள் தாக்கல் செய்யப்பட்டாலும் சனாதன தர்மத்தின் நம்பிக்கைவாதிகளான உயர் சாதி இந்துக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டங்கள் மேற்கொள்கின்றனர். (*சிறுபான்மையினர் என்ற பிரிவுக்குள் கடவுள் மறுப்பாளர்களும், கம்யூனிஸ்டுகளும், பூர்ஷவாக்களை எதிர்ப்போரையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்பது என் கருத்து).  தரப் பட்டியலில் முதலிடம் வகிக்கும் ஆதிக்க சாதி மாணவ எந்திரங்கள், சமூக நலனில் அக்கறை கொள்வதை விட அரசு விசுவாசிகளாகவே செயல்படுகின்றனர்.  இப்படிப் பட்ட அடிப்பொடிகளை உருவாக்குவதே கல்விக் கூடங்களின் தலையாய பணியாக உள்ளது. 

கல்வி குறித்தான இட ஒதுக்கீட்டுப் பிரச்சனையில் உயர் சாதி இந்துக்களின் மனப்பான்மைக்கு காரணமாக ஆரியத் திரிபு செய்யப்பட்ட வரலாற்றுப் பாடப் புத்தகங்களும் ஒரு காரணம் என்று ஆ. மார்கஸ் எழுதி, கருப்புப் பிரதிகள் 2005ல் (2nd edition) வெளிவந்த “பாட நூல்களில் பாசிசம் நச்சை விதைக்கும் வரலாற்றுப் பாடங்கள்”  எனும் நூலில் குறிப்பிடுகிறார்.  53 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகம் வரலாற்றுப் பாடங்களில் ஆரிய-பார்ப்பனிய-இந்துத்துவம் செய்யும் திரிபுகளையும், மற்ற மதத்தவர் மீது வளர்த்துவிடும் காழ்ப்புணர்ச்சிகள் குறித்தும், சனாதன தர்மத்தைக் கட்டிக்காக்க நினைப்பதையும் ஆதாரங்களுடன் பட்டியலிடுகிறார்.  இதற்கு (இந்து) மத்தியப் பாடநூல் நிறுவனமான NCERT எப்படி R.S.S ஆட்களைக் கொண்டு நிறப்பப் பட்டு ஆபத்தான மோசடிகள் அரங்கேற்றப்பட்டன எனும் விவரிப்புகள் பெரும் அச்சத்தை வரவழைக்கிறது.

வரலாறுப் பாடங்கள் உள்ளிட்ட சமூக விஞ்ஞானப் பாடங்கள் தேவையில்லை என்ற குரல் ஒரு பக்கம் ஒலித்துக்கொண்டு மாற்றுக் கல்வி என்ற பெயரில் ஆங்கிலேய கல்வி முறைகளை ஊக்குவித்து வரும் சூழலில், வரலாற்றுப் பாடங்களின் முக்கியத்துவம் குறித்து     
அ. மார்க்ஸ் அவர்கள் குறிப்பிடுவது “ஒரு சமூகத்தின் உணர்வுகள் என்பது ஏதோ  கடவுளால் அருளப்பட்டவையல்ல. வரலாற்று ரீதியாகக் கட்டமைக்கப்பட்டவையே”. மேலும் “வரலாற்று ரீதியாகச் சாதீயச் சுரண்டலையும், தீண்டாமைக் கொடுமையையும் அறியும் ஒரு மாணவன்தான் இன்றைய இட ஒதுக்கீட்டுக் கருத்தியலைப் புரிந்துக்கொள்ள இயலும்.  அதை அறியாத போது இட ஒதுக்கீடு என்பதை உயர்சாதியினருக்கு இழைக்கப்பட்ட அநீதியாகவே மாணவ மனம் புரிந்துக் கொள்ளும். இத்தகைய புரிதலே இந்துத்துவவாதிகளுக்குத் தேவை. எனவே தான் இந்தப் பாட நூல் தகிடுதத்தங்கள்”.

இப்படி இந்துத்துவ அரசு செய்யக் காரணம், இந்தியாவின் பன்மை அடையாளங்களைக் குலைத்து, இந்தியா ஒரு இந்து நாடு என்று முன்னிறுத்தவே என்பதைப் புரிந்துக்கொள்ளலாம். தேசியம் என்ற ஒரு கட்டமைப்பே இதற்குத்தான் பயன்படும். R.S.S. காரர்கள் தங்கள் வரலாற்றைத் தாங்களே எழுதிக் கொள்ள வேண்டும் என்று குரல் கொடுத்த கோல்வால்கரின் (1939) கனவுப்படி எந்த மாதிரி அந்த வரலாறு அமைய வேண்டும் என்று அவர்கள் எண்ணினார்கள் என்று அ. மார்கஸ் குறிப்பிடுகிறார். (இது பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ். மட்டுமல்லாது காங்கிரஸ் உட்பட ஆதிக்க சாதியினரது எல்லா கட்சிகளுக்கும் பொருந்துவதாகவே உள்ளது, மேலோட்டமாகத் தீவிர பார்ப்பனிய ஆதரவு இல்லையென்றாலும் சாதிப் பிடிப்பும், சுரண்டல் போக்கும் உள்ளதை மறுக்க முடியாது)

          ”இந்தியக் கலாச்சாரத்தில் பன்மைத் தன்மைக்கு இடமில்லை’ இந்த நாடு இந்துக்களுடையது. சமணம், பவுத்தம், சீக்கியம் எல்லாம் அதற்குள் அடக்கம். ஆரியர்களே இந்நாட்டின் பூர்வக்குடிகள். வேதகால்ம் பொற்கால்ம். பவுத்த மதத்தை ஏற்றிக்கொண்ட அசோகர் போன்ற மன்னர்கள் காலத்தில்தான் இந்தியா பலவீனமடைந்தது; அந்நிநியப் படையெடுப்புக்கு ஆட்பட்டது.  இந்தியாவின் இழிவுகளுக்கெல்லாம் முஸ்லிம் மன்னர்களே காரணம். கட்டாய மதமாற்றம், இந்துக்கள் மீது தனியான வரிச்சுமை என்பதாக அவர்களின் ஆட்சிகள் அமைந்தன. சுதந்திரப் போராட்டப் பின்னடைவுகளுக்கு முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர், தலித்துகள், பிற்படுத்தப்பட்டவர்கள் ஆகியோரே காரணம். சுதந்திரப் போராட்டத்தில் அவர்களோ, கம்யூனிஸ்டுக்ளோ பங்களிக்கவில்லை. நாட்டுப் பிரிவினைக்கும், மதவாதத்திற்கும் முஸ்லிம் லீகே காரணம். கம்யூனிசம் என்பது நாசிசம், பாசிசம் போன்ற ஒரு அரசியல் கொள்கை மட்டுமே. தேசியமும் சோசலிசமும் கலந்த ஒரு வடிவமே நாசிசம். சுபாஷ் சந்திர போசை ஆற்றுப்படுத்தியதே வி.டி. சாவர்க்கர்தான். சுதந்திர போராட்டத்திற்குப் பிந்தைய இந்திய உருவாக்கத்தில் ஜவஹர்லால் நேருவின் பங்கு குறிப்பிடத்தக்கதன்று”.


