-->
தோன்றும் ஆசைகளை அனுபவிக்க ஆரம்பித்தவன், அதை புரிந்துகொள்ள முயற்சிக்கையில் அல்லது அனுபவத்தை தள்ளி வைத்து பார்க்க எண்ணுகையில் அதனை அவஸ்தையாய் உணர்ந்திருக்கலாம். போகிற போக்கில் ஒன்றை கண்டுபிடிப்பது அதனை துய்ப்பது, வெறுப்பது, இவை போன்ற அனுபவங்கள் மனித இனத்துக்கு புதிதில்லை. அவனது ஆதி விருப்பத்துக்கு உயிர் முதல் பொருள் வரை யாவும் அனுபவித்தலின் எல்லைக்குள் அடங்க வேண்டும். அவன் புலன்கள் உட்பட.
புலன்களை அடக்கி ஆள வேண்டும் என்பதே ஓர் அவா. வேட்கை. தன் ஆசையை நிறைவேற்றிக்கொள்ள முடியா மனம் அதை வேட்கையாய் வேட்கையிலிருந்து தவிப்பாய் அனுபவத்தில் உணரத்தொடங்குகிறது. வேட்கையில்லா மனிதன் அரிது. காணி நிலம் வேண்டுமென்பதிலிருந்து குண்டலினி உயர்த்த தவமிருப்பது வறை எல்லாமே ஒரு வகை வேட்கைதான். மனிதனுள் இருக்கும் வேட்கைதான் கனவுகளாகின்றன. தன்னுடைய வேட்கை நிறைவேறா பட்சத்தில் அது தொடமுடியாத ஒன்றென எல்லை வகுத்து அதற்கு லட்சியம் என பெயரிடுகிறது மனம். கனவுகள் லட்சியத்தை உருவாக்குகின்றன, வேட்கை என்றும் அணையா நெருப்பு, நீர்மையால் பருக முடியா பெருந்தாகம். இந்த மண்ணில் தனக்கென ஓர் அடையாளம் ஏற்படுத்த வேட்கையுடன் ஓடும் ஓர் ஆத்மாவை நோக்கி.....
எல்லாவற்றிற்கும் அர்த்தம் இருக்கும் என்று பிடிவாதம் பிடிப்பவர்களை நான் கண்டுணர்ந்திருக்கிறேன். அதே பிடிவாதத்தோடு நான் அவர்களின் லட்சியங்களை வேடிக்கை பார்க்கிறேன். அதற்கு என்னுடைய வினை வெறும் பார்வைதான்.
என் வரையில் பார்வையாளனாய் இருப்பது பெரும் வலியும் ஆறா வாதையையும் கொண்டது. சாதனைதான் வாழ்கையின் நோக்கமாக இருக்க வேண்டும் என்றால், அதன் உந்து சக்தியாக வேட்கை இயங்குகிறது.
இயற்கை மனிதனை ஆறறிவுடன் படைத்துள்ளது. ஐந்து அனுபவிக்க, ஆறாவது அந்த ஆசையை படைக்க,ஆசைகளையும், வேட்கையையும் சரியான திசையில் வழிநடத்த, 'சரி' என்பதன் விளக்கம் அவரவர் பொறுத்ததே. சமுதாயம் தோன்றியதும் மனிதன் 'நெறி'களை வகுத்திருக்கவேண்டும், இது தான் 'சரி' என்று சொல்லப்படும் வன்முறைக்கு மாறாக நான் சொல்ல விரும்புவது, யாருக்கும் 'தீங்கு' விழைக்காத பாதை.
லட்சியம், கனவு, விருப்பம் இவைகளுக்கு முன் சக மனிதன் ஒவ்வொருவருக்கும் உங்கள் மனதில் இடம் கொடுங்கள், நீங்கள் அடையப்போகும் லட்சியம், அதன் பெருங்கனவு இவைகளுக்கு முன் அவனின் கண்ணீர் உங்கள் லட்சியங்களை வெறுக்கும். அழும் மனிதனின் பிடறி பிடித்து லட்சியத்தை நோக்கி ஓடச்சொல்லும் தத்துவங்கள் கடவுள்கள் இவைகளை நான் வெறுக்கிறேன்.