இது ஏதோ அ. மார்க்ஸ் அவர்களின் தனிப்பட்ட கருத்து என்று நாம் ஒதுக்கிவிடமுடியாது, வரலாற்றுப் புத்தகங்களில், R.S.S. இதழில் அதுல் ராவத் எழுதியக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள 41 கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு NCERT  ஆறாம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்புப் புத்தகங்களில் மாற்றங்கள் செய்தும், சில கருத்துக்களை எந்த அறிவிப்பின்றி நீக்கவும் செய்திருக்கின்றது.  அதை பட்டியலிட்டு, அதற்கெதிரான வரலாற்று ஆதாரங்களையும் குறிப்பிட்டிருக்கிறார் அ. மார்கஸ்.

பழைய CBSE வரலாற்றுப் பாடப்புத்தகங்களை நீக்கிவிட்டு, நான்கு புதிய புத்தகங்களை 2002 இல் வெளியிட்டுள்ளது: அவை:

1)                 மக்கன்லாலும் மற்றவர்களும் எழுதிய ‘இந்தியாவும் உலகமும்’ 6 ஆம் வகுப்பு. இந்நூலில் இரண்டாம் அலகு வரலாறு பற்றியது)
2)                 மக்கன்லால் எழுதிய ‘பண்டைய இந்தியா’ 11 ஆம் வகுப்பு.
3)                 ஹரி ஓம் எழுதிய ‘இன்றைய இந்தியா’ 11 ஆம் வகுப்பு
4)                 மீனாட்சி ஜெயின் எழுதிய ‘மத்திய கால இந்தியா’ 11 ஆம் வகுப்பு.

இச்செயலுக்கு அவர்கள் சொல்லுகிற பதில்: ‘நீக்கப்பட்ட கருத்துக்கள் சில சமுதாயங்களின் உணர்வுகளைப் புன்படுத்துகின்றன’ என்பது.

 இங்கு நாம் சரியாக புரிந்துக் கொள்ளவேண்டியது சில சமுதாயம் என்பது வேத இந்துத்துவ மரபு வாரிசுகளின் சமூகம். 

பாரத நாடு என்பதற்கான பெயர் விளக்கத்திலிருந்து வேதக் காலத்தை பொற்காலம் என்பது உள்ளிட்ட பல்வேறு பாசிசக் கருத்துக்களை பாடதிட்டங்களில் ஏற்றியுள்ளனர்.  

பக். 19 வரலாறு எழுதுவதில்  இந்துத்துவத்தின் அடுத்த ‘புராஜெக்ட்’ வேதகாலத்தைப் பொற்காலமாகக் கட்டமைப்பது. இதையும் ரொம்பத் துல்லியமாக இவ்விரு பாடநூல்களும் செய்து முடிக்கின்றன.

நகர அமைப்பைக் உருவாக்கிய சமூகத்தைத் தான் “நாகரீகம்” Civilization என்று அழைக்கிறொம்.  அகழ்வாராச்சியில் அதற்கான ஆதாரங்கள் கிடைத்ததால் தான் “சிந்து வெளி நாகரிகம்” என்றழைக்கிறோம்.  ஆனால் இவர்கள் வேதப் பண்பாட்டை வேத நாகரீகம் என்று குற்ப்பிடுவதன் மூலம், தொன்மையான பின்னணி கொண்டதாக ஆரிய பண்பாட்டை கட்டமைக்க முயல்வது இந்தப் புத்தகத்தின் வாயிலாக நாம் அறிந்துக்கொள்ளமுடிகிறது.  அதை விடக் கொடுமை ‘சிந்து வெளி அகழ்வுகளின் அடிப்படையில் இந்திய பழமை கி.மு. 5000த்தை எட்டுகிறது (ப.இ. பக்.20)   சரியான அகழ்வாராச்சிக் குறிப்பாக மார்க்ஸ் கூறுவது ”எவ்வளவு பின்னுக்குக் கொண்டு சென்றாலும் இந்தியாவின் நகர நாகரிகத்தை கி.மு. 2600க்கு முன் கொன்டு செல்ல இயலாது” என்பது தான். 

திராவிட மொழிகள் என்பதில் தமிழ், தெலுங்கு, கன்னடம், துளு, மலையாளம் தவிர ’ப்ராஹீய்’ என்பது ஒன்று. பலூசிஸ்தானத்தில் வழக்கிலிருந்த மொழி. இதனடிப்படையில் சிந்துவெளி நாகரிகத்தை ‘ப்ரோட்டா எலோமா’ நாகரிக் கூறுகளுடையது என மெக் ஆல்பின் போன்ற வரலாற்றறிஞர்கள் வாதிட்டனர். எனவே தொல் இந்த நாகரிகம் என்பது மேற்காசிய (மெசபடோமிய) எலாமைட் நாகரிகத்துடன் தொடர்புடையது என்கிற கருத்தும் மேலெழுந்தது. 

அதாவது இன்றைய முஸ்லிம் நாடுகளின் பழைய நாகரிகங்களுடன் தொடர்புடையது என்று பொருள்.

 “பெரியார் அவர்களும், மேற்குறித்த உன்மைகளின் அடிப்படையில் ‘இஸ்லாமியர்கள் திராவிடர்களே’ என்று குறிப்பிட்டிருப்பதாக அ. மார்க்ஸ் கூறுகிறார். மேலும் ‘இஸ்லாம் என்பது திராவிடம் என்பதன் அரபுச் சொல்’ எனக் கவிதையும் பாடியிருக்கிறாராம் பெரியார்.” 

குழந்தைகள் படிக்கும் பாடப் புத்தகத்திலேயே இவ்வளவு திரிபுகளைச் செய்தவர்கள் கடவுள் எனும் கருத்தாக்கத்தை மக்கள் மனதில் திணிக்க கதையாடல்களை செய்திருக்க மாட்டார்கள் என்று நம்புவது  எந்த வகையில் சிறப்புடையது?  கடவுள் இருக்கிறார், அநியாயங்களைத் தட்டிக் கேட்க தசாவதாரங்கள் எடுத்து வருவார் என்றும், பாவம், நரகம் என்றும் அச்சுறுத்தல்களை வகுத்தவர்கள் மத அடிப்படைவாதிகளாக  செயல்படுவதற்கான தண்டனையாக ஏன் இட ஒதுக்கீட்டு தீர்ப்பை அந்தக் கடவுளின் தீர்ப்பாக கருத மறுக்கிறார்கள். ஒடுக்கப்பட்டவர்களின் பிரச்சனைகளுக்கு பார்ப்பன இந்துக் கடவுள்கள் ஒரு போதும் செவிசாய்க்க மாட்டார்கள் என்ற உன்மையை அறிந்ததனால்தான் என்று கருதலாமா?

சாதியின் பெயரால் பல கொடுமைகளை செய்தவர்களை அழிப்பதற்கான (அவர்கள் பாஷையில் சொல்லப்போனால் வதம் செய்ய) கடவுளின் அவதாரமாய் பெரியாரையும் அம்பேத்கரையும் கருத அவர்களால் ஏன் முடியவில்லை.  எளிதாக அவர்களை அசுரர் என்றும் வகைப் படுத்திவிடலாம், அவர்களது முன்னோர்களின் உத்திகளைப் பயன்படுத்தி.