இப்படி கனவுகளும், வேட்கைகளும் தான் மனிதனின் லட்சியத்தை வளர்கின்றன என்றால், ஒருவருக்கு பல லட்சியங்கள், பல வேட்கைகள் இருக்க வேண்டும். நான் எல்லா ஆசைகளையும் லட்சியமாக கொண்டேன். வாழ்கையில் உன் லட்சியம் என்ன? நீ என்னவாக விரும்புகிறாய் என்று என்னிடம் யாராவது கேட்டால், எனக்கு சிரிப்பு வரும்.
ஏனென்றால் எனக்கு பல 'லட்சியங்கள்' உண்டு, ஆசை, வேட்கை எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். என்னைப்பொறுத்த வரை என் ஒவ்வொரு இருப்பும் எனது லட்சியங்கள்தான். ஆனால் ஒருபோதும் உங்கள் கையால் விருதுகள் வாங்காத சக மனுஷி. இன்று காலை தொழிலதிபர், மாலை கவிஞர் பிறகு சிற்பி, நாளை விவசாயி, வேறொருநாள் சமூக சேவகி, ஆன்மீகவாதி இப்படி. கணந்தோறும் மாறும் மனநிலையை பலர்....'பைத்தியம்' என்கின்றனர், 'நிலை இல்லா குணம்' என்கின்றனர். ஒரே லட்சியம் உள்ள மனத்தை நான் இறுகிய பாறை என நான் சொல்லப்போவதில்லை. என்வரையில் பித்தம்தான் ஞானத்தின் உச்சம். அது எவரையும் கிழிக்கும் பட்சத்தில் அந்த ஞானத்தை நடுத்தெருவில் நிறுத்துவதற்கு எனக்கு எந்த வருத்தமும் இல்லை. என் 'எல்லா வேட்கைகளையும்' பூர்த்தி செய்வதுதான் என் லட்சியம்.
'jack of all, master of none' என்று வைத்துக்கொள்ளலாம். நான் தலைவியாக (master) விரும்பவில்லை, அது பெரும் பாரம். பிறருக்கு வாதை. அந்த சிம்மாசனத்தை நான் மின்சார நாற்காலியாகவே அறிகிறேன். அந்த நாற்காலியை காலியாகவே விடுகிறேன்...
பல தொழில்களை செய்து மூலதனத்தை குவிக்கும் மனிதனை முதல்படி ஏற்றி தொழில்களை ஆளூம் அதிபர் என்றழைக்கும் சமூகம், ஓர் தனி மனிதன் நிறைய லட்சிய வேட்கைகளை கொண்டிருந்தால் அது 'நிலையற்ற மனம் என்கிறது. பரிதாபம்.
மனித மனத்திற்கு முடிவு தேவை. முடிவில் கண்டறிந்த ஞானத்தை ஊர்கூடி அறிவிக்க வேண்டும். என்னுடைய ஞானத்தை நான் எனக்கே சொல்லப்போவதில்லை. இதில்…..
ஒரு நாள் என் மகள் கேட்டாள் 'அம்மா நானும் பிக்காசோ போல், எம்.எஃப். ஹுசேன் போல் ஓவிய வரலாற்று புத்தத்தில் இடம் பெறுவேனா? என்று. வேட்கை இருந்தால் முடியும் என்றேன்.புன்னகைத்தாள். வேட்கைதான் வேறென்ன. அதே போல், ' எப்படி வேட்கை தானாகவே திறமையை உற்பத்தி செய்யும்' என்ற தலைப்பில் ஒரு பாடம் இருப்பின், நானும் இடம் பெறுவேன் உங்கள் அதிகாரத்தில் அனுமதிக்கப்பட்ட வரலாற்றில்.
அதன் குறியீடே நான் வடித்த இந்த சிற்பம்..புலன்கள் ஒவ்வொன்றும் இழுக்கும் திசைக்கெல்லாம் நான் செல்வேன்..வாழ்வை வாழ்வேன் என் கட்டளைப்படி..
இயற்கையின் வேட்கை பிரபஞ்சம்
பிரபஞ்சத்தின் வேட்கை உயிர்
உயிரின் வேட்கை மனிதன்
மனிதனின் வேட்கை பேராசை மிச்சம் வைக்காது எதையும் துள்ளத் துடிக்க அனுபவிக்கும் பேராசை
வாழ்க அனுபவங்கள்...
உங்கள் கடவுளர்கள் மிகுந்த அன்பை கைக்கொண்டிருந்தால்
இதுபோன்றொரு உலகை அதன் வன்மத்தோடு படைத்திருக்க முடியாது. உங்கள் கடவுளுக்கு என் வாழ்த்துக்கள்.