அசுரர் பற்றிய குறிப்புகள் உலகாயதம் புத்தகத்திலிருந்து: 

அசிரியாவிலிருந்து குடி பெயர்ந்தவர்கள் அசுரர்கள், ஆரியர்களுக்கு முன்னரே இந்தியாவில் குடியேரியவர்கள். சிந்து சமவெளி நாகரீகத்தை உருவாக்கியவர்கள் அசிரியர்களே. சதபத பிராமணத்தின் படி, மகதம் அல்லது தென் பீஹாரில் அசுரர்களது குடியிருப்பு இருந்ததைக் குறிப்பிடுகிறது. அசுரர் எனும் சொல் ஒரு உயர்ந்த நாகரீகத்திலிருந்து கடன் பெறப்பட்டது.

அசுர எனும் சொல் பழங்கால இந்தோ-ஈரானிய சமூகத்தின் நாகரீகப் பிரிவினரைக் குறிக்கிறது.  அசுரர் என்பது அசிரியாவிலிருந்த ஒரு துணைக்கடவுளின் பெயர். அசிரியர்களுடன் இந்தோ ஈரானியர்கள் உறவு கொண்டு எழுந்த வம்சாவழிப் பெயர்.

மூர்க்கத்தனமான காட்டுமிராண்டி மக்களான ஆரியர்கள் இந்தியாவில் படையெடுத்தபோது பதிலுக்கு அவர்களைத் தாக்கியவர்களை அசுரர்கள் என்று அழைத்தனர். ஆரியர்கள் விரட்டியடித்து அவர்களை அழித்தனர். சோட்டாநாக்புரி பகுதியில் வசிக்கும் அசுரர்கள் ஆரியர்களை எதிர்த்த அசுரர்களின் வழித்தோன்றல்கள். தானா அல்லது மிர்சாப்பூர் மாவட்டத்தில் இப்பொழுதும் காணப்படும் நீர்நிலைகளில் அணை கட்டியவர்கள் இவ்வசுரர்களின் வழித்தோன்றல்களா என்பது வெளிப்படையானதொரு கேள்வி. இருப்பினும் இத்தகைய அனுமானங்களைத் தவிர்க்க வேண்டும் என்பதில்லை.

அசுரர்கள், தைத்தியர்கள், தானவர்கள், நாகர்கள் ஆகியவை வெவ்வேறு கலாச்சார மட்டத்திலிருந்த மக்களைக் குறிக்கும் சொற்களாகும். இவர்கள் அநாகரீகமான ஆதிவாசிகள், அரைகுறை நாகரீக இனங்கள் ஆவர். இவர்கள் ஆரிய கலாச்சாரம் பரவுவதைத் தடுத்தனர்.  புராணக் குறிப்புகளில் இவர்களைஆரம்பத்தில் மனிதர்களாக்க் குறிப்பிட்டனர். பின்னர் எதிரிகள் என்கின்றனர். பின்னர் பூதாகரமான உருவங்களோடும் பூதங்களோடும் இணைக்கப்பட்டிருக்கின்றனர்.

பெரும்பாலான அசுரர்கள்தான் சிந்து சமவெளி நாகரீகத்தை உருவாக்கியவர்கள். (பல்வேறு சூத்திரங்கள், வேத நூல்கள், பிராமணங்கள், உபநிடதங்கள், அவற்றை ஆராய்ந்த மாமேதைகளான தாஸ்குப்தா, பானர்ஜி, சாஸ்திரி, பி.கே.கோஷ் இன்னும் பிற மேலைநாட்டு ஆய்வுகளைத் தொகுத்தே சட்டோபாத்தியா இம்முடிவுகளை வெளியிடுகிறார்).

அமராவதி நதிக்கரையில் ஒரு பழங்கால நகரத்தை அகழ்வாளர்கள் தோண்டி வெளிக்கொண்டு வந்துள்ளனர். ரிக்வேத ஆதாரப்படி, இதனை அசுரர்களின் நகரம் என்றும் நாம் கருதலாம். இது ஹரப்பா என்று நமக்குத் தெரியும்.

ரிக்வேதத்தில் அசுரக்னா என்ற சொல்லும், வரசிகா என்ற சொல்லும் உள்ளது. இந்திரன் வரசிகாவையும் அவன் குலத்தையும் முற்றிலுமாக அழித்தான். அசுரக்னா என்ற பாத்திரத்தில் இருந்து இதைச் செய்தான். வரசிகா என்பது ஒரு அசுரனுடையப் பெயர் (சாயனார் கூறுகிறார்). அவர்களது நகரம் ஹரியுபியாகும், அதாவது சிந்து வெளியின் ஹரப்பா...பல்வேறு நூல்களின் ஆய்விலிருந்து சிந்து வெளியின் நாகரீகத்தை தோற்றுவித்தவர்கள் அசிரியாவிலிருந்து என்று பானர்ஜியும் சாஸ்த்ரியும் கருதினர். இக்கருத்தை சமகால அகழ்வாராய்ச்சி உறுதிப்படுத்த வேண்டியுள்ளது என்று சட்டோபாத்தியா குறிப்பிடுகிறார்.

(இது மட்டுமல்லாது, கொங்கனி அகராதி ஒன்று வேதம், பார்ப்பனியம் குறிப்பிடும் தேவர்கள், ரிஷிகள், அரசர்கள் ராமன், வீரன் அர்ஜுனன், அகத்திய முனிவர் உள்ளிட்டவர்களின் கதைகளை  வேறாகச் சொல்கிறது).

சுதந்திரப் போராட்டக் காலத்தில்:

சத்தியமூர்த்தி ஐய்யர், குழந்தைத் திருமண தடைச் சட்டத்துக்கு சட்டமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்து மனு தர்மத்தைப் பேணிக்காக்க தன் குழதைக்கு ருதுவாகும் முன்பே திருமணம் செய்து வைக்கப்போவதாக சூளுரைத்திருகிறார். பெரியார்: சுயமரியாதை சமதர்மம் (எஸ்.வி.ராஜதுரை வ. கீதா, விடியல் பதிப்பகம்)  எனும் நூலில், (The Child Marriage Bill II, Revolt, 1 September 1929 இல் வந்தது)  சா. குருசாமி அவர்கள் எழுதிய பதில் நமக்கு பகுத்தறிவு என்பதற்கான ஒரு உதாரனத்தைக் காட்டுகிறது.

மூன்று ஆண்டுகளுக்குத் தொடர்ந்து காயத்ரி மந்திரம் சொல்லுபவன், நிச்சயமாக ஆகாயத்தில் பறக்கக் கூடியவனாவான் என்றும், அவன் விரும்புகிற எந்த வடிவத்தை வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம் என்றும் ‘மனு நூல்’ கூறுகிறது. நமது பார்ப்பன நன்பர்களில் குறிப்பாக காயத்ரி ஜெபத்தை ஆண்டுக்கணக்கில் செய்துகொண்டிருந்த சாஸ்திரிகளில் எத்தனை பேர் பறக்கும் கலையை கற்றுக்கொண்டுள்ளனர் என்பதை அறிய விரும்புகிறோம்.

பார்ப்பனியத்தைத் தொடர்ந்து விமர்சிப்பதற்கான அவசியத்தை ஏதோ மதத் தூற்றுதலாக கருதிவிட இயலாது. அவர்களே தற்போது நிலவும் இந்தியச் சமூகச் சிந்தனைகளை கட்டமைத்தவர்கள், இன்றும் ஆதிக்க நிலையில் இருப்பவர்கள் அவர்களும், அவர்களால் அரவணைத்துக் கொள்ளப்பட்டவர்களுமே, இவற்றை சரியாக புரிந்துக் கொள்ளாத பெண்களை, மக்களை மூட மத நம்பிக்கைகளிலிருந்து மீட்டெடுப்பது சாத்தியமில்லை, அதன் வழி பெண் விடுதலையும், சமதர்ம சமுதாயமும், சுரண்டலற்ற சமுதாயமும் சாத்தியமில்லாமல் போய்விடும் என்ற நோக்கமே இவ்விமர்சசங்களுக்குக் காரணமாய் அமைகிறது.  ஒடுக்கப்பட்டவர்களில் பெண்ணும் அடக்கம், அவளும் ஓர் ஒடுக்கப்பட்ட வர்க்கமே, அடிமைத்தனம் என்பது தொழில் அடிப்படையில் மட்டும் என்று கருதி பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை மட்டும் களைவது எவ்வகையிலும் சமதர்மச் சமூகத்தை நிறுவ இயலாது. அது குறைபாடுடையச் சமூகமாகத் தான் இருகும். 

கருத்தாக்க அடிமைத்தனங்களை ஒழிக்க வேண்டிய அவசியத்தை புறக்கணிப்பதென்பது சுயமரியாதயையும், சுதந்திரத்தையும் நிராகரிப்பதற்கு சமமாகப் பெண்கள் கருதுவதன் மூலமே ஏன் பெண் விடுதலை அவசியம் என்ற கேள்வியை அவர்களிடத்தில் எழுப்ப உதவும். 

“உலகை மாற்றியமைப்பதென்பது ஒரு சில மனிதர்களின் தனி உரிமையல்ல; ஒட்டுமொத்தச் சமூக உரிமை பாவ்லோ ஃப்ரெய்ரோ, மாற்றுக் கல்வி சிந்தனையாளர்.

Jan 5, 2011

துரோகங்களின் பட்டியல் - பாகம் - 3, பெண்ணின் கேள்விகள்.



·        தொல்பழங்காலச் சமூகத்தில் சரிசமமாக, ஏன் முதன்மையாக இருந்த பெண்ணினத்தை, சூத்திரர், விபச்சாரி, வீட்டுக்குள்ளேயே அடக்கி வைக்கப்படவேண்டியவள், பொருளாதாரத்திற்காக அவள் என்றுமே ஆணையே சார்ந்திருக்கவேண்டும், இப்படி பல கோட்பாடுகளை எழுதி பெண்ணினத்திற்கு துரோகம் செய்தது.

·        பால்ய விவாகத்திற்கான கட்டளைகளை மநு பிறப்பித்தது.  அதில் குறிப்பிட்டபடி ஒர் பெண் குழந்தை 9 வயது அடைந்தவுடன் திருமணம் செய்து கொடுக்கப்படவேண்டும், அதை செய்யத் தவறும் தந்தை அப்பெண்ணின் தூமையைக் குடிக்கவேண்டும்.

பெண் பற்றிய மநுவின் பார்வை (அவரது வழித்தோன்றல்களுக்கானதும் கூட)

·      பீஜம், யோநி இவ்விரண்டையும் நோக்குமிடத்து, பீஜம் உயர்வு ஏனெனில், தோன்றூம் உயிர் அணைத்தும், அதன் தன்மையச் சார்ந்திருக்கிறது என்று ஆண் மகனை உயர்த்தி பெண் இரண்டாம் நிலையானவள், கீழ் நிலையானவள் என்று நிறுவியது. மேலும்:
·       ஆடவரின் அழகினையும் வயதையும் பாராட்டாமல் அவர்தம் ஆண்மையை மட்டுமே பொருட்படுத்தி மாதர் ஆடவர்பால் மனம் பற்றிக் கலப்பர்.
·    நிறை பிறழ்தலும், நிலையில் மனமும், நண்பின்மையும் மாதர்தம் இயல்பாவதால், கணவனால் நன்கு போற்றிப் புரக்கப்படும் போதும் அவர்கள் கணவனின் காவலை விரும்புவதில்லை.
·        இவ்வித இயல்புகள் மாதர்க்குப் பிறப்புடன் வருவதாகையால், மாதர் ஒழுக்கம் கேடுறாமற் பேணும் முயற்சியில் ஆடவர் கவனமாக இருக்க வேண்டியது.
·        படுக்கை, ஆதனம், அழகு செய்தல், காமம், சினம், பொய், துரோக எண்ணம் இவற்றை மாதரின் பொருட்டே மநு படைத்தார்
·        மாதர்க்குப் பிறவியைத் தூய்தாக்கும் சம்காரங்கள் மந்திர பூர்வமாகச் செய்வித்தல் யாதுமின்று.  இவர்களுக்கு வெள்ளையுள்ளமும் இல்லை. பாவம் நீக்கும் மந்திர உபதேசமும் கிடையாது எனவே, பொய்யைப்போல மாசு வடுவினராக மாதர்ர் இயன்றிருக்கின்றனர்.
·        பெரும்பாலும் மாதர் கற்பிலார் என்றே பெரிதும் பல நூல்களிலும் கூறப்படுவனவற்றயும் கேட்பீராக.
·        மற்றும் சத்யவதி போன்ற ’ஈனக்குலப்’ பெண்களும், மேலோரான கணவரைப் பெற்றதனாலும், தங்கள் கற்புத்திறனாலும், கணவரின் மேன்மையினாலும், தாங்களும் இவ்வுலகில் மேன்மையுற்றார்கள்.
·        மாதரைக் காத்தல் இவ்வளவு தொல்லை நிறைந்த தாயினும், நன்மக்களை ஈன்று, நல்லின்பம் தருகிறவர் ஆதலினால், அவர்களை ஆடை அணிகளால் அழகு செய்ய வேண்டியது.

மேற்கூறிய அவரது தர்மத்திலிருந்து பெண் கீழ்மைக்குணம் கொண்டவள் என்றும், வேசி என்றும், பிள்ளைப் பெறும் சாதனம் மட்டுமே என்றும் நிறுவியது, பெண்கள் நகை, பணம், வசதி இவைகளுக்கு அடிமையாக்கப்பட்ட சூத்திரத்தை அதை ஆண்கள் பெண்களுக்கானது என தீர்மானித்ததை நாம் புரிந்துகொள்ளலாம்.

மேலும் குடும்பப் பெண்ணிற்கான அறங்களாக அவர் விதிப்பவை:

·    கணவன் சூதாடுகிறவனாயினும், குடியனாக விருந்தாலும், பிணியாலனாயினும், மனைவி அவனுக்குச் செருக்குற்றுப் பணிபுரியாதிருந்தால் (பெண் ஆணுக்கு தானே மனமுவந்து வேலை செய்யவேண்டும் என்பதோடு, இங்கு பெண்ணுக்கு அறிவானது திமிர் என்று குறிப்பிடப்படுகிறது. அறிவு யாருக்கும் பணியா குணம் கொண்டது என்ற உளவியல் பார்வையையும் நாம் இதில் காணலாம்.) அவளுக்கு அழகு செய்தல், ஆடை, படுக்கை இவை மறுத்து, மூன்று மாதம் விலக்கி வைக்கவும்.


·        மலடியான மனைவியை எட்டாண்டுகளின் மேலும், தக்காமல் அடிக்கடி பிள்ளையிறக்கும் வயிற்றினளைப் பத்தாண்டுகளின் மேலும், பெண் குழந்தையையே பெறுபவளைப் பதினோராண்டுகளின் மேலும், பொல்லாங்கு சொல்கிற பெண்ணை உடனேயும் நீக்ககிவிட்டு, வேறு மணம் செய்துகொள்க. இம்மனைவியர்க்கு மனமகிழ்ச்சிப் பொருள் யாதும் கொடுக்க வேண்டியதில்லை.

·        முப்பது வயதுள்ள ஆணுக்குப் பனிரண்டு வயதுள்ள பெண்ணையும், இருபத்தி நான்கு வயதுள்ளவன் எட்டு வயதுப் பெண்ணையும் மணக்கலாம்.  (வயதான காலத்தில் ஆண்களுக்குப் பணிவிடை செய்ய பெண்ணானவள் இளமையுடன் இருக்க வேண்டும் என்று செய்த ஏற்பாடு.)

·        புத்திரனில்லாது இறந்து போனவனின் மனைவி, கணவன் கோத்திரத்து ஒருவனைக் கூடி விதிப்படி மகனைப் பெற்றுக் கொண்டு, அவனுக்குக் கணவன் ஈட்டிய பொருளைக் கொடுக்கவும்.

·        பிள்ளை பிறந்தபின் கணவனிறந்து போனால், பின்னர் மனைவி மற்றவனுக்கொரு பிள்ளையும் பெறுவாளாயின், இரு பிள்ளைகளும் தனித்தனி அவரவர் தந்தையின் பொருளை அடைய வேண்டியதே யன்றி இரண்டையும் ஒன்றாக்கிப் பகிர்ந்து கொள்ளக் கூடாது. (இவற்றிலிருந்து ஆணுக்குப் பெண் எதற்காகத் தேவைப்படுகிறாள் என்று மநு கற்றுக்கொடுக்கிறார்.  அவன் விந்தைத் தாங்கிப் பிள்ளைப் பெற்று அவன் குலத்தை வளர்ர்கவும், (ஊரை ஏமாற்றி) சம்பாதித்து வரும் சொத்துக்களை காக்கவும். )

(அடைப்புக்குறிகளுக்குள் இருப்பவை என்னுடையது.)


இப்படியாக மநு ஜாதிய ஒடுக்குமுறையை மட்டுமல்லாது, பாலின ஒடுக்குமுறைகளையும் வகுத்துக்கொடுத்திருக்கிறார். அவ்வழி வந்தோரும், உன்னதங்களின் பெயரால், கடவுளின் பெயரால் பெண் மீது ஏற்றிவைத்த கருத்தாடல்களானது பல்வேறு துணைகளைக் கொண்டு ஆண்களின் மனதில் ஆழப் பதிந்தும் விட்டது. அதை வைத்து பெண்களின் மனதில் அவர்களின் நடத்தை விதிகளை எவ்வாறு வளர்த்தெடுத்தார்கள் என்பதை பெண்ணிய ஆய்வுகள் நமக்குத் தருகின்றன.

கற்பு என்ற ஒன்று இவர்களால் நிறுவப்படும் முன்னர் தாய் வழி மரபில் ஆணுக்கு பிள்ளை மீது எந்த உரிமையும் இல்லை, அவர் அவ்வப்போது மனைவியின் வீட்டுக்கு வந்து செல்பவராக இருந்திருக்கிறார்.  அப்போது தனிச்சொத்துப் பிரச்சனையெல்லாம் இருக்கவில்லை. 

இந்த  சுயநலப்பொருளாதாரக் காரணிகளை மனதில் கொண்டு தொன்மக் கதைகள் மூலம் பதிவிரதை, பத்தினித் தன்மை என்ற புதிய தத்துவங்களை ரிஷி மனைவிகளின் பெயரால் அவர்கள் உருவாக்கியது, பெண் எவ்வாறெல்லாம் நடக்கவேண்டும் என்ற அவர்களின் எதிர்பார்ப்பே ஒழிய அது கடவுளின் விதியல்ல.  அவர்கள் உருவாக்கிய கடவுள் கணவர்களின் நடத்தையை வைத்தே அவர்களின் ஆணாதிக்க தன்மையை நாம் புரிந்துக்கொள்ளலாம்.  அதோடு அவர்களின் பெண் பித்தையும் நாம் புரிந்துக்கொள்ளலாம்.  அவர்களின் பெண் பித்தின் தன்மையே அவர்களை அச்சுறுத்தியிருக்கிறது, அப்படி மற்ற குலத்து ஆண்கள் பார்ப்பனிய குலப் பெண்களை கவர்ந்து சென்று விடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வும், கலப்புத் திருமணங்களை தடுக்கவும், அதன் மூலம் வர்ணக்கலப்பு, ஜாதிக்கலப்பு, சொத்து கைமாறுவது நிகழ்ந்துவிடக்கூடாது என்பதற்கான ஏற்பாடுகளாய்தான் தோன்றுகிறது.  இதுவே தந்தை வழி மரபின் சாதனை.

ரிஷிப் பத்தினிகள் மட்டுமல்ல, கடவுளரின் மனைவிகளும் இவர்களின் விதிகளுக்குட்பட்டவர்களே, கரணம் தப்பினால் கடவுளாகிய கணவர் சாபம் கொடுத்துவிடுவார்.

தாய் வழி மரபில் பிறந்த குலப் பெண்கள் ’செருக்கற்று’ கணவர்களுக்கு பணி செய்யவேண்டும் என்றோ, பெண்ணின் நடத்தை விதிகள் குறித்தோ எங்கும் குறிப்புகள், விதிகள் காணக்கிடைக்கவில்லை. அதை வைத்துப் பார்க்கும்பொழுது ஒரு பார்ப்பனிய ஆண் வேறு குலப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டால் கணவனே கண் கண்ட தெய்வம் என்று கிடக்கமாட்டாள் என்ற புரிதலோடும், அதே நேரம் இவர்களுடைய ஆணாதிக்கப் போக்கை சகிக்கமுடியாமல் பாப்பனியப் பெண்கள் மற்ற இன ஆண்களைத் திருமணம் செய்துக் கொண்டு போய்விட்டால் தங்களுக்குப் பணிவிடை செய்யப், பிள்ளைப் பெற்றுத் தர பெண்களே இல்லாமல் போய்விடும் நிலை வந்துவிடுமே என்று பார்ப்பனிய உயர் ஜாதி அறிவு முக்காலத்தையும் நன்கு அறிந்து வைத்திருக்கிறது.

இவ்வளவு விதிகளையும், கதையாடல்களையும், அச்சுறுத்தல்களையும், தண்டனைகளையும் பெண்கள் மீது பார்ப்பனியம் திணித்து வைத்திருக்கும் சமூக வரலாற்றில் எப்படி சாத்தியம் பெண் விடுதலை?

பொருளாதாரமும், கல்வியும் மறுக்கப்பட்ட பின்னணியில் ஒரு பெண்ணுக்கான சுதந்திர வெளியாக பார்ப்பனிய ஆச்சாரியார்கள் வகுத்துக் கொடுத்தது கோயிலும், கடவுளும், மதச் சடங்குகளும்.  அங்கும் அவள் கணவனின் நலனுக்காக அவள் உடலை வருத்திக்கொண்டு வேண்டுதல்கள் வைப்பதின் மூலம் அவள் ஓர் உத்தமியாகிறாள்.  ஒரு பெண்ணின் அங்கிகாரமானது புனிதத்தின் பெயரால் ( கற்புக்கரசி) என்பதைத் தவிர வேறு சாத்தியங்களே இல்லாத நிலையில் முழுக்க முழுக்க பெண் மத நம்பிக்கைகளில் தன்னை இழந்து நிற்கிறாள்.  அதை நிராகரிக்கும் ஏன் கேள்வி எழுப்பும் பெண்களைக் கூட வேசிகள் என்றே குறிப்பிடுகிறார்கள்.  கற்பு ஒரு கற்பிதம் என்று கூறும் பெண்கள் அதை பாலியலை முன் வைத்து மட்டுமே பேசுபவர்களாய் சித்தரித்து, தனக்காக சுதந்திரத்தைக் கோறுபவர்கள், உங்கள் கணவர்களையும் கவர்ந்துக் கொண்டு போய்விடுவார்கள்  என்று அச்சுறுத்தி பெண்ணுக்குப் பெண்ணையே எதிரியாய் நிறுத்தியும் விட்டார்கள். 

கடவுளின் பெயரால் இவர்கள் செய்யும் அரசியலை சரியாக கண்டுணர்ந்தவர் பெரியார்.  பார்ப்பனிய இந்து மதத்தை ஒழித்தாலொழிய பெண் விடுதலை சாத்தியமில்லை  என்று முழங்கிய பெரியாரைக் கண்டு பார்ப்பனியர்கள் அச்சுறுவதிலும் அவரை வெறுப்பதிலும் ஆச்சரியம் ஒன்றுமில்லை.  ஆனால் பெரியார் தாயுள்ளம் கொண்டவன் அல்லவா, அதனால்தான் பார்ப்பனியர் வீட்டுப் பெண்களுக்கும் சேர்த்து பெண்களுக்கு சொத்துரிமை வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினார். அதை அம்பேத்கர் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் ஐயாவின் முயற்சியால் கிடைத்த சொத்துரிமையின் சுகங்களை, அவரின் சுயமரியாதை இயக்கப் பெண்களின் கடும் போராட்டங்களால் கிடைத்த பெண் உரிமைகளை, சுய மரியாதையை, விதவைகள் திருமண சாத்தியத்தை  அனுபவித்துக்கொண்டே பார்ப்பனியர்கள் அவரை துரோகி என்றழைப்பதையும் காணலாம்.

விலை உயர்ந்த பண்டங்களை மனைவிக் கேட்டால் கூட அச்சுறாத ஆண், தன் மனைவி பெரியாரின் புத்தகத்தைக் கேட்டால் அச்சுறுவது ஏன் என்று புரிந்துக் கொள்ளக்கூடியதுதான். 

ஆண்களுக்கு:  இன்று நீங்கள் பெண்கள் மீது கொண்டிருக்கும் பார்வைக்கும், அதிகாரத்திற்கும் பாடதிட்டம் வகுத்திக்கொடுத்தவர்கள் யார் என்று, பெரும் உழைப்பைச் செலுத்தி ஆராய்ந்து அவர்களின்  முகத் திரையைத் தோலுரித்துக் காட்டும் வேலைகளில் பெண்கள் இறங்கினால் ‘பெண்ணியவாதிகள்’ அடங்காப்பிடாரிகள், குடும்பத்துக்கு ஆகாதவர்கள், குடிப்பவர்கள், பாலியல் சுரண்டல் செய்பவர்கள் என்றெல்லாம் நீங்கள் கூறுகிறீர்கள். பெண்களிடத்தில் இந்த உன்மைகள் போய்ச் சேரா வண்ணம் முயன்ற வரையில் தடுக்க முயற்சி செய்வீர்கள். ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், நாளை உங்கள் பெண் வாரிசு கணவனால் சித்திரவதைகளுக்குள்ளானால் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் சேர்த்துப் போராடுபவர்கள் இந்தப் பெண்ணியவாதிகளே.  


பெண்களுக்கு:     வேதம், உபநிடதம், சாங்கியம், வேதாந்தம் உள்ளிட்ட தத்துவ தரிசனங்கள், புனித நூல்கள், இராமாயணம், மகாபாரதம், சிலப்பதிகாரம் உள்ளிட்ட காப்பியங்கள், கடவுள் கதைகள்,  சங்க இலக்கியங்கள் (ஔவையார், காக்கப் பாடினியார் போன்ற சிலரைத் தவிர) உள்ளடக்கிய  இந்த அறிவு சார் படைப்புத் துறையில் ஏன் பெண்கள் இடம் பெறவில்லை என்று எப்பொழுதாவது உங்களுக்குத் தோன்றியிருக்கிறதா? பார்ப்பனியம் சமூகத்தின் மேல் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் மதத்தின் பெயரால் செயலாற்றிய பக்தி இலக்கியக் காலத்தில் தோன்றிய காரைக்கால் அம்மையார், ஆண்டாள் இவர்கள் கூட கடவுளைப் பாடினார்களே தவிர பெண்ணுக்கான சுதந்திரத்தை, நடத்தை விதிகளை ஏன் உருவாக்கவில்லை என்று ஒரு கேள்வியை வைக்க வேண்டும்.   பெண்ணிய எழுத்தாளர்கள் இந்தப் படைப்புத்துறைக்கு வரும் முன்னர் வரை  ஆண் படைப்பாளர்களால் தான் இதுவரை பெண் கதாப்பாத்திரங்கள், கற்பு நெறிகள், சமூக நெறிகள், குடும்ப நெறிகள் ஆகியவை படைக்கப்பட்டிருக்கின்றன, அது அப்படியே சினிமா, சீரியல் என்று இன்றும் தொடர்கிறது, ஆண் படைப்பாளிகளின் வழிகாட்டுதலில் எந்த சந்தேகமும் எழாத சில மேட்டுக்குடிப் பெண் எழுத்தாளர்களும் அந்த குணங்களைக் கொண்டப் பெண் கதாப்பாத்திரங்களையே உருவாக்கி பெண்ணினத்திற்கு துரோகம் செய்வதை உங்களுக்கு நினைவூட்ட வேண்டியுள்ளது.  

பெண்கள் என்ன செய்ய வேண்டும்..?.


Jan 4, 2011

துரோகங்களின் பட்டியல் - பாகம் - 2 இசையின் பெயரால் துரோகம்



செவ்வியல் இசை என்று (ஒரு சமூகத்தால் – என் குறிப்பு) சொல்லப்படுகின்ற கர்நாடக இசையின் இராகங்களின் அமைப்பு பற்றியும் சமூக உணர்வற்ற முறையில் உள்ள அந்த இராகங்களின் அமைப்பு பற்றியும், திணை சார் தொழில்முறைகளோடு தொடர்புடைய பண்கள் மற்றும் கருவியிசை பற்றிய தகவல்கள், அவற்றை சைவமும் வைணவமும் வைதீக அறிவுஜீவிகளும் திரித்து மேளகர்த்தா ராகங்களை உருவாக்கி, கடவுளுக்கு குடும்ப உறவை ஏற்படுத்திக் கொடுத்ததுபோல், திணைகளிலிருந்து திருடிய ராகங்களுக்கு மனைவி, பிள்ளைகள், பாலின அடையாளங்களையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ள பார்ப்பனிய இசை அரசியலை சமீபத்தில் இ.முத்தையா அவர்கள் எழுதியுள்ள இசையின் அதிகார முகங்கள் (வல்லினம் வெளியீடு) எனும் புத்தகத்தில் படித்தேன்.  வரலாற்றின் எந்தப் பக்கத்தை திருப்பினாலும், எந்தத் துரையாயிருந்தாலும் பார்பனர்களின் அரசியல் அரங்கேராத இடமே இல்லை என்று சொல்லலாம். 

இந்தப் புத்தகம் நல்ல ஆய்வு முறைகளைக் கைக்கொண்டும் பல்வேறு அறிஞர்களால் எழுதப்பட்ட இசை வரலாற்று புத்தகங்களை ஆதாரங்களாக கொண்டும் எழுதப்பட்டுள்ளது.  காலவரிசைப்படி இசையின் வளர்ச்சியையும், இசையின் பெயரால் வளர்ந்த பார்ப்பனிய அரசியலையும், நாட்டுப்புற இசை, ஒடுக்கப்பட்ட மக்களின் இசை ஆகியவைகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, சிலவற்றை உட்செரித்து பன்மை அடையாளங்களை அழித்து கடவுளின் பெயரால், உன்னதத்தின் பெயரால் இந்துக் கலாச்சாரம் என்ற பொது அடையாளத்தை உருவாக்க பார்ப்பனியம் கைக்கொண்ட மற்றும் ஒரு அரசியல் நாடகம் இசையிலும் செயல்பட்டிருக்கிறது என்பதற்கு வலுவான ஆதாரங்கள் கொண்ட ஆய்வு.  ஒடுக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களும் (புதியதாக எழுதத் துவங்குபவர்கள்), பார்ப்பனிய ஆதரவாளர்களும் கண்டிப்பாக வாசிக்கவேண்டியப் புத்தகம் – ‘இசையின் 
அதிகார முகங்கள்’. இ. முத்தையாவின் உழைப்பு பாராட்டுக்குறியது.

அந்தப் புத்தகத்திலிருந்து ஒரு முக்கியமான பக்கத்தை இங்கு பதிவு செய்கிறேன்: (அவருடைய சிறு முன்னுரைப் பத்தியோடு):

மனிதர்களே மனிதர்களுக்காக இசையை உருவாக்குகிறார்கள். தன்னிலைக்கும் படர்க்கை நிலைக்கும் இடையிலான இயங்கியல் உறவினாலேயே இசை உருவாக்கப்படுகிறது. இனக்குழுச் சமூகங்களில் புற உலகப் பொருட்களின் மீது மாற்றத்தை ஏற்படுத்துவத்ற்கான அல்லது  புற உலகப் பொருருகளைக் கற்பனையான முறையில் தங்கள் கட்டுப்பட்டிற்குள் கொண்டு வருவதற்கான மந்திர ஆற்றலுடைய வெளிப்பாடாகவே இசையும் பாடலும் உருவாக்கப்பட்டன. இதனால் தான் இனக்குழுக்களின் இயற்கைச் சூழலுக்கேற்பவும் தொழில்முறைக்கேற்பவும் இவற்றின் பின்புலத்தில் உருவக்கிக் கொள்ளப்பட்ட கருத்துலகிற்கு ஏற்பவும் இசைமுறை வேறுபடுகிறது. 

இனக்குழுவினர் புற உலகத்தோடு தொடர்பு கொள்வதற்க்காகவும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்பப் புற உலகத்தைக் கட்டுப்படுத்துவதற்காகவும் மாற்றுவதகாகவும் தங்களுக்கன இசையை உருவக்கிக் கொண்டனரே தவிர  பிற இனக்குழுவினரோடு முரண்படுவதற்கான பண்பாட்டு அடையாளமாக இசையை உருவாக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  (வர்ண பேதமில்லை, செவ்வியல் அதாவது கிளாசிக்கல் என்ற உன்னத அடைமொழிகளை அவர்கள் கொடுத்துக்கொளவில்லை – என் குறிப்பு)

பக்கம் – 52:

பஞ்சமரபின் கருத்தியலுக்கு முரண்பட்ட கருத்தியலை உடையதாகச் சங்கரனார் என்ற இசை அறிஞர் பதிப்பித்த (இந்நூலை உருவாக்கிய ஆசிரியர் பெயர் தெரியவில்லை) இசை மரபு என்ற நூல் (1968) விளங்குகிறது. இந்நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை என்ற போதிலும் கிடைத்துள்ள பகுதிகளைக் கொண்டு பார்க்கும்போது இது உலகாயதத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட இசை இலக்கன நூலாக இருப்பதைப் புரிந்து கொள்ளலாம். அதாவது இசை என்பது மனித உருவாக்கம் என்பதை அழுத்தமாக எடுத்துரைக்கிறது.  இசையைத் தெய்வத்தின் படைப்பாகவோ தெய்வத்தோடு தொடர்புடையதாகவோ காட்டுகின்ற கருத்துநிலைப்பாட்டின் சுவடு கூட இந்நூலில் காணப்படவில்லை என்பது  குறிப்பிடத்தக்கது.  இசையின் தோற்றம் பற்றிய கீழ்கண்ட நூற்பா கவனத்தில் 
கொள்ளத்தக்கது.

            பூதமுதற் சாதனத்தாம் புற்கலத்தின் மத்திமத்து
            நாதமுத லாமெழுத்து நாலாகி – வீதி
            வருவரத்தாற் றானத்தால் வந்து வெளிப்பட்
            டிருவரத்தாற் றோற்ற மிசைக்கு (கா. சங்கரனார் (ப.ஆர்) 1968:1)

அதாவது “ஐம்பூதங்களாகிய மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய முதற்கருவிகளால் ஆக்கப்பெற்ற உடம்பின் நடுப்பகுதியாகிய உந்தியிலிருந்து ஒலியானது காற்று வடிவத்தில் நெஞ்சின் வழியாக மேல்நோக்கிச் சென்று வாயை அடைந்து பின் தொண்டையின் முயற்சியால் இசையொலியாகி உதடு, நாக்கு, பல், அண்ணம், மூக்கு ஆகிய நான்கு உறுப்புகளால் வெவ்வேறு வடிவம் பெற்று வெளிப்படும்” என்கிறது இந்நூற்பா. மனித முயற்சியால் இசை உருவக்கப்படுவதைத் தெளிவாக விளக்குகிறது.  மேலும் ஐம்பூதங்களால் உடலுறுப்புகள் உருவாகும் முறை பற்றியும் உயிர் உருவாகும் முறை பற்றியும் உடலின் அமைப்புமுறை பற்றியும் அறிவுபூர்வமாக விளக்குகிறது இசை இலக்கண நூலான இசை மரபு. இசைக்கும் தெய்வத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதை

            ஓசையும் ஏசனும் ஓக்கம் என உலகில்
            வாசகப் பட்டு வருதலால் – ஓசை
            மெய்யகத்தாலன்றி வினவவொண்ணாது என்னுமிது
            வையகத்தார் சொல்லும் வழக்கு

என்ற நூற்பாவின் மூலம் இசைமரபு நூல் விளக்குகிறது. (கா. சங்கரனார் (ப.ஆர்) 1968:16). அதாவது இசையும் இறைவனும் ஒன்று என்ற கருத்து சமூகத்தில் பேசப்படுகிறது.  ஆனால் இசை மனித உடம்பிலிருந்தே பிறக்கிறது என்பதைக் கேள்விக்கு உட்படுத்த இயலாது என உறுதி பட உரைக்கீறது இசைமரபு.

இசையின் இலக்கணத்தை விளக்குவதின் ஊடாக வர்ண அமைப்புகளைப் பஞ்ச மரபு நியாயப்படுதுகிறது.  அதாவது, முன்னரே குறிப்பிட்டுள்ளபடி சுத்த இசையால் அந்தணர்களைப் பாடவேண்டும் என்றும் சாளவ இசையால் சத்திரியர்களைப் பாடவேண்டும் என்றும் தமிழ் இசையால் வணிகர்களையும் வேளாளர்களையும் பாடவேண்டும் என்றும் பஞ்சமரபு வலியுறுத்துகிறது.  ஆனால் இசைமரபுக்கு இத்தகைய மேட்டுக்குடி அரசியல் இல்லை.  அது சுத்தம், சாளாம், தமிழ் ஆகியவை மனிதரால் உருவாக்கப்படும் முறை பற்றியே விளக்குகிறது.  எடுத்துக்காட்டாகச் சுத்தம் எனும் இசை வகை பற்றிய விளக்கத்தைக் காணலாம்.  “ஓசையை உச்சரித்து, நாசியிலே ஒட்டி சிரம், நா, கண்டம் ஆகிய இடங்களில் தம்பித்துத் தாங்கி இசையாகப் பாடுவது” என விளக்குகிறது.  அதாவது எந்தப் பிரிவைச் சேந்த மனிதரும் மேற்குறிப்பிட்ட மூன்று வகை இசை வடிவங்களையும் உருவாக்கலாம் என்றும் பயன்படுத்தலாம் என்றும் குறிப்பிடுகிறது. இதுவரையிலான விளக்கத்திலிருந்து இசை மரபு எனும் இலக்கண நூல் இசையை இறைவனிடமிருந்து விடுவிப்பதையும் அதனை மனிதமயப்படுத்துவதையும் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். 

முடிவுரை: (பக். 99)

ஒலி மற்றும் ஒளிநாடாப் பேழைகள் குறுந்தகடுகள் போன்ற இசைத் தேக்கிகள் இசையை அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற உலாவ விட்டிருக்கும் சூழலில் தனி நபரின் இசைச் சுதந்திரம் வானம் போல அகன்று விரிந்ததாகத் தோன்றலாம். ஒருவர் தாம் விரும்பிய எந்த வட்டாரத்து, எந்த நாட்டு இசையையும் எந்த வகையான இசையையும் கேட்பதற்கான வாய்ப்புக் கிட்டுவதாகத் தோன்றலாம்.  ஆனால் நிதானமாகப் பார்த்தால் அப்படி இல்லை என்பது புரியும்.  நவீனத் தொழில் நுட்பங்களைத் தங்கள் கட்டுப் பாட்டிற்குள் வைத்திருக்கும் ஆளும் வர்க்கமே நாம் ஒவ்வொருவரின் இசை விருப்பத்தையும் தீர்மானிக்கிறது.  தொலைக்காட்சி, வானொலி, திரப்படம், இணையதள்ம், இசைப்பேழைகள் போன்றவை ஆளும் வர்கத்தினரின் கண்காணிப்பிலேயே செயல்படுகின்றன. அவர்கள் எத்தகைய இசையை நமக்கு வழங்க வேண்டும் எனத் தீர்மானிக்கிறார்களோ அதையே கேட்கவேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்தப்படுகிறோம். ஆளும் வர்க்கத்தினர் உருவாக்கிய அரசாங்கம், நீதிமன்றம், சட்டங்கள் ஆகியவை அனுமதிக்கின்ற இசை மட்டுமே நமக்குக் கேட்கக் கிடைக்கும். முதலாளித்துவ சமூக அமைப்பில் பேச்சுச் சுதந்திரமும், எழுத்துச் சுதந்திரமும் கிடைத்திருப்பதைப் போலவே இன்று இசைச் சுதந்திரமும் கிடைத்டிருக்கிறது.
_________________________________________________________________________________

கர்நாடக அல்லது செவ்வியல் இசை (மற்றும் இந்துஸ்தானி போன்ற மேட்டுக்குடி இசை) மட்டுமே சபாக்களில் பாட அனுமதிக்கப்படுகிறது. திருவையாற்று சங்கமத்தில் யாருக்கு மட்டும் அனுமதி  கிடைக்கும் என்பது நாம் அறிந்த ஒன்றே.  மார்கழி மாதக் கச்சேரிகளின் மூலம் இசைக்கே அவர்கள்தான் பாதுகாவலர்கள் என நிறுவப்படுகிறது. தமிழ் மொழியில் கீர்த்தனைகளை இயற்றிப் பாடுவதால் மட்டும் அது தமிழ் இசையாகி விடுமா? அதிலும் கடவுளைப் பற்றித்தானே பாடப்படுகிறது.  மக்கள் பற்றிய அல்லது மக்களுக்கான பாடல் என்று என்ன இருக்கிறது?

கர்நாடக இசைப் பெருமைகளை பார்ப்பனியப் பத்திரிகைகள் மற்றும் ஆதிக்க வர்க்கத்தினரின் பத்திரிகைகள் பக்கம் பக்கமாக எழுதுகிறது.  அவ்விசையை நிராகரிப்பவர்கள் இசை ரசனையற்றவர்கள் என்று ஓரங்கட்டப்படுவதும் நாம் அறிந்ததே.  அவ்விசையை முண்டியடித்து சீட்டுகள் வாங்கிப் பார்ப்பது என்பது சமுதாயப் படிநிலையில் உயர்ந்து இருப்பதற்கான அடையாளமாக நன்றாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு வழக்கம் போல ஆதரவு தருவது ஆதிக்க ஜாதி இந்துக்கள் (முதலாளிகள்). ஆக மொத்தம் தெய்வீக இசையை உலகம் முழுக்க விற்று நன்றாக காசு பார்க்கும் ஒரு தொழிலுக்கு இறைவன் கொடுத்தக் கலை என்று உன்னதங்கள் ஏற்றிவைக்கப்பட்டிருக்கிறது.

உழைப்பில்லாமல் பிழைப்பதற்கு மற்றும் ஒரு வழி.  எந்த நடைமுறையும் சாராத, சமூக உணர்வற்ற ஒரு மேட்டுக்குடி (தெய்வீகக்) கலையினால் யாருக்கு என்ன பயன்?